அன்பின் ஆழம் – 37.2

இரவு உணவு சாப்பிட்டு முடித்து, அனைவரும் உறங்க செல்ல, “ஹரி! உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் பா!” மெல்லமாக தொடங்கினார் வரதன்.

“சொல்லுங்க மாமா!” தன்மையாய் கேட்டு, அவர் எதிரே அமர்ந்தான் ஹரி. வரதன் குரலில் இருந்த கவலையை கவனித்த பெண்களும், அங்கே நின்றனர்.

“நீ தப்பா நினைக்கலேன்னா, நம்ம கம்பெனிய, என்னோட சேர்ந்து நிர்வாகம் செய்யறியா?” தாழ்ந்த குரலில் கேட்டு, தன் கடின உழைப்பால் உருவாகி, இன்று செழித்தோங்கும் தொழில், தன் தலைமுறையோடு முடிந்துவிடக்கூடாது என்ற தன் ஆதங்கத்தை கொட்டினார். மேலும், மீராவிற்கு அதை எடுத்து நடத்த, துளியும் விருப்பமில்லை என்பதை சுட்டிக்காட்ட, அவளும் மென்மையாய் தலையசைத்தாள்.

“உங்க உணர்வு, எனக்கு புரியுது மாமா!” தொடங்கியவன், “ஆனா, நான் மட்டும் இந்த விஷயத்துல, தனியா முடிவு எடுக்க முடியாது!” என்று, தன்னையே ஆழமாய் பார்த்துக் கொண்டிருக்கும் தாயை நோக்கினான்.

“நான் வங்கியில வேல செய்யணும்ன்றது, என் அம்மாவோட ஆசை… எழுதணும்ன்றது, மீராவோட ஆசை!” என்று, “அவங்க ரெண்டு பேரோட சம்மதமும் எனக்கு ரொம்ப முக்கியம்!” என்றான்.

மகன் தன் ஆசைக்கு முன்னுரிமை கொடுப்பதை எண்ணி நெகிழ்ந்தாள் வாசுகி. அவள் பதிலுக்காக, அனைவரும் காத்திருக்க, “உண்மை தான் ஹரி! நீ வங்கியில வேலை செய்யணும்னு நான் தான் சொன்னேன். அந்த மாதிரி வேலையில இருந்தா தான், உனக்கு பொருப்புணர்ச்சி வரும்… மாசம் நிரந்தரமான சம்பளம் வந்தா, அதுக்குள்ள வாழறது எப்படின்னு நீ தெளிவா திட்டமிடுவ…அப்படின்னு எல்லாம் நெனச்சு தான் டா!” சொல்லி பெருமூச்சுவிட்டவள், அருகில் இருக்கும் மீராவை தோள் சுற்றி அணைத்து, “ஆனா, நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பக்குவமா சிந்திச்சு முடிவெடுக்குறீங்க… படிச்சவங்க… உங்களுக்கு எது நல்லதோ, அதையே செய்யுங்க!” பெருந்தன்மையோடு பேசினாள்.

அதை கேட்டு மகிழ்ந்த வரதன், “மீரா! சொல்லு மா… ஹரி நம்ம கம்பெனிய கவனிச்சிக்கறதுல, உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லையே!” என்று வினவினார்.

தன்னவன் அருகில் அமர்ந்து, அவன் விரல்களை கோர்த்தவள், “ஹரி வங்கியில வேலை செய்யலேன்னா பரவாயில்ல… ஆனா, எந்த காரணத்துக்கும், எழுதறத நிறுத்தவே கூடாது; மற்ற வேலைகள், அதுக்கு தடையாவும் இருக்க கூடாது… எப்பவும் அதுக்கு முன்னுரிமை கொடுக்கணும்… இதெல்லாம் சாத்தியம்னா, அவன் நம்ம கம்பெனிக்கு வரதுல, எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல பா!” தன் முடிவை தீர்மானமாக சொல்லிவிட்டாள்.

