அழகிய அன்னமே 21 & 22

மோகனிடம் காதலை மொழிந்து ஒரு வாரம் கடந்திருந்தது.
அன்றாடம் காலை, இரவு ஷிப்ட் முடிந்தப் பின்னும் வீட்டிற்கு செல்லாது காலை அவள் அலுவலகம் வரும் வரை காத்திருப்பவன், அவளை சந்தித்து பூ, சாக்லேட் போன்று ஏதாவது பரிசளித்து விட்டு, அவளுடன் காலை உணவை உண்டு விட்டே வீட்டிற்கு செல்வான்.
இரவு நேரங்களில் அவளுடன் கைபேசியில் பேசியவாறே வேலையை செய்வான்.
பகல் வேளையில் புதிய பிராஜக்ட்டில் கற்றுக்கொள்ள நிறைய இருந்ததால், ஓய்வில்லாமல் உழைக்கும் நிலையில் இருந்தாள் அன்னம். இரவில் மோகனிடம் மட்டும் பேசுபவள் வேறு எவரிடத்திலும் பேசவே இல்லை.
இந்த பணிச்சுமையும் அவனுடனான அளாவல்களிலும், ஆசை பேச்சுகளும் காதல் பாஷைகளுமான உரையாடல்களிலும் அவளை அழுத்தாது இன்பமாய் கடக்க செய்தது.
அந்த வாரயிறுதி நாளில், மோகனுடன் கடற்கரைக்கு செல்வதாய் ருத்ரனிடம் உரைத்து விட்டே சென்றாள் அன்னம்.
மோகன் வெளியே வண்டியில் நிற்பதாய் உரைத்திருக்க, அவன் எங்கிருக்கிறானென அறிய அவனது கைபேசிக்கு அன்னம் அழைக்க, அவள் முன் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து நின்றான் மோகன்.
உந்தன்காலின்மெட்டிபோல் கூட நடப்பேன்
உந்தன்கண்ணுக்குக்கண்ணீர்போல்காவல்இருப்பேன்
மாலை சூடிதோளில்ஆடிகைதொட்டுமெய்தொட்டு
உன்னில்என்னைக்கரைப்பேன்
இன்னும் அலறிக் கொண்டிருந்த அவனது கைபேசி பாடி முடித்து தானாக நிறுத்தும் வரை இணைப்பை துண்டிக்காமல் கேட்டிருந்தாள் அன்னம்.
அவனின் வண்டியில் பின்னால் ஏறி அமர்ந்தவள், “உன்னாலேயே எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிச்சி போச்சுடா” என்றாள்.
“இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் உன் கழுத்துல நான் தாலி கட்டுற காட்சியும், உன்னை அணைச்சு நெத்தில முத்தமிடுற காட்சியும் தான் என் கண்ணுல வந்து போகும் அன்னம்” என்ற அவனின் ஆழ்ந்த காதல் சொல்லில் பூரித்து போனாள் அன்னம்.
முகம் மகிழ்வின் நெகிழ்வில் மின்னியது. அத்தகைய இன்பமான மனநிலையுடனே கடற்கரைக்கு சென்றனர் இருவரும்.
அமைதியாக கடலை வெறித்தவாறு அமர்ந்து பேசியவர்கள், தங்களுக்கு பிடித்த அனைத்தையும் வாங்கி உண்டு விட்டு, சில தூரங்கள் ஈர மணலில் கால்கள் புதைய நடந்தனர். தனது தாய் மற்றும் தம்பியிடம் தோழியெனக் கூறி அவளை கைபேசியில் பேச வைத்திருந்தான் மோகன்.
ஞாயிறன்றும் இருவருமாய் வண்டலூர் பூங்காவிற்கு சென்று வந்தனர்.
அன்று தான் தங்கியிருக்கும் அறைக்கு அவளை அழைத்து சென்றான் மோகன்.
“பேச்சுலர் ரூம் மோசமா தான் இருக்கும். நீ பார்க்கனும்னு அடம் பிடிச்சதால கூட்டிட்டு போறேன்” என்று கூறியவாறே தன்னுடைய வண்டியில் அவளை அழைத்து சென்றான்.
அன்னம் மோகனுடன் வண்டியில் அவனறை நோக்கி சென்ற போது, தனது மனைவியுடன் மகிழுந்தில் பயணித்திருந்த இன்பாவின் பார்வையில் விழுந்தாள்.
மோகனின் தோளில் கைகளை போட்டவளாய், அவனிடம் பேசியவாறு சென்றவளின் முகத்தில் இருந்த பூரிப்பும் மகிழ்வும் இன்பாவின் புருவத்தை யோசனையில் சுருங்க செய்தது.
தனது அறைக்கு அழைத்து சென்றவன், அங்கிருந்த தோழர்களை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
சமையலறையில் ஆங்காங்கே இருந்த பாட்டில்களை பார்த்து அதிர்ந்தவளாய், உடனே கிளம்புவதாய் கூறி அங்கிருந்து வெளியே வந்து விட்டாள்.
அவளது வீட்டினில் விடுவதற்காக தனது வண்டியில் அவன் அழைத்து செல்ல, “நீ தண்ணி அடிப்பியா மோகன்?” எனக் கேட்டாள்.
“ச்சே ச்சே எனக்குலாம் அந்த பழக்கமே கிடையாது. அது ரூம்ல பசங்க சரக்கு அடிச்ச பாட்டில்” என்றான் மோகன்.
