அழகிய அன்னமே 3

நேர்முகத் தேர்வுக்காக இன்பாவின்‌ முன் அமர்ந்திருந்தாள் அன்னம்.

பால் வண்ண நிறத்தில் பளிங்கு சிலை என்பதை போன்ற பேரழகி தான் அன்னம்.

நொடிப்பொழுது அவள் முகத்தில் நிலைத்து விலகியது அவன் விழிகள்.

தனக்குள் எழும் நடுக்கத்தை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்தவளாய் திடமாய் நிமிர்ந்து அமர்ந்து அவனை எதிர்கொண்டவளின் மனமோ,

“சொட்டை தலையோட தொந்தியும் நரையுமா ஒருத்தர் உட்கார்ந்திருப்பாருனு பார்த்தா ஹேண்ட்சம் யங் மேன்னால இவர் இருக்காரு! இவ்வளோ சின்ன வயசுல எப்படி மேனேஜர் ஆனாரு? செம்ம மண்டையா இருப்பாரு போல”  என அவனை கணக்கிட்டு பேசிக் கொண்டிருக்க,

அவளின் சுயவிவரச்சுருக்கத்தினை (resume) பார்த்து விட்டு நிமிர்ந்த இன்பா, “உங்க முழுப்பெயரே அன்னம் தானா?” எனக் கேட்டான்.

“ஆமாங்க சார். உங்க முழுப்பெயரே இன்பா தானா?” இவள் கேட்டிருந்தாள் அவனிடம்.

நேர்முகத் தேர்வுக்குரிய எவ்வித பயமும் பதட்டமும் இல்லாமல் இயல்பாக கேட்டிருந்தவளை கண்டு மெச்சுதல் பார்வை அவனிடம்.

மென்மையாக சிரித்தவாறு ஆமென தலையசைத்தவன், “ஓகே லெட்ஸ் ஸ்டார்ட் த இன்டர்வியூ (இன்டர்வியூவை தொடங்குவோம்)” என்றவன் நேர்காணலை தொடங்கினான்.

முதலில் அவளை பற்றி கூறுமாறு கேட்டான்.

அவள் சரளமாக தன்னை பற்றிய அறிமுகத்தினை ஆங்கிலத்தில் உரைக்க, அதுவே அவனுக்கு அவள் மீதான நம்பிக்கையை அளித்திருந்தது‌.

தொடர்ந்து வேலை சார்ந்த விஷயங்களை அவன் கேட்க, தனக்கு தெரிந்ததை விளக்கி கூறியவள், தெரியாததை தான் கற்றறிந்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் உரைத்தாள்.

அவளின் தைரியமான தன்னம்பிக்கையான பேச்சும் நிமிர்வும் இன்பாவை ஈர்க்க, அவளை அந்த பிராஜக்ட்டுக்கு எடுக்கலாம் என முடிவு செய்தவனாய்,

“அன்னம் இந்த பிராஜக்ட்ல மொத்தமே ஆறு பேரு தான். ஒரு வருஷமா போய்ட்டு இருக்க இந்த பிராஜக்ட்ல இது வரைக்கும் நாங்க பொண்ணுங்களை எடுத்தது இல்லை. பொண்ணுங்களுக்கு இந்த பிராஜக்ட் செட் ஆகாது. அவங்களால தாக்கு பிடிக்க முடியாதுனு தான் எடுக்கலை. இந்த தடவை அர்ஜன்ட்டா பிராஜக்ட்டுக்கு ஆள் வேணும்னு ஹெச் ஆர்கிட்ட கேட்கவும், உங்க ப்ரொபைல் மட்டும் தான் இப்போதைக்கு செட் ஆகுற மாதிரி இருக்குனு ஹெச் ஆர் அனுப்பியதால் தான் பார்த்தேன்”

இவன் இவ்வாறு உரைக்கவும், அன்னத்தினுள் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணியவாதி விழித்தெழ, “அப்படி என்ன சார் பொண்ணுங்களால முடியாத வேலை? லாரிலருந்து ஃப்ளைட் வரைக்கும் இப்ப பொண்ணுங்க ஓட்டுறாங்க. இந்த வேலை அவங்களால முடியாதுனு நினைச்சி எடுக்கலை சொல்றது ஏத்துக்க முடியலை சார்” அவளை உறுத்து பார்த்த இன்பா மேலும் அவள் பேசும் முன் இடையிட்டவனாய்,

“யூ ஆர் செலக்டட் ஃபார் திஸ் பிராஜக்ட்! நாளைலருந்து நைட் ஷிப்ட்டுக்கு வாங்க” என்ற நொடி,

“சார்” என அதிர்ந்து அவளையும் அறியாமல் சத்தமாய் அழைத்திருந்தாள் அன்னம்.

