அழகிய அன்னமே 23 & 24

அன்று மாலை மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாத்திரக்கடையில் தனது அறையில் மாலை படம்பிடிக்க வேண்டிய காணொளிக்கான குறிப்புகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீனாட்சியிடம் வந்த ஈஸ்வரன், “ஆல் ஓகேவா?” எனக் கேட்டான்.
“ஆமாங்க! இன்னிக்கு கிளியரன்ஸ் சேல்ஸ் பத்தி தானே பேசப்போறோம். எந்தெந்த பிராடக்ட்டுக்கு எவ்ளோ ஒரிஜினல் பிரைஸ் எவ்ளோ ஆஃபர் பிரைஸ் அண்ட் ஒவ்வொரு பிராடக்ட்டும் எவ்ளோ பீஸ் இருக்குனும் எழுதியிருக்கேன். நீங்க ஒரு தடவை வெரிஃபை செஞ்சிக்கோங்க” என அவனிடம் தான் குறிப்பெடுத்து வைத்திருந்த தாளை கொடுத்தாள்.
தினமும் சுந்தரேஸ்வரன் மீனாட்சி இருவரும் இணைந்தே யூடியூப் நேரலையில் பங்குபெற்று தங்களது பெருட்களை பற்றி பேசினர். இருவருமே மதுரையில் பிரபலமான முகங்களாய் மாறியிருந்தனர்.
அவளளித்த தாள் மீது கண் இருந்தாலும், ஏதோ சிந்தனையில் இருந்த ஈஸ்வரனின் தோளை தொட்டு உலுக்கியவள், “என்னப்பா? என்ன யோசனைல இருக்கீங்க? ரஞ்சுவை வீட்டுல டிராப் பண்ணிட்டு வந்துட்டீங்க தானே” எனக் கேட்டாள்.
“ஹான் ஆமா ஸ்கூல்ல இருந்து பிக்அப் பண்ணி வீட்டுல அம்மாகிட்ட விட்டுட்டு வந்துட்டேன்” என்றவனிடம், “அப்ப இதை நீங்க சரி பார்த்துட்டீங்கனா நாமளும் வீட்டுக்கு போய் குழந்தைகிட்ட கொஞ்சம் நேரம் டைம் ஸ்பெண்ட் செஞ்சிட்டு டீ குடிச்சிட்டு கிளம்பி வரலாம்” என்றாள் மீனாட்சி.
“சரி நீ கிளம்பு! டீ குடிச்சிட்டு வந்து நாம இதை பார்க்கலாம்” என்றவன் அவளுடன் மகிழுந்தில் ஏறி வீட்டை நோக்கி வண்டியை ஓட்டினான்.
மீனாட்சி தனது முகநூலை பார்த்தவாறே அவனுடன் வண்டியில் பயணித்திருந்தவள், அதில் வந்திருந்த ஒரு பதிவை பார்த்து பக்கென சிரித்து விட்டாள்.
அவளின் சிரிப்பில் மென்னகை புரிந்தவனாய், “என்னாச்சு பச்சக்கிளி?” எனக் கேட்டான்.
“இந்த அன்னம் பொண்ணுக்கிருக்க லொல்லு இருக்கே!” என்று மீண்டுமாய் சிரித்தவள், அந்த பதிவை வாசித்தாள்.
“பத்து வருடங்களாய் இந்த பிராஜக்ட்டில் குப்பை கொட்டும் நீங்கள் எனக்கு காவியமாக தெரிகிறீர்கள்னு அவளோட சீனியருக்கு மீம்ஸ் போட்டுருக்கா” என்று சிரித்தவாறு ஈஸ்வரனிடம் அந்த மீம்ஸ்ஸை காண்பித்தாள். ஈஸ்வரனும் அதை பார்த்து வாய்விட்டு சிரித்திருந்தான்.
அன்னத்தின் முகநூல் பிரோபைலுக்குள் சென்று அங்குள்ள மற்ற பதிவுகளை பார்த்தவள், ஒவ்வொன்றாக வாசித்தாள்.
“நாலு மணி நேரம் ஸ்டேட்ஸ் மீட்டிங் வச்சி பேசி தள்ளிட்டு, அடுத்த நாலு மணி நேரத்துல எட்டு மணி நேர வேலையை செய்ய சொல்றீங்க பாருங்க! நீங்களாம் மனுசங்களே இல்லங்க” என்று வாசித்து விட்டு சிரித்தவள், “அய்யோ நான் வேலை செய்யும் போது என் மனசுல தோணினதுலாம் அப்படியே சொல்றாளே! இவ என் கூட வேலைக்கு சேராம போய்ட்டாளே! நம்ம சுந்தரை ஒரு வழியாக்கிருப்பா” என்று சிரித்தாள் மீனாட்சி.
