அன்பின் ஆழம் – 37.1

“என்னப்பா, இன்னொரு ஆட்டம் போடலாமா?” எதிரில் அமர்ந்திருக்கும் ஹரியிடம் உற்சாகமாய் கேட்டப்படி, வரதன் கேரம் போர்டில் இருந்த காய்களை அடுக்கத் தொடங்கினார்.

“கண்டிப்பா மாமா!”, பதில் சொன்னவன், “எவ்வளவு அட்டகாசமா விளையாடுறீங்க! உங்களோட விளையாடினா, நேரம் போகுறதே தெரியல!” அவரை பாராட்டி, தன் பக்கம் இருந்த காய்களை போர்டின் நடுவில் நகர்த்தினான்.

இதழோர சிரிப்புடன், அவற்றையும் சேர்த்து அடுக்கியவர், “நீ மட்டும் என்ன ஹரி! ஸ்ட்ரைக்கர் கைக்கு வந்ததும், மத்தவங்களுக்கு வாய்ப்பே கொடுக்காம, சரசரன்னு, எல்லாத்தையும் பாக்கெட் பண்ணற… பதிலுக்கு பாராட்டி, அவன் திட்டமிட்டு செயல்படுத்திய உத்திகளையும் குறிப்பிட்டு பேசினார்.

‘இவர் இந்த அளவிற்கு, வளவளவென்று பேசுவாரா’ மனதில் நினைத்தவன், “உங்களுக்கு கேரம் விளையாட இவ்வளவு பிடிக்கும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, இந்த திறமைய காட்டியே, மீராவோட கைப்பிடிச்சிருப்பேனே!” குறும்பாய் சொல்ல, அதை கேட்ட வரதன் வாய்விட்டு சிரித்தார்.

கால் மணி நேரமாக இவர்கள் பாச பரிமாற்றங்களை அமைதியாக கேட்டுக்கொண்டே, எதிரணியில் விளையாடிக் கொண்டிருந்த மணிமாறன், நீண்ட பெருமூச்சுவிட்டு, “போரும் டா சாமி… உங்க மாமன்-மருமகன் அன்பு மழையில, இதுக்கு மேல என்னால நனைய முடியாது பா…” சலித்து கொண்டு எழுந்தவர், தனக்கு வேறு வேலை இருப்பதாக சொல்லி நழுவினார்.

“மாமா! போகாதீங்க!” என்று தடுத்து ஹரி, “நீங்க போனா, என் நண்பன் அரவிந்தன், எப்படி தனியா விளையாடுவான்?” அக்கறையாய் பேச,

“பரவாயில்ல டா! நண்பன் ஒருத்தன் இருக்கேன்னு, இப்போவாவது உனக்கு நியாபகம் வந்துதே,” தன் பங்குக்கு கலாய்த்து, “நீங்க ரெண்டு பேரும் விளையாடுங்க!” சொன்னவன், கைகளை தலைமேல் உயர்த்தி, பெரிய கும்பிடும் சேர்த்து போட்டான்.

விளையாட்டில் இருந்த ஆர்வமோ, திருமணமான மிதப்போ, ஹரி, நண்பன் கிண்டல் செய்கிறான் என்று கூட உணரவில்லை.

“என்ன இருந்தாலும், நாங்க ரெண்டு பேரும் நல்ல டீம் ப்ளேயர்ஸ்…எப்படி எதிரெதிர் அணியில விளையாடுறது?” முகத்தை அப்பாவியாக வைத்து கேட்க,

அவன் தொல்லை பொறுக்க முடியாதவன், காதுகளை கையால் மூடிக்கொண்டு, “மீரா! என்ன உன் புருஷன் கிட்டேந்து கொஞ்சம் காப்பாத்து டி!” உரக்க சொல்லி, நண்பன் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்தான்.

ஹரி முகத்தை தன் பக்கம் திருப்பி, “அதான் அவர் பொண்ண, உனக்கு கல்யாணம் செய்து கொடுத்துட்டாரே… இன்னும் ஏன் டா அவர காக்கா பிடிக்குற…” காதில் கிசுகிசுத்து, நினைவூட்ட, ஹரி முகம் அசடு வழிந்தது.

