அழகிய அன்னமே 11 & 12

அன்னம் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்களாகி இருந்தது.

இன்று மோகனுடன் மதிய ஷிப்ட்டில் இருந்தாள் அன்னம்.

மதியம் இரண்டு மணியளவில் அலுவலகத்திற்கு வருபவள், இரவு பதினோரு மணிக்கு தான் அலுவலகத்திலிருந்து கிளம்புவாள்.

ஒன்பது மணியளவிலேயே இரவு ஷிப்ட் ஆட்கள் வந்துவிடுவார்கள்.

ஒவ்வொரு ஷிப்ட்டின் முடிவிலும் ஷிப்ட் ஹேண்ட் ஓவர் (hand over) என்ற ஒன்று‌ நடைப்பெறும். அதாவது அந்த ஷிப்ட்டில் பாதியில் நிற்கும் வேலையை அடுத்த ஷிப்ட் ஆட்களிடம் ஒப்படைப்பதை தான்  ஷிப்ட் ஹேண்ட் ஓவர் என்று கூறுவார்கள்‌. அடுத்த ஷிப்ட்டில் செய்து முடித்து, மீதமுள்ள வேலைகளை அதற்கு அடுத்த ஷிப்ட் ஆட்களிடம் ஒப்படைப்பார்கள். இப்படியாக தொடர்ந்து கொண்டே போகும்.

அடுத்த ஷிப்ட் ஆட்களான பாலாஜி மற்றும் அசோக்கிடம் ஷிப்ட் ஹேண்ட் ஓவரை கூறிக் கொண்டிருந்தாள் அன்னம்.

அவள் கூறி முடித்ததும் பாலாஜி அவளிடம், “அன்னம் ரெஸ்ட் ரூம் போகும் போது ஜாக்கிரதையா போ! நேத்து நைட் ஒரு பொண்ணு பாத்ரூம் கதவை யாரோ தட்டின மாதிரி இருந்துச்சாம். இந்த எமர்ஜென்சி எக்சிட் கதவு எப்பவும் மூடி தானே இருக்கும். அங்க யாரோ நடமாடுற மாதிரி இருந்துச்சாம். கண்ணாடி கதவுல நிழலாடிச்சாம்” என்றான்.

இது வரையில் அவளின் டீம் மக்கள் யாரும் இவ்வாறான அனுமானுஷ்ய நிகழ்வுகளை அவளிடம் பகிர்ந்துக் கொண்டதில்லை.

இன்று பாலாஜி அவ்வாறு சொன்னதில், சற்று பயந்து தான் போனாள் அன்னம்.

“நிஜமாவா பாலாஜி” மிரண்ட விழிகளுடன் அவள் கேட்க, அவளின் பயந்த முகத்தை கண்டதும், “ஆமா அன்னம்! உனக்கு தெரியாதா என்ன? நம்ம ஆபிஸ் மொட்டை மாடிலருந்து ஒருத்தர் கீழே விழுந்து இறந்துட்டாரு. அவர் ஆவி சுத்திட்டு இருக்கிறதாகவும் சிலர் பார்த்ததாகவும் சொல்லுவாங்க” என்றான் மோகன்‌.

பாலாஜி, அசோக் மற்றும் மோகன் முகத்தினை பார்த்தாள் அன்னம். மூவரின் முகத்திலும் அத்தனை தீவிரம்.

“எல்லாரும் சும்மா என்னை பயமுறுத்த தானே சொல்றீங்க?” என்று மனத்தை திடப்படுத்திக் கொண்டவளாய் அன்னம் கேட்க, “அட உண்மைய சொன்னா நம்ப மாட்டேங்குற! உன்கிட்ட பொய் சொல்லி என்னவாக போகுது” என்ற பாலாஜி, தனது கைபேசியின் கூகுளில் தங்களது அலுவலகப்பெயரை போட்டு அந்த சம்பவம் நடந்த வருடத்தை கூகுளில் தேடி எடுத்து அச்செய்தியை அவளிடம் காண்பித்தான்.

“செய்தி உண்மையா இருக்கலாம்‌! அதுக்காக ஆவியா சுத்துறாருனு சொல்றதுலாம் நான் நம்ப மாட்டேன்!” என்றாள் அன்னம்.

