அன்பின் ஆழம் – 37.3

தொடர்ந்து வந்த நாட்களில், ஹரி மேலும் ஒரு புத்தகம் வெளியிட, அதன் முதல் பிரதி தயாரானதும், ஸ்ரீராம், அவர்களை அழைத்தார். காதலிக்கும் போதே, மீரா ஒரு மிதப்பில் இருப்பதை பார்த்து பழகியவருக்கு, இன்று அவள் குறும்பு பேச்சில் வியப்பே இல்லை. பிரதியை மீராவிடம் கொடுக்க, இருவரும் அதை தாலாட்டி சீராட்டினர். ஹரியும் அவளுடன் சேர்ந்து புத்தகத்தை கொஞ்சுவதை பார்த்தவருக்கு தான் சிரிப்பு வந்தது. திருமணமான ஜோரென மௌனமாய் காத்திருந்தார்.

 மற்ற கதைகள், பாதி நிஜம், பாதி கலந்ததாக இருக்கும். ஆனால், இதில் ஹரி எழுதிய ஒவ்வொன்றும், உண்மை நிகழ்வு. எழுத்து பயணத்திற்கு, தன் நண்பர்கள், உறவாய், உயிராய் மாறி அவன் கனவை நிஜமாக்கிய பசுமையான பாதையின் தொகுப்பு.

‘அன்பின் ஆழம்’ தலைப்பை வருடியவள் விரல்கள், தன்னவனை கோர்த்தது. முன் அட்டையில், ஐந்து நண்பர்கள் நீர்வீழ்ச்சியில் நனைந்து மகிழ்வதை போல ஒரு ஓவியம். நட்பிற்கு இலக்கணமாய் இருந்த அந்த ஐவரின் ஸ்பரிஸத்தில், திருப்தி அடைந்த நீர், வற்றாது ஓடும், நதியுடன் சங்கமிப்பது போல ஒரு ஓவியம்; வாசுகி வரைந்த ஓவியம்; முதல் பக்கத்தில், ‘அப்பாவிற்கு சமர்ப்பணம்’ என்ற எழுத்துக்கள்; பக்கங்களை புரட்ட, ஆங்காங்கே தென்பட்ட நண்பர்களின் பெயர்கள்; கடைசி பக்கத்தில் சிவப்பு சட்டை அணிந்த, தன்னவனின் நிழற்படம்;

இருக்கும் இடம் மறந்து இருவரும் சிந்தனையில் மிதந்தனர்.

வெகு நேரமாக அமைதியாய் இருந்தவர், தொண்டையை செரும, அதில் இருவரும் சுயத்திற்கு வந்தார்கள். ஹரி, அந்த புத்தகம், தங்களுக்கு எவ்வளவு பொக்கிஷம் என்று விளக்க, ஸ்ரீராமும் அதை புரிந்து கொண்டார். ஊரில் நூலகம் திறக்கும் தன் எண்ணத்தை தெரிவித்தவன், அந்த தேதிக்குள், இதன் பிரதிகள் தயாரானால் பேருதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டான். அவரும், கட்டாயம், வேண்டியதை செய்து கொடுப்பதாக சொன்னார். இருவரும் நன்றி கூறி அங்கிருந்து புறப்பட்டனர்.

சன்னி அருகில் வந்தவள், “எழுத்தாளரே! இது தானே, நீங்க எனக்கு எழுதின புத்தகம்?” வினவினாள்.

அவன் இல்லை என்று மறுப்பு சொல்ல, இதன் தலைப்பும், ‘அ’, ‘ஆ’ வில் தானே தொடங்குகிறது என்று தர்க்கம் செய்தாள். அதற்கும் அவள் தலையில் செல்லமாக குட்டியவன்,

“இந்த ரெண்டு வார்த்தை மட்டும் தான் ‘அ’, ‘ஆ’ ல இருக்கா… உனக்கே உனக்குன்னு பொருத்தமான வார்த்தைய யோசி டி” என்றான்.