ஹரி பதில் சொல்ல முன்வர, அவனை பேச வேண்டாம் என்று தடுத்து ஜாடை காட்டி, “நண்பா! உனக்கு கல்யாணமாகி மூணு நாளாச்சு டா… மீராவ கூட்டிட்டு ஹனிமூன் போகாம, இப்படி எங்கள உட்கார வெச்சு கேரம் விளையாட சொல்லி துன்புறுத்தரியே..” அழாத குறையாய் சொல்லி எழுந்தான்.

அரவிந்தன் அலறல் சத்தத்தில், அங்கு வந்த பெண்களும் அவர்கள் பேச்சை கவனித்தனர். அரவிந்தன் பேசியதை கேட்ட கீதா, ஹரி அருகே சென்று, “பொண்டாட்டி காலையே சுத்தி வரது எப்படின்னு தெரியலேன்னா, அரவிந்தன் கிட்ட க்ளாஸ் எடுத்துக்கோ!” இரு நண்பர்களையும் சேர்த்து ஓட்டினாள்.

அரவிந்தன் அவளை பார்த்து முறைத்தான். நண்பர்கள் ஒன்று சேர்ந்து தன்னை கிண்டல் செய்வதை உணர்ந்த ஹரி, “நானா அழைச்சிட்டு போக மாட்டேன்னு சொன்னேன்… அவதான் எங்கையும் போக வேண்டாம்னு சொல்றா!” தன்னவளை பார்வையால் விழுங்கியபடி, கோர்த்துவிட்டான்.

அடுத்த நொடியே, தோழியை பார்த்த கீதா, “என்னடி சிக்கனமா?” திடமாய் கேட்க, மீரா அருகில் இருந்த அஞ்சலி, “இல்ல தனியா போக பயமா?” அவள் காதில் குறும்பாய் ரகசியம் பேசினாள்.

அஞ்சலியை பார்த்து முறைத்தவள், நண்பர்களை பார்த்து பேசினாள். “எங்களுக்கு எதுக்கு ஹனிமூன் எல்லாம்… இத்தன நாளா நாங்க ரெண்டு பேரும் தான் ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பார்த்துக்கிட்டு இருந்தோம்… இப்போ தான் குடும்பமா, உறவுகள் சூழ சந்தோஷமா இருக்கோம்…” விளக்கம் சொல்ல, அதே சமயம், வாசுகி, அவர்களுக்கு எல்லாம் காபி கொண்டு வந்தாள்.

சூடு பறக்கும் காபி கோப்பைகள் இருந்த தட்டை, அவளிடமிருந்து வாங்கிக்கொண்ட மீரா, அனைவருக்கும் பரிமாறினாள். அப்போது, மணிமாறனின் மனைவி ஈஸ்வரி, ஹரி-மீரா திருமண ஆல்பம் வந்துவிட்டது என்று உற்சாகமாய் அறிவித்து கொண்டே உள்ளே நுழைய, அதை முதலில் பார்க்கும் ஆர்வத்துடன், தன்னிடம் கொடுக்கும் படி அனைவரும் கூக்குரலிட்டனர். 

வரதனை சந்திக்க போன அன்றே, இவர்கள் திருமண தேதியையும், பெற்றோர் முடிவு செய்தனர். அவர்கள் திருமணம், சொந்த ஊரில் செய்ய விருப்பம் சொன்ன வாசுகிக்கு செவிசாய்த்தனர் வரதனும், நிர்மலாவும். முகூர்த்த தேதி, தற்செயலாக, அரவிந்தன்-அஞ்சலி திருமணம் நடந்த தேதியிலேயே அமைய, அதை கேட்ட நண்பர்கள், நிகழும் இடமும், ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினர். அதனால், அரவிந்தன்-அஞ்சலி திருமணம் நிகழ்ந்த அதே மண்டபத்தில் ஹரி-மீரா திருமணமும் செவ்வனே நடந்தது.

