அழகிய அன்னமே 2

“அடியேய்” என அன்னம் போனை வைப்பதாய் கூறியதும் மீனாட்சி இங்கே கத்திக் கொண்டிருக்க, அங்கே இணைப்பை துண்டித்திருந்தாள் அன்னம்.
“உன்னைலாம் என்ன செய்றதோ?” என கைபேசியை பார்த்தவாறு மீனாட்சி பேசி கொண்டிருக்கும் போது அறையினுள்ளே நுழைந்த ஈஸ்வரன் (சுந்தரேஸ்வரன்),
“இன்னும் நீ கிளம்பலையா? ரஞ்ஜனியை ஸ்கூல்ல விட்டுட்டு வரதுக்குள்ள கிளம்பி இருனு சொல்லிட்டு தானே போனேன்” என்றவாறு மெத்தையில் வந்தமர்ந்தான்.
“இதோ கிளம்புறேன்! இந்த அன்னம் பொண்ணுக்கிட்ட தான் பேசிட்டு இருந்தேன்” என்றவாறு அன்னத்திடம் பேசியதை இவனிடம் கூறியவாறே நைட்டி உடையிலிருந்து சுடிதாருக்கு மாறிக் கொண்டிருந்த மனைவியை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஈஸ்வரன்.
ஆளுயரக் கண்ணாடி முன் நின்று அவள் உடை மாற்றி ஒப்பனை செய்துக் கொண்டிருக்க, “பச்சக்கிளி என்னை இப்படி டெம்ப்ட் செய்றியே” என அவளின் பின்னோடு நின்று இடையை வளைத்திருந்தான் ஈஸ்வரன்.
இருவருமாய் தங்களின் உருவத்தினை கண்ணாடியில் பார்த்திருக்க, கண்ணாடியில் அவன் உருவத்தை பார்த்தவாறே, “கையை எடுங்க! நான் ஒன்னும் டெம்ப்ட் செய்யலை! நீங்களா டெம்ப்ட் ஆகிட்டு அப்பறம் என்னால் தான் லேட்டாச்சுனு தாம் தூம்னு குதிச்சிட்டு கிடப்பீங்க” என இடையில் இருந்த அவன் கையை உருவ முயற்சித்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.
‘உன்னால முடிஞ்சா உருவித்தான் பாரேன்’ என்பது போல் உடும்புப்பிடியாய் பிடித்திருந்தான் அவளை.
“ம்ப்ச் கையை எடுங்கப்பா!” தலையை திருப்பி அவன் முகம் பார்த்து கண்களை சுருக்கி கெஞ்சும் பாவனையில் அவள் கேட்க, அவளின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டவன், “ரஞ்சுக்கு தம்பி பாப்பா ரெடி பண்ணுவோமா பச்சக்கிளி?” மந்தகாசமான புன்னகையுடன் கேட்டான்.
“ஓஹோ சார் என்னை சொக்க வைக்க பிளான் செய்றீங்களோ! நான்லாம் அப்படி ஒன்னும் சொக்க மாட்டேனாக்கும்” அவனை தள்ளி நிறுத்தியவாறு உரைத்தவள் கண்ணாடியை பார்த்து தலையை வாரிக்கொண்டிருக்க,
“ஏற்கனவே என் பச்சக்கிளி என்கிட்ட சொக்கினதுக்கான பரிசு தான் நம்ம ரஞ்சு பாப்பா” என்று அவள் முன் சென்று நின்று புன்னகையுடன் அவன் உரைக்க, வெட்கத்தில் சிவந்த முகத்தை அவன் மார்போடு சாய்ந்து மறைக்க முற்பட்டாள்.