‘ம்ம்…எனக்கே எனக்கு…. ம்ம்….” தீவிரமாக யோசித்தவள், “அழகியிடம் ஆசைக்கொண்டேன்!” என்றாள்.

“ச்சீ போடி… வா கிளம்பலாம்” என்று சன்னியை உயிர்ப்பித்தான்.

“உங்க மிட்னைட் மசாலா தலைப்புகளோட, இது எவ்வளவோ நல்லா இருக்கு எழுத்தாளரே!” உதட்டை சுழித்தவள், சன்னியில் ஏறினாள். வாடிய அவள் முகத்தை கண்ணாடி வழி பார்த்து ரசித்தே அவனும் வண்டியை செலுத்தினான்.

இவர்கள் கண்ணாம்பூச்சி ஆட்டம், இப்படியே தொடர, திறப்பு விழா நாளும் வந்தது. விடுமுறை நாட்களில், பல முறை ஊருக்கு சென்று வந்த ஹரி, தேவையான பொருட்களை அவ்வப்போது அங்கு வைத்துவிட்டு வந்தான். காலையில் காபி தயாரித்து கொண்டிருக்கும் வாசுகியோடு அரட்டை அடித்து கொண்டிருந்தாள் மீரா. ஹரி அந்த பக்கம் வர, அவனை தடுத்து நிறுத்தி,

“ஹரி! அத்த ஏதோ உன்கிட்ட கேட்கணுமாம்!” அவனை வம்பிழுத்தாள்.

வாசுகி, அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரியாமல் தடுமாற, மீராவே மேலும் பேசினாள்.

“கல்யாணமாகி மூணு மாசமாச்சு… இன்னும் எதுவும் விசேஷம் இல்லையான்னு கேக்குறாங்க டா!” அப்பாவியாக முகம் வைத்து பேச, அதை கேட்ட வாசுகி, திடுக்கிட்டாள்.

“அய்யோ ஹரி! நான் அப்படி எதுவுமே கேட்கல டா… இவ பொய் சொல்றா!” உண்மையிலேயே, வாசுகி பதற,

தன்னவளின் குறும்புத்தனத்தை பற்றி நன்கு அறிந்தவன், நிதானமாக சிரித்தான்.

“தலைப்ப சொல்லு, உன்ன காப்பத்தறேன்.” மீரா அவன் காதில் கிசுகிசுக்க,

“தேவையில்ல போ டி!” சொல்லி, அம்மாவிடம் பேசினான்.

“பயப்படாத மா! நீ அப்படியெல்லாம் பேசி இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும்….அப்படியே நீ கேட்டு இருந்தாலும் தப்பு இல்ல…” மேலும் புதிர் போட்டவன், மீரா முகத்தை கையில் ஏந்தினான்.

“இங்க பாரு மா! இப்போ, நான் ஐலவ்யூ சொல்றப்ப, அவ கண்ண எப்படி சிமிட்டுவான்னு…” என்று சொன்னவன் செய்தும் காட்டினான்.

தனிமையில் சொல்லும் போதே படபடக்கும் இமைகள், இன்று அவன் வாசுகி முன்னால் சொல்ல, மின்னல் வேகத்தில் துடித்தது.

வாசுகி பக்கம் திரும்பியவன், “போதுமா மா!  பேசினாலே இவ இவ்வளவு வெட்க படறா…” என்று அவள் தலையில் தட்டி, “உன் மருமகளுக்கு வாய் தான் மா!” என்று மேலும் ஓட்டினான்.

அச்சமயம், வாசற்கதவு மணி ஒலித்தது. ஊருக்கு புறப்பட தயாராகி விட்டார்களா என்று வினவிக்கொண்டே அரவிந்தன் நுழைய,

“எல்லாம் தயார் பா! நல்ல சமயத்துல நீ வந்த!” என்று, ஒரு மார்க்கமாய் நடந்து கொள்ளும் ஜோடிகளிடமிருந்து தப்பித்து ஓடினாள் வாசுகி.

