அழகிய அன்னமே 38 & 39

அதிகாலை வேளையில் ஆருத்ரன் நடனப்பள்ளி என்ற அந்த பலகையை பார்த்தவாறே தனது இரு சக்கர வாகனத்தில் அப்பள்ளியின் வாயிலினுள்ளே சென்றாள் அன்னம்.

அங்கிருந்த காவலாளி இவளை பார்த்ததும் வணக்கம் சொன்னவராய், “சார் உள்ளே தான் இருக்காங்க” என்றார்.

நடனப்பயிற்சி அறையினுள் அவள் நுழைந்ததும், “குட் மார்னிங் வெள்ளப்புறா! கதவை லாக் செஞ்சிட்டு வா” என்றான்.

அங்கிருந்த மியூசிக் சிஸ்டத்தில் ஏதோ செய்து கொண்டிருந்தான் அவன்.

லெக்கின்ஸ் குர்தி அணிந்திருந்தவளை பார்த்தவன், “இந்த டிரஸ் டான்ஸ் ஆட கம்ஃபர்டபுள் தானே” எனக் கேட்டான்‌.

“என்னது டான்ஸ்ஸா?” ஆச்சரிய அதிர்ச்சியுடன் அவள் கேட்க,

“ஆமா நாம டான்ஸ் ஆட போறோம்” என்றான் அவன்.

இவள் மூளையோ உடனே, ‘இன்னும் கல்யாணத்துக்கு பத்து நாள் தானே இருக்கு. கல்யாணத்துல மாப்பிள்ளை பொண்ணுலாம் இப்ப டான்ஸ் ஆடுறாங்களே. அந்த மாதிரி ஆடுறதுக்கு பிராக்டிஸ் செய்ய கூப்பிட்டிருக்காரா! நல்ல ஐடியா தான்’ மனதோடு எண்ணிக் கொண்டவளாய்,

“இன்னும் பத்து நாள் இருக்கே கல்யாணத்துக்கு! இப்பவே எதுக்கு பிராக்டிஸ் செய்யனும்” எனக் கேட்டாள்.

“முதல்ல நான் கத்துக் கொடுக்கிறேன் உனக்கு ஆட வருதானு பார்ப்போம்” என்றவன் அவளுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்தான்.

“சூப்பர்டா அன்னம். கிரேஸ்புல்லா ஆடுற! முன்னாடி டான்ஸ் கத்துருக்கியா என்ன?” என்று கேட்டான்.

“இல்லப்பா! ஸ்கூல் காலேஜ் ஃபங்ஷன்ல ஆடிருக்கேன்” என்றாள்.

அவனின் மார்பில் அவளின் முதுகு படிய அவள் நிற்க, அவளின் இரு கரங்களின் மீதும் தனது கரங்களை வைத்து அவளின் இடையோடு சுற்றி அணைத்தவனாய் நடனத்தின் இறுதி ஸ்டெப்பை பயிற்றுவிக்க, அவனின் இந்த நெருக்கம் கூச்சத்தை அளித்து நெஞ்சத்தை படபடக்கச் செய்தது அவளுக்கு.

‘டான்ஸ்ன்ற பேருல நம்ம கூட இப்படி ஒட்டிக்கிட்டு இருக்க கூப்பிட்டாரா இன்னிக்கு’ என்று எண்ணியவளாய் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

“ஓகே ஒரு தடவை சொல்லி கொடுத்ததை ஃபுல்லா ஆடு!” அத்தனை தீவிரம் அவன் முகத்தில்.

‘டான்ஸ்னு வந்துட்டா செம்ம ஸ்டிரிக்ட் ஆபிசரா மாறிடுவாரு போல! இதுல எங்கிருந்து இவர் ரொமேன்சுக்காக கூப்பிட்டிருக்க போறாரு’ என்றெண்ணியவாறு சரியென தலையசைத்தாள்.

“ஃபைவ் சிக்ஸ் செவன் எய்ட்” எண்ணியவனாய் கவுன்ட்டிங் கூறி ஒரு பக்க சுவர் முழுவதுமிருந்த ஆளுயரக் கண்ணாடியை பார்த்தவாறே அவளுடன் ஆடியவன், ஆடி முடித்ததும்,

“சூப்பர்டா வெள்ளப்புறா” என கைத்தட்டி பாராட்டினான்‌.

