அழகிய அன்னமே 31, 32 & 33

“ஹாய் அன்னம்!” என்று கைபேசியில் பேசியவாறு அலுவலகத்தில் தனது இருக்கைக்கு வந்தமர்ந்தான் இன்பா.
அன்னம் என்ற வார்த்தையில் துணுக்குற்றவனாய் நிமிர்ந்து பார்த்தான் மோகன்.
எத்தனை முயன்றும் அன்னத்தை மணந்துக்கொள்ள போகும் மாப்பிள்ளை பற்றிய விவரத்தை இவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆகையால் அன்னத்துடனான இன்பாவின் பேச்சை கவனிப்பதற்காக அவனது இருக்கையின் அருகே சென்றான் மோகன்.
“ஃப்ங்ஷன்லாம் எப்படி போச்சு? யாரு மாப்பிள்ளை? நான் கூட உன் ஆபிஸ் டிரான்ஸ்ஃபர் பத்தி சுந்தர்கிட்ட பேசும் போது கேட்டேன். உங்க வீட்டுல பார்த்திருக்க மாப்பிள்ளைனால அதை பத்தி அவருக்கு எதுவும் தெரியாதுன்னு சொன்னாரு” என்றான் இன்பா.
“ஆமா இன்பா. மாப்பிள்ளை யாருனு கல்யாணத்துல பார்த்துக்கட்டும். இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாம்னு மாப்பிள்ளை வீட்டுல சொல்லிட்டாங்க” என்றாள் அன்னம்.
நிச்சயம் முடிந்து ஒரு வாரம் வீட்டிலிருந்தே வேலை பார்த்தனர் அன்னம், நங்கை, ராஜன் அனைவரும்.
ராஜனின் குடும்பத்தினருடன் அவனின் மகிழுந்திலேயே சென்னை வந்து சேர்ந்தனர் ருத்ரனும் அன்னமும்.
சென்னையிலிருக்கும் வேறொரு கிளை அலுவலகத்திற்கு அன்று தான் முதல் முறையாக செல்கிறாள் என்பதால் இன்பாவிற்கு அழைத்து அங்கு அவளுடைய இருக்கையை பற்றி கேட்டறிந்துக் கொள்ள கைபேசியில் அழைத்தாள் அன்னம்.
அன்னத்தின் பதிலில், “ஓ கல்யாணத்துல சர்ப்ரைஸ்ஸா தான் அப்ப நாங்க மாப்பிள்ளையை பார்க்கனும் போல” என்றான் இன்பா.
‘ச்சே இன்பாகிட்ட கூட மாப்பிள்ளையை பத்தி சொல்லலையா? யாரா இருக்கும்’ என்று யோசித்தவாறே தனது இருக்கையில் அமர்ந்தான் மோகன்.
காலை ஷிப்ட்டில் மோகன் வேலை பார்த்து கொண்டிருக்க, மதிய ஷிப்ட்டில் வந்த பாலாஜியிடம், “அன்னத்துக்கு என்கேஜ்மெண்ட் ஆகிடுச்சு தெரியுமா?” என்று கேட்டான்.
“ஓ சூப்பர்டா! யாருடா மாப்பிள்ளை? நீ போனியா எங்கேஜ்மெண்ட்டுக்கு? உன்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்டாச்சே” எனக் கேட்டான் பாலாஜி.
“அட நீங்க வேறண்ணா! அவ எங்கேஜ்மெண்ட் பத்தியே என்கிட்ட சொல்லலை” என்றான் மோகன்.
“ஏன்டா உங்களுக்குள்ள எதுவும் சண்டையா?” என பாலாஜி கேட்க,
“அதெல்லாம் இல்லண்ணா! யார்கிட்டயுமே அவங்க சொல்லலை. நீங்க அவளுக்கு போன் பண்ணி சாதாரணமா பேசுற மாதிரி பேசி மாப்பிள்ளை யாருனு கேளுங்க. அவளுக்கு விருப்பமில்லாம வற்புறுத்தி கல்யாணம் செய்றாங்க போலண்ணா!”
“ஏன்டா? அந்த பொண்ணு யாரையும் லவ் பண்ணுச்சா? வீட்டுல தெரிஞ்சி அவசரமா கல்யாணம் செஞ்சி வைக்க பார்க்கிறாங்களா?”
“ஆமாண்ணா! இவ வேற பையனை லவ் பண்ணா! இப்ப நிச்சயம் செஞ்சிருக்க பையன் வேற ஆளுண்ணா! அது யாருனு தெரிஞ்சா என்னால எதுவும் செய்ய முடியுமானு பார்க்கலாம். அவகிட்ட கேட்டா சொல்ல மாட்டேங்குறா! வீட்டுல பார்த்த பையனையே கட்டிக்கிறேன். என் தலை எழுத்து அதான்னு அழுறா! நீங்க கேட்டு சொல்லுங்கண்ணா, அவளை லவ் செஞ்ச பையன் பாவம் என்கிட்ட ஃபோன் செஞ்சி அழுறான்” விதவிதமான கதைகள் கூறி பாலாஜியை அவளிடம் பேச வைத்தான்.
பாலாஜி அவளிடம் பலவாறாக பேசியும் மாப்பிள்ளை யாரென கூற மறுத்து விட்டாள் அன்னம்.
“அன்னம் உனக்கு ஹெல்ப் பண்ண தான்மா நாங்க கேட்குறோம். உன்னை லவ் செஞ்ச பையன் பாவம்லம்மா” என்றவர் கூறியதும், திடுக்கிட்டாள் அன்னம்.
பாலாஜியின் அருகில் நின்றிருந்த மோகன், “அய்யோ அதை சொல்லாதீங்கண்ணா. ஏன் சொன்னேன்னு கேட்டு என்னை திட்டுவா” என்று பாலாஜியிடம் ஹஸ்கி குரலில் உரைக்க,
“லவ் செஞ்ச பையனா?” என்று அவள் திடுக்கிடலுடன் கேட்க,
“நான் அப்புறம் பண்றேன்மா. எனக்கு இங்க வேலை வந்துடுச்சு” என்று இணைப்பை துண்டித்தான் பாலாஜி.
“ஏன்டா முதல்லயே அவகிட்ட அவ லவ் பத்தி சொல்லதீங்கண்ணானு சொல்ல வேண்டியது தானே. அப்ப அந்த பொண்ணுக்கே லவ் செஞ்ச பையனை கட்டிக்கிற ஆர்வம் இல்லை போலயே! நீ ஏன் இடையில புகுந்து கஷ்டப்படுற! அவங்க வாழ்க்கையை அவங்கங்க பார்த்துக்கட்டும்” என்று உரைத்தவாறு தனது வேலையை பார்க்க சென்றான் பாலாஜி.