ஊருக்கு வந்ததும், வாசுகியை மணிமாறன் வீட்டில் விட்டுவிட்டு காலையில் அவளை அழைத்துகொள்வதாக சொன்னான் ஹரி. விவரங்கள் அறியாதவள், மனம் கடந்து தவித்தது. எல்லாம் நல்ல விஷயம் என்று உறுதி அளித்துவிட்டு புறப்பட்டனர் நண்பர்கள்.

அரவிந்தன் அடுத்த நாள் விழாவிற்கு, அருகில் உள்ள காப்பகத்திலிருந்து , திறப்பு விழாவிற்கு, சிறுவர்களை அழைத்து வருவதாக சொல்லி, தன் வீட்டிற்கு புறப்பட்டான். ஹரியும், மீராவும் நூலகமாய் மாறிய வீட்டில் விழாவிற்கு தேவையானவற்றை செய்வதாக சொல்லி புறப்பட்டனர்.

“அஞ்சலி மா!” தன்மீது தலை சாய்த்து படுத்திருப்பவளை மென்மையாக அழைத்தான்.

“ம்ம்…” என்றாள்.

“எந்த குழந்தைய  தத்தெடுத்துக்கலாம்… நாள் ஓடிட்டே இருக்கு!” மென்மையாக நினைவூட்டினான்.

“யாருமே வேண்டாம் பா!” அவள் சொல்ல, அதை கேட்டு திடுக்கிட்டவன், அவள் பக்கம் திரும்பி, “ஏன் மா…புதுசா வந்திருக்கிற வேற ஏதாவது குழந்தைய பார்க்கலாமா?” அக்கறையாய் வினவினான்.

“யாருமே வேண்டாம்னா… யாருமே வேண்டாம்னு அர்த்தம்!” அவள் திடமாய் சொல்ல, தன்னை போலவே சிந்திக்கிறாளோ என்று எண்ணி மகிழ்ந்தவன்,

“எனக்கும் அப்படி தான் தோணுது அஞ்சலி மா! நீ வருந்துவீயோன்னு நெனச்சு தான் என் விருப்பத்த இத்தன நாளா சொல்லல…” என்றான்.

அவன் பதிலை கேட்டு அதிர்ந்தவள், எழுந்து, “ஏன்..எதுக்காக வேண்டாம்னு சொல்றீங்க?” புருவங்கள் உயர்த்தி வினவினாள்.

“அது… நம்ம எல்லா குழந்தயோடையுமே சரிசமா பழகியிருக்கோம்… இப்போ ஒரு குழந்தைய மட்டும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து அன்பு செலுத்தினா, மற்ற குழந்தைங்களுக்கு பாரபட்சம் காட்டுறா மாதிரி தோணித்து… அதான், இப்படியே, கடைசி வரைக்கும் காப்பகத்துக்கு போய், அத்தனபேர் கிட்டையும், அன்பா பழகி நேசிக்கலாம்னு நெனச்சேன்!” அவன் விளக்கம் சொல்ல, கேட்டவள் கண்கள் வெள்ளத்தில் மூழ்கியது. ஜன்னலோரம் ஓடிப்போய் நின்றவள், தேம்பி தேம்பி அழுதாள்.

அதை கண்டு பதறியவன், அவள் பின்னால் ஓடினான். “அஞ்சலி மா! நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா…ப்ளீஸ் அழாத… உன் விருப்பம் தான், என் விருப்பமும் டி!” சமாதானம் செய்து கெஞ்சினான்.

அருகில் வந்தவன் மார்பில் புகுந்து, இன்னும் உரக்க அழுதாள். அரவிந்தன் பல முறை மன்னிப்பு கேட்டும், அவள் சமாதானமாகவில்லை. கால் மணி நேரம் இப்படியே நகர, கண்களை துடைத்துக்கொண்டவள்,

“நான் வேண்டாம்னு சொன்னதுக்கு, அது காரணம் இல்ல!” என்றாள்.

