அழகிய அன்னமே 4 & 5

சென்னையின் மாலை நேர பேருந்தின் கூட்ட நெரிசலிலும் போக்குவரத்து நெரிசலிலும் தத்தளித்து எட்டு மணியளவில் வீட்டை வந்தடைந்த அன்னம், தனது அறைக்கு சென்று கட்டிலில் அமர, அலறியது அவளின் கைபேசி.

“ஹாய் ஆச்சி! எப்படி இருக்கீங்க? ஐ மிஸ் யூ சோ மச்! உங்க மடியில படுத்துக்கனும் போல இருக்கு” என்றவளின் கண்களில் நீர் தேங்க அப்படியே கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள்.

“ஏன்மா அன்னம்! உனக்கு இது தேவையா? மதுரைலயே ஏதாவது வேலை வாங்கிக்கோனு சொன்னா கேட்காம சென்னைக்கு போய்ட்டு இப்ப நாளும் பொழுதும் எப்ப ஃபோன் செஞ்சாலும் அழுது வடிஞ்சிட்டு கிடக்க” தனது சேலை முந்தியால் கண்ணீரை துடைத்தவாறு பேசினார் ஆச்சி சிவகாமி.

அன்னம் பிறந்ததிலிருந்து அவளை கைக்குள் வைத்து வளர்த்தவர், அவளின் தாய் புவனேஸ்வரியை விட இவர் தான் அன்னத்தை கண்ணும் கருத்துமாக வளர்த்தார். ஆச்சியும் அன்னமும் எப்பொழுதும் சண்டையிட்டு கொள்வது போல் தோன்றினாலும் மிகுந்த பாசமுடையவர்கள்.

இங்கு வந்ததிலிருந்து ஆச்சியின் குரலை கேட்கும் பொழுதெல்லாம் தன்னிச்சையாக கண்ணீர் சிந்தி விடுவாள் அன்னம். இப்பொழுது மேற்கொண்ட பயணத்தில் உடல் அலுப்புடன் உள்ளமும் அயர்ந்து போயிருக்க, சரியாக அந்நேரம் ஆச்சி அழைத்ததில் அவளின் ஏக்கத்தை கொட்டி விட்டாள். இந்நேரம் அங்கே மதுரையில் இருந்திருந்தால் பயணக் களைப்புடன் வீட்டிற்குள் நுழைந்ததும் நேராக ஆச்சியின் மடியில் சென்று தான் படுத்திருப்பாள். அதையே இவ்வாறாக  உரைத்திருந்தாள் அன்னம்.

“எப்ப கேப் (gap) கிடைக்கும் என்னை மதுரைக்கு பேக் (pack) செய்யலாம்னு காத்து கிடப்பியோ ஆச்சி” தன்னை மீட்டுக் கொண்டவளாய் கேலியில் இறங்கினாள் அன்னம்.

“நீ இல்லாம நான் சந்தோஷமா தான்டி இருக்கேன்! நான் எதுக்கு வேலில போற ஓணானை வேட்டிக்குள்ள விட்டுக்கனும்! நான் ஏன் உன்னை மதுரைக்கு வர சொல்ல போறேன்” அதே கேலியுடன் பதிலளித்தார் ஆச்சி.

“அட இது என்ன புது கதையா இருக்கு! நீ இத்தனை நாளும் உடுத்திட்டு இருந்தது சேலைனுல நான் நினைச்சிட்டு இருக்கேன். அது வேட்டினு இப்ப தானே தெரியுது?” என்று வாய்க்குள்  சிரித்தவாறு அன்னம் கேட்க,

“ஆத்தாடி ஆத்தா மெட்ராஸ் போனதும் இந்த பிள்ளை வாய் எட்டூருக்கு நீளுதே” என அங்கலாய்த்தார் ஆச்சி.

வாய்விட்டு சிரித்திருந்தாள் அன்னம்.

“ஆச்சி நான் இன்னிக்கு நல்லவனுக்கு நல்லவன் சீரியல் நடிகர் சிவாவை பார்த்தேன்” என்றாள்.

“சிவா தம்பியையா பார்த்த?” அத்தனை ஆச்சரியமாய் கேட்டவர்,

“ரொம்ப நல்ல பிள்ளைமா அது! பொண்டாட்டியை முதல்ல கஷ்டப்படுத்தினாலும் இப்ப எப்படி தாங்கு தாங்குனு தாங்குறான் தெரியுமா?” என்றார்.

“ஆச்சி அது நடிப்பு! சீரியல்ல தாங்குனா நிஜத்துலயும் தாங்குவாங்களா என்ன? அதுவுமில்லாம நிஜத்துல அவருக்கு கல்யாணமாகலை” என்றாள் அன்னம்.

