அழகிய அன்னமே 19 & 20

ஒரு வாரம் கடந்திருந்த நிலையில், அசோக் தனது விடுப்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க, மோகனும் அன்னமும் இணைந்து வேலை பார்க்க வேண்டிய சூழல் உருவானது.

அந்த வாரம் இரவு ஷிப்ட்டில் வேலை அதிகமாக இருக்க, மோகனும் அன்னமும் இரவு ஷிப்ட்டில் ஒன்றாக வேலை பார்த்தனர்.

மோகன் தன்னிடம் காதலை மொழிந்த நாளில் இருந்து, தன்னையும் மீறி அவனது செயல்களை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினாள் அன்னம். அவள் மீதான அவனின் அக்கறையே அவனது ஒவ்வொரு செயலிலும் வெளிபடுவதாக தோன்றியது அவளுக்கு.

அந்த வார நாளில் இரவு ஷிப்ட்டில் வேலை பார்த்து கொண்டிருந்தவளுக்கு நேரம் செல்ல செல்ல தொண்டை வலி எடுத்து உடல் கொதிக்க ஆரம்பிக்க, இயல்பாய் அவளுடன் பேசியவாறு பணி செய்து கொண்டிருந்த மோகன், அவளின் மாற்றத்தை கவனித்தவனாய், “முகம் ஏன் இவ்வளோ சோர்வாக இருக்கு! தொண்டை கூட கட்டினா மாதிரி இருக்கே! போய் டீ குடிச்சிட்டு வருவோமா?” எனக் கேட்டு கேண்டீனுக்கு அழைத்து சென்றான்.

“அன்னம் ஒரு விஷயம் தெரியுமா? நம்ம சிவாண்ணா புதுப்பட ஷூட்டிங்காக வெளிநாட்டுக்கு போய்ருக்காங்க. மூனு மாசம் கழிச்சி தான் இந்தியாக்கு வருவாங்களாம்” என்றான்.

“ஓ அவர்கிட்ட பேசியே ரொம்ப நாள் ஆகுது. நங்கை அண்ணி கூடவும் நந்துக்குட்டி கூடவும் இருந்தா நேரம் போறதே தெரியாது தெரியுமா. சுத்தி எல்லாரையும் மறந்துடுவேன்” என்றவள் கூறவும்,

“அப்படியா! என்னை மறந்த மாதிரி தெரியலையே! வேற ஷிப்ட்ல இருந்தப்பலாம் எனக்கு எப்பவும் போல ஃபோன் செஞ்சி பேசிட்டு தானே இருந்த” என்றான் மோகன்.

தன்னை அவளுக்கு பிடிக்குமென உணர்த்துவதற்காக இவ்வாறு உரைத்திருந்தான்.

அவனது பேச்சின் சாரம் விளங்கினாலும் பதில் கூறாதவளாய், “சூடா ஏதாவது சாப்பிடலாமா? தொண்டைக்கு இதமா இருக்கும்” என்று பேச்சினை திசை திருப்பினாள்.

‘ஆமா இதுக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டியே’ என வாய்க்குள் முணகியவனாய், அவள் கேட்டதை வாங்கி கொடுத்தான்.

இருக்கைக்கு வந்து பணியினை தொடர்ந்தவளுக்கு குளிர ஆரம்பிக்க, தனது துப்பட்டாவை சுற்றி போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.

“என்ன அன்னம்! உடம்பு ரொம்ப முடியலையா?” எனக் கேட்டான்.

“ஆமா ஜூரம் அடிக்குது மோகன். காலைல வீட்டுக்கு போய்ட்டா சரியாகிடும். நீ வேலையை பாரு” என்றாள்.

“நீ வேணா நேப் (nap) ரூம்ல போய் படுத்துக்கோ! நான்‌ பார்த்துக்கிறேன்” என்றான் மோகன்.

“இல்ல தனியா அங்க தூங்க எனக்கு பயம். நான் இங்கேயே சாஞ்சி தூங்குறேன்” என்றவள் மேஜை மீதே தலையை சாய்த்து கொண்டாள்.

ஆனாலும் அவ்வப்போது தும்மியவாறும் மூக்கை சீந்தியவாறும் அவள் இருக்க, அவர்கள் அமர்ந்திருந்த இடத்தினருகே இருந்த ஏசியை குறைக்குமாறு ஏசி டீம்க்கு அழைத்து கூறினான்.