“வேற என்ன சொல்லு?” கன்னங்களை வருடி, அவன் கேட்க,

அவனை விழி உயர்த்தி பார்த்தவள், “உங்க அன்பு, எனக்கே எனக்கு மட்டும் தான் இருக்கணும்; அத என்னால, யார் கூடவும் பங்கு போட்டுக்க முடியாது!” சொன்னவள், தன்னவனை இறுக அணைத்து, “நமக்கு நடுவுல வர, அந்த காத்துக்கு கூட அனுமதி இல்ல!” என்றாள்.

அவள் பதிலை கேட்டவன் மெய்சிலிர்த்து போனான். அவள் முகத்தை நிமிர்த்தியவன்,

“உனக்கு என்ன அவ்வளவு பிடிக்குமா அஞ்சலி மா!” காதலாய் கேட்டான்.

“ம்ம்… நீங்க சொன்னா மாதிரியே நடக்குது… உங்களோட, இன்னும் அதிக நேரம் செலவிடணும்னு தோணுது… நான் ரொம்ப சுயநலவாதி ஆயிட்டேன்ல அரவிந்த் பா” கேட்டவளின் கண்கள் மீண்டும் பளபளத்தது.

கண்களை நுனிவிரலால் துடைத்துவிட்டவன், “ம்ஹூம்…உனக்கு என்ன அவ்வளவு பிடிச்சிருக்கு அஞ்சலி மா!” சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

காலத்திற்கும் காப்பகம் சென்று சேவை செய்யலாம் என்ற தெளிந்த மனதோடு, தன்னவன் மார்பில் நிம்மதியாக விழி மூடி உறங்கினாள் அஞ்சலி.

“தூங்காம, இன்னும் என்ன டி பண்ணிட்டு இருக்க?” வினவிக்கொண்டே, மீரா அருகில் வந்தான் ஹரி.

“நாளைக்கு, விழாவிற்கு வரவங்களுக்கு, இந்த புத்தகத்த பரிசா கொடுக்க போறோம்ல… அதான் எல்லாம் நேர்த்தியா, பேக் செய்துட்டு இருக்கேன்!” வேலையில் கவனம் சிதறாமல் பதில் சொன்னாள் மீரா.

காலையில் அவள், அம்மா எதிரே செய்த குறும்பு நினைவுக்கு வர, “இன்னும் ஒரு தடவ முயற்சி செஞ்சு பார்க்கலாமா….” குறும்பாய் கேட்க, அவள் முகத்தை கூட திருப்பவில்லை.

அவள் முகத்தை வலிய திருப்பியவன், “என்ன பாரு டி… சொல்லவா?” என்றான்.

அவன் விளையாட்டில் சலித்து போனவள், “ஒண்ணும் வேண்டாம் டா…என்ன வேலை செய்ய விடு” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

எதிர்ப்பார்த்த மாதிரி, அவள் கோபம் கொள்ள, அவனும் அங்கிருந்து நகர்ந்தான். இரண்டே நிமிடத்தில், அவளருகே வந்து மண்டியிட்டு அமர்ந்தவன், “இந்தா இதையும் சேர்த்து பேக் பண்ணு… நாளைக்கு விழாவுல என் ராஜகுமாரிக்கு கொடுக்கணும்” அலட்டல் இல்லாமல் சொல்லி நகர்ந்தான்.

அவள் கையில் அவன் நுழைத்தது, அவன், அவளுக்காக மட்டுமே, தன் கைப்பட எழுதின காதல் காவியம். ஐநூறு பக்கங்கள் கொண்டிருந்த அந்த புத்தகத்தின் தலைப்பை கண்டவளின் கண்கள் குளமானது.