‘கல்யாண மேடைல ஆடுற ஸ்டெப் மாதிரியே இல்லையே இது! ரொமேன்டிக் பாட்டுக்கு ஆடுற ஸ்டெப் மாதிரில இருக்கு’ மனதோடு எண்ணிக் கொண்டவளாய்,

“சரி எந்த பாட்டுக்கு ஆடப் போறோம். இவ்ளோ தானா? இது முழு பாட்டு மாதிரி தெரியலையே” எனக் கேட்டாள்.

“இப்ப மியூசிக்கோட தான் ஆடப் போறோம்” என்றவன்,

தனது கைபேசியிலுள்ள புகைப்பட கருவியை இயக்கி தங்களை காணொளி எடுப்பதற்கேற்ற இடம் பார்த்து வைத்தவனாய், இவளிடம் வந்தவன்,

“அலெக்ஸ்ஸா மியூசிக்” என்றான்.

லாலா லாலா லாலலலா என ஆரம்பித்ததுமே என்ன பாடல் என புரிந்தவளின் கைகள் சில்லிட கண்களை விரித்து அவனை பார்த்தாள்.

அவளின் கைகளை பற்றியவனாய், “ஹ்ம்ம் லெட்ஸ் டான்ஸ்” என்றவன் அவளுடன் ஆடியவனாய் அவளையும் ஆட்டுவித்தான்.

அன்னமே அன்னமே நான் சொல்லி

வந்ததா தென்றலும் நேற்று

உன்னையே உன்னையே நான் எண்ணி வெந்ததைச் சொன்னதா பூங்காற்று

அவளுடன் ஆடியவாறு இவ்வரிகளுக்கு அவனளித்த முக உணர்வுகளை கண் சிமிட்டாது பார்த்தவளுக்கு வேறெதுவும் நினைவுக்கு வரவேயில்லை.

உந்தன் காலின்

மெட்டி போல் கூட நடப்பேன்

உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன்

மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு

உன்னில் என்னைக் கரைப்பேன்

அவளின் பாதத்தை தொடையில் தாங்கி முத்தமிட்டு, அவளின் கண்களில் முத்தமிட்டு அரவணைத்து, நடனத்திலேயே மாலை சூடுவது போல் செய்கை செய்து இறுதியாய் அவளின் இடையோடு அவளின் கரத்தின் மீது தன் கரத்தினை வைத்து அவன் நிற்க, பாடலும் நின்றிருந்தது.

இருவரும் நெஞ்சத்தின் விம்மலுடன் மூச்சு வாங்க அப்படியே நிற்க, அவனை நோக்கி திரும்பியவள் கண்களில் நீர் சூழ அவனை இறுக அணைத்தாள்.

அவளின் தோள் மீது தனது தலையை சாய்த்து அவளின் முதுகை வருடியவனாய், “இனி இந்த பாட்டை கேட்டா என்ன தோணும் வெள்ளப்புறா” என்று கேட்டான்.

“என் சிவசு அத்தான் கூட நான் ஆடின முதல் பாட்டு” கலவையான உணர்வில் தத்தளித்தவளாய் கரகரப்பான குரலில் கூறியவள், அவனது முகத்தினை கைகளில் தாங்கி கண்ணீர் துளியுடன் கன்னத்தில் அழுத்தமாய் ஈர முத்தமிட்டாள்.

“என் சிவசு அத்தானுக்கு நான் கொடுத்த முதல் முத்தம்”

எதிர்பாராது அவள் அளித்த முத்தத்தை கண் மூடி உள் வாங்கியவனாய் சிலிர்த்து போனான்.

“லவ் யூ அத்தான்” என்று அவனது மார்பினில் தலை சாய்த்தவளாய்,

“என் சிவசு அத்தான்கிட்ட என் காதலை சொல்ல வச்ச பாட்டு” என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

“லவ் யூ டா வெள்ளப்புறா” என்று அவளை அணைத்தவனின் கைகள் பஞ்சு பொதியை அணைப்பது போன்ற  மென்மையை உணர அவனுடல் சிலிர்த்தடங்கியது.

அடுத்த சில நொடிகள் இருவரும் மற்றவரின் அண்மையை சுகித்த வண்ணமிருக்க,

யாரோ கதவை தட்டும் ஓசை கேட்டு, இருவரும் தங்களது மோன நிலையிலிருந்து கலைந்தனர்.