‘இந்த காலத்து பசங்களே இப்படி தான் இருக்காங்க. யாரையும் லவ் பண்ணாம கட்டிக்கிட்டவங்க தான் முதல் காதலா இருந்ததுலாம் மலையேறிப் போச்சு போல’ என்று மனதிற்குள் புலம்பியவனாய் வேலையை செய்தான் பாலாஜி.
அங்கு வேறொரு அலுவலகத்தில் அமர்ந்திருந்த அன்னத்திற்கு உள்ளம் நடுங்கியது. ‘அய்யோ இந்த மோகன் ஊரெல்லாம் நான் யாரையோ லவ் செஞ்சி ஏமாத்திட்டதா டமாரம் அடிச்சிட்டு இருக்கான் போலயே’ தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.
அந்நேரம் அவளின் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்ததற்கான சத்தம் வர, எடுத்து பார்த்தாள்.
“இன்னிக்கு சாயங்காலம் நம்ம டான்ஸ் ஸ்கூல்க்கு வர்றியா வெள்ளைப் புறா” எனக் கேட்டிருந்தான் சிவா.
காதலர் தினத்தன்று காலை பேசிய அந்த நீண்ட உரையாடலுக்கு பிறகு இருவருமே ஓரிரு வரிகளில் வார்த்தைகளில் கேள்வி கேட்டும் பதில் அனுப்பியுமே நாட்களை கடத்தியிருந்தனர். அன்னத்திற்கு அவனிடம் பேசி தெரிந்துக்கொள்ள நிறைய கேள்விகளும் விஷயங்களும் இருந்தும் அவன் மாலை போட்டிருக்கும் ஒரே காரணத்தினால் அவனிடம் பேசாது இருந்தாள்.
“இன்னிக்கு தான் முதல் நாள் இந்த ஆபிஸ்க்கு வரேன். இங்கிருந்து டான்ஸ் ஸ்கூல்க்கு வரனும்னா நான் சீக்கிரம் கிளம்பனுமே” என்று அவனது குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பினாள்.
“உன்னால் முடிஞ்சா வா! இல்லனா வீக்கெண்ட் பார்த்துக்கலாம். நோ பிராப்ளம்” என்று அவன் பதிலளிக்க,
சற்று நேரம் சிந்தித்தவளாய், “இல்ல நான் சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு இன்னிக்கே கிளம்பி வரேன்” என்று அனுப்பியவள், அதன் பின் தனது பணியினுள் மூழ்கி போனாள்.
*****
மாலை ஐந்து மணியளவில் அன்னம் தனது இரு சக்கர வாகனத்தில் அலுவலகத்தில் இருந்து கிளம்பினாள்.
தனது காலை ஷிப்ட் முடிந்ததும் அன்னம் வேலை செய்யும் அலுவலகத்திற்கு வந்த மோகன், அவளின் வண்டி வெளியே வருவதை கண்டு அவளை பின் தொடர்ந்து சென்றான்.
முக்கால் மணி நேர பயணத்திற்கு பிறகு அவளின் வண்டி சிவாவின் நடனப் பள்ளியான ஆருத்ரன் நடனப்பள்ளியில் நின்றதும், சற்று தொலைவிலேயே அப்படியே நின்று விட்டான் மோகன்.
‘இவ எதுக்கு இங்க வந்திருக்கா? ஒரு வேளை இங்க டான்ஸ் கத்துக்க சேர்ந்திருப்பாளோ?’ என யோசித்தவனாய்,
‘இருடி எப்படி உனக்கு கல்யாணம் நடக்குதுனு பார்க்கிறேன்! சிவாண்ணா டான்ஸ் ஸ்கூல் தானே இது! நீ என்னை காதலிச்சிட்டு பணக்கார பையன் மாப்பிள்ளையா கிடைச்சதும் என்னை ஏமாத்திட்டனு அவர்கிட்ட சொல்லி, மாப்பிள்ளைக்கிட்ட எனக்காக அவரை விட்டே பேச வச்சி இந்த கல்யாணத்தை நிறுத்துறேன்’ என்று மனதோடு சூளுரைத்தவனாய் அங்கிருந்து சென்றான்.
நடனப் பள்ளிக்குள் நுழைந்தவளை எதிர்கொண்டு வரவேற்றாள் அஞ்சலி.
“வாங்க அண்ணி” என்று அன்னத்தை வரவேற்ற அஞ்சலியை பார்த்ததும், முதல் முறையாக அஞ்சலியை கையில் ஏந்தியவாறு சிவா கேண்டீனுக்குள் வந்த காட்சியே இவள் நினைவினில் வந்து போனது.
“அய்யோ என்ன அண்ணிலாம் சொல்லிக்கிட்டு! நான் உங்களை விட சின்னப்பொண்ணு தான். பேரு சொல்லியே கூப்பிடுங்க” என்றாள் அன்னம்.
“என்ன இருந்தாலும் என் அண்ணனை கட்டிக்க போறீங்க! எனக்கு அண்ணி தானே” என்று அஞ்சலி சொன்னதும்,
‘சிவாக்கு தம்பி மட்டும் தானே இருக்காங்க. அப்புறம் எப்படி இவங்க சிஸ்டர் ஆனாங்க’ என்று யோசித்தவளாய், “நீங்க ஏன் நிச்சயத்துக்கு வரலை” என்று கேட்டாள்.
“சிவாண்ணா என்கிட்ட நிச்சயத்தை பத்தி சொல்லவே இல்லையே! இப்ப தான் சொன்னாரு” என்றாள்.
ஓ என்றவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“நீங்க வாங்க” என்று அவளை நடன பயிற்சி அரங்கினுள் அழைத்து சென்றாள் அஞ்சலி.
அங்கு சிவா ஒரு குழுவினருக்கு நடனம் பயில்விப்பதை பார்த்தவாறு அவள் நிற்க, “உட்காருங்க அண்ணி! உங்களுக்கு ஜூஸ் ஆர் டீ, காபி எது வேணும்?” எனக் கேட்டாள்.
“ஒன்னும் வேண்டாம் அஞ்சலி” என்று அன்னம் சொன்னதை காதில் வாங்காமல், “உங்களுக்கும் அண்ணனுக்கும் சேர்த்தே நான் ஜூஸ் சொல்றேன்” என்றவாறு அங்கிருந்து அகன்றாள்.
விழி விரிய சிவாவின் நடனத்தை பார்த்திருந்தாள் அன்னம்.
செமி கிளாசிக்கல் நடனமாக ரீமிக்ஸ் பாடலுக்கு ஆடியவனின் நடனத்தில் இருந்த நளினத்தையும் நேர்த்தியையும் தன்னை மறந்து பார்த்திருந்தவளிடம் பழச்சாறை அளித்து விட்டு சிவாவிற்கான பழச்சாற்றை அருகிலிருந்த மேஜையில் வைத்து விட்டு சென்றார் பணிப்பெண்.
