அழகிய அன்னமே 17 & 18

“எனக்கு ஏன் அவ்ளோ கோபம் வந்துச்சுனே தெரியலை சுந்தர்”
நள்ளிரவில் தனது அறையின் பால்கனியில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்தவாறு கணவனுடன் காணொளி அழைப்பில் பேசி கொண்டிருந்த நங்கையின் கண்களை நீர் நிறைத்திருந்தது.
நிகழ்ச்சியின் நிறைவில் அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள் வீட்டை அடையும் பொழுதே மணி இரவு பத்தை நெருங்கி இருந்தது. வரும் பொழுதே குழந்தை உறங்கிக் கொண்டிருக்க, கட்டிலில் படுக்க வைத்து விட்டாள் நங்கை. அன்னமும் நங்கையின் அறையிலேயே குழந்தையின் அருகில் படுத்துக் கொள்ள, தனது கணவருடன் தனியாக பேசவென பால்கனி ஊஞ்சலில் அமர்ந்தவாறு அவனுக்கு அழைத்தவள், நிகழ்ச்சியில் நடந்த அனைத்தையும் அவனுக்கு தெரிவித்திருந்தாள்.
“நான் அப்படி பேசிருக்க கூடாது தானே சுந்தர்!” வருத்த குரலில் அவள் கேட்க,
அமைதியாக அவளை பார்த்திருந்தவன், “கண்டிப்பா நீ அப்படி பேசியிருக்க கூடாது நங்கை. அவரோட பாஸ்ட் பத்தி அவங்க மனைவிகிட்ட சொல்றதும் சொல்லாததும் அவரோட பர்சனல். அதை தெரிஞ்சிக்க நீ ஏன் விரும்புறனு கேள்வி வரும். இத்தனை வருஷம் கழிச்சும் அதை எல்லாம் கடந்து போக முடியாம நீ தவிச்சிட்டு இருக்கிறதா அவருக்கு தோணலாம். இப்ப நீ பேசினதை பார்த்து நீ இன்னும் அவரை நினைச்சிட்டு இருக்கிறதா கூட அவர் நினைக்கலாம் தானே” என்று சுந்தரராஜன் அமைதியாக கூறவும்,
பதறிய நங்கை, “அய்யய்யோ… நீ அப்படி நினைக்கிறியா சுந்தர்?” அதிர்ந்த பார்வையுடன் அவனை கேட்டாள். கண்களில் இருந்து பொங்கி கொண்டு வந்தது கண்ணீர்.
“எவ்ளோ பெரிய தப்பை செஞ்சி வச்சிருக்கேன்! எதையும் யோசிக்காம பேசிட்டு வந்திருக்கேன்” தலையிலேயே அடித்து கொண்டாள்.
“டேய் பப்ளிமாஸ்! உன்னை பத்தி எனக்கு தெரியாதா! கண்ணை தொட டா! என்னால உன்னை புரிஞ்சிக்க முடியுதுடா!” என்றான் அவன்.
அவள் கண்களை துடைக்க, “பக்கத்துல தண்ணீர் வச்சிருக்கியா? எடுத்து குடி” என்றான். அறைக்குள் சென்று தண்ணீர் அருந்துவிட்டு வந்து அமர்ந்தாள்.
“இன்பாவை பத்தி நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்” என்றான் ராஜன்.
என்ன என்பது போல் அவள் பார்க்க,
“அன்னிக்கு நைட் இன்பாவும் சூசைட் அடெம்ப்ட் செஞ்சாரு. அப்ப அவரோட ரூம் மேட் தான் யாரோ அவரை காப்பாத்தினாங்க” என்றவன் சொன்னதும்,
“என்னது” விழிகள் விரிய அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள் நங்கை.
“ஆமா உன்னை பேசிட்டு அவரும் ஒன்னும் சந்தோஷமா இல்லை நங்கை. அவரோட அம்மாகாக காதலை விட்டு கொடுத்திருக்காரு. அதுக்கு உன்னை பலிகடாவாக்கிட்டாரு” என்றான் ராஜன்.
“ஆனாலும் அவன் என்னை பேசினது தப்பு தானே சுந்தர்” எனக் கேட்டாள்.
“கண்டிப்பாக தப்பு தான். அவரோட செயலுக்கான தண்டனையை ஏதோ ஒரு விதத்துல அவர் அனுபவிச்சிருப்பாருனு சொல்ல வரேன் நங்கை. மேலும் இதை குத்தி கிளறுற மாதிரி நீ பேசினதும் தப்புனு சொல்றேன்” என்றான் ராஜன்.