அவளை தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தி அவளது கண்களை துடைத்தவனாய், “ரெஸ்ட் ரூம் போய் முகத்தை கழுவிட்டு வாமா” என அவளை அனுப்பி விட்டு, காணொளி எடுக்கப்பட்ட தனது கைபேசியை எடுத்து பார்த்தவாறு கதவை திறந்தான்.

“ஹாய் சிவா அண்ணா” என்றவாறு அங்கே நின்றிருந்தாள் அஞ்சலி.

“ஹாய் அஞ்சலி! குட் மார்னிங்” என்று சிரித்தவன் அவள் உள்ளே வர வழி விட்டான்.

“என்ன காலைலயே பிராக்டீஸ் ஆரம்பிச்சிட்டீங்களா? யாருக்கு சொல்லி கொடுத்தீங்க?” என்று கேட்டவாறே அந்த அறையை அவள் சுற்றி முற்றி பார்க்க,

“அன்னம் வந்திருக்கா அஞ்சலி! ராணி அக்கா வந்துட்டாங்கனா எங்களுக்கு இரண்டு காபி சொல்றியா?” என்றான்.

“சரிங்க அண்ணா” என்றவள் நகர முற்பட்ட சமயம்,

“அப்புறம் அஞ்சலி” என்றவன் ஏதோ கூற முனைந்த நேரம், அஞ்சலியை பார்த்தவாறே நடந்து வந்து சிவாவின் அருகே நின்றாள் அன்னம்.

“ஹாய் அண்ணி” அஞ்சலி சிரித்தவாறே உரைக்க, “ஹாய் அஞ்சலி” என்று மென்னகை புரிந்தாள்.

“உன்னோட வேலை எல்லாத்தையும் ஜீவனுக்கு சொல்லி கொடுக்க ஆரம்பிச்சிடு அஞ்சலி! அன்னத்துக்கும் சொல்லி கொடுத்திடு. பத்து நாள் தானே இருக்கு. உன்னை பர்சனலா கான்டேக்ட் செய்ற ஸ்டூடன்ட்ஸ் எல்லாருக்கும் அன்னம் நம்பரை கொடுத்திடு” என்றான்.

அவனின் பேச்சில் சட்டென அவனை திரும்பி பார்த்த அன்னம், “நானா?” என்று கேட்டாள்.

“நீயே தான்! எனக்கு அடிக்கடி அவுட் டோர் ஷூட்டிங், வெளிநாட்டு ஷோனு இதை கவனிக்க நேரமில்லாம போகும். அப்பலாம் அஞ்சலி தான் இந்த டான்ஸ் ஸ்கூலை கவனிச்சிட்டு இருந்தாள். இனி நீதான் இந்த டான்ஸ் ஸ்கூல் மேனேஜ் செய்யனும் அன்னம். அதனால் எல்லாம் கேட்டு தெரிஞ்சிக்கோ!” என்றான்.

“சரி அண்ணி! நான் உங்க இரண்டு பேருக்கும் காபி சொல்றேன்” என்றவாறு அஞ்சலி நகரவும்,

அன்னத்தின் கையை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவனாய் அவளின் முக உணர்வுகளை பார்த்து, “என்ன யோசனை?” என்று கேட்டான்.

“எனக்கு இதை பத்திலாம் ஒன்னும் தெரியாது. நான் மட்டும் தனியா எப்படி பார்த்துக்கிறது” தயங்கியவாறே அன்னம் கேட்க,

“உன்னை யாரு தனியா பார்த்துக்க சொன்னா? உன்னை எப்பவும் எங்கேயும் தனியா தவிக்க விட்டுட மாட்டேன்டா வெள்ளப்புறா! நான் கூடவே இருப்பேன். இனி அன்னம்னா கூடவே அவளோட சிவசு அத்தானும் இருப்பான்னு தான் அர்த்தம்” என்றவன் அவளின் கன்னத்தை பிடித்து ஆட்டினான்.

முகத்தில் தெளிவும் சந்தோஷமும் வெளிப்பட சிரித்தவள், “தேங்க்யூ அத்தான்” என்றாள்.

“மை பிளஷர் பொண்டாட்டி” என்று சிரித்தவனாய்,

“இந்த வீடியோ பாரு! சூப்பரா வந்திருக்கு” அவர்கள் நடனமாடிய காணொளியை அவளிடம் காண்பிக்க,

சுற்றம் மறந்து அதனுள் மூழ்கி போனவளாய் பார்த்தவளுக்கு அச்சோ என்று வெட்கமாகி போனது.

