அழகிய அன்னமே 25 & 26

“அந்த பையன் ஏற்கனவே ஒரு பொண்ணை லவ் செஞ்சிருக்கான்டா பப்ளிமாஸ்‌. நல்ல வேளை ஆரம்பத்துலேயே அன்னம் தப்பிச்சிட்டா” என்றான் ராஜன்.

பிரைவேட் டிடெக்டிவ் அளித்த அறிக்கையை நங்கையிடம் கொடுத்தான் ராஜன்.

அன்னத்திற்கு பார்த்திருக்கும் வரனை பற்றி மீனாட்சி நங்கையிடம் பேசி இரண்டு நாட்களாயிற்று. அந்த வாரமே மாப்பிள்ளை வீட்டில் பூ வைத்து எளிய முறையில் நிச்சயம் செய்திட ஆவலாய் இருக்க, மறு வாரம் வரை அவர்களை காத்திருக்குமாறு கூற சொல்லி விட்டாள் நங்கை.

அந்த மாப்பிள்ளை பற்றிய அறிக்கை வந்த பிறகு அன்னத்திடம் கூறலாமென காத்திருக்கிறாள் நங்கை. அந்த மாப்பிள்ளை பற்றி ஏதேனும் தவறாக இருந்தால் கண்டிப்பாக அன்னத்தின் பெற்றோரிடம் பேசி இந்த வரன் வேண்டாமென கூறும் முடிவில் இருக்கிறாள்.

மோகனின் அறிக்கை முதலாவதாக கிடைத்திட, கிடைத்த செய்திகள் எதுவும் உவப்பானதாய் இல்லை.

“அப்படியா? காலேஜ்லயா ஆபிஸ்லயா? பிரேக் அப் ஆகிடுச்சா?” எனக் கேட்டாள் நங்கை.

“ஆகிடுச்சுடா. தப்பு இந்த பையன் மேல தான். காலேஜ்ல முதல் வருஷத்துலயே காதலிக்க ஆரம்பிச்சிருக்காங்க. அதுக்கு பிறகு கேம்பஸ்ல ஒரே கம்பெனிக்கு இரண்டு பேரும் செலக்ட் ஆகி இங்க வேலைக்கு சேர்ந்திருக்காங்க. அதுக்கு பிறகு பிரேக் அப் ஆகிருக்கு. கிட்டதட்ட அஞ்சு வருஷக் காதல். அப்படியே நம்ம அன்னத்தை கண்ட்ரோல் செய்ற மாதிரி அந்த பொண்ணுக்கிட்ட பேசியிருக்கான். அதை விட அதிகம்னு சொல்லனும். அந்த பொண்ணு என்ன டிரெஸ் போடனும், யார்க்கிட்ட பேசனும் பேசக்கூடாதுனு எல்லாமே இவன் சொன்னதை தான் அந்த பொண்ணு செய்யனும்னு இங்கே வேலைக்கு சேர்ந்த பிறகு ரொம்பவே டார்ச்சராம். காலேஜ் படிக்கிற வரைக்கும் அவன் கன்ட்ரோல் செய்றதுலாம் அவனோட அன்புனால காதல்னாலனு அந்த பொண்ணு நினைச்சிக்கிட்டு இருந்திருக்கு. இங்க வேலைக்கு சேர்ந்த பிறகு தாங்க முடியாம பிரேக் அப் செஞ்சிட்டு போய்டுச்சாம்”

“அடப்பாவி எவ்ளோ பெரிய ஏமாத்துக்காரனா இருந்திருக்கான் இவன்!” என அதிர்ச்சிக்குள்ளானாள் நங்கை.

அன்னம் அந்த வீட்டுக்கு வந்த நாளில் இருந்து இரவு அன்னத்துடன் தான் படுக்கிறாள் நங்கை. இரவு முழுவதும் இருவரும் பல்வேறு விஷயங்களை, அவர்கள் வாழ்வின் நிகழ்வுகளை பேசியவாறே உறங்கி போவர்.

அன்றைய இரவும் ராஜனிடம் பேசிவிட்டு குழந்தை உறங்குவதை பார்த்து விட்டு அன்னம் தங்கியிருக்கும் அறைக்கு சென்ற நங்கை, விளக்கை போட்டாள்.

முழித்தவாறு படுத்திருந்த அன்னத்தின் அருகே வந்து உட்கார்ந்தாள் நங்கை‌. அன்னம் எழுந்தமர, “தூக்கம் வரலையாடா?” எனக் கேட்டாள்.

“இல்ல அண்ணி” என்றாள் அவள்‌.

“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அன்னம்” சற்று கவலையாகவே உரைத்தாள் நங்கை.

“சொல்லுங்க அண்ணி” என்று அன்னம் கூறவும்,

“மோகன் உனக்கு கால் பண்ண டிரை பண்ணலையா? உன் ஃபோன் ஸ்விட்ச் ஆப்ல இருக்குல! ஆனா அவனோட கால் வந்தா மாதிரியே தெரியலையே” என்று கேட்டாள் நங்கை.