“சரி விடு! நீ நம்பாம இருக்கிறது தான் நல்லது! அப்ப தான் பயப்பட மாட்ட” என்று மேலும் அவளின் பயத்தை மோகன் அதிகப்படுத்த, இதனை தனது கேபினின் இருக்கையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்பா, இவர்களின் அருகில் வந்தவனாய், “என்ன இங்க பேச்சு! எல்லாரும் வேலையை பாருங்க” என்று அனுப்பி விட்டான்.

அன்னத்தின் இருக்கை அருகே வந்து நின்ற இன்பா, “அவங்க சும்மா உன்னை பயமுறுத்த அப்படி சொல்றாங்க! நீ பயப்படாத சரியா! நீ பயந்து வச்சி எங்கேயும் மயக்கும் போட்டு விழுந்துடாத” என்றான் சிரித்தவாறே!

“ஹப்பா இப்ப தான் எனக்கு ஹார்ட் நார்மலா துடிக்குது இன்பா” என்ற அன்னத்தை பார்த்து அருகில் வேலை செய்து கொண்டிருந்த மோகன் சிரித்து வைக்க,

“பாருங்க இன்பா! இந்த மோகன் கூட என்னை ஏமாத்திட்டான்” என்றவாறு கைகளை நீட்டி அவனின் முதுகில் ஓரடி போட்டாள்.‌

இன்பாவும் அவளின் இச்செயலில் சிரித்திருந்தான்.

“உனக்கு இங்க எப்ப என்ன‌ பிரச்சனைனாலும் என்கிட்ட சொல்லு அன்னம்! நான் சரி செய்ய பார்க்கிறேன்” என்ற இன்பா,

“பாலாஜி கம் டூ மை பிளேஸ்!” என்றவாறு தனது இருக்கைக்கு சென்றான்.

இன்பா சென்றதும் அன்னம் மேலும் தொடர்ந்து மோகனை அடிப்பதும் அவனின் முடியை பிடித்து இழுப்பதுமாய் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளின்  செயலினைக் கண்டு தனது இடத்தில் அமர்ந்திருந்த இன்பாவின் வாய் சிரித்திருந்தாலும், உள்ளத்தில் ஏதோ ஒரு நெருடல்.

பாலாஜி இன்பாவின் இடத்தில் வந்து நின்று, “என்ன இன்பா? எதுக்கு வர சொன்னீங்க?” எனக் கேட்டான்.

“டீம்க்கு ஷிப்ட் அலோகேஷன் (ஒதுக்குவது) நீங்க தானே செய்றீங்க பாலாஜி?” எனக் கேட்டான்.

ஆமென அவன் சொன்னதும், அன்னம் வந்தது முதல் இப்பொழுது வரைக்குமான ஷிப்ட் அலோகேஷனை பாலாஜி பராமரிக்கும் ஷீட்டில் பார்வையிட்டான்.

“ஏன் அன்னம் வந்ததுலருந்து எல்லா நைட் ஷிப்ட்டும் மோகன் கூடவே போட்டிருக்கீங்க! மத்த ஷிப்ட் லாம் வேற ஆளுங்க கூட செஞ்சிருக்கா! மார்னிக் தனியா இது வரைக்கும் அவளை போடலை. அனுபவம் வந்தப்பிறகு போடலாம்னு லாஸ்ட் டைம் தான் உங்களோட போட சொன்னேன். ஆனா நைட் மோகன் கூட மட்டுமே ஏன் போட்டிருக்கீங்க. பிரித்வி போன பிறகு உங்க கூட அசோக் கூடலாம் போட்டிருக்கலாமே” எனக் கேட்டான்.

இன்பாவின் இக்கேள்வியில் பாலாஜி இன்பாவை சற்று விநோதமாக தான் பார்த்து வைத்தான். பெரும்பாலும் ஷிப்ட் அலோகேஷனில் தலையிடவே மாட்டான் இன்பா. அவரவர் பணியை சரியாக செய்தால் போதும் என விடுப்பு மற்றும் ஷிப்ட் போன்றவைகளை பணிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவரவர் விருப்பப்படி பேசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விடுவான். இது நாள் வரை அவ்வாறு தான் ஆண்கள் அனைவரும் அவர்களுக்குள் பேசி தங்களது பெர்சனல் வேலைக்கேற்ப தேவையான ஷிப்ட்டையும் விடுப்பையும் எடுத்து கொள்வர்.

