அழகிய அன்னமே 13 & 14

மருத்துவமனையின் ஓரறையில் கட்டிலில் படுத்திருந்தாள் அன்னம்.
“அறிவிருக்காடா உனக்கு? இப்படியா விளையாடுவ?” என்று மோகனை திட்டிக் கொண்டிருந்தான் இன்பா.
“இல்ல இன்பா! நான் சும்மா சடன்னா போய் கத்தினேன். அதுக்கு போய் மயங்கி விழுவானு நினைக்கலை” வருத்தத்தொனியில் உரைத்தான் மோகன்.
அவன் கத்தியதை கேட்டு அவள் மயங்கி விழவும் நிரம்பவுமே பயந்து போனான் மோகன். அந்த பக்கமாய் வந்த அவனது சக பணியாளர்கள் இன்பாவிடம் தெரிவிக்க, உடனே அலுவலகத்தில் இருக்கும் மருத்துவ அவசர ஊர்தியை வரவழைத்து அருகிலிருக்கும் மருத்துவமனையில் அவளை அனுமதித்து விட்டான். அதுவரையில் அவள் உடல் நலமில்லாமல் மயங்கியதாய் எண்ணியிருந்த இன்பா, மோகன் மருத்துவரிடம் அவள் பயத்தில் மயங்கி விழுந்ததை பற்றி உரைக்கவும் தான் உண்மை அறிந்து கடும் கோபமுற்றான்.
மருத்துவர் பரிசோதித்து விட்டு சில நிமிடங்களில் விழித்து விடுவாள் என்று உரைத்து விட்டு செல்ல, மோகனை வறுத்தெடுத்து விட்டான் இன்பா.
“நீ ஆபிஸ்க்கு கிளம்பு! திரும்ப அவ முழிக்கும் போது உன்னை பார்த்து பயந்துட போறா” என இன்பா மோகனிடம் உரைக்க,
“இல்ல இன்பா! அவ முழிக்கிறதை பார்த்துட்டு போனா தான் என் மனசு நிம்மதியாகும்” என்றான் மோகன்.
“இல்லடா அங்க நைட் ஷிப்ட்டுக்கு ஆளு இல்லை. அதான் அவளை பார்த்துக்க நான் இருக்கேன்ல! அவ மாமாக்கு தகவல் சொல்லிட்ட தானே! நான் பார்த்துக்கிறேன்” இன்பாவின் பேச்சை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் அன்னத்தை பார்த்தபடியே மனமேயில்லாமல் அங்கிருந்து கிளம்பினான் மோகன்.
அலுவலகத்திற்கு அழைத்து பேசிய இன்பா, தனது வீட்டிற்கு அழைத்து நடந்ததை உரைத்து பேசியவன், அன்னத்தை கவலையுடன் பார்வையிட்டான்.
மோகனும் அன்னமும் இங்கே வந்து விட்டதால், மதிய ஷிப்ட்டில் இருந்த பாலாஜியையும் அசோக்கையும் சிறிது நேரத்துக்கு இரவு ஷிப்ட்டை பார்க்க கூறியிருந்தான். தற்பொழுது மோகன் அங்கே வந்தவுடன் இருவரையும் கிளம்புமாறு உரைத்தான்.
மோகன் மருத்துவமனை வாயிலை அடைந்த சமயம், “ஹே மோகன், இங்கே என்ன செய்ற? உடம்பு எதுவும் சரியில்லையா?” எனக் கேட்டவாறு வந்து நின்றான் சிவா. அவனுடன் அஞ்சலியும் இருந்தாள்.
சட்டென கேட்ட குரலில் திடுக்கிட்டு பார்த்த மோகனுக்கு கண்கள் கலங்கி விட்டது. மனப்பாரங்களை மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சட்டென்று உரைத்து விடுவோம் அல்லவா! அவ்வாறு தான் சிவாவை கண்டதும் மடமடவென தான் அன்னத்தை பயமுறுத்தியது, அவள் மயங்கி விழுந்தது, அவள் நிலையை கண்டு தான் பயந்தது, அதன் விளைவாய் மனம் குற்றயுணர்வுக்குள்ளானது என அனைத்தையும் உரைத்தான்.
அவன் கூறிய செய்தியில் கோபம் வந்து மனம் அவனை திட்ட விழைந்தாலும், அவனது நிலையை கருத்தில் கொண்டு, “சும்மா சாதாரண மயக்கம் தானே! சரியாகிடுவா! அதுக்கு ஏன் இவ்வளோ கவலைப்படுற!” எனத் தேற்றியவன்,
“விளையாட்டு எப்ப வேணாலும் விபரீதமாகலாம் மோகன்! பார்த்து நடந்துக்கனும். அவ மயங்கி விழுற நேரத்துல மண்டைல எதுவும் அடி பட்டிருந்தா என்ன செஞ்சிருப்ப! இனி இப்படி நடக்காம பார்த்துக்கோ” என்று அறிவுரை வழங்கினான்.
