அன்பின் ஆழம் – 36.1

“அம்மா! தயவு செய்து கதவு தர மா! நான் எல்லாத்தையும் உனக்கு சொல்றேன்… இதெல்லாம் நானா சொந்தமா முடிவெடுத்து செஞ்சது மா… மீராவுக்கு இத பற்றி எதுவுமே தெரியாது… ப்ளீஸ்…என்ன நம்பு மா!” என்று, அறையின் வாயிலில் நின்றபடி, விடாமல் மன்றாடினான் ஹரி.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக வாசுகியை வெளியே வரும்படி கெஞ்சியவன், ஓய்ந்துபோய் சோஃபாவில் வந்து அமர்ந்தான். வரதனுடன் ஒரு பிரளய மழையை எதிர்ப்பார்த்து வந்தவனுக்கு, இது பெரும் பேரதிர்ச்சியாக இருந்தது. வரதன் மனமாற்றத்தை பற்றி எண்ணி மகிழுவதா, இல்லை, அம்மாவின் கோபத்தை பற்றி எண்ணி கவலைப்படுவதா, அல்லது, நடைப்பிணமாய் வீட்டிற்கு கிளம்பியவளை பற்றி தான் வருத்தப்படுவதா என்று புரியாமல் திண்டாடினான் ஹரி. மண்டையே பிளக்கும் அளவுக்கு யோசித்தவன், மீராவை திருமணம் செய்துகொள்வது என்பது, தன் விதியிலேயே இல்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டான்.

இத்தனை தூரம் இறங்கி வந்து, அவர்கள் காதலுக்கு சம்மதம் சொல்லியும், வாய்விட்டு மன்னிப்பு கேட்ட பிறகும், மகன் இப்படி ஒரு காரியத்தை செய்ததை பற்றி, தன்னிடம் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் வாசுகிக்கு. இப்போதும் கூட, செய்த தவறுக்கு வருந்தாமல், மீராவிற்காக பரிந்து பேசி கெஞ்சுகிறானே என்ற எரிச்சல் வேறு. அவ்வளவு அன்யோன்யமாக பழகுபவளிடம், இந்த விஷயத்தை பற்றி சொல்லாமலா இருந்திருப்பான் என்று யோசித்தவள், மீராவிற்கும் இந்த விவகாரத்தில் பங்கு இருக்கும் என்று உறுதியாக நினைத்தாள். பெற்ற பிள்ளைகளை சார்ந்து வாழ்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்ற முடிவுக்கே வந்துவிட்டாள் அவள்.

ஹரி சொன்ன அறிவுரைப்படி, மீரா, நடந்ததை எதுவும் காட்டிக்கொள்ளாமல், வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். அவள் இருந்த மனநிலையில், சாலையில் கூட கவனம் செலுத்த முடியவில்லை. அதை உணர்ந்த சன்னி தான் அவளை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வந்தது என்று சொல்ல வேண்டும்.

முன்வாசலிலேயே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த நிர்மலா, மகள் மட்டும் தனியாக வருவதை கவனித்தாள். அவளுக்கு கேட்டை திறந்துவிட்டவள், தாயும், மகனும் ஆட்டோவில் வருகிறார்களா என்ற எதிர்ப்பார்ப்புடன் சாலையை நோக்கினாள். ஏமாற்றத்துடன், சன்னியை நிறுத்தும் மகள் அருகில் வந்தவள்,

“என்ன டி நீ மட்டும் தனியா வந்திருக்க… அவங்க வரல்ல… ஹரி அம்மா எதுவும் சொல்லலியா… உனக்கும் ஹரிக்கும் ஏதாவது பிரச்சனையா…” கவலையில், மனதில் தோன்றிய கேள்விகளை அடுக்கி கொண்டே போனாள்.

ஹரி, சொன்ன வார்த்தைகள் காதில் எதிரொலிக்க, துக்கத்தை மறைத்து, இயல்பாக இருக்க பாடுபட்டாள் மீரா. மனதில் கொப்பளித்து கொண்டிருந்த சோகங்களுக்கு அணைக்கட்டி, புன்முறவலால் அவற்றை போர்த்தினாள்.