“அதானே பார்த்தேன். எங்க குடும்பத்துல யாருக்கும் எந்தவிதமான கெட்ட பழக்கமும் கிடையாது மோகன். எங்க நங்கை அண்ணி சொல்லுவாங்க, கல்யாணங்கிறது நம்மளோட துணையை தேர்ந்தெடுக்கிறதுக்கு மட்டுமில்ல, நம்மளோட அடுத்த ஜெனரேஷனை உருவாக்கிறதுக்கான அமைப்பு அது! எந்தவிதமான பழக்க வழக்கங்கள் குணங்கள் குழந்தைகளுக்கு வேணுமோ அந்த மாதிரியான பார்ட்னரை தேர்ந்தெடுக்கனும்னு சொல்லுவாங்க. நாம செலக்ட் செய்ற பார்ட்னருக்கு கெட்ட பழக்கம் இருந்தா அது அவங்களோட போறது இல்ல! அடுத்த ஜெனரேஷனையும் அது பாதிக்கும்னு சொல்லுவாங்க. உனக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லைனு தெரியும். இது நீயும் தெரிஞ்சிக்கனும்ன்றதுக்காக சொல்றேன்” என்றாள்.
“சரியா தான் சொல்லிருக்காங்க” என்றான் மோகன்.
“ஆமா மோகன். நங்கை அண்ணி நிறைய அட்வைஸ் செய்வாங்க. அப்பா அம்மா பார்க்கிற பையனையே கல்யாணம் செஞ்சிக்கோனு தான் அண்ணி என்கிட்ட சொன்னாங்க. ஆனா அப்பா அம்மாவே பார்த்தாலும் உன்னை மாதிரி நல்ல பையன் கிடைக்க மாட்டான்னு தோணுச்சு. அதான் உன் லவ்வை அக்சப்ட் செஞ்சேன்” என்றவள் கூறியதும் அவன் முகத்தில் பெருமிதம்.
“அவங்ககிட்ட நம்ம லவ் பத்தி சொல்லிட்டியா?” எனக் கேட்டான்.
“இல்லடா. அவங்க ஃபேமிலியோட ஜெர்மனிக்கு டிரிப் போயிருக்காங்க” என்றவள்,
“ஆமா எப்படிடா இவங்க கூடலாம் ஃப்ரண்ட் ஆன நீ! உன் ரூம்ல இருக்க யாருமே பார்க்க நல்லவங்க மாதிரியே தெரியலையே! சீக்கிரம் நீ அங்கிருந்து வெளில வேற ரூம் பார்த்துட்டு போய்டு மோகன்” என்றாள் அன்னம்.
“ஹே என்கிட்ட காசு இல்லாதப்பவும் எனக்கு இடம் கொடுத்தவங்க அவங்க. காசு வந்ததும் அவங்களை விட்டுட்டு போனா நன்றி கெட்டத்தனம் ஆகாதா? ஃபிகர் வந்ததும் ஃப்ரண்ட்டை கழட்டி விட்டுட்டான்னு உன்னையும் தப்பா பேசுவாங்க” என்றான் மோகன்.
“என்னது ஃபிகரா? வாயை உடைச்சிடுவேன். பொண்ணுங்கனா ஃபிகர்னு அசிங்கமா தான் பேசுவீங்களா? அப்ப இவங்க முன்னாடியே இப்படி பேசிருக்காங்கனு தானே அர்த்தம். மரியாதையா பேச தெரியாத இவங்க உனக்கு ஃப்ரண்டு வேற! என் முன்னாடி என்னிக்காவது இப்படி சொன்ன கன்னத்திலேயே அப்பிடுவேன் சொல்லிட்டேன்” கோபமாய் அவள் உரைக்கவும்,
‘அய்யய்யோ அழகா இருக்கானு கட்டிக்கலாம்னு பார்த்தா, வடிவேலு கோவை சரளா மாதிரி வெளுத்து வாங்கிடுவா போலயே’ மனதோடு அலறியவனாய்,
“நான் சும்மா பழமொழி சொன்னேன்மா. அதுக்கு ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுற” என்றவன் கேட்கவும்,
“இது தான் உங்க ஊருல பழமொழியா” என்று அவன் தலையில் கொட்டினாள்.
அவளை வீட்டில் இறக்கி விட்டு, தனது அறைக்கு செல்ல, அறையில் இருந்த தோழர்கள் அவனுக்கு விதவிதமான அறிவுரைகளை வாரி வழங்கி கொண்டிருந்தனர்.
“ஃபோட்டோவை விட பொண்ணு நேர்ல ரொம்ப அழகா இருக்குடா! உன் கண்ட்ரோல்லயே இருக்கிற மாதிரி பார்த்துக்கோடா”
“ஆமா எவனும் இடையில புகுந்து கொத்திட்டு போய்ட போறான்டா”
“நீ என்ன சொன்னாலும் அந்த பொண்ணு ஆமாம் சாமி போடுற அளவுக்கு வச்சிக்கோடா”
‘யாரு அவ ஆமாம் சாமி போடுற ஆளா! என்னை அவ வெளுத்து வாங்காம இருந்தா சரி தான்’ என மனதோடு எண்ணிக் கொண்டவனாய் அவர்களின் பேச்சுக்கு தலையாட்டிக் கொண்டான்.
அடுத்த வந்த வாரத்தில் மோகன் பகல் ஷிப்ட்டில் இருக்க, மதிய நேரத்தில் அவளுக்கு அழைத்தான்.