முழுப்பாடலுக்குமான நடனத்தை தனது உதவியாளருடன் ஆடி முடித்தவன், “முழு பாட்டுக்கும் நான் போட்டிருக்க ஸ்டெப்ஸ்ஸை சொல்லி கொடுடா. ஸ்டெப்ஸ் கஷ்டமா இருக்குனு ஏதாவது சேஞ்சஸ் கரெக்ஷன்ஸ் சொன்னாங்கனா கூப்பிடு. நான் உங்கண்ணிக்கிட்ட பேசிட்டு வரேன்” என்று தனது உதவி நடனக் கலைஞரான ஜீவனிடம் உரைத்தவனாய் அவளை நோக்கி வந்தான்.
கையிலிருந்த துண்டின் மூலம் முகத்திலிருந்த வியர்வையை துடைத்தவனாய், “ஹாய் வெள்ளைப்புறா” என்றவாறு வந்து அவளின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.
அமர்ந்தவனிடம் அங்கிருந்த பழச்சாறு கோப்பையை எடுத்து அவள் கொடுக்க, சிரித்தவாறே வாங்கிக் கொண்டான்.
“செம்மயா ஆடுனீங்க சிவா! சூப்பர் டேன்சர் ஷோல ஆடுற ஜோடி தானே அங்க நிக்கிறது. எனக்கு இவங்க டான்ஸ் ரொம்ப பிடிக்கும். அந்த பொண்ணு மலை ஜாதி பொண்ணு தானே. செம்ம அழகுல அவங்க. இது தானே அவங்களோட ஃபர்ஸ்ட் டான்ஸ் ஷோ. நான் இவங்களுக்காகவே தான் அந்த ஷோ பார்க்க ஆரம்பிச்சேன் தெரியுமா.
அவங்க வெளில எங்கேயும் ஷோல பெர்ஃபார்ம் செய்ய போறாங்களா? அதுக்கு தான் இப்ப நீங்க கம்போஸ் செஞ்சீங்களா?” எனக் கேட்டாள்.
“இது அந்த சூப்பர் டான்ஸர் போட்டிக்காக கம்போஸ் செஞ்சது தான்மா” என்றவன் சொன்னதும்,
“என்னது அப்ப அந்த ஷோல அவங்க ஆடின எல்லா டான்ஸ்ஸூம் நீங்க கம்போஸ் செஞ்சதா?” என்று அத்தனை ஆச்சரியமாக அவள் கேட்க,
“ஆமாடா! நான் அன்னிக்கு சொன்னேன்ல ஒரு சின்னத்திரை ஷோ சைன் செஞ்சிருக்கேன்னு. அது இந்த ஷோ தான். இந்த ஷோல ஒரு ஜோடிக்கு டான்ஸ் மாஸ்டரா இருக்கேன்னு சைன் செஞ்சேன். சோ வெளிநாட்டுல ஷூட்டிங்ல இருந்தப்ப, இவங்களுக்கு நான் கம்போஸ் செஞ்சி வீடியோ அனுப்பிடுவேன். இங்க என் அசிஸ்டன்ட் ஜீவனும் அஞ்சலியும் இவங்களுக்கு சொல்லி கொடுத்துடுவாங்க. இப்படி தான் இத்தனை நாளா ஓட்டிட்டு இருந்தேன். இன்னிக்கு தான் முதல் முறையா நேர்ல சொல்லிக் கொடுக்கிறேன்” என்றான்.
ஆச்சரிய அதிர்ச்சியுடன் அவனை பார்த்திருந்தவளுக்கோ இப்பொழுது அவனது திறமையும் அவனின் உயரமும் புரிந்தது.
அவனின் வேலைகள் அனைத்தும் பெரிய டிவி சேனல்களிலும் பிரபலமானவர்களிடமுமே இருப்பதை உணர்ந்த நொடி, “நான் உங்களுக்கு தகுதியானவ தானா சிவா?” என்று சட்டென கேட்டே விட்டிருந்தாள் அன்னம்.
அவளை அவன் முறைக்க, “அண்ணா ஒரு நிமிஷம் வர்றீங்களா?” என்று அழைத்தான் ஜீவன்.
அவனிடம் ஒரு ஸ்டெப்பை மாற்ற சொல்லி அவர்கள் கேட்க, அதனை மாற்றி அமைத்து சொல்லி கொடுத்து விட்டு வந்தவன், “வா ஆபிஸ் ரூம்க்கு போய் பேசலாம்” என்று அழைத்து சென்றான்.
வரவேற்பறையில் அஞ்சலி எவரிடமோ பேசிக் கொண்டிருக்க, தாங்கள் அலுவலக அறைக்கு செல்வதாக அவளிடம் உரைத்து விட்டு உள்ளே சென்றான்.
அங்கிருந்த சோஃபாவில் அவளை அமர வைத்தவன், அருகில் அமர்ந்து கொண்டான்.
“என்னாச்சு உனக்கு? யாரும் எதுவும் சொன்னாங்களா? நீ வந்தப்பவே உன் முகமே சரியில்ல! ஆபிஸ்லருந்து வந்த டயர்டுனு நினைச்சேன். ஆனா அப்படி இல்லை போலயே! வாட் இஸ் ஈட்டிங் யுவர் ஹெட் அன்னம் (உன் மண்டைக்குள்ள அப்படி என்ன ஓடுது அன்னம்)” சற்று கோபமாகவே கேட்டிருந்தான்.
காலை பாலாஜியிடம் பேசியதையும், மோகன் இவளை பற்றி அங்கு பரவ விட்டிருக்கும் செய்தியையும் கூறியவளின் முகம் வேதனையை பிரதிபலித்தது.
“மோகன் என்னை பத்தி ஏதாவது அவதூறா பரப்பினாலும் பிரச்சனையை கிளப்பினாலும் நீங்க என்னை தப்பா நினைக்க மாட்டீங்க தானே” கண்களில் நீர் தேங்கி நிற்க கேட்டாள் அன்னம்.
“நானும் சாதாரண மனுஷன் தான் அன்னம்” என்று தொடங்கினான் சிவா.
அவள் கேள்வியாய் அவனை பார்க்க, “உங்க வீட்டு பின்னாடி இருக்க தோட்டத்துல வச்சி நீ மோகன்கிட்ட பேசினதை நான் கேட்டேன் அன்னம்” என்றான்.
பேரதிர்ச்சி அவளுக்கு! கண்களை மீண்டுமாய் நீர் நிறைத்தது.
அன்றைய நிகழ்வுகளை எண்ணி பார்த்தவள், “அதான் அன்னிக்கு என்கிட்ட சம்மதமானு கேட்டுட்டு நிச்சயம் செஞ்சீங்களா?” எனக் கேட்டாள்.