அதனாலேயே இன்று இன்பா இவ்வாறு கேட்டது, அதுவும் அன்னத்தை முன்னிருத்தி கேட்டது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

“ஏன் இன்பா? எனி பிராப்ளம்? மோகன் தான் அன்னம் கூட நைட் ஷிப்ட் போட சொன்னான். இரண்டு பேருக்குமே அது கம்ஃபெர்டபிள்னு சொன்னாங்க. மோகன் எங்களுக்குலாம் ஜூனியர்ன்றனால எங்க கூட நைட் ஷிப்ட் வந்தா அவன் தான் எல்லா வேலையும் பார்ப்பான். அன்னம் அவனுக்கு ஜூனியர். சோ அன்னம் கூட வரனால அவன் தூங்கிட்டு அன்னத்தை வேலை பார்க்க வைக்கிறான் போலன்னு நாங்க நினைச்சோம்” என்றான் பாலாஜி.

“இல்லை! She has to come out of her comfort zone! அதுக்காக சொன்னேன்” என்ற இன்பா,

“அடுத்த வாரம் மட்டும் மோகன் கூட வரட்டும்! அதுக்கு பிறகு மத்த ஆளுங்க கூட ரோடேஷன்ல அவளுக்கு நைட் ஷிப்ட் போடுங்க” என்றான் இன்பா.

சரியென தலையசைத்து விட்டு பாலாஜி வெளியே வரவும், இன்பா கிளம்பி சென்றான்.

அன்னம் மற்றும் மோகனிடம் வந்த பாலாஜி, “மோகனு! அன்னம் உன் ஆளுனு இன்பா கண்டுப்பிடிச்சிட்டாரு போலயே” என்று தீவிரமாய் கேட்டான்.

எப்பொழுதும் அன்னத்தை மோகனுடன் இணைத்து பேசி கேலி செய்யும் பாலாஜியின் செயலாய் பார்த்த மோகன், “ஏன்! நாங்க எப்ப கல்யாணம் செஞ்சிக்க போறோம்னு இன்பா கேட்டாரா?” என விளையாட்டாய் கேட்டான்.

“ஏய் மோகன் என்ன பேச்சு இது?” என்று முறைத்த அன்னம், “பாலாஜி ரொம்ப ஓவரா தான் கிண்டல் செய்றீங்க! நான் அப்புறம் இன்பாகிட்ட கம்ப்ளைண்ட் செஞ்சிடுவேன்” என்றாள்.

“பார்ரா‌ கேட்டதே இன்பா தான்னு சொல்றேன். அவர்கிட்டயே புகார் சொல்லுவாளாமே” என்று மேலும் அவளை கேலி செய்ய, இன்பா தன்னிடம் கூறியதை உரைத்தான்‌ பாலாஜி.

அன்னத்தினால் நம்ப முடியவில்லை. அப்படி ஆண் பெண் நட்பை தவறாக சந்தேகிக்கும் ஆளாய் இன்பாவை அவளால் நினைத்து பார்க்க முடியவில்லை.

“அவர் கண்டிப்பாக வேற ஏதாவது காரணத்துக்காக தான்‌ சொல்லிருப்பாரு. உங்களை மாதிரி ஜோடி சேர்ந்து பேசுற ஆளு அவர் இல்லை” என்று இதழை சுழித்து பழிப்பு காட்டினாள்‌.

அவளின் சிறுப்பிள்ளைத்தனமான செயலில் சிரித்து விட்டு தனது இருக்கைக்கு சென்று விட்டான் பாலாஜி.

அன்னத்துடன் இரவுணவு உண்ணச் சென்ற மோகன், “இன்பா உன்னை ரொம்ப நோட் செய்ற மாதிரி தோணுதே” என்றான்.

“இதுல நோட் செய்ய என்ன இருக்கு?” என்று அன்னம் கேட்க,

“இல்ல என் கூட மட்டுமே நைட் ஷிப்ட் வர்றனு நோட் செஞ்சிருக்காரே! அதை சொன்னேன்” என்றான் மோகன்.

“மேனேஜர்னா இதெல்லாம் பார்க்க தானே செய்வாங்க” என்றாள் அன்னம்.

ஆமாம் என்றவன் அதற்கு மேல் அதனை பற்றி ஏதும் பேசவில்லை. ஆனால் அவனின் மூளையில் இன்பா ஏன் அன்னத்தின் மீது அதீத அக்கறைக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

அன்றைய வாரயிறுதியில் அன்னத்தின் வீட்டிற்கு சென்றான் மோகன்.