மீரா, முதல் நாளிலிருந்து, ஹரி எழுத்தின் மேல் எவ்வளவு உறுதியாக இருக்கிறாள் என்று பெற்றோர், மனதில் நினைத்து பார்த்தனர். தொழில் சார்ந்த வேலைகள், ஹரி எழுத்து பயணத்திற்கு ஒரு போதும் தடையாக இருக்காது என்று உறுதியளித்து, ஹரி சம்மதம் சொல்ல ஆவலாய் காத்திருந்தார் வரதன்.

“வரேன் மாமா! கண்டிப்பா வரேன்… ஆனா, எனக்கு குறைந்த பட்சம் ஒரு அஞ்சு வருஷம் டைம் கொடுங்க!” என்றான்.

“அஞ்சு வருஷமா? எதுக்கு பா அவ்வளவு நாள்?” புருவங்கள் உயர்த்தி கேட்டார்.

தன்னவளின் கைகளை இறுக சேர்த்து அணைத்தவன், “மீரா பேருல வாங்கின கடன அடைச்சிட்டு, கண்டிப்பா, உங்களுக்கு உதவியா இருக்கேன்!” என்றான்.

தன் பணத்தை கொடுத்தால், நிச்சயமாக ஹரி பெற்றுக்கொள்ள மாட்டான் என்று அறிந்த வரதன், மகள் பெயரில் சேமித்து வைத்த பணத்தை கொடுப்பதாக சொல்லி முன் வர, மீரா வேண்டாம் என்று மறுத்து பேசினாள்.

ஹரி பக்கம் திரும்பி, “ஹரி! எதுக்கு டா அவ்வளவு நாள்… இப்போ தான் நமக்கு கல்யாணமாயிடுத்தே… நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பணத்த திருப்பி கட்டலாமே!” யோசனை சொன்னவளை பார்த்து, அழகாய் சிரித்து மறுப்பு தெரிவித்தான்.

அவள் நுனி மூக்கை வருடியவன், மென்மையான குரலில், “அந்த வீடு, என் ராஜகுமாரிக்கு, நான் வாங்கித்தந்ததா இருக்கணும்!” தெளிவுப்படுத்தினான்.

“ஹரி, அது நம்ம வீடு, நம்ம வாழ்க்கை, நம்ம பணம் டா…” வாதம் செய்ய தொடங்கியவளின் உதடுகளை விரலால் மூடி, “தெரியும்! உன் சேமிப்புக்கு, நான் வேறவொரு திட்டம் வெச்சிருக்கேன்…வா போய் தூங்கலாம்!” திடமாய் சொன்னவன், மற்றவர்களுக்கும் இரவு வணக்கம் கூறி நகர்ந்தான்.

ஒருவாரமாய் எந்தவித மனஸ்தாபங்களும் இன்றி, மென்மையாக போய் கொண்டிருப்பதை பற்றி எண்ணி மகிழ்ந்தவளுக்கு, இன்று, தன்னவனுடம் சண்டையிட்டுவிடுவோமோ என்ற பயம்.

பதற்றத்துடன் அறைக்குள் நுழைந்தவளை மேஜை அருகே இருந்த நாற்காலியில் உட்கார வைத்து, லேப்டாப்பை உயிர்ப்பித்தான்.

“மீரா! அம்மாவ, நம்மளோட நிரந்தரமா சென்னைக்கு அழைச்சிட்டு போக போறோம்…சரிதானே!” என்றான்.

“இது என்ன டா கேள்வி?”

“ம்ம்… அதனால, நான் இந்த வீட்ட ஒரு நூலகமா மாத்தலாம்னு யோசிச்சு வெச்சிருக்கேன்.” தன் எண்ணத்தை சொன்னவனை ஆழமாக பார்த்தாள் மீரா.