நிர்மலாவின் தோளை சுற்றி வளைத்து, “உன் புருஷனுக்கு மட்டும் தான் இன்பதிர்ச்சி கொடுக்க தெரியுமா… என் ஹரிக்கு தெரியாதா?” கேட்டு, கண்சிமிட்டியவள், “தாங்க் யூ மா!” என்று மென்மையாக நன்றி கூறினாள்.

“அதெல்லாம் இருக்கட்டும் டி! ஹரி எங்க? அவங்க அம்மா எங்க?” விடாமல் நச்சரித்தாள் நிர்மலா.

அவள் கண்ணிலிருந்த தவிப்பை கவனித்தாள் மீரா. வீட்டிற்குள் வந்து அனைத்தையும் விளக்குவதாக சொல்லி உள்ளே அழைத்துச் சென்றாள். அவர்கள் நம்பும்படி, ஒரு பொய்காரணம் சொல்வதற்கு யோசிக்க, அந்த இரண்டு நிமிடங்கள், அவளுக்கு தேவைப்பட்டது.

வாசற்கதவையே பார்த்து கொண்டிருந்த வரதன், பெண்கள் பேச்சுக்குரல் கேட்டதும், கதவருகே ஓடி வந்தார். மனைவி சொல்லுக்கு கட்டுப்பட்டு, எதுவும் பேசாமல் நின்றார். ஆனால், வார்த்தைகளை விழுங்க தெரிந்தவருக்கு, உணர்ச்சிகளை மறைக்க தெரியவில்லை. மகளை ஏக்கத்துடன் பார்த்த கண்கள், உண்மை உணர்வுகளை உரக்க பேசியது.

பல நாட்களாக தந்தையிடம் கண் பார்த்து பேசாத மகளுக்கும், துக்கம் தொண்டையை அடைத்தது. தன்னையும் மீறி, தந்தை அருகே ஒடிச் சென்றவள், அவர் மார்பில் சாய்ந்து, “மன்னிச்சிருங்க பா! மரியாதை இல்லாம, வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி, உங்க மனச நோகடிச்சிட்டேன்!”  என்று குமுறினாள்.

மகள் தோளில் தட்டிக்கொடுத்தவர், மனைவியை பரிதாபமாய் பார்த்து கெஞ்ச, அவரை பேசும்படி, கண்ஜாடை காட்டினாள், நிர்மலா.

“இல்ல டா செல்லம்; தப்பு என் மேலையும் தான்….” மென்மையாக தொடங்கியவர், “உன்னோட விருப்பத்த புரிஞ்சுக்காம, உனக்கு நல்லது செய்யறேன்ற பேருல, ரொம்ப பிடிவாதமா இருந்துட்டேன்.” என்றார்.

“இருந்தாலும்….” மகள் மறுபடி தொடங்க, நிர்மலா குறுக்கிட்டாள்.

“சொல்லு டி! ஹரி எங்க?” என்று வினவினாள்.

“ஆமாம் மா! அவங்க எங்க… ஹரிக்கு இன்னும் என் மேல கோவமா…!” கேட்டவர், வாசலை பார்த்தார்.

சொல்ல, சரியான காரணம் கிடைக்காமல் தவித்தவள், “அப்படியெல்லாம் இல்ல பா… நாளைக்கு வரேன்னு சொல்லிருக்கான்.” பொதுவாக பேசி சமாளித்தாள்.

“நாளைக்கா… இன்னைக்கே வந்திருக்கலாமே… உண்மைய சொல்லு மீரா… ஹரிக்கு ஏதாவது வருத்தமா…” என்றவர், “ஹரிக்கு ஃபோன் போட்டு தா மா…இப்போவே வரச்சொல்லி, நான் வேணும்னா பேசி பார்க்கறேன்.” யோசனை சொன்னார்.

