அழகிய அன்னமே 36 & 37

சிவாவுக்கு ஏதேனும் முன் காதல் இருக்கிறதா என அன்னம் கேட்டதும் அவர்கள் செல்லும் பாதையிலிருந்த
ஐ பேக்கோ கடையில் நிறுத்தினான் சிவா.

“இங்கே ஏன் நிறுத்தியிருக்கீங்க?” என புரியாமல் அன்னம் கேட்க,

“ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டே பேசலாம் வா” என்று கடைக்குள் அழைத்து சென்றான்.

கடைக்குள்ளே ஒரு மேஜையில் மட்டுமே ஆட்கள் இருக்க, அவளுக்கு பிடித்த ஃபிளேவரை கேட்டு வாங்கி கொண்டு, மாஸ்க்கை கழட்டி விட்டு அங்கிருந்த மேஜையில் அவளுடன் அமர்ந்தான் சிவா.

ரசனையாக அவன் முகத்தை அவள் பார்த்திருக்க, மென்மையாய் சிரித்தான் அவன்.

“என்ன பார்வை இது?” என்று அவன் கேட்க,

“என் புருஷன் நான் பார்க்கிறேன்! உங்களுக்கு என்ன?” சிரிப்புடன் கேட்டாள்.

கண்கள் மின்ன சிரித்தான் அவன்.

அவளின் மனம் அவனுடனான ஒவ்வொரு நொடியையும் ரசித்து பூரிப்பாய் மனதிற்குள் சேமித்துக் கொண்டிருந்தது.

நீல நிற ஜீன்ஸூம் மஞ்சள் நிற சட்டையும் அணிந்திருந்தவனை பார்த்தவள், “எப்பவுமே உங்க காஸ்ட்யூம் செலக்ஷன் செம்ம அத்தான். இனி எனக்கும் சேர்த்து நீங்களே எடுத்துக் கொடுத்துடுங்க” என்றாள்.

“மை பிளஷர் பொண்டாட்டி” என்றான் அவன்.

“அப்புறம் முக்கியமான விஷயம்” என்றவள் சொன்னதும்,

“என்ன?” என்று தீவிர பாவனையுடன் அவன் கேட்க,

“உங்க ஹேர் ஸ்டைல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்” என்றாள்.

அவள் கேலி செய்கிறாளா அல்லது உண்மையை கூறுகிறாளா என்று புரியாத பாவனையில் பார்த்தவன், “ஹேர் ஸ்டைலா? கிண்டல் செய்றியா?” என்றான்.

“இல்ல நிஜாமாப்பா! மோஸ்ட்லி மீடியால இருக்கிறவங்க தலை முடியை அடர்த்தியா காண்பிக்கிற மாதிரி எதையாவது செஞ்சி தலைக்கு என்னென்னமோ போடுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா நீங்க எப்பவுமே இப்படியே கேசுவலா லேசா படிய வாருறது பிடிச்சிருக்கு. அதே மாதிரி அடர்த்தியும் இல்லாம ரொம்ப குறைவாவும் இல்லாம அளவான மீசை! அதுவும் பிடிக்கும். தாடி இருந்தப்ப ஒரு விதமான அழகுனா இப்ப தாடி இல்லாமலும் ஒரு விதமான அழகு தான். ஆனா லேசான தாடியோட ரொம்ப பிடிச்சிது”

அப்பட்டமாய் தன்னை சைட் அடித்து கொண்டிருக்கிறாள். தன்னிடம் அவள் ரசிப்பனவற்றை அவளையும் மீறி இயல்பாய் கூறிக் கொண்டிருக்கிறாள். சற்றாய் வெட்கமும் ரசனை பாவனையும் அவன் கண்களில்.

அவனின் இமை சிமிட்டாத பார்வையில், கூச்சங் கொண்டு, “என்ன அப்படி பார்க்கிறீங்க?” என்றவள் சுதாரித்துக் கொண்டவளாய், “நீங்க என்னை டைவர்ட் செஞ்சிட்டீங்க‌. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்றாள்.

“ஹ்ம்ம் நான் டைவர்ட் செஞ்சிட்டேனா? சரி தான்” என வாய்க்குள் சிரித்தவனாய், தனது வாழ்க்கையை கூறலானான்.

“அப்பாக்கு நான் படிச்சு பெரிய ஆளாகனும்னு ஆசை. எனக்கு படிப்பு ஏறலை. திருச்செந்தூர்லருந்து சொல்லாம கொள்ளாம வந்துட்டேன்” என்றான்.