“ஆமாம் மீரா! இது எங்க அப்பாவுடைய கனவும் கூட… உனக்கே தெரியும், இந்த ஊருல, நம்ம சென்னை அளவிற்கு பெருசா வசதியெல்லாம் இல்ல… அதனால, அப்பா இங்க இருக்குற பள்ளி, கல்லூரியில படிக்குற பிள்ளைகளுக்கு, மற்றும் பொழுது போக்குக்காக படிக்க விரும்புற மக்களுக்கு… பொதுவா படிக்குற ஆசை இருக்கற எல்லாருக்குமே, ஒரு நூலகம் ஆரம்பிக்கணும்னு யோசிச்சாரு. சந்தர்ப்ப, சூழ்நிலை, அது நிறைவேறாம போயிடுத்து.” என்று பெருமூச்சுவிட்டவன்,

அவள் கைகளை கோர்த்து, “அத நான் செய்யணும்னு நினைக்கறேன்…அதுக்கு என்னோட ராஜகுமாரி தான் முதலீட்டு பணத்த போடணும்னு ஆசைப்படறேன்… தருவியா?” காதல் ததும்ப கேட்டவன், லேப்டாப்பில் கணக்கு வழக்குகளை விளக்க முயல, அதை பார்க்காமலேயே மூடினாள்.

“எழுத்தாளரே! கணக்கெல்லாம் காட்டி போர் அடிக்காதீங்க… நான் கேட்கற வட்டிய தந்தா, அடுத்த நிமிஷமே, முதலீடு செய்யறேன்.” விழியில் குறும்பு வழிய பேசினாள்.

“ம்ம்… சொல்லுங்க! செஞ்சிடலாம்!” கன்னத்தில் குழி விழ சிரித்தான்.

“தினமும் குறைந்தபட்சம், அஞ்சு முறையாவது ஐலவ்யூ சொல்லணும்… அதுக்கு மேல சொல்லணும்னா, அது உங்க விருப்பம்!” சலித்து பேசி, அவள் முகத்தை திருப்பி கொள்ள,

“கண்சிமிட்டாம இருக்க பழகிக்க, இப்படி ஒரு வழியா…” நக்கலாக கேட்டவன், அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி, “ஆனா,எப்போ, நான் சொல்ற ஐலவ்யூவுக்கு, நீ கண்சிமிட்டாம, வெட்கப்படாம இருக்கியோ, அன்னைக்கு தான் டி உன்கிட்ட அந்த புத்தகத்த கொடுப்பேன்.” தீர்மானமாக சொன்னான்.

அவன் கையை விலக்கியவள், “சரி! சரி! அதெல்லாம் இருக்கட்டும்… இப்போ நமக்கு கல்யாணம் ஆயிடுத்து… பத்து மணிக்கு மேல ஆஃபிஸ் விஷயம்… இப்படி லேப்டாப்ப கொண்டு வந்து படம் போட்டு காட்டறது இதெல்லாம் கூடவே கூடாது… எனக்கே எனக்குன்னு மட்டும் தான் நேரம் செலவழிக்கணும், புரியுதா?” விரல் நீட்டி செல்லமாக மிரட்டியவள், “தெரியலேன்னா சொல்லுங்க எழுத்தாளரே… நான் உங்களுக்கு சொல்லித்தரேன்!” என்றாள்.

செல்லம் கொஞ்சும் தன்னவளை, தன்னுடன் சேர்த்து அணைத்தவன், “நிஜமாவே, உனக்கு ஏத்த தலைப்பு தான் டி எழுதிருக்கேன்!” மென்மையாக சொல்லி, ஐலவ்யூ மீரா!” என்று மென்மையாக இசைத்தான்

அத்தனை நேரம் ஓயாமல் சண்டையிட்டவள், தலை தாழ்த்தி, அவன் மார்பில் சாய்ந்து மௌனத்தில் கரைந்தாள்.

“வாய் தான் டி உனக்கு!” தன் மீது சாய்ந்து கொண்டிருப்பவள் தலையில் தட்டி, இன்னும் இறுக்கமாக அணைத்தான்.

காதல் சொல்பவனின் காந்தக் கண்கள் பாய்ச்சும் மின்சாரத்தில், இமைகள் அதிர்ந்தால், பாவம் அவள் தான் என்ன செய்வாள்… அவனுக்கு இது புரியும் நாள் தான் என்றோ….

இரண்டு நாட்களில், மீராவின் பெற்றோரும், ஊருக்கு புறப்பட, ஹரியும், மீராவும் இன்னும் இரண்டு வாரங்கள், ஊரில் இருக்க திட்டமிட்டனர். ஹரி, தன் ரகசிய திட்டத்தை, மணிமாறனிடம் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை செய்யத் துவங்கினான். அவன் கேட்டப்படி வீட்டை மாற்றி அமைக்க, மூன்று மாதங்களாவது ஆகும் என்று அவர் கூற, தானும் அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்வதாக சொன்னான் ஹரி.