ருத்ரன் மாமாவிடம் இவனை அறிமுகம் செய்து வைத்தாள்.

மோகனிடம் சிறிது நேரம் பேசிய ருத்ரன், செண்பாக்காவிடம் மோகனுக்கு பழச்சாறு அளிக்குமாறு உரைத்தவர், அன்னத்தின் அறை நோக்கி சென்றார்.

“இரண்டு பேரும் எங்கெல்லாம் போக போறீங்க?” எனக் கேட்டார் ருத்ரன்.

“அதான் சொன்னேனே மாமா! சிவாவோட டேன்ஸ் ஸ்கூலுக்கு போக போறோம். எனக்கு டேன்ஸ் கத்துக்கனும்னு ரொம்ப நாள் ஆசை! சும்மா வீக்கெண்ட் மட்டும் பரதநாட்டியம் தான் கத்துக்க போறேன் மாமா! நேத்து கூட சொன்னேனே மாமா! மறந்துட்டீங்களா?” எனக் கேட்டாள்.

“அது ஞாபகம் இருக்கு! டேன்ஸ் ஸ்கூலுக்கு போன பிறகு எங்கெல்லாம் போக போறீங்க?” எனக் கேட்டார்.

“வேறெங்கேயும் போகுற பிளான் இல்லை மாமா. இதுவே சிவாவை பார்க்க போறனால தான் மோகனை வர சொன்னேன். நான் இங்க ஒரு பையன் கூட ஊரு சுத்துறேன்னு அங்க ஆச்சிக்கு தெரிஞ்சிது என்னை சூப் ஆக்கிடாத” என்று சிரித்தாள்.

அவளின் சிரிப்புடன் தானும் இணைந்து சிரித்தவராய், “சரி அப்ப நானும் வரேன். சிவாவை பார்த்த மாதிரி இருக்கும்! அப்படியே டான்ஸ் ஸ்கூல் எப்படி இருக்குனு பார்த்தா எனக்கு திருப்தியாகிடும்” என்றார்.

“வாங்க மாமா! அவன் வண்டியை இங்க விட சொல்லிட்டு நம்ம காருல போய்டலாம்” என்றாள் அன்னம்.

மகிழுந்தை ருத்ரன் இயக்க, மூவருமாக சிவாவின் நடனப் பள்ளியை நோக்கி சென்றனர்.

“அப்புறம் மோகன் உன் சொந்த ஊரே சென்னை தானாப்பா? குடும்பத்துல எத்தனை பேரு?” அவனிடம் பேசியப்படி வண்டியை ஓட்டினார்.

“இல்ல அங்கிள். சொந்த ஊரு திண்டுக்கல். இங்க ஃப்ரண்ட்ஸ்ஸோட ரூம் எடுத்து தங்கிருக்கேன். அப்பா அம்மா ஒரு தம்பி அவ்ளோ தான். தம்பி மதுரை காலேஜ்ல படிச்சிட்டு இருக்கான்” என்றான்.

“வேலைக்கு சேர்ந்து எவ்ளோ வருஷமாகுதுப்பா?”

“ஒரு வருஷம் ஆக போகுது அங்கிள்” என்றான்.

“நீங்க எங்க வேலை பார்த்தீங்க அங்கிள்? நீங்க சென்ட்ரல் கவர்மெண்ட் வேலையில் இருந்ததாக அன்னம் சொல்லிருக்கா” என்றவன் கேட்க, அவரும் அவனின் கேள்விகளுக்கு பதிலளித்த வண்ணம் வந்தார்.

மோகனின் மீது நல்ல அபிப்ராயம் வந்திருந்தது அவருக்கு.

ஆருத்ரன் நடனப் பள்ளி என்றிருந்த பேனரை பார்த்தவாறு மகிழுந்திலிருந்து இறங்கினாள் அன்னம்.

“மோகன், சிவா இருப்பாரு தானே! அவர்கிட்ட சொல்லாம கொள்ளாம வந்திருக்கோம். நம்மளை பார்த்ததும் ஷாக் ஆவாரா?” என்று அவனிடம் பேசியவாறு வாயிலை நோக்கி நடந்து சென்றாள்.

