அழகிய அன்னமே 29 & 30

நடுநிசி இரவில் ஆள் அரவமற்ற அந்த சாலையில் மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருந்தாள் அன்னம்.

அங்குமிங்குமாக பார்வை செலுத்தி பாதையை அவதானித்தவளாய் சென்றவளை பின் தொடர்ந்து கொண்டிருந்தான் மோகன்.

கைக்கு எட்டும் தூரத்திற்கு வந்தவன் அவளின் கையை பற்றி இழுத்தான். சாலையிலேயே சுருண்டு விழுந்தாள் அவள்.

“என்னை விட பணக்காரனா ஒருத்தன் கிடைச்சதும் என்னை விட்டு போய்ட்டு, போலீஸ் வச்சி முட்டிக்கு முட்டி தட்டுவேன்னு மிரட்ட வேற செய்றியா நீ” என்று அவளின் கன்னத்தில் அறைய கை ஓங்கினான். அதீத பயத்தில் மயங்கி சரிந்தாள் அவள்.

கண் விழித்து அவள் பார்க்கும் போது எங்கோ ஓர் இருட்டறையில் இருந்தாள். மேற்கூரை வழியாக ஆங்காங்கே சிறு வெளிச்சம் தென்பட்டது‌.

நாற்காலியில் அமர வைத்து அவளின் கைகள் கட்டப்பட்டிருந்தன.

கதவை திறந்து உள்ளே வந்த மோகனின் கையில் தாலி இருந்தது. மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கிழங்கை வைத்து சுற்றிய தாலி அது.

“நீ முழிச்சதும் கட்டனும்னு தான் காத்துட்டு இருந்தேன். இல்லனா எவன் கட்டுன தாலினு உனக்கு தெரியாம போய்டும் பாரு” என்றவனாய் அவளை நோக்கி முன் நகர்ந்தான்.

“நோ! கொன்னுடுவேன்டா உன்னை” என கத்தினாள் அவள்.

அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு முடித்த மறுகணம் அவளின் கையை அவன் அவிழ்த்து விட, அந்த தாலியை கழட்டி அவன் மீதே வீசி எறிந்தாள்.

“ஒரு பொண்ணோட விருப்பமில்லாம அனுமதியில்லாமல் கட்டுற எந்த தாலிக்கும் வேல்யூவும் (மதிப்பு) இல்ல வேலிடிட்டியும் (செல்லுபடி) இல்லனும் போது தாலியே வேலினு உன் கூட வந்துடுவேன்னு நினைச்சியோ! நான் ஒன்னும் பிராப்பர்டி இல்ல தாலி கட்டி ரிஜிஸ்டர் செஞ்சி கூட்டிட்டு போறதுக்கு. எல்லா பொண்ணுங்களும் அன்புக்கும் காதலுக்கும் கட்டுப்பட்டு தான் கல்யாணம் முடிஞ்சதும் அந்த கணவனோட வீட்டுக்கு போறாங்க. அந்த தாலிக்கு கட்டுப்பட்டு இல்ல” வீர வசனம் பேசியவாறு அவள் இருக்க,

அவள் தாலியை கழட்டிய ஆத்திரத்தில் மோகன் அவளை அறைய முனைய, அந்நேரம் அங்கு வந்த சிவா அவனின் கைகளை பிடித்து தடுத்திருந்தான்.

அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தவனாக சரமாரியாக அவனை அடித்து போட்டவன், தன்னுடன் வந்த காவலர்களிடம் அவனை ஒப்படைத்தான்.

“சிவா” என அவனை அணைத்துக் கொண்டாள் அன்னம்.

“சிவா எனக்கு அவன் தாலியை கட்டிட்டான்” என்று அவள் அழுதவாறு சொல்ல,

“அதான் கழட்டி எறிஞ்சிட்டியே! உன் விருப்பமில்லாம கண்டவன் கட்டுறது தாலியாகுமா? என் அன்னத்துக்கு நான் கட்டுறது தான் தாலி” என்று அவளின் நெற்றியில் அவன் முட்ட, புன்னகையுடன் அணைத்துக் கொண்டாள் அவனை‌.

விருட்டென தனது படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான் சிவா.

உடல் முழுக்க வியர்த்து வழிய அதிர்ந்தவாறு விழித்தவனுக்கு நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டிருந்தது.

“ச்சே கனவா” ஆசுவாச மூச்சு அவனிடம்.

