அன்பின் ஆழம் – 35.1

ஹரி நேர்காணலை திரையில் பார்த்ததை பற்றி அஞ்சலி, அலுவலகத்தில் இருந்து வந்த அரவிந்தனிடம் ஓயாமல் பேசி கொண்டே இருந்தாள். அரை மணி நேரமாக, தன்னை போகுமிடமெல்லாம் பின்தொடர்ந்து வந்தவள், நண்பர்கள் காதலை பற்றியே விவரித்து கொண்டிருக்க, அதை கேட்டு சலித்து போனவன், அவள் சற்றும் எதிர்ப்பார்க்காத நேரத்தில், அவள் பக்கம் வெடுக்கென்று திரும்பினான். திரும்பிய வேகத்தில், அவளை இடையோடு சேர்த்து அணைத்தவன்,

“அஞ்சலி மா! அதான் நம்ம ரோமியோ பேசினத நேருலேயே பார்த்தோமே… போர் அடிக்காம வேற ஏதாவது பேசுமா” பெருமூச்சுவிட,

அவன் சட்டை பட்டனை சுழற்றி விளையாடிவள், “நீங்க மட்டும், ஆஃபீஸ் மீட்டிங்க்ல தொண தொணன்னு, ஹரி எழுதின புத்தகம் பற்றி பேசுவீங்க… அதே நான் பேசினா போரா!” சுருங்கிய முகத்துடன் செல்லம் கொஞ்சினாள் அஞ்சலி.

அதை இரசித்து மென்மையாக சிரித்தவன், “அந்த வாயாடி போட்டுக்கொடுத்தாளா?”  என்று, அஞ்சலி தலையில் செல்லமாக முட்டினான்.

விழிகள் உயர்த்தி அவனை பார்த்தவள், “ம்ஹூம்! கீதா சொன்னா!” என்று கண்சிமிட்டினாள்.

“என்ன ஓட்டுறதே, அவ முழு நேர வேலையா செஞ்சிட்டு இருக்கா!” முணுமுணுத்தவன், அலுவலகத்தில், அவள் வேலை பளுவை அதிகமாக்குவதாக சொல்லி, பொய் கோபம் கொள்ள,

அதை கேட்டு பதறிய அஞ்சலி, “ச்சீ பாவம் பா கீதா! சஹானாவ விட்டுட்டு, அவ வேலைக்கு வரதே கஷ்டம்…அப்படியெல்லாம் விளையாட்டுக்கு கூட செஞ்சிடாதீங்க!” என்று பரிதாபப்பட்டாள்.

அதை கேட்டவன், அவளை இன்னும் நெருக்கமாக சேர்த்து அணைத்து, “நமக்கு கல்யாணமாகி, அடுத்த வாரத்தோட பத்து மாசமாகப்போகுது… நம்ம திட்டம் நியாபகமிருக்கா!”, கேட்டு, “என்ன முடிவு எடுத்திருக்க?” அவள் முகமருகே கிசுகிசுத்தான்.

திருமணமாகி, பத்தாவது மாதம் பூர்த்தியாகுமன்று, காப்பகத்திலிருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். இது வரை பழகிய குழந்தைகளில், பன்னிரெண்டு பேரை, அரவிந்தன் பட்டியலிட, அவர்களுள் ஒருவரை தேர்ந்தெடுக்க சொல்லி, அஞ்சலியிடம் கூறி இருந்தான்.

அவன் கழுத்தை சுற்றி, விரல்களால் கோர்த்தவள், “ம்ம்… ரிஷி, பவி, அனு, சாயி….” பெயர்களை உரக்க சொல்லி யோசிக்க,

தொண்டையை செருமிக்கொண்டு, அகிலா அவர்கள் அறையின் பாதி திறந்திருந்த கதவை தட்டினாள்.