தந்தை காட்டிய உற்சாகத்தில், ஒரு நொடி கவலைகளை எல்லாம் மறந்து சிரித்தாள் மீரா. அவர் கன்னத்தை செல்லமாக கிள்ளி, “அவனுக்கு வருத்தம் எல்லாம் ஒண்ணும் இல்ல பா… உங்ககிட்ட, நான் சிரிச்சு பேசி எத்தன நாளாச்சு…அதான், முதல்ல, நம்ம மனசவிட்டு பேசினதுக்கு அப்புறம் அவன் உங்கள பார்க்க வரேன்னு சொல்லிருக்கான்!” ஒரு வழியாக பொய்காரணம் சொல்லி நிலமையை சமாளித்தாள்.

ஹரியின் பக்குவத்தை எண்ணி நெகிழ்ந்த தந்தை, அதற்கு மேல் விளக்கம் கேட்டு, அவளை தொந்தரவு செய்யவில்லை.

உடை மாற்றிக்கொண்டு வந்தவளுக்கு, பருக தேநீரும், வேகவைத்த நிலக்கடலையும் எடுத்து வந்தாள் நிர்மலா. வரதன் நிலக்கடலை தோலை அகற்றி, மகளுக்கு அன்பாய் கொடுக்க, அவள் அதை உண்டாள். ஆனால், அவள் சிந்தையெல்லாம் தன்னவனை பற்றி மட்டுமே இருந்தது. ஏலக்காய் டீ போட்டு தர சொல்லி, ஆசையாய் வந்தவன், ஏதாவது சாப்பிட்டு இருப்பானா; வாசுகியின் கோபம் தணிந்ததா என்று யோசித்தாள்.

இரவு எட்டு மணியளவில் வாசுகி, அறையை விட்டு வெளியே வந்தாள். கோபம் தணிந்து அல்ல; பிள்ளை பசியாய் இருப்பான் என்ற தாய்பாசத்தில்.

முடிவே இல்லாத பிரச்சனைகளுக்கு தீர்வு தேடி சலித்து போனவன், ஹாலில் கண்மூடி படுத்திருந்தான். அது உறக்கமில்லை; கண் திறந்தால், எங்கே பிரச்சனைகள் பாய்ந்து வந்து தாக்கிடுமோ என்ற பயத்தில், இறுக கண்மூடி கிடந்தான்.

இருள் சூழ்ந்த அந்த ஹாலில், வாசுகி, மின்விளக்குகளை உயிர்ப்பிக்க, அதில் கண்கூசி விழித்தான் ஹரி.

“வா சாப்பிடலாம்!” திடமாய் சொல்லிவிட்டு, வாசுகி நகர்ந்தாள்.

அவளை பார்த்த அடுத்த கணமே எழுந்தவன், அவளை பின் தொடர்ந்தான். “ப்ளீஸ் மா! எல்லாத்தையும் நான் சொல்றேன்” என்று கெஞ்ச, அவள் இன்னும் வேகமாக நடந்தாள்.

“நான் சொல்ல வரத கேட்காம, இப்படி பேசாம போனா என்ன அர்த்தம்!” லேசாக குரலை உயர்த்தி கேட்க, அதில் எரிச்சலடைந்தவள், அவன் பக்கம் திரும்பி முறைத்தாள்.

“அதான் அவளோட அப்பா சொல்லி எல்லாமே தெரிஞ்சுக்கிட்டேனே… நீ என்ன புதுசா சொல்ல போற?” ஏளனமாக கேட்டு, சமையல் அறைக்குள் புகுந்தாள்.

தான் முன்வந்து சொல்லாதது தான், அவள் கோபத்திற்கு காரணம் என்று புரிந்துகொண்டான் ஹரி. குற்றவுணர்ச்சியில், நின்றவனிடம், அவள் கேள்விக்கு பதிலேதும் இல்லை.