“இந்த அயலி வெப் சீரிஸை நைட் பார்த்துட்டு தூங்கினது தப்பா போச்சு” தனக்குள்ளேயே கூறிக் கொண்டவனாய் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து பருகினான்.

‘இந்த மாதிரி நிஜமாவே அவளுக்கு அவன் தாலி கட்டியிருந்தாலும் நீ போய் காப்பாத்திட்டு வந்து கல்யாணம் செஞ்சிப்பியா?’ என்றவன் மனசாட்சி கேள்வி கேட்க,

“ஏன் செஞ்சிக்க மாட்டேன். அவளுக்காக அவ எனக்கு வேணும்னு சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டு தானே இந்த மாலையே போட்டேன். அப்புறம் எப்படி அவளை விட்டு கொடுப்பேன்” அவனின் மனதோடு கூறிக் கொண்டவனாய்,

“முருகா எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியா எங்க கல்யாணம் நடக்கனும்” கைகளை தூக்கி கும்பிட்டவாறு வேண்டியவனுக்கு, அன்னத்திடம் உடனே பேச வேண்டும் போல் இருந்தது.

நேரத்தை பார்த்தான். இரவு இரண்டு மணியாகி இருந்தது.

கைபேசியை எடுத்து வாட்ஸ்அப்பில் அவளின் லாஸ்ட் சீன் நேரத்தை பார்த்தான். பத்து மணி என்றிருந்தது.

“ஹாய் அன்னம்! ஹௌ ஆர் யூ (எப்படி இருக்க?) இஸ் எவ்ரிதிங் ஃபைன் தேர் (அங்கே எல்லாமும் ஓகே தானே)” என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு படுத்து விட்டான்.

விடியற்காலை நான்கு மணியளவில் விழித்த அன்னம், கைபேசியை எடுத்து பார்க்க, வாட்ஸ்அப்பில் சிவாவிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததற்கான நோட்டிபிகேஷன் காண்பித்தது‌.

கண்கள் தானாக கைபேசியில் மேலே இருந்த தேதியை பார்க்க, தானாக மனதினுள் எழுந்த எதிர்பார்ப்புடன் அச்செய்தியை திறந்து பார்த்தாள்.

அச்செய்தியை பார்த்தவளுக்கு எதிர்பார்ப்பு சற்றே வடிய,

‘என்ன நடுராத்திரில நல்லாயிருக்கியானு மெசேஜ் அனுப்பிருக்காரு’ என்றெண்ணியவளாய், “குட் மார்னிங் சிவா” என்றவாறு அதையே கேட்டு அனுப்பி வைத்தாள்.

உடனே சிவா பார்த்ததற்கான நீல நிற குறியீடு வரவும், ‘நைட் முழுக்க தூங்கவே இல்லயா இவரு’ என இவள் நினைத்த சமயம், வாய்ஸ் மெசேஜ் அனுப்பினான் அவன்.

‘இவர் என்ன நேரங்காலம் தெரியாம வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வச்சிருக்காரு’ என்றெண்ணியவாறே ஹெட் செட்டை கைகளை துழாவியவாறு தேடியவள் எடுத்து காதில் மாட்டினாள்.

“நீ நல்லா இருக்க தானே! உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே” விடியற்காலை பொழுதின் ஆழ்ந்த அமைதியில் காதினுள் பரிதவிப்பாய் கேட்ட அவனின் குரல் அவளை என்னமோ செய்தது.

“ஏன்ப்பா இவ்வளோ தவிப்பா கேட்டிருக்கீங்க? என்னாச்சு? நான் நல்லா தான் இருக்கேன்” என்று அவனை ஆற்றுப்படுத்தும் ஆவலில் தோன்றியதை பேசி அனுப்பினாள் இவள்.

அவளின் ஆறுதலான அக்குரல் அவன் உயிர் வரை தீண்டி அமைதிப்படுத்த, “ஒன்னுமில்லைமா! நைட் ஒரு கெட்ட கனவு கண்டேன். உடனே நீ எப்படி இருக்கனு உன்னை நேர்ல பார்க்கனும் போல இருந்துச்சு. அதான் மெசேஜ் செஞ்சேன். இப்ப தான் நிம்மதியா இருக்கு” என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பினான்.