“அன்னம் நான் ஆபிஸ்க்கு வந்துட்டேன்! சாப்பிட வரியா?” எனக் கேட்டான்.
“நான் என் டீம்ல வினோத் கூட தான்டா ஒரு வாரமாக சாப்பிட போய்ட்டு இருக்கேன். அவரை விட்டுட்டு வர முடியாது. இனி மதிய லன்ச்க்கு என்னை கூப்பிடாத” என்றாள்.
“ஓஹோ என்னை விட அவர் உனக்கு முக்கியமா போய்ட்டாரோ! அப்ப நான் தனியா சாப்பிட்டா பரவாயில்லையா?” எனக் கேட்டான்.
“டேய் என்னடா பேசுற! வாராவாரம் உனக்கு ஷிப்ட் மாறும். எனக்கு அப்படி இல்லையே! நான் எப்பவும் இவர் கூட தான் சாப்பிட போயாகனும். இவர் தான் எனக்கு இங்க எல்லாமே சொல்லி கொடுத்துட்டு இருக்காரு. இவரை விட்டுட்டு எப்படி வர முடியும். என் சூழ்நிலையை புரிஞ்சிக்கோனு சொல்றேன்” என்றாள்.
ஏதும் பேசாது கைபேசி இணைப்பை துண்டித்து விட்டான் மோகன்.
அவளுக்கு கண்கள் கலங்கி விட்டது. அவன் அங்கு கோபத்தில் இருக்க, இங்கு இவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க உணவை உட்கொள்ள முடியவில்லை. பெயருக்காக வினோத்துடன் பேசியவாறு கொஞ்சமாய் உண்டாள்.
மாலை நான்கு மணியளவில் அவளுக்கு அழைத்த மோகன், “நான் கோபப்பட்டு ஃபோனை வச்சா திரும்ப நீ ஃபோன் செய்ய மாட்டியா? நான் கவலைப்பட்டா உனக்கு வருத்தமில்லைல! சாப்பிட்டியானு கூட கேட்கனும்னு தோணலைல” என்றான் மோகன்.
“நீயும் தான் நான் சாப்பிட்டேனா இல்லையானு கேட்கலை. அப்புறம் தப்பு உன் மேல இருக்கும் போது நான் ஏன் ஃபோன் செஞ்சி சமாதானம் செய்யனும்? என்கிட்ட இதெல்லாம் எதிர்பார்க்காத மோகன்” என்று விட்டாள் அன்னம்.
மீண்டுமாய் கோபத்தில் இணைப்பை அவன் துண்டிக்க, இம்முறை அழுகையெல்லாம் வரவில்லை அவளுக்கு.
‘வேணும்னா அவனே வந்து பேசட்டும்’ என்றெண்ணியவாறு வேலையில் கவனம் செலுத்தலானாள்.
மாலை டீ குடிப்பதற்காக மோகன் கேண்டீன் வந்த சமயம், வினோத்துடன் அவள் சிரித்து பேசியவாறு கேண்டீனில் அமர்ந்து டீ அருந்திக் கொண்டிருப்பதை கண்டவனுக்கு மேலும் கோபமேற, அந்த மேஜையின் அருகே அவளை பார்க்கும்படியாக இருக்கும் நாற்காலியில் சென்று அமர்ந்தான். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என கவனிக்க தொடங்கினான்.
மோகனை பார்த்தவளுக்கு அவனின் இந்த கோப முகமும் ஆராயும் பார்வையும் மேலும் எரிச்சலை அளித்தது.
மோகனை பார்க்காதது போல் வினோத்திடம் பேசியவாறே கேண்டீனை விட்டு சென்று விட்டாள்.
அன்றிரவு அவளுக்கு அழைத்தவன், மேலும் இதனை பற்றி பேசியே சண்டையிட, அழைப்பை துண்டித்து விட்டாள் அன்னம்.
‘பொசசிவ்ல இப்படி கடுப்பேத்துறானா? இவன்கிட்டயும் பிராஜக்ட்ல சேர்ந்த சமயத்துல இப்படி தானே பேசினேன். இப்ப என்ன அவர்கிட்ட மட்டும் பேச கூடாதுனு சொல்றான். லிமிட்டோட இருன்னு சொல்றான்’ புலம்பியவளாய் அவனின் தொடர் அழைப்பை ஏற்காது தலை வலியோடு படுத்து விட்டாள்.
அவளுடன் பேசுவதற்காகவே மறுநாள் காலை அலுவலகத்திற்கு வந்தவன், அவளுக்கு அழைத்து கேண்டீன் வர செய்தான்.
கோபமாய் அவனை முறைத்தவாறே வந்து அவள் அமர, மேஜையின் மீதிருந்த அவளின் கைகளை பற்றிக் கொண்டவன், “சாரி” என்றான்.
“நான் ஏன் அப்படி சொல்றேன்னு உனக்கு புரியுதா அன்னம். உனக்கு முக்கியமானவனா நான் மட்டும் தான் இருக்கனும்னு நினைக்கிறேன்” என்றான்.
“டேய் அறிவிருக்கா உனக்கு! நல்லா சிரிச்சி பேசிட்டா அவர் எனக்கு முக்கியமானவருனு அர்த்தமா! உனக்கான பிளேஸ்ஸை அவருக்கு போய் தூக்கி கொடுக்க முடியுமா?” எனக் கேட்டாள்.
“ஹ்ம்ம் புரியுது அன்னம். சாரி” என்றான். முதல் ஊடல் அன்றைய முதல் டீவுடன் சமாதானமானது.