“மன்னிச்சிரு மா! உன்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம, நான் இப்படியொரு காரியம் செஞ்சது தப்பு தான், “என்று ஒப்புக்கொண்டவன், ”ஆனா, நான் ஏன் அப்படி செஞ்சேன்னு, விளக்க ஒரு சந்தர்ப்பம் கொடு மா!” என்று கெஞ்சினான்.

அவள் மௌனமாய் நின்றாள். ஹரி மேலும் பேசினான். “எனக்கே என் மேல நம்பிக்கை இல்லாதப்போ, அவளோட மொத்த சேமிப்பு பணத்தையும் கொடுத்து, என்ன எழுதறதுல மட்டும் கவனம் செலுத்த சொன்னாமா மீரா. என்ன, அந்த நிலமையிலும், கல்யாணம் கூட செய்துக்க தயாரா இருந்தா…” என்று தொடங்கியவன், அவள் அப்பாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபாங்கள், அவள் அந்த நிலமையிலும் உறுதியாய் இருந்தது என, எல்லாவற்றையும் விளக்கி,

“இப்படி, அவளோட வாழ்க்கையையே என்னோட பங்கு போட்டுக்க தயாரானவளுக்கு, நான் ஏதாவது செஞ்சு, என் அன்ப நிரூபிக்கணும்னு நெனச்சேன் மா. அதான் நம்ம வீட்ட அவ பேருக்கு மாத்தினேன்….” விளக்கம் சொல்ல,

அதை கேட்டு ஏளனமாக சிரித்தாள் வாசுகி. “’உன்’ அன்ப, ‘உன்’ காதலிக்கு நிரூபிக்க, ‘உன்னோட’ சொந்த உழைப்புல சேர்த்த சொத்த தரணும்… இப்படி, அப்பன் பாட்டன் சம்பாதிச்சத எல்லாம் எழுதி கொடுத்து, நல்ல பேரு வாங்க பார்க்குற!” என்று அழுத்திச்சொல்லி, சோஃபாவில் அமர்ந்தாள்.

‘யார் உழைப்ப யாருக்கு தர ஹரி!’ மீரா கேட்டது நினைவுக்கு வந்தது. அம்மாவும் அதே போல கேட்க, அவர்களுக்குள் இருந்த ஒற்றுமையை எண்ணி பார்த்தவனுக்கு, அந்த பிரளயத்திலும் இதழோரம் ஒரு சிறு புன்னகை.

வாசுகி அருகே அமர்ந்தவன், அவள் கைகளை தன்னுள் அடக்கி, “தப்பு தான் மா! யார் உழைப்ப யாருக்கு தரது!” தன்னவளை போலவே சொல்லி, “நாளைக்கே இத பழையபடி என்பேருக்கு மாத்திக்கறேன்.” என்று உறுதி அளித்தான்.

கைகளை தன் பக்கம் திருப்பி கொண்டவள், “மாத்திக்கிட்டு…” ஏளனமாக கேட்டு முறைத்தவள், “அம்மா கொடுமகாரி… மீரா தியாகி, பொறுமைசாலின்னு, ஊர் பூரா சொல்லுவ… அப்புறம், உன் பொண்டாட்டி, இதையே காரணம் காட்டி, என்ன முதியோர் இல்லத்துல போய் சேர்க்கலாம்னு சொல்லுவா… இது தானே உங்க திட்டம்!’

தன் தவறை ஒப்புக்கொண்டும், அம்மா குத்தலாக பேசுகிறாளே என்று ஹரி எரிச்சலடைந்தான். “ஏன் மா ஏதேதோ கற்பனை செஞ்சு வீணா பயப்படற?” கோபமாக கேட்டான்.