இளஞ்ஜோடிகள், திடுக்கிட்டு விலகி, அவளை கண்கள் விரிய பார்க்க, “அரவிந்த்! உன்ன பார்க்க, மீராவோட அப்பாவும், அம்மாவும் வந்திருக்காங்க!” தகவல் சொன்னாள்.

அதை கேட்டவர்களின், விரிந்திருந்த கண்கள், இன்னும் அதிகமாய் விரிந்தது. ஒருவரை ஒருவர் யோசனையாய் பார்த்துக் கொண்டனர்.

அம்மாவிடம் இரண்டு நிமிடத்தில் வருவதாக சொல்ல, அவள் நகர்ந்தாள்.

“எதுக்காக வந்திருக்காங்கன்னு தெரியலையே? காலையில கூட மீரா, அவ அப்பாகிட்ட, வீடு வாங்கின விஷயத்த பற்றி இன்னும் சொல்லலேன்னு ஹரி அவள திட்டிட்டு இருந்தான்…” அரவிந்தன் தீவிரமாய் யோசிக்க,

அவன் சட்டை காலரை சரி செய்தவள், “எதுவா இருந்தாலும், நம்ம மீரா-ஹரிக்காக பொறுமையா பேசுங்க!” தாழ்ந்த குரலில் அறிவுறுத்தினாள்.

தயக்கத்துடன் நடந்து வந்த இளஞ்ஜோடிகள், அவர்களிடம் மென்மையாய் பேசி நலன்விசாரித்தனர். வரதன் தன்மையாய் பதிலளித்த விதத்திலேயே, அவர் நல்ல எண்ணத்தோடு தான் வந்திருக்கிறார் என்று தோன்றியது அரவிந்தனுக்கு. இளஞ்ஜோடிகள், எதிரில் இருந்த சோஃபாவில் உட்கார, அகிலா, வந்தவர்களுக்கு, அருந்த காபி கொடுத்தாள்.

“அரவிந்த்! உன்கிட்ட கொஞ்சம் பெர்ஸனலா பேச வந்திருக்கோம்!” வரதன் தொடங்க,

அடுத்த கணமே, அஞ்சலி எழுந்தாள். அவள் கையை பிடித்து தடுத்தவன், உட்காரு அஞ்சலி!” அதிகாரமாய் சொல்லி, “எங்களுக்குள்ள எந்த ஒளிவுமறைவும் இல்ல. அஞ்சலியும் இங்க தான் இருப்பா!” அவருக்கு திடமாய் பதில் சொன்னான்.

அவர்கள் அன்யோனியத்தை கவனித்து மென்மையாக சிரித்தவர் சிந்தனையில், ஹரி-மீரா ஒருவர் மீது ஒருவர் கொண்ட அசைக்கமுடியாத அன்புதான் நினைவுக்கு வந்தது.

‘இந்த தலைமுறை பிள்ளைகள், எவ்வளவு பக்குமானவர்கள்!’ மனதில் நினைத்தவர், “இருக்கட்டும் பா!” அவனுக்கு பதில் சொல்லி, “ஸாரி மா! நான் அந்த அர்த்தத்துல சொல்லல!” அஞ்சலியிடமும் சொன்னார்.

“சொல்லுங்க அங்கிள்! என்ன விஷயம்?” பணிவாக கேட்டான் அரவிந்தன்.

“அது… அது… நீங்க எல்லாரும் அன்னைக்கு ரெஜிஸ்டர் ஆஃபிஸ் எதுக்காக போனீங்க?” ஒரு வழியாக கேட்டார்.

காரணம் இல்லாமல், இவர் தழைந்து போக மாட்டாரே என்று அரவிந்தன் முகம் மாற, அவன் சந்தேகத்திற்கு விடை சொல்வது போல, நிர்மலா பேசினாள்.

“பயப்படாத அரவிந்த்! நாங்க உன் நண்பர்கள் காதலுக்கு சம்மதம் சொல்ல தயாராகிட்டோம்…” அவள் சொன்னது தான் தாமதம். எதிரில் இருந்த இருவர் முகமும், மகிழ்ச்சியில் மலர்ந்தது.

