அழகிய அன்னமே 28

அன்னத்தின் அறையினுள் ஆழ்ந்த சிந்தனையும் குழப்பமுமாய் நாற்காலியில் அமர்ந்திருந்தான் சிவா.

அவனெதிரே அமைதியாக நின்றிருந்தாள் அன்னம்.

ஜன்னலின் வழியாக காற்றின் மூலம் நுழைந்த வாசத்தை சுவாசித்தவனாக பெருமூச்செறிந்தான் சிவா.

அன்னத்தை நிமிர்ந்து பார்த்தான். இது வரை அவளை பார்த்த நாட்களில் இத்தனை அமைதியாக அவளை கண்டதே இல்லை என தோன்றியது அவனுக்கு.

தொண்டையை செருமியவனாய், “உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா அன்னம்?” எனக் கேட்டான்.

குனிந்தவாறு விரல் நகத்தினை ஆராய்ந்து கொண்டிருந்தவளோ அவனை நிமிர்ந்து பார்த்து, “இதை கேட்க தான் பேசனும்னு சொன்னீங்களா?” எனக் கேட்டாள்.

ஆமென அவன் தலையசைக்க, “நீங்க தான் மாப்பிள்ளைனு எனக்கு முன்னாடியே தெரியாது” என்றாள்.

“தெரியும். நான் தான்‌ சொல்ல வேண்டாம்னு சொல்லிருந்தேன்” என்று நிறுத்தியவன், “ஆனா சொல்லிருக்கனுமோனு இப்ப தோணுது” என்றான்.

“ஏன்?” என்று அவள் கேட்க,

“ஏன்னா நான் தான் மாப்பிள்ளைனு‌ தெரியும் போது உன்னோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு பார்க்கனும்னு ஆசைப்பட்டேன்” என்றான்‌.

இதனை கூறும் பொழுது கூட இறுகியிருந்தது அவனின் முகம்.

“அப்ப பிளான் செஞ்சி தான் என்னை பொண்ணு கேட்டீங்களா?” எனக் கேட்டாள்.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம நீ கேள்வி கேட்டுட்டு இருக்க அன்னம்” சற்று அதட்டலாகவே வந்தது அவனின் குரல்.

சட்டென முகம் சுருங்கி போக, “நீங்க என்கிட்ட இப்படி பேசினதில்ல! இவ்வளோ அதட்டலா கோபமா பேசினதில்ல” என்றாள்.

“எனக்கு பயமா இருக்கு” கூறும் போதே விழிகளில் இருந்து விழுக்கென நீர் விரைந்தோடியது‌‌.

சட்டென கைகளை கொண்டு துடைத்துக் கொண்டாள்.

காலையில் இருந்து பலவிதமான மனப்போராட்டங்களில் இருந்தவளுக்கு சிவா தான் மாப்பிள்ளை என்பதே பேரதிர்ச்சி என்றால் அவனின் இந்த அதட்டலான பேச்சும் அழுத்தமான பார்வையும் மேலும் அவளை கிலி பிடிக்க வைத்தது.

அவளின் கண்ணீரை கண்டதும் அவனது நெஞ்சம் வலிக்க பதட்டம் கொண்டவனாய், “சாரிடா வெள்ளப்புறா!” என்றான்.

மேலும் கண்ணீர் பெருகியது அவளுக்கு.

“ஏன்மா அழுற? என்னை பிடிக்கலையா? உன்னை கட்டாயப்படுத்தி ஓகே சொல்ல வச்சாங்களா?” எனக் கேட்டான்.

இந்த வார்த்தைகளை கூறும் பொழுதே மனதில் வலியை உணர்ந்தான் அவன்.

உடனே கண்களை துடைத்தவாறு இல்லையென தலையசைத்தவள், “உங்களை எப்பவுமே எனக்கு பிடிக்கும். இன்னிக்கு கொஞ்சம் மனசு சரியில்லை” என்றாள்.

அவளின் பிடிக்கும் என்ற சொல்லில்  வலியின் ரணத்தில் மயிலிறகை தடவிய இதம் பரவியது அவனுக்கு.

அவளின் மனது சரியில்லாமல் போனதற்கான காரணம் மோகனாக இருக்கும் என நினைத்தவன் அமைதியாக அவளின் முகத்தையே பார்த்திருந்தான்.