சில பல கேலி கிண்டல் பேச்சுகளுக்கிடையில் கிளம்பி இருவருமாக அவர்களின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பாத்திர கடையை வந்தடைந்திருந்த நேரம், கடையினில் ஒரு வாடிக்கையாளர் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
“என்னாச்சு என்ன பிரச்சனை?” என ஈஸ்வரன் அவர்களிடம் சென்று கேட்க,
ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அவர்கள் கடையினில் வாங்கியிருந்த பாத்திரத்தினை கையில் வைத்துக் கொண்டு, “இந்த பாத்திரம் வாங்கும் போது லைஃப் டைம் கேரண்டினு சொல்லி தானே கொடுத்தீங்க. இப்ப பாத்திரம் ஒரு வருஷம் கூட தாங்காம விளிம்புல கீரல் விழுந்து போச்சுன்னு மாத்த வந்தா தர முடியாதுனு சொல்றீங்க. ஏமாத்த பார்க்குறீங்களா?” என சத்தமாய் கேட்டிருந்தார்.
அவரின் சத்தமான பேச்சில் ஆங்காங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்களும், கடையில் வந்த பிற வாடிக்கையாளர்களும் இவர்களை திரும்பி பார்க்க,
அந்த பெண்மணி இத்தனை நேரமாய் சண்டையிட்டு கொண்டிருந்த பணியாளப்பெண்ணிடம் திரும்பிய மீனாட்சி, “என்ன ராஜிக்கா? ஏன் ரீப்ளேஸ் (replace – மாற்றுவது) செய்ய முடியாதுனு சொன்னீங்க. இந்த பாத்திரத்துக்குலாம் லைஃப் டைம் கேரண்ட்டி கொடுத்திருக்கோம் தானே” எனக் கேட்டாள்.
“ஆமா மேம். ஆனா இவங்ககிட்ட இந்த பொருள் வாங்கின பில்லும் இல்லை அதோட கேரண்டி எழுதி கொடுத்த சீட்டும் இல்லை. அதை கொண்டு வந்து தாங்க மாத்தி தரேன்னு சொன்னா சண்டை போட்டுட்டு இருக்காங்க மேம்” என்று அந்த பணியாளப்பெண் உரைத்ததும்,
“ஏன்மா உங்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிம்பிள் தான் பாத்திரத்துல இருக்கே! இது வேற கடைல போட முடியுமா என்ன? இங்க வாங்கினேன்ங்கிறதுக்கான ஆதாரம் தானே இது! இதுக்கு மேலேயும் உங்களுக்கு பில் வேணுமா? என்னை பார்த்தா ஏமாத்துற ஆள் மாதிரி தெரியுதா? இல்ல என்கிட்ட பாத்திரம் கொடுக்காம எனனை ஏமாத்த இப்படிலாம் கேட்குறீங்களா?” என மீண்டுமாய் ஆரம்பித்தவர்,
“என்ன தரம் இருக்கு உங்க பொருள்ல? ஒரு வருஷம் கூட தாங்கலை! முறையா பார்த்தா இதெல்லாம் சொல்லி நான் சண்டை போட்டிருக்கனும். தன்மையா மாத்தி தாங்கனு கேட்டா, பில் இல்லாம மாத்த முடியாதுனு சொன்னா கோவம் வருமா இல்லையா?” என்று தொடர்ந்து பேசிக் கொண்டே போக,
சுற்றியிருந்த பிற வாடிக்கையாளர்களின் பார்வையையும் அவர்களுக்குள்ளாக பேசிக் கொள்வதையும் பார்த்து அவமானத்துடன் சற்று மிரட்சியடைந்தவளாய் ஈஸ்வரனை மீனாட்சி பார்க்க, “நான் பார்த்துக்கிறேன்! நீ உள்ளே போ” என்று அவளின் கையை பிடித்து அழுத்திக் கொடுத்து அவர்களின் அலுவலக அறைக்குள் அனுப்பியவன் அந்த பெண்மணியின் புறம் திரும்பினான்.
“கோபப்படாதீங்கம்மா! உங்க பிரச்சனை எங்களுக்கு புரியுது! அது சரி செய்ய வேண்டியது எங்க பொறுப்பு! சரியா! கொஞ்சம் உட்காருங்க! காலைல சாப்பிட்டீங்களா இல்லையா? எந்த ஊருல இருந்து வர்றீங்க” என அப்பெண்மணியை அமர வைத்து, அவருடன் இவனும் அமர்ந்து கொண்டு இலகுவாய் பேசி சாந்தமடைய வைத்தான்.