“சரி இப்ப கொஞ்ச நேரம் நிம்மதியா தூங்குங்க! இன்னிக்கு ஷூட்டிங் இருக்கா?” என்றவள் குறுஞ்செய்தி அனுப்ப,

“இல்ல இதுக்கு மேல தூக்கம் வராது. ஷூட்டிங் இல்லை இன்னிக்கு. நான் அம்மா தம்பி கூட அப்படியே எங்க ஊருக்கு வந்துட்டேன்” என்றவனும் தட்டச்சு செய்து அனுப்ப,

“சரி ஓகே! அப்புறம் பேசலாம்” என்றவள் அனுப்பவும்,

அடுத்த நொடி, “இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே” என்று கண்களை சுருக்கி கெஞ்சுவது போல் ஒரு பொம்மையை அனுப்பியிருந்தான் அவன்.

அதனை பார்த்து சிரித்தவளாய், “யாரோ இரண்டு மாசத்துக்கு பேச மாட்டேன்னு சொல்லிட்டு போனாங்க” என்றாள்.

“அப்படியா! யாரது? எனக்கே பார்க்கனும் போல இருக்கு” என்று அனுப்பிவிட்டு சிரித்திருந்தான் சிவா.

“ஹ்ம்ம் கண்ணாடி முன்னாடி போய் நின்னு பாருங்க. மாலை போட்டு பொய் பேசுறீங்க. சாமி கண்ணை குத்திடும்” என்று அனுப்பினாள்.

“இந்த பொண்ணை எனக்கு கட்டி வைங்க முருகானு வேண்டிக்கிட்டு தான் மாலையே போட்டேன். அந்த பொண்ணுக்கிட்டயே பேச கூடாதுனு எப்படி முருகன் சொல்லுவாரு” பேசும் ஆர்வத்தில் படபடவென தட்டச்சு செய்து அனுப்பி விட்ட பிறகே, தான் உளறி விட்டது புரிந்தது அவனுக்கு.

அந்த குறுஞ்செய்தியை அவன் நீக்கிவிட பார்க்க, இவன் அனுப்பிய மறுநொடி அதனை பார்த்திருந்தாள் அவள்.

படுத்திருந்தவள் அதை வாசித்து விட்டு பட்டென எழுந்து அமர்ந்து விட்டாள்.

‘சிவா என்னை லவ் பண்றாங்களா?’ சந்தேகம் எழுந்தது அவளுக்கு.

அதனை உறுதி செய்ய முற்பட்டவளாய், “சிவா இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?” எனக் கேட்டாள்‌.

அவளின் கேள்வியில் தேதியை பார்த்தவனுக்கு மூளைக்குள் எந்த அலாரமும் அடிக்கவில்லை.

‘எந்த விசேஷ நாளும் இல்லையே! ஒரு வேளை அவளோட பிறந்தநாளோ’ என்று யோசித்தவாறு இன்ஸ்டாவை பார்க்கும் பொழுது தான் அன்றைய நாளின் சிறப்பினை உணர்ந்தவனாய், “அடடா இதை பார்க்கவேயில்லையே” தனக்குள்ளேயே கூறிக் கொண்டான்.

“சிவா யாரையும் லவ் செஞ்சிருக்கீங்களா?” அங்கிருந்து பதில் வராமல் போக நேரடியாகவே இதை கேட்டிருந்தாள்.

இக்கேள்வி தன்னை நோக்கி திருப்பப்படும் போது அது தன்னை பதம் பார்க்குமென தெரிந்தாலும் பேசி விடலாம் என்ற துணிச்சலில் அவனிடம் கேட்டாள் அவள்.

தனது காதலை கண்டு கொண்டு ஆர்வமாக கேட்டவளை எண்ணி சிரித்துக் கொண்டான் அவன்.

அதே சமயம் நேற்று தன்னுடன் நிச்சயம் நடக்காமல் இருந்திருந்தால் இன்றைய நாளை மோகனுடன் கொண்டாடியிருப்பாளோ என்ற எண்ணம் எழுவதை தடுக்காமல் இருக்க முடியவில்லை.

அவனை பற்றி அறிந்த நாளில் இருந்து அவள் அவனை விட்டு ஒதுங்கி இருப்பதாக தானே அவனிடம் தெரிவித்தாள். பின் எவ்வாறு இன்று அவனுடன் சென்றிருப்பாள்.

அவளிடம் இதை பற்றி முழுமையாக அறிந்துக் கொண்ட பிறகே தனது காதலை உரைக்க வேண்டுமென எண்ணியவனாய், “நீ யாரையும் காதலிச்சிருக்கியா அன்னம்” எனக் கேட்டான்.