“நடிப்பா இருந்தாலும் உள்ளுக்குள்ளே இருக்கிறது தானே வரும். நீ வேணா பாரு அந்த பிள்ளை கட்டிக்கிற பொண்ணை இதே போல தாங்கும்” என்ற ஆச்சி,

“பார்க்க நல்லா சிவப்பா இருந்துச்சா தம்பி! டிவிலயே சுண்டுனா ரத்தம் வர்ற கலர்ல இருக்குமே! பேசினியா நீயி! எனக்கு அந்த பிள்ளையை ரொம்ப பிடிக்கும்னு சொன்னீயா?” என தொடர்ந்து பூரிப்பாய் பேசினார் ஆச்சி.

ஆச்சியின் பேச்சை சிரித்தவாறு கேட்டிருந்த அன்னம், “உன்னை பத்தி தானே! சொல்லிட்டா போச்சு! அடுத்த தடவை பார்க்கும் போது சொல்லிடுறேன்” என்றாள்.

“அவ வேலையை பத்தி கேட்காம, என்ன  ஊரு கதையை பேசிட்டு இருக்க மா நீ” என்றவாறு ஆச்சியிடம் இருந்து தனது கைபேசியை வாங்கிய அவளின் தந்தை முருகன், “சாப்பிட்டியாடா கண்ணு” எனக் கேட்டார்.

தந்தையிடம் அன்றைய நாளினை பற்றி அத்தனையும் ஒப்புவிக்க, இந்த ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அன்னத்திற்கு.

காலை அலுவலகம் சென்றதை பற்றி அவள் ஆரம்பித்ததும் கைபேசியை ஸ்பீக்கரில் போட்டார் முருகன்.

“ஆரம்பிச்சிட்டாளா?” சிரித்தவாறு கேட்டப்படி ஆச்சியின் அருகில் வந்தமர்ந்தார் அன்னத்தின் அன்னை.

முதலில் அங்கு நிகழ்ந்த நேர்முக தேர்வில் ஆரம்பித்தவள் ஒவ்வொன்றாக கூறிக் கொண்டே வந்தவளாய் இறுதியாக மறுநாள் இரவு ஷிப்ட் வேலைக்கு தான் செல்லவிருப்பதை உரைக்க, அங்கே அவளின் தாயும் ஆச்சியும், “என்னது நைட் ஷிப்ட்டா?” என்று அதிர்ச்சியுடன் வினவினர்.

யோசனையில் சுருங்கிய முகத்துடன் முருகன், “நீ ஏற்கனவே வேலைக்கு போறதே அப்பாக்கு விருப்பமில்லை. சரி அப்படியே போனாலும் மதுரைலயே வேலைக்கு போனு சொன்னேன். அதையும் கேட்காம, உன் மாமனை சப்போர்ட்டுக்கு இழுத்து சென்னைக்கு போய்ட்ட! சரி படிச்ச படிப்புக்கு பிள்ளை வேலை செய்யட்டும்னு விட்டா இப்ப நைட் வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு இருக்க” சற்று கோபமாகவே கேட்டார்.

“அப்பா” என சிணுங்கிய அன்னம், “இங்க என்ன நான் மட்டுமா நைட் ஷிப்ட் போறேன். அங்க நூறு பேருக்கு மேலே நைட் ஷிப்ட்ல இருப்பாங்களாம்ப்பா! வீட்டுக்கே வந்து கார்ல கூட்டிட்டு போய்ட்டு காலைல வந்து விட்டுடுவாங்க. சேஃப் தான்ப்பா” என்றாள் அன்னம்.

“எங்க பேச்சு ஏதாவது கேட்டு நடக்கிறியா நீ? எல்லாமே உன் விருப்பம் போல் தான் நடக்கனும்னு நினைக்காதனு எத்தனை தடவை சொல்லிருக்கேன்” அதட்டலாய் பேசியிருந்தார் அன்னத்தின் தாய் புவனேஸ்வரி.

“ம்மாஆஆ சொல்றதை புரிஞ்சிக்கோம்மா! நம்ம கேட்குற பிராஜக்ட் அவங்க கொடுக்க மாட்டாங்க. அவங்க கொடுக்கிறதை நாம ஒத்துக்கிட்டு தான் ஆகனும். அப்படியே நான் வேண்டாம்னு சொன்னாலும் அடுத்து வர பிராஜக்ட்டை எப்படி இருந்தாலும் நான் ஒத்துக்கனும்னு என்கிட்ட திணிக்க பார்ப்பாங்க. இந்த பிராஜக்ட் எனக்கு செட் ஆகும்னு தோணுது” தாயையும் தந்தையையும் சமாதானம் செய்ய முயன்றாள்.

ஆச்சி ஏதோ கூற வருவதை தடுத்த முருகன், “சரிமா நீ போய் முதல்ல சாப்பிடு! நேரமாகிடுச்சு பாரு! நான் அப்புறம் ஃபோன் செய்றேன்” என்று இணைப்பை துண்டித்தவர், ருத்ரனுக்கு அழைத்தார்.