அன்னம் தங்கியிருக்கும் அறையை பற்றி கேட்டறிந்து கொண்டவன் செல்ல முனைய, “நீங்க எதுக்கு வந்திருக்கீங்கண்ணா! உடம்பு எதுவும் முடியலையா?” எனக் கேட்டான் மோகன்.
“இல்லடா! நம்ம டான்ஸ் ஸ்கூல்ல டான்ஸ் பிராக்ட்டிஸ் செஞ்சிட்டு இருக்கும் போது ஒருத்தங்களுக்கு அடிபட்டுருச்சு! இங்கே தான் இப்ப அட்மிட் செஞ்சிருக்காங்க. அவங்களை பார்க்கலாம்னு வந்தோம்” என்ற சிவா அன்னத்தை காணச் சென்றான்.
அன்னத்தின் மாமா ருத்ரன் அந்த அறையினில் முழித்திருந்த அன்னத்திடம் எவ்வாறு அவள் மயங்கினாள் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். அங்கு தான் உணர்ந்த அமானுஷ்ய உணர்வுகளை அவள் விளக்கியதும், பாலாஜிக்கு அழைத்து பெண்கள் கழிவறை அருகே அன்னம் குறிப்பிட்ட நேரத்தில் எவரேனும் சென்றனரா என விசாரிக்க சொன்னான் இன்பா. அடுத்த சில நிமிடங்களிலேயே அச்சமயம் கழிவறையை சுத்தம் செய்யும் பணியாள், அன்னம் உள்ளே இருக்கும் போது கதவை தட்டியது தெரிய வந்தது.
இன்பா பாலாஜியிடம் கேட்டு கூறியதும், “அட ஆமா மாமா! அங்க கிளீன் செய்ற அக்கா எப்பவுமே உள்ளே யாராவது இருந்தா கதவை தட்டிட்டு பக்கத்து பாத்ரூம் கிளீன் செய்ய போய்டுவாங்க. நான் தான் என் மன பிராந்தில இதை கவனிக்காம பயந்துட்டேன்” என்றாள் அன்னம்.
மருத்துவர் அன்றிரவு முழுவதும் மருத்துவமனையில் பரிசோதனைக்காக தங்குமாறு கூற, ருத்ரனும் இன்பாவும் அதை பற்றி அன்னத்திடம் பேசிக் கொண்டிருந்த நேரம், கதவை தட்டியவாறு உள்ளே நுழைந்தான் சிவா. அஞ்சலி வெளியே நின்றுக் கொண்டாள்.
சிவாவை கண்டு அனைவருமே அதிர்ச்சியாய் ஒருவரையொருவர் பார்க்க, “என்ன ஷாக்காகிட்டீங்க எல்லாரும்!” எனக் கேட்டான்.
“இல்ல உங்களை இந்த நேரத்துல இங்கே எதிர்பார்க்கலை” என்று தன்னிலை வந்தவராய் ருத்ரன் உரைக்க, இன்னுமே சிவாவை ஆராயும் பார்வை பார்த்து வைத்தான் இன்பா.
அலுவலகத்தில் படப்பிடிப்பு தளத்தில் சிவாவை சில முறை பார்த்திருக்கிறான் இன்பா. மற்றபடி தொலைகாட்சியை பார்க்கும் பழக்கம் இல்லாததால் அவனை பற்றி பெரியதாக ஏதும் அறிந்து வைத்திருக்கவில்லை இன்பா. இப்பொழுது அவனை இங்கு கண்டதில் ருத்ரனும் இன்பாவும், ‘அன்னத்தை பார்க்கவே ஓடோடி வந்திருக்கானா?’ என்றெண்ணியவாறே பார்த்தனர்.
மோகனை ஏதேச்சையாக பார்த்ததையும் பேசியதையும் கூறிய சிவா அன்னத்தை நோக்கி, “வெள்… அன்னம் ஆர் யூ ஓகே நௌ?” எனக் கேட்டான்.
“ஐம் பெர்பெக்ட்லி ஆல்ரைட் சிவா! எல்லாம் இந்த மோகன் பக்கி செஞ்ச வேலை! அங்கேயே தண்ணி தெளிச்சிருந்தா முழிச்சிருப்பேன். இப்ப இந்த ஹாஸ்பிட்டலுக்கு வேற பணம் கட்டனுமே! இதுல நைட் முழுக்க இருந்துட்டு காலைல போக சொல்லிருக்காங்கனு மாமாவும் இன்பாவும் ஃபுல் பாடி செக்கப் செய்ய சொல்றாங்க! நீங்க சொல்லுங்களேன் இவங்ககிட்ட! எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை” ஒவ்வாமையை முகத்தில் தேக்கி அவள் கூற,
‘இவ வாய் தான் இவளுக்கு பிரச்சனையே! யாரா இருந்தாலும் நம்பி ரொம்ப பழக்கமானவங்க மாதிரியே பேசிடுறா’ மனதினுள் எண்ணியவாறு இவளின் இந்த படபட பேச்சை கோபத்துடன் பார்த்திருந்தான் இன்பா.