அவளது குடிநீர் போத்தலில் சுடுநீர் பிடித்து வந்து கொடுத்து குடிக்க செய்தான்.

சிறிது நேரம் உறங்கியவளுக்கு மண்டை வலி எடுக்க, “ரொம்ப தலை வலிக்குது மோகன்” கூறும் போதே குரலும் மாறியிருந்தது.

அவளின் வலியை கண்டு மனம் சுணங்கியவனாய், “இரு! இங்க எதுவும் மாத்திரை கிடைக்குமானு பார்த்துட்டு வரேன்” என்றவன், ஒரு மணி நேரம் கழித்து ஒரு டீ கோப்பையுடன் வந்தான்.

அவளுக்கு குடிக்க டீ அளித்துவிட்டு, தான் வாங்கி வந்த மாத்திரைகளை அளித்தான்.

“எங்கடா மாத்திரை வாங்கின? பக்கத்துல எதுவும் மெடிகல் ஷாப் இல்லையே” எனக் கேட்டாள் அன்னம்.

“ஆமா பக்கத்து டீம் பையன்கிட்ட இருந்த வண்டியை வாங்கிட்டு போனேன். பக்கத்துல எந்த கடையும் ஓபனா இல்லை. அதான் வர லேட் ஆகிடுச்சு” என்றவன், அவளை அந்த நாற்காலியிலேயே சாய்ந்து உறங்க சொன்னான்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் சற்று தெளிந்திருந்தாள் அன்னம்.

“தேங்க்யூ மோகன்” அவனிடம் மனமார நன்றியுரைத்தவள் வேலையை கவனிக்க, காலை ஷிப்ட்டுக்காக வந்திருந்தான் பாலாஜி.

மோகன் ஓய்வறைக்கு சென்றிருக்க, பாலாஜியிடம் ஷிப்ட் ஹேண்ட் ஓவரை கூறி கொண்டிருந்தாள் அன்னம்.

பாலாஜியிடம் பேச்சு  வாக்கில் இரவு தனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும், மோகன் தனக்காக மாத்திரை வாங்கி வந்து கொடுத்ததையும் அன்னம் உரைக்க, “ஹ்ம்ம் மனசுல ஒன்னுமில்லாம தான் அவன் உன்னை இப்படி விழுந்து விழுந்து கவனிக்கிறானா? எப்படியோ நல்லா இருந்தா சரி தான். எப்ப வீட்டுல சொல்லி கல்யாணம் செஞ்சிக்கிறதா இருக்கீங்க” என்றான்‌ பாலாஜி.

பாலாஜியின் பேச்சில் அவனை முறைத்தாள் அன்னம்.

“ஹே என்ன முறைக்கிற! நிஜமா சொல்றேன்! உன் ஃபோனை கொடு” என்று அன்னத்தின் கைபேசியை பாலாஜி வாங்கிய சமயம் ஓய்வறையிலிருந்து வந்திருந்தான் மோகன்.

தனது இருக்கையில் அமர்ந்து மோகன் தனது வேலையை கவனித்து கொண்டிருக்க, திடீரென அலறியது அவனது கைபேசி.

அன்னமே அன்னமே நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று
உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததைச் சொன்னதா பூங்காற்று
உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்
உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல் இருப்பேன்
மாலை சூடி தோளில் ஆடி கைதொட்டு மெய்தொட்டு
உன்னில் என்னைக் கரைப்பேன்

“லிசன் (listen)” என்றவனாய் அன்னத்திடம் கண்களை காண்பித்தான் பாலாஜி.

பாலாஜி அன்னத்தின் கைபேசியிலிருந்து மோகனுக்கு அழைத்திருந்தான். அன்னத்திற்காக பிரத்யேகமாக மோகன் வைத்திருந்த அந்த பாடலை அன்னத்தை தவிர அந்த அலுவலக அறையில் அனைவருமே முன்பு கேட்டிருக்கின்றனர். இன்று அதனை அன்னத்திற்கு காட்டி கொடுத்து விட்டான் பாலாஜி.

திடீரென அலறிய தனது கைபேசியின்‌ பாடலில் அன்னத்திடம் பிடிபட்டவனாய் அதிர்ந்து அவளை பார்த்தான் மோகன்.