“ஆமா யாரு இவளோட டி எல்? பாவம் தான் அவரு” என்று ஈஸ்வரன் கூற,
“ஆமா யாருனு தெரியலையே! ஃபேஸ்புக்ல இவளோட ஃப்ரண்ட் லிஸ்ட்ல இருக்க வாய்ப்பு இல்லை. அவரை வச்சிட்டே இப்படி போஸ்ட் போடுவாளா என்ன? அவ ஃபோன் செய்யும் போது அவகிட்டயே கேட்கிறேன் யாரந்த பாவப்பட்ட ஜீவன்னு” என்று சிரித்தவாறு உரைத்த மீனாட்சி,
“உன் டி எல் பேர் என்ன?” என்று அன்னத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்தி ஓசையில் அதனை எடுத்து பார்த்த அன்னம், ‘நாமளே கால் செய்யலாம்னு நினைக்கும் போது அவளே மெசேஜ் செய்றாளே’ என்றெண்ணியவளாய் குறுஞ்செய்தியை படித்தவளின் முகம் யோசனையில் சுருங்க,
“இவ எதுக்கு இப்ப என் டி எல் பேரை கேட்குறா? ஒரு வேளை இவளுக்கு நம்ம மேட்டர் தெரிஞ்சிருக்குமோ? அவ்ளோ ஸ்பீடாவா நியூஸ் பரவிடுச்சு?” என்றெண்ணிவளாய்,
“இன்பா” என்று அனுப்பியவள்,
அடுத்ததாய் இரண்டு மூன்று முறை டைப் செய்து அழித்து என வேறு எதையோ அனுப்ப எண்ணி தடுமாறியவள்,
‘இவகிட்ட உண்மையை சொல்லிடுவோமா’ என்று யோசித்துக்கொண்டே இருக்க,
அன்னத்தின் முகநூலில் தான் பார்த்த டீம் லன்ச் போட்டோவை அனுப்பி, “இதுல யாருடி உன் டி எல்” எனக் கேட்டாள் மீனாட்சி.
அதனை பார்த்து பெருமூச்செறிந்தவளாய், “மீனு நான் ஒருத்தரை காதலிக்கப் போறேன்னு சொன்னேன்ல அவரும் இந்த பிக்ல தான் இருக்காரு” என்று அன்னம் அனுப்பிய செய்தியை படித்த மீனாட்சி,
“உனக்கு எப்பவுமே விளையாட்டு தான்டி! லவ் பண்ற மூஞ்சியை பாரு! நீ லவ் பண்ணப் போறேன்னு சொன்னதையே நான் நம்பலை இதுல அவர் இந்த போட்டோல வேற இருக்காரா! இப்படி நீ விளையாடுறது தெரிஞ்சாலே ஆச்சி உன்னை சூப் வச்சிடுவாங்க!” என்று வாய்விட்டு சிரிக்கும் ஸ்மைலிக்களை அனுப்பிய மீனாட்சி,
ஈஸ்வரனிடம், “இந்த அன்னத்துக்கு வந்த மாப்பிள்ளை ஜாதகத்தை பார்க்க சொன்னது என்னாச்சுனு ஆச்சிக்கிட்ட கேட்கனும். எப்ப பார்த்தாலும் லவ் பண்ண போறேன்னு ஒரே விளையாட்டு தான்” என்றவாறு அவனுடன் வீட்டின் உள்ளே சென்றாள்.
******
ஜெர்மனியில் சிலுசிலுவென மழை வெளியே தூறிக்கொண்டிருக்க, ராஜன் தனது மகளை பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அவள்.
நங்கை ஓய்வறையில் இருந்து இலகுவான உடையை மாற்றி விட்டு வெளியே வர, அவளை கைகளில் அள்ளியவன், கட்டிலில் அவளுடன் சேர்ந்து சாய்ந்தான்.
“டேய் பகல் நேரத்துல என்ன வேலை பார்க்கிற” என்று நங்கை அவனை முறைக்க, “அப்புறம் பெருமாள் கிட்ட வச்ச வேண்டுதலை நிறைவேத்த வேண்டாமா! நான் தானே அதுக்கு ஓவர் டைம் வேலை பார்க்கனும்” என்று அவள் முகத்தோடு அவன் மீசை உரச, ஒலித்தது நங்கையின் கைபேசி.
“யார்டா அது கரடி இந்த நேரத்துல” என்று ராஜன் கடுப்பாய் எடுத்து பார்க்க, அன்னம் தான் அழைத்திருந்தாள்.
சிரித்தவாறு அவனை தள்ளிவிட்டு எழுந்த நங்கை கைபேசியை எடுத்து பேசினாள்.