“அன்புடைய ஆதிக்கமே!” உரக்க படித்தவள், தன்னவன் அருகில் பாய்ந்தோடி கட்டி அணைத்தாள்.

“பிடிச்சிருக்கா!” அவள் தலையை மென்மையாக வருடி கேட்டான்.

“ம்ம்….” மென்மையாக சொன்னவள், “இப்போ மட்டும் எதுக்காக கொடுத்தீங்க எழுத்தாளரே!” விழிகள் உயர்த்தி கேட்டாள்.

“நாளைக்கு விழாவுல கொடுக்கலாம்னு தான் நெனச்சேன். ஆனா, நீ இப்படி எல்லார் முன்னாடியும் அழுவ… அப்புறம் அரவிந்தன் உன்ன ஓட்டுவான்… உனக்கு கோபம் வரும்…நீ என்ன திட்டுவ… எதுக்கு இதெல்லாம்னு நெனச்சேன்…” நடக்க கூடியதை எல்லாம் சொல்ல, அதை கேட்டவள் வாய்விட்டு சிரித்தாள்.

கண்களை துடைத்து கொண்டு, மறுபடியும் புத்தகத்தை புரட்டியவள், “அது என்ன, பாகம் 1, அப்படின்னு எழுதியிருக்க, “ கேட்டவள், கடைசி பக்கத்தை அலசினாள்.

“நான் தான் சொன்னேனே…இது ஒரு தொடர் கதைன்னு… நம்ம நூலகத்தோட ஒவ்வொரு ஆண்டு விழாவுக்கும், உனக்கு ஒரு பாகம் பரிசு கொடுப்பேன்.” என்றதும், அவள் இமைகள் படபடத்தது.

அதை கவனித்தவன், “பார்க்கலாம்… இந்த கண்சிமிட்டலுக்கு, எந்த பாகத்துல விடிவுகாலம் வருதுன்னு…” என்று சொல்ல,

“அது ஈரேழு ஜென்மத்திற்கும் தொடரும் எழுத்தாளரே… ஏன்னா, அது சொல்லும், உங்க கண்களின் காந்த சக்தி செய்யற மாயம்!” உண்மையை சொல்லி, தன்னவன் தோளில் சாய்ந்தாள்.

அடுத்த நாள் விழா தொடங்க தயார் நிலையில் இருந்தது. வரதன், நிர்மலா உட்பட, அனைத்து நண்பர்களும் விழாவிற்கு வந்திருந்தனர். ஸ்ரீராமும், மனைவி, குழந்தையுடன் வந்திருந்தார். ஹரி, ஊர் தலைவர், பள்ளி நிர்வாகிகள், மற்றும், முக்கியப்பட்ட ஒரு சிலரையும் கூட அழைத்திருந்தான். வாசுகி மட்டும் தான் வர வேண்டி இருந்தது.

 மணிமாறன், வாசுகியை அழைத்து வந்தார். அம்மாவின், கண்களை, தன் கரங்களால் மென்மையாக மூடியவன், அவளை, நூலகத்தின் பெயர் பலகையை பார்க்க ஏதுவாய் நிறுத்தினான். கண் திறந்து பார்த்தவளின் கண்கள் பிரமித்து போனது.

“வள்ளுவன் நூலகம்!” பெயர் பலகையை பார்த்தவள் மனதில் ஆனந்தமும், பயமும் அலைமோதியது. பெயரை படித்த அடுத்த நொடியே, மகன், தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றிவிட்டான் என்று தெரிந்தது.

திருக்குறள் மீதி அதீத பற்று கொண்ட, தன் கணவர், அந்த வள்ளுவன் வாசுகியை போலவே, தன்னையும் அன்பாய் அழைத்த பல தருணங்கள், அவள் மனதில் எதிரொலித்தது. கணவர் ஆசையை, மகன் நிறைவேற்றியதை பற்றி, எண்ணி, அவள் நெகிழ்ந்தாலும், தற்போது அந்த வீட்டில் வாழ முடியாது என்ற கவலைகொண்டாள்.