தன்னை நிலைப்படுத்தி கொண்டவளாய்,”அப்பா பார்த்த மாப்பிள்ளை யாரா இருந்தாலும் ஓகேனு தான் இன்னிக்கு நிச்சயத்துக்கு ஒத்துக்கிட்டேன். உங்களை பார்த்ததும் அதிர்ச்சி தான். எனக்கு உங்க வேலை, குடும்பம் பத்திலாம் பெரிசா எதுவும் தெரியாது. ஆனா நீங்க தான் எங்க அப்பா பார்த்திருக்க மாப்பிள்ளைனா எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தான் சிவா” என்றாள். 

“சம்மதம் சொன்னதுல சந்தோஷம் தான். ஆனா அதை சிரிச்சிக்கிட்டே சொல்லலாமே” மெல்லிய புன்னகை அவனிதழில்.

அவன் முகத்தை பார்த்து சிரிக்க முயற்சித்தாள்.

நாற்காலியில் இருந்து எழுந்தவன் அவளின் தலையில் கை வைத்து ஆட்டியவனாய், “நீ எப்பவுமே ஹேப்பியா இருக்கனும்டா வெள்ளப்புறா” என்றான்.

“அதென்ன வெள்ளப்புறா?” என்றவள் கேட்க,

“உன்னை பார்த்த நாள்லருந்து என் மனசுக்குள்ள உன்னை நான் கூப்டுற பேர் இது தான்! இனி சத்தமாவே கூப்பிட்டுக்கலாம்” என்று சிரித்தான்.

அவனின் சிரிப்பை ரசித்து பார்த்தவளாய், “இங்க வந்த இவ்வளோ நேரத்துல இப்ப தான் சிரிக்கிறீங்க” என்றாள்.

அவளின் கூற்றில் மேலும் சிரித்தவனாய், “பயம் போய்டுச்சா?” என்றான்.

மென்னகை புரிந்தவளாய் ஆமென தலையசைத்தாள்.

“உனக்கு என்கிட்ட எதுவும் கேட்கனுமா? இல்ல சொல்லனுமா?” எனக் கேட்டான்.

அவனின் உடையை மேலும் கீழும் பார்த்தவளாய், “இந்த டிரஸ் ஏன்? எதுவும் ஷூட்டிங்ல இருந்து அப்படியே வந்துட்டீங்களா?” என்று கேட்டாள்.

அவளின் கேள்வியில் சட்டென அவளிடமிருந்து தள்ளி நின்றான். அப்பொழுது தான் அந்த நினைவே வந்தது அவனுக்கு.

“சாரி! உன்னை பார்த்ததுலருந்து நான் மாலை போட்டிருக்கிறதையே மறந்துட்டேன்” என்றான்.

பச்சை நிற வேட்டியும் வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தான் அவன்.

“முருகனுக்கு மாலை போட்டிருக்கேன். ஒரு மாசத்துக்கு இப்படி தான்” என்றான்.

“மாலை போட்டிருக்கிறப்ப பொண்ணு பார்க்க வரலாமா?” எனக் கேட்டாள்.

“ஏன் வரக் கூடாது. இந்த நேரத்துல கடவுளோட அனுக்கிரகம் அதிகமாவே இருக்கும்ல. நல்லா பொண்ணா அமைச்சி தருவாரு. இருந்தாலும் இதுக்கு பிறகு கோவிலுக்குலாம் போய்ட்டு வந்த பிறகு தான் உன்கிட்ட பேசுவேன். சாமியை நினைச்சிக்கிட்டு இருக்க வேண்டிய நேரத்துல உன்னை நினைச்சிக்கிட்டு இருந்திட கூடாதே” என்று சிரித்தான்.

“பேசியாச்சா?” என கேட்டவாறு ஒரு புறம் ஆச்சியும் மறுபுறம் மீனாட்சியும் உள்ளே நுழைந்தனர்.

இருவரும் சிரித்த முகமாய் நிற்பதை பார்த்து அக மகிழ்ந்தனர் ஆச்சியும் மீனாட்சியும்.

“பேசியாச்சு போகலாம்” என்று சிவா நகரவும்,

“அப்புறம் உங்ககிட்ட எப்ப நான் பேசுறது?” என அவசரமாய் கேட்டாள் அன்னம்.

அவளுக்கு அவனிடம் சில விஷயங்களை பேசி தெளிய வேண்டி இருந்தது‌. அந்த சிந்தனையிலேயே இருந்தவள் அவன் செல்கிறான் எனவும் சட்டென கேட்டு விட்டாள்.