“நைட் ஷிப்ட்டா” பேய் முழி முழித்தவாறு கேட்டவளை பார்த்து வாய்க்குள் சிரித்துக் கொண்டான் இன்பா.

அவளின் மைண்ட் வாய்ஸோ, ‘தேவையா உனக்கு! இப்ப தான் பெண்ணியம்லாம் பேசுவியா நீ? நைட் ஷிப்ட் வரனுமாம் முடியுமா உன்னால’ என்று அவளை வறுத்தெடுக்க,

“நிஜமாவே நைட் ஷிப்ட்லாம் இருக்கா சார்” பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.

“ஆமா அன்னம்! அதனால தான் நான் இந்த பிராஜக்ட்க்கு பொண்ணுங்களை பிரிஃபர் (prefer) செய்றதில்ல. ஆனால் இப்ப ஒருத்தர் பேப்பர் போட்டுட்டார். ஒரு மாசத்துல வேற கம்பெனி போய்டுவார். அவருக்கு பதிலாக வேறொருத்தரை உடனே எடுத்தாக வேண்டிய கட்டாயம். அதான் உங்களை எடுக்க முடிவு செஞ்சிட்டேன்” என்றான்.

அவள் தானே பெண்களால் விமானம் கூட ஓட்ட முடியும என்றாள். இப்பொழுது இரவு ஷிப்ட் வேண்டாம் என்றால் என்ன கூறுவான் என யோசித்தவாறு அவள் அமர்ந்திருக்க, “உங்களுக்கு எதுவும் என்கிட்ட சொல்லனுமா இல்ல கேட்கனுமா?” என்றான் இன்பா.

“சார் அது வந்து நைட் ஷிப்ட்” என அவள் தயங்கியவாறு இழுக்க,

“நீங்க சொன்ன லாரி ஓட்டுறவங்கலருந்து விமானம் ஓட்டுறவங்க வரைக்கும் எல்லாருமே இரவு நேரமும் வேலை செய்றவங்க தான் அன்னம். அவங்க வேலை பார்க்கிற சூழல் நல்லாவே இருக்காது. ஆனா இங்க உங்களுக்கு தேவையான எல்லா பாதுக்காப்பும் வசதிகளும் செய்து கொடுத்து தான் வேலை செய்ய சொல்றோம்”

மேலாளரின் (மேனேஜர்) பணிக்கேற்ப திறமையாய் அவளின் வழியிலேயே பேசி சமாதானம் செய்து ஒப்புக்கொள்ள வைத்து விட்டான் இன்பா.

அவள் விடைபெற்று நாற்காலியிலிருந்து எழவும், “அப்புறம் டோண்ட் கால் மீ சார்! கால் மீ இன்பா! ஐடி கல்சர் பத்தி உங்களுக்கு டிரையினிங்லயே சொல்லிருப்பாங்கனு நினைக்கிறேன்” என்றவன் சொன்னதும்,

தொங்கிப்போன முகத்துடன், “ஆமா சார்” என்றவள்,

“சாரி சார்” என்று விட்டு, “அய்யோ” என கண்களை சுருக்கி தலையில் தட்டிக் கொண்டவளாய், “ஓகே இன்பா” என்று கை குலுக்கி விட்டு வெளியே வந்தாள்.

உணவு இடைவேளை வரை மறுநாள் இரவு ஷிப்ட்டிற்கான அலுவலக வண்டிக்கான ஏற்பாட்டில் ஈடுபட்டவளை கைபேசியில் அழைத்தாள் புவனா.

“ஹே சாப்பிட வர்றியாடி! எனக்கு அரை மணி நேரம் தான்டி டைம் இருக்கு. அதுக்குள்ள சாப்பிட்டுட்டு வேலையை பார்க்க போனும். இல்லனா அதுக்கும் கேள்வி கேட்பாரு என் மேனேஜர்” என்று புவனா கூறியதும்,

“ஏன்டி இந்த மேனேஜர்களே இப்படி இருக்காங்க” என்று அன்னம் கூறிய சமயம் அவளை கடந்து சென்றிருந்தான் இன்பா.

