அழகிய அன்னமே 15 & 16

மகிழுந்தில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்த நங்கை வண்டியை சரி‌பார்க்க, முன்புற இருக்கையில் மறுபக்கமாய் வந்து அமர்ந்தாள் அன்னம்.

கதவினருகே நின்றிருந்த சுரேந்தர், குழ்ந்தையை அன்னத்திடம் வழங்கியவராய், “பாப்பாக்கு தேவையானதுலாம் இந்த பைல வச்சிருக்கேன்” என்றவாறு ஒரு தோள் பையை பின்புற இருக்கையில் வைத்தவர்,

“ரிட்டர்ன் வர டைம் எப்படியும் நைட் ஆகிடும். பார்த்து பத்திரமா வாங்க” என்றார்.

“சரிப்பா! உங்க மாப்பிள்ளை தான் இல்ல நீங்களாவது வாங்கனு சொன்னா கேட்காம எங்களை வழியனுப்பிட்டு இருக்கீங்க” என்றாள் நங்கை.

“இல்லம்மா! இந்த ஐடி ஃபங்ஷன்லாம் நமக்கு ஒத்து வராது! நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்றவர் அவர்களின் மகிழுந்து தெருவை தாண்டும் வரை நின்று பார்த்து விட்டு வீட்டிற்குள் சென்றார்.

அன்னம் பணி செய்யும் அந்த அலுவலகத்தில் வருடத்திற்கு ஒரு முறை விருது வழங்கும் விழா நடைபெறும்.

அதிக லாபம் ஈட்டிய பிராஜக்ட், கிளையண்ட் பாராட்டை பெற்ற பணியாளர்கள் என பல்வேறு தலைப்பில் விருதுகள் வழங்கப்படும். அதில் ஒரு விருதிற்காக தான் இன்பாவின் பிராஜக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விருது பெறும் அனைவருமே அந்த விழாவில் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்க அழைப்பர்.

ராஜன் ஊருக்கு சென்ற சமயம் வந்த அன்னத்தை, அவன் ஊரிலிருந்து வந்த பிறகு செல்லுமாறு உடன் தங்க வைத்துக் கொண்டாள் நங்கை. அங்கிருந்து தான் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தாள் அன்னம். இந்த விழாவிற்கு அலுவலகத்திற்கு நேரடியாக வருவதாக உரைத்த ருத்ரன், உடல் நிலை சரியில்லாது போனதால் கடைசி நிமிடத்தில் வர‌ முடியாது என்று விட்டார்.

அலுவலக தரிப்பிடத்தில் மகிழுந்தை நிறுத்தி விட்டு இறங்கிய நங்கை, குழந்தையை கொஞ்சியவாறு நின்றிருந்த அன்னத்திடம் வந்தவள், “எப்படி அன்னம் புடவை கட்டிக்கிட்டு பாப்பாவையும் தூக்கி வச்சிக்கிட்டு மேனேஜ் செய்ற! எனக்கு இன்னும் புடவையை கட்டிக்கிட்டு மேனேஜ் செய்ய தெரியாது” என்றவளாய் சின்னவளை தன் கையில் வாங்கி கொண்டாள்.

மிதமான வேலைப்பாடுகள் உள்ள நீளமான கவுன் போன்ற சல்வாரை உடுத்தியிருந்தாள் நங்கை. மெல்லிய பட்டுப்புடவையை உடுத்தியிருந்தாள் அன்னம்.

“அது சின்ன வயசுலருந்தே பண்டிகைனாலே புடவை கட்டிக்கனும்னு அடிக்கடி கட்டினதால வந்த பழக்கம் அண்ணி” என்றாள்.

“என்னோட உருண்டு திரண்ட உடம்புக்கு புடவை சரிவராதுனு ரொம்ப கட்ட மாட்டேன் நான். கண்டிப்பாக தேவைனா மட்டும் தான் கட்டுறது! அதுவும் என் புருஷனுக்காக கல்யாண டைம்ல யூ டியூப் பார்த்து புடவை கட்ட பழகினது தான். உன் பொண்டாட்டிக்கு ஒழுங்கா புடவை கட்டக்கூட தெரியலை பாருன்னு அவனை யாரும் குறை சொல்லி பேசிட கூடாதேனு நினைச்சே கத்துக்கிட்டேன்” என்றாள் நங்கை.