அன்றிரவு அவளுக்கு அழைத்தவன், “உன்னோட ஃபேஸ்புக்ல ஒருத்தன் உன் ஃபோட்டோக்கு லவ் ரியாக்ட் செஞ்சி வச்சிருக்கானே யாரவன்? உன்னோட எல்லா போஸ்ட்டுக்கும் கமெண்ட் போட்டிருக்கான். உன் கூட காலேஜ்ல படிச்சவனா?” எனக் கேட்டான்.
ஆமென அவள் கூறவும், “இனி அவன்கிட்ட பேசாத! அவன் உன்கிட்ட வழியுறா மாதிரி தோணுது! அவன் கமெண்ட்லாம் சரியாப்படலை” என்றான்.
கடுப்பின் உச்சநிலைக்கு சென்றவளாய், “நான் யார்கிட்ட பேசனும், பேச கூடாதுனு நீ எனக்கு பாடம் எடுக்காத சரியா!” என்று கோபமாய் கூற,
“ஆமா நல்லது சொன்னா எங்க கேட்குறீங்க இந்த காலத்து பொண்ணுங்க. ஊரு முழுக்க உங்க போட்டோவை போட்டு காண்பிச்சிக்கிட்டு அப்புறம் என்னை இங்க பார்த்துட்டான் அங்க பார்த்துட்டான்னு பொங்க வேண்டியது” என்றான் மோகன்.
கடுப்பானவளாய் இணைப்பை துண்டித்து விட்டாள்.
மீண்டுமாய் காலை வந்து பேசி சமாதானம் செய்தான்.
அவள் சமாதானமாகி தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, “ஃபேஸ்புக்ல கண்டிப்பா உன் ஃபோட்டோலாம் போட்டே ஆகனுமா?” எனக் கேட்டான்.
“இப்படியே பேசிட்டு இருந்தீனா பிரேக் அப் செஞ்சிட்டு போய்டுவேன்” அதீத கடுப்பில் அவள் உரைக்க,
“நான் எவ்ளோ உயிருக்கு உயிராக உன்னை காதலிக்கிறேன். நீ ஈசியா பிரேக் அப் செஞ்சிட்டு போய்டுவேன்னு சொல்ற! அவ்ளோ தானா உன் காதல்” பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் மோகன்.
‘உயிருக்கு உயிரா காதலிக்கிறியா? உயிரை எடுக்கிறடா நீ’ மனதோடு எண்ணிக் கொண்டவளாய்,
“மோகன் நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சிக்கோ! டோன்ட் டிரை டு கன்ட்ரோல் மீ (என்னை உன்னை கட்டுக்குள்ள வச்சிக்க முயற்சிக்காத)! அப்ப தான் அந்த கன்ட்ரோல் மீறி ஏதாவது செய்யனும்னு தோணும். என் அப்பா அம்மா ஆச்சி கூட இந்தளவுக்கு என்னை மானிட்டர் செஞ்சி கன்ட்ரோல் செய்யலை. நீ செய்றது உன் மேல இருக்கும் காதலையே வெறுக்க வச்சிடுமோனு பயமா இருக்கு. உனக்கு புரியுதா நான் சொல்றது” பொறுமையாக தனது மனநிலையையும் அவனது தவறினையும் எடுத்துக் கூறினாள்.
“ஹ்ம்ம் புரியுது அன்னம்” என்று அவன் ஏதோ கூற வந்த சமயம், வினோத்திடம் இருந்து அவளுக்கு வேலை விஷயமாக அழைப்பு வர, “அப்புறம் பேசலாம்” எனக் கூறி சென்று விட்டாள் அன்னம்.
‘இவன் வேற கரடி! கல்யாணம் முடிஞ்சதும் குழந்தையை கொடுத்துட்டு இவளை வேலை விட்டு நிக்க வைக்கனும். இல்லனா இப்படி தான் எல்லார்கிட்டயும் சிரிச்சி பேசிட்டு என்னை வெறுப்பேத்திட்டு இருப்பா’ எனத் தனக்குள் பேசிக் கொண்டவனாய் வேலையை பார்க்க சென்றான்.
அடுத்த வந்த நாட்களில் அவளை கட்டுப்படுத்துவதையும் கேள்வி கேட்பதையும் வெகுவாகவே குறைத்து கொண்டான் மோகன். எங்கே பிரேக் அப் என்று தன்னை விட்டு அவள் போய் விடுவாளோ என்ற பயத்தில் அவளுக்கு பிடிக்காததை பெரும்பாலும் செய்யாமல் இருந்தான்.
அத்தியாயம் 22
ஜெர்மனி வரதராஜ பெருமாள் முன்பு அமர்ந்திருந்தாள் நங்கை.
என்றும் சிரித்த முகமாய் இருக்கும் பெருமாளின் வதனத்தையே பார்த்திருந்த நங்கை, “உங்களுக்கு பெரிய நன்றி சொல்லனும்” என்றாள்.
“சுந்தர் என்னை காதலிக்கிறது தெரிஞ்சதும் உங்ககிட்ட தான் வந்து என்ன செய்றதுனு கேட்டானாமே! நீங்க தான் என் மூலமா பூ கொடுக்க வச்சி அவனுக்கு நம்பிக்கை கொடுத்தீங்கனு சொல்லுவான். நீங்க அந்த நம்பிக்கையை கொடுக்கலைனா என்னை காதலிச்சிருக்க மாட்டானாம்! என்னை விட்டு விலகி போய்ருப்பான்னு சொல்லுவான். அவனுக்கு அந்த நம்பிக்கையை கொடுத்ததுக்கு நன்றி! எங்களை சேர்த்து வச்சதுக்கு நன்றி!