திருமண வைபோகத்தில் கலந்துகொள்ள வந்த நண்பர்களை தங்களுடன் தங்க வேண்டும் என்று ஹரியும், மீராவும் வலியுறுத்த, அவர்கள் அன்புக்கட்டளையை மீறமுடியாமல், நண்பர்கள் அவர்களுடன் தங்கினர்.

அரவிந்தன் கைகளுக்கு ஆல்பம் முதலில் வர, அதை பார்க்கும் ஆர்வத்தில், நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர். ஹரியும் மீராவும் அவன் இருபுறம் அமர, அவர்கள் பின்னாலிருந்து எட்டி எட்டிப்பார்த்தனர், கீதா, மைதிலி, மகேஷ், மற்றும் ராணி.

சஹானாவை தூக்கி வைத்துக் கொண்டிருந்த அஞ்சலி, நின்றபடி பார்க்க முயற்சித்தாள். கிட்டத்தட்ட இரண்டு வயதாகிருந்த போதும், அஞ்சலியை பார்த்தால், மறுகணமே, அவள் இடுப்பில் ஏறிக்கொள்வது, சஹானாவுக்கு ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. வீட்டின் பெரியவர்களும், பிள்ளைகளின் வேடிக்கை பேச்சை இரசித்தபடி நின்றனர்.

முதல் பக்கத்தில், பத்திரிக்கையின் நிழற்படத்தை பார்த்த மீரா, மென்மையாக அதை வருடினாள். பிள்ளையார் படம் போட்ட அந்த அரக்கு நிற பத்திரிக்கையில், தங்க எழுத்தில் ஜொலித்த மணமக்கள் பெயர்களை, அவள் விரல்கள் வருட,

“நெனச்சது நிறைவேறிடுத்தா!” தாழ்ந்த குரலில், அவள் காதில் வினவினான் அரவிந்தன். வீடு பதிவு செய்த அன்று, மீரா ஏக்கமாய் சொன்ன வார்த்தைகள், அவன் நினைவுக்கு வர, அதை வாய்விட்டு சொல்லாமலே, அவள் உணர்வுகளை புரிந்து கொண்டான்.

அவளும், கண்ணோரம் எட்டிப்பார்த்த நீர்துளியை துடைத்து, ஆம் என்று மென்மையாக தலையசைத்தாள். அரவிந்தன், ஒவ்வொரு பக்கமாய் மெல்ல திருப்பினான். நிழற்படமாய் உரைந்து போன அந்த பசுமையான தருணங்களை உயிர்ப்பித்து கண்முன் நிறுத்தியது, நண்பர்களின் துள்ளல் பேச்சு.

தன் விருப்பத்திற்கு இணங்கி, ஜானவாசத்தின் போது மயில் கழுத்து நிறப்புடவை அணிந்திருந்த தன்னவளை மௌனமாய் ரசித்து கொண்டிருந்தான் ஹரி. தன்னவன் பக்கத்தில் உரசிக்கொண்டு அமர்ந்திருந்த ஒவ்வொரு நொடியுமே மீராவை பொருத்த வரை பொக்கிஷமாய் இருந்தது.

“தாலி கட்ட சொன்னா, இப்படியா டா கழுத்த தடவுவ!” ஹரி கையை கிள்ளி, கிண்டல் செய்தாள் கீதா. அவன் அசடுவழிய,

“அதுகூட பரவாயில்ல கீதா…” தொடங்கின மைதிலி, “ஜடைக்கு கீழ் பக்கமா தாலிய கட்டுன்னு, சொல்லிட்டே இருக்கேன்… காதுல வாங்கிட்டா தானே…அதுக்கு அப்புறம் மொத்த ஜடையும் கலையாம எடுத்து விடறத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுத்து…” புலம்பியவள், மீராவின் கன்னத்தை செல்லமாக கிள்ளி, “இதுல, இவ வேற… ஊருல இருக்க மொத்த முல்லை பூவும் தலையில வெச்சுகிட்டு இருந்தா!” என்று கழுத்தை நொடித்தாள்.