ஆமென தலையசைத்தவன், “அன்னிக்கு மோகன் கிட்ட நீ பேசினதை பார்த்ததும் செம்ம கோபம் வந்துச்சு. உன் பக்க நியாயம் புரிஞ்சாலும், என்னை கட்டிக்கிற பொண்ணு என்னை மட்டுமே காதலிக்கிறவளா இருக்கனும்ன்ற ஆசை எனக்கு இருக்கும் தானே அன்னம்” என்றான்.
ஆமென தலையசைத்தவளின் கண்ணீர் இமைகளை விட்டு வெளியேற அதனை துடைத்தவனாய் மேலும் பேசினான்.
“ஆனா உன்னை காதலிச்சி, நீ தான் எனக்கு பொண்டாட்டியா வேணும்னு ஆசைப்பட்டு அம்மாகிட்ட சொல்லி உங்க வீட்டுல பேச வச்சி, நானும் உங்க வீட்டுல எல்லார்கிட்டயும் பேசி நம்பிக்கை வர வச்சி, அதையும் தாண்டி மீடியால இருக்கனால உன்னை எனக்கு கொடுக்காம போய்டுவாங்களோனு முருகன்கிட்ட வேண்டுதல் வச்சி மாலை போட்டு இவ்வளோ தூரம் உன்னை கைப்பிடிக்க யோசிச்சனாலயோ என்னவோ, அந்த நிமிஷத்துல கூட நீ எனக்கு வேண்டாம்னு நான் நினைக்கலை அன்னம்! சரி உன்னோட மனநிலை என்னனு கேட்போம். அதுக்கு பிறகு முடிவு எடுப்போம்னு தான் தோணுச்சு” என்றான்.
கண்களில் நீர் வழிய கேட்டிருந்தவள், “ஏன்ப்பா? வேண்டாம்னு போய்ருக்கலாம்ல” எனக் கேட்டாள்.
“நான் உன்னை காதலிக்கிறேன்டா வெள்ளப்புறா! உன்னை காதலிக்கிறேன்னு சொன்னா உன்னோட நல்லது கெட்டது சரி தப்பு எல்லாத்தையும் சேர்த்து தான் நான் காதலிக்கிறேன். நீ சம்மதம்னு சொன்னதும் அவ்ளோ நிம்மதி எனக்கு. உன்னோட தப்பை சரி செய்ய வேண்டியது என்னோட கடமைனு தோணுச்சு. அது தானே காதல். நீ என்னவளா வந்துட்டா போதும் உன்னோட இந்த வலியை சரி செஞ்சிடலாம்னு தோணுச்சு! இதெல்லாம் மறந்து நீ என்னை காதலிப்பனு நம்பிக்கை இருந்துச்சு.
இப்ப இது உன்னோட பிரச்சனை இல்லடா. அது புரியுதா உனக்கு! இது நம்மளோட பிரச்சனை! நீ சிவாவோட பொண்டாட்டி! அதை மைண்ட்ல வச்சிக்கோ! என் பொண்டாட்டியை நான் எப்படி தப்பா நினைப்பேன் சொல்லு” என்றவன் சொன்னதும்,
அவனது கைகளில் முகத்தினை புதைத்து கொண்டு அழுது விட்டாள் அன்னம்.
“அன்னம்மா! இங்க பாரு” என்று அவளது முகத்தினை நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்தவன் கண்ணீரை துடைத்து விட்டு, குடிக்க நீர் அளித்தான்.
“மோகனை பத்தி உங்க வீட்டுல எல்லாருக்கும் தெரியுமா?” எனக் கேட்டான்.
“இல்ல எல்லாருக்கும் அவனை என்னோட ஃப்ரண்ட்டா தான் தெரியும். நங்கை அண்ணிக்கும் ராஜண்ணாக்கும் மட்டும் தான் இது தெரியும்” என்றாள்.
“ஹ்ம்ம் சரி நான் பார்த்துக்கிறேன். இப்ப உன் மனசுல உள்ளதுலாம் கிளியர் ஆகிடுச்சா” எனக் கேட்டான்.
ஹ்ம்ம் என தலையை மட்டும் ஆட்டினாள்.
“ஏதாவது வாயை திறந்து பேசலாம்! தப்பில்லை” புன்னகையுடன் உரைத்தான்.
தனது கைக்குட்டையில் முகத்தை துடைத்தவளாய், “தேங்க்ஸ்” என்றவள்,
“வேறென்ன சொல்லனு தெரியலை” என்றாள்.
அவளின் தலையில் கை வைத்து ஆட்டியவனாய், “நீ என்னை நம்பினால் போதும் எனக்கு! மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என்றவன் கூறிய சமயம், அன்னத்தின் கைபேசி அலறியது.
“ருத்ரன் மாமா தான் பண்றாரு! இன்னும் வீட்டுக்கு வரலையேனு தேடிருப்பாரு” என்றவாறு எடுத்து பேசினாள்.
“என்னம்மா நீ இவ்ளோ நேரம் அங்க இருக்கனுமா என்ன? பார்த்தோமா பேசினோமானு வர வேண்டியது தானே! இருட்டுற நேரத்துல இவ்ளோ தூரம் வண்டியை ஓட்டிட்டு வரனும்!” ருத்ரனின் பேச்சை சங்கடத்துடன் கேட்டிருந்தவளின் கைபேசியை இவன் பறித்து தனது காதினில் வைக்க,
“அந்த மாப்பிள்ளை பையனுக்காவது அறிவிருக்க வேண்டாமா?” என்று கூறிக் கொண்டிருந்தார் ருத்ரன்.
“பெரியப்பா உங்க அறிவுக்கெட்ட மாப்பிள்ளை தான் பேசுறேன்” சிரித்தவாறு சிவா பேச, தூக்கிவாரி போட்டது ருத்ரனுக்கு.
“மாப்பிள்ளை நீங்க? எப்படி? அவ நம்பர்” என்று அவர் உளற,
“பெரியப்பா நீங்க கவலைப்படாதீங்க நானே அன்னத்தை கூட்டிட்டு வந்து பத்திரமா விட்டுடுறேன்” என்று உரைத்து விட்டு அவர் சரியென்றதும் இணைப்பை துண்டிக்க,
அங்கே ருத்ரனோ, “எனக்குனு வர்ற மாப்பிள்ளை எல்லாம் இப்படி தான் இருக்குறாங்க” என்று தலையில் அடித்துக் கொண்டவாறு தனது வேலையை கவனிக்கலானார்.
அங்கு சிவாவின் அலுவலக அறையை தட்டியவாறு உள்ளே வந்த அஞ்சலி, “என்ன அண்ணா செஞ்ச என் அண்ணியை? இப்படி அழுக வச்சிருக்க” என்று அவளின் கண்களை பார்த்தவாறு அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“இல்ல இல்ல அவர் எதுவும் பண்ணலை. கண்ணுல தூசி விழுந்துடுச்சு” என்று அவசரமாக அன்னம் சொல்ல,
“என்னது இரண்டு கண்ணுலயும் தூசி விழுந்துடுச்சா?” இடையில் கை வைத்தவாறு அஞ்சலி முறைத்துக் கொண்டு கேட்க, அசட்டு சிரிப்பு சிரித்தாள் அன்னம்.