“அச்சோ வீட்டை விட்டு வந்துட்டீங்களா?”
எனக் கேட்டாள்.

“ஆமா ஏன் வந்தேன் தெரியுமா?” என்று புருவத்தை உயர்த்தினான்.

“ஏன் வந்தீங்க?” பலவிதமான காரணங்களை சிந்தித்தவளாய் அவள் கேட்க,

“காதல் தான்” என்றான் தீவிரமாக.

“என்னது காதலா? டீனேஜ்ல தானே வீட்டை விட்டு வந்தீங்க! உங்களோட முதல் காதல் அது தானா? இல்ல அதுக்கு முன்னாடி மல்லிக்கா டீச்சர், விமலா அக்கானு ஏதும் இருக்கா” என முறைத்தாள் அன்னம்.

அவளின் பார்வையிலும் பேச்சிலும் வாய்விட்டு சிரித்தவனாய், “நான் காதல்னு சொன்னது, டான்ஸ் மேல இருக்கும் காதல்” என்றான்.

‘என்னென்னமோ யோசிச்சு சொதப்பிட்டியே அன்னம்’ என்று முழித்தவளாய், “சாரி” என்றாள்.

“நல்லாயிருக்கு! எனக்காக வந்த இந்த கோபம், அதை நீ முறைப்பா காட்டின விதமெல்லாம் நல்லா இருக்கு. என்கிட்ட இப்படி நீ உரிமையா நடந்துக்கனும் தான்டா வெள்ளப்புறா எனக்கு ரொம்ப ஆசை” உணர்வுபூர்வமாக அவன் கூற,

தொண்டைக்குள் விழுங்கிய பனிக்கூழ் பனியின் குளுமையுடன் வயிற்றுக்குள் இறங்கியது‌ அவளுக்கு.

“அவ்ளோ சின்ன வயசுலேயே டான்ஸ் மேல் காதலா?” பேச்சை மாற்றினாள் அவள்.

“ஆமா அன்னம். அங்க தெருல ஏதாவது ஃபங்ஷனுக்கு பாட்டு போட்டாலே வீட்டுக்குள்ள ஆட ஆரம்பிச்சிடுவேன். வருஷா வருஷம் திருவிழா நேரத்துல போடுற ஸ்டேஜ்ல போய் ஆடிட்டு வருவேன். ஆக்சுவலி அப்பாக்கு இதுலாம் பிடிக்காது.

அப்பா சரியா படிக்கலைனா
அடி வெளுத்துடுவாரு‌. அவர் அங்க ஒரு மில்லுல வேலை பார்த்தார்‌. அவரோட பசங்க நாங்க இரண்டு பேரும் அவரோட முதலாளி அளவுக்கு வளரனும் சொந்தமா தொழில் செய்யனும்னு அவருக்கு ஆசை. அதுக்காக நல்லா படிக்கனும்னு என்னை வெளுத்து வாங்குவார். தம்பி சூப்பரா படிப்பான். அதனால அவனை ஒன்னும் சொல்ல மாட்டாரு. எனக்கு படிக்க பிடிக்கலைனுலாம் அவர்கிட்ட சொல்ல தைரியம் இல்லை. அதான் வீட்டை விட்டு வந்துட்டேன்” என்றான்.

“உங்கப்பா அம்மா ரொம்ப வருத்தப்பட்டிருப்பாங்க தானே! ஏன் அப்படி செஞ்சீங்க? வீட்டை விட்டு வரும் போது எத்தனை வயசு இருக்கும்” கோபமாகவே கேட்டாள்.

சிறுவயதில் தனியாக வந்து என்னென்ன கஷ்டமெல்லாம் பட்டானோ என்று அவளது மனது உருகியது அவனுக்காக.

“லெட்டர் எழுதி வச்சிட்டு தான் வந்தேன். அங்க ஊருல பெரிய வீட்டுகாரங்கனு ஊர் பெரியவர் குடும்பம் இருக்கு. அவங்க பையன் கூட சேர்ந்து அவங்க வீட்டுல தான் படம் பார்ப்போம் நானும் தம்பியும். அந்த அண்ணா காலேஜ் படிக்க சென்னைல சேர்ந்திருந்தாங்க. எனக்கு பதினைஞ்சு வயசு இருக்கும் போது சென்னைக்கு கிளம்பி வந்து அந்த அண்ணா கூட தங்கிட்டேன்” என்றதும்,

“ஹப்பாடா இங்கே தனியா வந்து என்னலாம் கஷ்டப்பட்டீங்களோனு ஒரு நிமிஷம் மனசு பதறிப் போச்சு” என்றாள் அன்னம்.