“ரொம்ப சந்தோஷம் ஹரி! ஆனா, இனிமே நம்ம இந்த வீட்டுல வந்து இருக்க முடியாதுல்ல…” ஆதங்கத்துடன் கேட்டாள்.

“உள்ள வந்து பாருங்க அத்த!” சொன்னவள், அவளிடம், ரிப்பனை வெட்டி, குத்து விளக்கை ஏற்றச் சொன்னாள்.

பல படித்தவர்கள், சுமங்கலி பெண்கள் இருக்க, தன்னை அழைக்கின்றாளே என்று தயங்கியவள், அக்கம் பக்கம் சுற்றி பார்த்தாள். அருகில் சென்றால், அம்மா ஏதாவது சொல்லி, நழுவிவிடுவாள் என்று அறிந்த ஹரி, மீராவே அனைத்தையும் சமாளிக்கட்டும் என்று தள்ளி இருந்தான்.

“நானா மீரா… வேண்டாமே!” வாசுகி, அவள் காதில் கெஞ்ச,

“இது உங்க கணவர் ஆசை; உங்க மகன் உழைப்பு… நீங்க தான் திறந்து வெக்கணும்!” கராராய் சொன்னவள், “சீக்கிரம் அத்த… உள்ள போய் குலாப் ஜாமுன் சாப்பிடணும்…” சேர்த்து சொல்ல,

அவள் வெகுளிதனத்தை எண்ணி மென்மையாக சிரித்தவள், கணவரை மனதில் நினைத்து திறந்து வைத்தாள்.

அவர்களை தொடர்ந்து, மற்ற விருந்தினரும் உள்ளே வந்தனர். முற்றத்திலும், அதை சுற்றி இருந்த இடத்திலும் ஆங்காங்கே மேஜைகளும், நாற்காலிகளும் இருந்தன். சுவற்றில் இருந்த ஓவியங்கள் எதுவும் விலக்கப்படவில்லை. சுவற்றையொட்டி, அலமாரிகளில் நேர்த்தியாக அடுக்க பட்டிருந்த புத்தகங்கள் கண்ணை பறித்தது. நான்கு அறைகளுக்கும் மேல் இருந்த பெயர் பலகைகளை படித்தாள் வாசுகி. “அலுவலகம்”, “பராமறிப்பு அறை”,”வகுப்பு அறை”, “கணினி அறை”, படித்தவளுக்கு, இனி அங்கு வசிக்க முடியாது என்று புரிந்தது. மகன் ஆசையை மனதில் கொண்டவள், அதை வெளிக்காட்டாமல் இருந்தாள்.

ஹரி, அரவிந்தன், மற்றும் மணிமாறன், வந்தவர்களை கவனிக்க, மீரா மட்டும் வாசுகியின் எண்ணத்தை படித்தவள் போல, அவளை தனியே அழைத்துச் சென்றாள்.

அலாமாரிக்கு, பின்னால் இருந்த சமையல் அறைக்குள் நுழைய, மருமகள் இனிப்பு சாப்பிட வந்திருப்பதாக நினைத்தாள் வாசுகி. அவள் வியப்பிற்கு ஏற்ப, சமையல் அறையும், அதையொட்டி இருந்த பூஜை அறையும் அப்படியே இருந்தது.

ஒரு கிண்ணத்தில் இனிப்பு எடுத்துக்கொண்டவள், தன்னுடன் மாடிக்கு வரும் படி கூறினாள். சுழற் படிகளை ஒரு படி விட்டு, ஒரு படி தாவி ஏறியவள், மாடியில் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

“அத்த! நம்ம வீட்டுக்கு, எப்போ வேணும்னாலும் வந்துட்டு போலாம். இந்த ரெண்டு ரூம், நம்ம வந்தா தங்கிக்க, எல்லா வசதியும் செஞ்சிருக்கு. சமையல்கட்டுல இருக்கிற பின் வாசல உபயோகிச்சுக்கலாம். மற்றபடி, இது எப்பவுமே நம்ம வீடு!” என்று விளக்கினாள்.