“அய்யோ அத்தான் எமோஷ்னல் ஆகி என்னென்னமோ செஞ்சி வச்சிருக்கேனே” என்றவளின் கன்னம் வெட்கத்தில் சிவந்து போனது.

அதனை ரசித்து பார்த்தவனாய், “என்னென்னமோலாம் செய்யலாம். ஜஸ்ட் ஒரு முத்தம்! ஒரு லவ் பிரபோசல் அவ்ளோவே தான்” கண் சிமிட்டியவாறு சிரித்தான் அவன்.

வெட்கத்தில் அவன் மார்போடு முகத்தை புதைத்துக் கொண்டவளை, மென்மையாக அணைத்து கொண்டவன்,

“நாள்‌ முழுக்க உன் கூட இப்படியே ஒட்டிக்கிட்டு இருக்க எனக்கும் ஆசை தான். ஆனா டான்ஸ் கத்துக்கிற பசங்கலாம் வந்துடுவாங்களே” என்றதும் சட்டென அவனை விட்டு விலகியவளை பார்த்து சிரித்தான் அவன்‌.

அந்த காணொளியை மீண்டுமாய் பார்த்தவள், “பொக்கிஷம்ப்பா இது!

நம்ம வாழ்க்கைல நம்மளுடைய முதல் வீடியோ! ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!இந்த வீடியோவை எனக்கு அனுப்புங்க அத்தான்” என்றாள்.

அவளுக்கு அவன் அனுப்பிக் கொண்டிருக்க, நடனம் பயிலும் மாணவ மாணவிகள் ஒருவர் பின் ஒருவராய் வர ஆரம்பித்தனர்.

ஜீவன் வந்ததும், “ஹாய் அண்ணி” என்றவாறு அவளிடம் சிறிது நேரம் பேசி விட்டு தனது வேலையை பார்க்க செல்ல,

மேலும் இரு நடனப் பயிற்றுனர்கள் வந்தனர்.

அன்னத்திற்கு அவர்களை அறிமுகப் ‌படுத்தியவன், “இவங்க இரண்டு பேரும் சன்டே மட்டும் டான்ஸ் சொல்லி கொடுக்க வருவாங்க அன்னம்” என்றவாறு அன்னத்தையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

காலை உணவை உண்டுவிட்டு அவரவர் வேலையில் மூழ்கிப் போக, அலுவலக அறையில் அஞ்சலி அன்னத்திடம் அவளின் வேலைகளைப் பற்றி சொல்லி கொடுத்து கொண்டிருந்தாள்.

அந்நேரம் அவர்களின் அருகே வந்தமர்ந்த சிவா, “அஞ்சலி இருக்கும் போதே நீயே இதெல்லாம் பார்க்க ஆரம்பிச்சிடு அன்னம். உனக்கு பழக்கமானதும், அஞ்சலிக்கு பதிலாக வேலைக்கு எடுத்திருக்க ஆளை உனக்கு பி ஏ வா வச்சிக்கலாம். மத்தவங்களை வேலை வாங்குறதுக்கு முதல்ல நமக்கு வேலையை பத்தி தெரிஞ்சிருக்கனும்ல‌. அதனால நீ முழுசா கத்துக்கோ” என்றான்.

சரி என்றவளாய் அஞ்சலியை பார்த்தவளுக்கு, அவளின் வாட்டமான முகம் குழப்பமளித்தது.

சிவா அங்கிருந்து சென்றதும், அஞ்சலியை பார்த்த அன்னம், “உங்களுக்கு இந்த வேலையை விட்டு போக மனசில்லையா அஞ்சலி” எனக் கேட்டாள்.

“ஆமா அண்ணி! இந்த டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லயே இங்கே வேலைக்கு சேர்ந்துட்டேன். சிவாக்கு பி ஏ மாதிரி கூடவே இருப்பேன்‌. எல்லாமே எனக்கு தான் தெரியும். எனக்கு இன்னொரு வீடு மாதிரி இது” என்று கவலையுடன் உரைத்தாள் அஞ்சலி.