“நான்‌ ரொம்ப நாளா இந்த பாட்டை வச்சிருக்கேன் அன்னம். இதுக்கும் அன்னிக்கு நடந்ததுக்கும் முடிச்சி போட்டு பார்க்காத! நீ என் ஃப்ரண்ட் மட்டும் தான் ஓகே” என்று மோகன் அவளிடம் கெஞ்சியவாறு கூறவும், சிரித்து விட்டு போய் விட்டாள் அன்னம்.

நாளுக்கு நாள் மோகனின் அன்பான அக்கறையான செயல்கள் அவளை கவர்ந்த வண்ணம் இருக்க, ஏன் தான் மோகனை மணம் செய்து கொள்ளக் கூடாது எனத் தோன்றியது அன்னத்திற்கு. அவனை ரசிக்க ஆரம்பித்தாள். அவன் தன்னுடன் பேசாத நாளில் வெறுமையை உணர ஆரம்பித்தாள்.

அவள் மீதான அன்பும் அக்கறையும் அவனுக்கு இருந்தாலும், அவளை கவர்வதற்கான அவனின் மெனக்கெடலாய் இச்செயல்களை அவள் பார்க்காமல் போனாள்.

ஒரு‌ மாதம் கடந்திருந்த நிலையில் ஒரு நாள் காலை அலுவலக கேண்டீனில் அமர்ந்திருந்த அன்னத்தின் கண்கள் நீரை பொழிய, “அதான் நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்ல! எதுக்கு அழுதுட்டு இருக்க நீ! நீயே அழுது காட்டி கொடுக்காத” என சமாதானம் செய்துக் கொண்டிருந்தான் மோகன்.

மோகனின் கைபேசி அலற, அழைப்பை ஏற்றவனாய், “சொல்லுங்க இன்பா” என்றான்.

“பாலாஜி ஃபோன் செஞ்சி சொன்னான் ஏதோ பிரச்சனைனு! எப்படிடா திடீர்னு சர்வர் டவுன் ஆகும். நம்ம சைட்ல எதுவும் பிரச்சனையா? நைட் ஷிப்ட்ல ஒழுங்கா தானே மானிட்டர் செஞ்சிட்டு இருந்தீங்க” எனக் கேட்டான் இன்பா.

“நம்ம மேல எதுவும் தப்பில்லை இன்பா. இது வேற‌ டீம் பிராப்ளமா தான் இருக்கனும். என்னனு நான் பார்த்து சரி செஞ்சிட்டு தான் கிளம்புவேன்” என்று இணைப்பை துண்டித்தான்‌ மோகன்.

மோகனும் அன்னமும் இரவு ஷிப்ட் வேலையில் இருந்த போது, மோகன் உறங்கி விட, அன்னம் செய்த தவறான அப்டேட்டால் காலை சைட்டில் இஷ்யூ வந்து விட்டது. முதலில் அன்னத்திற்கே தன்னால் தான் இஷ்யூ வந்ததென்றே புரியவில்லை. ஆனால் மோகன் அதனை உடனே கண்டுபிடித்து விட்டான்.

அவள் என்னவெல்லாம் செய்தாள் என கேட்டு வெப்சைட்டை பரிசோதித்தவன், அவளால் தான் இப்பொழுது சைட் வேலை செய்யாமல் இருப்பதாகவும், அதை சரி செய்யாமல் யாராலும் இப்பொழுது டிரேடிங் செய்ய இயலாதென்றும் உரைத்தவன், அடுத்து செய்ய வேண்டிய காரியங்களில் ஈடுபட்டான்.

இந்நிலையில் பிரச்சினையின் தீவிரத்தை எவரிடமும் கூறாமல் தானே தீர்த்து வைக்க தனக்கு தெரிந்த உபாயங்களை யோசிக்க தொடங்கினான் மோகன்.

இதை சரி செய்வதற்கான தீர்வு மோகனுக்கு தெரிந்தாலும், அதற்காக அனுமதி (access) சர்வர் டீம்க்கு தான் உள்ளது என்பதால் அவர்களை தொடர்பு கொண்டு கூறினான்.

அதற்குள் காலை ஷிப்ட்காக பாலாஜி வந்து விட, அவரை பார்த்துக் கொள்ள கூறிவிட்டு அன்னம் அழுவதை கண்டு அவளை கேண்டீனுக்கு அழைத்து வந்து சமாதானம் செய்து கொண்டிருக்கிறான்.