“மிச்சமிருக்க வாழ்க்கையோட இன்பமும் துன்பமும் நாம தேர்ந்தெடுக்கிற பார்ட்னரை பொறுத்து தான் இருக்கு அன்னம். இந்த முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சிருப்பனு நம்புறேன். நாங்க சென்னை வந்தப்பிறகு சொல்றோம். பேசலாம்” என்றவாறு இணைப்பை துண்டித்து விட்டாள்.
கைபேசியை வைத்தவளின் முகம் யோசனையில் இருக்க, “என்னாச்சு? எனிதிங்க் சீரியஸ்?” எனக் கேட்டான்.
ஒன்னுமில்லை என்றவள், அமைதியாய் எதையோ சிந்தித்தவண்ணம் அமர்ந்திருக்க, ராஜன் தன்னையே வெறித்து பார்ப்பதை பார்த்தவள்,
“ஒன்னுமில்லடா! நீ ஏன் இவ்வளோ சீரியஸா என்னை பார்க்கிற? அவ யாரையோ லவ் பண்றாளாம்! நாம தான் அவ வீட்டுல பேசி ஒத்துக்க வைக்கணும்னு சொன்னா! யாரு? எந்த பையனை லவ் பண்றானு தெரியாம நான் எப்படி நம்பிக்கையா அவகிட்ட பேசுறது! ஊருக்கு வந்ததும் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டேன்” என்றவள் சொன்னதும்,
“ஹப்பா இதுக்கு தான் இவ்வளோ யோசனையா! யாரை லவ் பண்றாளாம்?” என்று ராஜன் கேட்க,
“தெரியலைடா! எதையும் கேட்டு வெகேஷன் மூடை ஸ்பாயில் செய்ய மனசில்லை. அங்க போனப்பிறகு கேட்டுக்கலாம்னு விட்டுட்டேன். மீனுக்கிட்ட லவ் பண்றதை பத்தி சொல்லப்போறேன்னு சொன்னாள். நாம சென்னைக்கு போய் அந்த பையனை பார்த்து பேசிய பிறகு மத்தவங்ககிட்ட சொல்ல சொல்லிருக்கேன். அந்த பையனை பத்தி நாம முதல்ல விசாரிக்கலாம் சுந்தர்” என்றாள்.
“ஓகே பப்ளிமாஸ்! ஆனா நீ ஏன் இவ்வளோ யோசிக்கிற? பதட்டப்படுற” எனக் கேட்டான்.
“தப்பானவனை லவ் பண்ணிட கூடாதேனு பயமா வருது! துருதுருனு வாழ்க்கையோட நல்லது கெட்டது எதுவும் தெரியாத வெள்ளந்தியான பொண்ணு! இப்ப தான் வேலைக்கு சேர்ந்து ஆறேழு மாசம் ஆகப்போகுது. அதுக்குள்ள லவ் பண்றேன்னு வந்து நிக்கிறாளேனு யோசனையா இருக்கு! நான் லவ் பண்றேன்னு சொல்லும் போது அம்மாவுக்கும் இப்படி தானே இருந்திருக்கும்” என்று நங்கை ராஜனின் முகத்தை பார்த்தவாறு கூற, அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டான்.
“உதை வாங்க போற பாரு! நீ எதுக்கு இப்ப தேவையில்லாததுலாம் யோசிக்கிற?” என்று அவளை அவன் கண்டிக்க, “நீ ஏன்டா முதல்லயே என்னை லவ் பண்ணாம போய்ட்ட!” என்று கேட்டவாறு அவனை இறுக அணைத்துக் கொண்டாள் அவள்.
அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவனின் ஆளுகைக்குள் விரும்பியே தன்னை கொடுத்தவள் சுற்றம் மறந்து இவ்வுலகம் மறந்து அவனின் காதலுக்குள் உருகி கரைந்திருந்தாள். உருகச் செய்திருந்தான் அவன்.
தேடலின் நிறைவில் முகம் நிறைந்த பொலிவுடனும் வெட்கச்சிரிப்புடனும் மார்போடு சாய்ந்திருந்தவளை அவன் வருடியவாறு இருக்க, “எப்படியாவது என்னை மயக்கிடுறடா நீ!” என்று அவனது கன்னத்தை வருடியவள் சிரிக்க, வெட்கச்சிரிப்பை உதிர்த்தான் அவன்.
*****
“நீ லவ் பண்ற அந்த அன்னம் பொண்ணு வீட்டுக்கு ஒரே பொண்ணு தானே! அவளை கட்டிக்கிட்ட பிறகு அவளோட சொத்துலாம் உனக்கு தானே வரும். அதை வித்து நம்ம கடனைலாம் அடைச்சிடலாம்ல மோகன்” என்றொரு பெண்மணி குரல் கேட்டு அப்படியே நின்று விட்டாள் அன்னம்.