மறுநிமிடம் அவளிடம் இருந்து அழைப்பு வந்து விட்டது அவனுக்கு.

ஒலிவாங்கியை காதினுள் பொருத்திக் கொண்டு படுத்தவனாய் அழைப்பை ஏற்றான்.

“நீங்க இந்த கேள்வி கேட்க தான் காத்துட்டு இருந்தேன் சிவா. உங்களை கல்யாணம் செஞ்சிக்கிறதுக்கு முன்னாடி என்னை பத்தி எல்லாத்தையும் நான் உங்ககிட்ட சொல்லனும். அதுக்கு பிறகு உங்களுக்கு ஓகேனா மட்டும் இந்த கல்யாணம் நடக்கட்டும்” என்று கூறியவளின் குரல் தழுதழுத்திருந்தது.

“சொல்லு அன்னம். ஐம் ரெடி டூ ஹியர் (நான் கேட்க தயாரா இருக்கேன்)” என்றான்.

“அவனை நல்ல ஃப்ரண்ட்டா தான் நினைச்சி வச்சிருந்தேன்” என்றவள் கூறும் பொழுதே கண்களில் இருந்து கண்ணீர் பெருகி வழிந்தது‌.

மோகன் அவளிடம் நல்ல நண்பனாக பழகியது முதல் காதலை முன் மொழிந்தது, சில நாட்கள் கழித்து இவள் அதனை ஏற்றது பின் அவனின் செயல்களை கண்டு அஞ்சியது‌. அவனை விட்டு விலகியது என அனைத்தையும் கூறி முடித்தாள் அன்னம்.

அவளின் விசும்பல் ஒலியும் மூக்கை உறிஞ்சும் சத்தமும் மட்டுமே அவனின் செவியை தீண்டிக் கொண்டிருந்தது.

அமைதியாக அவள் கூறியவற்றை கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு மோகனை கூறு போடும் ஆத்திரம் வந்தது.

“முருகா” என்று கண்களை மூடி சத்தமாகவே கூறி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவனாய்,

“வெள்ளப்புறா” என்றான். அத்தனை மென்மை அவன் குரலில்.

“ஹ்ம்ம்” என்றாள் அவள்.

“பக்கத்துல தண்ணீர் இருந்தா எடுத்து குடிமா” என்றான்.

எடுத்து அவள் குடித்து முடித்ததும்,

“கண்ணை தொடச்சிட்டியா?” எனக் கேட்டான்.

“ஹ்ம்ம்” என துடைத்தாள்.

“அவனை காதலிக்கிறனு சொல்லி பேசி அப்புறம் அவனை பத்தி தெரிஞ்சி சண்டை போட்டு எல்லாமே ஒன்றரை மாசத்துக்குள்ள முடிஞ்சிருச்சுல!” எனக் கேட்டான்.

“ஆமா” என்றாள் அவள்.

“ஹ்ம்ம் பிரேக் அப் வலிலருந்து வெளில வரதுக்குள்ள நான் வேற பொண்ணு பார்க்க வந்துட்டேன்” என்றவாறு அவன் அமைதிக் காக்க,

“இப்ப என்ன நினைக்கிறீங்க என்னை பத்தி? முந்தா நாள் வரை ஒருத்தனை லவ் பண்ணி கழட்டி விட்டுட்டு மறுநாள் வந்து உங்களை பிடிச்சிருக்குனு சொல்லிருக்கேனேனு தோணுதா?” எனக் கேட்டாள்.

“உன்னை பார்க்கும் போதெல்லாம் இப்ப தான் வாழ்க்கைகுள்ள அடி எடுத்து வைக்கிற சின்ன பொண்ணு ஃபீல் தான் எனக்கு வரும். உன்னை கைடு செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்குனு தோணும். இந்த விஷயத்தை சொல்லாம அப்பா அம்மாக்காக கல்யாணம் செஞ்சிக்கிறேன்னு இல்லாம எனக்கு உண்மையா இருக்கனும்னு நினைச்சு நீ சொன்னதே எனக்கு ஹேப்பிமா! அப்புறம் எப்படி நான் உன்னை தப்பா யோசிப்பேன். அப்படி தப்பா யோசிக்கிறதுக்கு நான் ஒன்னும் உன்னை நேத்து முதல் தடவையாக பார்க்கலையே! உன்னை தான் எனக்கு முன்னாடியே தெரியுமே” என்றான்.