தானும் ஒரு காலத்தில் இப்படி தான் பேசிக் கொண்டு திரிந்திருந்தோம் என்பதை அவனின் மனசாட்சி அவனின் தலையில் குட்டி சொல்ல, ‘அது என்னிக்குலாம் கஷ்டத்தை தான் கொடுக்கும்னு இவளுக்கு யார் சொல்லி புரிய வைக்கிறது’ என்று மனதோடு எண்ணிக் கொண்டான் இன்பா.
அன்னத்தின் பேச்சில் அவளின் தலையை வாஞ்சையுடன் தடவ எழுந்த தனது கையை இறுக்கி கொண்டு அவளை நோக்கி மென்னகை புரிந்தவனாய், “சீக்கிரம் இங்கிருந்து கிளம்பிடலாம்” என்ற சிவா ருத்ரனிடம் பேசினான்.
சிவாவின் பேச்சியிலேயே அன்னத்திற்கும் ருத்ரனுக்கும் சிவா முன்பே பரிச்சயமானவனாய் இருந்திருக்கிறான் என புரிந்தது இன்பாவிற்கு.
ஆயினும் அன்னம் சிவாவிற்கு அளிக்கும் முன்னுரிமை கண்டு இவன் மனம் பொருமுவதை தவிர்க்க இயலவில்லை இவனால்.
இன்பாவிடமும் சில வார்த்தைகள் பேசிய சிவா கிளம்ப முனைய, “என்னையும் சேர்த்து கூட்டிட்டு போவீங்கனு பார்த்தா, நீங்க மட்டும் கிளம்புறீங்க! எனக்கு ஊசினா பயம் சிவா! இவங்க டெஸ்ட் எடுக்கிறேன்னு ஊசி குத்த வச்சிடுவாங்க” பாவமாக முகத்தை வைத்து கொண்டு அன்னம் கூற, மூவருமே சிரித்து விட்டனர்.
“நாம இப்ப கிளம்பிடலாம்” என்ற ருத்ரன், சிவாவை கிளம்ப பணித்தார். இன்பாவும் கிளம்புவதாய் உரைத்து அங்கிருந்து நகரவும், அன்னத்தின் அருகே வந்த ருத்ரன்,
“எல்லாரையும் நல்லவங்கனு நம்பி உரிமையா பேசாத அன்னம்! நேர்ல நல்லா தான் பேசுவாங்க. அவங்க மனசுக்குள்ள என்ன வஞ்சக எண்ணம் இருக்குமோ நமக்கு தெரியாது! இப்ப தான் உன்னை நினைச்சு எனக்கு ரொம்ப பயமா இருக்கு” கவலையுடன் உரைக்க,
“அச்சோ மாமா! நான் சும்மா விளையாட்டா தான் சிவா கிட்ட பேசினேன். நீங்க கவலைப்படாதீங்க! மோகன் இன்பாவை தவிர எல்லாருமே எனக்கு ஜஸ்ட் தெரிஞ்சவங்க கணக்கு தான்” என்றாள்.
ஓய்வெடுக்கட்டுமென அன்னத்திற்கு அந்த வாரம் முழுவதும் விடுப்பு அளித்திருந்தான் இன்பா.
******
பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தான் ராஜன். அந்த பெட்டியினுள்ளே அமர்வதும், துணிகளை எடுத்து வீசுவதுமாக விளையாடிக் கொண்டிருந்தாள் அவனின் மகள் நந்திதா.
“ம்ப்ச் குட்டிம்மா! அங்க போய் விளையாடுங்க! அப்பாக்கு நேரமாகுது” என்று மகளை தூக்கி கொஞ்சியவனாய் கீழே அவன் இறக்கி விட, அவனின் கழுத்து காலரை பிடித்தபடி இறங்க மாட்டேனென அடம்பிடித்து அழுதாள் சின்னவள்.
“நங்கை, இங்க வா! நந்துக்குட்டியை வாங்கு! எனக்கு நேரமாகுது பாரு” என்று மனைவியை அழைத்தவன், “நந்து பாப்பா, குட் கேர்ள் தானே! அப்பா சொன்னா கேட்பீங்க தானே” என்று மகளின் தாடையை பற்றி அவன் கேட்கவும், விசும்பியவாறே ஆமென குட்டிப்பெண் தலையசைக்க,
“அப்பாக்கு வேலை இருக்காம்! அம்மா கூட இருப்பீங்களாம்! அப்புறம் வந்து தூக்க வைப்பேனாம் சரியா” என்று பேசியவாறே முகப்பறைக்கு வந்தவன்,
“மாமா எங்க அவ? அவ்ளோ நேரம் கூப்பிடுறேன்! எட்டி கூட பார்க்க மாட்டேங்கிறா!” என்று சுரேந்தரிடம் வினவினான்.