முல்லை பூ என்றதும், காதல் ஜோடிகள் கண்கள் மட்டும் இரகசியமாய் மொழிந்தன. அடுத்த பக்கத்தை திருப்பினான் அரவிந்தன்.

“பின்னால இருக்கிற ஜடைய பற்றி, ரெண்டு பேரும் இவ்வளவு கவலை படுறீங்களே…இந்த ஃபோட்டோவ பாருங்க… அழுது அழுது கண்ணுல இருந்த மை மொத்தமும் முகத்துல…” விரல் நீட்டி காட்டியவன், மீரா பக்கம் திரும்பி,

“விழுந்து விழுந்து லவ் பண்ணவன், தாலி கட்டுறச்ச, இப்படியா டி அழுவ…இந்த பொண்ணுங்க லாஜிக்கே புரியல…” இடம் வலமாய் தலையசைத்தான்.

“அதுக்கு அப்புறம் அவ அம்மாவ கட்டிப்பிடிச்சு அழுதுட்டு வரத்துக்குள்ள, ஹரி முகத்த பார்க்கணுமே….” கிண்டல் செய்து உரக்க சிரித்த மகேஷ், ஹரி தோளை வளைத்து அணைத்து,

“பாவம் டி, என் நண்பன்… அவன கட்டி பிடிச்சு அழுது இருந்தாலும் பரவாயில்ல… நீ எப்போ திரும்பி வருவன்னு தெரியாம திரு திருன்னு முழிச்சிட்டு இருந்தான் தெரியுமா!” என்று, அடுத்த பக்கத்தில் இருந்த ஒரு நிழற்படத்தை காட்டினான்.

நண்பர்கள், மேலும் சரமாறியாய் புதுமண தம்பதிகள் வெளிப்படுத்திய உணர்ச்சிகளை பற்றி கிண்டல் செய்ய, மீராவின் முகம் வெட்கத்தில் சுருங்கியது. அதை கண்ட அஞ்சலி,

“போதும் அரவிந்த் பா! நீங்க எல்லாம், பொண்ண பார்த்தீங்க; உடனே கல்யாணம் செஞ்சுகிட்டீங்க… இத்தன நாள் பொறுமையா காத்துக்கிட்டு இருந்ததோட வலி அவங்களுக்கு மட்டும் தானே தெரியும்!”  திடமாய் சொல்ல, அரவிந்தன் அமைதியானான். அவனை தொடர்ந்து, மற்றவர்களும் அமைதியானார்கள்.

(டீச்சர் அல்லவா… பயப்பட்டு தானே ஆக வேண்டும்.)

அஞ்சலி சொன்னதை கேட்ட பெற்றோரின் மனதிலும் சுறுக்கென்று குத்தியது.

மறுநாள் காலை, நண்பர்கள் சென்னைக்கு புறப்பட, அரவிந்தன்-அஞ்சலி மட்டும், ஊரில் இருக்கும் தன் சொந்த வீட்டில் நான்கு நாட்கள் தங்க திட்டமிட்டிருந்தனர்.

“போயிட்டு வரோம் மீரா! கண்டிப்பா கோயம்பத்தூர் வந்து எங்களோட தங்கணும் சரியா!” என்று ராணி வருத்தமாய் சொல்ல, மீராவும் மென்மையாய் தலையசைத்தாள்.

“கோயம்பத்தூர் போறீங்களா?” கண்கள் அகல வினவினாள் கீதா.

ராணியின் கணவருக்கு, மூன்று வருடங்கள் நீடிக்கும் அளவிற்கு, ஒரு பெரிய கட்டிடம் கட்டும் திட்டம் ஒன்று கைக்கூடி இருந்தது. தொழிலில் ஏற்பட்ட சரிவுகளை ஈடுகட்ட, கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று நினைத்தார். பெரும்பாலும், அங்கு தங்க வேண்டியிருக்கும் என்பதால், ராணியும் பிள்ளைகளுடன் அங்கு செல்ல திட்டமிட்டிருந்தாள்.