அத்தியாயம் 39

மாலை நான்கு மணியளவில் அலுவலக அறையில் இருந்த அன்னத்திடம் வந்த சிவா, “ருத்ரன் பெரியப்பா தான் பேசுறாங்க. பேசு! உன் போன் நாட் ரீச்சபிள்னு வந்துதாம்” என்று தனது கைபேசியை அவளிடம் கொடுத்து விட்டு சென்று விட்டான்.

“ஹலோ மாமா! என் போன் ஆன்ல தான் இருக்கு மாமா! மே பி சிக்னல் பிராப்ளம் போல! இன்னும் ஒரு மணி நேரத்துல கிளம்பிடுவேன் மாமா” என்று சில நிமிடங்கள் பேசி விட்டு இணைப்பை துண்டித்தவளுக்கு முகப்பில் இருந்த அவர்களின் நிச்சய புகைப்படம் கண்ணில் பட்டது‌.

அவளின் கையில் அவன் மோதிரம் அணியும் புகைப்படம் அது. குனிந்த தலையுடன் அவளின் விரலை அவள் பார்த்திருக்க, அவளை பார்த்திருந்தான் அவன்.

“சாமிக்கு மாலை போட்டுட்டு பார்க்கிற பார்வைய பாரு” புகைப்படத்தில் இருந்த அவனது கன்னத்தில் குத்தினாள்‌.

அவனது கைபேசியின் கேலரியை திறந்ததும் இவளுடன் முந்தைய நாள் அவனது வீட்டில் எடுத்த புகைப்படம் இருக்க, “தூங்கும் போது கூடவா போட்டோவா எடுத்து வைப்பீங்க” என்றவாறு பார்த்திருந்த சமயம், அஞ்சலி உள்ளே வந்து அன்னத்திடம் எதையோ கேட்டுவிட்டு வெளியே செல்ல, அவனது கைபேசி லாக்காகி போனது.

“ம்ப்ச் அதுக்குள்ள லாக் ஆகிடுச்சே” நடனக் கூடத்தில் இருந்த சிவாவிடம் சென்றவள், “அன்லாக் செஞ்சி தாங்க! நான் போட்டோஸ் பார்க்கனும்” எனக் கேட்டாள்.

தனது கைபேசியின் பேட்டர்ன் (pattern) லாக்கை திறக்கும் பேட்டர்னை அவளுக்கு சொல்லி கொடுத்தவாறு அன்லாக் செய்தவன், மீண்டுமாய் லாக் செய்து அவளை அன்லாக் செய்ய வைத்தான்‌.

“அவ்ளோ தான். நீ போய் போட்டோஸ் பார்த்துட்டு இரு! அரை மணி நேரத்துல நான் வந்துடுறேன். கிளம்பிடலாம்” என்று அவளை அனுப்பி வைத்தான்.

அவனின் கைபேசியிலுள்ள புகைப்படங்களை பார்த்தவாறு வந்தவள், “ஏன் அஞ்சலி கவலைப்படுற! உன் காதலை புரிஞ்சிக்காத அந்த ஆளு தான் லூசர். இந்த காலத்துல மீடியால வேலை பார்க்கிற இவ்வளோ நல்ல பொண்ணு யாருக்கு கிடைக்கும். உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும் வேண்டாம்னு சொல்றாருனா அவர் அன்லக்கினு நினைச்சிக்கோ! நீ இங்கிருந்து போனா தான் அந்தாளை மறக்க முயற்சி செய்வ! நீ வேலையை விட்டு போறது நல்லது தான்” திடுக்கிட்டு நிமிர்ந்தாள் அன்னம்.

‘யாரது அஞ்சலிக்கிட்ட இப்படி பேசிட்டு இருக்கிறது’ என்று நிமிர்ந்து சுற்றுப்புறத்தை பார்த்தாள்.

ஓய்வறையின் வாசலில் தான் இவ்வார்த்தைகள் இவளின் காதினில் விழுந்தது.

வெளியே சுற்றி எவரும் இல்லாமல் போக, உடனே ஓய்வறைக்குள்ளே சென்று பார்த்தாள்.

அஞ்சலியும் அவளுடன் ஒரு பெண்ணும் பேசியவாறு வெளியே வந்துக் கொண்டிருந்தனர்.