“சரி நான் கிளம்புறேன் டைம் ஆகிடுச்சு” என்று அன்னம் பொதுவாக கூற,
“இரு நானும் வரேன்” என்ற சிவா அஞ்சலியிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு கிளம்பினான்.
அன்னம் அவளது இரு சக்கர வாகனத்தை ஓட்ட பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டான் சிவா.
“நீங்க ரிட்டர்ன் எப்படி வருவீங்க?” என்று கேட்டவாறு அவள் வண்டியை இயக்க,
“அது நான் பஸ்ல வந்துப்பேன்” என்றான்.
“ஓ உங்களுக்கு பஸ் டிராவல் ரொம்ப பிடிக்குமா? அடிக்கடி பஸ்ல போவீங்களா? மக்கள் கண்டுபிடிச்சி பேச மாட்டாங்களா?” என்று கேட்டாள்.
“பார்த்து கண்டுபிடிச்சி பேசுற அளவுக்கு நாம பெரிய பிரபலம் இல்லமா. இருந்தாலும் தலையில் தொப்பி மூஞ்சில மாஸ்க் கண்ணாடினு அடையாளம் தெரியாத மாதிரி தான் டிராவல் செய்வேன். இப்ப உன் பின்னாடி எதுவும் போடாம தானே உட்கார்ந்திருக்கேன். ஐ லவ் பஸ் டிராவலிங்” என்றான்.
“அதான் அன்னிக்கு பஸ்ல வந்தீங்களா?” எனக் கேட்டாள் அன்னம்.
“என்னிக்கு?” என்றவன் கேட்க,
“எங்க ஆபிஸ்ல ஷூட்டிங் நடந்திட்டு இருந்தப்ப ஒரு நாள் பஸ்ல வந்தீங்களே” எனக் கேட்டாள்.
“அன்னிக்கு கார் பைக் எல்லாமே மக்கார் பண்ணுச்சு. அதான் பஸ்ல வந்தேன். ஆனா வந்ததும் நல்லதா போச்சு. இல்லனா உன்னை பார்த்திருக்க மாட்டேனே!” என்றவன் சொன்னதும்,
“வாவ் அன்னிக்கு என்னை பார்த்தீங்களா? உங்களுக்கு பக்கத்துல நான் உட்கார்ந்திருந்தேனே பார்த்தீங்களா?” ஆர்வமாய் கேட்டிருந்தாள் அன்னம்.
“மீனா பொண்ணு மீனா பொண்ணுனு உன் ஃபோன் அலறினதுலருந்து இந்த படிப்புக்கு ஒரு என்ட் கார்ட் இல்லையானு உங்க மீனுக்கிட்ட புலம்பினது வரை எல்லாமே கேட்டேன். அப்புறம் கேண்டீன்ல அஞ்சலியை நான் தூக்கிட்டு வரதை பார்த்து உன் ஃப்ரண்ட்க்கிட்ட யாரை பத்தியும் தெரியாம தப்பா பேசக் கூடாதுனு சொன்னது, சினிமாலயும் நல்லவங்க கெட்டவங்க இருக்காங்க அதுல நல்லவங்களை நாம் பார்த்து போய்டுவோம்னு சொன்னது வரைக்கும் எல்லாமே ஞாபகம் இருக்கு” என்றான்.
திடீரென வண்டியை ஓரங்கட்டி நிறுத்தி திரும்பி அவன் முகத்தை பார்த்தாள்.
“என்ன?” என்று புருவத்தை உயர்த்தியவாறு அவன் கேட்க,
“உடனே உங்க முகத்தை பார்க்கனும் போல தோணுச்சு!” என்று உரைத்தவள் அவன் முகத்தை பார்த்து சிரித்தவளாய் மீண்டுமாய் வண்டியை இயக்கினாள்.
“நீங்க சொல்றதெல்லாம் கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு! நம்மளையும் ஒருத்தங்க அதுவும் இப்படி ஒரு செலிப்ரெட்டி கவனிச்சிருக்காங்களேனு மனசு குதூகலமா இருக்குது” என்றவாறு சிரித்தாள்.
வண்டியிலிருக்கும் கண்ணாடி வழியாய் அவளின் சிரிப்பினை பார்த்தவனுக்கு அப்பொழுது தான் மனதில் நிம்மதி சூழ்ந்தது.
“உங்களோட கேரக்டர் நேச்சர் வச்சி பிடிச்சி தான் கிரஷ்னுலாம் சொன்னேன் சிவா. அப்ப உங்களை பாக்கிறப்பலாம் ஒரு மாதிரி எக்ஸ்ஸைட் ஆவேன். மனசு அவ்ளோ சந்தோஷமா ஃபீல் ஆகும். என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டர் நீங்க. ஸ்டிரஸ்ஸா ஃபீல் ஆகும் போது உங்க வீடியோஸ்லாம் தான் பார்த்திருக்கேன். ஆனா நீங்க என்னை பொண்ணு பார்க்க வந்ததுலருந்து இது எந்த உணர்வும் இல்லாம மனம் முழுக்க ஒரு வித அழுத்தமும் வேதனையும் தான் உணர்ந்தேன் சிவா. என்னை பத்தி தெரிஞ்சா நீங்க என்ன நினைப்பீங்களோனு கவலையா இருந்துச்சு. இப்ப இந்த பஸ் டிராவல் பத்தி பேசினதும் அதெல்லாம் ஞாபகம் வந்துடுச்சு. இப்ப உங்க முகத்தை பார்த்ததும் அதே மாதிரி எக்ஸ்ஸைட் ஃபீல் ஆகுதானு தெரிஞ்சிக்க பார்த்தேன்” என்றாள்.
அவள் பேசுவதை கேட்டிருந்தவன், “என்ன ஃபீல் ஆச்சு?” என்று ஆர்வமாய் கேட்டான்.
“நல்ல மனுஷன்னு ஃபீல் ஆச்சு” என்றாள்.
வாய்விட்டு சிரித்தவன், “ஆமா என்னை பத்தி உனக்கு என்னலாம் தெரியும்” என்று கேட்டான் சிவா.
“உங்க பேரு சிவசுந்தரம்னு தெரியும்” என ஆரம்பித்தவள்,
“சிவா நான் உங்களுக்கு ஒரு செல்ல பேரு வச்சிருக்கேன்! என்னனு சொல்லுங்க பார்ப்போம்” என்று கேட்டாள்.