இருவரும் மீண்டுமாய் அலுவலக அறைக்கு சென்றதும், “மோகன் அவங்க மேனேஜர் அப்ரூவல் இல்லாம சர்வர் டீம் இதை செய்ய மாட்டோம்னு சொல்றாங்க. இன்பா தான் இப்ப அவங்க மேனேஜர்கிட்ட பேசி அப்ரூவல் வாங்கி செய்ய சொல்லனும்” என்றான்.

‘இன்பாகிட்ட நடந்ததை சொல்லி அவங்க மேனேஜர்கிட்ட பேச சொல்வோமா மோகன்’ என அவனின் காதருகே அன்னம் கூற,

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். உன்னால் தான் இந்த பிரச்சனைனு தெரிஞ்சா, உனக்கு இந்த வருஷம் வர வேண்டிய ஹைக் (hike – சம்பள உயர்வு) ரேட்டிங் எதுவும் வராது. இது தானே உன்னோட ஃபர்ஸ்ட் அப்ரைசல்‌” என்ற மோகன்,

“எதுவும் சொல்லாமலே இன்பாவை நான் செய்ய சொல்றேன்” என்றான்.

இன்பாவிடம் பேசி ஒத்துக்கொள்ள வைத்து, சர்வர் டீம் மேனேஜரிடம் பேசி அந்த தீர்வை அவர்களை செய்ய வைத்து என இந்த பிரச்சனையை சரி செய்ய மாலை நேரமானது. அது வரை அன்னமும் மோகனும் அலுவலகத்தில் தான் இருந்தனர். முந்தைய நாள் இரவு அலுவலகத்திற்கு வந்தவர்கள் மறுநாள் மாலை வரை அலுவலகத்தில் தான் இருந்தனர்.

மாலை வரை கிளைண்ட் எவராலும் டிரேடிங் செய்ய முடியாததால் இப்பிரச்சனை அவர்களுக்கு நஷ்டத்தை கொடுத்தது.

பிரச்சனையை சரி செய்ததும் கிளைண்ட்டுடன் மீட்டிங் இருந்தது இன்பாவிற்கு‌.

கிளைண்டுடன் பேசிவிட்டு வந்த இன்பா தனது டீமுடன் மீட்டிங் வைத்தான்.

இன்பாவின் முகத்தில் பிரச்சனை முடிந்த மகிழ்வை விட அதிகமான குழப்பமும் வாட்டமுமே தென்பட்டது.

“சைட் இப்ப வர்க் ஆனாலும், நாம இதை சரி செய்ய லேட் செஞ்சிட்டதா கிளையண்ட் சொல்றாங்க. அவங்க நஷ்டத்துக்கு நாம பொறுப்பேத்துக்கனும்னு சொல்றாங்க. எதனால் இந்த பிரச்சனை வந்துச்சுனு கண்டுபிடிச்சு, எதிர்காலத்துல இந்த மாதிரி பிரச்சனை வராதுன்னு நாம உறுதி மொழி அளிக்கனும்னு சொல்றாங்க. கடைசியா ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க, அவங்களுக்கு இன்னிக்கு ஆன  நஷ்டத்துக்கான பெனாலிட்டி (அபராதம்) நாம கட்டனும்னு சொல்றாங்க” மீட்டிங் அறையில் மொத்த குழுவின் முன் அமர்ந்து இன்பா இதை கூற, மோகனும் அன்னமும் ஸ்தம்பித்து போயினர்.

‘எதனால் இந்த பிரச்சனை வந்துச்சுனு பார்க்கும் போது நாம செஞ்ச தப்பு தான்னு கண்டுபிடிக்க நிறைய வாய்ப்பு இருக்கே! அவங்க கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடி நாமளே சொல்லிட்டா என்ன’ என திருதிருத்த முழியுடன் யோசித்தாள் அன்னம்.

அழகிய அன்னமே 20

இந்த இடத்தில் தான் பிரச்சினையின் தீவிரம் மோகனுக்கும் அன்னத்திற்கும் புரிந்தது‌.