“நான் கஷ்டப்பட்டா உனக்கு வருத்தமா இருக்குமா வெள்ளப்புறா” சிரித்தவாறு கேட்க,

“பின்ன குதூகலமாவா இருக்கும். நமக்கு பிடிச்சவங்க கஷ்டப்பட்டா மனசு வருத்தப்படும் தானே” என்றாள் அவள்.

“பிடிச்சவங்க தாண்டி அடுத்த நிலைக்கு உன் மனசுல நான் வரவே இல்லையா?” சற்று சோகமாக அவன் கேட்க,

“இன்னும் காலம் இருக்கு பாஸ்! முயற்சி திருவினையாக்கும்!” என்றவாறு சிரித்தாள்.

“ஹ்ம்ம் என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது. முருகா நீ தான் காப்பாத்தனும்” என்றவன் மேலே கை தூக்கி பார்த்தவாறு சொன்னதும் மேலும் சிரித்தாள் அவள்‌‌.

“நீங்க முருகா முருகானு சொல்லும் போதெல்லாம் ஆச்சி எங்கப்பாவை கூப்பிடுற மாதிரியே இருக்கு” என சிரித்தாள் அன்னம்.

“அட ஆமா உங்க அப்பா பேரு முருகன் தான்ல! அய்யய்யோ அவர் முன்னாடி பழக்க தோஷத்துல முருகானு சொல்லிட கூடாது முருகா” என்று மீண்டுமாய் கையை மேலே தூக்க வாய்விட்டு சிரித்திருந்தாள் அவள்.

ஐஸ்கிரீமை உண்டு விட்டு மீண்டுமாய் இவர்கள் பயணத்தை துவங்க, மழை தூரலாய் அவர்களை நனைத்தது‌.

மழையிலிருந்து ஒதுங்கி கொள்ள, பயணத்தின் பாதையில் இருந்த தேநீர் கடையில் நிறுத்தினான்.‌

ஹெல்மெட்டை மட்டுமாக கழட்டியவன், மாஸ்க்குடனே தேநீர் கடையின் நிழலில் அவளுடன் நின்றான்.

கைகளை நீட்டி மழை நீரை அவள் உள்ளங்கையில் தட்டியவாறு நிற்க,

அவளின் மற்றொரு கையை பற்றினான் அவன். அவளின் விரல்களுக்குள் தனது விரல்களை கோர்த்தான்.

அவளின் சில்லிப்பான கரத்தினில் சூடான அவனது கரம் சிலிர்ப்பை உண்டாக்க, உடலெல்லாம் புல்லரித்தது அவளுக்கு.

தேநீர் கடையில் ஒலித்தது அந்த பாட்டு!

வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே
நமது கதை புது கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நான் உந்தன் பூ மாலை
வெள்ளை புறா ஒன்று
ஏங்குது கையில் வராமலே

அவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.

“மை வெள்ளப்புறா பாட்டு!” சத்தம் வராமல் வாயசைத்து அவன் கூற, இதழ் விரிய சிரித்தாள் அவள்‌.

தனது விரல்களுடன் கோர்த்திருந்த அவனது கரத்தினை மற்றொரு கைக்கொண்டு பற்றியவளாய் அவனது தோள் மீது லேசாக தலையை சாய்த்து  நின்றாள்.

மழை நின்றதும் மீண்டுமாய் தொடங்கிய பயணம் தி நகரில் நின்றது. அங்கு வண்டியை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே செல்ல, இருவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். அவனது கரத்தை தானே சென்று பிடித்து கொண்டாள். அவனை ஒட்டியவாறே அவள் நடக்க, அவளின் தோள் மீது கைப்போட்டு கொண்டவளாய், இருந்த கூட்டத்தில் எவர் மீது இடிப்படாதவாறு அவளை அழைத்து சென்றான்.

ரங்கநாதன் தெருவில் எந்தவொரு பெரிய கடைக்குள்ளும் நுழையவில்லை அவள். தெரு நெடுகிலும் சாலையோரத்தில் இருந்த சின்னச் சின்ன கடைகளிலேயே குறைந்த விலையினில் அவளுக்கு தேவையானவற்றை வாங்கியிருந்தாள் அன்னம்.