“ஆமாம் மா! கரெக்டா, மீரா கல்யாணமாகி வரப்ப, கிளம்புறேனேன்னு வருத்தமா இருக்கு!” கீதாவிற்கு பதில் சொன்னவள், மீராவின் கன்னங்களை வருடினாள்.

அங்கிருந்த பலர், ராணி ஊருக்கு செல்வதை பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்கள் பேச்சை கேட்ட வாசுகி,

“நீ அவங்களுக்கு துணையா இருப்பேன்னு நெனச்சேனே மா!” என்று வருந்தியவள், “வேற யாராவது வாடகைக்கு வராங்களா?” அக்கறையாய் விசாரித்தாள்.

ராணி உடனே மகேஷை பார்த்து முறைத்தாள். அக்கா, தம்பிக்குள் அதே பிரச்சனை. அவள் வீட்டை வாடகைக்கு விட வேண்டும் என்று சொல்ல, மகேஷ், முடியாது என்று தீர்மானமாய் இருந்தான்.

வெளியாட்களுக்கு வாடாகைக்கு விட, தம்பிக்கு விருப்பமில்லை என்று வாசுகியிடம் புலம்ப, பதிலுக்கு, தன் பக்கத்து நியாயத்தை விளக்கினான் மகேஷ்!

“எனக்கு வீட்ட வாடகைக்கு விடுவியா டா?” அலட்டல் இல்லாமல் கேட்டான் அரவிந்தன்.

எல்லோர் பார்வையும் அவன் பக்கம் திரும்பியது. தனக்கு பிரச்சனை வரும் போதெல்லாம், ஆபத்பாந்தவனாய், வந்துவிடுகிறான் அரவிந்தன் என்று தோன்றியது மகேஷுக்கு.

அக்கா, தம்பி இருவரின் முகமும் மலர்ந்தது. உடனே சம்மதம் தெரிவித்தனர். அதை கேட்ட, ஹரி-மீராவுக்கும் அளவில்லா மகிழ்ச்சி. அஞ்சலியும், கண்ஜாடையில் சம்மதம் கேட்ட கணவனுக்கு தலையசைத்தாள்.

மகேஷுக்கு நன்றி கூறிய அரவிந்தன், “டேய், நம்ம எல்லாரும் ஒரே இடத்துல இருக்க போறோம்… உன் தம்பிய, அவன் வீட்ட, நம்ம கீதாவுக்கு வாடகைக்கு விட சொல்லு… அப்புறம் நம்ம அஞ்சு பேரும் ஒரே இடத்துல… நெனச்சு பார்த்தாலே, எவ்வளவு நல்லா இருக்குல்ல…” ஆழ்ந்து சுவாசித்து பெருமூச்சுவிட்டான்.

மகேஷ், யார் பக்கம் பேசுவது என்று திண்டாட, கீதா பேசினாள். “இவன் பேச்ச எல்லாம் கேட்காத டா மகேஷ்!” அரவிந்தனை பார்த்து முறைத்தவள், “எனக்கு நம்ம நட்பு உயர்ந்தது தான் டா… ஆனா நிதர்சனத்தையும் யோசிப்பேன்… இவன மாதிரி ஓவர் செண்டிமெண்ட் எல்லாம் கிடையாது… தள்ளி இருந்தாலும், உங்க மேல எல்லாம் பாசம் மட்டும் குறையவே குறையாது!” எதார்த்தமாக பேசினாள்.

அவள் தோளை வளைத்த மீரா, “உனக்கு எப்போ எல்லாம் தோணுதோ, எங்களோட வந்து தங்கு டி!” யோசனை சொல்ல, தோழர்கள் மூவரும் ஆம் என்று தலையசைத்தனர்.