“எங்க நிலைமையையும் யோசிச்சு பாருங்கமா. ஏற்கனவே வாங்கின பொருளுனு தெரிஞ்சிக்கிற ஆதாரமா தான் நாங்க பில் கேட்கிறோம். இப்படியே வந்து கேட்குறவங்களுக்குலாம் கொடுத்தா எங்களை ஏமாத்திட்டு போய்ட்டே இருப்பாங்க தானே. கவர்மெண்ட் செர்ட்டிபிகேட்டே டூப்ளீபிகேட் ரெடி செய்யும் போது, எங்க கம்பெனி பாத்திரம் மாதிரியே தயாரிச்சிட்டு அதுல எங்க சிம்பிளை போட்டு உங்க பிராடக்ட் சரியில்லைன்னு அவதூறு பரப்பக்கூட இப்படி ஆளை அனுப்பி வைக்கலாம் தானே. அதுவும் இல்லாம ஆடிட்டிங் பிராப்ளம் வரும். பார்க்க ஒரு பாத்திரம் அதை மாத்தி தரதுக்கு இவ்வளோ கேள்வியானு தோணும், ஆனா அதுக்கு பின்னாடி இவ்வளோ விஷயத்தை கடைக்காரங்களான நாங்க யோசிக்கனும்மா! எங்க நிலைமையையும் நீங்க யோசிச்சு பாருங்க” என அவரிடம் பேசியவாறே பணியாளரிடம் தேநீர் வாங்க அனுப்பிருந்தவன், அப்பெண்மணியிடம் தேநீரை வழங்கினான்.
“இந்த பாத்திரத்தோட ஸ்டீல்ல தான் ஏதோ பிராப்ளம்! அது என்னனு பார்த்து அடுத்த தடவை இந்த பிரச்சனை வராம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு மா!” அவரை அசுவாசப்படுத்தும் விதமாக பேசி அமைதியடையச் செய்தான்.
ஈஸ்வரன் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே, அவர் எந்த மாதத்தில் இந்த பாத்திரத்தை வாங்கினார் எனக் கேட்டுக் கொண்ட மீனாட்சி, தங்களது கணிணியில் சேமிக்கப்பட்டிருக்கும் விற்பனை விலைப்பட்டியலில் அவரின் பெயரையும் எண்ணையும் வைத்து அந்த பொருளுக்கான ரசீதை தேடி எடுத்து கொண்டு வந்திருந்தாள்.
அவர் அப்பொருள் வாங்கிய போது அளித்த ரசீதின் காபியை எடுத்து வந்தவள், ஈஸ்வரனிடம் கொடுத்தாள்.
அதை பார்த்தவாறு, “சூப்பர்டா மீனு” என்றவன், “உங்க பில் காபி நாங்களே எடுத்துட்டோம்மா! இன்னும் கொஞ்சம் நேரத்துல புது பாத்திரம் உங்க கைக்கு வந்து சேர்ந்துடும்” என்று அப்பெண்மணியிடம் கூறி விட்டு,
“ராஜிக்கா இந்தாங்க பில்! புது பாத்திரம் பார்த்து எடுத்துக் கொடுங்க” என்றவாறு தனது அலுவலக அறைக்குள் நுழைந்தான்.
அங்கிருந்த மற்ற வாடிக்கையாளருள் ஒருவர், “என்ன திறமை பார்த்தியா இந்த ஈஸ்வரன் தம்பிக்கு! யூ டியூப்லயே அப்படி பேசுவானே, இன்னிக்கு நேர்லயே பார்த்துட்டேன். யாரா இருந்தாலும் பேசியே அவன் வழிக்கு கொண்டு வந்துடுவான்” என்று தனது மனைவியிடம் கூறியிருந்ததை கேட்டுக்கொண்டே அவன் பின்னோடு சென்றாள் மீனாட்சி.