“சோ ஸ்வீட்! ஈஸ்வரண்ணா மீனு மாதிரி மேட் ஃபார் ஈச் அதர் தான் நீங்க இரண்டு பேரும்” என்றாள் அன்னம்.

“இல்லை அன்னம். ஈஸ்வர் மீனு ஜோடி தான் உண்மையான மேட் ஃபார் ஈச் அதர். அவங்களுக்கு தானா அப்படி அமைஞ்சது. எங்க விஷயத்துல மேட் ஃபார் ஈச் அதரா நாங்க எங்களை மாத்திக்கிட்டோம்னு சொல்லலாம்” என்றவாறு கண் சிமிட்டி சிரித்தாள் நங்கை.

“ஹ்ம்ம் ராஜாண்ணா பத்தி பேசினாலே மூஞ்சில பல்ப் எறிஞ்சிடுதே உங்களுக்கு” அன்னம் அவளை கேலி செய்ய, சிரித்தவளாய், “இன்னிக்கு ஏதோ மீட்டிங்னு இன்னும் ஃபோனே செய்யலை அவன். நானும் பாப்பாவும் ரெடியாகிட்டு போட்டோ அனுப்பி விட்டோம். பார்த்தானா இல்லையானு தெரியலை” வாட்டமான குரலில் உரைத்தாள்.

“அண்ணாவை ரொம்ப மிஸ் செய்றீங்களா அண்ணி?” அன்னம் கேட்க,

“அப்படியா வெட்ட வெளிச்சமா மூஞ்சுல தெரியுது” என்று சிரித்த நங்கை, “என்னை விட என் பொண்ணு அவங்க அப்பாவை ரொம்ப மிஸ் செய்றா” என்றாள்.

இருவரும் பேசியவாறு நிகழ்ச்சி அரங்கை நோக்கி நடந்து கொண்டிருந்த நேரம், வழியில் தன்னுடன் கல்லூரியில் பயின்ற பெண்ணை அங்கு கண்ட நங்கை, “அன்னம்! அந்த பொண்ணு பிரவீணா என் கூட காலேஜ் படிச்ச பொண்ணு அன்னம். இங்கயா வேலை செய்றா! நான் போய் பேசிட்டு வரேன்” என்றவளாய் அந்த பெண்ணை நோக்கி செல்ல,

“அண்ணி என் டீம்லருந்து கால் செய்றாங்க! நான் போய் பேசிட்டு இருக்கேன். நீங்க பேசிட்டு வாங்க” என்றவாறு குழந்தையுடன் முன்னே சென்றாள் அன்னம்.

சாதாரணமாகவே அழகி தான் அன்னம். இன்று மிதமான ஒப்பனையுடன் தலையில் பூவுமாய் சேலை அணிந்திருந்தவளின் எழில்மிகு அழகில், தங்களை நோக்கி வந்தவளை கண் கொட்டாமல் பார்த்திருந்தான் மோகன்.

‘இவ்ளோ அழகான பொண்ணு மட்டும் எனக்கு ஃப்ரண்ட்டாகி இருந்துச்சுனா இந்நேரம் பிரபோஸ் செஞ்சி கல்யாணத் தேதியே குறிச்சியிருப்பேன்’ என மோகனின் அறைத்தோழன் அவனிடம் உரைத்தது அவனது நினைவினில் எழுந்து மனதை ஊசலாடச் செய்தது.

“ஹாய் அன்னம்! யூ லுக் சோ பியூட்டிபுல் டுடே” என்ற பாலாஜி, அவனருகில் நின்றிருந்த மனைவியை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

“சோ கியூட் பேபி! யாரோட பாப்பா?” எனக் கேட்டவாறு மோகன் அன்னத்தின் கையிலிருந்த குழந்தையை தனது கைகளில் வாங்கிக் கொள்ள,

“அண்ணியோட பொண்ணு! அண்ணி வந்துட்டு இருக்காங்க” என்றாள் அன்னம்.