“பயப்படாம வேற என்ன செய்ய சொல்ற ஹரி!” விரக்தியாக சொல்லி, “உங்க காதலுக்கு சம்மதம் சொன்ன அன்னைக்கே, மற்ற விஷயத்தோட, இதையும் சேர்த்து சொல்லிருந்தா, பயப்பட்டிருக்க மாட்டேன். மீராகிட்ட வாய்விட்டு மன்னிப்பு கேட்டும், அவளுக்கும், என்கிட்ட இந்த விஷயத்த சொல்லணும்னு தோணல… மறந்து போயிட்டேன், சொல்ற அளவுக்கு, இது ஒண்ணும் சாதாரண விஷயம் கிடையாது… அப்போ ரெண்டு பேரும் திட்டம்போட்டு தானே மறச்சிருக்கீங்க…”

“அம்மா! ப்ளீஸ் புரிஞ்சுக்கோ மா! இத பற்றி, மீராவுக்கு ஒண்ணுமே தெரியாது… சொல்லாம இருந்தது நான் தான்… அது கூட, மீரா அப்பா, அந்த கவர பிரிச்சு பார்த்தவுடனே, மீரா உட்பட எல்லாருக்கும் சொல்லிடலாம்னு நெனச்சேன் மா!” மீராவுக்காக வாதாடினான் ஹரி.

“பாராட்டு மட்டும் அவளுக்கு கொடுத்துட்டு, பழி எல்லாம் நீ சுமக்கலாம்னு நினைக்கிறியா ஹரி!” நக்கலாக பேசி, “உன்னோட அம்மாவுக்கு படிப்பறிவு அவ்வளவு இல்ல தான்… ஆனா, நிஜம் எது, பொய் எதுன்னு புரிஞ்சிக்க தெரியாத அளவுக்கு மக்கு இல்ல டா!”

அவள் எதிரே தரையில் மண்டியிட்டு அமர்ந்து, கைகளை இறுக பிடித்தவன்,

“திரும்பவும் மீராவுக்காக பரிஞ்சு பேசுறேன்னு நினைக்காத மா… உன்ன ஹோமுக்கு அனுப்ப நினைக்கறவ எதுக்கு, இப்படி, தினம் தினம் வலிய வந்து உன்னோட உறவாடணும்… கதையில வர மாமியார் மாதிரியே பழகுவியான்னு உன்ன கேட்கணும்… அவ்வளவு ஏன்… இன்னைக்கு காலையில கூட, நான் அவள அவ்வளவு திட்டியும், நீ ஊட்டிவிடற பொங்கல சாப்பிட்டாளே… இதெல்லாம், உன்ன, என் கிட்டேந்து பிரிக்க நினைக்கறவ பண்ணற வேலையா… கொஞ்சம் யோசிச்சு பாரு…” என்றதும், வாசுகி சிந்திக்க தொடங்கினாள்.

அவள் மௌனத்தை சாதகமாக்கி, ஹரி மேலும் பேசி, அவளுக்கு தெளிவுபடுத்த முயன்றான்.

“நம்ம வீட்ட, அவ பேருக்கு மாற்றி கொடுத்து, ஒன்றரை வருஷத்துக்கு மேல ஆச்சு… இந்த சொத்து தான் பெருசுன்னு அவ நெனச்சியிருந்தா, கைக்கு வந்த அடுத்த நிமிஷமே, என் உறவ வேண்டாம்னு சொல்லிருப்பா… நான் மட்டும் வேணும்னு நினைக்கறவ, எதுக்கு, வீடு தேடி வந்து, நீ அவமான படுத்தி பேசினத எல்லாம் பொறுமையா கேட்டுக்கணும்.

 என் பேருல வீட்டு லோன் கிடைக்காத போது கூட, நம்ம வீட்ட வித்தோ, அடமானம் வெச்சோ கடன் வாங்குன்னு சொல்லல… தன் பேருல, கடன் வாங்கிருக்கா… நாளைக்கே என்னால அந்த பணத்த கட்ட முடியலேன்னா, கடன்காரங்க, அவ வீட்டு முன்னாடி தான் வந்து நிற்பாங்க… அவள தான் கேள்வி கேட்பாங்க!”