‘இந்த பொண்ணு தான் அஞ்சலிக்கிட்ட பேசிட்டு இருந்துச்சா? அஞ்சலி யாரை லவ் பண்றா? இங்க யாராவது டான்ஸ் கத்துக்க வந்தவங்களை லவ் பண்ணிருப்பாளோ’ ஓய்வறையில் இருந்த கண்ணாடியில் தனது முகத்தை பார்த்தவாறு இதனை சிந்தித்தவள்,

“மத்தவங்க பர்சனல் நமக்கு எதுக்கு? நம்ம வேலையை நாம பார்ப்போம்” என்றெண்ணியவாறு வெளியே வந்தவள், சிவாவின் கைபேசியில் இருந்த புகைப்படத்திலும் காணொளியிலும் மூழ்கிப் போனாள்.

******

மாலை ஐந்தரை மணியளவில் அன்னத்தின் இரு சக்கர வாகனத்தில் பின்னே அமர்ந்தவாறு பயணித்தான் சிவா.

“நானே போய்டுவேன்னு சொன்னேனே! நீங்க எதுக்கு தேவையில்லாம அங்க வந்து, அங்கிருந்து திரும்ப பஸ்ல வரனும்” வண்டியை ஓட்டியவாறு கேட்டாள் அன்னம்.

“கொஞ்ச நேரம் உன்கூட டைம் ஸ்பெண்ட் செய்யலாம்னு தான் வரேன். வேண்டாம்னா சொல்லு இப்படியே இறங்கிடுறேன்” அவன் இறங்குவது போல் செய்கை செய்ய,

வண்டியை நிறுத்தியவள், “இறங்குங்க” என்றாள்.

அவனின்‌ முகம் வாடிப் போக, “நிஜமா இறங்கனுமா?” எனக் கேட்டான்.

“ஆமா இறங்குங்க” என்றாள் அன்னம்.

“என் மேல எதுவும் கோபமா வெள்ளப்புறா?” எனக் கேட்டவாறு இறங்கியவனை பார்த்து சிரித்தவளாய்,

“நீங்க வண்டியை ஓட்டுங்க!” என்று கூறியவாறு இறங்கினாள்.

“அய்யோ புல்லட் மாதிரி பெரிய வண்டியை ஓட்டிட்டு இப்படி சின்ன வண்டிலாம் ஓட்டினா கை கால்லாம் வலிக்கும். அதுவும் இவ்வளோ நேரம் டான்ஸ் பிராக்டிஸ்ல இருந்துட்டு வண்டி ஓட்டுனு சொன்னா உனக்கே நியாயமா இருக்கா பொண்டாட்டி” என்றான்.

“அப்ப ஓட்ட மாட்டீங்க?” அவள் அவனை முறைக்க, “ப்ளீஸ்டா பொண்டாட்டி! எனக்கு இப்ப ஓட்டுற மூட் இல்லமா! நீயே ஓட்டேன். நான் ஜாலியா பின்னாடி உட்கார்ந்துட்டு வரேன்” என்றான்‌.

“நீங்க ஒன்னும் வர தேவையில்லை! இப்படியே உங்க டான்ஸ் ஸ்கூலுக்கு கிளம்பி போங்க! நான் வரேன்” என்றவாறு வண்டியில் ஏறி அவள் ஸ்டார்ட் செய்யவும்,

“சரி நீ பார்த்து போ!” என்றவன் சாலையின் மறுபுறம் சென்று, வந்த வழியே நடந்து செல்ல அருகே வந்து நின்ற பேருந்தில் ஏறி சென்றே விட்டான். இவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

“இம்பூட்டு கோவக்காரரா இவரு! நான் கோவமா பேசினா இப்படி தான் போவாரா?” இவளுக்கு கண்களில் நீர் துளிர்த்து விட்டது.

வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்டியவளின் மனமோ புலம்பி தள்ளியது.

‘நான் இப்ப என்ன சொன்னேன்னு இவ்வளோ கோபம். போனு சொன்னா போய்டுவாரா? இனி அன்னம்னு  சொன்னா அன்னமும் சிவாவும்னு டயலாக்கா விட்டுட்டு நடு ரோட்டுல விட்டுட்டு போய்ட்டாரு! இந்த ஆம்பிளைங்களே இப்படி தான். சும்மா வாய் சவடால் தான்’ மனம் கொதித்துப் போனது. கண்ணில் நீர் திரையிட்டு பாதையை மறைத்தது.

அவளின் நியாயமான மனசாட்சியோ, “நீ தானே போக சொன்ன! அதனால் தானே போனாரு! அப்புறம் எதுக்கு இப்படி கெடந்து தவிக்கிற” என்று கேட்டது‌.