மதியம் இரண்டு மணியளவில் அவர்களின் ஷாப்பிங் நிறைவுற, “ஐ லைக் யுவர் ஷாப்பிங்” என்றான்.

புரியாது அவள் பார்க்க, “சின்ன சின்ன பொருளுக்கும் காசு என்னனு பார்த்து, அதே பொருள் இன்னொரு கடைல என்ன விலைனு கம்பேர் செஞ்சி தரத்தை பார்த்து, சேமிக்கவும் செய்ற தரமாவும் வாங்குற அண்ட் ரொம்ப முக்கியமா சட்டு சட்டுனு செலக்ட் செஞ்சிடுற” என்றான்.

“ஆமாப்பா காசு எண்ணி எண்ணி தான் செல்வு செய்வேன்‌. கொஞ்சம் கஞ்சபிஸ்னாரினு கூட சொல்லலாம்” என்று சிரித்தாள்.

“பரவாயில்லை இனி என் பணம்லாம் வீணாகாம சேவிங்க்ஸ் ஆகிடும்னு நம்பிக்கை வந்திருக்கு” என்றவாறு வண்டியினருகே சென்றான்.

இருவருமாக ஓர் உணவகத்தில் மதிய உணவை உண்டு விட்டு கிளம்ப,

“சரி என்னை வீட்டுல டிராப் செஞ்சிடுங்க! செம்ம டயர்ட்டா இருக்கு” என்றவள் சொன்னதும்,

“உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்” என்றவன் அவளை ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றான்.

தனித்தனி வில்லா போன்ற வீடுகள் இருக்கும் குடியிருப்பு அது.

வாசலுக்குள் தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தியவன், அவளின் கேள்வியான பார்வையை கண்டு கொள்ளாமல், “உள்ளே வா” என அவளின் கைப்பிடித்து அழைத்து சென்றான்.

வீட்டின் கதவை திறந்தவனாய், “வெல்கம் ஹோம் பொண்டாட்டி! வலது காலை எடுத்து வச்சி வா!” என்றவாறு அவளின் கைகளைப் பற்றியவனாய் தானும் அவளுடன் வலது காலை எடுத்து வைத்தவனாய் உள்ளே சென்றான்.

வீட்டின் உள்ளே காலை வைத்து வந்தவள் அப்படியே நின்று விட்டாள்.

அத்தனை அற்புதமாக அனைத்தும் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட நேர்த்தியான வீடாக இருந்தது.

“நீ பிளான் செஞ்சி கட்டின வீடாப்பா” எனக் கேட்டாள்.

“ஆமா இந்த வீடு கட்டி அஞ்சு வருஷம் இருக்கும். லோன்ல தான் வாங்கினேன். அப்புறம் பணம் வர வர கட்டி போன வருஷம் ஃபுல் செட்டில்மென்ட் செஞ்சேன்‌. நான் மட்டும் தான் இருக்கேன். அப்பப்ப அம்மா தம்பி வந்துட்டு போவாங்க. வீட்டு வேலைக்கு ஆளுங்க இருக்காங்க!” என்றான்.

இவன் முகப்பறையிலிருக்கும் சோஃபாவில் அமர்ந்துக் கொண்டவனாய், தலையை சாய்த்து கொள்ள, “நான் எல்லா ரூமையும் பார்த்துட்டு வரேன்” என்று அவளே சென்று வீட்டை சுற்றி பார்த்து விட்டு வர,

சோஃபாவில் அமர்ந்தவாறு தலையை பின்னோக்கி சாய்த்தவன் அப்படியே கண்கள் மூடி உறங்கியிருந்தான்.

இவள் அமைதியாக சென்று கதவை சற்றிவிட்டு வந்தவளாய், அவனது மடியில் தலை வைத்து உடலை குறுக்கி கொண்டு கண்கள் மூடி படுத்துக் கொண்டாள். அடுத்த நிமிடத்திலேயே உறங்கியும் போனாள்‌.

அடுத்த பத்து நிமிடத்தில் உறக்கம் கலைந்தவனாய் முழித்து பார்க்க, மடியில் அவள் படுத்திருப்பதை உணர்ந்தவனோ, தனது கைகள் அவள் மீது பட்டு உறக்கம் கலைந்துவிடக் கூடாது என்று கையை சோபாவில் மேலே வைத்துக் கொண்டான். கால்களை சிறிதும் அசைக்காமல் அப்படியே வைத்தான்.