இதற்கு மேல் இன்பாவிடம் இதனை மறைக்க முடியாது என புரிந்தது மோகனுக்கு. இன்பா உதவி செய்தால் தான் அன்னத்தினால் தான் இந்த பிரச்சனை வந்தது என்பதை கிளைண்ட்டிடம் காண்பிக்காமலும் அபராதம் கட்டும் அளவுக்கு இந்த பிரச்சனை செல்லாமலும் தவிர்க்க முடியுமென தீர்க்கமாக தெரிந்ததும் இன்பாவிடம் நடந்ததை உரைத்தான் மோகன்‌.

அன்னம் வெளிறிப்போன முகத்துடன் அமைதியாக நின்றிருக்க, மோகன் கூறியதை கேட்ட இன்பா, “இவ்வளோ கேர்லெஸ்னஸ் ஆகாது அன்னம். இப்ப எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பாத்தியா? கிளைண்ட்க்கு நாம பெனால்டி கட்டுற சூழ்நிலை வந்தா, இப்படி தான் நஷ்டத்தோட பிராஜக்ட்டை நடந்துவியானு நம்ம மேனேஜ்மென்ட் என்னை காரி துப்புவாங்க” கோபமாய் உரைத்திருந்தான்.

அன்னத்திற்கு குற்றவுணர்வாகி போனது‌.

அன்னத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய, “விடு இன்பா! அந்த பொண்ணை திட்டி என்னவாக போகுது. இதை எப்படி சரி செய்றதுனு பார்க்கலாம்” என்றான் பாலாஜி.

அங்குமிங்குமாக நடந்து தனது கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவனாய், “அன்னம் நீ வீட்டுக்கு கிளம்பு! இன்னிக்கு நைட் ஷிப்ட் வர வேண்டாம். இதை நாங்க சால்வ் பண்ணிட்டு சொல்றோம். உன்னை பார்க்க பார்க்க ஏதாவது திட்டிடுவேனோனு பயமா இருக்கு! நீ கிளம்பு” என்றான் இன்பா.

அவளை இந்த பிரச்சனையிலிருந்து தள்ளி வைத்து காப்பாற்றுவதற்காகவும் அவ்வாறு கூறினான் இன்பா.

“ஆமா அன்னம்! இன்பா சொல்றது சரி தான். நீ கிளம்பு” என மோகனும் உரைக்க,

“சாரி இன்பா! இப்ப என்னால உங்களுக்கு ரொம்ப பிரச்சனைல” அழுகை குரலில் அன்னம் கேட்க,

“ஆமா தான்! ஆனா சமாளிச்சிடலாம். இது கூட சமாளிக்க முடியலைனா அப்புறம் நான் என்ன மேனேஜர். யூ ஜஸ்ட் கோ அண்ட் டேக் ரெஸ்ட்” என்று அவளை அனுப்பி வைத்தான். சரியென கிளம்பி விட்டாள் அன்னம்.

மோகனிடம் வந்த இன்பா, “எப்பவும் அவளை நீ காப்பாத்திட்டே இருக்கனும் நினைக்காத! அவ வேலையை அவ பார்க்கட்டும். இனி என்ன நடந்தாலும் உங்க இரண்டு பேரையும் ஒரே ஷிப்ட்ல போட மாட்டேன்” என்றவாறு சென்று விட்டான்.

‘இவர் ஏன் நான் அன்னத்துக்காக எது செஞ்சாலும் இப்படி காண்டாகுறாரு‌! ஒரு வேளை நான் அன்னத்தை லவ் பண்றது இவருக்கு தெரிஞ்சிடுச்சோ’ என யோசித்தவாறு அவனும் கிளம்பி போனான்.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து பகல் ஷிப்ட்டில் அன்னம் வந்த பொழுது, பிரச்சனை முடிவடைந்திருந்தது.

அன்னத்திடம் பேச வேண்டுமென அழைத்திருந்தான் இன்பா.

இன்பாவின் அறைக்கு அன்னம் செல்ல,

“அடுத்த மாசத்துல உனக்கு இந்த பிராஜக்ட்ல ரிலீஸ் கொடுத்துடுவோம் அன்னம்” என்றான் இன்பா.

இன்பா இயல்பாக கூறியிருந்தாலும், தான் செய்த தவறுக்காக தான் இந்த முடிவினை எடுத்திருப்பார்கள் என எண்ணி கலங்கிய அன்னம் அதிர்ந்தவளாய், “ஆனா நான் ரிலீஸ் கேட்கவே இல்லையே இன்பா” என்றாள்.