“அவன்கிட்ட இருந்து உங்க ஃபோன்க்கு கூட கால் எதுவும் வரலைனு நம்ம வீட்டு லேண்ட்லைன்லருந்து நானா தான் பாலாஜிக்கு ஃபோன் செஞ்சி கேட்டேன். ஆபிஸ்க்கு வந்துட்டானா என்னனு தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன். இன்னும் லீவ்ல தான் இருக்கான்னு சொன்னாங்க. தம்பியை பார்த்துக்க இருக்கானாம். அங்க ஏதோ கடன் பிரச்சனை வேறயாம். அதுக்கு பாலாஜிக்கிட்ட கூட கடன் கேட்டதா சொன்னாரு” என்றாள்.

“ஹ்ம்ம் இன்னிக்கு அவனை பத்தி டிடெக்டிவ்கிட்ட இருந்து ரிபோர்ட் வந்துச்சு அன்னம்” என்றவள் அனைத்து விவரங்களையும் அவளிடம் தெரிவித்தாள்.

கண்களில் இருந்து கண்ணீர் வழிய கேட்டுக் கொண்டிருந்த அன்னம், “இது எதுவுமே என்கிட்ட அவன் சொல்லலை அண்ணி. நான் தான் அவன் லவ் பண்ற முதல் பொண்ணுன்னு நானா நினைச்சிக்கிட்டேன். அவன் யாரையாவது லவ் பண்றானானு கூட நான் கேட்கவேயில்லை. நானா அவனை அவளோ நல்லவனுக்கு நினைச்சிக்கிட்டேன்” என்றாள்.

“இட்ஸ் ஓகே டா” என்றவாறு அன்னத்தின் முதுகில் தட்டிக் கொடுக்க,

“அவனை ரொம்ப நம்பினேன் அண்ணி! எவ்ளோ ஈசியா ஏமாந்து போயிருக்கேன் பாருங்க” என்று அழுதாள்.

“இட் ஹேப்பன்ஸ்டா (இது நடக்கிறது தான்டா) தப்பே செய்யாம வாழுறவங்க யாருமே கிடையாது. ஆனா அது தப்புனு தெரிஞ்ச பிறகு திருத்திக்காம நான் இப்படி தான்னு வாழுறவங்க வாழ்க்கைல நிம்மதியும் அமைதியும் இருக்கவே இருக்காது. இதுவே தப்புனு தெரிஞ்ச பிறகு அதை அக்சப்ட் பண்ணிக்கிட்டு அந்த தப்பை திருத்திக்கிட்டு வாழுறவங்க வாழ்க்கை நிம்மதியா இருக்கும். அதனால டோண்ட் ஃபீல் பேட்” என்ற நங்கை,

“இப்ப நீ இருக்கிற இதே நிலைமைல ஒரு காலத்துல நானும் இருந்தேன் அன்னம்” என்றாள்.

சட்டென வழிந்த கண்ணீர் நிற்க, கண்கள் விரிய ஆச்சரியத்துடன் நங்கையை பார்த்த அன்னம், “நிஜமாவா? இல்ல சும்மா என்னை சமாதானப்படுத்த சொல்றீங்களா?” எனக் கேட்டாள்.

“யெஸ் உன்னை சமாதானப்படுத்த தான் சொல்றேன். ஆனா நடந்த உண்மையான சம்பவத்தை தான் சொல்றேன்” என்றாள் நங்கை.

“அச்சோ மனசு ரொம்ப கஷ்டப்பட்டிருக்குமே அண்ணி” அவளின் அன்றைய வலியை எண்ணி இன்று இவள் கவலைக் கொண்டாள்.

“ஹ்ம்ம் வாழ்க்கைல எதெல்லாம் நாம அனுபவிச்சி கடந்து வரனும்னு இருக்கோ, அதெல்லாம் கடந்து வந்து தான் ஆகனும் அன்னம். நானும் உங்க சுந்தரராஜன் அண்ணனும் ஜெர்மனில ஒன்னா வேலை பார்த்தோம். செம்ம கிளோஸ் ஃப்ரண்ட்ஸ். இரண்டு வருஷம் கழிச்சி நான் இந்தியாக்கு வந்தேன். சுந்தர் ஜெர்மனியிலேயே இருந்தான். இந்தியால பெங்களூர் ஆபிஸ்ல நான் வேலைக்கு சேர்ந்தேன். அங்க கூட வேலை பார்த்த பையன் எனக்கு பிரபோஸ் செஞ்சான். எனக்கு கூட வேலை செய்ற பையனா அவனை பிடிக்கும். அவ்ளோ தான். லவ்லாம் அவன் மேல் இல்லை. அதை அவன்கிட்டயும் சொல்லிட்டேன்.
இப்ப நீ செஞ்ச அதே தப்பை தான் நானும் அப்ப செஞ்சேன்” என்று நிறுத்தினாள் நங்கை.

“என்ன தப்பு அண்ணி? எதை சொல்றீங்க?” எனக் கேட்டாள் அண்ணி.