சரி தான் என அவள் சிந்திந்த வண்ணம் தலையசைக்க, மேலும் தொடர்ந்தவனாய்,
“அந்த இன்சிடன்ட்க்கு பிறகு அவரை நீ பார்க்கவே இல்லைல! பார்த்திருந்தீனா அப்பவே இதெல்லாம் கொட்டிருப்ப! அவர் பக்கம் இருக்கும் காரணங்கள் உனக்கு புரிஞ்சிருக்கும்.
மறந்துடனும்னு எல்லாத்தையும் அடி மனசுக்குள்ள தள்ளிட்டு தான் பலரும் இங்க வாழ்ந்துட்டு இருக்காங்க நங்கை. அது இப்படியான சூழ்நிலைல வெளிபட துடிக்கும் போது சரியா கையாள கூடிய பக்குவம் இருக்கனும். உனக்கு இன்னும் அந்த பக்குவம் வரலை.
அதான் இத்தனை நாளா உன் ஆழ் மனசுல புதைஞ்சிருந்த கோபமெல்லாம் உன்னை மீறி இன்னிக்கு வெடிச்சு வெளில வந்துருக்கு. அதுக்கு நீ ஒன்னும் செய்யவும் முடியாது. அதனால இதை நீ நினைச்சு கவலைப்படாம ஜஸ்ட் ரிலாக்ஸ்” என்றவன்,
“திரும்ப இன்பாவை நீ எங்க பார்த்தாலும் ஜஸ்ட் பீ நார்மல்! ரியாக்ட் செய்யாத! அது போதும்” என்றான்.
ஹ்ம்ம் என பெருமூச்சுவிட்டவளாய், “நீ மட்டும் என் கூட வந்திருந்தீனா நான் நார்மலா தான் பிஹேவ் செஞ்சிருப்பேன்னு தோணுது. அப்படியே பேசியிருந்தாலும் நீ என்னை கட்டுப்படுத்திருப்ப! அவன்கிட்ட பேசின பிறகு மனசு உன்னை தான் ரொம்ப தேடுச்சு” என்றாள்.
“ஆமா உனக்கு எல்லாத்துக்கும் நான் வேணும். என் பொண்ணை விட ரொம்ப மோசமா இருக்க நீ” என்று சிரிப்புடன் அலுத்துக் கொண்டான் ராஜன்.
“ஆமா நீ தான் என்னை அப்படி கெடுத்து வச்சிருக்க. நீ இல்லாம இங்கே ஒரு வேலையும் உருப்படியா ஓடல எனக்கு! இனி உன்னை எங்கேயும் தனியா அனுப்புற ஐடியாலாம் இல்லை” கண்களில் நீர் பளபளக்க புன்சிரிப்புடன் உரைத்திருந்தாள்.
ஹா ஹா ஹா என வாய்விட்டு சிரித்திருந்தான் அவன்.
“எப்படா வருவ? இப்படி உன்னை பார்க்க பார்க்க தான் ரொம்ப ஏக்கமா இருக்கு எனக்கு” என்றாள் நங்கை.
தன் மனைவி தன்னை இத்தனையாய் தேடுகிறாள் என்பதில் மனம் குளிர்ந்துப் போனது அவனுக்கு.
“இன்னும் இரண்டே நாள்! ஓடோடி வந்துடுவேன்” என்றவன், “அப்படியே என் பொண்ணை கொஞ்சம் காண்பிச்சீனா பார்த்துட்டு நிம்மதியா தூங்க போவேன்” என்றான்.
“அதெல்லாம் முடியாது! நேர்ல வந்து பார்த்துக்கோ! அப்ப தான் உன் பொண்ணை பார்க்கனும்னு சீக்கிரமா கிளம்பி வருவ” என்றாள் நங்கை.
“அடியேய் இதெல்லாம் அநியாயம் சொல்லிட்டேன்” என்று அவன் கூற,
“பரவாயில்லை! அநியாயமாவே இருந்துட்டு போகட்டும்” என்று சிரித்தவளாய், வீடியோ இணைப்பை துண்டித்து விட்டு அலைபேசியில் பேசியவாறு முகப்பறைக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தாள்.
அறைக்கு வந்து மேலும் சில நிமிடங்கள் அவனிடம் பேசிவிட்டு, உறங்கும் மகளை அவனுக்கு காண்பித்து விட்டு இணைப்பை துண்டித்து படுத்தவளின் மனதை நிறைத்திருந்தான் ராஜன்.
“சுந்தர் இடத்துல வேற யாரு இருந்திருந்தாலும் இப்படி ஃப்ரீயா அவங்ககிட்ட பேசிருக்க முடியுமா! இவனை அடைய என்னமோ பெரிய புண்ணியம் செஞ்சிருக்கேன் நான்” மென்னகையுடன் எண்ணிக் கொண்டவளாய் உறங்கி போனாள் நங்கை.