மீராவின் பாசத்தில் விழுந்தவள், அவள் கன்னங்களை வருடி, முத்தமிட்டாள். மன நிறைவுடன் விழாவில் கலந்துகொள்ள வந்தாள்.

“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா…”

என தோழிகள், கடவுள் வாழ்த்து பாடி விழாவை செவ்வனே துவக்கிவைத்தனர். ஹரி, வந்தவர்களுக்கு வணக்கம் சொல்லி பேசத் தொடங்கினான். சிறப்பு விருந்தினர்களின் பெயரை குறிப்பிட்டு, அவர்களின் அருமை பெருமைகளையும் எடுத்துச் சொன்னான். வாசுகியையும், மீராவையும் அழைத்து அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

நூலகத்தின் சிறப்பு அம்சங்களை வந்தவர்கள் அனைவருக்கும் விளக்கி, தன் மாமன் மணிமாறன் தான் அனைத்தையும் நிர்வாகம் செய்வார் என்றும் அறிவித்தான்.

தன்னவளையும் மூன்று நண்பர்களையும் மையப்பகுதிக்கு அழைத்து, தன் எழுத்துப் பயணத்தின் தூண்கள் என்று அறிமுகம் செய்து வைத்து, அதையொட்டி எழுதிய புத்தகத்தை வந்தவர்கள் அனைவருக்கும் விநியோகித்தான். அஞ்சலி, ரமேஷ், மைதிலி பற்றியும் தனித்தனியாக விளக்கியவன், ஸ்ரீராமின் தன்னலமற்ற பாசத்தை பற்றியும் விளக்கினான்.

ஒரு மணி நேரத்தில் விழா செவ்வனே முடிய, அரவிந்தன், காப்பகத்தில் இருந்து, முப்பது குழந்தைகளை அழைத்து வந்தான். அவர்களுக்கு, புத்தகங்களை காட்டியும், கதை சொல்லியும், அரவிந்தனும், அஞ்சலியும் உற்சாகமாய் வலம் வந்தனர். சஹானா மட்டும், அஞ்சலியை விட்டு விலகவே வில்லை. அஞ்சலி கையில் வைத்திருந்த புத்தகத்தை பார்த்து, தனக்கு தெரிந்ததை, மழலையில் மொழிந்தாள்.

வீட்டுப் பெரியவர்களும், குழந்தைகளுடன் அன்பாய் பழக, ஹரி அந்த காப்பகத்தின் உரிமையாளரிடம், குழந்தைகளை அடிக்கடி அழைத்து வரும் படி கேட்டுக்கொண்டான். நண்பர்கள், மாதத்திற்கு ஒரு முறை வந்து, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டனர்.

தன் ஆசை ஒவ்வொன்றையும் தனதாக்கி பாடுப்படும் தன் நண்பர்களின் உற்சாகத்தை கண்டு நெகிழ்ந்தான் ஹரி. அவர்களின் நட்பை தந்த கடவுளுக்கு மனதார நன்றி கூறி பெருமூச்சுவிட்டான்.

“வா டா! சாப்பிடலாம்!” அரவிந்தன் அழைக்க, அவனுடன் கைக்கோர்த்து நடந்தான் ஹரி.

ஒரு மேஜையை சுற்றி, அரவிந்தன், அஞ்சலி, ஹரி, மீரா, நால்வரும் அமர்ந்தனர். ஓடி விளையாடும் குழந்தைகளையும், அளாவளாவிக் கொண்டிருந்த உறவுகளையும் பார்த்த வண்ணம், உணவை ருசித்தனர். அரவிந்தனும், மீராவும் மட்டும், இனிப்பு பதார்த்தங்களையே, உணவாய் அருந்திக் கொண்டிருந்தனர்.