“நம்மகிட்ட நல்லா பழகின பழகிட்டு இருக்க ஒரு பையன் வந்து பிரபோஸ் செஞ்சானா, அந்த பிரபோசல் வேண்டாம்னு நாம முடிவு செஞ்சிட்டோம்னா அதுக்கு பிறகு அந்த பையன்கிட்ட நாம பேசக் கூடாது அன்னம். ஏன்னா அதுக்கு பிறகு அவன் கூட நாம பழகுற ஒவ்வொரு நொடியும் எப்படி நம்மை இம்ப்ரஸ் செய்யலாம்னு தான் அவன் யோசிப்பான். அவன் அப்படி நினைக்கவே இல்லனா கூட அவனோட செயல் அண்ட் நம்ம மேல காட்டுற அக்கறைலாம் நம்மளை அவன்கிட்ட ஈர்த்துட்டே இருக்கும். நம்ம மேல உள்ள காதலுக்காக தான் இதெல்லாம் செய்றான்னு நமக்கு தோண வைக்கும். இதனால் தான் ஒரு நேரம் ஸ்ட்ராங்கா வேண்டாம்னு சொல்ற நாம, அடுத்த தடவை குழம்பி போய் ஓகே சொல்லிடுறது”

“ஆமா அண்ணி! நீங்க சொல்றது சரி தான். அவன் லவ் சொல்லி நான் வேண்டாம்னு சொன்ன பிறகு அவன்கிட்ட நான்‌ டிஸ்டென்ஸ் மெயின்டெய்ன் செஞ்சிருக்கனும். எப்பவும் போல ஃப்ரண்ட்ஸ்ஸா இருப்போம்னு இருந்தது தான் இந்த நிலைல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு” என்று கூறும் போதே தேம்பி அழ ஆரம்பித்தாள் அன்னம்.

“அடடா அழுதது போதும்டா?” என்று அன்னத்தின் கண்ணீரை துடைத்து விட்டு தோளை தட்டிக் கொடுக்க,

“ரொம்ப கில்டி ஃபீல் ஆகுது அண்ணி” என்றாள் அன்னம்.

“இட்ஸ் ஓகே மா. என்னை கம்பேர் செய்யும் போது உன்னோட நிலைலாம் ஒன்னுமே இல்லை தெரியுமா! நான் சூசைட் அடெம்ப்ட் வரைக்கும் போனேன்” என்று நங்கை உரைத்ததும்,

“அண்ணி” என்று அதிர்ந்து அவளை பார்த்தாள் அன்னம்.

“ஆமாடா அன்னம். நான் அந்த பையனை லவ் பண்ணது சுந்தருக்கும் தெரியும். சுந்தர் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்டுனு அந்த பையனுக்கும் தெரியும். எங்க வீட்டுல இந்த லவ் மேரேஜ்க்கு என் அம்மா ஒத்துக்கவே இல்லை. இரண்டு வீட்டுல ஒத்துக்கிட்ட பிறகு தான் கல்யாணம்னு முடிவா இருந்தோம். அவன் வீட்டுல எங்க காதலை பத்தி பேசிட்டு வரேன்னு ஒரு வீக்கெண்ட் வீட்டுக்கு போனவன், அடுத்த இரண்டு நாளு ஆபிஸ்க்கு வரவே இல்லை. அவன் ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப். அவனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சோ என்னாச்சோ ஏதாச்சோனு பயந்துட்டு இருந்தேன். அவனோட ரூம்ல உள்ள பசங்களுக்கு எதுவும் தெரியுமானு கேட்கலாம்னு அவன்‌ ரூம்க்கு போனேன். அங்க கதவை திறந்ததே அந்த பையன் தான். அவனை பார்த்து ஷாக் ஆகி செம்ம கோபமாகி நான் அவனை திட்ட,  அங்க வாசல்ல நிக்க வச்சி, சுந்தரையும் என்னையும் சேர்த்து வச்சி அசிங்கமா பேசிட்டான் அவன். அப்ப தான் சுந்தர் இந்தியா வந்திருந்தான். அவன் பேசின பேச்சுல உடம்பு கூசி போச்சு எனக்கு‌. அன்னிக்கு நைட் தூக்க மாத்திரை சாப்பிடலாம்னு எடுக்கிறேன், சுந்தர் ஃபோன் செய்றான். அவன் கண்டுபிடிச்சிட்டான். அப்புறம் அவன் தான் இந்த லவ் ஃபெயிலியர்லருந்து, டிப்ரெஷன்லருந்து வெளில கொண்டு வந்தான். அதுக்கு பிறகு பல வருஷம் கழிச்சி சுந்தர்  என்னை லவ் செஞ்சதை அப்பா தெரிஞ்சிக்கிட்டு அரேஞ்டு மேரேஜ் மாதிரி ஏற்பாடு செஞ்சி கல்யாணம் செஞ்சி வச்சிட்டாங்க”

“ஆனா ஏன் அவங்க திடீர்னு அப்படி பேசி உங்களை அவமானப்படுத்தினாங்க? அவங்க வீட்டுல என்ன தான் நடந்துச்சு?” எனக் கேட்டாள் அன்னம்.