“கண்டிப்பா வந்து தங்குவேன் டி… ஆனா, அரவிந்தன் வீட்டுல மட்டும் தான் தங்குவேன்… பார்க்கலாம் அவனோட விருந்தோம்பல் எப்படி இருக்குன்னு….” குறும்பாய் சொல்லி, சஹானாவை தூக்கி வைத்திருக்கும் அஞ்சலியை பார்த்தாள்.

அவள் சீண்டுவதில் அசடுவழிந்தாலும், தோழியை பதிலுக்கு கிண்டல் செய்ய அடுத்த நொடியே தயாரானான் அரவிந்தன். “ஓகே! ஒகே கீதா… ஆனா, உன்னையும், உன் பொண்ணையும், ராத்திரி ஒன்பது மணிக்கு மேல, மீரா வீட்டுக்கு அனுப்பிச்சிடுவேன் சரியா…” கண்சிமிட்டி வம்பிழுக்க,

“அரவிந்த் பா! சும்மா இருங்க!” வெட்கத்தில் ஊறியவள் பதற,

“பார்த்துக்கோ மீரா… நண்பன்னு உரிமை எடுத்துட்டு, நீ பாட்டுக்கு நேரங்கெட்ட நேரத்துல போயிட போற…” விடாமல் கிண்டல் செய்தாள் கீதா.

“ஓயாம வம்புக்கு இழுக்கற இவளையா பாவம்னு சொன்ன அஞ்சலி!” மனைவியிடம் சொன்னவன், கீதாவை செல்லமாக தலையில் குட்டினான்.

“உங்கள மிரட்ட, இப்படியொரு ஆள் தேவை தான்!” அஞ்சலியும் கீதாவிற்கு ஒத்தூத, பெண்கள் அனைவரும் சேர்ந்து அரவிந்தனை ஓட்டினர்.

தொடர்ந்து வந்த நாட்களும் இனிதே நகர்ந்தது. மணிமாறன், புதுமணத் தம்பதிகளை தன் வீட்டிற்கு அழைத்தார். ஹரியை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை மீராவுடன் பகிர்ந்துகொண்டனர், மணிமாறனும் அவர் மனைவி ஈஸ்வரியும். தங்களுக்கு இரு மகள்கள் என்றும், இருவரும் திருமணமாகி, வெளிநாட்டில் வசிக்கிறார்கள் என்றும் சொல்லி, மீராவிடம், பல புகைப்படங்களை காட்டி விளக்கினார். ஹரியின் முறைப்பெண்களை பார்த்தவள்,

மணிமாறனிடம், “நல்ல காலம், உங்க பொண்ணுங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் செஞ்சுட்டீங்க… இல்லேன்னா, உங்க தங்கை, என் மேல இருந்த வெறுப்புல, ஹரிக்கு, இவங்களுல ஒருத்தர கல்யாணம் செய்து வெச்சிருப்பாங்க!” கிண்டல் செய்ய, அவர் உரக்க சிரித்தார்.

“வாசுகி மட்டும், அப்படி நெனச்சிருந்தா, அடுத்த நிமிஷமே, ஹரி உன்ன கல்யாணம் செய்துகிட்டு இருப்பான்…ஆனா, அதுக்கும் என்ன தான் உதவிக்கு கூப்பிட்டிருப்பான்!” தங்கள் புரிதலை பற்றி பெருமையடித்துகொள்ள,

தன்னவனை விழிகள் உயர்த்தி பார்த்தவள், “யாரு… இவனாவது, அம்மா பேச்ச மீறி கல்யாணம் செய்துக்கறதாவது…” சலித்து கொள்ள,

இல்லை என்று மறுப்பாய் தலையசைத்தவர், ஹரி, அவளை எந்த அளவுக்கு நேசித்தான் என்று விளக்கினார். தனக்கே தெரியாத, பல நிகழ்வுகளை, அவர் விளக்க, அதில் நெகிழ்ந்து போனாள் மீரா.