மறுநாள் காலை கண் விழித்து கைபேசியை பார்த்தவளுக்கு புதிய எண்ணிலிருந்து வந்திருந்த காலை வணக்கம் செய்தி புருவத்தை சுருங்க செய்தது.
யாருடைய எண்ணென ட்ரூ காலரில் தேட முற்பட்ட சமயம் அவளின் மகள் அழுது கூக்குரலிட, அவளை கவனிக்க சென்றதில் அந்த குறுஞ்செய்தியை பற்றி மறந்தே போனாள் நங்கை.
—-
மதிய ஷிப்ட்காக அலுவலக மகிழுந்தில் பயணித்திருந்த அன்னத்திற்கு மோகனிடம் இருந்து தொடர் அழைப்புகள் வர, அதை ஏற்காது கைபேசியை வெறித்து பார்த்திருந்தாள்.
முந்தைய நாள் மோகன் மொழிந்த காதலின் நிகழ்வுக்கு பயணப்பட்டது அவளின் மனது.
“ஐ லவ் யூ” என்றவன் சொன்னதும், திக்கென இருந்தது அவளுக்கு. அப்பட்டமாய் அதிர்ச்சி அவள் முகத்தில்.
“நான் இதை உன்கிட்ட எதிர்பார்க்கலை மோகன்” கோப முகம் காண்பித்தவளாய் அங்கிருந்து அவசரமாய் நடக்க, அவள் முன் சென்று கைகளை நீட்டி தடுத்தவனாய்,
“நீ உடனே அக்சப்ட் செய்யனும்னு இல்லை அன்னம்! ஜஸ்ட் என் மனசுல உள்ளதை சொன்னேன். உனக்கு பிடிக்கலைனா நாம ஃப்ரண்ட்ஸ்ஸாவே இருக்கலாம்” எங்கே அவள் தன்னை நட்பு நீக்கம் செய்திடுவாளோ என்று பயந்தவனாய் அவசரமாய் உரைத்திருந்தான் மோகன்.
நிமிர்ந்து அவனை பார்த்தவள், “நான் போகனும் மோகன்” என்றாள்.
அவள் முன் நீட்டியிருந்த கையை அவன் மடக்க, வேக நடையிட்டு நங்கையை நோக்கி சென்றாள். உடனே அங்கிருந்து கிளம்பி விட்டனர். இதை பற்றி யாரிடமும் எதையும் கூறவில்லை அன்னம். அன்றிரவு முழுவதும் அவனின் செயலை எண்ணி கோபத்தில் கிடந்தாள்.
இப்பொழுதும் அவனை தவிர்க்கவே தோன்றியது அவளுக்கு. ஆனால் அவனை நோகடிக்கும் மனமுமில்லை அவளுக்கு.
“சாரி அன்னம். ப்ளீஸ் பேசாம இருக்காத” அழைப்பை அவள் ஏற்காது போகவும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் மோகன்.
அலுவலகத்தில் அவனை எதிர்கொண்டு தானே ஆக வேண்டுமென்ற உண்மை உரைக்க, “நேத்து பேசினதை மறந்துட்டு என்கிட்ட பேசுறதா இருந்தா மட்டும் பேசலாம் மோகன்” அவனுக்கான எல்லையை அறிவுறுத்தி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.
“இல்லை! உனக்கு பிடிக்காததை நான் செய்ய மாட்டேன். லெட்ஸ் பீ ஃப்ரண்ட்ஸ் ஒன்லி (நாம நண்பர்களா மட்டுமே இருப்போம்)” என்று பதில் அனுப்பியிருந்தான் மோகன்.
அதை பார்த்து மகிழ்ந்தவளாய் தானே அவனுக்கு அழைப்பு விடுத்தாள். அழைப்பை ஏற்றவன் முந்தைய நாள் ஏதும் நடவாதது போல் வெகு இயல்பாகவே பேசினான். அவனுடனான நட்பை தொடர அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.
அன்று மோகன் காலை ஷிப்ட்டில் இருந்ததால், மதியம் அவள் அலுவலகம் வந்ததும் அவளுடன் சேர்ந்து மதிய உணவு உண்பதாய் உரைத்தான்.
அலுவலக உணவகத்தில் ஒரு மேஜையில் அமர்ந்திருந்தாள் அன்னம்.
மோகன் அங்கே உணவு வாங்கும் இடத்தில் நின்றிருக்க, வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவை மேஜை மீது வைத்தவளாய் தூரத்தில் நின்றிருந்த மோகனை பார்த்திருந்தாள் அன்னம்.