அன்னத்தின் இரவு ஷிப்ட் வேலை பற்றி ருத்ரனிடம் முருகன் பேச, தன்னிடம் இன்னும் அவள் அதைப்பற்றி கூறவில்லை என்றும், அப்படியே அவள் இரவு ஷிப்ட் சென்றாலும், இங்கு அது சகஜம் என்றும், தான் பாதுகாப்பாய் பார்த்துக் கொள்வதாகவும் உரைத்து முருகனை தேற்றி நம்பிக்கை அளித்துவிட்டே வைத்தார் ருத்ரன்.

ருத்ரன் கைபேசி வைக்கும் சமயம், உண்ண வந்த அன்னத்திடம் அவளின் வேலைப்பற்றி கேட்டறிந்தவர், அவள் செல்லும் வண்டி அதன் பாதுகாப்பை பற்றி கேட்டறிந்து கொண்டார்.

மறுநாள் இரவு ஒன்பது மணியளவில் அலுவலகத்திற்கு சென்ற அன்னம், இன்பாவின் அறைக்கு சென்றாள்.

அவளை தனது குழுவிற்கு அறிமுகம் செய்து வைத்தான்‌ இன்பா. இன்பாவை தவிர நான்கு ஆண்கள் இருந்தனர்.

“கைஸ் நம்ம டீம்க்கு வந்திருக்க நியூ ஜாய்னி! பிரித்வி, உங்களுக்கு ரிப்ளேஸ்மென்ட்டா தான் எடுத்திருக்கேன். சீக்கிரம் KT (knowledge transfer) ஆரம்பிச்சிடுங்க. இன்னும் இரண்டு மாசம் தானே இருக்கு நீங்க ரிலீவ் ஆகுறதுக்கு. அதுக்குள்ள அன்னத்தை டிரைன் செஞ்சிடுங்க. உங்க வேலையை அன்னம் செய்யனும் தனியா. அந்தளவுக்கு சொல்லிக் கொடுங்க” என்றான் இன்பா.

அனைவரும் வெவ்வேறு மொழியினராய் இருந்தனர். ஆங்கிலம் மட்டுமே அனைவருக்கும் பொதுவாக பேசப்பட்டது. அந்த பிராஜக்ட் குழுவில் இன்பாவும் மோகனும் மட்டுமே தமிழ் பேசுபவராய் இருக்க, இப்பொழுது அன்னமும் சேர்ந்துக் கொண்டாள். மோகனை தவிர அனைவரும் மணமானவர்களாக இருக்க, “மோகனு என்ஜாய்” என்று குறும்பாய் அவனை அப்பொழுதே கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர் மற்ற சக பணியாளர்கள்.

அவர்களின் கேலியில் நாணப்புன்னகை சிந்திய மோகன், “அவங்க அப்படி தான்! நீங்க கண்டுக்காதீங்க. எங்க டீம்க்கு எப்ப பொண்ண எடுப்பீங்கனு இன்பாகிட்ட பல நாள் கேட்டு நச்சரிச்சிருக்கோம். இப்ப நீங்க வந்ததுல எல்லாருக்கும் சந்தோஷம்‌. இங்க எல்லாரும் சீனியர். எனக்கு இது முதல் பிராஜக்ட். நான் மட்டும் தான் கல்யாணம் ஆகாத ஆளு வேற இதுல நீங்களும் தமிழ்னதும் அப்படி கிண்டல் செய்றாங்க” அன்னத்தை இலகுவாக்க இயல்பாக பேசினான்.

“ஏன் உங்க டீம்க்கு பொண்ணு வேணும்னு கேட்டீங்க?” என்று அன்னம் பொதுவாக அனைவரிடத்திலும் கேட்க,

“அட என்னம்மா! எப்ப பாரு இவங்க மூஞ்சையே பார்த்து கடுப்பாகுதுமா. ரசிக்கிற மாதிரி ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்கும் தானே” முப்பது வயதான பாலாஜி என்பவர் அவ்வாறு கூற,  இவரிடம் தான் சற்று ஒதுங்கியே பழக வேண்டுமென மனதில் குறித்துக் கொண்டாள் அன்னம்.

அன்னத்தின் யோசனையான முகத்தை பார்த்த இன்பா, “பாலாஜி இப்படி தான் சும்மா ஜாலியா பேசுவாரு. ஆனா ரொம்ப நல்லவரு. அவர் மட்டும் இல்ல நம்ம டீம்ல எல்லாருமே ஜென்டில்மேன் தான். அதனால் நீங்க ஒன்னும் பயபடாதீங்க அன்னம். நம்ம டீம் மட்டும் இல்லாம இந்த வர்க் ஏரியால பத்து டீம்கிட்ட இருக்காங்க. அதுல இருக்க பொண்ணுங்களும் நைட் ஷிப்ட் வருவாங்க. இந்த ரூம் வாசல்லயே செக்யூரிட்டி இருப்பாங்க” அவளின் பயத்தை தெளிய வைக்க முற்பட்டான் இன்பா.