“பாப்பா பேரு என்ன? சொல்லுங்க” என்று குழந்தையிடம் மோகன் பேச,

அச்சமயம், “ஹாய் கைஸ்” என்ற வண்ணம் அவர்களின் அருகில் வந்து நின்றான் இன்பா.

“புடவைல ரொம்ப அழகா இருக்க அன்னம்” என்ற இன்பாவின் கரத்தை பற்றியவாறு மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் நின்றிருந்தான்.

“ஆமாங்க! அப்படியே அன்னம்ன்ற பேருக்கேத்த மாதிரி இருக்கீங்க” என்றாள் இன்பாவின் அருகில் டிசைனர் புடவை உடுத்தியிருந்த பெண்.

அப்பெண்ணின் பாராட்டுதலில் மென்னகை புரிந்தவளாய், “தேங்க்யூ” என்ற அன்னம், யாரிந்த பெண் என்பது போல் இன்பாவை பார்த்தாள். இன்பாவின் கரத்தை விட்டு ஓடியாட துடித்து கொண்டிருந்த அந்த சிறுவனையும் பார்த்தாள்.

“இவங்க தான் என் மனைவி சிந்துஜா. இது என் பையன் யுகேந்திரன்” என்றான் இன்பா.

அதிர்ச்சியில் அன்னத்தின் கண்கள் விரிய, ‘என்னது இன்பாக்கு கல்யாணம் ஆகிடுச்சா’ என்ற மைண்ட் வாய்ஸூடன் அவள் பார்த்திருக்க,

“உங்களை பத்தி இன்பா என் கிட்ட பேசாத நாளில்லை அன்னம்” என்றாள் சிந்துஜா.

“பாருங்க என்னை பத்தி உங்ககிட்ட சொல்லிருக்க என் மேனேஜர், உங்களை பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல. நம்ம டீம்ல கூட யாருமே என்கிட்ட சொல்லவே இல்லை” என்ற அன்னம்,

“ஹாய் குட்டிப்பையா! அப்படியே உங்கப்பா மாதிரியே இருக்கீங்க” என்றவாறு சிறுவனின் உயரத்தினளவு அமர்ந்து அவனது கன்னத்தை கிள்ளியவாறு கூறினாள்‌.

தந்தையின் கால்களை கட்டிக் கொண்டான் அவன்.

“புது ஆளுங்ககிட்ட சட்டுனு பழக மாட்டான்” என்றவாறு மகனை கைகளில் தூக்கி கொண்டான் இன்பா.

“உங்களை மாதிரியேனு சொல்லுங்க” என்று சிரித்தாள் அன்னம்.

அன்னத்தின் செயல்களை பார்த்து சிரித்தவாறு நின்றிருந்த சிந்துஜா,

“இந்த பேச்சு தான் அவருக்கு உங்ககிட்ட பிடிச்ச விஷயம். நீங்க இருக்கிற இடம் கலகலனு தான் இருக்கும்னு சொல்வாரு. அன்னிக்கு நீங்க மயங்கி விழுந்ததுல ரொம்பவே பயந்துட்டாரு. ஆமா இப்ப உடம்பு எப்படி இருக்கு?” என்று வாஞ்சையுடன் அன்னத்தின் கைப்பற்றி சிந்துஜா கேட்க, நெகிழ்ந்து விட்டாள் அன்னம்.

மேனேஜரின் மனைவி என்ற எந்தவிதமான அலட்டலும் இல்லாமல் சகஜமாக நட்புணர்வுடன் பேசிய சிந்துஜாவை நிரம்ப பிடித்து விட்டது அன்னத்திற்கு.

“நான் நல்லா இருக்கேன்க்கா! எல்லாம் இந்த மோகன் செஞ்ச வேலை தான்” என்றவாறு அருகில் நின்றிருந்த மோகன் கையில் ஒரு அடி வைத்தாள்.

அதை பார்த்த சிந்துஜா இன்பாவின் ரியாக்ஷனை பார்க்கவென அவன் முகத்தை பார்க்க, அவன் அமைதியாக நின்றிருந்தான்.

இன்பாவின் கையிலிருந்த குழந்தையிடம், “அக்கா கிட்ட வா! நான் உனக்கு நிறைய சாக்லேட் வாங்கி தரேன்” என கைகளை நீட்டி அன்னம் அழைக்க, தாவினான் அவளிடம்‌.