“அந்த பையன் வீட்டுக்கு போய் எங்க லவ் பத்தி சொல்லிருக்கான். அவனோட அம்மா நீ அந்த பொண்ணை கட்டிக்கிட்டீனா சூசைட் செஞ்சிப்பேன்னு சொல்லி பிளேக் மெயில் செய்ய, அவனோட அம்மாக்கு அவங்க பார்த்த பொண்ணையே கட்டிக்கிறதா சத்தியம் செஞ்சி கொடுத்துட்டான். சோ என்னை அவன் வாழ்க்கையிலருந்து விரட்டி அடிக்க, நான் அவனை வெறுக்க அந்த மாதிரி அவமானப்படுத்தி பேசிட்டான்” என்றாள் நங்கை.

அந்த பையன் இன்பா என்பதை தவிர்த்து அனைத்தையும் கூறி முடித்தாள் நங்கை.

எவ்வித வருத்தமும் இல்லாமல் வெகு நிதானமாக சின்ன சிரிப்புடன் இந்நிகழ்வை அவள் சொல்லி முடித்ததில் பெருத்த ஆச்சரியம் அன்னத்திற்கு.

“இப்ப சின்ன ரிக்ரெட் (regret – வருத்தம்) கூட இல்லையா அண்ணி உங்களுக்கு? அந்த ஆள் மேல கோபம் வெறுப்புனு எதுவுமே இல்லையா?” எனக் கேட்டாள் அன்னம்.

“நீ சொன்னதெல்லாம் இந்த இன்சிடெண்ட் நடந்தப்ப இருந்துச்சு. இப்ப அது எங்கேயோ யாருக்கோ நடந்த ஒரு கதை மாதிரி தான் மனசுல இருக்கு.

உனக்கே இப்ப ரொம்ப கவலையாக அழுத்துற இந்த விஷயம், இரண்டு வருஷம் கழிச்சி ஒரு செய்தியா தான் மனசுல படிஞ்சிருக்கும்‌.

அவன் என்னை அசிங்கமா பேசினதை மட்டும் என்னால் என்னிக்கும் மன்னிக்க முடியாது அன்னம். அந்த கோபம் மட்டும் மனசுல இருந்துட்டே இருந்துச்சு. இப்ப ரீசன்ட்டா ஒரு நாள் அவனை நேர்ல பார்க்கும் போது நல்லா திட்டி விட்டுட்டேன். அதுல அந்த கோபமும் குறைஞ்சி போச்சு. வெளிலருந்து பார்க்கிறப்ப தப்பு செஞ்சிட்டு நல்லா வாழுற மாதிரி தெரியும் அன்னம். ஆனா அவங்கவங்க தவறுக்கான தண்டனையை அவங்க உள்ளுக்குள்ள அனுபவிச்சிட்டு இருப்பாங்க. வெளிலருந்து பார்க்கிற நமக்கு அது தெரியாம இருக்கும்” என்றாள் நங்கை.

நங்கையின் கதையை கேட்டதில், தான் மட்டும் தனித்து இல்லை என்ற எண்ணம் அளித்த ஆசுவாசத்தில் அவளின் உள்ளம் தணிந்து போனது. நங்கை அத்தகைய சூழலையே கடந்து வந்து மகிழ்வாய் இன்று வாழும் போது தன்னால் இச்சூழலை கடக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்து அவளின் மனதுக்கு தைரியம் அளித்தது.

“நிஜமாவே மனசு ரொம்ப ரிலாக்ஸ்ஸா ஃபீல் ஆகுது அண்ணி. தேங்க்ஸ் ஃபார் ஷேரிங் இட் வித் மீ (என்னிடம் பகிர்ந்ததற்கு நன்றி)” என்றாள் அன்னம்.

“சரி இப்ப சொல்லு! உன்னோட முடிவு என்ன?” என்று கேட்டாள் நங்கை.

“என்ன‌ முடிவு அண்ணி?”

“மோகன் விஷயத்துல உன்னோட முடிவு என்ன?”

“இனி அவன் என் வாழ்க்கைல இல்லை அண்ணி! ஆனா அவன்கிட்ட நான் என்னனு சொல்லி பிரேக் அப் பண்றது. என்னை எதுவும் அசிங்கமா பேசிடுவானோனு பயமா இருக்கு. இல்லனா அழுது நடிச்சி பிளேக் மெயில் செய்வானோ” என்று பயத்துடன் அன்னம் கேட்க,

“அதெல்லாம் நீ யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீ அவன்கிட்ட பேசவே வேண்டாம். அவன்கிட்ட நாங்க பேசிக்கிறோம்” என்ற நங்கை,

“எதையும் யோசிக்காம நீ நிம்மதியா படுத்து தூங்கு! நான் போய் நந்துக்குட்டியை பார்த்துட்டு வரேன்” என்றவளாய் தனது அறைக்கு சென்றாள் நங்கை.

அங்கு ராஜன், மகளை மார்பினில் படுக்க வைத்து, அவளை அணைத்தவாறு உறங்கி கொண்டிருந்தான்.

அவர்கள் உறங்கும் அழகை கண்டு ரசித்தவளாய், இருவரையும் அணைத்தவாறு கைகளை போட்டுக் கொண்டு அருகே படுத்தாள் நங்கை.