நேர்ல வந்து தான் நன்றி சொல்லனும்னு இத்தனை வருஷமா காத்திருந்தேன். சுந்தரை நான் கேட்காமலே எனக்கு கொடுத்தீங்களே இப்ப நான் கேட்குறதை கொடுப்பீங்களா?” கெஞ்சும் பார்வையுடன் கேட்டிருந்தாள் நங்கை.
அதே புன்சிரிப்புடன் அவர் நின்றிருக்க,
“எப்ப எது கேட்டாலும் அதே சிரிப்பு தான் உங்களுக்கு. அதுக்கான அர்த்தம் ஆமாவா இல்லையானு நாங்க தான் குழம்பனும்! அப்படி தானே!” என்றவள்,
“என் புருஷன் என்னை எப்படி மாத்தி வச்சிருக்கான் பாருங்க! அவனை மாதிரியே உங்ககிட்ட புலம்பிட்டு இருக்கேன்!” என்று சிரித்தவளின் மேல் மழைத்துளி சரசரவென விழ, சட்டென அங்கிருந்து எழுந்து பெருமாளின் பாதத்தை வணங்கிவிட்டு கோவிலின் உள்ளே செல்ல, மறுபுற கோவில் வாசல் வழியாக சிலர் உள்ளே நுழைந்தனர்.
காமாட்சி அம்மனின் சந்நதி முன்பு நந்திதாவை மடியில் அமர்த்தி விளையாட்டு காண்பித்தப்படி அமர்ந்திருந்த தனது கணவன் சுந்தரராஜன் அருகே சென்றாள் மதுரநங்கை.
“என்ன, வேண்டுதல்லாம் பெருமாள்கிட்ட சொல்லியாச்சா?” என்று சிரித்தபடி கேட்டான் ராஜன்.
“ஹ்ம்ம் எங்க! முழுசா சொல்றதுக்குள்ள மழை வந்து கெடுத்துடுச்சு” என்றவளை சிரிப்புடன் பார்த்தவன், “அந்த வேண்டுதலே வேண்டாம்னு நான் சொல்லிட்டு இருக்கேன். நீ தான் வேணும்னு கேட்டுட்டு இருக்க! பெருமாள் பாவம் புருஷன் விருப்பப்படி செய்றதா இல்ல பொண்டாட்டி விருப்பப்படி செய்றதானு குழம்பி போய்ருப்பாரு” என்று சிரித்தான்.
“நீதான் என் ஆசைக்கு முட்டுக்கட்டை போடுற! வரம் கொடுக்க நினைக்கிற பெருமாளையும் ஏன்டா தடுக்குற” என்று முறைத்தவள்,
“பொண்டாட்டியும் புருஷனும் ஒரு மனசா வேண்டிக்கிட்டா தான் கடவுள் வேண்டுதலை நிறைவேத்துவாராம்! அதனால என்ன செய்வியோ தெரியாது நீயும் இதுக்கு ஒத்துக்கிற சொல்லிட்டேன்” இது தான் முடிவு என்பது போல் கூறியவள், தனது மகளை தூக்க முனைய, குழந்தையோ தந்தையின் சட்டையை பிடித்துக் கொண்டு வர மாட்டேனென அடம் பிடிக்க, “சரியான அப்பா கோந்து!” என்று மகளையும் தந்தையையும் முறைத்தவாறு எழுந்து நின்றாள்.
ஹா ஹா ஹா என சிரித்த ராஜனும் மகளை தூக்கி கொண்டு எழும்ப, குடும்பமாய் காமாட்சி அம்மனை தரிசித்து விட்டு, கோவிலை சுற்றி வந்த போது ஆங்காங்கே படப்பிடிப்பு சாதனங்களுடன் அமர்ந்திருந்தவர்களை கண்டனர்.
“சுந்தர் ஏதோ தமிழ் படம் ஷூட்டிங் போலடா” அவர்களை பார்த்தவாறு சொன்னாள் நங்கை.
மகளை முன்னே நடக்கவிட்டு அவளை கண்காணித்தவாறே மனைவியுடன் நடந்து வந்துக் கொண்டிருந்த ராஜன், அப்பொழுது தான் சுற்றத்தை கவனித்தான்.
“ஆமா! இங்க தான் ஷூட்டிங் நடக்குது போல! மழைக்காக ஒதுங்க உள்ளே வந்திருக்காங்க. ஹீரோ யாராவது வந்திருக்காங்களா என்ன?” எனக் கேட்டான்.
“தெரியலையே” என்றவாறு பிரகாரத்தை சுற்றி நின்றிருந்தவர்களை பார்த்தவள், முன்னே சென்றிருந்த தனது மகளை ஒருவன் தூக்கி கொஞ்சி கொண்டிருப்பதை பார்த்து, ராஜனின் கையினில் இடித்தாள்.
“நம்ம பாப்பாவை யாரோ தூக்கி கொஞ்சிட்டு இருக்காங்க பாரு” என்றவள்,
“இந்த ஆளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குல! இவர் தான் ஹீரோவா இருக்குமோ?” எனக் கேட்டாள்.
“நீயும் ஆணிமாவும் சீரியலை பத்தி சீரியசா டிஸ்கஸ் செஞ்சி சிரிப்பீங்களே, உனக்கே சீரியல்ல நடிக்கிற இந்த பையனை தெரியலையா?” எனக் கிண்டல் செய்தான் ராஜன்.