“நான் இருக்கும் போது எப்படியாவது டபாய்ச்சு என்னை சமைக்க வைக்கிற உன் பொண்டாட்டி, இன்னிக்கு அவளே தான் சமைப்பேன்னு கிச்சனுக்குள்ள இருந்து வர மாட்டேங்குறா! என்னனு நீயே போய் பாரு” என்றார் சுரேந்தர்.
ஏன்னாம் என்று கேட்டவாறு குழந்தையை சுரேந்தரிடம் கொடுத்தவன், சமையலறைக்குள் சென்றான்.
“என்ன பப்ளிமாஸ், கிளம்புற நேரத்துல கிண்டிட்டு இருக்க” என்றவாறு உள்ளே வந்தவனை கண்டு கொள்ளாது, முகத்தை திருப்பி கொண்டு எதையோ எடுப்பதும் அடுக்குவதும் என பாவனை செய்தவாறு நடந்தபடி இருந்தவளின் கைகளை பிடித்து நிறுத்தியவன், “என்ன பப்ளிமாஸ்! என்ன உன் பிரச்சனை?” என்று அவளின் முகத்தை நிமிர்த்தியவாறு கேட்க, அவளின் கண்கள் கலங்கியிருந்தது.
“ஹே என்னடா!” என்றவன் கேட்டதும், மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அவளின் கண்ணீர் சட்டையில் இறங்கி மார்பை நனைத்தது.
“டேய் பப்ளிமாஸ்! இதுக்கு தான் நான் போக மாட்டேன்னு சொன்னேன். ஒரு வாரம் தானே ஆபிஸ் டிரிப்னு என்னை ஒத்துக்க வச்சிட்டு இப்ப நீயே இப்படி செஞ்சா என்னால எப்படி போக முடியும்” என்று கவலையாய் அவன் கேட்க,
சட்டென நிமிர்ந்து கண்களை துடைத்துக் கொண்டவளாய், “அதெல்லாம் நான் மேனேஜ் செஞ்சிப்பேன். பத்து நாள் தானே! அதுவும் ஹைத்ராபாத் தானே! நீ கிளம்பு” என்றாள்.
குனிந்திருந்த அவளின் தலையை குனிந்து பார்த்தவனாய், “நிஜமா? அழ மாட்டியா? என்னை தேட மாட்டியா?” எனக் கேட்டான்.
ம்ம்ஹூம் என தலையசைத்தவாறு கண்களை துடைத்தவளாய், “அழ மாட்டேன்! ஆனா ரொம்ப தேடுவேன்!” என்று கட்டிக் கொண்டாள்.
“நீ தான் என்னை ரொம்ப கெடுத்து வச்சிட்ட! கல்யாணமான நாள்லருந்து என்னை விட்டு எங்கேயும் போகாம இருந்து என்னை கொஞ்சி கொஞ்சியே கெடுத்து வச்சிட்ட” என்றவளை சிரிப்புடன் அணைத்தான் அவன்.
வெளியே சின்னவளின் குரல் ஓங்காரமாய் அழுகையுடன் ஒலிக்க, “ஆரம்பிச்சிட்டா உன் பொண்ணு! கொஞ்ச நேரம் உன் கூட பேச விட மாட்டாளே! அவளை எப்படி சமாளிக்க போறேனோ தெரியலை” என்று புலம்பியவளின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவன், “சாப்பாடு எடுத்து வை! நான் பெட்டியை எடுத்து வைக்கிறேன்” என்று படுக்கையறைக்கு சென்றான்.
“நான் பாப்பாவை கீழே பார்க்குக்கு கூட்டிட்டு போறேன். நீ கிளம்பினதும் வரேன்! இல்லனா உன்னை போக விடாம அழுதே ஊரை கூட்டிடுவா உன் பொண்ணு” என்று சுரேந்தர் கூறவும், “சரிங்க மாமா” என குழந்தையை அணைத்து முத்தமிட்டு சுரேந்தரிடம் கொடுத்தான்.
அவர் கிளம்பியதும் இவனுக்கு இரவுணவு பரிமாறி அவன் கையினாலேயே உண்டும் விட்டு, கிளையண்ட் மீட்டிங்கிற்கான அவனது அலுவலக பயணத்திற்கு பிரியா விடை கொடுத்து அனுப்பினாள் நங்கை.
—-
மறுநாள் ஹைத்ராபாத் சென்றவன் இவளுக்கு அழைத்து பேசிவிட்டு தனது அலுவல் வேலையில் பிசியாகி விட, இவள் அவன் நினைவுடனே பசலை நோய்யுற்று கிடந்தாள்.
அந்நேரம் அவளுக்கு அழைத்த அன்னம், “இந்த வாரம் முழுக்க எனக்கு லீவ் தான் அண்ணி! இங்க ரொம்ப போர் அடிக்குது! அங்க வரவா! பாப்பா கூட இருந்தா டைம் போறதே தெரியாது” எனக் கேட்டாள்.
“வரனும்னா வர வேண்டியது தானே! அதுக்கு ஏன் பர்மிஷன்லாம் கேட்டுட்டு இருக்க அன்னம்” என்று சிரித்தவாறு கேட்டாள் நங்கை.