“அய்யய்யோ! கேட்டிருப்பாரோ” என கைபேசியை காதில் வைத்துக்கொண்டே அன்னம் கூற,

“என்னடி என்னாச்சு?” எனக் கேட்டாள் புவனா.

“எல்லாம் உன்னால தான்டி!” என அவளிடம் காய்ந்த அன்னம், “கேண்டீன் வாடி நீ முதல்ல!” என இணைப்பை துண்டித்தாள்.

அந்த கட்டிடத்திலிருந்து இறங்கி, உணவிடத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த அன்னத்தினை, அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்து வெளி வந்த புவனா பார்த்து விட்டு, “அன்னம்! நில்லுடி” எனக் கத்தியவாறே அவளுடன் வந்து சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.

“என்னடி இன்டர்வியூ எப்படி போச்சு!”

“நாசமா போச்சு” கடுப்புடன் அன்னம் உரைக்க,

“ஏன்டி செலக்ட் ஆகலையா?” எனக் கேட்டாள் புவனா.

“ம்ப்ச் செலக்ட் ஆனது தான் இங்க பிரச்சனையே” என்று நடந்ததை புவனாவிடம் அவள் விவரிக்க,

“அச்சச்சோ வேண்டாம்னு சொல்லிருக்கலாம்லடி! இந்த பிராஜக்ட் இல்லனா இன்னொன்னு” என்று புவனா கூறவும்,

“ஆமா நமக்கு அப்படியே பத்து பதினைந்து வருஷம் எக்ஸ்பிரீயன்ஸ் பாரு! நாம் வேணாம்னு சொன்னதும் ஹெச் ஆர் அப்படியே விட்டுடுவாங்க பாரு! அடுத்து வர பிராஜக்ட் எப்படி இருக்குமோ என்னமோ! தெரியாத பேய்க்கு தெரிஞ்ச பிசாசே பரவாயில்லைனு ஒத்துக்கிட்டேன்டி! அதுவுமில்லாம” என்று குரலை தாழ்த்தியவளாய்,

“என் மேனேஜர் செம்ம ஹேண்ட்சம்! கொஞ்சமே கொஞ்சம் நல்லவரா தெரியுறாரு! திட்டு வாங்குறது தான் வாங்க போறோம் அதையே இப்படி அழகான மேனேஜர்க்கிட்ட வாங்கிப்போம்னு தான் ஒத்துக்கிட்டேன்” என்று கண் சிமிட்டி அவள் கூறவும், “பேச்சை பாரு” என அவள் தலையில் குட்டியவாறு சிரித்தாள் புவனா.

இருவருமாய் மதிய உணவினை உண்டுவிட்டு வெளியே வர, அருகில் இருக்கும் அலுவலக தோட்டத்திலும் வீடு போன்ற அமைப்பிலும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருப்பதை கண்டார்கள்.

“ஹே ஏதோ ஷூட்டிங் போலடி!” என்றாள் அன்னம்.

“ஆமாடி ஒரு சீரியலோட ஷூட்டிங் முழுக்க இங்க தான் எடுக்குறாங்களாம்! எங்க டீம்ல பேசிக்கிட்டாங்க” என்றாள் புவனா.

“எந்த சீரியல்டி? சீரியல் பேரு சொல்லு! என் ஆச்சிக்கு எல்லா சீரியலும் அத்துப்படி” என்றாள் அன்னம்.

“ஏதோ படம் பேரு தான்டி! நம்ம ரஜினி படப்பேரு தான் ஏதோ சொன்னாங்க” என புவனா யோசித்துக் கொண்டிருக்கும் போதே, இருவருமாக நடந்து படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றனர்.

“ஹே ஞாபகம் வந்துடுச்சுடி! நல்லவனுக்கு நல்லவன்” என்றாள்.

“ஹோ இது அந்த ரஜினிப்படக் கதையவே தான் சீரியலா எடுக்குறாங்கனு என் ஆச்சி சொல்வாங்கடி! கெட்டவனா இருக்க ஹீரோ, ஹீரோயினை லவ் செஞ்ச பிறகு நல்லவனா மாறுவானாமா! ஏன்டி இந்த ஹீரோலாம் தானா திருந்த மாட்டாங்களா! நல்லா படிச்சு சொந்த கால்ல நிக்கிற ஹீரோயினை வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணி நாசம் செஞ்ச பிறகு இவங்க வாழ்க்கைல திருந்தி, முன்னேறுவாங்களாமா! இந்த மாதிரி ஆம்பளைங்களை திருத்துறதுக்கா பொண்ணுங்களை பெத்து போட்டுருக்காங்க. எனக்குலாம் ஆச்சி இந்த சீரியல் கதையை சொல்லும் போது அவ்ளோ கோபம் வரும்டி!” என்று அவளுள் இருக்கும் பெண்ணியவாதி விழித்துக் கொண்டு நீண்ட உரையாற்ற,

அவளின் பேச்சினை கேட்டு சுவாரஸ்யமான பார்வையை வீசியவனாய் கடந்து சென்றான் ஓர் ஆடவன்.