அதையொட்டி சந்திக்க வேண்டிய அரசாங்க ஊழியர்களிடம் சந்தித்து பேசியும், ஆவணங்கள் தயாரிப்பதிலும் நாட்கள் ஓடின. மீராவும் நிலமையை புரிந்துகொண்டு பக்குவமாய் நடந்தாள். கணினி வழியாக ஈமெயில் அனுப்பும் வேலைகளையும், தொலைப்பேசியில் பேசி முடிக்க வேண்டிய வேலைகளையும் அவள் கவனித்து கொண்டாள்.

இதற்கிடையே, உள்ளூரில் அவன் படித்த பள்ளி, அரவிந்தனுடன் சேர்ந்து படித்த கல்லூரி, என சில இடங்களுக்கு மட்டும் அழைத்துச் சென்றான். முதல் முறை அவள் வந்த போது அழைத்து செல்ல நினைத்த நீர்வீழ்ச்சியிலும், இதமான தென்றல் வீசும் மாலை நேரத்தை செலவழித்தனர்.

மீராவும், ஆசை தீர, அந்த பாரம்பரியமான வீட்டை சுற்றி சுற்றி வந்தாள். முற்றத்தில் நின்று அன்று ஏக்கமாய் பார்த்தவள், இந்த இரண்டு வாரங்கள், உரிமையோடு முழு வீட்டையும் வலம் வந்தாள். சமையல் அறை, இரண்டு நாட்களில் அத்துப்படியாக, தன்னவனுக்கு பிடித்த உணவெல்லாம் சமைத்து மகிழ்ந்தாள்.

சுழல் படிக்கட்டுகளில், மான் போல துள்ளி ஏறி, இறங்கி விளையாடினாள். மேல் தளத்தில் என்னவிருக்கும் என அன்று யோசித்தவள், அங்கு அமைக்கப்பட்ட விசாலமான மொட்டை மாடியையும், இரண்டு அறைகளையும் பிரம்மிப்பாய் பார்த்தாள். முன்வாசலில் இருந்த வேப்பமரத்தின் காற்று, மாடி வரை வீச, ஒரு சில இரவுகளை, இளஞ்ஜோடிகள், நிலவின் இதமான ஒளியில் செலவிட்டனர்.

ஹரி, வீட்டை, நூலகமாக மாற்றி அமைப்பது நல்ல திட்டமாக தோன்றினாலும், பாரம்பரியம் ததும்பும் இந்த வீட்டில் தன்னவனுடனே காலத்திற்கும் இருந்துவிடலாம் என்று தோன்றியது மீராவிற்கு.

தோட்டத்தில் இருந்த முல்லை பூக்களை, மீரா பறித்துக் கொடுக்க, திண்ணையில் அமர்ந்து அதை தொடுத்தாள் வாசுகி. மீராவிற்கு, அன்பாய் தலைசீவி, அவள் கூந்தலில் முல்லை சரத்தை சூட, மீரா தன்னையும் மீறி அவள் தோளில் சாய்ந்து அழுதாள். தன்னவள் கண்ட கனவு நிஜமானதை எண்ணி, ஹரி நெகிழ்ந்தான். உண்மை காரணம் அறியாத வாசுகி, மீரா, பெற்றோரை பிரிந்திருப்பதால் அழுகிறாள் என்று நினைத்து, அவள் முகத்தை வருடி தேற்றினாள்.

இரண்டு வாரங்கள் மின்னல் வேகத்தில் ஓட, இருவரும் ஊருக்கு புறப்பட தயாரானார்கள். வாசுகியை தங்களுடன் அழைத்து செல்லும் திட்டத்தை, கடைசி நிமிடம் வரை இரகசியமாய் வைத்திருந்தான் ஹரி.

“அம்மா! நீயும் எங்களோட ஊருக்கு வா!” ஹரி மென்றுமுழுங்க,

“அத்த! நீங்க இனிமே எங்களோட அங்கேயே தான் இருக்க போறீங்க!” மீரா திடமாய் சொன்னாள்.