“ஸ்வீட் பாய்” என்றவாறு அவன் கன்னத்தை வருடியவளின் கைபேசி அலற, ஒரு கையால் அவனை தூக்கி கொண்டு மறுகையால் அழைப்பை ஏற்று கைபேசியை காதினுள் வைத்தாள்‌ அன்னம்.

“ஹான் அண்ணி! எங்க இருக்கீங்க?” என்றவளாய் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வருவதற்கான பாதையை உரைத்தாள்.

“ஹான் பார்த்துட்டேன் அன்னம்” என்றவாறு அவர்களின் அருகே வந்த நங்கையை கண்டு ஸ்தம்பித்து நின்றான் இன்பா. கண்கள் அவளை விட்டு துளியும் அசையாமலிருக்க, மூச்சடைப்பது போன்ற உணர்வு அவனுக்கு.

“ஹாய் அன்னம்” என்று அவளின் அருகே வரவும், மோகன் கையிலிருந்த குழந்தை, “ம்மாஆஆஆ ம்மாஆஆஆ” என நங்கையிடம் தாவினாள்.

அவளை கையில் வாங்கியவாறு மோகனிடம் பேசிய நங்கையை தன் பக்கமாக திருப்பி, “இவங்க தான் என் மேனேஜர் அண்ட் டி எல் இன்பா! இவங்க அவங்க மனைவி சிந்துஜா! இந்த குட்டிப்பையன் அவங்க மகன் யுகேந்திரன்” என்று அறிமுகம் செய்தவள், “இவங்க என் அண்ணி மதுர நங்கை! இது அவங்க மக நந்திதா” என்று அறிமுகம் செய்தாள்.

அனைவரிடமும் மென்னகை புரிந்தவாறு, “ஹாய்” என்ற நங்கையின் முகத்திலும் பேச்சிலும் எவ்வித மாற்றமும் இல்லை.

இன்பா தான் அவளின் இந்த முகமாற்றமற்ற இயல்பான தன்மையில் குழம்பிப் போனான்.

அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. தன்னை, தனது முகத்தை இவள் மறந்தே விட்டாளா என்ற கேள்வி அவனின் மனதை குடைந்தது.

அன்னம் அவளது மற்ற சக பணியாளர்களையும் அவர்களின் குடும்பத்தையும் நங்கைக்கு அறிமுகம் செய்து வைக்க, அனைவரிடமும் இயல்பாக பேசினாள் நங்கை.

நிகழ்ச்சி துவங்கவும், இவர்களின் குழுக்காக கொடுக்கப்பட்டிருந்த வட்ட மேஜை இருக்கையில் சென்று அமர்ந்துக் கொண்டனர் அனைவரும்.

“ம்மாஆஆ! ம்மாஆஆ” என்று குழந்தை சிணுங்கவும், “என்னடா நந்துக்குட்டி! பசிச்சிருச்சா?” எனக் கேட்டவாறு தனது பையினில் மகளுக்காக எடுத்து வந்திருந்த உணவினை எடுத்து கொடுத்த நங்கையிடம்,

“குழந்தைக்கு எத்தனை வயசாகுது?” என சிந்துஜா கேட்க, அதற்கு பதிலளித்த நங்கையும் யுகேந்திரனை பற்றி சிந்துஜாவிடம் கேட்டாள். இருவரும் அவரவர் குழந்தைகளின் சேட்டைகள், செயல்கள், அவர்களின் பிறப்பு, கர்ப்பமான நேரத்தில் வந்த உடல் உபாதைகள் என இப்பேச்சினில் மூழ்கி போக, அமைதியாக இதனை கேட்டவாறு பார்த்திருந்தான் இன்பா.

அச்சமயம் நங்கையின் கைபேசி அலற, பையினுள் இருந்த கைபேசியை எடுத்த அன்னம், “அண்ணி, அண்ணா தான்” என்றவாறு நங்கையிடம் கொடுத்தாள்.

“சொல்லு சுந்தர்!” என்றவாறு காதில் கைபேசியை வைத்து அவள் பேச துவங்கவும், சட்டென திரும்பி அவளை பார்த்தான் இன்பா.