அவனை கண்டதும் அவன் அணிந்திருந்த ஆடையை வைத்து யாரென அறிந்துக் கொண்டவளாய், “புவி நான் இன்னிக்கு பஸ்ல வரும் போது இவர் என் பக்கத்துல தான்டி உட்கார்ந்திருந்தாரு! நான் நம்ம கம்பெனிக்கு புதுசா வேலைக்கு சேர்ந்திருக்குறவருனு நினைச்சேன். பார்த்தா சீரியல் ஆக்டர் போலயே! ஏதோ சின்ன ரோல்ல நடிக்கிற ஆக்டர்ரா இருப்பாரு போல” என்று புவனாவிடம் உரைத்திருந்தாள் அன்னம்.

“அடியேய் அவர் தான்டி இந்த சீரியல் ஹீரோ! சீரியல் ஆக்டர் சிவாவை தெரியாதா உனக்கு” எனக் கேட்டாள் புவனா.

“அப்படியா?” ஆச்சரியமாக கேட்டவளாய், “நான் முகத்தை சரியா பாக்கலைடி” என்றாள் அன்னம்.

சிவா தனது ஷூட்டிங்கிற்கான உடையை மாற்றி தயாராகி வந்து நிற்க, படப்பிடிப்பு தொடங்கியது.

“சரிடி நாம வேலையை பார்க்க போவோம்” என அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.

தனக்கு கிடைத்திருக்கும் பிராஜக்ட்டை பற்றி வாட்ஸ்சப்பில் இருக்கும் ஸ்டைலிஷ் தமிழச்சி குழுவில் குறுஞ்செய்தி அனுப்பினாள் அன்னம்.

அந்த குழுவில் அன்னம் மற்றும் மீனாட்சியுடன் சுந்தரேஸ்வரனின் தங்கையான கல்யாணியும், சுந்தரேஸ்வரனின் தம்பியான (சித்தப்பா மகன்) சுந்தரராஜனின் மனைவி மதுரநங்கையும் இருந்தனர்.

பெண்கள் நால்வருக்கும் அந்த குழு தான் இளைப்பாறல். அக்குழு முழு செயல்பாட்டில் இயங்குவதற்கான காரணம் அன்னம் மட்டுமே ஆவாள். அன்றாடம் அவர்களின் சமையல் முதல் வேலை வரை அனைத்தையும் குழுவிலேயே கேட்பாள். அதன் மூலம் தொடங்கப்படும் உரையாடல் நீண்ட வரலாறாய் நாள் முழுக்க சென்றுக் கொண்டிருக்கும். நால்வரும் ஆங்காங்கே வசித்திருந்தாலும் இந்த வாட்ஸ்அப் குழுவின் மூலம் நெருக்கமாக இணைந்திருந்தனர். அக்குழுவில் அன்னத்தை தவிர அனைவருமே மணமானவர்கள் என்பதால், ஏனைய மூவருமே இக்குழுவில் பேசும் விஷயங்களை தன்னவர்களிடமும் பகிர்ந்துக் கொள்வர். அன்றாட ஓட்டத்தில் இருந்து இளைப்பாறி தங்களது மனநிலையை பகிர்ந்துக் கொள்ளும் இடம் அது அவர்களுக்கு.

மீனாட்சி ஏற்கனவே ஐடியில் பணிபுரிந்து திருமணத்திற்கு பின் பணியை விட்டிருந்ததால் அவளுடைய அனுபவத்திற்கேற்றார் போல் அன்னத்திற்கு அறிவுரை வழங்கினாள்.

நங்கை இப்பொழுது ஒரு ஐடி நிறுவனத்தில் மேனேஜராய் பணிபுரிந்துக் கொண்டிருப்பதால் அதற்கேற்றவாறு அறிவுரை வழங்கினாள்‌.

கல்யாணி ஒரு நிறுவனத்தில் மனிதவள மேலாளப் பயிற்சியாளராய் (HR Trainer)

பணி செய்துக் கொண்டிருப்பதால் அதற்கேற்றவாறு அறிவுரை வழங்கினாள்‌.