அதை கேட்ட ஆச்சி,”ஏன் இவ்வளோ நேரம் பேசினது பத்தாதா?” என்று அவளின் கன்னத்தில் இடித்தார். அதை பார்த்து சிரித்திருந்தாள் மீனாட்சி.

“பிள்ளை மாலை போட்டிருக்கு! விரதம் முடிஞ்சி கோவிலுக்குலாம் போய்ட்டு வந்த பிறகு தான் இனி பேசனும் நீ! நீங்க வாங்க தம்பி” என்று சிவாவின் கையை பிடித்துக் கொண்டு ஆச்சி அழைத்து செல்ல,

அன்னத்தை பார்த்து தலையசைத்து சிரித்தவாறே வெளியே சென்றான் சிவா.

“சிவா பேசி பேசியே உன்னை கவுத்துட்டாரு போலயே” என்று மீனாட்சி கேலி செய்ய,

“அட போ மீனு! எனக்கு நிறைய பேசனும் அவர்கிட்ட! அதுக்குள்ள நீங்க வந்து கெடுத்துட்டு, பேச்சை பாரு” என்று முறைத்தாள்.

“அதான் நிச்சயம் முடிஞ்சதும் நாள் முழுக்க பேச போறீங்களே! அப்புறம் என்ன?” என்று கேட்டாள் மீனாட்சி.

“ம்ப்ச் அவர் மாலையை கழட்டுற வரைக்கும் பேச மாட்டாராம்” என்றாள் கவலையாய் அன்னம்.

“ஓஹோ இப்பவே அவர் கூட பேச முடியாதேனு கவலையோ! செம்ம ஸ்பீடா இருக்கமா நீ” என்று மீனாட்சி கிண்டல் செய்ய,

“இருந்தாலும் பார்த்த முதல் நாளே அண்ணன் மேல தொபுகடீர்னு காதல்ல விழுந்த உன் அளவுக்கு இல்ல மீனு!” என்று மீனாட்சியை அவள் கேலி செய்ய, அன்னத்தின் தோளில் இடித்தாள் மீனாட்சி.

கீழிருந்து அன்னத்தின் அம்மா இவர்களை அழைக்க, கீழே சென்றனர் இருவரும்.

அடுத்த இரண்டு மாதத்தில் திருமணத்தேதி குறிக்கப்பட்டு பத்திரிக்கை வாசிக்கப்பட்டது.

இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்ள ஒப்பு தாம்பூலம் மாற்றப்பட்டது.

மாப்பிள்ளை வீட்டினர் உண்டு விட்டு கிளம்பி வாசல் அருகே செல்ல, முகப்பறையில் நின்றிருந்த அன்னத்திடம் வந்த சிவா, “உன்கிட்ட இருக்க நம்பர் தான் இப்பவும் நான் யூஸ் செய்றேன். எதுவும் ரொம்ப அர்ஜன்ட்டா பேசனும்னா மட்டும் மெசேஜ் செய்! கோவிலுக்கு போய்ட்டு வந்து ஃபோன்ல பேசிக்கலாம். அப்புறம் முக்கியமா அந்த இன்ஸ்டா ஃபேன் பேஜ்க்கு இனி நீ அட்மினா இருக்க வேண்டாம். உன்னோட ஃபேஸ்புக் இன்ஸ்டா எங்கேயும் என்னை கேட்காம உன்னோட போட்டோஸ் எதையும் போட்டுடாத! நம்ம நிச்சயத்தை பத்தி கூட இப்போதைக்கு சோஷியல் மீடியால எங்கேயும் எதுவும் சொல்ல வேண்டாம்‌” என்றவன்,

“ஜஸ்ட் பீ ஹேப்பி! டேக் கேர்டா வெள்ளப்புறா” என்றவாறு கிளம்பி சென்றான்.

திகைத்து விழித்தவாறு நின்றாள் அன்னம்.

அங்கே நந்துக்குட்டியை மடியில் தூங்க வைத்தவாறு ஓரறையின் கட்டிலில் அமர்ந்திருந்த நங்கையிடம் சென்றாள் அன்னம்.

அவளின் முகத்தில் இருந்த தெளிவையும் கவலையையும் அவதானித்தவளாய், “அந்த அஞ்சு நிமிஷத்துல அப்படி என்ன பேசி மாப்பிள்ளை உன்னை இம்ரஸ் செஞ்சாரு. எது உன்னை அவரை ஹெவியா லைக் பண்ண வச்சிது அன்னம்” என்று சிரித்தவாறு நங்கை கேட்க,

“அண்ணி யூ டூ புருட்டஸ்” என்று சிணுங்கியவாறு அவளருகில் அமர்ந்தாள் அன்னம்.