‘சுந்தரையா இவ கல்யாணம் செஞ்சிருக்கா’ பேரதிர்ச்சியான செய்தியாய் இருந்தது அவனுக்கு.

கண்கள் ஒளிர அந்த அழைப்பை ஏற்று பேசியவளின் முகம் அவனுடன் பேசிய சில நொடிகளில் சுருங்கி போக, “சரி நான் இப்ப பிசியா இருக்கேன்! அப்புறம் வீட்டுக்கு போய் பேசுறேன்” என்று உரைத்து அழைப்பை துண்டித்தாள்.

அவள் முகத்தின் மாற்றங்களை கவனித்தவனாய் அமர்ந்திருந்த இன்பாவிற்கு அவள் சுந்தருடன் மகிழ்வாய் வாழவில்லையோ என்று தோன்றியது.

அந்நேரம் நிகழ்ச்சி துவங்கவும் அனைவரின் கவனமும் அந்த பக்கம் மாறியது. மேடையை கவனித்த வண்ணம் இருந்தாலும் நங்கையின் கண்கள் கலங்கி அவள் கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொள்வதை பார்த்தும் பாராதது போல் பார்த்திருந்தான் இன்பா.

அன்னம் அந்நிகழ்ச்சிக்குள் மூழ்கி போனவளாய் நங்கையை கவனிக்கவில்லை.

சில மணி நேரங்களுக்கு பிறகு இவர்களின் பிராஜக்ட்டை குறிப்பிட்டு அழைக்க, அனைவரும் மொத்தமாக அங்கே செல்ல, அவர்களின் குடும்பத்தினர் அமர்ந்திருந்து கைத்தட்டி மகிழ்ந்திருந்தனர்.

“அன்னம் செம்ம அழகுல நங்கை!” கைத்தட்டியபடி மேடையை பார்த்தவாறு உரைத்தாள் சிந்துஜா.

நங்கை மென்னகை புரிய, “இன்பாக்கு அன்னத்தை பார்க்கும் போது அவரை பார்த்த மாதிரியே இருந்துச்சுனு சொன்னாரு.‌ அவரோட டிவின் மாதிரி ஃபீல் ஆகுதுனு சொன்னாரு. அவர் வேலைக்கு சேர்ந்த புதுசுல இவளை மாதிரி தான்‌ இருந்தாராம். அப்புறம் வாழ்க்கையோட அனுபவம் பிளஸ் அவரோட வேலைன்னு அமைதியாகிட்டதா சொல்வாரு. முதல் நாள் அவளை இன்டர்வியூ எடுத்துட்டு வந்து, வீட்டுல தானா சிரிச்சிக்கிட்டு இருந்தாரு. என்னனு கேட்கும் போது தான் அன்னத்தை பத்தி சொன்னாரு. அதுக்கு பிறகு தினமும் அவ செய்ற சேஷ்டைகள் எல்லாமே சொல்வாரு. என்னடா அவ இவனு பேசுறேன்னு நினைக்க வேண்டாம். தினமும் அவளை பத்தி பேசி பேசி அவ எங்க வீட்டுல ஒரு ஆளு போல தான் எனக்கு. அன்னத்தை பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை! இன்னிக்கு நிறைவேறிருக்கு” என்று சிந்துஜா பேசிக் கொண்டே போக, அனைவரும் சேர்ந்து வெற்றி கோப்பையை வாங்கி விட்டு அவரவர் இருக்கையில் வந்து அமர்ந்தனர்.

அதன்‌ பின்பு சினிமா பாடல்களுடன் மெல்லிசை கச்சேரி நடைப்பெற, பஃபே முறையில் தானே பரிமாறிக் கொண்டு உண்ணும் வகையில் வைக்கப்பட்டிருந்த பலவிதமான உணவினை அவரவருக்கு பிடித்தவாறு எடுத்து வந்து அமர்ந்து உண்டு கொண்டே கேட்டு ரசித்திருந்தனர்.