“ஆனா, இவர்கிட்ட யாரோ, அவங்க அங்க கல்யாணம் செய்துகிட்டதா தவறான தகவல் கொடுத்துட்டாங்க…அதையும் நம்பி, இவர், மீரா கிட்ட…”கணவரை பார்த்து முறைத்தவள், “ஏடாகூடமா கேட்டு… அதுக்கு அவ உண்மைய சொல்ல மாட்டேன்னு பிடிவாதமா இருக்கா!”  அரவிந்தனிடம் விளக்கினாள்.

தோழியின் குணத்தை பற்றி நன்கு அறிந்தவனுக்கு, இதற்கு மேல் விளக்கமேதும் தேவையிருக்கவில்லை. ஆனால், அவளை மீறி, தான் உண்மையை சொல்லிவிட்டால், தன்மீது சீறிப்பாய்வாளே என்று ஒரு பக்கம் பயந்தவன், உண்மை அறியும் பெற்றோர், சம்மதம் சொல்லும் தங்கள் முடிவில் நிலையாய் இருப்பார்களா என்றும் கவலைபட்டான்.

“நான் சொல்றேன் அங்கிள்! ஆனா, அத கேட்டு, நீங்க மறுபடியும், அவங்க மேல கோபப்படாம இருக்கணும்… பிராமிஸ் பண்ணுவீங்களா?” கேட்டவன், விரலை நீட்டி, பிங்கி பிராமிஸ் கேட்காதது ஒன்று தான் குறை.

தன் பிடிவாதத்தால், இவர்கள் மனதை எல்லாம் எவ்வளவு புண்படுத்தி இருக்கோம் என்று வருந்தியவர், “அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காது அரவிந்த்! ஹரி நேர்காணல் பார்த்ததிலேயே, அவன் எவ்வளவு நற்குணம் படைத்தவன்னு எனக்கு புரிஞ்சிடுத்து…” தொடங்கியவர், ஓயாமல், அந்த நிகழ்ச்சியில் அவன் பேசியதை அனைத்தையும் விளக்கினார்.

வேறுவழியில்லாமல், அரவிந்தனும் பொறுமையாக தலையசைத்தான். அருகில் இருக்கும் அஞ்சலி, “போர் அடிக்காதேன்னு, அவர் கிட்ட சொல்லுங்க பார்க்கலாம்!” அவன் காதில் கிசுகிசுத்து, பின்முதுகில் நறுக்கென்று கிள்ளிவிட்டாள். கிள்ளியதால் ஏற்பட்ட வலியை கூட வெளிக்காட்டாமல் கவனமாய் அவருக்கு தலையசைத்து கொண்டிருந்தான் அரவிந்தன்.

(நண்பர்கள் மீது அத்தனை பாசம் அவனுக்கு…)

முழுவீச்சாக ஒப்பித்தவர், “சரி! சொல்லு பா! அன்னைக்கு என்ன நடந்துதுன்னு… மீரா வரத்துக்குள்ள, நாங்க வீட்டுக்கு போகணும்!” என்றார்.

இனி அவரை பேசவிட்டால், ஹரி எழுதிய புத்தகங்களை பற்றி விமர்சிப்பார் என்று நினைத்து, உண்மையை உடைத்தான் அரவிந்தன்.

“அங்கிள்! அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து, ஹரி இப்போ குடியிருக்கற வீட்ட வாங்கிட்டாங்க. அத ரெஜிஸ்டர் பண்ண தான் அன்னைக்கு அங்க போனோம்!” பதற்றமே இல்லாமல் சொன்னான்.