அவன் தன்னை புரிந்துக் கொண்ட ஆசுவாசத்தில், “தேங்க்யூ சோ மச் சிவா” என்றாள்.

மனதிலிருந்த பெரும் பாரம் இறங்கிய உணர்வு அவளுக்கு.

“இனி இந்த வெள்ளப்புறா சிவாவோட பொண்டாட்டி! எதுக்கும் கலங்க கூடாது சரியா! எது நடந்தாலும் என்கிட்ட சொல்லு. உனக்கு நான் இருக்கேன். புருஷனா ஆயுள் முழுக்க உனக்காக நான் இருப்பேன் சரியா!” என்றவன் சொன்னதும்,

“சரி” என்றாள் அவள்.

அவளின் சரியை கேட்டவனுக்கு கன்னத்தை கிள்ளி முத்தம் வைக்கும் ஆவல் எழுந்திட,”முருகா, இது என்ன சோதனை” என்று சத்தமாகவே முனகிக் கொண்டான்.

“என்ன சோதனை” என்று புரியாமல் அவள் கேட்க,

“ஹ்ம்ம் அது எனக்கு நானே வச்சிக்கிட்ட சோதனை” என்றவன் கூறியதும் வாய் விட்டு சிரித்தவள்,

“ஹேப்பி வேலன்டைன்ஸ் டே” என்றாள்.

“லவ் யூ வெள்ளப்புறா” என்றான் அவன்‌.

கூறும் பொழுதே விடலைப்பருவ ஆண்மகன் போல் உள்ளம் சிலிர்த்தடங்கியது அவனுக்கு‌.

இயல்பாக காதலை மொழிந்திருந்தான் அவளிடம்.

“முருகன் கண்ணை குத்திட போறாரு” என்று சிரித்தாள் அவள்.

“முருகனே வள்ளியை காதலிச்சி தான் கட்டிக்கிட்டாராம்” என்றான் அவன்.

மீண்டும் சிரித்தாள் அவள்.

அவளின் சிரிப்பை ரசித்தவனாய், “எப்பவும் நீ இப்படியே ஹேப்பியா இருக்கனும்டா” என்றவன்,

“இப்ப நான் குளிச்சிட்டு அவருக்கு பூஜை செய்யலைனா நிஜமாவே கண்ணை குத்திடுவாரு” என்று இணைப்பை துண்டித்தவன் புன்னகையுடன் குளிக்க சென்றான்.

******

அன்று மாலை அன்னத்திற்கென சிவா வெளிநாட்டில் வாங்கியிருந்த வெள்ளி பிரேஸ்லெட்டை காதலர் தின பரிசாக அவளின் வீட்டு முகவரிக்கு மதுரையிலிருக்கும் தனது நண்பன் மூலமாக அனுப்பியிருந்தான் சிவா.

அதனை வீட்டின் முகப்பறையில் வைத்தே மொத்த குடும்பமும் பிரித்து பார்க்க, அனைவருக்குமே மட்டற்ற மகிழ்ச்சி.

கையில் பிரேஸ்லெட்டை அணிந்தவாறு புகைப்படம் எடுத்து சிவாவிற்கு அனுப்பிய அன்னம், “ரொம்ப அழகா இருக்குங்க! தேங்க் யூ” என்று குறுஞ்செய்தி அனுப்பினாள்.

“உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டு அவன் அனுப்ப,

“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.


அந்நேரம், “Love is in the air? Wrong.

Nitrogen, Oxygen and Carbon Dioxide are in the air” என்றொரு குறுஞ்செய்தியை குழுவிற்குள் அனுப்பிய கல்யாணி,

“ஏங்க அண்ணீஸ்களா அங்க யாருக்காவது லவ்வு ஏர்ல பாஞ்சிக்கிட்டு இருக்கா?” என்று சிரித்த ஸ்மைலிக்களுடன் கேட்டிருந்தாள் கல்யாணி.

“உன்ற ராஜாண்ணன் ஏதோ இடத்த பார்க்க போறேன்னு காலைல போனவரு ஒரு மெசேஜ் இல்ல ஃபோன் கால் இல்ல! இதுல லவ்வு காத்துல உலாவுதாம். போமா அங்கிட்டு” என்று அனுப்பியிருந்தாள் நங்கை.