“ஆமா தான். ஆனா இந்த பிரச்சனைல கிளையண்ட் பெனால்டிலருந்து தப்பிக்கிறதுக்காக, கிளையண்ட்க்கு குறைவான பேமெண்ட்ல இந்த வருஷம் இந்த பிராஜக்ட்க்கு வேலை செஞ்சி தரதா சொல்லி தான் அவங்களை சமாதானப்படுத்தினேன் அன்னம். சோ குறைவான காசுல பிராஜக்ட்டை நடத்தனும் அதே நேரம் மேனேஜ்மெண்ட்க்கும் லாபமா பிராஜக்ட்டை கொண்டு போகனும்னா டீம் சைஸ் (team size) தான் முதல்ல குறைக்கனும். உன்னையும் அசோக்கையும் ரிலீஸ் செய்யலாம்னு பிளான். அசோக் பர்சனல் பிராப்ளம்னால ரிலீஸ் கேட்டிருந்தாரு” சரியென சோகமாக அன்னம் தலையசைக்க,

“நீ செஞ்சது பெரிய இஷ்யூ அன்னம். உன்னால தான்‌ இந்த பிரச்சனை வந்துச்சுனு நம்ம மேனேஜ்மென்ட்டுக்கு தெரிஞ்சிதுனா உன்னை வேலை விட்டே தூக்கிருப்பாங்க. சோ தலைக்கு வந்தது தலைப்பாகையோட போய்டுச்சுனு சந்தோஷப்பட்டுக்கோ” அவளை சமாதானம் செய்தான் இன்பா.

அன்னத்திற்கு லேசாக கண்கள் கலங்கியது.

“முதல் பிராஜக்ட்டே எனக்கு ரொம்ப நல்ல டீம் கிடைச்சாங்க இன்பா. எனக்கு இங்க ஷிப்ட் கூட பிரச்சனையாவே தெரியலை. உங்களை எல்லாம் மிஸ் பண்ணுவேன்” என்றவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய,

“ஹே என்ன அதுக்குள்ள ஃபேர்வெல் ஸ்பீச் கொடுக்கிற! இன்னும் ஒரு மாசம் இருக்கு. அதுக்குள்ள நம்ம டீம் கூட எங்கேயாவது டூர் பிளான் செய்வோம்” அவளை உற்சாகப்படுத்தினான்.

சரியென தலையசைத்தவள் இன்பாவின் இடத்தை விட்டு வெளியே வந்ததும் முதல் வேலையாக இதனை மோகனுக்கு அழைத்து தெரிவித்தாள்.

“எனக்கு உங்க கூடலாம் இங்க நல்லா செட் ஆகிடுச்சு மோகன். புது பிராஜக்ட் அண்ட் டீம் எப்படி இருக்குமோனு பயமா இருக்கு” என்று அன்னம் கவலைக்கொள்ள, “அப்ப என்னை விட்டு போய்டுவியா அன்னம்” என வருத்தத்துடன் கேட்டான் மோகன்.

அக்கேள்வி அவளின் மனதை என்னமோ செய்தது‌. அவளின் மனம் மேலும் பாரமாகி போனது.

“நாம எப்படி எப்பவுமே ஒன்னா இருக்க முடியும் மோகன்” என்று அன்னம் கேட்க,

“நான் உன்னை காதிலிக்கிறதா ஒரு தடவை சொன்னேனே அதை இப்ப நீ பரிசீலிக்கலாமே அன்னம்” எனக் கேட்டான் மோகன்.

அவள் பதிலுரைக்காது அமைதிக் காக்க, அவளின் அமைதி அவனுக்கு நம்பிக்கை அளிக்க, “என்னை உனக்கு பிடிக்கும் தானே” எனக் கேட்டான்.

“எனக்கு கொஞ்சம் டைம் வேணும் மோகன். யோசிச்சிட்டு சொல்றேனே” என்றாள்.

இதை பற்றி பேசவே வேண்டாம் என்றவள் இப்பொழுது யோசித்து விட்டு கூறுவதாய் உரைத்ததே பெரிய முன்னேற்றமாய் எண்ணி அகமகிழ்ந்தான் மோகன்.