“ஊப்ஸ்” பெருமூச்செறிந்தவாறு சுழலும் நாற்காலியில் அவன் அமர, “எனக்கு மட்டும் தான் உங்க வாய் ஜாலம் பத்தி தெரியும்னு நினைச்சேன். ஆனால் ஊருக்கே தெரிஞ்சிருக்குப்பா” எனக் கூறி மீனாட்சி சிரிக்க, கேலி புன்னகையுடன், “நான் உன்னை தவிர வேற யாருக்கும் முத்தம் கொடுத்தது இல்லையே பச்சக்கிளி” என்றான்.
அய்யோ என தலையில் அடித்துக் கொண்டவளாய், “எப்பவும் அதே நினைப்பு தான்” என அவன் முதுகில் நான்கடி போட்டாள்.
“என்னை பேசி பேசியே உங்க வழிக்கு கொண்டு வந்திடுறீங்கனு நான் தான் எப்பவும் சொல்வேன். இப்ப கஸ்டமர் ஒருத்தர் அப்படி சொல்லிட்டு இருந்ததை கேட்டேன். அதான் ஊருக்கே தெரிஞ்சிருக்கேனு சொன்னேன்” என தான் கூறியதன் பொருளை விளக்கினாள்.
“ஏன் பச்சக்கிளி அப்படி சொல்ற! நான் உன் அப்பா மாதிரி உன்னை எதுக்காவது ஃபோர்ஸ் செய்றேனா என்ன? உனக்கு விருப்பமில்லைனு சொல்லிருந்தா நம்ம வியாபாரத்துக்குள்ள உன்னை இழுத்திருக்கவே மாட்டேனே” என்று அவன் முடிப்பதற்குள்,
“இப்ப எதுக்கு அப்பாவை இழுக்கிறீங்க! கல்யாணத்துக்கு முன்னாடி அப்பா ஐடில வேலை பார்க்க சொன்னாங்க! செஞ்சேன்! கல்யாணத்துக்கு பிறகு எனக்கு ஐடி பிடிக்கலைனதும் உங்க பிஸ்னஸ்க்குள்ள என்னை இழுத்துட்டீங்க! இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லை” என்று முகத்தை சுழித்தவள், “எனக்குனு கனவு லட்சியம்னுலாம் எதுவும் இல்லாதனால உங்களோடதை எனதாக்கிட்டேன்” என்று கண் சிமிட்டி சிரித்தாள் இவள்.
“ஹான் மீனு! உனக்குனு தனியா யூ டியூப் சேனல் ஆரம்பிக்கலாமா? ரொம்ப நாளா என் மனசுல இருக்க பிளான் இது!” என்று கேட்டான் ஈஸ்வரன்.
“ஏன்ப்பா மீனாட்சி சுந்தரேஸ்வரர் யூ டியூப் சேனலே நாம இரண்டு பேருமா சேர்ந்து தானே தினமும் பிராடக்ட்ஸ் பத்தின வீடியோஸ்லாம் போட்டுட்டு இருக்கோம். எனக்கு மட்டும் எதுக்கு தனியா? இதுவே நீங்க கொடுத்த என்கரேஜ்மெண்ட் அப்புறம் நீங்க கூடவே இருக்கீங்கன்ற தைரியம் இதனால் தான் என்னோட ஸ்டேஜ் ஃபியர், கேமரா ஃபியர்லாம் தாண்டி வந்து வீடியோஸ்ல பப்ளிக்கா பேசுறேன். தனியா பேசனும்னா ஒரு மாதிரி இருக்கும்ப்பா” முகத்தை சுருங்கியவாறு அவள் கூற,
“இதுலயும் நான் உன் கூட தான் இருப்பேன். உன்னை தனியாலாம் விட்டுட மாட்டேன். என்ன உன் கூட கேமரா முன்னாடி இருக்க மாட்டேன். கேமரா பின்னாடி இருப்பேன். இப்போதைக்கு சும்மா கிரியேட் செஞ்சி வாரத்துக்கு ஒரு வீடியோ மட்டும் போடுவோம். நீ இது வரைக்கும் உன் வாழ்க்கைல கத்துக்கிட்ட விஷயங்கள். நீ ஐடில வர்க் பண்ணதால அதுல வேலைக்கு சேருவது எப்படி? புதுசா தொழில் தொடங்குவறவங்க செய்ய வேண்டிய விஷயங்கள் இப்படி ஏதாவது பொதுவான டாபிக்ல பேசி போடலாம். போக போக ரீச் பார்த்துட்டு டெவலப் செய்வோம்” என்றான்.