“என்னது சீரியல்ல நடக்கிற பையனா?” என்று அவனை நோக்கி நடந்தவாறே கேட்டவள், “என்ன தான் இருந்தாலும் டிவில பார்க்கிறதுக்கும் நேர்ல பார்க்கிறதுக்கும் வித்தியாசம் இருக்க தான் செய்யுதுல சுந்தர்” என்றாள்.
தங்களது மகளை தூக்கி கொஞ்சியவாறு நின்றிருந்த அந்த சின்னத்திரை நடிகர் அருகே ராஜன் சென்றதும், குழந்தை அவனிடம் தாவினாள்.
“உங்க குழந்தையா? க்யூட் பாப்பா! பாப்பா பேரு என்ன?” என்றவாறு குழந்தையை ராஜனிடம் கொடுத்தான் அந்த நடிகர்.
“நந்திதா” என்றவாறு வாங்கி கொண்டான் ராஜன்.
“நைஸ் நேம்” என்றவனை நோக்கி கை நீட்டியபடி, “ஐம் சுந்தரராஜன்” என்று ராஜன் தன்னை அறிமுகப்படுத்தியதும், “ஐம் சிவா” என்றான் அவன்.
“தெரியும்ங்க சீரியல்ல பார்த்திருக்கோம்! இங்க என்ன மூவி ஷூட்டிங்கா சார்” எனக் கேட்டாள் நங்கை.
“ஆமாங்க” என்றவன், “நீங்க என்ன ஜெர்மனி செட்டில்டா” எனக் கேட்டான்.
“இல்லங்க வேகேஷனுக்கு வந்திருக்கோம். கொஞ்சம் வருஷம் முன்னாடி இங்க தான் நாங்க ஐடி கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தோம்” என்றான் ராஜன்.
சில நிமிடங்கள் பேசிவிட்டு சிவாவிடம் இருந்து விடைப்பெற்றனர் ராஜன் குடும்பத்தினர்.
மழை நின்று குளிரை பரப்பிவிட்டிருந்தது.
கோவிலில் இருந்து வெளியே வந்து வரதராஜ பெருமாளை பார்த்த ராஜன், “என் பொண்டாட்டி கேட்டதை கொடுத்துடுங்க பெருமாளே! ஆனா அவளை ரொம்ப கஷ்டப்படுத்தாம கொடுங்க! அவ வலியை தாங்கிடுவா, என்னால தான் அவ கஷ்டப்படுறதை தாங்கிக்க முடியாது! அவ கேட்ட மாதிரி பையனாவே கொடுத்துடுங்க! அதுக்கான ஆயத்த பணியில் நான் இறங்குறேன்” அதுவரை ரசனையாய் அவனை பார்த்திருந்தவள், அவனின் ஆயத்த பணி என்ற சொல்லில் கையில் இடித்து, “சாமிக்கிட்ட போய் என்ன பேச்சு? பாப்பா வேற கைல இருக்கா” என்று முறைத்தாள்.
“பின்ன பிள்ளை வேணும்னா தானா வந்துடுமாடி! நான் ஓவர் டைம் வேலை பார்க்க வேணாமா” என்றவன் கூறி முடிப்பதற்குள், “பெருமாளே!” என்று அவன் வாயை தனது கைக்கொண்டு மூடியவள், “போதும் கிளம்புவோம்! வரோம் பெருமாளே” என்றவாறு அவனை கோவிலின் வெளியே தள்ளிக்கொண்டு சென்றாள்.
அவன் கையில் இருந்த நந்திதாவும் தாயின் செயலைக் கண்டு தானும் இணைந்து தந்தையின் வாயை தனது கைக்கொண்டு மூட, குட்டிப்பெண்ணின் செயலில் சிரித்திருந்தனர் இருவரும்.
வாழ்வின் நிகழ்வுகளை அறிந்தவராய் அதே புன்சிரிப்புடன் இவர்களை வழியனுப்பி வைத்திருந்தார் வரதராஜ பெருமாள்.
இருவரும் தாங்கள் தங்கியிருந்த வாடகை அறையை நோக்கி இரயிலில் பயணித்திருந்தனர்.
மெட்ரோ ரயில் போன்றிருந்த அந்த ரயிலில் அங்குமிங்குமாக ஓடி விளையாடிய மகளை கையில் தூக்கி வைத்துக் கொண்டு ராஜனின் அருகில் நங்கை அமர, உடனே தந்தையிடம் தாவினாள் குட்டிப்பெண்.
“நந்துமா இதெல்லாம் டூ மச் சொல்லிட்டேன்! பத்து மாசம் என்கிட்ட தான் இருந்த நீ! இப்ப என்னமோ அப்பா அப்பான்னு அவன்கிட்டயே தாவுற” என்று முறைத்தாள்.
“ஏன்டா பப்ளிமாஸ் குழந்தைக்கிட்ட கூடவா சண்டை போடுவ?” என்று கேலியாய் சிரித்தான்.
அவன் கேலியில் முகத்தை சுளித்தாள் இவள்.
ராஜன் குழந்தையை கைக்குள் வைத்து தட்டிக்கொடுக்க உறங்க ஆரம்பித்திருந்தாள் நந்திதா.