“வந்து கொஞ்ச நாள் இருக்கேன் டா தங்கம்… இந்த வீட்டையும் பார்த்துக்கணும்ல…” வாசுகி தன்மையாய் மறுக்க,

“இல்லம்மா! இந்த வீட்டுக்கு, நான் வேறொரு திட்டம் வெச்சிருக்கேன் மா!” ஹரி சொன்னது தான் தாமதம்; வாசுகி முகம் பயத்தில் வாடியது.

மீரா அவள் தோளை சுற்றி வளைத்து பேசினாள். நேரடியாக திட்மிட்டிருப்பதை சொல்லாமல், மூன்று மாதங்கள் காத்திருக்கும்படி கேட்டுக்கொண்டாள். வீட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அவள் உறுதியளிக்க, அதில் வாசுகியும் நிம்மதி அடைந்தாள்.

சென்னைக்கு வந்த தம்பதியரை, மீரா வீட்டிற்கு முதலில் செல்லும் படியும், மாலை ஆறு மணிக்கு மேல் வரும்படியும் சொல்லிவிட்டு, வாசுகி மட்டும் இறங்கிக்கொண்டாள். காரணம் கேட்ட மீராவிடம், சொல்ல மறுத்த வாசுகியின் முகத்தில் ஒரு குறும்பு புன்னகை. அவர்களும் வாசுகியின் பேச்சுக்கு செவிசாய்த்தனர்.

வரதன், நிர்மலாவுக்கும், அவர்கள் வந்திருந்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. நூலகம் கட்டும் தன் திட்டத்தை வரதனுடன் பகிர்ந்து கொண்டான் ஹரி.  நிர்மலா சமைத்த மாப்பிள்ளை விருந்து சாப்பிட்டவனுக்கு, வீட்டை சுற்றி காட்டினாள் மீரா. நண்பனாக பல முறை வந்திருந்த போதும், இன்று மனைவி ஆனவளின், வீடும், பொருட்களும் வித்தியாசமாகவே தெரிந்தது அவனுக்கு.

அவள் அறையில், தன் புத்தகங்களை நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்ததை கவனித்தான். அதில் ஒன்றை கையில் எடுக்க, மீராவும் அவனுக்கு பருக பாயசம் கொண்டு வந்தாள். அதை அவனுக்கு ஊட்டியவள்,

“எழுத்தாளரே! இன்னைக்கு, இன்னும் ஒரு முறை கூட ஐலவ்யூ சொல்லவே இல்லையே!” அதிகாரமாய் கேட்டாள்.

“அடிப்போடி…எத்தனை முறை சொல்லியாச்சு…இன்னமும் படபடன்னு கண்சிமிட்டுறியே!” அவன் அலுத்து கொள்ள,

“அது இருக்கட்டும்… அம்மா எதுக்கு, நம்மள சாயங்காலம் வர சொன்னாங்க?” அப்பாவியாக முகம் வைத்து கேட்டாள்.

“தெரியலியே!”

“ஒரு வேள, நமக்கு ஏதாவது ஸ்பெஷல்லா ஏற்பாடு செய்யறாங்களோ?” குறும்பாய் கேட்டு கண்சிமிட்டினாள்.

“வாய் தான் டி உனக்கு! பிராக்டிகல்ல ரொம்ப வீக்கு!” கிண்டல் செய்து, அவளுக்கு பாயசத்தை ஊட்டிவிட்டான்.

முகம் சுருக்கி, செல்லம் கொஞ்சியவள், கொண்டு வந்த மொத்த பாயசத்தையும், தன்னவன் ஊட்டிவிட, அவளே பருகிவிட்டாள்.

மாலை ஆறு மணியளவில் இளஞ்ஜோடிகள், வாசலில் சேர்ந்து நிற்க, “நிர்மலா, நீங்க ஆரத்தி எடுங்க!” தட்டை நீட்டினாள் வாசுகி.

“அத்த! நீங்களே எடுங்க!” மீரா திடமாய் சொல்ல, வாசுகிக்கு ஒரு வித தயக்கம்.