மூவருமாக உள்ளே நுழைந்த சமயம், “ஜஸ்ட் கெட் அவுட் ஆஃப் மை சைட் ஆரா (என் கண்ணு முன்னாடி நிக்காம போய்டு ஆரா)” என்ற சிவாவின் கர்ஜனையான குரலே இவர்களை வரவேற்றது.

அழகிய அன்னமே 12

வரவேற்பறையை தாண்டி உள்ளே இருந்த நடனப்பயிற்சி கூடத்திலிருந்து இவனது குரல் தெளிவாய் இவர்களின் செவியை தீண்டியது.

மூவரும் வரவேற்பறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டனர்.

“காம் டவுன் சிவாண்ணா” என்றொரு பெண் குரலும் இவர்களின் செவியினை தீண்ட,

ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுத்து வந்து வாசலிற்கு வெளியே தள்ளி கொண்டு போய் நிறுத்தினான் சிவா.

அவனின் பின்னே பத்து பதினைந்து பேர் நடையும் ஓட்டமுமாய் வந்தனர். அனைவரும் அங்கு நடனம் பயின்று கொண்டிருந்தவர்கள் என்று புரிந்தது.

சிவாவின் ருத்ர முகத்தை ருத்ரனுமே அதிர்ச்சியும் பயமும் கலந்து தான் பார்வையிட்டார். அன்னம் பயத்தில் உறைந்து போய் நின்றிருந்தாள்.

அவன்‌ வெளியே நிறுத்திய பெண்ணின் முகத்தில் துளியும் அழுகையோ கண்ணீரோ இருக்கவே இல்லை. அதில் தெரிந்தது எல்லாம் ஏளன‌ புன்னகையும் வஞ்சக சிரிப்பும்‌ மட்டுமே!

அந்த பெண் அங்கிருந்து நகர்ந்ததும், சிவா திரும்பி நின்று அனைவரையும் பார்த்த பார்வையில், பயிற்சி கூடத்திற்குள் சென்றனர் அனைவரும்‌. சிவாவின் அருகே அவனின் முழங்கையை பற்றியவாறு, “காம் டவுன் சிவாண்ணா” என்று இன்னுமே அவனை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த அந்த பெண்ணை முன்பே எங்கோ பார்த்த நினைவு தோன்றியது அன்னத்திற்கு.

அன்று சிவா கையில் ஏந்தியவாறு கேண்டினிற்குள் தூக்கி வந்த பெண் தான் அவள் என நினைவடுக்கில் இருந்து தோண்டி எடுத்தாள் அன்னம்.

“நாம போய்டலாம் மாமா!” ருத்ரனின் கையை பிடித்தவாறு அன்னம் அவரிடம் உரைக்க,

அன்னத்தின் குரல் அவனது காதில் விழுந்த நொடி அவர்கள் நின்றிருந்த இடத்தினை பார்த்தவனின் கோப முகம் அப்படியே சாந்தமாய் மாறிப்போக,

“ஹே மோகன்! வெள்… அன்னம்! எப்ப வந்தீங்க” என சிரித்த முகமாய் கேட்டவாறு அவர்களின் அருகே வந்தான்.

‘யப்பாஆஆ என்னா ஆக்ட்டிங்கு” மிரண்ட விழிகள் மேலும் பெரிதாக மனதினுள் கூறிக் கொண்டவளாய் அவனை அதே மிரண்டப்பார்வையை தான் பார்த்து வைத்தாள் அன்னம்.

மோகன் மற்றும் அன்னம் இருவருமே அவனின் கேள்விக்கு பதிலளிக்காது பார்த்திருக்க,

“இவங்க.. இவங்க யாரு?” என்று ருத்ரனை பார்த்தவாறு கேட்டான்.

“ஹாய் ஐம் ருத்ரன்! அன்னத்தோட மாமா” என்று தன்னை தானே அறிமுகப்படுத்தி கொண்டவர், “எனக்கு இப்ப ஒரு அர்ஜன்ட் வேலை வந்திருக்கு! இன்னொரு நாள் வர்றோம்” என்றார்.

“என்ன வந்ததும் கிளம்புறேன்னு சொல்றீங்க! இருங்க! ஒரு ஜூஸ்ஸாவது குடிச்சிட்டு போங்க” என்றான் சிவா.