அவளின் ஸ்பரிசத்தில் உறக்கம் கலைந்தவனாய், “என்னடா இங்க வந்துட்ட?” என்று கேட்டான் ராஜன்.

“என் புருஷன் ஞாபகம் வந்துடுச்சு! அதான் பார்க்க ஓடோடி வந்தேன்” என்றவளாய் அவனது கன்னத்தில் முத்தமிட்டவள், “நைட் முழுக்க இப்படியே படுத்தீனா முதுகு வலிக்கும்டா. பாப்பாவை பக்கத்துல போட்டு படு” என்றவளாய் அன்னத்தின் அறைக்கு சென்றாள்.

அத்தியாயம் 26

மறுநாள் அந்த மாப்பிள்ளை பற்றிய அறிக்கையை நங்கையிடம் அளித்த ராஜன், “மாப்பிள்ளை பாஸ் மார்க் வாங்கிட்டாரு” என்றான் சிரித்துக் கொண்டே!

அந்த அறிக்கையை முழுவதுமாய் படித்த நங்கைக்கு பரம திருப்தி.

“அன்னம் நிச்சயதுக்கு அப்பாவை பெங்களூர்லருந்து நேரா மதுரைக்கு வர சொல்லிடலாம்ல சுந்தர்” எனக் கேட்டாள் நங்கை.

நங்கையின் தந்தை சுரேந்தர் வருடத்திற்கு பாதி நாள் கோவில் சுற்றுலாவிற்கு சென்று விடுவார். அவ்வாறு தான் கர்நாடகாவில் இருக்கும் கோவில்களின் சுற்றுலாவிற்காக இப்பொழுது சென்றிருக்கிறார்.

“நீ முடிவே செஞ்சிட்டியா? அன்னத்துக்கு ஓகேனா மட்டும் தான்‌ அடுத்த வாரம் நிச்சயம் நடக்கும். முதல்ல அன்னம் என்ன சொல்றானு பார்ப்போம்” என்றான் ராஜன்.

இரவு வேளையில் அனைவருமாய் உணவு மேஜையில் அமர்ந்து உண்ணும் நேரத்திலேயே, “உங்கப்பா உனக்கு ஒரு வரன் பார்த்திருக்காங்களாம் அன்னம். பையன் பக்கம் ஓகே! உங்க ஊருலயும் எல்லாருக்கும் இந்த சம்பந்தம் பிடிச்சிருக்கு. நானும் சுந்தரும் கூட இந்த வரன் பத்தி விசாரிச்சிட்டோம்‌. எங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. இப்ப நீ தான் சொல்லனும்” என்றாள்.

“ஏற்கனவே ஒரு தடவை தப்பா முடிவெடுத்துட்டேன். இனி வீட்டுல யாரை பார்த்து வைக்கிறாங்களோ அவங்களை தான் கட்டிக்கிறதுனு முடிவு செஞ்சிட்டேன் அண்ணி. ஆனா இது ரொம்ப சீக்கிரம் அண்ணி! எனக்கு கொஞ்சம் டைம் வேணும்” என்றாள்.

“அடுத்த வாரம் பூ வைக்கிறது மாதிரி ஒப்பு தாம்பூலம் மாத்திக்கிட்டா மூனு மாசம் கழிச்சி தான்மா கல்யாணம். உனக்கு மூனு மாசம் டைம் இருக்கு” என்றாள் நங்கை.

“அடுத்த வாரமே வா?” என்று அன்னம் யோசிக்க,

“நீ ஏன் அவளை ஃபோர்ஸ் செய்ற?” என்றான் ராஜன்.

“என்னது நான் ஃபோர்ஸ் செய்றேனா?” என்று நங்கை முறைத்தவாறு கேட்க,

“எனக்கு பிடிச்சிருக்குனு சொல்லி நீ பேசினாலே அவ ஓகே சொல்லி தான் ஆகனும்ன்ற கட்டாயத்துக்கு தள்ளுறதா தானே அர்த்தம்” என்ற ராஜன்,

“அன்னம் யூ டேக் யுவர் டைம்! மாப்பிள்ளை பத்தி டீடைல்ஸ் வேணும்னாலும் வாங்கி பார்த்துக்கோ பொறுமையா யோசிச்சு உன் முடிவை சொல்லு” என்றான்.

சரியென தலையாட்டிய அன்னத்திற்கு உடனே திருமணமென்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அன்றிரவு அன்னத்தின்‌ புதிய கைபேசி எண்ணிற்கு அவளை அழைத்தார் அவளின் ஆச்சி‌.

பழைய எண் கொண்ட சிம்மை கழட்டி விட்டு புது சிம்மிற்கு மாறிய பிறகே கைபேசியை இயக்கினாள் அன்னம்.

ஊரிலுள்ள வீட்டினர் அனைவரிடத்திலும் கைபேசி பழுதாகி விட்டதாகவும், சரி செய்ய கொடுத்திருப்பதாகவும் உரைத்து தான் நங்கையின் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.