அழகிய அன்னமே 14
“என்னை மிஸ் செஞ்சியா பப்ளிமாஸ்” அலைபேசியில் ராஜன் கேட்டிருக்க,
“ச்சே ச்சே இல்லவே இல்லை! நான் கூட ரொம்ப லோன்லியா ஃபீல் ஆகுமோனு நினைச்சேன்” அவனை வெறுப்பேற்ற நங்கை சிரித்தவாறு கூற,
“அடிப்பாவி! என்ன இருந்தாலும் பெத்த பொண்ணு பெத்து பொண்ணு தான். பொண்டாட்டி பொண்டாட்டி தான்னு நிரூபிச்சிட்டியே! இதுவே என் பொண்ணை கேட்டிருந்தா, நான் கேட்குறது புரியுதோ இல்லையோ ப்பா ப்பானு ஃபோன்லயே என் மூஞ்சை பார்த்து முத்தம் கொடுத்திருப்பா” என்றவன் கூறவும்,
“ஓஹோ அங்க சார் மட்டும் என்ன செய்றீங்களாம்? நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனு சூர்யா மாதிரி பாட்டா பாடிட்டு இருக்கீங்க. பகல் முழுக்க எல்லாத்தையும் மறந்து வேலை பார்த்துட்டு நைட் ஆனதும் ரூம்ல அசதியா தூங்கிடுறது. இதுல நான் மட்டும் உங்களை நினைச்சு ஏங்கி கிடக்கனுமா” என்று உதட்டை சுழித்தவாறு கேட்டாள் நங்கை.
அவளின் செய்கையை அறிந்தவனாய், “அங்க சுழியுற அந்த உதட்டை இழுத்து வச்சு” என்று அவன் ஏதோ கூற வரவும்,
“ச்சு.. அன்னம் இருக்கா” என்று ஹஸ்கி குரலில் உரைத்தாள் தனது படுக்கையறையின் பால்கனியில் நின்றிருந்த நங்கை.
அன்றிரவு நங்கையின் படுக்கையறையில் இருக்கும் தொலைக்காட்சியில் படம் பார்க்கலாமென ஏற்பாடு செய்து கொண்டிருந்தாள் அன்னம்.
நங்கை சம்மதித்த உடனேயே ருத்ரனிடம் கூறிவிட்டு ஒரு வாரம் தங்குவதற்கான உடையுடன் வந்து விட்டாள் அன்னம்.
நங்கையுடனும் சுரேந்தருடனும் பேசியவாறும் நந்திதாவுடன் விளையாடியவாறும் பொழுது கழிந்தது அன்னத்திற்கு.
அன்னத்தின் இருப்பு நங்கைக்கு ராஜனின் இன்மையை பெரியதாக உணரச் செய்யாமல் இயல்பாக இருக்க வைத்தது.
தனது தாத்தா சுரேந்தருடன் நந்துக்குட்டி படுத்துக்கொள்ள, நங்கையும் அன்னமும் இணைந்து படம் பார்க்கலாமென திட்டமிட, அதற்கான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தாள் அன்னம்.
மேலும் சிறிது நேரம் நங்கை ராஜனிடம் பேசிக் கொண்டிருக்க, “அண்ணி பேசினது போதும் வாங்க! படம் பார்க்கலாம்” என அழைத்தாள்.
ராஜனிடம் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தவள் மெத்தையில் அமர்ந்தாள்.
இருவருமாக திண்பண்டங்கள் உண்டவாறே பேசியபடி படத்தை ரசித்து பார்த்து முடிக்கும் போது பாதி இரவு கடந்திருக்க, அன்னமும் நங்கையுடன் அங்கேயே படுத்து கொண்டாள்.
“ரொம்ப நல்ல படம்ல அண்ணி” என்று விட்டத்தை பார்த்தவாறு படுத்திருந்த அன்னம் கேட்க,
“ஆமாடா! நித்யா மேனனும் தனுஷூம் செம்ம ஆக்டிங்” என்றாள் நங்கை.
அன்னத்தினுள் உறங்கி கொண்டிருந்த பெண்ணியவாதி விழித்துக் கொள்ள, “ஏன் அண்ணி! இதுவே தனுஷ் மாதிரி நித்யா மேனன் இரண்டு மூனு பசங்ககிட்ட லவ் பண்றேன்னு சொல்லி எதுவும் செட் ஆகாம கடைசில தனுஷை லவ் செய்றேன்னு சொல்லிருந்தா தனுஷ் ஒத்துக்கிட்டு கல்யாணம் செஞ்சிருப்பாரா? அப்படியே அவர் ஒத்துக்கிட்டு கல்யாணம் செஞ்சிருந்தாலும் படம் ஓடிருக்குமா?” என்று கேட்டாள்.