இல்லை என அவர் மறுக்கும் முன்னமே, தன்னை இத்தனை நேரமாக சமாதானம் செய்துக் கொண்டிருந்த அந்த பெண்ணை நோக்கி, “அஞ்சலி இவங்களுக்கு ஜூஸ் கொண்டு வர சொல்லு” என்றவன், “ஒரு ஃபைவ் மினிட்ஸ்! வாங்க” என்று தனது அலுவலக அறைக்குள் அவர்களை அழைத்து சென்றான்.

எப்பொழுது இவனை கண்டாலும் இடைவிடாமல் பேசும் இருவரும் ஒரு வார்த்தையும் பேசாமல் அமைதியாக இருப்பதை கண்டவன், “என்ன எதுவும் பேச மாட்டேங்கிறீங்க? என்ன சொல்லாம கொள்ளாம திடீர் விசிட் இங்க” எனக் கேட்டான்.

சிவாவிற்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவே அவனிடம் சொல்லாமல் இங்கு சேர வந்திருந்தாள்‌. மோகன் அதை பற்றி கூற வாயை திறந்த சமயம், அவனை தடுக்கும் விதமாய், “இல்ல ஒன்னுமில்ல சிவா சார்! உங்களை பார்க்கலாம்னு தான் வந்தோம்! நீங்க பிசியா இருக்கிற மாதிரி இருந்துச்சு. அதான் கிளம்பலாம்னு நினைச்சோம்”

ருத்ரன் கூறிக் கொண்டிருக்கும் போதே இவர்களுக்கான பழச்சாறு வர, அதனை வாங்கி அருந்தினர்.

இன்றைய நிகழ்வை கண்டு பயந்து, தன்னிடம் வந்த காரணத்தை உரைக்க மறுக்கின்றனர் என்று புரிந்தது அவனுக்கு.

அதன் பிறகு அவர்களிடம் அவன் ஏதும் கேட்கவில்லை. மோகன் தான் சிவாவிடம் அவன் தற்பொழுது நடித்து கொண்டிருக்கும் படங்களை பற்றி கேட்டறிந்து கொண்டான்.

“சீரியலை விட்டு போனது வேறொரு படத்துக்காக மோகன். அதோட ஷூட்டிங் இன்னும் நடந்திட்டு தான் இருக்கு. இப்ப ரிலீஸான படத்துல நான் ரொம்பவே குறைவான சீன் தானே வரேன்! அதனால சீரியல்ல நடிக்கும் போதே இந்த ஷூட்டிங்கும் போனேன். ஆக்சுவலி இது இவ்ளோ ஹிட் ஆகும்னு எதிர்பார்க்கலை‌” என்றான் சிவா.

அதன் பிறகு சிறிது நேரம் ருத்ரனிடம் அவரின் தொழில் மற்றும் குடும்பம், அன்னத்தினுடனான அவரின் உறவு, அன்னத்தின் குடும்பம் என அனைத்தையும் பேசினான்.

மூவரும் கிளம்புவதாக கூறி எழுந்து கொள்ள, அன்னம் தன்னிடம் பேசாது மௌனமாய் கிளம்புவது அவனின் நெஞ்சை வருத்தியது. அவளை பிடிக்கும் என்ற நிலையில் மட்டும் இத்தனை நாள் இருந்தவனுக்கு, தன்னை அவள் இத்தனை தூரம் பாதிக்கிறாளா என்ற ஆச்சரியமும் அவன் மனத்தினை சூழ்ந்தது‌.

“அன்னம் நீ சொன்னதால தான் இப்ப ஒரு டிவி ஷோ சைன் செஞ்சிருக்கேன்” அவளிடம் பேசுவதற்காகவே கூறினாலும், அவளால் தான் அதனை ஏற்றான் என்பதும் உண்மையே! அதனை அவளுக்கு தெரியப்படுத்த எண்ணினான். இச்சூழலை அதற்கு பயன்படுத்திக் கொண்டான்.

‘நானா?’ விழிகளில் கேள்வியுடன் அன்னம் அவனை பார்த்து வைக்க,

“அந்த சீரியல் விட்டு போறேன்னு தெரிஞ்சதும் சொன்னியே! எப்பவும் மக்கள் பார்த்துட்டே இருக்க இடத்துலே இயங்கிட்டு இருக்கனும்னு. அப்பவே ஏதாவது சின்னத்திரை ஷோ வந்தா அக்சப்ட் செய்யனும்னு நினைச்சேன்” என்றான்.