“இங்க எல்லா ஷிப்ட்டுமே இருக்கு அன்னம். வாரத்துக்கு ஒரு முறை ஷிப்ட் மாறும். பிரித்வி தான் உங்களுக்கு சொல்லிக் கொடுக்க போறதுனால பிரித்வி என்ன ஷிப்ட்ல வராறோ அதே ஷிப்ட் தான் நீங்களும் வரனும். அப்ப தான் அவனுக்கு சொல்லிக் கொடுக்க வசதியா இருக்கும். அப்புறம் நைட்  ஷிப்ட்ல இரண்டு பேரு, காலை ஷிப்ட்ல ஒருத்தர், மதியம் ஷிப்ட்ல இரண்டு பேரு இருப்பாங்க. இந்த வாரம் பிரித்வியும் மோகனும் தான் நைட் ஷிப்ட்! இன்னிக்கு காலைல ஷிப்ட்ல வந்த ரியாஸ்ஸை காலைல பார்க்கலாம். பிரித்வி உங்களுக்கு இன்ட்ரோ தருவான். வேறெதுவும் சந்தேகம் இருக்கா?” எனக் கேட்டான் இன்பா.

இல்லையென அவள் தலையசைக்க, “ஓகே நான் கிளம்புறேன்! எதுனாலும் எனக்கு கால் செய்யுங்க! என் நம்பர் இருக்கு தானே” என்றவாறு தனது மடிகணிணி பையினை எடுக்க தனது அறைக்குள் அவன் நுழைந்த நொடி,

“இன்பா ஒரு இஷ்யூ! டிரேடிங் ஸ்டாப் ஆகிட்டு! பேமெண்ட் போகலை! அப்ளிகேஷன் ரன் ஆகிட்டு தான் இருக்கு ஆனா போகலை” கணிணியில் ஏதேதோ தட்டியவாறு பதட்டத்துடன் தீவிரமான பாவனையில் உரைத்திருந்தான் மோகன்.

உடனே மோகனின் இருக்கையை நோக்கி சென்ற இன்பா, மோகனின் கணிணியில் எதையோ தட்டி பார்த்துவிட்டு, “ஓ காட்” என்றவன் மதிய ஷிப்ட்டில் வந்து தற்பொழுது வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாகி இருந்த  பாலாஜி மற்றும் பவன் இருவரிடமும் சில கட்டளைகளை இட்டவாறு கணிணியில் மூழ்கியவன் மோகனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

அந்த குழுவில் இருக்கும் அனைவரும் அதி தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்த அன்னத்திற்கு, ‘ஏதோ பிரச்சனை, அதை அவசரமாக சரி செய்ய வேலை செய்கிறார்கள்’ என்பது வரை புரிந்தது.

வேலைக்கிடையில் அன்னம் அதே இடத்தில் நிற்பதை கண்ட இன்பா, “ஏன் அங்கேயே நிக்கிறீங்க அன்னம்! இங்க வாங்க” என்று தனது அருகில் இருந்த இருக்கையில் அவளை அமர வைத்தான்.

எதுவும் புரியவில்லை என்றாலும் அனைவரும் பரபரப்புடன் செய்துக் கொண்டிருக்கும் வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள் அன்னம்.

தொடர்ந்து யாருக்கோ அழைத்து பேசியவன், தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சனை பற்றி உரைத்தான். அதனை எவ்வாறு சரி செய்வது என அவர்களிடம் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தாள். இவ்வாறாக ஐவரும் நாலாபுறமும் எவரெவரிடமோ பேசிக் கொண்டிருக்க, தானும் இத்தகைய  வேலையை தான் இனி செய்ய போகிறோம் என்பதே அத்தனை மலைப்பாய் இருந்தது அவளுக்கு.

மணி இரவு பன்னிரெண்டை நெருங்கி கொண்டிருக்க, அன்னத்தின் கண்கள் உறக்கத்திற்காக ஏங்கியது. அவளையும் மீறி கண்கள் தானாக மூடிக்கொள்ள தலையை அசைத்து தூக்கத்தை விரட்ட முற்பட்டவாறு அமர்ந்திருந்த அன்னத்திற்கு, எப்படி இவர்கள் அனைவரும் இத்தனை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.

தூக்கத்திற்காக அல்லாடிக்
கொண்டிருக்கும் அன்னத்தை பார்த்த இன்பா, “அன்னம்” என்று சற்று சத்தமாகவே அழைத்தான்.

அத்தியாயம் 5

அவனின் சத்தத்தில் அதிர்ந்த அன்னம், “சார்” என்றவாறு எழுந்து நிற்க, இவர்களின் குழு அல்லாது அந்த வர்க் ஏரியாவில் இருந்த அனைவரின் பார்வையும் இவள் மீது படிந்து மீண்டது.

அனைவரின் பார்வையையும் பார்த்தவளுக்கு தான் செய்த தவறு புரிய, “சாரி இன்பா! இனி சார்னு சொல்ல மாட்டேன்” என்றாள் முகத்தை பாவமாய் வைத்துக் கொண்டு.