“ஒரு விஷயத்தை ஒரு பொண்ணு செஞ்சா தப்புன்னு சொன்னாங்கனா, அதே விஷயத்தை பையன் செஞ்சாலும் தப்பு தான் அன்னம். ஒழுக்க விதிகள் ஆண் பெண் இரண்டு பேருக்குமே பொது தான்.
இந்த படத்துல பரவாயில்ல! தனுஷ் டீசன்ட்டா தான் தன்னோட விருப்பத்தை பொண்ணுங்ககிட்ட சொல்றாரு. அவங்க விருப்பமில்லைனு சொன்னதும் அடிடா அவளை குத்துறா அவளைனு சொல்லாம டீசன்ட்டா விலகிடுறாரு! அது வரைக்கும் சந்தோஷம்.
ஆனா எனக்கு மைண்ட்ல இடிச்ச விஷயம், வயசுல மூத்தவங்களே தண்ணி அடிச்சிட்டு டிரைன் டிராவல் செய்றது, தண்ணி அடிக்கிறது தப்பே இல்லைன்ற மாதிரி இயல்பா காட்சிபடுத்திருக்கிறது. அப்புறம் நித்யா மேனன் தனுஷை ஸ்கூல்ல இருந்தே லவ் பண்றதா அவளோட பிரதர் சொல்றது! அப்படியே ஷாக் ஆகிட்டேன். ஏற்கனவே ஸ்கூல் லவ்லாம் அதுவும் அஞ்சாவது ஆறாவதுல லவ் பண்றதுலாம் தப்பே இல்லைனு நினைச்சிட்டு இருக்க இந்த 2k கிட்ஸ் மத்தியில இப்படியான படக்காட்சிகள் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்னு ரொம்ப பயமாகிட்டு அன்னம்” தனது மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டாள் நங்கை.
“அண்ணி! இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நானும் ஒரு 2k கிட்டுனு மறந்துட்டு பேசுறீங்க!” என்று அன்னம் கூற,
“அட நீ வேற போமா! காமெடி செஞ்சிக்கிட்டு! என்ன தான் நீ குட்டிக்கரணம் அடிச்சாலும் இப்ப இருக்க 2k கிட் கூட போட்டி போட முடியாது” அன்னத்தை கிண்டல் செய்தாள் நங்கை.
தனது கையில் அகப்பட்ட சிறிய தலையணையை நங்கையின் மீது எறிந்தாள் அன்னம். இருட்டிலும் அதை சரியாக கைப்பற்றி சிரித்தாள் நங்கை.
“ஆந்தை கண்ணு தான் அண்ணி உங்களுக்கு” என்றவள் மீண்டுமாய் படுத்துக் கொண்டாள்.
“எனக்கு ஒரே கேள்வி தான் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு அண்ணி?” என்ற அன்னம்,
“வேற ஒருத்தரை லவ் செஞ்ச பொண்ணை ஏத்துக்கிற பசங்க இருக்காங்களா அண்ணி? பொண்ணுங்க மட்டும் எப்படி நிறைய பேரை லவ் செஞ்ச பசங்களை ஏத்துக்கிறாங்க? இந்த ஒரு கேள்வி தான் என் மைண்ட்க்குள்ள ஓடிட்டே இருக்கு அண்ணி” என்றாள்.
‘ஏன் இல்ல! உங்க அண்ணனே இருக்காங்க. என்னை ஏத்துக்கிட்டாங்களே உங்க அண்ணன்’ என்று கூற வந்த வாயை அடக்கி கொண்டாள் நங்கை.
“ஆணோ பெண்ணோ டைம் பாஸ்ஸூக்காக லவ் செஞ்சிட்டு, பிரேக் அப் பண்ணிக்கிட்டு வேறொருத்தரை கல்யாணம் செஞ்சிக்கிறதுக்கு பேரு துரோகம். ஒழுக்கமற்ற செயல். கல்யாணம் மட்டும் செஞ்சிக்க மாட்டேன்னு லவ்வர் மாதிரி மனதால் மட்டும் ஒருவருடன் இணங்கி பேசி பழகி பிரிஞ்சி போறதும் ஒழுக்கமற்ற செயல் தான். டேட்டிங்ன்ற பேர்ல இந்த கொடுமை தான் இப்ப நடந்துட்டு இருக்கு அன்னம்.
இது இல்லாம உண்மையா லவ் செஞ்சி பலவிதமான காரணங்கள் சூழ்நிலைகள்னால அந்த காதல், திருமணம் வரைக்கும் போகாம தடைப்பட்டு பிரேக் அப் ஆகி வாழ்க்கையே வெந்து நொந்து இருக்கிறவங்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறதுல தப்பில்லை. அப்படி தான் பொண்ணுங்க பசங்களை நம்பி ஏமாந்து ஏத்துக்குறாங்க. ஆனா எந்தவொரு அம்மா அப்பாவும் தன்னோட மகனோ இல்ல மகளுக்கோ அப்படியான வரனை தேர்ந்தெடுக்க மாட்டாங்க அன்னம். உண்மையான அன்போட, பிள்ளைகளோட நலன் தான் தனது வாழ்வின் லட்சியம்னு வாழுற அப்பா அம்மாவை கொண்ட பிள்ளைங்களுக்குலாம் அரேஞ்ச் மேரேஜ் தான் பெஸ்ட் சாய்ஸ்” என்றாள் நங்கை.