இது வரை அவனை பெரிதாக உன்னித்து கவனியாதவள், இன்று அவனின் உடை, உயரம், செய்கை என அனைத்தையும் கவனித்தாள். ஒரு தட்டில் சாப்பாட்டுடன் அவள் முன் வந்து அவன் அமர்ந்ததும், அவன் முகத்தை ஆராய்ந்த தனது பார்வையை, உணவை நோக்கி திருப்பினாள்.
வழமை போல் அவனது உணவு தட்டில் இருந்த அப்பளத்தை எல்லாம் எடுத்து அன்னத்தின் தட்டில் வைத்தான்.
அவள் வேண்டாமென மறுக்க, அவளை முறைத்தவனாய், “ஏன் உனக்கு பிடிக்கும் தானே! சாப்பிடு” என்றவன் கூற, அமைதியாக சாப்பிட்டாள் அன்னம்.
“அன்னம் நேத்து நான் சொன்னதை மறந்துடுனு சொன்னேன். என்னை பார்த்ததும் இப்படி ஆச்சு அப்படி ஆச்சுன்னு கதை கதையா பேசுவியே! இன்னிக்கு என்னாச்சு. உன் மனசை போட்டு குழப்பிக்காத” என்றான்.
‘குழப்பி விட்டுட்டு, குழப்பிக்காதனு எவ்ளோ அழகா அட்வைஸ் செய்றான்’ என மனதோடு எண்ணிக் கொண்டவளாய், முந்தைய நாள் நிகழ்ச்சியை பற்றி பேசி, பேச்சின் திசையை மாற்றினாள்.
இருவரும் ஒன்றாக உணவருந்தி விட்டு அலுவலக வேலையில் ஈடுபட்ட சமயம், அன்று அன்னத்துடன் மதிய ஷிப்ட்டில் வேலை செய்த சக பணியாளரான அசோக் அவரது மனைவியின் உடல் நிலை சரியில்லையெனக் கூறி இன்பாவிடம் ஒரு வாரம் விடுப்பு கேட்டார்.
அவருக்கு விடுப்பு அளிக்க வேண்டிய கட்டாயமான சூழலில் இருந்ததால், அந்த வாரம் முழுவதும் அன்னம் மதிய ஷிப்ட்டில் தனித்து வேலை செய்யும் சூழல் உருவானது.
ஆனால் மாலை வேளையில் தான் வெளிநாட்டு பயனாளிகளிடம் இருந்து அதிக மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் இருக்கும். அதனை அவளால் தனியாக கவனிக்க இயலாதே என அவளுக்காக இன்பாவிடம் பேசினான் மோகன்.
காலை ஷிப்ட்டை மேலும் நீட்டித்து மாலை சில மணி நேரங்கள் வரை அன்னத்துடன் தான் இருப்பதாய் உரைத்தவன், இரவு ஷிப்ட்டில் வருபவர் ஒரு மணி நேரத்துக்கு முன்பே வந்து விட்டால் சரியாக இருக்குமென ஆலோசனை வழங்க, அன்றைய சூழலில் அது சரியானதாகவும் தோன்ற, ஏற்றுக் கொண்டான் இன்பா.
ஆனால் மோகனின் இந்த திட்டம் அவன் தன்னுடன் செலவிடும் நேரத்தை நீட்டிக்கவே சொன்னதாக தோன்றியது அன்னத்திற்கு.
அன்றிரவு நங்கைக்கு அதே புதிய எண்ணிலிருந்து இரவு வணக்கம் குறுஞ்செய்தி வர, யாருடைய அலைபேசி எண்ணென ட்ரூ காலரில் பார்த்தவளுக்கு, இன்பா என்ற பெயரை பார்த்ததும் பேரதிர்ச்சி.
‘இவன் எதுக்கு எனக்கு மெசேஜ் செய்றான்’ ராஜன் கூறியதை போல், தன்னுடைய பேச்சு, தான் இன்னும் அவனை நினைத்து கொண்டிருப்பதாய் அவனை எண்ண வைத்து விட்டதோ என்றெண்ணி பயந்து போனாள் நங்கை.
அத்தியாயம் 18
“கேவலமா ஒரு பொண்ணை திட்டி என் வாழ்க்கைலருந்து விரட்டி அடிச்சிட்டேன்னு சொல்ல வாய் வராம சொல்லாம விட்டுட்டியோ?”
“யாருக்கும் உண்மையா இருந்து தான் உனக்கு பழக்கமே இல்லையே”
“தப்பா பேசுனவனே எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா வாழும் போது தப்பு செய்யாத நான் ஏன் நினைச்சிட்டு இருக்கனும்னு கடந்து வந்தாச்சு”
“எனக்கு மட்டும் டைம் மிஷின் கிடைச்சதுனா உன்னை சந்திச்ச அந்த நாளே என் வாழ்க்கைல இல்லாம ஆக்கிருப்பேன்”
நங்கையின் இந்த வதைக்கும் வார்த்தைகள் எல்லாம் மீண்டும் மீண்டும் அவனது செவியில் விடாமல் ஒலிக்க, அன்றைய நிகழ்ச்சி நடந்த அந்த இரவு இன்பாவிற்கு உறங்கா இரவாகி போனது.