இன்பாவிற்கு விஷயம் தெரிந்து விட்டதை மோகனிடம் கூறுவதற்காக அவனது வீட்டிற்கு வந்திருந்தாள் அன்னம்.
அன்னத்திற்கு ஷிப்ட் இல்லாத பிராஜெக்ட் கிடைத்த மறு வாரமே ருத்ரன் அன்னத்திற்கு இரு சக்கர வாகனத்தை வாங்கி கொடுத்தார்.
தனது வண்டியிலேயே மோகனின் வீட்டிற்கு சென்றிருந்தாள் அன்னம்.
மோகன் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவனது வீட்டை நோக்கி சென்றவள், அந்த வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாக கேட்ட இந்த பெண்மணியின் குரலில் அப்படியே நின்று விட்டாள்.
ஸ்பீக்கரில் கைபேசியை வைத்து விட்டு பேசியவாறு அடுப்பில் எதையோ கிண்டிக் கொண்டிருந்த மோகனை ஜன்னல் வழியாக பார்த்தவளுக்கு அவனது தாயிடம் பேசிக் கொண்டிருக்கிறான் என புரிந்தது.
சமையலறையில் ஜன்னலின் மறுபுறமாக நின்று வேலை செய்துக் கொண்டிருந்தவனோ இவளை பார்க்கவில்லை.
“அதெல்லாம் கல்யாணத்துக்கு பிறகு பார்த்துக்கலாம். இப்ப இந்த மாச வட்டியை எப்படி கட்டுறதுனு பாரும்மா” என்று மோகன் கூறவும்,
மேலும் அதிர்ச்சியாகி போனது அவளுக்கு. இப்படி பேசாதே என தாயை அதட்டாமல், இவனும் அதற்கு சம்மதிப்பது போல் பேசுகிறானே என கவலையும் அதிர்ச்சியுமாக அங்கிருந்து சென்று விட்டாள் அவள்.
அன்றிரவு மோகன் அவளை அழைக்க, எடுத்து பேசியவளின் முதல் கேள்வியே, “என் சொத்துக்காக தான் என்னை காதலிக்கிறியா?” என்பது தான்.
“ஏன் அன்னம் அப்படி கேட்குற?” வலிய வரவழைக்கப்பட்ட சோகத்துடன் அவன் கேட்க,
“உங்கம்மா பேசியதை கேட்டேன்” என்று தான் கேட்டதையும் கண்டதையும் அவனிடம் கூறினாள்.
“அம்மா எப்பவுமே அப்படி தான் அன்னம். அவங்களை அந்த நேரம் சமாதானம் செய்றதுக்காக அப்படி சொன்னேன். பொண்டாட்டி சம்பாதிச்சு சாப்பிடுறவன் ஆம்பிளையே இல்லைனு நினைக்கிற ஆள் நான். இதுல உன் சொத்தை வாங்குவேனா!” என்றவன் கூறியதும் மேலும் கோபமாகி போனது அவளுக்கு.
“ஓஹோ பொண்டாட்டி காசுல சாப்பிடுறவன்லாம் ஆம்பிளையே இல்லையோ! யூ பிளடி மேல் சாவினிஸ்ட் (male chauvinist) இப்படி ஒரு ஆணாதிக்கவாதியா நீ இருப்பனு நான் நினைக்கலைடா” என்றவள் இணைப்பை துண்டித்தாள்.
முதல் முறையாக இவனை காதலித்தது தவறோ என யோசிக்க தொடங்கினாள் அன்னம்.
அன்றிரவு முழுவதும் தொடர்ந்த அவனது அழைப்புகள் எதையும் அவள் எடுக்கவேயில்லை.
அத்தியாயம் 24
மறுநாள் காலை அன்னம் அலுவலகத்தின் தரிப்பிடத்தில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்த, அவள் முன் வந்து நின்றான் மோகன்.
“ஹே சாரி அன்னம்! நீ சம்பாதிக்கிற காசுல தான் குடும்பமே நடத்தனும்னு சொன்னாலும் எனக்கு ஓகே தான். உனக்கு என்னலாம் பிடிக்குமோ அதை மட்டும் தான் நான் செய்வேன்! சரியா! பிலீவ் மீ பேபிமா” என்று அவளின் கைகளை பற்றிக்கொண்டு கொஞ்சலும் கெஞ்சலுமாய் அவன் பேசியதில் சற்றாய் இளகியது அவளின் மனம்.