அவளின் குழுவில் இருந்த மற்ற நால்வரும் மென்னகை புரிந்தனர். 

“நீங்க போய் கேண்டீன்ல டீ குடிச்சிட்டு வாங்க அன்னம்! கொஞ்சம் நடந்து போய் ஹாட்டா ஏதாவது சாப்பிட்டுட்டு குடிச்சிட்டு வந்தீங்கனா தூக்கம் கலையும்” என்றான் இன்பா.

சரி என தலை அசைத்தவள், “நீங்க யாரும் வரலையா?” எனக் கேட்டாள்.

“எங்களுக்கு இன்னிக்கு சிவராத்திரி தான்” என்று சிரித்த மோகன், “நானும் பிரித்வியாவது பரவாயில்ல! நைட் தான் வந்தோம். பாலாஜியும் பவனும் மதியம் இரண்டு மணி ஷிப்ட்டுக்கு வந்தவங்க! நம்ம இன்பா காலைல பத்து பதினோரு மணிக்கு வந்திருப்பாரு. இவங்க தான் நாள் முழுக்க இங்கேயே கிடக்குறாங்க” என்றான்.

மோகனின் பேச்சை கேட்ட அன்னத்திற்கு, ஏன் இன்பா பெண்களை இந்த பிராஜக்ட்டிற்கு எடுக்க மாட்டேன் என்றானென தெளிவாக விளங்கியது. அனைவரையும் பாவமாக பார்த்து வைத்தாள்.

“என்ன லுக்கு! கொஞ்ச நாள்ல நீயும் இந்த பாவப்பட்ட கும்பலோட ஐக்கியமாகிடுவ” என்று பாலாஜி அவளின் பார்வையினை பார்த்து கூறவும், ஆமா தான் என்று கூறியவள் தனது பணப்பையை எடுத்துக் கொண்டு மின் தூக்கியை நோக்கி சென்றாள்.

இவர்களின் பணியிடம் இரண்டாம் தளத்தில் இருக்க, இரவு நேர கேண்டீன் இவர்கள் கட்டிடத்தின் நான்காம் தளத்தில் இருந்தது. இரவு ஷிப்ட் வேலை செய்பவர்கள் அனைவரும் அந்த கேண்டீனுக்கு தான் வருவார்கள்.

கேண்டீனுக்கு வந்து தேநீர் ஆர்டர் செய்தவள், அங்கிருந்த மேஜையில் அப்படியே தலையை சாய்த்து கொண்டாள். உடனே உறக்கம் அவளை தழுவிக் கொள்ள, மீண்டும் அவள் கண் விழித்து பார்த்த போது ஒன்றரை மணி நேரம் கடந்திருந்தது‌‌.

நேரத்தை பார்த்து விட்டு, “அய்யய்யோ” என பதறி எழுந்தவள், தேநீர் கேட்டதையே மறந்து மின் தூக்கியை நோக்கி ஓடினாள்.

‘அய்யோ இந்த இன்பா என்னை என்னனு நினைச்சிருப்பாரு! கொஞ்சம் கூட பொறுப்பில்லாத பொண்ணுனு தானே நினைச்சிருப்பாரு!
உனக்கு கொஞ்சம் கூட பொறுப்பில்லை அன்னம்! இப்படியா தூங்குவ!’ என தனக்கு தானே பேசிக்கொண்டும் தன்னை தானே கடிந்துக் கொண்டும் மின் தூக்கியை நோக்கி சென்றவள், உள்ளே நுழைந்து தனது இரண்டாம் தளத்தின் எண்ணை அழுத்தியவாறு நிற்க, அவளுடன் ஒருவன் மின் தூக்கிக்குள் வந்ததை உணர்ந்தாலும் உற்று நோக்கவில்லை அவள்‌.

மூன்றாம் தளத்தை அடைந்ததும் மின்சாரம் தடைப்பட, மின் தூக்கி அதிர்ந்து நின்று அவ்விடத்தையே இருளில் மூழ்கச்செய்தது.

அன்னத்தின் இதயம் அதிர்ந்தடங்க, நொடிப்பொழுதில் இருட்டின் பயத்தில் உள்ளங்கையில் வியர்த்து போக, கையின் நடுக்கத்துடன் கைபேசியை அவள் இயக்க முனைய, அதற்கு முன்பே அவளின் முன்பு கைபேசி வெளிச்சத்தை வீசினான் அவளருகில் நின்றிருந்தவன்.

முகத்திற்கு நேரே வந்த வெளிச்சத்தில் நெஞ்சம் திகில் கொள்ள, கண்களை கூசிய அந்த வெளிச்சத்தில் எரிச்சலுற்றவளாய், “ம்ப்ச் கண்ணுக்கு நேரா லைட் அடிக்கிறீங்களே! அறிவிருக்காங்க” என்று அவனது கையை தள்ளியவாறு கண்களை சுருக்கி அவனை பார்த்தவளுக்கு மீண்டுமாய் நெஞ்சம் அதிர்ந்து நடுங்கியது. இந்நேரத்தில் அவனை இங்கே அவள் துளியும் எதிர்பார்க்கவில்லை.