கேட்டவர் தான் குற்றவுணர்ச்சியில் தலைகுனிந்தார். தான் மகளிடம் கொச்சையாக பேசியதை பற்றி மிகவும் வருந்தினார். நிர்மலா, காதல் ஜோடிகளின் செயலை அறிந்து நெகிழ்ந்தாள். இரண்டு நிமிடத்திற்கும் மேல் மௌனமாக முகத்தை தொங்கப்போட்டு கொண்டிருப்பவரை கண்ட அரவிந்தனுக்கு தான் கவலையாய் இருந்தது.

“அங்கிள்… ஆன்டி….!” மென்மையாய் அழைத்தான் அரவிந்தன்.

“இவ்வளவு நல்ல விஷயம் செஞ்சியிருக்காங்க… ஒரு வார்த்தை எங்ககிட்ட சொல்லி இருக்கலாமே…” ஏக்கமாய் வரதன் பேச,

“ஆமாம் அரவிந்தா! இவர் மனசுமாறி எவ்வளவோ நாளாச்சு பா… மீரா பிறந்தநாள் அன்னைக்கு அவளுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கலாம்னு நெனச்சாரு… அதுக்குள்ள என்னென்னமோ நடந்திருத்து…” கணவருக்காக பேச,

“ஹரி முதலேந்து, இத பற்றி வீட்டுல சொல்லிடலாம்னு தான் மீரா கிட்ட சொன்னான். ஆனா அவதான் அப்போவும் சரி, இப்போவும் சரி, ரொம்ப பிடிவாதமா இருக்கா…” என்றதும்,

“கேட்டீங்களா! உங்க பொண்ணு தான் வீம்பு பிடிக்கறா!” தன் யூகம் எவ்வளவு சரி என்று, நிர்மலா, கர்வமாய் சொல்ல, வரதனும் தலையசைத்தார்.

“எதுக்காக இவ இவ்வளவு பிடிவாதம் பிடிக்கறா பா!” வினவினாள் நிர்மலா.

“அது ஆன்டி… வீட்டுலோன், ஹரி பேருல ஸாங்க்ஷன் ஆகல; அவங்களுக்கு அந்த வீட்டுல பல பசுமையான நினைவுகள்…விடவும் மனசு வரல…அதான்… அதான்… மீரா பேருல லோன் எடுத்திருக்காங்க….” சொன்னவன், ஒரு நொடி, அவர்களை பார்த்தான். இருவரும் மௌனமாக அவன் பேச காத்திருந்தனர்.

“ஆனா, மாசாமாசம் ஈ.எம்.ஐ, ஹரி தான் கட்டறான்…இதெல்லாம் நீங்க புரிஞ்சிக்காம, எங்க நீங்க ஹரிய தப்பா பேசிடுவீங்களோன்னு பயந்து தான் மீரா, உங்ககிட்ட சொல்லாம, பிடிவாதமா இருக்கா.” விவரமாய் சொல்ல அவர்களுக்கு எல்லாம் விளங்கியது.

‘வீடு வாங்குவத எவ்வளவு பெரிய பொறுப்பு… அதை நிதானமாக சிந்தித்து, வரவு-செலவுகளை கணக்கிட்டு, காதலர்கள் எவ்வளவு பக்குவமாக முடிவெடுத்திருக்கிறார்கள்’ மனதில் நினைத்து பூரித்தவர், மேலும் எதுவும் பேசாமல், நன்றி கூறி, புறப்பட எழுந்தார்.

வரதன் என்ன நினைக்கிறார் என்று புரியாமல் தவித்த அரவிந்தன், அவர் அருகே ஓடினான். அவர் கைகளை இறுக பிடித்தவன், “ஹரி, ரொம்ப நல்லவன் அங்கிள்… மீரா பேருல கடன் இருக்கறத பற்றி, அவன் வருந்தாத நாளே கிடையாது… அத எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அடைக்கணும்னு கடுமையா உழைக்குறான்…தனக்குன்னு அவன் எந்த வீண் செலவும் செஞ்சிக்குறது இல்ல…” பெருமூச்சுவிட்டவன், மேலும் பேசினான்.