இருந்தாலும் அவனிடம் பேசாது முறுக்கி கொண்டு சென்றவளின் கைப்பிடித்து நிறுத்தியவன், “நீ நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் ஆணாதிக்கவாதிலாம் இல்லை அன்னம். நான் வேணா உனக்கு சைன் பண்ணி தரேன்” என்றான்.
“என்ன சைன்?” என்றவள் கேட்க,
“உனக்கு பிடிக்காததை செய்ய மாட்டேன். உன் விருப்பம் போல் உனக்கு பிடிச்சதை நீ செய்யலாம். நான் தடுக்க மாட்டேன். அப்புறம்…. உங்க வீட்டு சொத்துல ஒரு காசு நான் வாங்க மாட்டேன். இப்படி எல்லாம் ஒரு பத்திரத்துல எழுதி சைன் போட்டு தரேன்” என்றான்.
நிஜமாவா என்பது போல் அவள் அவனை பார்க்க, “ஆமா அன்னம். எனக்கு உன்னை விட வேற எதுவும் பெரிசில்ல அன்னம். ப்ளீஸ் என்னை நம்புமா” என்று கெஞ்சவும்,
“ஓகே கண்டிப்பா இப்படி ஒரு அக்ரிமெண்ட் போட்டுக்கலாம்” என்றவள்,
“சரி வா சாப்பிடலாம்” என்றவாறு அவனுடன் சென்றாள்.
“உஃப்” என பெருமூச்சு விட்டவனாய் அவளுடன் சென்றவனின் மனமோ, ‘கல்யாணம் ஆகட்டும்டி! உன்னை கவனிச்சிக்கிறேன். அது வரைக்கும் அடக்கி வாசிக்கனும்’ என்று மனதோடு எண்ணிக் கொண்டான்.
அன்று மாலை அன்னத்திற்கு அழைத்த மோகன், “அன்னம் இந்த வீக்கெண்ட் டூர் பிளான் செஞ்சிருக்காங்க” என்று உற்சாகமாய் உரைத்தான்.
“யாரு பிளான் செஞ்சிருக்காங்க?” என்று அவள் கேட்க,
“இன்பா அண்ட் செல்வா பிளான் செஞ்சிருக்காங்க. அவங்களுக்கு கீழே இருக்க பிராஜக்ட் டீம் மெம்பர்ஸ் எல்லாரும் வருவாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இன்பா மெயில் அனுப்புவாரு” என்றான்.
“வாவ்! எங்க போறோம்” என்றவள் குதூகலமாய் கேட்க,
“கூர்க்” என்றான்.
இன்பச் சுற்றுலாவாய் எண்ணி அவள் குதூகலிக்க, அவளுக்கு மோகனின் முகத்திரையை கிழித்து காண்பிக்க காத்திருந்தது இந்த சுற்றுலா.
—–
வீட்டினர் அனைவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினாள் அன்னம். பணியாளர்கள் அனைவரும் ஒன்றாக ஒரு இரவு பேருந்தில் பயணித்த வண்ணம் சென்றனர் அந்த சுற்றுலாவிற்கு.
மோகனுடன் அன்னம் ஒன்றாக பயணிக்க கூடாது என தீர்க்கமாக இருந்த இன்பா, அன்னத்தையும் செல்வாவின் குழுவில் இருந்த ஒரு பெண்ணையும் ஓர் இருக்கையில் அமர வைத்தான்.
காலை கூர்க்கை வந்தடைந்ததும் ஏற்கனவே புக் செய்திருந்த அறைக்கு சென்றனர். அங்கு பெண்களுக்கு தனியறை ஆண்களுக்கு தனியறை என ஒதுக்கி அளித்து, குளித்து முடித்து அனைவரையும் வரவேற்பறைக்கு வந்து காத்திருக்க சொன்னார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்.
அங்கு சென்ற பிறகும் மோகனை தனித்து சந்திக்கும் வாய்ப்பெல்லாம் அவளுக்கு கிடைக்கவே இல்லை.
அனைவரும் ஒன்றாக குழுக்களாகவே வெளியே சுற்றி பார்த்து விட்டு வந்தனர்.
அன்றிரவு தங்கி விட்டு மறுநாள் காலை ஓர் அருவியை பார்த்து விட்டு அங்கிருந்து அப்படியே சென்னைக்கு கிளம்பலாம் என முடிவு செய்திருந்தனர்.
அன்றிரவு கேம்ப்ஃபயர் (camp fire) அமைத்து அதனை சுற்றி அனைவரும் அமர்ந்திருக்க, அந்தாக்ஷரி நடைப்பெற்றது. சில மணி நேர பாடல் ஆடலுக்கு பிறகு ஆண்கள் சிலர் தங்களுக்குள் பேசிக் கொண்டு எழும்ப, அதிலிருந்த ஒருவர், “மோகன் நீ வரலையா?” என சற்று தூரமாய் தள்ளி அமர்ந்திருந்தவனை நோக்கி கேட்டார்.