அவளையும் மீறி அவளின் வாய், “சிவா” என்று உரைக்க,

“கூல்! ரிலாக்ஸ்” என்று அவளை சிவா ஆசுவாசப்படுத்த முனைந்த நேரம், “சாரி” என்றாள் அவள்.

மின்சாரமும் வந்து மின் தூக்கியும் தனது வேலையை துவங்கி இருந்தது.

மீண்டுமாய் மின் தூக்கி குலுக்கலுடன் கிளம்ப ஆயத்தமாகியதும், “இருட்டுல என்னை பார்க்க பூதம் மாதிரி தெரிஞ்சிதா?” என சிரித்தவாறு கேட்டான் சிவா.

“ஹான் இல்லை! கொஞ்சமா” என தடுமாறியவள் நிறுத்த,

“ஓ கொஞ்சமா பூதம் மாதிரி தெரிஞ்சேனா?” என்று சிரித்தவனை பார்த்து, “அய்யோ இல்லங்க சிவா! கொஞ்சமா பயந்துட்டேன்னு சொல்ல வந்தேன்” என்றாள் அவசரமாக.

முகத்தில் இருந்த வியர்வை துளிகளை கையிலிருந்த கைக்குட்டையை கொண்டு துடைத்தவாறு பேசிய அன்னம், “தேங்க்ஸ்” என்றாள். மென்மையாக சிரித்தவனை பார்த்தவளும் மெல்ல சிரித்தாள்.

இரண்டாம் தளத்தில் மின் தூக்கி நிற்க, அவனிடம் சிறு தலையசைப்பும் மென்னகையுமாக மின் தூக்கியை விட்டு வெளியே வந்தவள், அது வரை மறந்திருந்த இன்பாவை பற்றிய நினைவு வந்தவளாக, அவசரமாக தனது இருக்கையை நோக்கி சென்றாள்.

அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த அவளின் டீம் மக்கள் ஐவரும் ஆரவாரமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

அன்னத்தை பார்த்ததும், “ஹே அன்னம்! இஷ்யூ சால்வ் ஆகிடுச்சு” என்றான் பாலாஜி.

“அப்படியா?” சந்தோஷமாய் விழிகளை விரித்தப்படி பார்த்தவளின் முகத்தை தான் பார்த்திருந்தனர் அனைவரும்.

“என்ன, டீ குடிக்க போய்ட்டு, தூங்கிட்டீங்களா அன்னம்?” என்று கேட்ட இன்பாவின் கேள்வியில் திருதிருவென விழித்தவளை பார்த்து சிரித்திருந்தனர் அனைவரும்.

“இட் ஹேப்பன்ஸ் (நடக்கிறது தான்). முதல் சில நாட்கள் இப்படி நான் இருக்கும். ஆனா சீக்கிரம் முழிச்சி வேலை பார்க்க பழகிக்கோங்க! மாசத்துக்கு இரண்டு வாரம் நைட் ஷிப்ட் வர மாதிரி இருக்கும்” என்றவன்,

“அதனால தான் நைட் ஷிப்ட்டுக்கு இரண்டு பேரை வச்சிருக்கோம். ஒருத்தர் தூங்கிட்டாலும் இன்னொருத்தர் இஷ்யூ வராம பார்த்துக்கனும்னு தான் இந்த பிளான்! ஓகே கைஸ் லெட்ஸ் லீவ்”  என்றவன் சொன்னதும், பாலாஜியும் பவனும் கிளம்ப ஆயத்தமாக, இருவரையும் தனது மகிழுந்திலேயே அழைத்து செல்வதாக உரைத்தான் இன்பா.

கிளம்பும் சமயம் அன்னத்தை அழைத்த இன்பா, “இன்னிக்கு ஏற்பட்ட இஷ்யூ பத்தின முழு விளக்கமும் உங்களோட புரிதலும் நாளைக்கு நீங்க எனக்கு எக்ஸ்பிளைன் செய்யனும்” என்று கூறவும்,

‘என்ன நடந்துச்சுனே தெரியாதே’ என்று திருதிருவென முழித்த அன்னம், சரியென மெதுவாக தலையசைத்தாள்.

அவன் சென்றப்பிறகும் நின்ற இடத்திலேயே அப்படியே யோசனையோடு நின்ற அன்னத்தை அழைத்தான் மோகன்.