சூப்பர் சிங்கர் பாடல் போட்டி மூலம் பிரபலமான இளம் பாடகர் ஒருவரும், பாடகி ஒருவரும் இந்த இசை கச்சேரியில் பாடல்கள் பாடி தெறிக்க விட்டிருக்க, உணவை உண்டவாறே ரசித்து கொண்டிருந்தனர் பணியாளர்கள்.

நன்றியுரை பேசியவாறு நிகழ்ச்சி நிறைவு பகுதியை எட்டியிருந்த சமயம், சிந்துஜா தனது மகனை தூக்கியவாறு கழிவறைக்கு செல்ல வேண்டுமென வழி கேட்க, தானே அழைத்து செல்வதாய் கூறி உடன் சென்றாள் அன்னம். மற்ற டீம் ஆட்கள் ஆங்காங்கே நின்றுக் கொண்டு பேசியவாறு உண்டு கொண்டிருக்க, இன்பாவும் நங்கையும் அந்த வட்ட மேஜையில் தனித்து அமர்ந்திருந்தனர். நங்கை உறங்கி கொண்டிருந்த தனது மகளை மார்போடு அணைத்து தட்டிக் கொடுத்தவாறு அமர்ந்திருந்தாள்.

அவளிடம் என்னவெல்லாமோ பேச மனம் துடித்தாலும், வார்த்தை வராது தடுமாறியவனாய் நங்கையை அவன் பார்த்திருக்க, “அம்மா அப்பாலாம் எப்படி இருக்காங்க இன்பா?” எனக் கேட்டாள் நங்கை.

தன்னை அவள் நினைவு வைத்திருக்கிறாள் என்பதில் நெஞ்சில் நிம்மதி படர, குரலை செருமியவனாய், “நல்லா இருக்காங்க” என்றான்.

“உங்க அண்ணன் அண்ணி கூட உன் குடும்பம் சேர்ந்தாச்சா?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம் அம்மா அப்பா அவங்க கூட தான் இருக்காங்க” என்றான்.

“சிந்து உங்கம்மா பார்த்த பொண்ணா? ஐ மீன் அரேஞ்ச் மேரேஜா?” எனக் கேட்டாள்.

ஆமென அவன் தலையசைக்க, “குட்” என்றாள் அவள்.

“குட் செலக்ஷன்” என்றவள்,

“உன் பாஸ்ட் லவ் பத்தி உன் மனைவிக்கு தெரியுமா?” எனக் கேட்டாள்.

‘எதுக்கு இப்ப இதை கேட்குறா?’ என யோசித்தவாறே இல்லையென அவன் தலையசைக்க,

“ஹ்ம்ம் கேவலமா ஒரு பொண்ணை திட்டி என் வாழ்க்கைலருந்து விரட்டி அடிச்சிட்டேன்னு சொல்ல வாய் வராம சொல்லாம விட்டுட்டியோ?” நக்கலாய் கேட்டிருந்தாள் நங்கை.

வெகு இயல்பாக இருந்த அவளின் முகத்தில் இருந்து அவளின் உணர்வுகளை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை.

“நங்கை” என்றவன் அதிர்ந்தவாறு பார்க்க,

“பட் பாஸ்ட் இஸ் பாஸ்ட்ல! அதை போய் எதுக்கு ப்யூச்சர் லைஃப் பார்ட்னர்கிட்ட சொல்லிட்டு இருக்கனும். யாருக்கும் உண்மையா இருந்து தான் உனக்கு பழக்கமே இல்லையே” வெகு இயல்பாய் கூறியிருந்தாள் நங்கை.

“நங்கை” என அடிக்குரலில் சீறியவனோ, தன்னை கட்டுப்படுத்தியவனாய்,

“இன்னுமா அதெல்லாம் மறக்காம இருக்க நீ” எனக் கேட்டான்.

“இதெல்லாம் ஆயுளுக்கும் மறக்க முடியாதுனு தான் ஒரு காலத்துல நினைச்சேன். தப்பா பேசுனவனே எல்லாத்தையும் மறந்துட்டு நல்லா வாழும் போது தப்பு செய்யாத நான் ஏன் நினைச்சிட்டு இருக்கனும்னு கடந்து வந்தாச்சு” என்றாள் நங்கை.

சுருக்கென நெஞ்சில் நெருஞ்சி முள் குத்திய வலி அவனுக்கு.