‘என் மேல் எவ்ளோ நம்பிக்கை இருந்தா இப்படி தன்னை மறந்து என் மடியிலேயே தூங்குவா’ நெஞ்சம் பூரித்து போனது அவனுக்கு.

அவள் தன்னிடம் உரைக்காத காதலை விட இந்த நம்பிக்கை போதும் ஆயுள் முழுவதும் மகிழ்வுடன் வாழ என்று எண்ணி நெகிழ்ந்து போனான் சிவா.

அத்தியாயம் 37

மடியில் உறங்கி கொண்டிருப்பவளை எழுப்பும் மனமில்லாமல், தனக்கு முன்னிருந்த தொலைகாட்சியை இயக்கி மெல்லிசை பாடல்களாய் ஓட விட்டான்.

தனது கைபேசியை எடுத்து உறங்கும் அவளை புகைப்படம் எடுத்தவன், கைபேசியை உயர்த்தி பிடித்தவனாய், மடி மீது உறங்குபவளையும் தன்னையும் சேர்த்து சுயமி எடுத்துக் கொண்டான்.

மீண்டுமாய் அவன் சோஃபாவில் கண்களை மூடி தலையை சாய்த்திருக்க,

அன்னமே அன்னமே நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று

இந்த வரிகள் தொலைகாட்சியில் தொடங்கவும் அடித்து பிடித்து எழுந்தாள் அன்னம்.

அவளின் அசைவில் இவனும் சட்டென தலையை நிமிர்த்தியவனாய், “என்னாச்சு வெள்ளப்புறா?” எனக் கேட்டான்.

அவளின் முகத்தில் அச்சம் பரவ நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது.

தனது கையை நெஞ்சின் மீது வைத்து, “ஆல் இஸ் வெல்! ஆல் இஸ் வெல்” என்றவாறு தன்னை சமன்படுத்தியவளின் கண்களில் நீர் துளிர்த்தது.

வினோதமாய் அவளை பார்த்தான் அவன்.

“என்னமா ஆச்சு? எதுவும் கெட்ட கனவு கண்டியா?” அவளின் கையை பற்றினான்.

சில்லிட்டிருந்தன அவளின் கைகள்.

அவனருகே நகர்ந்து அவனது மார்போடு தலையை சாய்த்து கொண்டு அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

மென்மையாக அவளை அணைத்துக் கொண்டவன், “என்னடா அன்னம்மா?” அவனது கரம் அவளின் தலையையும் முதுகையும் வருடியது.

கண்களில் நீர் நிறைந்து அவனது மார்பை நனைக்க அப்படியே வாயசைத்து பேச ஆரம்பித்தாள்.

“இந்த பாட்டை கேட்டாலே இப்படி ஆகிடுது‌. இது மோகன் என்னோட ரிங் டோனா வச்சிருந்தது. அடிக்கடி இந்த பாட்டை பத்தி சொல்லுவான். இப்ப இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் மனசு குற்றயுணர்வுல தவிக்குது. பாஸ்ட்டை நினைச்சி கலங்குது. அவனோட காதலை ஒத்துக்காம இருந்திருந்தா இவ்வளோ பிரச்சனை வந்திருக்காதே! நீங்க இல்லாம இதை புரிஞ்சிக்காத வேற யாராவது என்னை கட்டியிருந்தா என் வாழ்க்கை என்னவாகியிருக்கும்னு நினைக்கும் போதே மனசு தவிச்சி போய்டுது! என்ன சொல்ல வரேன்னு புரியுதா உங்களுக்கு”  கலங்கிய கண்களுடன் முகத்தை மட்டுமாக நிமிர்த்தி அவன் முகம் நோக்கி அவள் பரிதவிப்புடன் கேட்டதிலேயே நெஞ்சம் கலங்கி போனது அவளுக்கு.

அந்நிகழ்வுகளில் இருந்து ஏமாற்றத்தில் இருந்து வெளியே வந்திருப்பவளை இப்பாடல் மீண்டுமாய் முழுவதுமாக உள்ளுக்குள் இழுத்து சென்று பெருத்த வலியை கொடுக்கிறது அவளுக்கு என புரிந்தது அவனுக்கு.