“சுந்தர், நான் ஒரு தடவை ஒரு கதை சொன்னேன் ஞாபகம் இருக்கா! ஒரு பையன் அப்பாக்கு சர்ப்ரைஸ்ஸா இருக்கனும்னு அவர்கிட்ட போன்ல பேசாம பிசினு சொல்லி டான்ஸ் பிராக்ட்டிஸ் செஞ்சிட்டு, டான்ஸ் ஷோ டிவில வர்றப்ப அவர் இறந்துட்டாருனு ஒரு பையன் கதை சொன்னேன்ல அந்த பையன் இந்த சிவா தான்” என்றாள் நங்கை.
“அப்படியா” என்று ராஜன் ஆச்சரியமாய் கேட்க, “ஆமா சுந்தர்! நம்மளை விட சின்ன வயசு தான்! நாலு அஞ்சு வயசு சின்ன பையன்னு நினைக்கிறேன்” என்றாள்.
“அப்ப டீன்ஏஜ்லயே மீடியாக்குள்ள வந்துட்டானா?” என்றான் ராஜன்.
“ஹ்ம்ம் ஆமா அப்படி தான் இருக்கனும். அப்ப பதினெட்டு இருபது வயசு இருக்கும்னு நினைக்கிறேன். இப்ப முப்பது வயசுக்கிட்ட இருக்கும்ல! ஆனா இன்னும் கல்யாணம் செஞ்சிக்கலை போல” என்றாள் நங்கை.
“ஓ சூப்பர்ல நங்கை! அப்படி டான்ஸ் ஷோல ஆரம்பிச்சி இப்ப சின்னத்திரை ஹீரோவா வளர்ந்திருக்கானே பெரிய விஷயம் தான்!” என்று மனதாரப் பாராட்டிப் பேசினான் ராஜன்.
“ஆமாமா இந்த போராட்ட உலகத்துல ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் அச்சீவ்மெண்ட் தான்” என்று நங்கை கூற,
“இதுக்கு தான் ஓவரா மாமா பேச்சை கேட்காதனு சொன்னேன்” என்றவன் கிண்டல் செய்யவும்,
“ஓய் என்ன வயசானவங்க பேசுறவங்க மாதிரி தத்துவம் பேசுறேன்னு கிண்டல் செய்றியா?” என்று முறைத்தாள்.
அவளின் முறைப்பில் சிரித்தான் ராஜன்.
ஜெர்மனியில் முன்பு ராஜன் தங்கியிருந்த அதே வீட்டில், இப்பொழுது குடும்பத்துடன் தங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு அறையை வாடகைக்கு எடுத்திருந்தனர்.
வீட்டை அடைந்ததும் தூங்கிக் கொண்டிருந்த மகளை படுக்கையில் கிடத்தி, போர்வையை போர்த்தி விட்டு ஓய்வறைக்குள் சென்றான் ராஜன்.
அச்சமயம் அவனின் கைபேசி அலற, எடுத்து பார்த்த நங்கை, அதில் ஒளிர்ந்த உளவாளி என்ற பெயரை பார்த்து சிரித்தாள்.
சிக்னல் இல்லாமல் கைபேசி ஒலிர்ந்து அடங்க, ஓய்வறையில் இருந்து வெளியே வந்த ராஜன் யார் அழைத்தது எனக் கேட்டான்.
“இந்தியாலருந்து வாட்ஸ்அப் கால்! உன் உளவாளி தான்” என்றாள்.
இவன் அழைப்பு வந்த எண்ணிற்கு மீண்டுமாய் அழைப்புவிடுக்க,
“அந்த பொண்ணுக்கு எவ்ளோ அழகான பேரு இருக்கு! இப்படி உளவாளினு போட்டு வச்சிருக்கியே” எனக் கேட்டாள் நங்கை.
“நல்லா கேளுங்கக்கா” ராஜன் அழைப்பை ஏற்றதும், அலைபேசி வாயிலாக நங்கையின் குரலை கேட்டவள் கூறினாள். ராஜன் உடனே ஸ்பீக்கரில் ஃபோனை வைத்தான்.
“திவ்யானு தமிழ்நாட்டுல கால்வாசி பேராவது இருப்பாங்க. ஆனா உளவாளினு யாராவது இருப்பாங்களா! எவ்ளோ தனித்துவமான ஒரு பெயரை உனக்கு வச்சிருக்கேன்னு நீ பெருமைப்படனும் திவ்யா” என்று சிரித்தான் ராஜன்.
“அண்ணி உங்க கூட சேர்ந்து அண்ணனுக்கு ரொம்ப வாயாகிப்போச்சு! அண்ணா இப்படிலாம் கிண்டல் செய்ற ஆளே இல்லை” என்றாள் திவ்யா.
“அடியேய் நீ என்னை புகழ்றியா இல்லை திட்டுறியா? இது என்ன வஞ்சப்புகழ்ச்சியா? உனக்காக என் புருசன் கிட்ட பரிஞ்சி பேசினேன்ல என்னை சொல்லனும்” என்று நங்கை கூறவும், சிரித்திருந்தனர் ராஜனும் திவ்யாவும்.
அப்பொழுது தான் திவ்யாவின் அறைக்குள் நுழைந்த திவ்யாவின் கணவனான பிரேம் கைபேசியில் கேட்ட நங்கை ராஜனின் குரலில், “அக்கா அண்ணா எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டான்.