அவர் அவ்வாறு கேட்டதும் பதட்டமடைந்தவனாய், “இல்ல இல்லண்ணா! நீங்க போங்க” என்றான்.
அச்சமயம் அவனின் கைபேசி அலற, அதனை எடுத்து பார்த்தான்.
“என்னடா திடீர்னு திருந்திட்டியா?” என்று கேலி செய்தவராய் அவர் செல்ல,
கைபேசியில் பேசியிருந்தவன் அதனை கவனிக்கவில்லை.
அன்னம் புரியாமல் விழித்தாள்.
அன்னத்தின் அருகில் அமர்ந்திருந்த பெண், “ஆரம்பிச்சிட்டாங்களா?” என்றாள்.
“என்னது ஆரம்பிச்சிட்டாங்க?” என்று புரியாது அன்னம் கேட்க,
“தண்ணியடிக்க போறாங்க அன்னம். லாஸ்ட் டைம் டிரிப் வந்தப்ப இவங்க தண்ணி அடிச்சிட்டு செஞ்ச கூத்தை பார்த்துட்டு அவ்ளோ சிரிப்பு” என்றாள்.
“என்னது தண்ணியடிப்பாங்களா?” ஆச்சரியமாக அன்னம் கேட்க,
“என்ன ஆச்சரியமா கேட்குற! ஆபிஸ் டிரிப்ல தண்ணியடிக்காத பசங்களை விரல் விட்டு எண்ணிடலாம்” என்றாள் அப்பெண்.
“அவர் ஏன் மோகனை கூப்பிட்டாரு? அவன் தண்ணி அடிப்பானா?” எனக் கேட்டாள்.
“அடிப்பானாவா? அடிச்சிட்டு உளருவான் பாரு! நம்ம வயித்தை பிடிச்சிட்டு சிரிக்கலாம். குடிக்காரன் பேச்சு அச்சரம் பிசகாம வரும் அவனுக்கு” என்றாள் அப்பெண்.
அப்படியே அதிர்ந்தவளாய் மோகனை அவள் பார்க்க, அவளை நோக்கி வந்த மோகன், “தம்பிக்கு ஆக்சிடெண்ட்டாகி ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்கலாம். நான் உடனே கிளம்பி ஆகனும். இன்பாக்கிட்ட சொல்லிட்டேன். நம்ம டீம்ல யாரும் கேட்டா சொல்லிடு” என்று அன்னத்திடமும் அப்பெண்ணிடமும் பொதுவாய் உரைத்து விட்டு கிளம்பினான்.
“அச்சோ தம்பி எப்படி இருக்காங்க” என்று அப்பெண் கேட்க,
“ரொம்ப அடிலாம் இல்ல. கால்ல ஃபிராக்சர் போல. அப்பா வெளியூர் போயிருக்காங்க. அம்மா தனியா இருக்காங்க. அதான் உடனே கிளம்புறேன்” என்றான்.
“இப்ப எப்படி போவ? பஸ் இருக்கா?” மீண்டுமாய் அப்பெண் கேட்க, “அப்படியே வழில வர பஸ்ல ஏறி போய்டுவேன். சரி பார்க்கலாம்” என்றவாறு கிளம்பினான்.
‘அன்னம் ஏன் எதுவும் பேசலை. ஒரு வேளை என்னை காதலிக்கிறது யாருக்கும் தெரிய கூடாதுனு பேசாம இருந்தாளோ! ஆனா காலைல வெளில போகும் போதுலாம் எல்லார் முன்னாடியும் கேசுவலா பேசினாளே! சரி எதுவா இருந்தாலும் அப்புறம் அவளுக்கு போன் செஞ்சி பேசிக்கலாம்’ என்றெண்ணிக் கொண்டவனாய் கிளம்பி போனான்.
“ஹ்ம்ம் வந்துட்டு இப்படி பாதிலேயே போறானே! அதான் தண்ணி அடிக்க வரலைனு அவர்கிட்ட சொன்னான் போல! நம்ம ஆபிஸ்லயே வெள்ளிக்கிழமையானா தண்ணியடிக்க போற கிரூப் ஒன்னு இருக்கு அன்னம். இவனும் அவங்க கூட அப்பப்ப போவான். அவங்களுக்கு அதுல அப்படி என்ன சந்தோஷம்னு தெரியலை. ஃபிரைடே தண்ணியடிக்கிற பிளான் கன்ஃபர்ம்னு சொல்லும் போதே அவங்க முகத்துல அப்படி ஒரு சந்தோஷம் வரும்” என்ற அப்பெண், தொடர்ந்து அந்நிகழ்வுகளை கூறிக் கொண்டிருக்க,
நெஞ்சம் வேகமாய் துடிதுடித்து கொண்டிருந்தது அன்னத்திற்கு.