“தெரியலைமா நீயே சொல்லிடு! நடன சூறாவளி மாதிரி நான் ஏதாவது யோசிச்சு சொல்ல நீ சின்னப்பிள்ளத்தனமா நீ ஏதாவது சொல்லுவ” என்று சிரித்தான்.
கண்ணாடியில் அவனை பார்த்து முறைத்தவளாய், “நான் உங்களுக்கு எவ்ளோ நல்ல பேர் யோசிச்சு வச்சிருக்கேன் தெரியுமா?” என்றாள் அன்னம்.
“சொல்லுமா கேட்போம் அந்த நல்ல பெயரை” என்று அவன் ஆர்வமாய் கேட்க,
“நேத்து ஜீன்ஸ் படம் பார்த்தேனா” என்று ஆரம்பித்தாள் அவள்.
“என்னது ஜீன்ஸ் படமா? பிரசாந்த் பார்த்துட்டு என் ஞாபகம் வந்துச்சா?” என சிரித்தான் அவன்.
“ஹான் ஆசை தான். நான் பேசுறதை கேளுங்க” என்றவள்,
“ஜீன்ஸ் படத்துல ஐசுக்கு ஒரு மாமா இருப்பாங்க ஞாபகம் இருக்கா?” எனக் கேட்டாள்.
“எந்த மாமா? அந்த மாமா பேரையா எனக்கு வச்சிருக்க?” எனக் கேட்டான்.
“ஆமா ஆமா” என சிரித்தாள்.
பின்னே அமர்ந்திருந்தவன் கூகுள் செய்து பார்த்தவனாய்,
“சிவசு மாமாவா” என முகத்தை அஷ்டகோணலாக்கி கேட்டான்.
“ஆமா சிவசுந்தரத்தை சிவசுனு கூப்பிடலாம்ல” என்றவள் சிரித்தவாறு கூற,
“இது தான் உன் அரிய கண்டுபிடிப்பா? காலேஜ்ல எல்லாரும் என்னை சிவசுனு தான் கூப்பிடுவாங்க” என்றான்.
ஓ என்றவளின் முகம் சுருங்கி போனது.
“நான் தான் ஸ்பெஷலா உங்களுக்காக கண்டுபிடிச்சேன்னு நினைச்சேன்” என்றவள் சொல்லும் போதே அவளின் இல்லம் வந்து விட, வண்டியில் இருந்து இறங்கியவனாய்,
“அவங்கலாம் சிவசுனு மட்டும் தான் கூப்பிடுவாங்க. நீ சிவசு அத்தான்னு கூப்பிடு ஸ்பெஷல் ஆகிடும்” என்று கூறி சிரித்தான்.
“அச்சோ சாமி சரணம்” என்று அவள் கன்னத்தில் போட்டுக் கொள்ள,
ஹா ஹா ஹா என வாய்விட்டு சிரித்தவன்,
“தன்னோட மனைவிகிட்ட ஒருத்தன் அன்பா ஆசையா பேசுறதை குத்தம்னு எந்த சாமியும் சொல்ல மாட்டாங்க. சோல்மேட்டா (soulmate) பேசும் போது தப்பு இல்ல. உடலை தாண்டி உள்ளத்தை மட்டுமே நேசிச்சு பேசுறது தப்பில்ல. ஐயப்பனுக்கு எப்படியோ முருகனுக்கு தப்பில்லை. எந்தளவுக்கு உன் கிட்ட பேசுறதுல ஈடுபாடு காட்டுறேனோ அதே அளவுக்கு காலையும் மாலையும் அவருக்கு செய்ற பூஜையை மனசார ஈடுபாட்டோட செஞ்சா போதும். அந்த காலத்துல ரிஷிகள்லாம் அவங்க பத்தினி கூட இருந்துக்கிட்டே தானே யாகங்கள் ஹோமங்கள் பூஜைகள்லாம் செஞ்சாங்க.
கணவன் மனைவி இருவரும் உடலை தாண்டி மனதால் இணக்கமாக நேர்மையா அன்பா வாழ்ந்து தங்களோட கடமைகளை நிறைவா செய்யும் போது அதை பார்த்து கடவுளே இறங்கி வந்து வரம் தருவாரு” என்றான்.
அவன் கூறுவதை எல்லாம் ஆச்சரியமாக கேட்டவள், “நீங்க எத்தனை வருஷமா மாலை போட்டுட்டு இருக்கீங்க?” எனக் கேட்டாள்.
“நான் பத்து வருஷமா மாலை போடுறேன். ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு வேண்டுதல் வச்சிப்பேன். இந்த வருஷம் என்னோட வேண்டுதலே நீ தான்” என்றான்.
மென்னகை புரிந்தவளாய், “சரி உள்ள வாங்க” என்று வண்டியில் இருந்து இறங்கி வண்டியை தள்ள,
“கொடு நான் பார்க் பண்றேன்” என்று வண்டியை அவளிடம் இருந்து வாங்கி தள்ளியவாறு தரிப்பிடத்தில் சென்று நிறுத்தினான்.
“சரி நான் கிளம்புறேன்” என்று அவன் சொன்னதும்,
“என்ன உள்ளே வராம போறீங்க? வந்து ஜூஸ் குடிச்சிட்டாவது போங்க” என்றாள்.
“இல்லடா இப்ப போய் குளிச்சிட்டு பூஜை செஞ்சிட்டு தான் சாப்பிடனும். டைம் ஆகிட்டு. நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு! என்கிட்ட எப்ப எது சொல்லனும்னாலும் கால் பண்ணு சரியா! பை டா” என்றவாறு அங்கிருந்து கிளம்பினான்.
வீட்டிற்குள் அன்னம் மட்டுமே நுழைவதை கண்ட ருத்ரன், “மாப்பிள்ளை எங்கே? அவரும் வரேன்னு தானே சொன்னாரு?” என்று கேட்டார்.
“வந்தார் மாமா! வீட்டுக்கு போய் பூஜை செய்யனும்னு அப்படியே கிளம்பிட்டாரு” என்றாள்.
“வீட்டுக்கு வந்தவங்களை அப்படியே அனுப்புவியா நீ? உள்ளே கூப்பிட்டிருக்கலாம்ல” என்று அவர் கடிந்துக் கொள்ள,
“நான் கூப்பிட்டேன் மாமா! அவர் தான் வரலை! நான் குளிச்சிட்டு வரேன்” என்று தனதறைக்குள் சென்றாள்.
‘ஹ்ம்ம் மாப்பிள்ளை முறுக்கை காமிக்கிறாரு போல! நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்ல அந்த ஆச்சி பேச்சு கேட்டு ஓகே சொன்னாங்களே. அவங்களே அனுபவிக்கட்டும் எனக்கென்ன’ என்று மனதிற்குள் புலம்பியவராய் தொலைகாட்சியை பார்த்து கொண்டிருந்தார் ருத்ரன்.