ருத்ரன் ஆச்சரியமும் சந்தேகமுமாய் பார்த்தார் அவனை. ‘கண்டிப்பா அன்னத்தை இங்க டான்ஸ் கத்துக்க அனுப்ப கூடாது’ மனதோடு எண்ணிக் கொண்டார்.

“சூப்பர்! ஆல் த பெஸ்ட் சிவா” மென்னகையுடன் உரைத்தாள்‌ அன்னம்.

அந்த புன்னகையும் வாழ்த்தும் தான் இத்தனை நேரமாய் அல்லாடி கொண்டிருந்த அவனின் மனத்தை இதமாக்கியது.

நிம்மதி பெருமூச்சுடன் அனைவருக்கும் விடைக்கொடுத்து அனுப்பினான்.

வெளியே ருத்ரனின் காரில் அமர்ந்ததும், “பார்ரா சிவாண்ணாக்கே அட்வைஸ் செஞ்சிருக்கா இந்த அன்னம் பொண்ணு” என்று கிண்டல் செய்தான் மோகன்.

“அட நான் அட்வைஸ் மாதிரிலாம் செய்யலை. சும்மா பேச்சு வாக்குல சொன்னதை சீரியஸா எடுத்து செஞ்சிருக்காரேனு‌ ஆச்சரியம் தான் எனக்கும்” என்றாள்.

“அண்ணா எப்பவுமே அப்படி தான்! ரொம்ப நல்ல டைப்” என்று சிவா புகழ் அவன் பாட ஆரம்பிக்கவும்,

“அப்படிப்பட்ட நல்ல அண்ணன் பொம்பளை பிள்ளைக்கிட்ட இப்படி தான் நடந்துப்பாரா?” எனக் கேட்டார் ருத்ரன்.

“எனக்கும் அதான் இன்னிக்கு அவர்கிட்ட பேசவே பிடிக்கலை மாமா” என்றாள் அன்னம்.

“என்ன அன்னம்! நீயே இப்படி சொல்ற! எத்தனை நாள் அவர்கிட்ட பேசிருக்க! என்னிக்காவது கண்ணியக் குறைவா நடந்திருக்காரா என்ன? இன்னிக்கு அவரோட சூழ்நிலை என்னவோ” என்று சிவாவுக்காக வரித்துக் கட்டி கொண்டு மோகன் பேச,

“என்ன இருந்தாலும் மீடியா பெர்சனை ஒதுக்கி வச்சி பழகுவது தான் நமக்கு நல்லது மோகன்! வெளில தெரிவது ஒன்னு உள்ளே அவங்க வாழ்க்கை வேற ஒன்னா தான் இருக்கும்! ரொம்ப நெருங்கி பழகாதீங்கனு தான் நான் சொல்லுவேன்” என்று ருத்ரன் அறிவுரை வழங்க, மோகனின் முகம் சுருங்கிப் போனது.

அவனின் ஆதர்ச நடிகரை அல்லவா அவர் குறை கூறுகிறார்.

“சிவாண்ணா எது செஞ்சாலும் காரணம் இருக்கும் அங்கிள். அவரை பத்தி எந்தளவுக்கு உங்களுக்கு தெரியும்னு தெரியலை. ரொம்ப கஷ்டப்பட்ட கிராமத்து குடும்பத்துலருந்து வந்தவரு‌! அவரு ஒரு பொண்ணுக்கிட்ட இப்படி நடந்துக்கிறாருனா காரணம் இல்லாமலா இருக்கும். சின்ன வயசுல டான்ஸ் போட்டில கலந்துக்கிட்டு அதுல வின் பண்ணி நிறைய போராடி நான் சின்னத்திரைல அவருக்குனு ஒரு இடத்தை பிடிச்சாரு! நம்மக்கிட்டயே எந்தவிதமான அலட்டலும் இல்லாம எவ்ளோ சகஜமா பேசினாரு” என்றான் மோகன்.

“அப்ப நல்ல உழைப்பாளினு‌ சொல்லு” என்ற ருத்ரன், “நீங்களும் இந்த மாதிரி விடாமுயற்சியோட உழைச்சி முன்னேறுவதற்கு அவரை ரோல் மாடலா எடுத்துக்கனுமே தவிர, அவருக்காக உங்களோட பணத்தையும் நேரத்தையும் ரொம்ப அதிகமாக செலவழிச்சி விரயம் செய்யாதீங்க. அவருமே நீங்க வாழ்க்கைல முன்னேறுவதை தான் எதிர்பார்ப்பாரு” என்றார்.