“நாங்க நல்லா இருக்கணும்னு மனசுல நினைக்கறீங்க தானே!” மீரா இன்னும் திடமாய் கேட்க, அதற்கு ஆம் என்று மென்மையாக தலையசைத்தாள் வாசுகி.

“அது போதும்…வேற எதையும் யோசிக்காம நீங்களே ஆரத்தி எடுங்க!” உறுதியாய் பேசின தன்னவளை இமைக்காமல் பார்த்தான் ஹரி. மகளின் பக்குவத்தை எண்ணி நெகிழ்ந்தாள் நிர்மலா.

நிர்மலாவை மறுபக்கம் ஆரத்தி தட்டை பிடித்துக்கொள்ளு மாறு வாசுகி சொல்ல, இரு அன்னையும் சேர்ந்து மனமாற வாழ்த்தி, புதுமண தம்பதிகளை வரவேற்றனர்.

வீடு வாங்கிய அன்று, தனியாக உள்ளே நுழைந்ததை, ஹரியும், மீராவும் எண்ணிப்பார்க்க, காலம் செய்யும் மேஜிக்கை உணர்ந்தனர்.

வீட்டில் நுழைந்தவளை விளக்கேற்ற சொல்லி, அழைத்துச் சென்றாள் வாசுகி. அந்த ஏற்பாடுகளை கண்டவளின் கண்கள் பளபளத்தது. மாமனாரின் படம் பூஜை மேடையில் இருந்தது. அவள் முதல் முதலில் வாங்கி வைத்திருந்த பித்தளை விளக்குகள், மையப்பகுதியில் ஜொலித்தன.

வாசுகி பக்கம் திரும்பிய அவள் பளபளத்த கண்கள், நன்றி கூற, அதை மென்மையாக துடைத்துவிட்டு, “அழக்கூடாது! கடவுள் நாமத்த மனசுல சொல்லிண்டே விளக்க ஏத்து!” என்றாள் வாசுகி.

பெற்றோர் முன், தங்களுக்குள் நிகழ்ந்த மனஸ்தாபங்களை காட்டிக்கொள்ள விரும்பாத மீரா, மௌனமாய் விளக்கேற்றினாள்.

இரவு உணவுக்கு பின், வரதனும், நிர்மலாவும் கிளம்ப, மீரா தன் துணிமணிகளை, அலமாறியில் அடுக்க தொடங்கினாள். பல நாள், தன்னவனுடன் செலவிட்ட அதே வீடு என்ற போதும், இன்று அவளுக்கும் வித்தியாசமாகவே தோன்றியது. அவள் வேலையில் மும்முறமாய் இருக்க, அவர்களுக்கு சாப்பிட ஃப்ரூட் சாலட் கொண்டு வந்த வாசுகி,

“இதெல்லாம் செய்ய தான் மீரா, உங்கள சாயங்காலம் வர சொன்னேன்!” என்றதும், அதை கேட்ட ஹரிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

மீரா அசடு வழிய, வாசுகி இருவரையும் குழப்பமாய் பார்த்தாள்.

அம்மா அருகில் வந்தவன், “இல்லம்மா! உன் மருமக வேற என்னென்னமோ எல்லாம் எதிர்ப்பார்த்தா!” சொல்லி, தன்னவளை குறும்பாய் பார்த்தான்.

இனிப்பை பற்றி பேசுகிறார்கள் என்று வெள்ளந்தியாக நினைத்த வாசுகி, “பாயசம் தான் மா பண்ணலாம்னு நெனச்சேன்…ஆனா அம்மாவும் அதானே காலையில செஞ்சாங்க!” அப்பாவியாக சொல்ல, ஹரி பெருங்குரலில் விழுந்து விழுந்து சிரித்தான்.

“இருக்கட்டும் அத்த! நாளைக்கு செஞ்சு தாங்க!” மீரா மென்மையாய் பேச, அவளும் அதை நம்பி அங்கிருந்து நகர்ந்தாள்.

பின்விளைவுகளை அறியாது, நக்கலாக சிரித்தவனின் பாடு தான் திண்டாட்டமானது. தனியாக கையில் சிக்கியவனை கோபம் தீர காதலித்தாள் மீரா.