அன்னம் இரு நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் அலுவலகத்திற்கு செல்லாமல் இருக்கிறாள் என்று அன்னத்தின் குடும்பத்தினரிடம் உரைத்த நங்கை, அதன் பிறகு அன்னம் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதாய் உரைத்தாள்.

ஆனால் அன்னம் அந்த வாரம் முழுவதுமே இன்பாவிடம் விடுப்பு கூறியிருந்தாள்.

அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு விட்டு சுற்றி அமர்ந்துக் கொண்டனர்
அன்னத்தின் தந்தையும் தாயும்.

“அன்னம் அந்த மாப்பிள்ளை ஃபோட்டோவ பார்த்தியா? ஆளு ராசா கணக்கா இருக்காருல! உன்னை விட அழகு!” அவளை வம்பிழுக்கவே அவ்வாறு கூறினார் ஆச்சி.

“நான் ஃபோட்டோ எதுவும் பார்க்கலையே ஆச்சி” என்று அன்னம் சொன்னதும்,

“உன்னோட அண்ணிக்கு அனுப்பி வச்சோமே! அவங்ககிட்ட கேட்டு வாங்கி பாரு! அவர் முக அழகுக்கேத்த மாதிரியே சுந்தரமான பேரு” என்றார் ஆச்சி.

“அப்படி என்ன பேரு ஆச்சி” என்று இவள் கேட்க,

“அடியேய் பேரு கூடவா கேட்காம இருக்க நீ! இல்ல அவங்க சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாங்களா” எனக் கேட்டார்.

“மாப்பிள்ளை தான் அவரை பத்தி இவக்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாராம்” என்று ஆச்சியின் காதோடு கூறினார் அன்னத்தின் தாய்.

“இல்ல நான் தான் எதுவும் கேட்டுக்கலை ஆச்சி” என்றாள் அன்னம்.

“ஏன்மா உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா?” சட்டென இடையில் கேட்ட தந்தையின் பரிதவிப்பான குரலில்,

‘அய்யோ அவ்ளோ வெளிப்படையாவா தெரியுது’ என்று மனதோடு எண்ணிக் கொண்டவளாய்,

“அப்படி லாம் இல்லப்பா! நீங்க எந்த பையனை பார்த்தாலும் எனக்கு ஓகே தான். அதான் நான் எதுவும் கேட்டுக்கலை. இவ்ளோ சீக்கிரமா நடக்குதேனு தான் யோசனையா இருந்துச்சு” என்றாள் அன்னம்.

“மாப்பிள்ள வீட்டுல அடுத்த வாரமே பூ வச்சிக்கலாம்னு சொல்லி கேட்டுட்டு இருக்காங்கமா. உனக்கு சரினா மட்டும் தான்மா இது நடக்கும். இல்லனா வேற மாப்பிள்ளை பார்த்துக்கலாம். உனக்கு பிடிக்காததை அப்பா என்னிக்கும் செய்ய மாட்டேன்” என்று முருகன் கூறிய சொல்லில் சட்டென கண்ணில் துளிர்த்த நீர் துளியுடன் அவள் ஏதோ பேச வரும் ‌முன், அவசரமாக இடையிட்டு

“என்னது? மாப்பிள்ளையை மாத்துறீங்களா? அதெல்லாம் செல்லாது செல்லாது! இவர் தான் என் அன்னத்தோட மாப்பிள்ளைனு நான் முடிவு செஞ்சிட்டேன். எங்கே தேடிப் பிடிச்சாலும் இப்படி ஒரு பிள்ளை கிடைக்குமா! மாப்பிள்ளைய மாத்துறானாம்ல” என்று உதட்டை சுழித்தார் ஆச்சி.

ஆச்சியின் பேச்சில் சிரித்த அன்னம், “ஆஹா ஆச்சி மாப்பிள்ளைக்கிட்ட நீ கவுந்துட்ட போலயே! அப்படி என்ன செஞ்சி உன்னை மயக்கினாரு அந்த  மாப்பிள்ளை” எனக் கேட்டாள்.

“அடிப்போடி போக்கத்தவளே” என நாணி கோணி சிரித்தார் ஆச்சி.

இங்கு அன்னம் சிரிக்க, அங்கு மூவருமே சிரித்திருந்தனர்.

எத்தகைய சூழலிலும் தன்னை மகிழ்விக்க தனது குடும்பத்தவர்களால் மட்டுமே முடியும் என்பதை எண்ணி நெகிழ்ந்து கண் கலங்கினாள் அன்னம்.

தான் நன்றாக வாழவில்லை என்றால் தனது குடும்பத்தவர்களால் ஆயுளுக்கும் நிம்மதியாக வாழ முடியாது என்பதையும் புரிந்துக் கொண்டாள். இவளின் நல்வாழ்வில் அவர்களின் இன்பம் ஒளிந்திருக்கிறது என புரிந்தது அன்னத்திற்கு.

பெருமூச்செறிந்தவளாய், “உங்க விருப்பப்படி செய்யுங்கப்பா. எதுனாலும் எனக்கு ஓகே தான்” என்று கூறி விட்டாள் அன்னம்.