“ஏன் அண்ணி, நீங்களும் அண்ணாவும் லவ் மேரேஜ் தானே! உங்க கல்யாணத்தப்ப அரசல் புரசலா வீட்டுல பேசிக்கிட்டது காதுல விழுந்துச்சு. உண்மை தானே! அப்புறம் அரேஞ்ச் மேரேஜ் பெஸ்ட்டுனு சொல்றீங்க” எனக் கேட்டாள் அன்னம்.
“இல்லையே யாரு சொன்னா?” ஆச்சரியத் தொனியில் கேட்டாள் நங்கை.
“ராஜாண்ணா யாரையோ லவ் பண்ணாங்க! கல்யாணி அண்ணி கல்யாணத்துல தீரன் அண்ணா சொன்னாங்களே! அப்புறம் தான் கொஞ்ச நாள்ல உங்க மேரேஜ் திடீர்னு நடந்துச்சு. நீங்க இரண்டு பேரும் ரொம்ப வருஷமா பெஸ்ட் ஃப்ரண்ட்டுனு மீனு சொன்னாளே” என்று அன்னம் கேட்க,
“ஆமா பெஸ்ட் ஃப்ரண்ட் தான்! ஆனா லவ் மேரேஜ் இல்ல. எங்க அப்பா பேசி அரேஞ்ச் செஞ்ச மேரேஜ்” என்றாள் நங்கை.
தங்களது காதல் கதையை கூறி அவளை குழப்பி வைக்க மனமில்லை நங்கைக்கு.
ஓ என்ற அன்னம் அமைதியாகி விட, “நான் ஒன்னு சொன்னா கேட்பியா அன்னம்” என்று கேட்டாள் நங்கை.
“சொல்லுங்க அண்ணி” என்றவாறு அவளை நோக்கி திரும்பி படுத்தாள் அன்னம்.
இருட்டிலும் தன் மீது படிந்திருக்கும் அன்னத்தின் பார்வையை நங்கையால் உணர முடிந்தது.
“என்னிக்கும் லைஃப் பார்ட்னரை வெறும் உணர்வுவயப்பட்டு தேர்ந்தெடுக்காம புத்திப்பூர்வமாவும் தேர்ந்தெடு! உன் விஷயத்துல நீ உன் அப்பா அம்மா பேச்சை கேட்டாலே போதும்னு தான் நான் சொல்வேன்” என்றாள் நங்கை.
“லவ் பண்றது தப்புன்னு சொல்றீங்களா அண்ணி?” நங்கை வார்த்தைகளை தேர்ந்தெடுத்து கோர்த்து கூறியதன் உட்பொருளை ஒரு வரியில் அடக்கி கேட்டாள் அன்னம்.
“இல்ல அன்னம்! அவங்கவங்க வாழ்க்கைக்குரிய நபரை தேர்ந்தெடுக்கிற உரிமை அவங்களுக்கு இருக்கு. ஆனால் சரியான நபரை லைஃப் பார்ட்னரா தேர்ந்தெடுக்குற பக்குவம் எல்லாருக்கும் இந்த வயசுல இருக்காது.
படிச்சு முடிச்சப்பிறகு மீதியிருக்கும் வாழ்க்கையின் தலையெழுத்தை முடிவு செய்றது நமக்கு அமையுற லைஃப் பார்ட்னர் தான். அவரோட நல்லியல்பும் குணங்களும் தான் நாம் நிம்மதியா வாழவும், மேலும் வாழ்க்கைல முன்னேறி செல்லவும் வழி கொடுக்கும். அப்படியானவங்களை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் வேறெந்த பிரச்சனை வந்தாலும் சமாளிச்சிடலாம். இல்லனா அந்த லைஃப் பார்ட்னரை சமாளிக்கிறதே வாழ்க்கையா மாறிடும். அதனால ஒருத்தரை லவ்வோ கல்யாணமோ செய்றதா முடிவெடுக்கும் போது அந்த நேர அட்ராக்ஷன்ல முடிவெடுக்காம, டைம் எடுத்து பல நாட்கள் யோசிச்சு ப்ளஸ் மைனஸ்லாம் அலசி ஆராய்ஞ்சி முடிவெடுக்கனும்னு சொல்றேன்” என்றாள் நங்கை.
“நீங்க கவலைப்படாதீங்க அண்ணி! அப்பா அம்மா பேச்சை மீறி, முக்கியமா ஆச்சி பேச்சை மீறி எப்பவும் தான் நடந்துக்க மாட்டேன். அவங்களாம் என்னால கஷ்டப்படுறாங்கனு தெரிஞ்சாலே என் மனசு தாங்காது” என்றாள் அன்னம்.
கையை நீட்டி அன்னத்தின் தலையை தடவிக் கொடுத்தாள் நங்கை.