ஒரு மாதத்தில், அரவிந்தன் குடும்பமும் குடியேற, அந்த இடமே விழாக்கோலம் பூண்டது. சனிக்கிழமை மாலைகள் அரட்டையும், கும்மாளமாகவும் நகர்ந்தன.

மீரா அவர்களுக்கு பருக ஏலக்காய் டீயும், வெங்காய பகோடாவும் கொண்டு வர, அதை வாங்கிக்கொண்ட மகேஷ், “என்ன தான் இருந்தாலும், அரவிந்தனுக்கு, நீ ரொம்ப ஸ்பெஷல் டி!” குறும்பாய் தொடங்கி, “நீ கல்யாணமாகி வந்ததுமே, உங்க பக்கத்துலேயே வந்துட்டான் பாரு!” என்றான்.

தன்னவன் பக்கம் அமர்ந்தவள், “அவன் எனக்காக வந்திருக்கான்னு நினைக்கறியா? அவனுக்கு எப்பவுமே ஹரி தான் ஃபர்ஸ்ட்!” சொல்லி, அவன் தோளை தட்டினாள்.

“அவன் ஹரி இங்க தனியா இருக்கறப்ப, ஒரு நாள் கூட வந்து தங்கினது இல்ல… இப்போ நீ வந்ததும், ஒரேடியா பக்கத்துல வந்துட்டான்….அஞ்சலி இருக்காளேன்னு, நடிக்கறான் டி அவன்!” விடாமல் மகேஷ் தர்க்கம் செய்து,

“என்ன அஞ்சலி! நான் சொல்றது சரி தானே!” என்றான்.

இவர்கள் வேடிக்கை பேச்சு கேட்டு பழகிப்போனவள், மென்மையாய் சிரித்து மௌனம் சாதித்தாள்.

“அதே தான் டா நானும் சொல்றேன்!” தொடங்கிய மீராவை அனைவரும் ஆழமாய் பார்த்தனர். “எங்க, அவன் உயிர் நண்பன, நான் குடும்பம் நடத்துறேன்ற பேருல, கொடுமை படுத்திடுவேனோன்னு, அவன பாதுகாக்க வந்திருக்கான் டா!” விளக்கம் சொல்ல, அதை கேட்ட அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

அது சரியா, என்று மகேஷ், ஹரியிடம் வினவ, அவனும் சிரித்து மழுப்பினான். அரவிந்தன், இளஞ்ஜோடிகள் இருவருக்கும் இடையே வந்து, அவர்கள் தோளை சுற்றி வளைத்தான்.

மீரா பக்கம் திரும்பியவன், “சரியா சொன்ன மீரா! ஹரிய மிஞ்சின நண்பனும் இல்ல; அதே மாதிரி, உன்ன விட, என் மனச வேற யாராலையும் சரியா புரிஞ்சுக்க முடியாது டி!” என்று விளக்கம் சொன்னான்.

அதை கேட்ட மகேஷ், “டேய், ஒரு பேச்சுக்காவது, என்ன உன் நண்பன்னு சொல்லு டா!” அழாத குறையாய் கெஞ்ச,

அரவிந்தன் அவனருகே சென்று, “நண்பா! சாப்பிடுற விஷயத்துல, உன்ன விட வேற யாரு டா எனக்கு கம்பெனி கொடுக்க முடியும்” சொன்னவன் அவன் தட்டில் இருந்த பகோடாவை ஊட்டிவிட்டான்.

நண்பர்கள் மனம்விட்டு சிரிக்க , மெல்லிய குரலில் அஞ்சலி, “அப்போ நான்?” அப்பாவியாக முகம் வைத்து கேட்டாள்.

மனைவி அருகில் சென்றவன், அவள் முகத்தை கையிலேந்தி, “நீ என் சரி பாதி அஞ்சலி மா!” கண்பார்த்து சொல்ல, அவள் வெட்கத்தில் தலை தாழ்த்தினாள்.

நண்பர்கள் அவர்களை ஓட்ட, அந்த இடமே காதலில் மிதந்தது.

தொடர்ந்து படிக்க, Click Here அன்பின் ஆழம் 37.3