****
இரவு தனது படுக்கையில் படுத்தவாறு கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று ஒரு யோசனை வர, தனது காண்டேக்டில் உள்ள அன்னத்தின் தோழி புவனாவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
அன்னத்தின் நிச்சய புகைப்படம் இருந்தால் அனுப்புமாறு கேட்டான். அந்த புகைப்படங்களை வைத்து அவளின் திருமணத்திற்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் திட்டமிட்டிருப்பதாக உரைத்து அதனை கேட்டான்.
“அன்னம் இந்த போட்டோவை யாருக்கும் அனுப்ப கூடாதுனு சொல்லிருக்கா மோகன். அதுவும் இல்லாம அவளோட நிச்சயத்தை பத்தியே வெளில யாருக்கும் சொல்ல வேண்டாம்னு சொன்னா!” என்று பதில் அனுப்பி விட்டாள் புவனா.
‘என்னடா இது எங்க போனாலும் முட்டுக்கட்டையா இருக்கு’ என்று யோசித்தவன் வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று யோசித்தவாறே உறங்கி போனான்.
மறுநாள் காலை ஐந்து மணியளவில் கண் விழித்து கைபேசியை பார்த்த அன்னத்திற்கு எண்ணற்ற அறிவிப்புகள் (notifications) வந்திருப்பதை கண்டு உறக்கம் கலைந்தது.
முதலில் வாட்ஸ்அப்பை திறந்தவள், அங்கு வந்திருந்த புவனாவின் குறுஞ்செய்தியை பார்த்து எழுந்தமர்ந்து விட்டாள்.
“இந்த மோகன் உன்னோட எங்கேஜ்மெண்ட் போட்டோ கேட்டான்டி!”
இந்த குறுஞ்செய்தியை படித்ததும் அவளின் கைபேசி சார்ஜ் இல்லாமல் அணைந்து போக, “அய்யய்யோ இவ ஃபோட்டோவை அனுப்பிட்டாளா? அச்சோ அந்த போட்டோவை பார்த்துட்டு இவன் என்னை பத்தியும் சிவாவை பத்தியும் எதுவும் தப்பு தப்பா போஸ்ட் போட்டுட்டானா? இன்ஸ்டாலருந்து வேற நிறைய கமெண்ட்ஸ் நோட்டிபிகேஷன் காண்பிச்சிதே” என்று இவள் புலம்பி கொண்டே கைகள் நடுங்க மனம் படபடக்க கைபேசியை உயிரூட்டியில் இணைத்தாள்.
கைபேசி உயிர் பெற்று வர எடுத்த அந்த ஒரு நிமிடம் ஒரு மணி நேரமாய் கடந்தது அவளுக்கு.
“அன்னம் ஆல் இஸ் வெல்! ஆல் இஸ் வெல்” என்று தனக்கு தானே கூறிக் கொண்டவளாய் வாட்ஸ்அப்பில் புவனாவின் குறுஞ்செய்திகளை படித்து முடித்தப் பின் தான் உயிரே வந்தது அவளுக்கு.
“நீ யாருக்கும் எங்கேஜ்மெண்ட் பத்தி எதுவும் சொல்ல கூடாதுனு சொன்னல, அதனால அவனுக்கு ஃபோட்டோ அனுப்ப முடியாதுனு சொல்லிட்டேன்டி” என்று அனுப்பிருந்தாள் புவனா.
ஆசுவாச மூச்சு விட்டவளாய் இன்ஸ்டாவை அவசர அவசரமாக திறந்து பார்த்தவளுக்கு இவளை டேக் செய்து சிவா போட்டிருந்த பதிவை பார்த்து இன்ப அதிர்ச்சி.
நேரத்தையும் பாராமல் உடனே அவனுக்கு அழைத்து விட்டாள்.
அவன் அழைப்பை ஏற்றதும், “என்ன செஞ்சி வச்சிருக்கீங்க?” என்று கேட்டாள்.
நல்ல தூக்கத்தில் இருந்து விழித்தவனுக்கு அவளின் கேள்வி சட்டென விளங்கவில்லை.
“என்னடா வெள்ளப்புறா? என்னாச்சு? இந்த நேரத்துல கால் செஞ்சிருக்க” என்று கேட்டான்.
“உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்குது சிவசு அத்தான்” என்றாள்.
அவளின் சொல்லில் இன்பமாய் அதிர்ந்து தூக்கம் முற்றிலுமாய் கலைய, “ஹே அன்னம் என்ன சொன்ன?” என்று அவன் கேட்டு முடிப்பதற்குள் இணைப்பை துண்டித்திருந்தாள்.
மீண்டுமாய் அவன் அழைக்க, அழைப்பை ஏற்றவள் அமைதியாக இருக்க, “இப்ப என்ன சொன்ன? அதை திரும்ப சொல்லு” என்றான்.
“ம்ஹும் அதெல்லாம் முடியாது” மென் குரலில் வெட்கத்துடன் உரைத்தாள்.
“மேடம் என்ன காலைலயே செம்ம ஹேப்பி மூட்ல இருக்கீங்க” என்று சிரித்தவாறு கேட்டான் சிவா.
“நம்ம நிச்சயத்தை பத்தி இன்ஸ்டால ஃபோட்டோவோட ‘சிவாவின் சரிபாதி’னு டேக் லைனோட நீங்க போஸ்ட் செஞ்சிருக்கிறதை பார்த்தேன். அதனால் வந்த சந்தோஷம்” என்றவள் மோகன் புவனாவிடம் கேட்டிருந்ததை தெரிவித்தாள்.
“நேத்து பாலாஜி மூலமா மாப்பிள்ளை பத்தி கேட்டான். இப்ப புவனாகிட்ட கேட்டிருக்கான். அவன் ஏதோ என் பேரை ரிப்பேர் ஆக்க பிளான் செஞ்சி கேட்குறானோனு பயந்துட்டேன். அதான் அந்த டைம்ல இந்த போஸ்ட் பார்க்கவும், நீங்க எப்பவும் எங்கேயும் என்னை விட்டு கொடுக்க மாட்டீங்கனு செம்ம ஹேப்பி” என்றவள்,
“ஆமா அன்னிக்கு கல்யாணத்தை பத்தி எங்கேயும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டு இன்னிக்கு நீங்களே ஏன் போஸ்ட் செஞ்சிருக்கீங்க” என்று கேட்டாள்.
“அந்த மோகன் பையன் கோபத்துல இருப்பான். உடனே இந்த போஸ்ட் போட்டு அவனை கடுப்பேத்த வேண்டாமேனு தான் உன்னை எங்கேயும் போட வேண்டாம்னு சொன்னேன். ஆனா அவன் நேத்து பாலாஜி மூலமா மாப்பிள்ளை பத்தி விசாரிக்க நினைச்சதுலேயே என்னமோ பிளான் செய்றான்னு புரிஞ்சிது. சரி என்ன தான் செய்றான்னு பார்க்கலாம்னு போஸ்ட் செஞ்சிட்டேன்” என்ற சிவா,
“சரி நீ ஆபிஸ் கிளம்பு! நானும் பூஜை செஞ்சிட்டு வேலையை பார்க்கிறேன்” என்று இணைப்பை துண்டித்தவன் தனது நண்பனுக்கு அழைத்தான்.