“ஏன் இப்படி பேசுற நங்கை” என குற்றவுணர்வுடன் அவன் கேட்க,

“எனக்கு மட்டும் டைம் மிஷின் கிடைச்சதுனா உன்னை சந்திச்ச அந்த நாளே என் வாழ்க்கைல இல்லாம ஆக்கிருப்பேன். சுந்தர் மட்டுமே என் மொத்த வாழ்க்கையிலும் நிறைஞ்சி இருந்திருப்பான். கரும்புள்ளியா கூட உன்னை என் வாழ்க்கைல நுழைய விட்டிருக்க மாட்டேன்” என்றாள்.

இன்பா ஏதோ கூற வாயெடுக்கும் போது, சிந்துஜா தனது மகனுடன் அங்கு வந்து விட, அமைதியாகி விட்டான் இன்பா.

இத்தனை தவறானவனாக தான் தன்னை அவள் நினைத்து வைத்திருக்கிறாளா? இன்பாவிற்கு மனது ஆறவேயில்லை.

தன் மீது இன்னும் இத்தனை கோபமாய் அவள் இருப்பாளென அவன் நினைத்திருக்கவே இல்லை. அவளிடம் மன்னிப்பு கேட்கவே அவன் எண்ணினான். ஆனால் அவளின் இந்த நேர்முக தாக்குதல் அவனை நிலைகுலைய செய்திருந்தது. குற்றவுணர்வு அதிகமாகி மனது பாரமாகி போனது.

நங்கைக்கு நெஞ்சமெல்லாம் கோபத்தில் காய்ந்து கிடந்தது. ஏன் தான் இத்தனை கோபம் கொள்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு.

அச்சமயம் அவளின் அலைபேசி அலற, மகளை தோளில் தூக்கியவாறு கைபேசியை எடுத்துக் கொண்டு சற்று தள்ளி நடந்தவாறு சென்றவள் அழைப்பை ஏற்றாள்.

“என்னடா பப்ளிமாஸ்! இன்னும் வீட்டுக்கு போகலையா?” மறுபக்கம் கேட்ட சுந்தரின் குரலில் இங்கு சரேலென கண்களில் இருந்து நீர் வழிந்தது.

“எனக்கு உன்னை இப்பவே பார்க்கனும்! கட்டிப்பிடிச்சிட்டு அழனும்” கமறிய குரலில் உரைத்தாள் நங்கை.

பதறி விட்டான் சுந்தர். “என்னடா? என்னாச்சு? அங்கே எதுவும் பிரச்சனையா?” என பதறியவாறு கேட்டான்.

“இல்ல இல்ல! அதெல்லாம் ஒன்னுமில்லை!” அவனின் பதட்டமான குரலில் தன்னை மீட்டுக் கொண்டவளாய்,

“ஐ மிஸ் யூ சோ மச்! அதான் அப்படி சொல்லிட்டேன்! இங்க ஒரு பிரச்சனையும் இல்லை” என்றாள்.

“உஃப்” என்ற அவனின் பெருமூச்சு கேட்டது அவளுக்கு.

“அதான்‌ நான் வர இன்னும் மூனு நாள் ஆகும்னு கொஞ்ச நேரம் முன்னாடி தானே சொன்னேன்” என்றவன் சொன்னதும் தான், தான் அவன் மீது அந்நேரம் கோபம் கொண்டு பிசியாக இருப்பதாக உரைத்து பின்பு பேசுவதாக கூறி அழைப்பை துண்டித்தது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

“ஸ்ஸ்ஸ் ஆமால்ல! உன் மேல நான் கோபமா இருந்தேன். உன்கிட்ட பேசவே கூடாதுனு நினைச்சேன்” என்றாள்.

அவளின் கூற்றில் சிரித்தவனாய், “ஏன் பப்ளிமாஸ் இந்த மூட் ஸ்விங்! என்னமோ சரியில்லைன்னு தோணுதே” என்றான்.

தன்னை அணு அணுவாய் அறிந்து வைத்திருக்கும் அவனது அன்பில் நெக்குருகி போனாள்.