“இப்போ, விருது வாங்கறப்ப, சன்மானமா கொடுத்த தொகைல கூட, வீட்டுக்கடன் அடைக்கலாம்னு சொன்னான். மகேஷ் தான், தொடக்கத்துல ஈ.எம்.ஐ பெரும்பாலும், வட்டிக்கு தான் போகும்னு சொல்லி, சேமிக்க சொன்னான். உடனே, ஹரி அத மீரா பேருல ஃபிக்ஸட் டெபாசிட்டா போட்டிருக்கான். அவன் உண்மையிலே, மீராவ ரொம்ப நல்லா பார்த்துப்பான் அங்கிள்!” நண்பனை பற்றி கூற, அதில் ஸ்தம்பித்து போய் நின்றார் வரதன்.

எப்படியாவது, நண்பர்கள் திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்று நினைத்தவன், “நான் வேணும்னா, எல்லாத்தோட கணக்கு விவரமெல்லாம் உங்களுக்கு காட்டட்டுமா!” கெஞ்சல் குரலில் கேட்க,

“அதெல்லாம் வேண்டாம் அரவிந்த்! நான் ஹரிய நம்பறேன் பா… இனி ஒரு போதும் அவன சந்தேகப்படவே மாட்டேன்! இப்போவே போய் மீராகிட்ட பேசுறேன்!” மென்மையாய் சொன்னார்.

“அப்போ அங்கிள்! அடுத்த மாசமே அவங்களுக்கு கல்யாணம் செஞ்சு வெப்பீங்களா!” உற்சாகமாய் கேட்டாள் அஞ்சலி.

அவளுக்கு இருக்கும் அக்கறை கூட, மகள் மேல் தனக்கு இல்லையே என்று நொந்தவர், “நாளைக்கே செஞ்சு வெக்க கூட நான் ரெடி மா!” மென்மையாக சிரித்து, அவள் கன்னத்தில் செல்லமாக தட்டினார்.

“அவ்வளவு செல்லம் எல்லாம் உங்க பொண்ணுக்கு கொடுக்காதீங்க!” திடமாய் சொன்ன நிர்மலாவை மூவரும் பார்த்தனர்.

அவள் அரவிந்தன் பக்கம் திரும்பி, “அரவிந்தா! உனக்கு இப்போ இவர் மனநிலை நல்லா தெரியும். அப்பாகிட்ட தன்மையா பேச சொல்லி, உன் தோழிக்கு கொஞ்சம் அறிவுரை சொல்லு பா… அவ வாயால, அப்பாகிட்ட உண்மைய சொன்ன உடன, இவர், தன் சம்மதத்தை சொல்லட்டும்!”  தீர்மானமாய் சொன்னாள்.

“எதுக்கு டி… அதெல்லாம் வேண்டாம்!” மறந்துடலாம் என்றார் வரதன்.

“பாவம் ஆன்டி மீரா… ஏற்கனவே ரொம்ப நாள் காத்துக்கிட்டு இருக்கா!” அஞ்சலி ஒத்தூத,

“அவளுக்கும் வளைஞ்சு கொடுக்க தெரியணும் மா!” தீர்மானமாய் சொன்னாள் நிர்மலா.

இவர்கள் பேச்சை கேட்ட அகிலா, மருமகளை பின்னாலிருந்து அணைத்து, “அவங்க தொலைநோக்கு பார்வையோடு சொல்றாங்க அஞ்சலி. அரவிந்த் சொன்னா, மீரா கேட்பா!” அனுசரித்து வாழ்வதின்  இன்றியமையாமையை பற்றி உணர்ந்து பேசினாள்.

“சொல்பேச்சு கேட்பவளா, மீரா!” மனதில் எண்ணி சலித்து கொண்டான் அரவிந்தன்.