“ஹப்பாடா என் புருஷன் மட்டும் தான் மறந்துட்டு திரியுறாருனு நினைச்சேன். எனக்கு கம்பெனிக்கு நீங்க இருக்கீங்கனு சந்தோஷமா இருக்கு அண்ணி” என்று சிரிக்கும் ஸ்மைலிக்களை அனுப்பிய கல்யாணி,

“ராஜாண்ணனே மறந்துட்டு போய்ட்டாரு எங்கிருந்து ஈஸ்வரண்ணன் ஞாபகம் வச்சிருப்பாரு” என்று அனுப்பினாள்.

“இங்க தான் நீ தப்பா கணக்கு போடுறடா கல்யாணி! உன் ராஜாண்ணே பார்க்க தான் ரொமேன்ட்டிக் பர்சன். ஒரு தேதியை ஞாபகம் வச்சிக்க மாட்டான்” என்று நங்கை குறுஞ்செய்தி அனுப்ப,

அந்நேரம் இந்த உரையாடல்களை பார்த்த மீனாட்சி, “உங்க ஈஸ்வரண்ணா இதுலலாம் கில்லிப்பா! அவரோட பிசினஸ்காக இந்த மாதிரி முக்கியமான நாட்கள்லாம் கண்டிப்பாக ஞாபகம் வச்சிருப்பாரு. காலைலயே மல்லிப்பூ கொடுத்து வாழ்த்திட்டு போய்ட்டாரு உங்க அண்ணா” என்று அனுப்பினாள்.

“இருந்தாலும் என் கொழுந்தனார் இப்படி உங்களை ஏமாத்துவாருனு நினைக்கலை நங்கை” என்று விளையாட்டாய் மீனாட்சி அனுப்ப,

“உங்க கொழுந்தனார் வரட்டும் நார் நாரா கிழிக்கலாம்னு தான் காத்திட்டு இருக்கேன்” என்று கோப ஸ்மைலிக்களை அனுப்பினாள் நங்கை.

“பாவம் எங்கண்ணன் பார்த்து பதமா செய்யுங்க அண்ணி” என்று கல்யாணி அனுப்பவும் அனைவரும் சிரிக்கும் ஸ்மைலிக்களை அனுப்பினர்.

“பார்றா கல்யாணம் முடிஞ்சதும் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி தான் இருக்காங்க” என்று அனுப்பிய கல்யாணி,

“ஆமா இந்த அன்னம் பொண்ணுக்கு நேத்து தானே நிச்சயம் ஆச்சு. இன்னிக்கு கண்டிப்பா மாப்பிள்ளை சார் வாழ்த்து சொல்லிருக்கனுமே! எங்க அந்த பொண்ணு” என்று குறுஞ்செய்தி அனுப்பியவாறு கேட்க,

“யாருப்பா அது என்னை இங்க தேடினது. ஒரு புத்தம் புது ஜோடியை தனியா பேச விடுறீங்களா? அதுக்குள்ள கிரூப்ல இழுத்துட்டு வந்துட்டீங்க” என்று அனுப்பினாள் அன்னம்.

“அடியேய் இதெல்லாம் டூ மச் சொல்லிப்புட்டேன்” என்று கல்யாணி கடுப்பான ஸ்மைலி அனுப்பவும், அனைவரும் சிரிப்பு ஸ்மைலிக்களை அனுப்ப,

சிவா தனக்கு அனுப்பிய பிரேஸ்லெட் புகைப்படத்தை அனுப்பியவள்,

“என்ற ஆளு எனக்கு அனுப்பின வேலன்டைன் டே கிப்ட்! நாங்களும் கமிட் ஆகிட்டோம். நாங்களும் கமிட் ஆகிட்டோம்” என்று அனுப்பினாள்.

“பார்ரா இந்த 2k கிட்டு பண்ற அலப்பறையை” என்று கல்யாணி பதிலளிக்க, அனைவரும் சிரித்திருந்தனர்.

மேலும் சில நிமிடங்கள் பேசி விட்டு அவரவர் வேலை பார்க்க சென்று விட்டனர்.

*******

அன்றிரவு மீனாட்சி சுந்தரேஸ்வரர் யூ டியூப் நேரலையில் மீனாட்சியும் ஈஸ்வரனும் அவர்களின் மகள் சிவரஞ்சனியுடன் காதலர் தினத்தினை கேக் வெட்டி கொண்டாடி பார்வையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தவாறு நிகழ்ச்சியை தொடங்கினர். அன்றைய நாளிற்கு புதிதாக வெளியிடப்படும் பொருட்களை பற்றிய அறிமுகத்தை மீனாட்சியும் ஈஸ்வரனும் பேசிக் கொண்டிருக்க, ரஞ்சுக்குட்டி இங்குமாங்குமாக ஓடியாடி கொண்டும், பேசும் பெற்றோர்களிடம் தாவிக் கொண்டும் அன்றைய நாளின் காணொளியை உயிர்ப்பாக்கி இருந்தாள்.