அவளின் கன்னத்தை தாங்கியவனாய், “இட்ஸ் ஓகே டா! இட் ஹேப்பன்ஸ்! மோஸ்ட்லி எல்லாரும் அவங்க  வாழ்க்கைல ஏதாவது ஒரு சூழ்நிலைல தவறான முடிவை எடுத்திருப்பாங்க. அது தப்புனு‌ தெரிஞ்சி அதுலருந்து வெளில வருவது கடினம்னா வெளில வந்த பிறகு அதை முற்றிலுமாக மறக்குறது அதை விட கடினம் தான்” என்றவன்,

“நீ கவலைப்படாத அன்னம்மா! என் கூட வாழ ஆரம்பிச்ச பிறகு உன் மனசு முழுக்க இந்த சிவசு அத்தான் தான் நிறைஞ்சி இருப்பேன். இதெல்லாம் மறந்து போய்டும். காலமும் என்னுடனான வாழ்க்கையும் இது எல்லாத்தையும் மறக்க வச்சிடும்” என்றான்.

மீண்டுமாய் அவனை அணைத்து மார்போடு சாய்ந்து கொண்டாள்.

சில நிமிடங்கள் மனம் சமன்படும் வரை அப்படியே இருந்தவளின் தலையை மென்மையாக கோதியவாறு இருந்தான் அவன்.

திடீரென, “எனக்கு டீ வேணும்” என்றவளின் கண்களில் குறும்பு மட்டுமே!

“என்னது?” என்றவன் கேட்டதும்,

சிரித்தவாறு அவனை விட்டு தள்ளி அமர்ந்தவளாய், “எனக்கு டீ வேணும்! போட்டு தாங்க” என்றாள்.

“என் சமையல் மேல என்ன ஒரு நம்பிக்கை என் பொண்டாட்டிக்கு” என்றவன் சிரிக்க,

“முதல் தடவையாக நம்ம வீட்டுக்கு வந்திருக்கேன். அப்ப நீங்க தானே டீ போட்டு தரனும்” என்றாள் அவள்.

“ஹ்ம்ம் போட்டுடலாமே” என்றவாறு எழுந்து அவன் சமையலறைக்குள் செல்ல, இவளும் அவன் பின்னேயே சென்றாள்.

சமையலறையின் மேடையில் ஏறி அமர்ந்து கொண்டவளாய், அவன் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எப்ப நீங்க சமைக்க கத்துக்கிட்டீங்க?” எனக் கேட்டாள்.

“சென்னைக்கு ஓடி வந்துட்டேன்னு சொன்னேன்ல! அப்ப கத்துக்கிட்டேன்” என்றான்.

“ஆமா அதுக்கு பிறகு என்னாச்சு? எப்படி டான்ஸ் சான்ஸ் கிடைச்சிது” எனக் கேட்டாள்.

“இங்க அந்த அண்ணா ரூம்ல தங்கினேன்னு சொன்னேன்ல! எங்கே எப்படி போய் சான்ஸ் கேட்கிறது தேடுறதுனு ஒன்னும் தெரியலை. அந்த அண்ணா தான் அவங்க ஃப்ரண்டுக்கு தெரிஞ்ச டான்ஸ் ட்ரூப் ஒன்னு இருக்குனு சேர்த்து விட்டாங்க. அங்க டான்ஸ் கத்துக்கிட்டே எடுபுடி வேலை தான் பார்த்துட்டு இருந்தேன். லேண்ட்லைன்ல ஃபோன் செஞ்சி ஊருல அப்பா அம்மாகிட்ட பேசிப்பேன்‌‌. அப்பப்ப லெட்டர் போடுவேன். அம்மா நான் பேசும் போதெல்லாம் அழுவாங்க. நீ இப்படி போனது அப்பாக்கு பிடிக்கவே இல்லைடா. உன்னை நினைச்சு ரொம்பவே கவலை அவருக்குனு சொல்வாங்க. ஆனா அவர் என்கிட்ட பேசும் போது அதெல்லாம் காண்பிச்சிக்க மாட்டாரு. இரண்டு மூன்று வார்த்தை நல்லாயிருக்கியா சாப்பிட்டியானு கேட்டுட்டு போய்டுவாரு” அவனது முகத்தில் கனிவும் கவலையும் வலியும் சரிவிகிதமாய் பிரதிபலித்தது.