தன்னை இத்தனை கேவலமானவனாகவா அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என மனம் வெதும்பி போனான் இன்பா.
எவ்வாறேனும் அன்றிருந்த தனது நிலையை பற்றி அவளிடம் விளக்கிட வேண்டுமென துடித்தது அவன் மனது.
மறுநாள் அன்னத்திடம் இயல்பாய் பேசி எப்படி நங்கையின் திருமணம் சுந்தருடன் நிகழ்ந்ததென அறிந்துக் கொண்டான். அவர்கள் வீட்டில் நிச்சயித்து செய்த திருமணமாய் இத்திருமணம் நிகழ்ந்ததை கேட்டு மகிழ்ந்து போனான் இன்பா. மேலும் சுந்தர் மற்றும் நங்கையின் புரிதலையும் காதலையும் அன்னம் மூலம் அறிந்து கொண்டவனுக்கு, சுந்தர் தான் அவளுக்கானவன் என்று நன்றாக புரிந்தது. அவள் மகிழ்வாய் வாழ்வதை கேட்டு மனம் சந்தோஷித்தது.
அன்றிரவு தனது மனைவியிடம் நங்கை அளித்திருந்த எண்ணை வாங்கி அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான் இன்பா.
நங்கை தனது குறுஞ்செய்தியை பார்த்துவிட்டதை நீல நிற குறியீட்டின் மூலம் அறிந்து கொண்ட இன்பா, “ஹாய் நங்கை! ஹௌ ஆர் யூ (எப்படி இருக்க?)” எனக் கேட்டு அனுப்பியிருந்தான்.
அந்த வாட்ஸ்அப் எண்ணிலிருந்த புகைபடத்தை பார்த்தாள். இன்பாவின் மகன் தான் அதில் இருந்தான்.
குழப்பத்துடன் அந்த குறுஞ்செய்தியை பார்த்தவள், ஏதும் பதில் அனுப்பாமல் அந்த எண்ணை பிளாக் செய்து விட்டாள் நங்கை.
அவள் தனது எண்ணை பிளாக் செய்து விட்டதை உடனே அறிந்துக் கொண்டான் இன்பா.
அவள் தன்னை பிளாக் செய்தது மனதை வருத்த, கண்டிப்பாக எப்படியேனும் அவளை தொடர்பு கொண்டு தன்னை புரிய வைத்துவிட வேண்டுமென தீர்க்கமாய் முடிவு செய்தான் இன்பா.
அடுத்த இரண்டு நாட்களில் ராஜன் வந்து விட, அலுவலகத்தில் இருந்து நேராக ருத்ரனின் வீட்டிற்கு செல்வதாக அன்னம் உரைக்க, அந்த வாரயிறுதி நாளில் தாங்களே அழைத்து சென்று விடுவதாய் உரைத்து விட்டான் ராஜன்.
அன்றிரவு ராஜனின் தோளில் சாய்ந்து ஆழ்ந்த நித்திரையில் இருந்த நங்கையின் அலைபேசியில் தொடர்ந்து கேட்ட குறுஞ்செய்தி சத்தம், ராஜனின் உறக்கத்தை கலைக்க, நங்கையை அருகே மெத்தையில் படுக்க வைத்து விட்டு அவளின் கைபேசியை எடுத்து பார்த்தான்.
நங்கையின் முகநூல் உள் பெட்டியில் குறுஞ்செய்தி வந்த வண்ணம் இருந்தன. யாரிடமிருந்து வருகிறது என திறந்து பார்த்தவனுக்கு முகம் கோபத்தில் இறுகியது.
“எப்படி இருக்க நங்கை?”
“நல்லாருக்கியா?”
“ஏன் என் நம்பரை பிளாக் செஞ்ச நங்கை?”
“ஒரே ஒரு தடவை மட்டும் என்கிட்ட பேசு நங்கை”
“நீ என்னை தப்பா புரிஞ்சிட்டு இருக்க நங்கை”
“நீ நினைக்கிற மாதிரி நான் இல்லைனு உனக்கு புரிய வைக்கனும் நங்கை”
இவ்வாறாக தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான் இன்பா.
பால்கனி ஊஞ்சலில் அமர்ந்த ராஜன், “நீங்க செஞ்சிக்கிட்டு இருக்கிறது எவ்ளோ பெரிய தப்புனு உங்களுக்கு புரியுதா இன்பா” எனக் கேட்டு குறுஞ்செய்தி அனுப்பினான்.