“ஏன் நின்னுட்டே இருக்கீங்க! வந்து உட்காருங்க அன்னம்” என அவளை அழைத்து அருகிலுள்ள இருக்கையில் அமர செய்த மோகனை பார்த்தவள்,

“இவருக்கு இன்பானு பேரு வச்சதுக்கு பதிலா துன்பானு வச்சிருக்கலாம்” என்று சட்டெனக் கூறியவள் பின் தனது நாக்கை கடித்தவளாய்,

‘உன் நாக்குல தான்டி உனக்கு சனி இருக்கு! அய்யோ என்ன நினைச்சாங்களோ தெரியலையே’ என்று மனதோடு பேசியவாறு மோகனையும் பிரித்வியையும் விழிகளை உருட்டி மாறி மாறி அவள் பார்க்க, இருவரும் அவள் கூறியதில் முதலில் திகைத்து பின் அவளின் பாவனையில் வாய்விட்டு சிரித்திருந்தனர்.

பிரித்வி மலையாளியாய் இருந்தாலும் தமிழ் மொழியை புரிந்துக் கொள்ள முடியும் என்பதால் அவள் கூறியது புரிந்திருந்தது அவனுக்கு.

“உனக்கு வாய் துடுக்கு ஜாஸ்தி தான்” என்று சிரித்த மோகன், “இன்பா முன்னாடி இப்படி பேசி வச்சிடாத! எந்தளவுக்கு ரிலாக்ஸ்ஸா ஜாலியா சிரிச்சிக்கிட்டே இருக்காரோ அந்தளவுக்கு கோபமும் வரும்” என்றான்.

குழுவில் இருக்கும் அனைவரையும் விட சின்னப்பெண் என இன்பா இவளை அறிமுகம் செய்யும் போதே கூறியிருந்ததால் இயல்பாகவே ஒருமைக்கு தாவியிருந்தான் மோகன்.

‘அய்யோ கோபம் வருமா! நாளைக்கு வேற இந்த இஷ்யூ பத்தி சொல்ல சொல்லிருக்காரே! எனக்கு ஒன்னும் தெரியாதே’ என்று எண்ணி கலங்கியவளாய், “மோகன்! மோகன்! இப்ப நடந்த இஷ்யூ பத்தி சொல்லி தர்றீங்களா? கோபம் வேற வரும்னு சொல்றீங்களே! எதுவும் திட்டி விட்டுட போறாரு” கலக்கமாய் கேட்டிருந்தாள்.

“திட்டு வாங்குறதுலாம் சகஜம்னு பழகினா தான் இங்க பொழைக்க முடியும் அன்னம்” நிதர்சனத்தை உரைத்தவனாய் அவளின் முகத்தினை பார்த்தவன் அதில் தெரிந்த கலக்கத்தில், “எதுக்கு கவலைப்படுற! அதான் நான் இருக்கேன்ல! நான் சொல்லி தரேன்” என்றவன்,

“நாங்க இரண்டு பேரும் போய் முதல்ல டீ குடிச்சிட்டு வர்றோம். நான் ஒரு ஸ்கிரிப்ட் ரன் செஞ்சிருக்கேன். சிஸ்டம் லாக் ஆகிட கூடாது. அதனால் இந்த மௌஸை (mouse) ஆட்டிக்கிட்டே இரு! வந்துடுறோம்” என்றான்.

இதெல்லாம் ஒரு வேலையா என்பது போல் அவள் அவனை பார்க்க, “உனக்கு கொடுத்திருக்க முதல் வேலை! ஒழுங்கா செய்யனும் சரியா” வாய்க்குள் சிரித்தவாறு மோகன் சொல்ல, இவள் முறைத்தாள் அவனை.

“ஹே என்ன முறைக்கிற! நிஜமாவே ஸ்கிரிப்ட் ரன் ஆகுது பாரு” என்று கணிணியில் எதையோ தட்டியவாறு அவன் காண்பிக்க, “அப்ப நிஜமாவே மௌஸை அசைச்சிட்டு இருக்கிறது தான் என்னோட முதல் வேலையா?” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு அவள் கேட்க,

“நீயாவது பரவாயில்ல! நான் இவங்களுக்கு டீ வாங்கி கொடுத்தது தான் நான் செஞ்ச முதல் வேலை” என்று சிரித்த மோகன் பிரித்வியுடன் கேண்டீனுக்கு சென்றான்.

‘நல்ல வேலை கொடுக்கிறீங்கடா’ என்று புலம்பிய அன்னம், மௌஸை அசைப்பது போல் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டவள், அதனை இன்ஸ்டாவில் பதிவு செய்து விட்டு மற்ற போஸ்ட்டுக்களை பார்க்க, அதில் சிவாவின் புகைப்படப்பதிவை இன்ஸ்டா இவளுக்கு பரிந்துரை செய்திருந்தது.

‘என்னங்கடா இது! நான் சிவாவை பார்த்தது எப்படி இந்த இன்ஸ்டாகாரனுக்கு தெரிஞ்சிது. அவனே ஆட்டோமேட்டிக்கா சிவாவோட போட்டோவை சஜ்ஜஷன்ல காண்பிக்கிறான்’ என்று ஆச்சரியமாக நினைத்தவாறு அவனை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து அவனது புகைப்படங்களை பார்வையிட்டாள் அன்னம்.