“ஆமா மாமா! நான் எப்ப பேசினாலும் என்னோட வேலை ஃப்யூச்சர் பிளான்ஸ்னு அதை பத்தி கண்டிப்பா கேப்பாரு” என்றாள் அன்னம்.

“அன்னம் பீச்சுக்கு போகலாமா? நீ சென்னை வந்ததுலருந்து போனது இல்லைல” எனக் கேட்டார்‌ ருத்ரன்.

“ஹை பீச்சுக்கா? போகலாம்! போகலாம் மாமா” மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் உரைத்தாள் அன்னம்.

“மோகன் உனக்கு எதுவும் வேலை இல்லையே! உனக்கு ஓகே தானே” என‌ ருத்ரன் கேட்க, அவனும் உடன் வருவதாக சம்மதித்தான்.

அன்று அன்னத்தின் தாய், தந்தை, ஆச்சி ஆகிய அனைவரிடமும் பேசிய மோகன், அந்த வீட்டில் ஒருவராகவே மாறி போனான்.

—-

மறுவாரம் மோகனும் அன்னமும் இரவு ஷிப்ட்டில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

இரவு ஒன்பது மணியளவில் அலுவலகத்திற்குள் வந்தவள், தான் பணி செய்யும் கட்டிடத்தின் இரண்டாம் தளத்திற்கு செல்வதற்காக மின் தூக்கியின் உள்ளே சென்றாள். கதவு தானாக சாற்றிக் கொண்டது. சில நிமிடங்களில் மின்தூக்கி கதவு திறக்க, இரண்டாம் தளத்திற்கு வந்ததாக நினைத்து அவள் வெளியே வர, மின் தூக்கி அதே தரை தளத்தில் நின்று கொண்டிருந்தது.

“லிஃப்ட் ஒரு வேளை வேலை செய்யலையோ” என்றெண்ணியவாறு மீண்டுமாய் உள்ளே சென்று இரண்டாம் தளத்தின் எண்ணை அழுத்த, மின் தூக்கி குலுங்கியவாறு நகரவும் தான், முதல் தடவை தான் தளத்தின் எண்ணை அழுத்தாமலேயே நின்றது நினைவுக்கு வந்தது அவளுக்கு.

தன்னை தானே திட்டிக் கொண்டவளாய், இரண்டாம் தளத்தில் இறங்கி ஓய்வறைக்கு செல்ல, அன்று மோகன் கூறிய எமெர்ஜென்சி எக்சிட் வழியில் யாரோ நடமாடுவது அந்த கண்ணாடி கதவில் நிழலாய் தெரிந்தது.

கண்களை தேய்த்து விட்டு மீண்டுமாய் அவள் பார்க்க, இப்பொழுது அங்கு எந்த நிழலும் தென்படாது போக, ‘அன்னம் ஓவர் இமேஜினேஷன் உடம்புக்கு ஆகாது’ தன்னை தானே திட்டிக் கொண்டவளாய் ஓய்வறைக்குள் சென்றாள்.

அன்று பாலாஜி கூறியது போலவே யாரோ அவளிருந்த கழிவறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. “யாரு?” என் உடனே அவள் கேட்க, மறுபுறம் பதிலில்லாது போக, அவசரமாக வெளியே வந்து பார்க்க, அந்த ஓய்வறை முழுவதுமே எவரும் இல்லை.

அன்னத்தின் நெஞ்சம் படபடவென அடித்துக் கொள்ள, ‘சும்மா கண்டதையும் கற்பனை செய்யாம ஒழுங்கா கிளம்பு’ தனக்கு தானே கூறிக் கொண்டவளாய் கண்ணாடியில் தனது முகத்தை பார்த்து ஒப்புமை செய்தவளுக்கு ஏனோ மனதின் பயம் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போனது.

‘ம்ஹூம் இதுக்கு மேல இங்க இருக்க வேண்டாம்’ அவசரமாக அலங்கார பொருட்கள் அனைத்தையும் பையினுள் திணித்தவளாய் ஓய்வறை கதவை திறந்து வெளியே வர, ‘ஆஆஆஆஆ’ என்ற அலறலுடன் அவளின் முகத்திற்கு நேரே ஒரு முகம் வந்து போக, இவளின் பயத்தில் அலறியவளாய் மயங்கி சரிந்தாள்.

— தொடரும்