“அப்புறம் சீரியல்ல சின்ன சின்ன ரோல்ல நடிச்சிட்டு இருந்தேன். ஒரு வருஷம் ஆன பிறகு ஊருல அவங்களுக்கு ஒரு பட்டன் ஃபோன் வாங்கி அனுப்பினேன்‌. இங்கே எனக்கு ஒன்னு வாங்கிக்கிட்டேன். தேவைப்படும் போது பேசிக்க வேணுமேனு வாங்கிக்கிட்டேன். ஆனால் அதுக்கு ரீசார்ஜ் செய்ய கூட காசில்லாம அல்லாடிட்டு இருந்த காலம் அது. இப்படியே போய்ட்டு இருந்தப்ப தான் ஒரு டிவி ஷோல போட்டியாளரா வாய்ப்பு கிடைச்சது. அப்பா அம்மா தம்பி யார்கிட்டயும் இதை பத்தி சொல்லலை. சர்ப்ரைஸ்ஸா டிவில பார்க்கட்டும்னு சொல்லலை. முதல் நாள் ஷோக்காக பிராக்டிஸ் செஞ்சிட்டு இருக்கும் போது அப்பா ஃபோன் செஞ்சாரு. நான் பிசியா இருக்கேன் அப்புறம் பேசுறேன்ப்பானு வச்சிட்டேன். மறுநாள் அப்பா இறந்துட்டாங்கனு ஃபோன் வந்துச்சு”

தேநீரை கோப்பையில் வடிகட்டியவாறு இதை கூறியவனின் கண்களில் நீர் நிறைந்து நின்றது.

“அத்தான்” என்று அவன் தோளை அவள் தொட, சட்டென மூச்சை உள்ளிழுத்து தன்னை மீட்டு கொண்டவனாய், “இந்தாமா டீ” என்று சிரித்தவாறு அவளிடம் கொடுத்தான்.

இருவரும் தேநீர் கோப்பையுடன் உணவுண்ணும் மேஜையில் அமர, தொடர்ந்தான் அவன்.

“அந்த ஷோல நான் தான் வின் பண்ணேன். அப்ப எனக்கு இருபது வயசு இருக்கும். அதுக்கு பிறகு மொத்த குடும்பத்தையும் நான் தான்‌ பார்த்துக்க வேண்டிய சூழல். அதனால தொடர்ந்து வந்த எல்லா வாய்ப்பையும் பயன்படுத்திக்கிட்டேன். எல்லா ஸ்டேஜ் ஷோலயும் கலந்துப்பேன். நிறைய சீரியல்ல நடிச்சேன்‌. அப்படி தான் சின்னத்திரை ஹீரோ ஆனது! டான்ஸ் ஸ்கூல் தான் என்னோட ஆசை கனவு எல்லாமே! அடுத்த நாலஞ்சு வருஷத்துல டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிச்சிட்டேன்” என்றவாறு அமைதியாக இருந்தான்.

“அப்பாவை ரொம்ப மிஸ் செய்றீங்களா?” எனக் கேட்டாள்.

“ரொம்ப ரொம்ப! அவரை நினைக்கும் போதெல்லாம் கண்ணுல வர்ற இந்த கண்ணீர் எப்ப வராம இருக்கோ அப்ப தான் நான் அவரோட இழப்பை கடந்து வந்துட்டேன்னு அர்த்தம்” என்று கண்ணீருடன் கூறியவனின் அருகில் சென்று நின்று அவனின் தலையை அவள் கோத, நிமிர்ந்து பார்த்து கண் சிமிட்டி விழி நீரை உள்ளுக்குள் இழுத்தவனாய், “ஐம் ஃபைன்” என்றான்.

தலை மீதிருந்த அவளின் கையை தனது கைக்குள் வைத்து வருடியவனாய், “நீ டெட்டி பியர் மாதிரி செம்ம சாஃப்ட்” என்று புன்னகைத்தான்.

அவளும் சிரித்தவளாய், அவன் இடையோடு கையிட்டு லேசாக தன்னோடு அணைத்துக் கொண்டு முதுகை வருடி விட்டு அவனருகில் அமர்ந்து கொண்டாள்.

அவனை ஆறுதல்படுத்தும் செயலாய் மட்டுமே இருந்தது அந்த அணைப்பு.

“முன்னாடிலாம் இப்படி அப்பாவை நினைச்சு கவலைப்படும் போது கூட யாரும் இருக்க மாட்டாங்க. நானே கவலைப்பட்டுக்கிட்டு நானே என்னை தேத்திக்கிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்டுவேன்‌” என்றான்.

அவனின் கவலையை போக்கும் ஆர்வத்தில், “கல்யாணம் ஆனதும் உங்கப்பா மாதிரியே ஒரு பையனை பெத்து கொடுத்திடுறேன். அப்பா ஞாபகம் வரும் போதெல்லாம் அவனை பார்த்துக்கோங்க” என்றவள் பின் நாக்கை கடித்தாள்.