ஒரு கையில் மௌஸூம் ஒரு கையில் மொபைலுமென சிவாவின் இன்ஸ்டா ரீல்ஸ், புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் என அதனை பார்த்தவாறு அதில் மூழ்கிப் போனவளின் தலையை தட்டிய மோகன்,

“மௌஸை ஆட்டச்சொன்னா என்ன செஞ்சிட்டு இருக்க?” என்று அவளது மொபலை எட்டிப்பார்க்க, அதில் தெரிந்த சிவாவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு,

“ஹே சிவா அண்ணாவை உனக்கும் பிடிக்குமா?” எனக் கேட்டான்.

“ச்சே ச்சே! எனக்கு சீரியல் பார்க்கிற பழக்கம்லாம் கிடையாது” என்றவள் சொன்னதும்,

“என்னது ச்சே ச்சேவாஆஆஆ! ஹலோ நான் இன்ஸ்டால சிவா அண்ணாக்கு தனி ஃபேன் பேஜ் வச்சிருக்க ஆளாக்கும்‌. சிவா அண்ணாவை பிடிக்காத யாரையும் எனக்கு பிடிக்காது” என்றான்.

‘அய்யோ இவன் தானே நமக்கு சொல்லி தரனும்! காலை வாரிட போறான் கடவுளே’ என பயந்தவளாய்,

“அய்யோ அவரை போய் யாருக்காவது பிடிக்காம போகுமா? அவரை பத்தி எனக்கு அவ்ளோவா தெரியாதுன்னு சொல்ல வந்தேன்!” பல்லை இளித்தவாறு காட்டி பேசியவளை பார்த்தவன்,

“என்ன நக்கலா?” என்று முறைத்தான்.

“அய்யய்யோ இல்லையே! நிஜமா அவரை பிடிக்காதுனுலாம் இல்லை. அவர் நல்லவர் தான். இப்ப கூட லிப்ட்ல வரும் போது அவரை பார்த்தேன். அவ்ளோ டீசன்ட்டா நடந்துக்கிட்டாரு” என்றவள் பேசிக் கொண்டே போக,

“என்னது சிவா அண்ணாவை பார்த்தியா?” என்று அத்தனை ஆச்சரியத்துடன் அவன் கேட்க, “ஏன் நீ அவரை பார்த்ததில்லையா? அவர் ஷூட்டிங் தினமும் இங்க தானே நடக்குது” எனக் கேட்டாள் அன்னம்.

“அய்யோ ஒரு மாசமா தான் ஷூட்டிங் நடக்குது. அதுலயும் நான் பகல் டைம் ஷிப்ட்ல வந்தப்பலாம் இவர் சீன் இல்லனு இவர் ஷூட்டிங்க்கு வரலைனு சொல்லிட்டாங்க. நைட் ஷிப்ட் முடிஞ்சி அடுத்த வாரம் தான் அவரை பார்க்க முடியும் போலன்னு நினைச்சிருந்தேன்” என்றவாறு இருக்கையில் இருந்து எழுந்தவன்,

“இரு நான் போய் சிவாண்ணாவை பார்த்துட்டு வந்துடுறேன்” என்று ஓடிச் சென்றான்.

‘நிஜமாவே என் வாய்ல சனி தான்! ஒழுங்கா வாயையும் கையையும் வச்சிக்கிட்டு இருந்திருந்தா அவன் பாட்டுக்கு வந்து சொல்லி கொடுத்திருப்பானா! இனி இவன் எப்ப வந்து எப்ப சொல்லி கொடுப்பானோ! அதுக்குள்ள ஷிப்ட்டே முடிஞ்சிடும் போலயே’ மனதோடு பேசியவாறு தலையிலடித்துக் கொண்ட அன்னம்,

‘இந்த பிரித்விக்கிட்டயாவது சொல்லி தர சொல்வோம்’ என்று பிரித்வியின் இருக்கையை திரும்பி அவள் பார்க்க, அங்கோ பிரித்வி இருக்கையை சாய்த்தவாறு சாய்ந்து படுத்துக்கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

‘அன்னம்! நாளைக்கு நீ உடைஞ்ச கிண்ணம் ஆகப்போறது உறுதி’ என்றவாறு கன்னத்தில் கை வைத்து அமர்ந்து விட்டாள் அன்னம்.

அதே நேரம் அங்கு வீட்டை அடைந்து குளித்து முடித்து கட்டிலில் சாய்ந்து கண்களை மூடிய இன்பாவின் விழிகளுக்குள், அவன் கிளம்பும் சமயம் திருதிருவென முழித்தப்படி நின்ற அன்னத்தின் விழிகளும் அவளின் முக பாவனைகளும் வந்து போக, இதழில் குறுநகை முகிழ்க்க உறங்கி போனான் இன்பா.

— தொடரும்