‘பொய் சொல்லிருக்கான். இப்ப இதை பத்தி கேட்டாலும் அதுக்கு ஒரு காரணம் சொல்லுவான்’ என்றது அவளது மூளை.
எதையும் சிந்திக்கும் திறனற்று கண்களில் பொங்கும் கண்ணீரை உள்ளிழுத்தவாறு அமைதியாக அப்பெண் பேசுவதை கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்த அன்னம், “சிறிது நேரம் கழித்து ரொம்ப தலை வலிக்குது! நான் போய் படுத்துக்கிறேன்” என்று அறைக்குள் சென்று தனக்களித்த மெத்தையில் படுத்தவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.
‘இப்படியே அழுதுட்டு படுத்திருந்தா காலைல கண்ணுலாம் வீங்கி தன்னை காட்டிக்கொடுத்திடுமே’ என்று மூளை அறிவுறுத்த, கழிவறை சென்று முகத்தை நன்றாக கழுவி விட்டு தலைவலி மாத்திரை போட்டவள், “ஆல் இஸ் வெல்! ஆல் இஸ் வெல்” என தனது நெஞ்சை தடவியவாறு தனக்கு தானே கூறிக் கொண்டவளாய் உறங்கி போனாள்.
*****
மறுநாள் மாலை சென்னை அடைந்ததும் நங்கை சென்னைக்கு வந்து விட்டாளா என அன்னம் கேட்க, அப்பொழுது தான் ஜெர்மனியிலிருந்து வந்து வீட்டிற்குள் நுழைந்ததாய் நங்கை கூறவும், அங்கு வருவதாக கூறி நேராக நங்கையின் இல்லத்திற்கு சென்று விட்டாள் அன்னம். ருத்ரனுக்கு அழைத்து தெரிவித்து விட்டாள்.
நங்கையின் வீட்டிற்கு சென்ற நொடி, அவளை அணைத்து அழுதிருந்தாள் அன்னம்.
“என்னமா? என்னாச்சு? இந்தளவுக்கா என்னை மிஸ் செஞ்ச நீ?” என சிரிப்பாய் நங்கை கேட்க, ராஜனும் சிரித்தான்.
இல்லையென தலையசைத்தவளின் கண்ணீர் பொங்கி பெருக, விஷயம் பெரிதென புரிந்தது இருவருக்கும்.
ஏற்கனவே யாரையோ காதலிப்பதாக கூறியுள்ளாளே! அது சம்பந்தபட்டதாக தான் இருக்கும் என புரிந்து கொண்ட ராஜன், “அவளை கெஸ்ட் ரூம்க்கு கூட்டிட்டு போ நங்கை. பாப்பா நம்ம ரூம்ல தூங்கிட்டு இருக்காளே! அவளை நான் பார்த்துக்கிறேன்” என்றான்.
அறைக்கு சென்று மெத்தையில் அவளை அமர வைத்து குடிக்க நீர் அளித்து அவளை ஆசுவாசப்படுத்தியவள், “இப்ப விஷயத்தை சொல்லு” என்றாள்.
மோகனின் காதலை ஏற்றுக்கொண்டது முதல் நேற்று நடந்தது வரை நங்கையிடம் உரைத்தாள்.
“நீ சொல்றதை வச்சி பார்த்தா அவனை நல்லவனாவே யோசிக்க முடியலையே அன்னம்” என்றாள் நங்கை.
“அவனை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணி. இப்ப தான் காதலிக்கிறேன்னு பேசினாலும் ஃப்ரண்ட்டாவே அவனை ரொம்ப பிடிக்கும். என்னை கஷ்டப்படுத்தி பார்க்க லாம் அவனால முடியாது. அந்த அன்பு அவனை மாத்திடும்னு தான் அவன் ஆணாதிக்கவாதி மாதிரி பேசும் போதெல்லாம் நினைச்சிப்பேன். ஆனா தண்ணி அடிக்கிறதை மறைச்சி பொய் சொல்லிருக்கான். நிம்மதியான வாழ்க்கைக்கு அடிதளமே நம்பிக்கை தானே அண்ணி. அந்த நம்பிக்கையே இப்ப அவன் மேல் இல்லாம போய்டுச்சு அண்ணி. பொய் சொல்லி ஆரம்பிக்கிற உறவு எப்படி நிலைச்சு நிற்கும்னு மனசு விட்டுப் போச்சு அண்ணி! ஒரு மாதிரி ஏமாந்துட்ட ஃபீல் அண்ணி” என்று அழுகையில் தேம்பியவாறு அவள் கூறவும், அவளை அணைத்தவாறு முதுகை தடவி ஆற்றுப்படுத்தினாள் நங்கை.