“அங்க பாரு அரவிந்தா! அந்த ரெண்டு குழந்தைகளும், நம்மள மாதிரியே எப்படி இனிப்பு மட்டும் சாப்பிடுறாங்கன்னு…” கைநீட்டி காட்டினாள் மீரா. நால்வரும் அச்சிறுவர்களை உன்னிப்பாய் கவனித்தனர்.

ஐந்து நிமிடங்கள், அவர்களின் பேச்சையும், நடவடிக்கையும் கவனித்த அரவிந்தன், “இனிப்பு வேணும்னா, நம்மள மாதிரி சாப்பிடலாம்… ஆனா, அந்த பையன பாரு…எத்தன முறை அந்த பொண்ணுகிட்ட கொட்டு வாங்கிட்டு அமைதியா இருக்கான்…ஸோ… அவங்க கண்டிப்பா நீயும் ஹரியும் மாதிரி தான் டி!” என்றான்.

கேட்டவளுக்கு, தன்னவன் எழுதிய புத்தகத்தின் தலைப்பு உடனே நினைவுக்கு வந்தது. “எழுத்தாளரே! இத தான் பொருத்தமான தலைப்புன்னு சொன்னீங்களா!” ரகசியமாய் கேட்க,

“இப்போ தான் உனக்கு அது புரிஞ்சுதா…?” ஹரி குறும்பாய் திருப்பி கேட்க, கேட்ட வேகத்தில் அவனுக்கு உதையும் விழுந்தது.

 “பாரு! பாரு! சொன்ன உடனே நிரூபிக்கற!”, அரவிந்தன் கிண்டல் செய்தான்.

“அப்போ, அவங்க, எங்கள மாதிரியே எதிர்காலத்துல கல்யாணம் செய்துப்பாங்கன்னு சொல்றியா!” வினவினாள் மீரா.

“ஆம்’ என்று தலையசைத்தவனிடம். “இல்ல டா! எனக்கென்னமோ அவங்க நல்ல நண்பர்களா தான் இருப்பாங்கன்னு தோணுது!” தர்க்கம் செய்தாள் மீரா.

இவர்கள் வாதம் ஒரு முடிவே இல்லாமல் நீள, அதற்குள் சாப்பிட்டு முடித்து, கைக்கழுவிக் கொண்டு வந்த அஞ்சலி, அவர்களிடம் ஒரு சிறிய காகிதத்தை நீட்டினாள்.

“இந்தாங்க பிடிங்க! அந்த ரெண்டு குழந்தகளோட பெயரும் வயசும். இன்னும் இருபது வருஷத்துல, அவங்க கல்யாணம் செஞ்சிகிட்டாங்களா, இல்ல நண்பர்களாகவே இருந்தாங்களான்னு தெரிஞ்சிடும். நியாபகமா வந்து கேட்டு தெரிஞ்சுக்கோங்க! திடமாய் சொல்லி, அவர்கள் வாயை அடைத்தாள்.

வை இயற்றிய “நல்வழி” வெண்பாவுடன்

ங்கார ரூபனை உளமாற துதிக்க- உறவுகள்

ன்று சேர்ந்து மனதார வாழ்த்த

யன் கண்ட கனவும் நனவானது இன்று!

ற்றமும் இறக்கமும் நிறைந்த வாழ்வின்

ண்ணற்ற சவால்களை எதிர்க்கொள்ள

க்கம் தரும் புத்தகங்கள் மட்டுமே என்று, எழுத்தாளன்

ண்மையை உரக்கச் சொன்னான் இன்று!

கை குணம் கொண்டவள் அருகில் இருக்க

னி இவன் வாழ்வில் வெற்றி தான் என்றென்றும்-பாசத்தால்

திக்கம் செய்பவளின் கைக்கோர்த்து, வாழ்க்கை பாதையில் பயணிக்க

ச்சாணியாய் இருக்கும் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த

அன்பின் ஆழம்!