அங்கு மூவர் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.

நங்கை ராஜனிடமும் தனது முடிவினை உரைத்தவள் மறுநாளில் இருந்து தான் அலுவலகத்திற்கு செல்வதாய் உரைத்தாள்.

“இல்ல அன்னம். அடுத்த வாரம் பூ வச்சு ஒப்பு தாம்பூலம் மாத்துற ஃபங்ஷன் இருக்கும். அதனால இப்போதைக்கு போக வேண்டாம்” என்றாள் நங்கை.

அன்னத்தின் யோசனையான முகத்தை பார்த்த ராஜன், “நான் இன்பாகிட்ட பேசி உங்க பிராஜக்ட்டுக்கே வேற பிரான்ச் ஆபிஸ்ல வேலை செய்ய பர்மிஷன் வாங்கி தரேன். அதுக்கு பிறகு நீ ஆபிஸ்க்கு போ அன்னம்” என்றான்.
சரியென தலையசைத்தாள்.

*****

அன்னத்தின் நிச்சயத்திற்கு முந்தைய நாள் நங்கை மற்றும் ராஜனுடன் அவர்களின் மகிழுந்தில் மதுரை நோக்கி பயணித்திருந்தாள் அன்னம்.

அன்று மாலை மதுரையை அடைந்தவர்கள், அன்னத்தை மட்டும் அவளின் வீட்டில் இறக்கி விட்டு, மற்றவர்கள் ராஜனின் வீட்டிற்கு சென்றனர்.

அன்னத்தை கண்டதும் அத்தனை மகிழ்ச்சி அனைவருக்கும். ஆச்சி மாப்பிள்ளை பற்றியே பேசியவராய் அவர்களின் வீட்டில் அன்னத்திற்காக எடுத்திருக்கும் புடவையை பற்றி புகழ்ந்து தள்ளினார்.

பயண அலைச்சலில் அன்றிரவு படுத்ததும் உறங்கி விட்டாள் அன்னம்.

மறுநாள் மீனாட்சி அன்னத்தை கிளம்ப வைத்து, மாப்பிள்ளையின் தாய் முன் கொண்டு வந்து நிறுத்த, குனிந்த தலை நிமிர்த்தாது மாப்பிள்ளையின் தாய் அளித்த புடவையை வாங்கி கொண்டு அறைக்குள் சென்றாள் அன்னம்.

அவளுக்கு சுத்தமாக பிடிக்காத வாடாமல்லி நிறத்தில் இருந்த அந்த புடவையை எரிச்சலுடன் பார்த்திருந்தாள் அன்னம்.

“இந்த ஆச்சு இந்த புடவையை தான் நேத்து அந்த புகழு புகழ்ந்துட்டு இருந்துச்சா?” என்று தலையில் அடித்து கொண்டாள்.

“நான் சென்னைக்கு போனதும் இந்த வீட்டுல எனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்றதை கூட மறந்து போய்ட்டாங்களா?” என்று கடுகடுத்தவாறு புலம்பிக் கொண்டிருந்தாள் அன்னம்.

அந்நேரம் அன்னத்தின் கைபேசியில் வாட்ஸ்அப் செய்தி வந்ததற்கான ஒலி வந்தது.

ஏதோ புதிய எண்ணிலிருந்து குறுஞ்செய்தி தொடர்ந்து வந்த வண்ணம் இருக்க, திறந்து பார்த்தாள் அன்னம்.

முதல் செய்தியே ஆடியோ மெசேஜாய் இருக்க, அதனை ஒலிக்க விட்டாள்.

அன்னமே அன்னமே நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று
உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததைச் சொன்னதா பூங்காற்று
உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்
உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன்
மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டுமெய்தொட்டு
உன்னில் என்னைக் கரைப்பேன்

நெஞ்சம் தூக்கி போட அதிர்ந்து போனாள் அன்னம்.

கண்ணிலிருந்து ஒரு துளி நீர் சட்டென இமையை விட்டு கீழிறங்கியது.

‘இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் உன் கழுத்துல நான் தாலி கட்டுற காட்சியும், உன்னை அணைச்சு நெத்துல முத்தமிடுற காட்சியும் தான் என் கண்ணுல வந்து போகும் அன்னம்’ அவன் அவளிடம் எப்பொழுதும் கூறும் அந்த சொற்கள் அவள் செவியை இப்பொழுதும் காற்றோடு வந்து தீண்டியதை போல் உணர்ந்தாள் அன்னம்.

மூச்சடைப்பதை போல் உணர்ந்தவள், ஜன்னலை திறந்துவிட்டு கம்பிகளை பற்றியவாறு வெளியே வெறித்து பார்த்தாள்.

அந்த வீட்டின் அருகில் இருக்கும் தோட்டத்தில் உள்ள பூக்களின் நறுமணத்தை காற்று சுவாசமாய் அவளின் நாசிக்குள் செலுத்தி சிந்தையை கலைக்க முயற்சித்த போதும், அன்னத்தின் மனதினுள் நிகழ்ந்து கொண்டிருந்த எண்ணச் சுழற்சியிலும் மனதின் வேதனையிலும் எந்நறுமணமும் அவளை சீண்டிட முடியாமல் காற்றோடு கலந்து தான் போனது.