“மனசு உன்னை ரொம்ப தேடுதுடா! உடனே உன்னை பார்க்கனும் போல இருக்கு!” மீண்டுமாய் கண்களில் நீர் சூழ அவள் உரைக்க,

“இப்ப என் பப்ளிமாஸ் பத்திரமா வீட்டுக்கு போய் சேருவியாம். அப்புறம் உன்‌ புருஷனுக்கு வீடியோ கால் போடுவியாம். அப்புறம் நைட் முழுக்க என்னை பார்த்துட்டே இருப்பியாம்! சரியா! கண்ணை தொட” என்றதும்,

கைபேசி வைத்திருந்த கையை கொண்டே கண்களை துடைத்துக் கொண்டு, “சரி நான் வீட்டுக்கு போய்ட்டு ஃபோன் செய்றேன்” என்றவளாய் தனது இருக்கைக்கு சென்றாள்.

அங்கே அன்னம் இல்லாமல் இருப்பதை பார்த்து விட்டு, “அன்னம் எங்கே சிந்து” என்று கேட்டாள்.

“மோகன் கூப்பிட்டாங்கனு போனாங்க நங்கை” என்றாள் சிந்துஜா.

ஓ என்றவள் மேலும் சிந்துஜாவிடம் பேசிக் கொண்டிருக்க, மேடையின் பின்புறமாக அன்னத்தை வரச் சொல்லியிருந்த மோகன், அவளை மேடைக்கு பின்னே சற்று தள்ளியிருந்த ஓர் அறைக்கு அழைத்து சென்றான்.

“எங்க கூட்டிட்டு போற மோகன்” என்று கேட்டவாறே அவள் அவன் பின்னே செல்ல,

“சர்ப்ரைஸ்” என்றவனாய் முன்னே சென்றான் மோகன்.

மேடையில் பாடிய பிரபல சூப்பர் சிங்கர் பாடகியின் முன்பு அன்னத்தை கொண்டு போய் நிறுத்தினான்.

அந்த அறையில் மூவர் மட்டுமே இருக்க, அப்பாடகியை பார்த்து ஸ்தம்பித்து போய் நின்றிருந்த அன்னத்தின் காதில், “பேசு” என்றான் மோகன்.

மனம் மகிழ்ச்சியில் துள்ள தன்னுணர்வுக்கு வந்தவளாய், “ஐம் அன்னம்! எனக்கு உங்க வாய்ஸ் ரொம்ப பிடிக்கும்! நீங்க டிவி ஷோல வந்தப்ப உங்களுக்கு நான் நிறைய தடவை வோட் செஞ்சிருக்கேன்” என்று தொடர்ந்து பூரிப்பாய் பேசிக் கொண்டிருந்தாள் அன்னம்.

அந்த பாடகியும் அன்னத்திடம் சிறிது நேரம் மகிழ்வாய் பேசிவிட்டு அவளுடன் சுயமி எடுத்துக் கொண்டாள்.

அந்த அறையை விட்டு வெளியே வரும் போது மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்தாள் அன்னம்.

“தேங்க்யூ சோ மச் மோகன்! டோட்டலி அன்எக்ஸ்பெக்டட்! எனக்கு இவங்களை பிடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்டாள் அன்னம்.

“அதான் அவங்க பாடும் போதெல்லாம் எக்சைட் ஆகி கத்திட்டு இருந்தியே! அதான் உன்னை சர்ப்ரைஸ் செய்யலாம்னு இந்த ஷோ அரேஞ் செஞ்ச பையன்கிட்ட பேசி பர்மிஷன் வாங்கினேன்” என்றான்.

மின்னொளி பொருத்தப்பட்ட ஒரு மரத்தின் கீழே நின்று பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.

“நீ ஹேப்பி தானே?” எனக் கேட்டான்.

“ரொம்ப‌ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” முகத்தில் மகிழ்வின் பொலிவை தேக்கி அவள் கூற,

“இந்த சந்தோஷத்தோடயே ஒரு விஷயம் சொல்லிடலாம்னு நினைக்கிறேன்” பீடிகையுடன் ஆரம்பித்தான் மோகன்.

“என்ன விஷயம்?” இயல்பாய் அவள் கேட்க,

“ஐ லவ் யூ” என்றான் அவன்.

— தொடரும்