“இப்படி தான் சில பசங்க ஃப்ரண்ட்டா இருக்கிற வரைக்கும் ரொம்ப நல்லவனா இருப்பாங்க. காதல் கல்யாணம்னு வந்தா தான் அவங்களோட உண்மையான சொரூபமே தெரியும். நீ ரொம்ப யோசிக்காம தூங்குடா. சுந்தர்கிட்ட சொல்லி அவனை பத்தி விசாரிக்க சொல்றேன். நீயா எதுவும் யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காத” என்று ஆறுதல்படுத்தியவள் அவளுக்கு உண்ண உணவினை எடுத்து வந்து கொடுத்தாள்.
அன்னம் உறங்கும் வரையில் அவளுடன் ஜெர்மனி கதைகளை எல்லாம் பேசிய நங்கை, “நாங்க அங்க டிவி ஆக்டர் சிவாவை பார்த்தோம்” என்றாள்.
நங்கை கூறியதை கேட்டு அன்னத்தின் முகம் பொலிவுற, “அவரையா பார்த்தீங்க. அவர் எனக்கு நல்ல ஃப்ரண்ட் தெரியுமா?” என்றவள் அவரிடம் பேசிய தருணங்களை கூறியவள்,
“ஒரு பொண்ணுக்கிட்ட ரொம்ப கோபமா பேசினாரு சிவா! அதை பார்த்ததுலருந்து தான் அவர்கிட்ட பேசுறதை குறைச்சிக்கிட்டேன். ஒரு மாதிரி பயம் வந்துடுச்சு அவர் மேல” என்றாள்.
அன்னத்திடம் பேசி இலகுவாக்கி அவளை உறங்கி வைத்து விட்டு தனது படுக்கையறைக்கு சென்ற நங்கை, சுந்தரராஜனிடம் அன்னம் உரைத்தவைகளை கூறினாள்.
தாங்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒருவர் பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி வைத்திருப்பதாகவும் அவரின் மூலம் மோகனை பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ளலாம் என்றும் கூறிய சுந்தரராஜன், மறுநாளே அதற்கான ஏற்பாட்டை செய்தான்.
அன்னம் உடல்நிலை சரியில்லையென கூறி அலுவலகத்தில் ஒரு வாரம் மருத்துவ விடுப்பு எடுத்தாள். நங்கையுடனும் நந்திதா குழந்தையுடனும் பொழுதை போக்கினாள் அன்னம்.
வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்து கொண்டிருந்த நங்கையின் எண்ணிற்கு அழைத்த மீனாட்சி, “இந்த அன்னம் ஃபோனுக்கு என்னாச்சு நங்கை? ஸ்விட்ச் ஆஃப்னே வருது. அப்பாக்கு ஃபோன் செஞ்சி கேட்டேன்! உங்க கூட இருக்கிறதா சொன்னாரு” என்றாள்.
“ஆமா மீனு! இங்க தான் இருக்கா! பேசுறீங்களா?” என்றவள் கேட்க,
“இல்ல முதல்ல உங்ககிட்ட பேசுனும். மாமா வீட்டுல அன்னத்துக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க. எல்லாமே பொருந்தி வருதுனு சொன்னாங்க. மாப்பிள்ளை பத்தியும் விசாரிச்சிட்டாங்களாம். இரண்டு பக்கமும் ஓகே ஆகிடுச்சு. இந்த வாரமே சின்னதா நிச்சயம் மாதிரி வச்சிக்கலாம்னு மாப்பிள்ளை வீட்டுல கேட்குறாங்களாம். மூனு மாசத்துல கல்யாணம் வச்சிக்கலாம்னு சொல்றாங்களாம். அவ என்ன சொல்றானு கேட்க தான் செஞ்சேன். அந்த மாப்பிள்ளை அவளுக்கு தெரிஞ்சவங்க தான். சர்ப்ரைஸ்ஸா நிச்சயத்தன்னிக்கே பார்க்கட்டும்னு மாப்பிள்ளை பிரியப்படுறாரு. அதனால மாப்பிள்ளை பத்தி எதுவும் கேட்டா மட்டும் சொல்லுங்க நங்கை இல்லனா சொல்ல வேண்டாம்” என்று மாப்பிள்ளையின் விவரங்களை நங்கையிடம் உரைத்தாள்.
மாப்பிள்ளை பற்றி அறிந்த நங்கைக்கும் சந்தோஷம். அந்த மாப்பிள்ளை பற்றி விசாரிக்கவும் சுந்தரராஜனிடம் தெரிவித்தாள் நங்கை.
— தொடரும்