நெடு நாட்களுக்கு பிறகு மீனாட்சி சுந்தரேஸ்வரனின் காணொளியை பார்த்த அன்னம், அதன் இணைப்பை சிவாவிற்கு அனுப்பி பார்க்க சொன்னாள்.

இவர்களின் நேரலை நிறைவுப்பெற்று அனைத்தும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த சமயம் வந்தான் ராஜன்.

“என்ன சுந்தர்? இந்த நேரத்துல வந்திருக்கீங்க” என்று மீனாட்சி கேட்க,

“ஒரு இடம் பார்க்க போயிருந்தேன். அதைப் பத்தி அண்ணாக்கிட்ட பேச தான் வந்தேன். உங்கப்பா உங்க வீட்டுல இருக்காங்களா அன்னம் வீட்டுல இருக்காங்களா?” எனக் கேட்டான்.

“பாப்பா கூட இருக்கனும்னு நேத்து நிச்சயம் முடிஞ்சதும் எங்க கூட வந்துட்டாங்க! எதுவும் அப்பாகிட்ட பேசனுமா?” என்றவள் கேட்க,

“இல்ல நான் போன் செஞ்சி பேசிக்கிறேன்” என்றான் ராஜன்.

அதன் பிறகு அலுவலக அறையில் அமர்ந்து சிறிது நேரம் ராஜனும் ஈஸ்வரனும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

தான் புதிதாக வாங்குவதற்காக மதுரையில் பார்த்திருந்த இடத்தை பற்றி ஈஸ்வரனிடம் விசாரித்த ராஜன், மோகனின் விஷயத்தை தெரிவித்தான். மீனாட்சியிடம் இவற்றை கூற வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டான்.

“உங்களுக்கு தான் இங்க போலீஸ் ஃப்ரண்ட்லாம் தெரியும்லண்ணே! யாரையாவது கூட்டிட்டு போய் மிரட்டிட்டு வரலாம்னு நினைச்சேன்” என்று ராஜன் கூற,

“இல்லடா அது சரி வராது. நாமளே அவனை டிரிகர் செய்ற மாதிரி ஆகிடும்” என்ற ஈஸ்வரன் சிறிது நேரம் யோசித்தவனாய்,

“அந்த பையனை ஃபாலோ பண்ண ஒரு ஆளு ஏற்பாடு பண்ணு ராஜா. கல்யாணம் வரைக்கும் ஃபாலோ செய்யட்டும். நமக்கு ஆப்போசிட்டா அவன் ஏதாவது செய்ற மாதிரி இருந்தா அவன் மேல கேஸ் கொடுத்திடலாம்” என்றான்.

“சரிங்கண்ணா” என்றவாறு மேலும் சில விஷயங்களை பேசி விட்டு வெளியே வந்தவன்,

மீனாட்சியின் தோளில் உறங்கி கொண்டிருந்த சின்னவளை பார்த்து, “பாப்பா தூங்கிட்டாளா?” எனக் கேட்டவாறு அவளின் தலையை தடவினான்.

“சரிங்க அண்ணி நான் வரேன்” அவன் கிளம்ப எத்தனித்த நேரம்,

“சுந்தர்” என்று அழைத்தவள் அவன் கையில் மல்லிகைப்பூ இருந்த ஒரு கவரை அளித்தவள்,

“நங்கைகிட்ட கொடுத்திடுங்க. உங்களை பார்த்ததும் கடைக்கு எதிர்க்க இருக்க பூக்கடைல வாங்கினேன்” என்றாள்.

சரியென தலையசைத்தவனாய் அவன் நகர, “நீங்க வாங்கினதா சொல்லுங்க. நான் கொடுத்தேன்னு சொல்லாதீங்க. உங்க அண்ணியா உங்க பொண்டாட்டிக்கிட்ட இருந்து உங்களை இவ்வளோ தான் என்னால காப்பாத்த முடியும்” என்று மென்னகை புரிந்தாள்.

அவன் புரிந்தும் புரியாமலும் தலையசைத்து சிரித்தவனாய் மகிழுந்திற்குள் ஏறி அமர்ந்தான்.