ஆக மூவருமே அன்னத்திடம் கிடைத்த வாய்ப்பை விட வேண்டாம் என்றும், அதே நேரம் இதில் வேலை செய்துக் கொண்டே வேறு பிராஜக்ட்டை தேடிக்கொள்ளுமாறும் உரைத்தனர்.

மாலை ஆறு மணிக்கு மேல் கிளம்பிய அன்னமும் புவனாவும் கேண்டினில் தேநீர் அருந்தியவாறு அமர்ந்திருக்க, சிவா ஒரு பெண்ணை கையில் ஏந்தியபடி அவளிடம் சிரித்து பேசியவாறு உள்ளே வந்தவன் நாற்காலியில் அவளை அமர வைத்து விட்டு அவளுக்கான தேநீரை வாங்குவதற்கு கௌண்டரில் சென்று நின்றான். அங்கே ஓரிருவர் அவனிடம் இயல்பாய் பேச, இவனும் சிரித்த முகமாய் பேசினான்.

அனைவரின் பார்வையும் அவர்கள் இருவரின் மீதே இருந்தது.

“என்னடி இப்படி பப்ளிக்கா பொண்ணை தூக்கிட்டு வர்றாரு!” என்று புவனா அன்னத்தின் காதை கடிக்க,

“அந்த பொண்ணுக்கு கால்ல எதுவும் அடிப்பட்டிருக்குமோ என்னமோ?” என்றாள் அன்னம்.

“இவங்க இரண்டு பேரும் லவ் பண்றதா வதந்தி பரவிட்டு இருக்குடி! எங்க டீம்ல கூட பேசிக்கிட்டாங்க” என்றாள் புவனா.

“எடுத்ததும் யாரை பத்தியும் தப்பா பேசிட கூடாது புவி! நடிகரா இருந்தா அவங்க என்ன பப்ளிக் பிராப்பர்ட்டியா? அது அவங்களோட பர்சனல்” என்று அன்னம் கூறவும்,

“ஏன்டி லவ் பண்றாங்கனு பேசிக்கிறது தப்பா!” என்று புவனா கேட்க,

“ஆமா நாளைக்கு அவரை கட்டிக்கப்போற பொண்ணு இதை வதந்தியா பார்க்காம உண்மையாவே அவர் அந்த பொண்ணை லவ் செஞ்சிருக்காருனு நினைச்சா அவங்க குடும்பத்துக்குள்ள எவ்ளோ பிரச்சனை வரும்” என்றாள் அன்னம்.

“நீ நிஜமாவே இவ்வளோ நல்லவளாடி?” என்று வினோதமாக அன்னத்தை பார்த்தவாறே புவனா கேட்க,

“ஏன்டி அப்படி கேட்குற” என்றாள் அன்னம்.

“பின்ன சினி ஃபீல்ட்னாலே நாலும் இருக்கும்னு அவரை கட்டிக்கிற பொண்ணுக்கு தெரியாதா? தெரிஞ்சே காசுக்காகவும் பேருக்காகவும் கல்யாணம் செஞ்சிக்கிறவங்க தானே அங்கே நிறைய பேர் இருக்காங்க” என்று புவனா பேசிக் கொண்டே போக,

“எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்க புவி! ஜென்யூன் (genuine) பெர்சன் கூட எல்லா ஃபீல்ட்லயும் இருப்பாங்க. நாம யாரை ரொம்ப உற்று நோக்குறோமோ அதை பொறுத்து தான் நம்ம எண்ணங்களும் சுழலும். நாம நல்லவங்களை பத்தி மட்டும் பேசுவோம் யோசிப்போம். நம்ம காதுக்கு வர வதந்தியைலாம் ஒதுக்கி வச்சிட்டு எல்லாரும் நல்லவங்களா தான் இருப்பாங்கன்னு நினைச்சிட்டு போய்டுவோம்” என்றாள் அன்னம்.

கையில் தேநீரை எடுத்துச்சென்ற சிவாவின் காதினில் அன்னத்தின் இந்த பேச்சுக்கள் விழுந்து அவளின் மீதான மரியாதையை அவனுக்குள் உருவாக்கி இருந்தது.

“சரி சரி நாம பஸ்ஸை விட்டுட போறோம். கிளம்புவோம் வா” என்று புவனாவை அங்கிருந்து கிளப்பினாள் அன்னம்.

— தொடரும்