—-
ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில் அன்னம் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். ஒரு மாதத்திற்கு அவளை இரவு ஷிப்ட்டில் போட வேண்டாமென பாலாஜியிடம் கூறியிருந்தான் இன்பா.
அன்று மாலை வேளையில் அலுவலக உணவகத்தில் மோகனும் பாலாஜியும் அமர்ந்து காபி அருந்தி கொண்டிருந்தனர்.
“இன்பாண்ணா பொண்ணுங்க விஷயத்துல எப்படி?” எனக் கேட்டான் மோகன்.
“ஏன்டா இப்படி கேட்குற?” எனக் கேட்டான் பாலாஜி.
“இல்ல இது வரைக்கும் நம்ம டீம்ல பொண்ணுங்களே வேலை பார்த்ததில்லை. இவர் மத்த டீம் பொண்ணுங்ககிட்டலாம் பேசினதே இல்ல. ஆனா அன்னம் வந்த பிறகு இவரோட நடவடிக்கையே சரியில்லாத ஃபீல். அன்னத்துக்கு ரொம்பவும் இடம் கொடுக்கிறாரு. அவளுக்கு ஒன்னுன்னா பதருறாரு. நைட் ஷிப்ட் போட வேண்டாம்னு சொல்றாரு. எனக்கென்னமோ எதுவோ சரியில்லைன்னு தோணுது” என்றான்.
“எனக்கொன்னும் அப்படி தோணலைடா! சின்னப்பொண்ணுங்கிற கரிசனத்துல செய்ற மாதிரி தான் தோணுது. அதுவும் இல்லாம அவரோட டீம்ல ஒரு பொண்ணுக்கு பிரச்சனைனா அவரை தானே கேள்வி கேட்பாங்க” என்றான் பாலாஜி.
மோகனின் முகம் யோசனையில் பலவித பாவனைகளை காண்பிக்க, “என்னடா? உன் ஆளை அவர் கொத்திட்டு போய்டுவாருனு பயமா?” எனச் சிரித்தவாறு பாலாஜி கேட்க,
எப்பொழுதும் பாலாஜியின் இந்த கேலிக்கு சிரித்தவாறு, “உங்களுக்கு வேற வேலையே இல்லைண்ணா” என்பவன், இன்று அதி தீவிரமாய் யோசித்தவாறு, “போகலாம்ண்ணா! ரொம்ப நேரம் ஆகிட்டு” என்று எழுந்துக் கொண்டான்.
இவர்கள் இருவரும் அவரவர் வேலை பார்த்துக் கொண்டிருந்த நேரம், “கைஸ் குட் நியூஸ்” முகம் நிறைத்த புன்னகையுடன் இவர்களின் அருகே வந்தான் இன்பா.
“என்ன இன்பா?” என்று மோகனும் பாலாஜியும் கேட்க, “நம்ம பிராஜக்ட்டுக்கு இந்த வருஷத்துக்கான பெஸ்ட் பிராஜக்ட் அவார்ட் கிடைச்சிருக்கு! நம்ம கம்பெனில நடக்குற பங்ஷன்ல கொடுக்கிறாங்க” என்றான்.
பாலாஜியும் மோகனும் கைகளை குலுக்கி வாழ்த்து கூறி மகிழ்வை தெரிவித்தனர்.
“நாம எல்லாரும் அந்த பங்ஷனுக்கு நம்மளோட குடும்பத்தோட கலந்துக்கனும். இன்னும் ஒரு வாரத்துல ஃபங்ஷன் இருக்கு. எல்லாரும் அவங்கவங்க வீட்டுல சொல்லிடுங்க. நைட் ஷிப்ட் ஆளுங்க வந்ததும் சொல்லிடுங்க. அன்னம் காலைல ஷிப்ட்ல வந்துட்டு போய்ட்டால! அவளுக்கு ஃபோன் செஞ்சி நான் சொல்றேன்” என்றவாறு தனது அறையை நோக்கி சென்றான் இன்பா.
“ஏன் அன்னத்துக்கு நாம ஃபோன் செஞ்சி சொல்ல மாட்டோமா? இல்ல அவர் போட்டிருக்க மெயில் பார்த்து அவள் தெரிஞ்சிக்க மாட்டாளா? இவரே ஃபோன் செஞ்சி சொல்லனுமா?” என்று பாலாஜியின் காதை கடித்தான் மோகன்.
இன்பாவின் மூலம் இச்செய்தியை கேட்டு துள்ளிக்குதித்த அன்னம், நங்கையும் ராஜனும் அவளின் குடும்பத்தினராய் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொண்டாள்.
ராஜனின் அலுவல் வேலை இழுத்துக் கொண்டு போக, ஹைத்ராபாத்தில் இருந்து அவன் வராத நிலையில், அன்னம் மற்றும் தனது மகள் சிவரஞ்ஜனியுடன் அந்நிகழ்ச்சிக்கு சென்றாள் நங்கை.
— தொடரும்