‘அவகிட்ட இருந்து இவங்க என்னை எதுக்கு காப்பாத்த போறாங்க’ என்று யோசித்தவனாய் தனது கைபேசியை எடுத்து இணையத்தை இணைக்க, நங்கையிடம் இருந்து காதலர் தின வாழ்த்து செய்தி வந்திருந்தது.


அய்யய்யோ மறந்தே போய்ட்டேனே! இதுக்கு தான் காப்பாத்துறேன்னு பூவை கொடுத்தாங்களா அண்ணி’ என்று எண்ணியவனாய் வீட்டிற்கு சென்றான்.

வீட்டின் கதவை திறந்த மனைவி உர்ரென அறைக்குள்ளே செல்வதை கண்டவன், தாயும் தந்தையும் அவர்களின் அறையில் உறங்கி கொண்டிருப்பதை உறுதி செய்து கொண்டவனாய் தனது அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டான்.

படுக்கை மெத்தையில் மகள் உறங்கி கொண்டிருக்க, கைபேசியை பார்த்தவாறு சோஃபாவில் அமர்ந்திருந்தாள் நங்கை.

“சாப்பிட்டியா சுந்தர்? சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்றவள் கேட்க,

“ஆமா ரொம்ப பசிடா! எடுத்து வை” என்றவன் குளித்து உடை மாற்றி உணவறைக்கு சென்றான். அங்கிருந்த சமையல் மேடையில் அவன் அமர, தோசையை சுட ஆரம்பித்தாள் அவள்.

“ஹேப்பி வேலன்டைன்ஸ் டே பப்ளிமாஸ்” என்று அவளின் கன்னத்தை அவன் கிள்ள, தட்டி விட்டவளாய்,

“ஓஹோ பொண்டாட்டினு ஒருத்தி இருக்கிறது கூட உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று முறைத்தாள்.

“என் புஜ்ஜூக்குட்டில! என் பப்ளிமாஸ்ல! சாரிடா! என்னை பத்தி தான் உனக்கு தெரியும்ல” என்றவன் அவளை கொஞ்ச,

தட்டில் தோசையை போட்டு அவனிடம் கொடுத்தாள்.

கொஞ்சமாய் தோசையை பிட்டு அவளின் வாயினருகே அவன் கொண்டு செல்ல, அவனை முறைத்தாளும் வாயை திறந்து வாங்கி கொண்டாள்.

அவளுக்கு ஊட்டியவாறே அவன் உண்ண, “இப்படி தான்டா நீ ஊட்டி ஊட்டி நான் பெருத்து போய் இருக்கேன்” என்றவள் குறைப்பட்டுக் கொள்ள,

“நீ ஒன்னும் அவ்ளோ குண்டு இல்ல! அந்த காலத்து ஹீரோயின் மாதிரி பூசினாப்ல இருக்க! ஹெல்தியா இருந்தா போதும். என் பப்ளிமாஸ் இப்படி இருந்தா தான் எனக்கு பிடிக்கும்” என்ற அவளை தன்னருகே இழுத்தவன் கன்னத்தில் இதழ் பதித்தான்.

அன்று அவன் சென்ற வேலை பற்றிய விஷயங்களை அவளிடம் பகிர்ந்தவாறே சமையலறையை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டான். இருவருமாக சமையலறையில் இருந்து பேசியவாறே வெளியே வந்த நேரம்,

“ஹே மறந்துட்டேன் பாரு! இந்தா பூ” என்று அவள் கையில் அவனளிக்க,

“நீ வாங்குனியா?” ஆச்சரியமாக அவள் கேட்க, மீனாட்சி கொடுத்ததையும் கூறியதையும் அவன் கூற, “மீனு சோ சுவீட்ல” என்றவளாய், “இப்ப எதுக்கு இவ்ளோ பூ! காலைல வச்சிக்கலாம்” என்று குளிர்சாதனப் பெட்டியில் அதனை வைத்தாள்.

இவர்கள் படுக்கையறைக்குள் செல்லும் போதே அவர்களின் மகள் சிணுங்கியவாறு முழிக்க, “இதோ அப்பா வந்துட்டேன்டா தங்கம்” என்றவாறு அவளை மார்ப்போடு சாய்த்து கொண்டு அவன் படுத்துக் கொள்ள, அவர்களை அணைத்தவாறு படுத்துக் கொண்டாள் இவள்.

— தொடரும்