தன்னால் முடிந்த அளவுக்கு விளக்கியவன், “நான் அவளுக்கு நம்ம வீட்ட கொடுக்க நினைக்கறதும், அவ எனக்காக கடன் சுமைய ஏத்துகறதும், நாங்க ஒருவர் மேல ஒருவர் வெச்சிருக்க அன்பு கலந்த நம்பிக்கையின் வெளிப்பாடு மா!” மனதில் உள்ளதை கொட்டியவன், மேஜயிலிருந்த பத்திரங்களை, நேர்த்தியாக அடுக்கி, அவள் கையில் திணித்தான்.

“நான் செஞ்சது தப்பு தான்; அத கூடிய சீக்கிரம் சரி செய்யறேன்!” சொன்னவன் மனதில் ஒரு திட்டம் வரைந்தான். “அதுவரைக்கும், இதெல்லாம், உன் கிட்டையே இருக்கட்டும்… போய் உள்ள வெச்சிட்டு வா… சாப்பிடலாம்… ரொம்ப பசிக்குது!” என்று வயிற்றை தடவினான்.

மகன், பசி என்று சொன்னதும் பதறிகொண்டு எழுந்தாள். எழுந்தவள், கையோடு, பத்திரத்தையும் எடுத்துச் சென்றாள். அம்மா, இன்னும் மனமாறவில்லை என்று நொந்தவன், எழுந்து சோஃபாவில் அமர்ந்தான்.

திடீரென்று, ஒரு விஷயம் நினவுக்கு வர, “அம்மா! ஒரு நிமிஷம்!” என்று அழைத்து தடுத்தான்.

அவள் நிற்க, ஹரி மேலும் பேசினான். “இதெல்லாம் மாமாவுக்கு முன்னாடியே தெரியும். அவர் தான் எனக்கு, இந்த ஏற்பாடுகள் எல்லாம் செய்ய உதவினார்… அவர் மேலையும் தப்பு இல்ல… நான் தான் அவர கட்டாயப்படுத்தினேன்… ஒளிவுமறைவு இல்லாம, எல்லா விஷயத்தையும், உன்கிட்ட சொல்லணும்னு தான் சொல்றேன்.” உண்மையை ஒப்பித்தான்.

இன்னும் எத்தனை எத்தனை ரகசியம் இவனிடம் உள்ளதோ என்று நினைத்தவள், மௌனமாக நகர்ந்தாள்.

மீரா வீட்டில், வெகுநாட்களுக்கு பிறகு, மூவரும் சேர்ந்து உணவு அருந்தினர். மகளுக்கு, திருமணம் கைக்கூடியதை எண்ணி, மகிழ்ந்த நிர்மலா, தடபுடலாக சமைத்திருந்தாள். அதை ருசித்து சாப்பிட தான் மீராவால் முடியவில்லை. அவள் சிந்தையெல்லாம், ஹரியே நிறைந்திருந்தான்.

சாப்பிட்டு முடித்து, தனிமையை நாடி, தன் அறையை நோக்கி நடந்தவளை வரதன் அழைத்தார்.

“ஒரு நிமிஷம், இங்க வா டா செல்லம்!” அன்பாக அழைத்த தந்தையை, பின் தொடர்ந்து, அவர் அறைக்குள் நடந்தாள் மீரா. அலமாரியிலிருந்து, ஹரி எழுதிய கடிதத்தை எடுத்து, அவளிடம் நீட்டினார். அதை வாங்கி படித்தவளின் கண்களும் பளபளத்தது.

‘நீ சரியான லூசு டா ஹரி… உன் அன்ப நிரூபிக்க, உனக்கு வேற வழியே தெரியலையா டா…’ மனதில் நினைத்தவளுக்கு, மாலையில் நடந்த கசப்பான தருணங்கள் நினைவுக்கு வந்தது. மகள் ஆனந்தகண்ணீர் வடிக்கின்றாள் என்று தவறாக புரிந்து கொண்ட தந்தை, ஹரியின் அருமை பெருமைகளை பற்றி பேச,

“அப்பா! அப்போ, இந்த லெட்டர படிச்சிட்டு தான், எங்க கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னீங்களா?” என்று வினவினாள்.