அவர்களை வழியனுப்பிவிட்டு வந்த அஞ்சலி, அகிலாவிற்கு உதவ சமையலறைக்குள் செல்ல, அவளை பின் தொடர்ந்தான் அரவிந்தன். அவளை தன் பக்கம் திருப்பியவன்,

“சொல்லு! சொல்லு! எந்த குழந்தைய தத்தெடுத்துக்கலாம்!” ஆர்வமாய் கேட்டான்.

அவன் மூக்கின் நுனியை பிடித்து கிள்ளியவள், “ஹரி-மீரா கல்யாணம் முடியட்டும்; அப்புறம் தத்தெடுத்துக்கலாம்!” என்று கண்சிமிட்டினாள். அவனும் சரி என்று சம்மதம் சொல்லி, அவள் கன்னத்தில் முத்தமிட, அங்கு வெட்கப்பட்டு நின்றது என்னமோ, அகிலா தான்.

மீரா வருவதற்குள், வரதனும், நிர்மலாவும் வீடு திரும்பி இருந்தனர். கேஸெட் இடத்தைவிட்டு நகரவில்லை என்று கண்டதிலேயே, மீராவிற்கு சரியான கோபம். அவர்கள் நிகழ்ச்சியை பார்த்தார்களா என்று கூட கேட்க தோணவில்லை அவளுக்கு.

மகளிடம் சொல்லிவிடலாம் என்று பார்வையால் கெஞ்சிய கணவரின் கோரிக்கையை, தீர்மானமாய் மறுத்தாள் நிர்மலா. அவளுக்கும், மகள் மீது அதீத பாசம் இருந்தது. புகுந்த வீட்டிற்கு செல்லும் மகள், வளைந்து கொடுப்பது அதைவிட அவசியம் என்று நினைத்தவள் தன் முடிவில் உறுதியாக இருந்தாள்.

எப்படியோ, ஒரு வாரம், தன்னவனிடம் ஏதேதோ காரணம் சொல்லி அப்பாவை சந்திக்காமல் பார்த்துக்கொண்டவளுக்கு இரவு முழுவதும் தூக்கமே இல்லை. விடியற்காலையில் எழுந்தவள், வழக்கத்திற்கு மாறாக, ஏழரை மணிக்கெல்லாம், அலுவலகம் புறப்பட்டாள். நிர்மலாவும், அவள் விஷயத்தில் தலையிடாமல் இருந்தாள்.

கால்மணி நேரத்தில், கதவருகே அவளை கண்டு வாசுகிக்கு தான் பெரும் வியப்பு.

“என்னமா மீரா! இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட!” என்றாள்.

அவளை தாண்டி, உள்ளே நுழைந்தவள், சமையலறையிலிருந்து வரும் வாசத்தை சுவாசித்தாள். “நீங்க செஞ்ச பொங்கல், சாம்பார் சுடசுட சாப்பிட்டு போகலாம்னு வந்தேன் அத்த!” சொல்லிக்கொண்டே, உரிமையோடு ஒரு தட்டில் தனக்கு வேண்டியதை பரிமாறிக்கொண்டாள்.

அவள் குழந்தைதனத்தை இரசித்தவள், அடுத்த வேலை செய்ய நகர, அவர்கள் பேச்சை கேட்டு வெளியே வந்தவன், “அப்பா கிட்ட சொல்லி இருக்கமாட்டீயே!” திடமாய் கேட்டு அவளை முறைத்தான்.

இல்லை என்று மட்டும் தலையசைத்து, சாப்பிடுவதில் கவனம் செலுத்தினாள்.

“எங்க நான் எட்டு மணிக்கு அவ வீட்டுக்கு வந்துட போறேனோன்னு, உஷாரா, இங்க சீக்கிரம் வந்துட்டு, உன்கிட்ட, பொங்கல் சாப்பிட வந்தேன்னு கதை கட்டறா மா!” அம்மாவிடம் பேசியவன் கண்கள் மட்டும், மீராவையே சுட்டெரித்தது.