அவளுக்கு இனிப்புகள் மீது கொள்ளை பிரியம் என்று அறிந்த ஈஸ்வரி, பல வகை இனிப்புகளை தானே வீட்டில் செய்திருந்தாள். அத்தனையையும் ருசித்தது போதாதென்று, வீட்டிற்கும் டப்பாவில் எடுத்து வந்தாள் மீரா. அவர்கள் பாச மழையில் நனைந்தவளுக்கு, தன்னவன் கண்டிப்பு எல்லாம் காற்றில் பறந்தது.

அடுத்த நாள், அரவிந்தன் வீட்டு விருந்திற்கு சென்றனர் இளஞ்ஜோடிகள். ஈஸ்வரி செய்த இனிப்புகளை, மறக்காமல் அரவிந்தனுக்கு எடுத்துச் சென்றாள் மீரா. நண்பர்கள் இருவரும் ஆவலாய் அதை உண்டு மகிழ, இவர்களை திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டனர், ஹரியும், அஞ்சலியும்.

அரவிந்தனின் அன்புத் தொல்லையால், பெற்றோரும் உடன் சென்றனர். முதல் முறையாக அசோகனை சந்தித்த வரதன், தொழில்ரீதியாக பேச, நேரம் போனதே தெரியவில்லை அவர்களுக்கு.

கணவன்-மனைவி, ஒரே கிளையில் வேலை பார்க்க முடியாது என்று அறிந்த அசோகன், அவர்களின் எதிர்கால திட்டத்தை பற்றி வினவினார். ஹரி, வேறு கிளைக்கு மாறியதாக சொல்லி, மீராவும் துணை கிளை அதிகாரி பதவிக்கு முயற்சி செய்வதை பற்றி, கம்பீரமாய் சொன்னான் ஹரி. அவரும், அவர்களுக்கு வாழ்த்து கூறி, தனக்கு தெரிந்த அறிவுரைகளை பகிர,

“பழையப்படி, நீ, இவ தொல்லை இல்லாம நிம்மதியா வேலை செய்யலாம் டா ஹரி!” நண்பனிடம் கூறினான் அரவிந்தன். அவளும், அவன் எதிர்ப்பார்த்த மாதிரியே, மீரா கடுப்பானாள்.

“அப்படியா ஹரி?” மீரா அப்பாவியாய் முகம் வைத்து கேட்க,

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல டா!” அசடுவழிந்தான் ஹரி.

ஆனால் அரவிந்தன், விடுவதாக இல்லை. “இவளோட குடும்பம் நடத்த பயமா இருந்தா சொல்லு டா! கிளை துணை அதிகாரிய, வெளியூருக்கு மாத்திடலாம்!” குறும்பாய் யோசனை சொல்லி, கண்சிமிட்ட,

அவன் சீண்டுவதை கவனித்த அகிலா, மகனை செல்லமாக கண்டித்தாள்.

“மாத்துவேன்னு சொன்னா, நாங்க பயந்துடுவோமா!” நண்பனுக்கு சவால் விட்டவள், தன்னவன் பக்கம் திரும்பி, “எழுத்தாளரே! அப்படி, இவன் என்ன வெளியூறுக்கு மாத்திட்டா, நீங்க உங்க வேலைய விட்டுட்டு, என்னோட வந்து கதை எழுதறதுல மட்டும் கவனம் செலுத்துங்க… நம்மளும் இவன் தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கலாம்!” என்று உதட்டை சுழித்தாள்.

“வாய்! வாய்! இவளுக்கா மா பரிஞ்சு பேசுற!” தோழியை செல்லமாக திட்டினான் அரவிந்தன்.

இவர்கள் வாக்குவாதத்தில் மூக்கை நுழைத்து வம்பை விலைக்கு வாங்க கூடாது என்று தெளிவாய் இருந்த ஹரியும், அஞ்சலியும் வேடிக்கை மட்டும் பார்த்தனர்.

ஆனால், இவர்கள் பேச்சை எல்லாம் கவனித்த வரதனுக்கு, மனதில் வேறு எண்ணம் உதித்தது.

தொடர்ந்து படிக்க Click Here அன்பின் ஆழம் 37.2