வண்டியை ஓரமாய் நிறுத்தி கண்களை துடைத்து விட்டு, ‘ஆமா நான் தானே சொன்னேன். அதனால் தானே போனாரு! எதையும் யோசிக்காம ஒழுங்கா வீட்டை பார்த்து போவோம்’ என்றெண்ணியவளாய் நிற்க, அவள் முன் வந்து நின்றான் சிவா.

“என்னாச்சு? ஏன் நின்னுட்ட?” என்று கேட்டவாறு அவளருகில் அவன் வரவும்,

கண்களில் நீர் சரசரவென இறங்க, “நடுரோட்டுல விட்டுட்டு போனீங்கல! இப்ப எதுக்கு வந்தீங்களாம்? நீங்க ஒன்னும் வர தேவையில்லை” அவனின் கையில் சரமாரியாக அடித்தவள், வண்டியில் அமர்ந்தவளாய் நின்றிருந்த அவனது மார்பில் சாய்ந்து கண்ணீர் வடித்தாள்‌.

“ஹே அன்னம்மா! என்னடா? சும்மா விளையாண்டேன்டா உன் கூட!” தனது மார்பினில் இருந்த அவளது முகத்தை நிமிர்த்தி கண்களை துடைத்து விட்டவன், “எல்லாரும் நம்மளையே பார்க்கிறாங்க. நாம கிளம்பலாம்” என்றவாறு அவளை பின்னாடி நகர்ந்து அமர சொன்னவன், முன்னே அமர்ந்து வண்டியை ஓட்டினான்.

“என்னை என்னமோ செஞ்சிட்டீங்க நீங்க! ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு சண்டை போடுறேன்! அழுறேன்! கோபப்படுறேன்! அதுவும் பப்ளிக்கா! அய்யோ எல்லாரும் பார்த்தாங்களா?” மனதினுள் நினைத்ததை எல்லாம் புலம்பியவாறு அவள் கூற,

“எல்லாம் காதல் படுத்துற பாடு” என்று சிரித்தவன்,

“நான்‌ தான் தொப்பி மாஸ்க்லாம் போட்டிருந்தேன்ல! நீ தான் எல்லாருக்கும் தெரிஞ்சிருப்ப! யாராவது வீடியோ எடுத்திருந்தாங்கனா நடுரோட்டில் காதலியை சமாதானம் செய்த காதலன்னு வைரல் ஆக்கலாம். அப்படி ஒரு சீன் அது” என்றான்.

“அய்யய்யோ அப்படி எதுவும் வீடியோ போட்டு ஆச்சிக்கு தெரிஞ்சிது, என்னை வச்சி செஞ்சிடுவாங்க! கல்யாணம் ஆகுறதுக்குள்ள இப்படி தான் ஒட்டிக்கிட்டு பழகுவியானு திட்டி தீர்த்திடுவாங்க” பயந்தவளாய் அவளுரைக்க, அவளின் பாவனையில் சிரித்தான் இவன்.

“ஆமா ஆப்போசிட் பஸ்ல தானே ஏறுனீங்க! இங்க எப்படி வந்தீங்க?” எனக் கேட்டாள்‌.

“அது ஆப்போசிட் பஸ்ல ஏறினதும் மனசு கேட்கலை. விளையாட்டுக்குனாலும் இப்படி நட்ட நடு ரோட்டுல விட்டுட்டு வந்துட்டுயேடானு மனசாட்சி காரி துப்புச்சு‌. உடனே இறங்கி கிராஸ் பண்ணி ஒரு ஆட்டோல ஏறி உன் பின்னாடியே வந்தா மேடம் வண்டியை நிறுத்திட்டு அழுதிட்டு இருக்கீங்க” என்றவன் சொன்னதும்,

“அய்யோ அசிங்கமா போச்சு குமாரு மொமன்ட்டாவே இன்னிக்கு நடக்குதே” என்று சத்தமாகவே புலம்ப, வாய்விட்டு சிரித்தான் அவன்.

ருத்ரனின் வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன், “நாளைக்கு காலைல நான் திருச்சிக்கு கிளம்புறேன். அங்க ஈவ்னிங் ஒரு காலேஜ் ஃபங்ஷன்ல சீப் கெஸ்ட்டா கலந்துக்கிறேன்” என்றான்.