அதை கேட்டு முகத்தை சுழித்து கொண்டவள், “அதான் தெரியுதுல எழுத்தாளரே…” செல்லம் கொஞ்சி, அவன் வாயில் கொஞ்சம் பொங்கலை ஊட்டிவிட வந்தாள்.

அவள் கையை வலிய பிடித்து தடுத்தவன், “ஆனாலும், உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது மீரா!” திடமாய் சொல்லி நகர்ந்தான்.

“உன்ன அவர் எதுவும் சொல்லிடக்கூடாதூன்னு… உன்ன பற்றி மட்டுமே யோசிச்சு தானே இதெல்லாம் செய்யறேன்… அது உனக்கு புரியலையா?” உரக்க கேட்டாள் மீரா.

கோபத்தில் அவளருகே வேகமாக திரும்பி வந்தவன், “அவர் என்ன பேசினாலும் பரவாயில்ல… நமக்காக பேசுன்னு சொல்றேனே… அது உனக்கு புரியலையா!” குரல் உயர்த்தி திருப்பி கேட்டான். அதை கேட்டவளுக்கு, வாயிலிட்ட உணவு, தொண்டைக்குழியில் சிக்கியது.

மனம்நொந்து அவள் தட்டை கீழே வைக்க, அவர்கள் வாதத்தை பார்த்த வாசுகி பதறினாள்.

“எப்படி இருந்தாலும், நீ தான் அவர்கிட்ட இன்னைக்கு சாயங்காலம் போய் பேச போறீயே ஹரி! பின்ன எதுக்கு இவகிட்ட வீணா சண்டை போடற!” மகனிடம் வினவியவள், தட்டில் இருந்த மீதி உணவை மீராவிற்கு ஊட்டிவிட்டு, “என்னிக்கா இருந்தாலும், அப்பா கிட்ட உண்மைய சொல்லிதான் ஆகணும் மீரா…நீ மனச போட்டு அலட்டிக்காத… ஹரி பக்குவமா எடுத்து சொல்லுவான்” என்று சமாதானம் செய்தாள்.

“அவ பிடிவாதம் உனக்கு தெரியாது மா!” தாயிடம் பேசியவன், தன்னவளை திடமாய் பார்த்து, “நான் கீழ வெயிட் பண்ணறேன்… சீக்கிரம் சாப்பிட்டு வா… என்ன நடந்தாலும் சரி… இன்னைக்கு சாயங்காலம் கண்டிப்பா அவர்கிட்ட போய் பேசப்போறேன்!’ சவால் விட்டு, வண்டி சாவியோடு நகர்ந்தான்.

“பேசு… பேசு… நல்லா அவமான படுத்துவாரு… கேட்டுட்டு வா!” அவளும் விடாமல் முணுமுணுத்தாள்.

மனஸ்தாபத்தோடு அலுவலகம் சென்ற காதல் ஜோடிகள் முகமே, அவர்கள் மனநிலையை எடுத்துக்காட்டியது. ஓரிரு முறை கீதா அலுவலகம் சார்ந்த விஷயங்களை பற்றி பேசிய போதே, மீரா சிடுசிடுத்தாள். அதற்கு பிறகு, அவளிடம் அனாவசியமாக பேச்சுக்கொடுக்கவில்லை அவள். மதியம் உணவு அருந்த வந்த அரவிந்தனும், வரதனிடம் பேசியதை பற்றி நேரடியாக சொல்லாமல், மறைமுகமாக அறிவுரை சொன்னான். ஹரி தான் அவனிடமும் புலம்பி இருப்பான் என்று நினைத்தவள்,

“அதான், அவன் இன்னைக்கு சாயங்காலம், பூகம்பமே வந்தாலும், எங்க அப்பாகிட்ட பேசுறேன்னு சொல்லி இருக்கான்ல… நீ எதுக்கு எனக்கு வீணா அறிவுரை சொல்லிண்டு…” அவனிடமும் எறிந்து பேசினாள்.