அங்கே தனது வீட்டின் முகப்பறையில அமர்ந்திருந்த இன்பா, நங்கை தான் பதில் அளிப்பதாய் எண்ணி மகிழ்ந்தவனாய், “சாரி மிட் நைட்ல டிஸ்டர்ப் செய்றது தப்பு தான். இப்ப தான் உன் ஐடி கண்டுபிடிச்சேன். அதான் உடனே மெசேஜ் செஞ்சேன் நங்கை” என்று அனுப்பினான்.
“இது நங்கை இல்ல! நான் அவ ஹஸ்பண்ட் சுந்தர் பேசுறேன்! ஐ வாண்ட் டு டாக் டூ யூ (உன்கிட்ட கொஞ்சம் பேசணும்)! கேன் ஐ கால் யூ நௌ (இப்ப உனக்கு ஃபோன் செய்யவா)” எனக் கேட்டான்.
திக்கென நெஞ்சம் அதிர அந்த குறுஞ்செய்தியை பார்த்திருந்தான் இன்பா.
என்ன கூறவென தெரியாது அவன் தடுமாற, “உங்க நம்பரை ஏற்கனவே அன்னம்கிட்ட நான் வாங்கிட்டேன். ஆர் யூ ஃப்ரீ நௌ? (இப்ப நீங்க ஃப்ரீயா?)” எனக் கேட்டான் ராஜன்.
“யெஸ்” என மட்டும் இன்பா அனுப்பியிருக்க, உடனே அவனது கைபேசிக்கு அழைத்து விட்டான் ராஜன்.
“ஹாய் இன்பா! எப்படி இருக்கீங்க?” என இயல்பாய் பேச்சை ஆரம்பித்தான் ராஜன்.
இருவரும் பரஸ்பரம் அவரவர் வேலையை பற்றி பேசிய பிறகு,
“குட்” என்ற சுந்தர், “நம்ம நாட்டுல முக்கால்வாசி லவ் ஃபெய்லியர் பசங்க செய்ற தப்பை தான் நீங்க செஞ்சிட்டு இருக்கீங்க இன்பா” என்றான்.
“சுந்தர், அது வந்து” என்று தயங்கியவாறே அவன் ஆரம்பிக்கவும்,
“உங்க மனைவிக்கு நீங்க இப்படி நடுராத்திரில வேறோரு பொண்ணுக்கிட்ட பேசுறது தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவாங்க” எனக் கேட்டான் ராஜன்.
“அய்யோ சுந்தர்! நான் அப்படிப்பட்ட ஆளு இல்லை. நீங்களும் நங்கை மாதிரி என்னை தப்பா நினைச்சிட்டு இருக்கீங்களா?” என ஆதங்கமாய் கேட்டான் இன்பா.
“நீங்க தப்பானவரு இல்லை இன்பா. ஆனா நீங்க செஞ்சிட்டு இருக்கிறது தப்பானதுனு சொல்றேன்” என்றான் ராஜன்.
“இல்ல சுந்தர்! நங்கையை பார்த்ததுலருந்து மனசு வலிக்குது சுந்தர்! என்னை அவ பேசின பேச்சு, கேவலமா பார்த்த பார்வை அதெல்லாம் என் நெஞ்சை குத்தி கிழிக்குது சுந்தர்” வருத்தமான குரலில் உரைத்தவன்,
“நான் அவ மேல வச்சிருந்த காதல் உண்மை. அவளை திட்டிட்டு நானும் அதே மனவலியோட தான் இருந்தேன்னு அவளுக்கு சொல்லனும் சுந்தர். ஒரே ஒரு தடவை அவகிட்ட பேசி என்னை புரிய வச்சா என் மனசு நிம்மதியாகிடும்னு தோணுச்சு. அதான் மெசேஜ் செஞ்சேன். எங்கிருந்தாலும் அவ சந்தோஷமா வாழனும்னு தான் நான் எப்பவும் நினைப்பேன் சுந்தர்” என்றான் இன்பா.
“நல்லவேளை வச்சிருந்த காதல்னு பாஸ்ட்ல சொன்னீங்க. இல்லனா ஃபோனை கட் செஞ்சிட்டு போய்ட்டே இருந்திருப்பேன். இதை நீங்க வார்னிங்கா எடுத்தாலும் சரி! அட்வைஸ்ஸா எடுத்துக்கிட்டாலும் சரி! இனிமேலும் என் மனைவிக்கிட்ட பேச முயற்சி செய்யாதீங்க! உங்களை பத்தி அவளுக்கு தெரிய வேண்டிய எந்த அவசியமும் கிடையாது.