“வாவ் சீப் கெஸ்ட்டாலாம் கூப்பிடுவாங்களா உங்களை” என்று அவள் கேட்க,

“உன் புருஷன் மாஸ் செலிப்ரெட்டி இல்லைனாலும் கொஞ்சமே கொஞ்சம் பிரபலம் தான்மா நம்பு” என்றவன் சொன்னதும் சிரித்தாள் அவள்.

“சரி என்னை பத்தியே கனவு காணாம நல்லா தூங்கு” என்றவனாய் வண்டியை நிறுத்தி விட்டு கிளம்ப முனைய,

“நடந்து தானே போகனும். நான் வேணா உங்களை பஸ் ஏத்தி விட வரவா?” என்றவள் கேட்க, வேண்டாமென தலையசைத்தவன் அவளை உள்ளே செல்லுமாறு கூறிவிட்டு கிளம்பினான்.

அவனுக்கு கை அசைத்தவாறு உள்ளே வந்தவளுக்கு தன்னையே எண்ணி ஆச்சரியமாய் இருந்தது.

“எப்படி இவர்கிட்ட இப்படி அட்டாச்டு ஆனோம்” என தனக்குள்ளேயே பேசியவளாய் தனது அறைக்கு சென்றாள்.

அன்றிரவு படுக்கையில் படுத்தவாறு அன்னமே பாடலுக்கு இவர்கள் ஆடிய காணொளியை உவகை பொங்க பார்த்திருந்தவள் அப்படியே உறங்கி போனாள்.

******

மறுநாள் மாலை வேளையில் தனது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவளை அழைத்தார் அவளின் தந்தை முருகன்.

“ஆச்சிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை! உடனே கிளம்பி வர்றியா மா” என்று அவர் கவலையான குரலில் கூற,

அதிர்ந்து போனவளாய் பதட்டத்துடன், “ஆச்சிக்கு என்னாச்சுப்பா? எனக் கேட்டாள்.

“ஒன்னும் பெரிசா இல்லைமா! உன்னை பார்க்கனும்னு சொன்னாங்க. நீ கிளம்பி வா நேர்ல பேசிக்கலாம்” என்று இணைப்பை துண்டித்து விட்டார்.

ருத்ரனுக்கு அழைத்து பேச, அவரும் இவளுடன் கிளம்பி வருவதாய் உரைத்தார்‌.

நங்கைக்கு குறுஞ்செய்தி அனுப்பியவள் மீனாட்சிக்கு அழைக்க அவளின் கைபேசி அணைந்து கிடந்தது.

“அச்சோ மீனு குடும்பத்தோட மூணாரு போய்ருக்காளே! இப்ப எதுவும் சொல்ல வேண்டாம்” என எண்ணிக் கொண்டவளாய் சிவாவுக்கு அழைத்தாள்.

அந்நேரம் அவன் அந்த நிகழ்ச்சியில் இருந்ததால் இவளின் அழைப்பை ஏற்காமல் இருக்க, அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அதனை பார்த்து விட்டு உடனே அவளுக்கு அழைத்தான்‌.

உடனே அழைப்பை ஏற்றவள், “அத்தான்! ஆச்சி.. ஆச்சிக்கு” என்று அழுதாள்.

“ஒன்னும் இருக்காதுடா! நீ கிளம்பி போ! நானும் திருச்சிலருந்து நேரா மதுரைக்கு போய்டுறேன்” என்றான்.

மதுரையிலுள்ள தனது நண்பனுக்கு அழைத்து அங்குள்ள நிலவரத்தை பார்த்து அவர்களுக்கு உதவியாக இருக்குமாறு கூறிவிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போனான் சிவா.

ருத்ரனும் அன்னமும் மதுரை நோக்கி பேருந்தில் பயணித்து கொண்டிருக்க,
சிவாவின் நிகழ்ச்சி நிறைவுப்பெற்று மகிழுந்தில் ஏறிய சமயம் கைபேசியில் அவனை அழைத்த அவனது மதுரை நண்பன்,

“ஆச்சி நல்லா இருக்காங்கடா! அவங்களுக்கு ஒன்னுமில்ல. எதுக்கு பொய் சொல்லி வர சொல்லிருக்காங்கனு தெரியலையே” என்றவன் சொன்னதும் குழப்பத்தில் ஆழ்ந்தான்‌ சிவா.

— தொடரும்