ராஜன் ஜெர்மனியில் ஆன்சைட் வந்து வேலை செய்து கொண்டிருந்த போது அவனுடன் அறையில் தங்கியிருந்தவன் தான் பிரேம். அவனது மனைவியான திவ்யா ஜெர்மனியில் வேலை செய்த போது பிரேமை காதலித்து மணந்து கொண்டாள். பிரேம் வெளிநாட்டிலேயே வேலையை தொடர வேண்டிய சூழலில் இருந்த சமயத்தில் திவ்யா தனது சொந்த ஊரான மதுரையில் திருமணத்திற்கு பின்பு தங்கியவள், அங்கே சுந்தரேஸ்வரனின் கடையில் ஐடி பணியில் சேர்ந்தாள்.
“நல்லா இருக்கோம்டா! யு எஸ் டிரிப் எப்படி போச்சுடா! நானே உனக்கு கால் செய்யனும்னு நினைச்சேன்” என்றான் ராஜன்.
“நல்லா போச்சுண்ணா! நீங்க வேகேஷன் முடிச்சிட்டு வந்து பேசுங்க. இப்ப லீவ்வை என்ஜாய் பண்ணுங்க” என்ற பிரேம்,
“எதுக்கு இப்ப அவங்களுக்கு போன் செஞ்சி டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்க?” எனக் கேட்டான்.
“முக்கியமான விஷயம் சொல்லத்தான் ஃபோன் செஞ்சேன்” என்ற திவ்யா,
“மீனாட்சி சுந்தரேஸ்வரர் யூ டியூப் சேனலை டார்க்கெட் செஞ்சி ஏதாவது இஷ்யூவை கிளப்பி கடை சேல்ஸ்ஸை குறைக்க பிளான் நடக்குதுனு ஈஸ்வர் அண்ணா ஐடி டீம்கிட்ட சொல்லி கேர்புல்லா வாட்ச் பண்ண சொன்னாங்க. அதான் உங்ககிட்ட சொல்லலாம்னு கால் செஞ்சேன்” என்றாள் திவ்யா.
திவ்யா கூறியதை கேட்ட ராஜன், ‘ஏன் இன்னும் இந்த அண்ணா அவங்களோட பிரச்சனையை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாரு?’ என மனதோடு புலம்பியவன்,
“ஓ அப்படியா! சைட் ரிலேடட் செக்யூரிட்டிலாம் செக் பண்ணிக்கோம்மா! அண்ணன் சொன்னா கண்டிப்பா யார் மேலயோ அவருக்கு சந்தேகம் வந்திருக்குனு அர்த்தம்! நானும் கிளோஸா வாட்ச் பண்றேன்” என்றான்.
அதன் பிறகு நால்வரும் அவரவர் பணி, குடும்பம், வாழ்வு என சில நிமிடங்கள் பேசிவிட்டே கைபேசியை வைத்தனர்.
**********
அங்கு சென்னையில் அலுவலகத்தில் இன்பா முன் நின்றிருந்தாள் அன்னம்.
புது பிராஜக்ட் அவளுக்கு பிடித்திருக்கிறதா? வேலையை கற்றுக் கொண்டாளா? ஷிப்ட் இல்லாமல் வேலை செய்வது எப்படி இருக்கிறது என பலவிதமான உரையாடல்களுக்கு பிறகு,
“உன்னோட பர்சனலை கேட்கிறேன்னு தப்பா நினைக்காதே! உன்னோட வெல் விஷ்ஷரா கேட்கிறேன்! ஆர் யூ இன் லவ் வித் மோகன்” எனக் கேட்டான் இன்பா.
‘இவருக்கு எப்படி தெரிஞ்சிது’ என்பது போல் அதிர்ந்து நோக்கியவளாய், ஆமென தலையசைக்க, “உங்க வீட்டுல தெரியுமா?” எனக் கேட்டான்.
இல்லையென அவள் தலையசைக்க, “இந்த காதல் வேண்டாமே அன்னம்! அது உன்னோட சந்தோஷத்தை பறிச்சிடுமோனு பயமா இருக்கு அன்னம்! மோகன் இஸ் நாட் எ ரைட் சாய்ஸ் ஃபார் யூ” என்றான்.
“ஏன் அப்படி சொல்றீங்க இன்பா! மோகன் என்னை நல்லா பார்த்துப்பான். அவனுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவனோட அம்மாகிட்ட தம்பிக்கிட்ட கூட பேசினேன்” என்றாள் அன்னம்.
இதற்கு மேல் அவளது சொந்த விஷயத்தில் தான் தலையிடுவது சரி வராது என்று எண்ணியவனாய், “எனக்கு தோணினதை சொன்னேன் அன்னம். அப்புறம் உன் விருப்பம்” என்றுரைத்து விட்டான்.
தனது இருக்கையில் வந்தமர்ந்த அன்னத்திற்கு மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது.
‘நங்கை அண்ணி, ராஜாண்ணா ஃபோன் நம்பர் லாம் இவர்கிட்ட இருக்கே! அவங்ககிட்ட நம்ம லவ் மேட்டரை சொல்லிடுவாரோ! நான் வேற அவர் கேட்டதுக்கு ஆமானு சொல்லி வச்சிட்டேனே’ தீவிர சிந்தையில் ஆழ்ந்தாள்.
‘அவரா சொல்லிடுறதுக்கு முன்னாடி நாமளே நங்கை அண்ணிக்கிட்ட சொல்லிடனும். மீனுக்கிட்டயும் சொல்லி அப்பா அம்மாக்கிட்ட பேச சொல்லனும்’ என்று யோசித்தவண்ணம் இருக்கும் போது மீனாட்சியின் குறுஞ்செய்தி அவளின் கைபேசியை வந்தடைந்தது.
— தொடரும்