“என்னம்மோ சொல்றீங்க! நீங்க கூட இருப்பீங்கனா நான் என்னனாலும் செய்வேன்” என்று உரைத்தவாறு அருகில் நின்றிருந்தவளின் இடையோடு வளைத்துக் கொண்டவனாய், “மை லவ்லி பச்சக்கிளி” என அணைத்திருந்தான். இதழ் மலர சிரித்திருந்தாள் அவள்.
——–
முகத்தில் மாஸ்க்கும் தலையில் தொப்பியும் அணிந்திருந்த அந்த ஆடவன், அன்னம் இறங்கிய நிறுத்தத்திலேயே இறங்கியவன், அவளை தொடர்ந்து சென்றான்.
தனது அலுவலக வாயிலை நெருங்கிய அன்னம் நிமிர்ந்து நீண்ட நெடிய உயரமாய் கண்ணாடி மாளிகையாய் நிற்கும் கட்டிடங்களை பார்த்தவள்,
“பில்டிங்லாம் பார்க்கும் போது இவ்வளோ பெரிய இடத்துல வேலை பார்க்கிறோம்னு கெத்தா தான் இருக்கு. ஆனா வேலையை நினைச்சா தான் கடுப்பாகுது. எப்படி தான் நங்கை அண்ணிலாம் இன்னும் விடாம வேலை பார்க்கிறாங்களோ?” வாய்க்குள்ளே முணகியவாறு பார்த்தவள் சற்றாய் திரும்பி பார்க்க, இவளின் பின்னேயே வந்து கொண்டிருந்த அந்த ஆடவனை கண்டாள்.
‘இந்த பையன் தானே நம்ம பக்கத்துல உட்கார்ந்துட்டு இருந்தது. இவனும் இங்க தான் வேலை பார்க்கிறான் போல’ என்றெண்ணியவாறே உள்ளே நுழைந்து செக்யூரிட்டியிடம் தனது பையை செக் செய்ய காண்பித்து விட்டு, அலுவலக அனுகல் அட்டை மூலம் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தாள்.
இவள் பின்னோடு வந்தவனோ உள்ளே செல்லாமல் செக்யூரிட்டியிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க, ‘புதுசா ஜாயின் செஞ்சிருப்பாங்க போல’ நினைத்தவாறே சென்றாள்.
அன்றைய இன்டர்வியூக்கான இடத்தில் அமர்ந்து நேர்முக தேர்வுக்காக படித்து கொண்டிருந்த சமயம், “ஹாய் அன்னம்” என்றவாறு அவளருகில் வந்தமர்ந்தாள் புவனா.
அன்னம் இந்த அலுவலகத்தில் சேர்ந்த பிறகு கிடைத்த தோழி தான் புவனா. ஏற்கனவே புவனா வேறு பிராஜக்ட்டிற்கு தேர்வாகி சேர்ந்து விட, அன்னத்தை காண்பதற்காக அவளிருக்கும் இடத்திற்கு வந்திருந்தாள் புவனா.
அன்னத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு தேவையான விஷயங்களை கூறி உதவியவள், “ஆல் த பெஸ்ட் அன்னம்” என்றவாறு தனது பிராஜக்ட் இருக்கும் கட்டிடத்திற்கு சென்றாள்.
நேர்முகத் தேர்வுக்கு உள்ளே அன்னம் அழைக்கப்பட, அந்த பிராஜக்ட் மேனேஜரின் அறைக்குள் நுழைந்தாள்.
“ஹாய் ஐம் இன்பா” என்று அன்னத்திடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான் அந்த பிராஜக்ட்டின் மேனேஜரும் டீம் லீட்டும்மான இன்பா.
— தொடரும்