“அன்னம்! அன்னம்” அழைத்தவாறு வந்தாள் மீனாட்சி.

“அன்னம் இன்னும் கிளம்பாம என்ன செய்ற?” எனக் கேட்டவாறே அறைக்குள் நுழைந்த மீனாட்சி, அன்னம் நின்றிருந்த கோலத்தை பார்த்து, “என்னடி இன்னும் புடவைய கட்டாம நிக்கிற?” எனக் கேட்டாள்.

“ஆமா நான் சீவி சிங்காரிச்சிட்டு அவர் முன்னாடி போய் நிக்கிறதுக்கு அப்படியே எனக்கு பிடிச்ச புடவையை வாங்கி கொடுத்துட்டாரு பாரு நான் கட்டிக்க போறவரு!” உதட்டை சுழித்தவாறு அன்னம் உரைக்க,

“ஆத்தீ இப்பவே இந்த பேச்சு பேசுறியே! உன் கூட ஃபோன்ல பேச ஆரம்பிச்சிட்டாருனா எனக்கு இந்த பொண்ணே வேணாம்னு அவரை ஓட வச்சிடுவ போலயே!” எனச் சிரித்தாள் மீனாட்சி.

“இல்லனா மட்டும் அவரை நான்‌ ஓட விட மாட்டேனாக்கும்” என புருவத்தை உயர்த்தியவாறு கேட்டாள் அன்னம்.

“நீ செஞ்சாலும் செய்வடி! கல்யாணத்துக்கு பிறகு ஓட விடுவியோ உட்கார விடுவியோ! அப்ப என்னனாலும் செய்யுடி! இப்ப கொஞ்சம் அடக்க ஒடுக்கமா நடிக்கவாவது செய்!
என்கேஜ்ட்மெண்ட் முடிஞ்சதும் அவர் ஃபோன் நம்பர் கேட்டு வாங்கி கொடுக்கலாம்னு நினைச்சேன். நீ பேசுற பேச்சுக்கு கொஞ்சம் யோசிக்கனும் தான் போலயே” என தாடையில் கை வைத்து யோசித்தவாறு மீனாட்சி கூற,

“ஆமா நீங்க பேசி வாங்கி கொடுக்கிற வரைக்கும் நான் பார்த்துட்டு இருப்பேன் பாருங்க. இந்த கைல மோதிரம் மாட்டின அடுத்த செகண்ட் அந்த கைல ஃபோன் நம்பரை வாங்கிட மாட்டேன். ஆச்சிக்காக தான் கொஞ்சமாவது அடக்க ஒடுக்கமா இருக்கலாம்னு இப்ப வரைக்கும் நம்பர் வாங்காம இருக்கேன்” வம்பளத்தாள் அன்னம்.

“நீ எதுவும் ஏடாகூடமா பேசி மாப்பிள்ளையை தெறிச்சி ஓட வைக்காம இருந்தா சரி தான். சரி நேரமாகுது பாரு! புடவையை கட்டு! இன்னும் இரண்டு மணி நேரத்துல ஃபங்ஷன் ஆரம்பிச்சிடுவாங்க. புடவையை கொடுக்க தான் மாப்பிள்ளையோட அம்மாவும் தம்பியும் முன்னாடியே வந்துட்டாங்க. மாப்பிள்ளை வெளியூர்ல இருந்து வந்துட்டு இருக்காராம். மேக்கப் போட பார்லர் அக்கா கொஞ்சம் நேரத்துல வந்துடுவாங்க” என்றவாறு மாப்பிள்ளை வீட்டார் எடுத்து கொடுத்த புடவையை அன்னத்தின் கையில் கொடுத்து விட்டு, கதவை சாற்றியவாறு வெளியே சென்றாள் மீனாட்சி.

ஹ்ம்ம் என்ற நீண்ட பெருமூச்சுடன் தாழ்ப்பாள் போட்ட அன்னத்தின் முகத்தில் இத்தனை நேரமாய் இருந்த சிரிப்பு காணாமல் போயிருக்க, முகத்தில் குழப்பமும் வேதனையும் சரிவிகிதமாய் பிரதிபலித்தன.

மெத்தையில் அமர்ந்து கைபேசியை கையில் எடுத்து பார்த்தவளுக்கு அவனுடனான முந்தைய குறுஞ்செய்திகள் எல்லாம் கண்ணில் பட, அவற்றை வாசிக்கும் போதே சுவாசம் தடைப்படுமளவு நெஞ்சம் விம்மி அடங்க, அதன் பொருட்டு விளைந்த கண்ணீரினால் உண்டான விம்மல் தொண்டையை அடைக்க செய்ய, கண்ணீரை துடைத்து விட்டு தண்ணீரை அருந்தியவள், திடமான முடிவெடுத்தவளாய் அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, அந்த அறையின் மறுபுறமாக இருந்த படிகட்டின் வழியாக வெளியே சென்றிருந்தாள்.

— தொடரும்