அப்பா, வீட்டு பத்திரத்தை திருப்பி கொடுத்துவிட்டதால், அவருக்கு பணத்தாசை இல்லை என்று புரிந்துகொண்டாள் மீரா. ஆனால் ஹரி, வீட்டை தன் பெயருக்கு மாற்றி எழுதியதை பார்த்து, அவர் காதலுக்கு சம்மதம் சொல்லியிருப்பது , ஹரியின் நற்குணத்தை பணத்தால் எடைப்போடுவது போல இருந்தது அவளுக்கு. ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில், தான் ஏதாவது ஏடாகூடமாக கேட்டுவிடப் போகிறோம் என்று எண்ணியவள், மேலோட்டாமாக வினவினாள்.

வரதன் பேசுவதற்குள், அச்சமயம், அங்கு வந்த நிர்மலா பேசினாள். “நாங்க, ஹரியோட நேர்காணல டிவியில பார்த்தோம். ஹரி, உன்ன பற்றி உயர்வா பேசினத பார்த்து தான், அப்பா உங்க அன்ப புரிஞ்சுகிட்டாரு!” என்றாள்.

அதை கேட்ட, மீராவின் கண்கள் மீண்டும் பளபளத்தது; இம்முறை, அது ஆனந்த கண்ணீர்.

“அதுக்குதான் பா… உங்கள அப்போவே கேஸெட்ட போட்டு பார்க்க சொன்னேன்!” குழந்தை போல மீரா சண்டையிட,

“ஹரி அன்னைக்கு வந்து, தன் கதைய, சினிமா படமா எடுக்க மாட்டேன்னு சொன்ன அப்போவே, உங்க அப்பா மனச மாத்திக்கிடாரு தெரியுமா!” கணவருக்காக பேசியவள், அவர் நிதானமாக சிந்தித்து திட்டங்களை விவரித்து,

“நீ மட்டும், வீடு வாங்கின விஷயத்த பற்றி தன்மையா பேசியிருந்தா, எப்பவோ, அவர், உங்க காதலுக்கு பச்சைகொடி காட்டியிருந்திருப்பாரு!” அலட்டல் இல்லாமல் சொன்னாள் நிர்மலா.

“நாங்க வீடு வாங்கினது, உங்களுக்கு தெரியுமா!” வாயை பிளந்தாள் மீரா.

மனைவி பொடி வைத்து பேசுவது பொறுக்காமல், “போதும் டி! குழந்தைய எவ்வளவு நேரம் சீண்டுவ!” செல்லமாக கடிந்தவர், இருகரம் நீட்டி, மகளை அன்பாக அழைத்தார்.

தோளில் சாய்ந்த மகளுக்கு, தட்டிகொடுத்தபடி, அரவிந்தனிடம் பேசியது வரை, அனைத்தையும் விளக்கினார்.

கேட்டவள், கண்கள், அவர் சட்டையை நனைக்கும் அளவுக்கு பளபளத்தது; இம்முறை குற்றவுணர்ச்சியில்; பிடிவாதத்தை விட்டொழித்து, தன்னவன் பேச்சை கேட்டு, அன்றே உண்மையை சொல்லி இருந்தால், இன்று நடந்த பிரச்சனையை தவிர்த்திருக்கலாம் என்று உணர்ந்தாள்.

“மன்னிச்சிருங்க பா!” மீரா மறுபடியும் வருந்த, இது தான் சந்தர்ப்பம், என்று நிர்மலா, வளைந்து கொடுப்பதை பற்றியும், தழைந்து போவதை பற்றியும், ஓயாமல் பாடம் எடுத்துக்கொண்டிருந்தாள்.

மனைவியை கடிந்து, மகளுக்காக வரதன் பரிந்து பேச, அதை கேட்டு உறுகியவள், “அப்பா! உங்க மடியில கொஞ்ச நேரம் தலை வெச்சு படுக்கட்டுமா!” கேட்டவள், குழந்தையாகவே மாறிவிட்டாள்.

தொடர்ந்து படிக்க, Click Here அன்பின் ஆழம் 36.2