“விடுடா! இவ என்ன அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாலும், நான் பேசத்தான் போறேன்!” ஹரி, அவளை பார்வையால் சுட்டெரித்து கொண்டே, நண்பன் தோளில் தட்டி, பதில் சொன்னான்.

எப்படியோ, அவர்கள், வரதனை இன்றே சந்தித்துவிடுவார்கள் என்று புரிந்து கொண்ட அரவிந்தனும் அமைதியானான். ஹரியை தவிர எல்லாருடைய வாயும் அடைத்துவிட்டதாக நினைத்தாள் மீரா.

வெகு நாட்களுக்கு பிறகு, நிம்மதியாக தூங்கியது போன்ற ஒரு உணர்வு, வரதனுக்கு. பல முறை, நிர்மலாவிடம் பேசிப்பார்த்தும், அவள் முடிவில் உறுதியாக இருந்தாள். மகள் நலனுக்காக தான் சொல்கிறாள் என்று வரதனும் அவள் வழி நடந்தார். எனினும், அவர் சிந்தையெல்லாம், மீராவே சூழ்ந்து கொண்டாள்.

‘எத்தனை நாட்கள்… இல்லை இல்லை மாதங்களானது… மகளிடம் வெளிப்படையாக அன்பு செலுத்தி’ மனதில் நினைத்து ஏங்கியவர், மகளை கண்ணாலாவது தரிசனம் செய்யலாம் என்று அறையை விட்டு வெளியே வந்தார்.

பருக காபி கொண்டுவந்து கொடுத்த மனைவியிடம் “மீரா எங்க?” வினவியபடி, கண்களால், வீட்டை அலசினார்.

“அவ ஆஃபிஸ் கிளம்பிட்டா!” நிர்மலா சலித்து கொள்ள,

“இவ்வளவு சீக்கிரமா! ஏதாவது சாப்பிட்டாளா!” அக்கறையாய் விசாரித்தார்.

“சீக்கிரமா!” புருவங்கள் உயர்த்தி பேசியவள், “மணி எட்டாகுது… நீங்க லேட்டா எழுந்துட்டு, சீக்கிரமாவான்னு கேட்கறீங்க!” என்று நகர்ந்தவள், பாதி வழியில் திரும்பி, “ஒரு நாள் பட்டிணியா இருந்தா, ஒண்ணும் தப்பு இல்ல!” மற்றொரு கேள்விக்கும் பதில் அளித்தாள்.

“என்னது? எதுவும் சாப்பிடலையா?” என்று அதிர்ச்சி அடைந்தவர் அருகில் வந்தாள் நிர்மலா.

“ஒண்ணு மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டு முருங்க மறத்துல ஏறி உட்கார வேண்டியது… இல்ல இப்படி கண்மூடித்தனமா கொஞ்ச வேண்டியது… உங்களுக்கு சமநிலையாவே நடந்துக்க தெரியாதா?” கண்டித்து, “அவளா சொல்ற வரைக்கும், நீங்க எதுவும் கேட்க கூடாது…அது எத்தன நாள், எத்தன வருஷம் ஆனாலும் சரி!”  திடமாய் சொல்லி நகர்ந்தாள்.

“அவ பிடிக்கறது பிடிவாதம்னா… அப்போ நீ செய்யறது என்ன?” உரக்க கேட்டார் வரதன்.

அவரை பார்க்க திரும்பியவள், “அவ எல்லா விஷயத்துக்கும் பிடிக்குறா… நான் தேவையானதுக்கு மட்டும் தான் பிடிக்குறேன்!” இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை சொல்லி, அங்கிருந்து நகர்ந்தாள்.

தொடர்ந்து படிக்க Click Here – அன்பின் ஆழம் 35.2