“என்ன சிவா இந்த டைம்ல ஃபோன் செஞ்சிருக்கீங்க? எதுவும் பிரச்சனையா?” எனக் கேட்டான் பிரேம்.
திவ்யாவின் கணவனும் ராஜனுடன் ஜெர்மனியில் தங்கியிருந்த அதே பிரேம் தான்.
பிரேம் செலிப்ரெட்டியின் யூ டியூப் சேனலை பராமரிக்கும் சின்ன கம்பெனியை திவ்யாவை வைத்து தொடங்கியதும் உடன் பணிபுரிபவர் மூலம் அவனுக்கு அறிமுகமானான் சிவா.
சிவாவின் யூடியூப் சேனலிற்கு அட்மினாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள் திவ்யா.
சிவா தான் எடுக்கும் காணொளிகளை இந்த நிறுவனத்திற்கு அனுப்பிவிடுவான். திவ்யா அதனை எடிட் செய்து சிவாவின் யூடியூப் சேனலில் அப்லோட் செய்து அதில் வரும் பின்னூட்டங்கள் எல்லாவற்றையும் மேனேஜ் செய்வாள்.
திவ்யாவும் அவளது தோழியும் தான் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆட்கள்.
“பிரேம் எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்” என தயங்கியவாறே கேட்டான் சிவா.
“என்ன ஹெல்ப் சிவா? சொல்லுங்க” என்றவன் கேட்டதும்,
“நீங்க போலீஸ் ஐடி டிபார்ட்மெண்ட்ல வேலைல இருக்கனால உங்களால இது முடியும்னு நம்பி தான் கேட்கிறேன்” என்று பீடிகையுடன் ஆரம்பித்தவன்,
“நான் ஒரு பையன் ஐடி தரேன். அவனோட சோஷியல் நெட்வொர்க் முழுவதும் உங்க கண்காணிப்புல கொண்டு வரனும். அதாவது அவன் சோஷியல் மீடியால எந்த போஸ்ட் போட்டாலும் நீங்க ரிவ்யூ செஞ்சிட்டு போஸ்ட் ஆகுற மாதிரி ஏதாவது செய்ய முடியுமா? ஆனா நீங்க கண்காணிக்கிறது அவனுக்கு தெரியவும் கூடாது” என்றான் சிவா.
“ஓ செய்யலாம் சிவா. அவன் என்ன மாதிரி போஸ்ட் போடுவான்னு நீங்க நினைக்கிறீங்க” என்று பிரேம் கேட்க,
“என்னோட வுட்பீ அன்னம் பத்தின போஸ்ட் ஏதாவது போடுவானோனு அதுவும் என்னோட ஃபேன் பேஜ் ஒன்றுக்கு அவன் அட்மினா இருக்கான். அந்த பேஜ் மூலமா போட்டா நிறைய பேர் ரீச் ஆகும். அதனால் அப்படி எதுவும் செய்வானோனு எனக்கு ஒரு சந்தேகம். அதான் உங்ககிட்ட சொல்றேன்” என்றான் சிவா.
“ஓ புரியுது சிவா! சரி அந்த மாதிரி எதுவும் போஸ்ட் போட முயற்சி செஞ்சா அவனை என்ன செய்யலாம்னு பிளான்?” எனக் கேட்டான் பிரேம்.
“கண்டிப்பாக அவன் மேல் கேஸ் போடுவேன்” என்று சிவா கூறவும்,
“ஓகே அபீஷியலாவே இதை செய்றேன் சிவா! அப்ப தான் கேஸ் போட வசதியாக இருக்கும்” என்றான் பிரேம்.
“அபீஷியலா செய்யுங்க ஆனா இந்த நியூஸ் வெளில வராம பார்த்துக்கோங்க. தேங்க்யூ சோ மச் பிரேம்” என்று கைபேசியை வைத்தவன் குளித்து முடித்து பூஜை செய்ய தொடங்கினான்.
‘எந்த பிரச்சனையும் இல்லாம நல்லபடியாக எங்க கல்யாணத்தை நடத்தி வைக்கனும் முருகா’ என்று அனுதினமும் வேண்டுவதை அன்றும் வேண்டிக் கொண்டான்.
சிவாவின் தாய் அன்று காலை அவனுக்கு அழைத்து, “ஏன்டா என்னை என் மருமகக்கிட்ட பேச விட மாட்டேங்கிற” என்று கேட்டார்.
“நான் பேச விட மாட்டேங்கிறேனா? யாரு சொன்னாமா?” என்று கேட்டான் சிவா.
“உன் தம்பி தான் சொன்னான். என் ஃபோன்ல அந்த பொண்ணு நம்பரை ஏத்தி தாடா நான் பேசனும்னு நிதமும் கேட்டுட்டு இருக்கேன். போக்கு காட்டிட்டு கிடக்கான். இன்னிக்கு என்னனு காலைல பிடிச்சி வச்சி கேட்டதுக்கு, அண்ணன் அண்ணி நம்பரை உனக்கு கொடுக்க கூடாதுனு சொல்லுச்சுனு சொல்றான்! நான் என்னடா அப்படி கொடுமைக்கார மாமியாராவா தெரியுறேன் உனக்கு. எனக்கு மக இல்லாத குறைக்கு மருமகளை மகளா தானடா நான் நினைப்பேன்” என்று அவர் அழுகை குரலில் பேச,
“அச்சோ அம்மா! நான் எதுவும் சொல்லலை. அவன் உன்னை வம்பிழுக்க என் பேரை இழுத்து விட்டிருக்கான். ஊருக்கு வந்தா உதை வாங்குவான்னு சொல்லி வை அவன்கிட்ட” என்றான் சிவா.
“நீயாச்சு உன் தம்பியாச்சு. என்னை என் மருமககிட்ட பேச வைங்க. அது போதும் எனக்கு” என்றார் அவர்.
“சரி சரி நான் தம்பிகிட்ட சொல்லி பேச வைக்கிறேன். அவன் எங்கே? கடைக்கு கிளம்பிட்டானா?” எனக் கேட்டான் சிவா.
ஆமென அவர் கூற, தம்பிக்கு அழைத்து கான்ஃபெரன்சில் இருவரிடமும் பேசி முடித்து விட்டு தனது நடனப்பள்ளிக்கு கிளம்பிய சமயம், பிரேமிடம் இருந்து அழைப்பு வந்தது.
— தொடரும்