ஒன்ஸ் ஒரு விஷயம் ஓவர்னா ஓவர் தான் இன்பா. எந்தவிதமான காரணமா இருந்தாலும் இந்த மாதிரி ரிலேஷன்ஷிப்லாம் தொடருவது இரண்டு பேரோட வாழ்க்கைக்கும் நல்லதில்லை. இந்த காலத்துல இது நிறைய பேருக்கு புரியுறதில்லை. என்னமோ நாகரிகம் ஃபேஷன்னு உணர்வுகளை குழப்பிக்கிட்டு உண்மையா வாழுறதுனா என்னனு தெரியாம வாழ்க்கையை கிரிட்டிக்கல் ஆக்கிட்டு இருக்காங்க.
என் மனைவி அன்னிக்கு உங்ககிட்ட பேசினது தப்பு தான். அதுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஆனா அதுக்காக உங்களை அவகிட்ட பேச என்னால் அனுமதிக்க முடியாது. முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும்! இனி உங்ககிட்ட இருந்து என் மனைவிக்கு மெசேஜ் அண்ட் கால்ஸ் வராதுனு நம்புறேன்” என்றவனாய் இணைப்பை துண்டித்தான் ராஜன்.
அச்சமயம் தூக்கத்திலிருந்து விழித்து அவனை தேடியவாறு பால்கனி வந்த நங்கை கண்களை தேய்த்தவாறு சுருக்கி பார்த்தவளாய், “என்ன இங்க உட்கார்ந்திருக்க? தூக்கம் வரலையா?” எனக் கேட்டாள்.
அவளின் கையினை பற்றி இழுத்து, தன்னோடு அணைத்தவாறு அவளை ஊஞ்சலில் அமர்த்தி கொண்ட ராஜன்,
இன்பா முகநூலில் அனுப்பிய குறுஞ்செய்திகளை அவளிடம் காண்பித்தான். அவள் பார்த்து முடித்ததும், “அந்த ஐடியை பிளாக் செய்திடவா” என அவளிடம் கேட்டு விட்டு பிளாக் செய்தவன், இன்பாவை அழைத்து தான் பேசியதை அவளிடம் கூறினான்.
“சாரி அன்னிக்கு நான் அவன்கிட்ட அப்படி பேசினது தானே இப்படி அவனை இவ்வளோ தூரம் என்கிட்ட பேசனும்ன்ற அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கு!
அவன் வாட்ஸ்அப் மெசேஜ் பார்த்து பயந்தே போய்ட்டேன் தெரியுமா! ஃபேஸ்புக்ல அவன் மெசேஜ்ஜை நானே பார்த்திருந்தாலும் பிளாக் செஞ்சி விட்டிருந்திருப்பேன் சுந்தர்! பேசியிருக்க மாட்டேன்” என்றாள் நங்கை.
“ஐ நோ யூ டார்லிங் (உன்னை பத்தி எனக்கு தெரியும்)” என்றவனாய் அவளின் கன்னத்தில் இதழ் பதித்தான் ராஜன்.
“யூ ஆர் மை கிரேட்டஸ்ட் பிளஸ்ஸிங்டா (நீ எனக்கு கிடைச்ச வரம்டா)” என்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள் நங்கை.
—-
தனது இல்லத்தில் முகப்பறையில் இருந்த சோஃபாவில் பின்னோக்கி தலையை சாய்த்து அமர்ந்திருந்த இன்பாவின் மனசாட்சியே அவனை கடிந்தவாறு இருந்தது.
‘அவ என்ன நினைச்சா உனக்கென்னனு போய்ருக்கனும் நீ! அவன் மனைவிக்கு அவன் உண்மையா இருக்கான். நீ அப்படியா இருக்க! இன்னமும் உன்னோட பழைய காதலை அவகிட்ட சொல்ல முடியாம தானே இருக்க! சொன்னா புரிஞ்சிக்க கூடிய மனைவி உனக்கு இல்லைனு நல்லாவே தெரியும். அப்ப எப்படி இருக்கனும் நீ’ என கடிந்துக் கொள்ள, தனது நிலையிலிருந்து தாழ்ந்து விடலை பையன் போல் நடந்துக் கொண்டோமே என தன்னை தானே திட்டிக் கொண்டான் இன்பா.
ஆனாலும் அன்னம் கூறியது போல் நங்கையின் மீதான ராஜனின் காதலை அவனது உரிமையான பேச்சில் அறிந்துக் கொண்டதில் நெஞ்சில் நிம்மதி பரவியது.
இவற்றை யோசித்தவாறு கண்களை மூடி சாய்ந்தமர்திருந்த இன்பாவின் அருகே வந்த சிந்துஜா, “இன்னும் தூங்காம என்ன செய்றீங்க? ஆபிஸ் கால் எதுவும் வந்துச்சா?” எனக் கேட்டாள்.