“ரொம்ப டைம் எடுத்துக்காத! உன்னையே நினைச்சிட்டு இருக்க எனக்கு உன்னோட பதில் வரும் வரை வாழ்வா சாவா போராட்ட நிலைல தான் மனசு இருக்கும்” என்றான் மோகன்.

“ஆனா‌ நான் வேண்டாம்னு சொன்னாலும் இதோட விட்டுடனும் நீ! என்னை கம்பெல் செய்ய கூடாது” என்றாள் அன்னம்.

“கண்டிப்பாக உன்னை என்னிக்கும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன்” என்றான்.

அன்றைய நாள் முழுவதும் கலவையான மனநிலையிலேயே சுற்றினாள் அன்னம்.

மறுநாள் மாலை வேளையில் அன்னத்தை அழைத்தாள் மீனாட்சி.

“உனக்கு நிறைய மாப்பிள்ளை ஜாதகம் வந்துட்டு இருக்காம். பார்க்கலாமானு ஆச்சி கேட்டு சொல்ல சொன்னாங்க. நீ என்ன சொல்ற அன்னம்?” எனக் கேட்டாள் மீனாட்சி.

“நான் லவ் மேரேஜ் செஞ்சிக்கலாம் நினைக்கிறேன். நீ என்ன சொல்ற மீனு?” எனக் கேட்டாள் அன்னம்.

“ஆச்சி உன்னை சூப் வச்சிடுவாங்க பரவாயில்லையா” சிரித்தவாறு கூறினாள் மீனாட்சி‌.

“ஹே மீனு! நான் சீரியசா கேட்குறேன்” என்று அன்னம் உரைக்க,

“ஆமா நம்பிட்டேன்! நம்பிட்டேன்! உன் அப்பா அம்மா கண் கலங்கினாலே தாங்காது உனக்கு! இதுல ஒருத்தனை லவ் செஞ்சிட்டு வந்து இவங்களை கலங்கடிக்க போறாளாமா! நம்புற கதையை சொல்லுடி” என்றாள் மீனாட்சி‌.

மீனாட்சியின் பேச்சு நெஞ்சை தைக்க, “ஏன் மீனு! நான் லவ் செஞ்சா அப்பா அம்மா கவலைப்படுவாங்களா என்ன?” எனக் கேட்டாள்.

“பின்ன உனக்கு சப்போர்ட் செய்வாங்கனு நினைச்சியா? ஆச்சியை கூட ஒரு விதத்துல கரைச்சிடலாம். ஆனா உன் அப்பா அம்மாவை கரைக்க முடியாது‌. அதனால் இப்படி பினாத்தாம ஒழுங்கா சொல்லு இப்ப கல்யாணம் செய்ய உனக்கு ஓகேவா இல்லையா?” எனக் கேட்டாள் மீனாட்சி.

அன்னம் எதையோ யோசித்தவாறு அமைதி காக்க,

“உனக்கு இப்ப கல்யாணம் செய்ய வேண்டாம்னா சொல்லு. நான் ஈஸூப்பாகிட்ட பேசி மாமாகிட்ட சொல்ல சொல்றேன்” என்றாள் மீனாட்சி.

“ஆஹான் இப்ப கல்யாணம் செய்யாம, வயசான காலத்துல கல்யாணம் செஞ்சி பிள்ளைங்களை பெத்து அதுக்கு பிறகு அதுங்களை வளர்க்க வயசான காலத்துல பாடுபடனும். நமக்கு அதுலாம் செட் ஆகாதுப்பா! எப்ப கல்யாணம்னாலும் அன்னம் ரெடி” சிரித்தவாறு அன்னம் கூற,

வாய்விட்டு சிரித்த மீனாட்சி, “சரி நான் வந்திருக்க ஜாதகத்தை பார்க்க சொல்றேன்” என்று சில நிமிடங்கள் பேசி விட்டு இணைப்பை துண்டித்தாள்.

மீனாட்சியின் பேச்சு அவளுக்குள் குழப்பத்தை விளைவிக்க, மோகனின் காதலை ஏற்கலாமா வேண்டாமா என்ற யோசனையிலேயே படுத்திருந்தாள் அன்னம்.

அன்றிரவு மோகன் ஷிப்ட்டில் இருக்க, “சாப்பிட்டாச்சா?” என குறுஞ்செய்தி அனுப்பினான் மோகன்.