ஹா ஹா ஹா என சிரித்தவளாய், “இப்ப என்ன பிரச்சனை அன்னம் பொண்ணுக்கு” என்று கேட்டாள்.

சிவா கிளம்பும் சமயம் உரைத்தவற்றை கூறியவள், “இவரும் என்னை ஃப்ரீயா இருக்க விட மாட்டாரு போலயே” என புலம்பினாள்.

“ஆமா அவர் மீடியால வேலை செய்வறருல அன்னம். அவர் சொன்னதுல எதுவும் காரணம் இருக்கும்” என்றாள் நங்கை.

“ஆமா அப்பா எப்படி மீடியால இருக்க இவரை மாப்பிள்ளையா ஒத்துக்கிட்டாரு” எனக் கேட்டாள் அன்னம்.

“சிவாவோட அம்மா நேரடியாக வந்து பேசினாங்களாம். சிவா ஃபோன்ல உங்கப்பா அம்மா ஆச்சிக்கிட்டலாம் பேசினாராம். எந்தவித பந்தாவும் இல்லாம சாதாரண ஆளா அவர் மரியாதையோட பேசினது உங்கப்பாக்கு பிடிச்சிதுனு சொன்னாங்க. மீடியாலயே இருந்தாலும் சிவாவை பத்தி விசாரித்த இடமெல்லாம் நல்ல விதமாக தான் சொன்னாங்களாம். அதிலும் இவர் சீரியல் நடிகர் தானே. சினிமால சின்ன சின்ன கேரக்டர் தானே செய்றாருனு உன் ஆச்சி சிவாக்கு செம்ம சப்போர்ட்டாம்” என்றாள் நங்கை‌.

இதனை கேட்டு அன்னம் எதையோ சிந்தித்தவாறு இருக்க, “என்னடா இன்னும் யோசனை” என்று கேட்டாள் நங்கை‌.

முதன் முதலாக சிவாவை சந்தித்தது முதல் மோகனுடன் அவளுக்குண்டான பழக்கத்திற்கும் சிவாவிற்குமான தொடர்பு என அனைத்தையும் கூறி முடித்தவள், “மோகனை பத்தி சிவாகிட்ட சொன்னா எப்படி ரியாக்ட் செய்வாருனு தெரியலை அண்ணி. அவர்கிட்ட சொல்ல வாய்ப்பு கிடைச்சும் சொல்லாம விட்டுட்டேன். இன்னிக்கு காலைல மோகனை பார்த்தேன்” என்றவள், காலை மோகனிடம் பேசிய அனைத்தையும் கூறி முடித்தாள்.

அதிர்ந்து போனாள் நங்கை‌.
“அறிவிருக்கா உனக்கு? நீயே ஏன் நேர்ல போய் பேசின? எங்க யாரையாவது கூப்பிட்டிருக்கலாம்ல” என கோபமாய் கேட்டாள்.

“இல்ல அண்ணி! அவனை நானே ஹேண்டில் செய்றது தான் சரியா இருக்கும்னு போனேன்” என்றாள் அன்னம்.

“ஹ்ம்ம் சரி நீ இதெல்லாம் நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காத!” என்று அன்னத்தை துணி மாற்ற அனுப்பி வைத்த நங்கை, ராஜனை அழைத்து அன்னம் உரைத்தவற்றை கூறினாள்‌.

“அந்த பையனை நாம சத்தம் போட்டு வைப்போமா? உன் கல்யாணம் எப்படி நடக்கும்னு பார்க்கிறேன்னு சவால்லாம் விட்டிருக்கானே” என்று கவலையாய் கேட்டாள் நங்கை‌‌.

“இந்த விஷயம் மீனாட்சி அண்ணிக்கு தெரியுமா?” எனக் கேட்டான் ராஜன்.

“இல்லை! நம்ம குடும்பத்துல உன்னையும் என்னையும் தவிர யாருக்கும் தெரியாது” என்றாள்.

“சரி நான் பார்த்துக்கிறேன் விடு! நீ கவலைப்பட்டுக்காத” என்று அவளை ஆற்றுப்படுத்தியவன், ஈஸ்வரனை அழைத்து பேச வேண்டுமென மனதோடு எண்ணிக் கொண்டான்.

— தொடரும்