அவளின் செய்கையில் வாய்விட்டுச் சிரித்தவனாய், “சரி வா கிளம்புவோம். அப்புறம் உங்க மாமா, என்னை அறிவுக்கெட்ட மாப்பிள்ளைனு திட்டிக்கிட்டு இருப்பாரு” என்றதும் அவளின் முகம் ஒளியிழந்து போனது.

அவனை‌ விட்டு போக அவளுக்கு மனமே இல்லை.

“போகனுமா?” என்று இழுத்தவள், “அரை மணி நேரம் கழிச்சு போகலாமா?” என்று கெஞ்சும் பார்வையுடன் கேட்க,

“எனக்கென்ன? நீ இங்கேயே இருந்தா கூட சந்தோஷம் தான்” என்றதும் அவன் முதுகில் ஓர் அடி போட்டவளாய், “ஆசையை பாரு” என்றாள்.

“சரி இப்ப அரை மணி நேரம் என்ன செய்றதா பிளான்” என்றவன் கேட்டதும்,

அவனின் கைப்பிடித்து சோஃபாவில் அமர வைத்தவளாய் அவன் மடியில் சாய்ந்து கொண்டாள்.

“அரை மணி நேரம் கழிச்சு எழுப்புங்க” என்று கண்களை மூடியவள் உடனே உறங்கியும் போனாள்.

அரை மணி நேரம் ஒரு மணி நேரமாகி அதன்‌ பிறகு இருவருமாக வாங்கிய அனைத்தையும் சரி பார்த்து எடுத்து கொண்டு அவளின் இல்லத்திற்கு கிளம்பினர்.

மாலை பொழுது சாயும் வேளையில் அவளின் இல்லத்தின் முன்பு சென்று தனது வண்டியினை நிறுத்த, அதிலிருந்து இறங்கியவள், ஏக்கத்துடன் அவனை பார்த்தாள்‌.

“உங்களை விட்டு போக மனசே வரலை. உங்க கூடவே இருக்கனும் போல இருக்கு‌. உங்களை பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு. உங்ககிட்ட பேசிக்கிட்டே இருக்கனும் போல இருக்கு. நீங்க கவலைப்பட்டா என் மனசு வாடுது‌. நீ சந்தோஷப்பட்டா என் மனசு குதூகலிக்குது. என் மனசுக்குள்ள இருந்துக்கிட்டு என்னமோ செய்றீங்க நீங்க” என்றவள் கூற,

“வெள்ளப்புறாக்கு அத்தான் மேல காதல் வந்துடுச்சு” என்று சிரித்தான் அவன்.

“நாளைக்கு சன்டே ஆபிஸ் லீவ் தானே! காலைல ஆறு மணிக்கு நம்ம டான்ஸ் ஸ்கூல்க்கு வந்துடு” என்றவாறு அவன் வண்டியை இயக்க,

“ஆறு மணிக்கேவா? எதுக்கு?” எனக் கேட்டாள்.

“சர்ப்ரைஸ்! வந்து பாரு தெரியும்” என்றவன், “லேட் பண்ணிடாத! சன்டேல ஃபுல் டே கிளாஸ் இருக்கும். ஸ்டூடன்ட்ஸ்லாம் வரதுக்கு முன்னாடி நம்ப வேலையை முடிக்கனும். அதனால ஷார்ப் சிக்ஸ்க்கு அங்கே இருக்கிற மாதிரி கிளம்பிடு” என்றான்.

“சர்ப்ரைஸ்னு சொல்றீங்க? வேலைனு சொல்றீங்க” என்று அவனை குழப்பமாக அவள் பார்க்க,

“இதுக்கு மேல நின்னேன்னா என் வாயை கிளறுவ நீ! நாளைக்கு பார்க்கலாம்!” என்றவாறு கிளம்பி சென்றான்.

அந்நேரம் வெளியே வந்த ருத்ரன், “இப்படி வெளில நின்னு பேசிட்டு போறதுக்கு, உள்ளே வந்து உட்கார்ந்து பேசிட்டு போகலாம்ல. மாப்பிள்ளை ஆகிட்டாலே இந்த பசங்களுக்குலாம் திமிரு வந்துடும் போல” என்று புலம்பியவறாய் அன்னத்துடன் வீட்டிற்குள் சென்றார்.

— தொடரும்