திடீரென கேட்ட குரலில் சட்டென கண் திறந்தவனாய், மனைவியை பார்த்து மெல்ல சிரித்தவாறு இல்லையென தலையசைத்தப்படி சிந்துஜாவின் கைகளை பற்றி தன்னருகே அமர வைத்தான்.
“நீ ஏன் எழுந்து வந்துட்ட? தூக்கம் வரலையா?” அவளின் கலைந்த தலைமுடியை சரி செய்தவனாய் கேட்டான்.
“பக்கத்துல நீங்க இல்லைனதும் தூக்கம் கலைஞ்சிடுச்சு” என்றவளாய் அவன் மார்போடு சாய்ந்து கொண்டாள்.
“நான் உன்னை சந்தோஷமா வச்சிருக்கேனா சிந்து? நான் உனக்கு எப்படிப்பட்ட புருஷன்?” எனக் கேட்டான்.
சுந்தரராஜனின் பேச்சு அவனை இவ்வாறு கேட்க வைத்தது.
“என்ன திடீர்னு இப்படியொரு கேள்வி?” அவன் முகத்தை பார்த்தவாறு அவள் கேட்க,
“சும்மா கேட்கனும்னு தோணுச்சு” என்றான்.
“நீங்க கண்டிப்பா நல்ல புருஷன் தான். அன்பா அக்கறையா என்னையும் நம்ம பையனையும் பார்த்துக்கிறீங்க. எந்த கஷ்டமும் தராம என்னை நீங்க சந்தோஷமா தான் வச்சிருக்கீங்க. என்னை கேட்காம எந்த முடிவையும் எடுக்கிறதில்லை. வீட்டுலேயே இருக்கிறவளுக்கு எதுக்கு ஆபிஸ் கதைனு இல்லாம உங்க ஆபிஸ்ல நடக்கிற எல்லாத்தையும் என்கிட்ட வந்து சொல்வீங்க. எனக்கு அது ரொம்ப பிடிக்கும். இவ்ளோ படிச்சி பெரிய வேலைல இருக்கிறவருக்கு படிக்காத என்னை கட்டி வைக்கிறாங்களேனு கல்யாணமான புதுசுல பயந்தேன் தான். ஆனா இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்றாள் அவள்.
சிரித்தவாறு அவளின் நெற்றியில் முட்டியவன், அன்றைய தினம் தனது அலுவலகத்தில் நிகழ்ந்ததை அவளிடம் கூறலானான்.
அசோக் விடுப்பில் இருப்பதையும் அதனால் நிகழ்ந்த ஷிப்ட் மாற்றத்தை பற்றியும் அவளிடம் கூறினான்.
“மோகன் மேல சந்தேகமா இருக்கு! மோகனையும் அன்னத்தையும் ஒரே ஷிப்ட்ல போடக்கூடாதுனு சொல்லிட்டு இருந்தீங்களே! இப்ப சில மணி நேரமாவது இரண்டு பேரும் ஒன்னா வேலை செய்ற மாதிரி ஷிப்ட் போட்டிருக்கீங்களே” எனக் கேட்டாள் சிந்துஜா.
“ஆமா ஷிப்ட்டுக்கு ஷாட்டேஜ் ஆகுது சிந்து! வேற வழியில்லாம போட்டிருக்கேன். நான் லவ் மேரேஜ்க்கு எதிரி இல்ல சிந்து. ஆனா மோகனுக்கான பொண்ணு அன்னம் இல்லை. மோகனோட வாழ்க்கை முறை அன்னத்துக்கு ஒத்து வராது. மோகன் நல்லவன் தான். ஆனா மோகனை விட நல்ல பையனா அவளுக்கு அமையனும்னு நினைக்கிறேன்” என்றான் இன்பா.
“ஆமா அழகும் அறிவும் கூடவே வெகுளித்தனமும் உள்ள பொண்ணு. நல்லா வாழுற இடத்துல தான் கட்டிக் கொடுக்கனும்! அந்த பொண்ணோட அப்பா அம்மாகிட்ட மாப்பிள்ளை பார்க்கும் போது சொல்லுங்க” என்றாள் சிந்துஜா.
மனைவியின் இந்த அன்பான அக்கறையான பேச்சில் நெகிழ்ந்தவனாய், “அவங்கள மீட் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போது சொல்றேன். நீயே நேரடியா பேசு” என்றான்.
சரியென தலையசைத்தவளாய், “வாங்க படுக்கலாம். ரொம்ப நேரமாகிடுச்சு” என்றவாறு அறைக்கு அழைத்து சென்றாள்.
— தொடரும்