அதற்கு பதிலளித்தவளாய் அவனுடனான முந்தைய உரையாடல்கள் அனைத்தையும் வாட்ஸ்சப்பில் பார்த்தவாறு இருந்தாள்.

எங்கேயும் அவளிடம் அவன் கண்ணியக் குறைவாக நடந்ததே இல்லை. அவளுக்கான அவனின் செயல்கள் அனைத்திலும் அக்கறையை உணர்ந்திருக்கிறாள். அலுவலகத்தில் தன்னை அத்தனையாய் பாதுகாத்திருக்கிறான். காதலை மொழிந்த போதும் தன்னை வற்புறுத்தாமல் இயல்பாக நடந்து கொண்டான்.

அவனுடைய நல்ல குணங்கள் அனைத்தையும் பட்டியலிட்ட வண்ணம் வந்தவளுக்கு அவனை வேண்டாமென கூறுவதற்கான காரணங்கள் ஒன்றும் பிடிபடவில்லை.

தனக்குள்ளேயே சிந்தித்து இதற்கான முடிவை எடுக்காமல், தனது குடும்பத்தாருடன் அல்லது தனது நலன்விரும்பிகளுடன் பேசி முடிவெடுத்திருக்கலாம் அன்னம்.

அடுத்த நாள் அன்னத்தை அழைத்த இன்பா, “எனக்கு கீழே இன்னொரு பிராஜக்ட்டும் இருக்கு அன்னம். மொத்தமே மூனு பேர் தான் அந்த பிராஜக்ட்ல வேலை செய்றாங்க. அதுல ஒருத்தர் பத்து வருஷமா அந்த பிராஜக்ட்ல வேலை பார்த்துட்டு இருக்காரு. அவர் தான் முழுசா அந்த பிராஜக்ட்டை மெயின்டெய்ன் செய்றாரு. அது டெவலப்மெண்ட் பிராஜக்ட்‌! ஷிப்ட் கிடையாது. அதுல ஒருத்தர் ரிலீஸ் ஆகுறார். அதுல வேலை செய்றியா? உன்னை அந்த பிராஜக்ட்டுக்கு அசைன் செஞ்சிடுறேன்” என்றான்.

இன்பாவின் கீழேயே வேறொரு பிராஜக்ட் என்பதில் மகிழ்ந்த அன்னம் உடனே ஒப்புக் கொண்டாள்.

மறுநாளில் இருந்தே அந்த பிராஜக்டிற்காக அன்னத்தை சாதாரண அலுவலக நேரத்திற்கு அலுவலகம் வருமாறு உரைத்து விட்டான் இன்பா.

உடனே வேறொரு ஷிப்ட்டில் இருந்த மோகனை அழைத்து தெரிவித்தாள் அன்னம்.

“ஆமா அன்னம். அது ரொம்ப நல்ல பிராஜக்ட்! நிறைய கத்துக்கலாம்” என்றான் மோகன்.

“நாளைலருந்தே நான் அந்த பிராஜக்ட்டுக்கு போய்டுவேன் மோகன். அது இதே ஆபிஸ்ல வேற பில்டிங்ல இருக்குனு சொன்னாரு இன்பா. அந்த டீமை இன்னிக்கு அறிமுகம் செய்து வைக்கிறதா சொன்னாரு” என்றாள் அன்னம்.

“ஹ்ம்ம்” என்று பெருமூச்சு விட்டவனாய்,

“நான் கேட்டதுக்கு என்ன முடிவெடுத்திருக்க? இன்னும் நேரம் வேணுமா உனக்கு? நாளைலருந்து உன்னை பார்க்க முடியுமோ முடியாதோ! உன்னை மனசார காதலிக்கிறேன் அன்னம். நான் உன் மேல காண்பிக்கிற அன்புல உனக்கு அது புரியவே இல்லையா?” என ஆதங்கத்துடன் கேட்டான் மோகன்.

“இன்னிக்கு ஈவ்னிங் வெளில மீட் பண்ணலாமா? நான் ஆபிஸ்லருந்து டைரக்ட்டா அங்க வந்துடுறேன்” என்றாள்.

அன்று மாலை அவன் முன் மொழிந்த காதலை வழி மொழிந்தாள் அன்னம்.

விதியை மதியால் வெல்லாமல் விதிக்குள் அகப்பட்டு போனாள் அன்னம்.

— தொடரும்