அன்பின் ஆழம் – 34.2

வழியனுப்ப வாசல் வரை வந்தவன், “என்ன, உங்க அப்பா அவமானப்படுத்தி எதுவும் பேசிடக்கூடாதுன்னு தான், நாங்க சந்திக்காம இருக்க மெனக்கடறன்னு எனக்கு புரியுது டி…” மென்மையாக தொடங்கியவனை,

‘இவன் எப்படி, நான் மனசுல நினைக்கறத அப்படியே சொல்றான்!” மனதில் நினைத்து, அவனை ஆழமாய் பார்த்தாள்.

அவள் கன்னங்களை வருடியவன், “ஆனா, இப்போ அது முக்கியமில்ல… நம்ம சீக்கிரம் வாழ்க்கையில ஒண்ணு சேரணும்… நீதான் எனக்கு எல்லாமே மீரா…சொல்பேச்சு கேளு டி…ப்ளீஸ்!” நிதர்சனத்தை புரியவைத்தான்.

அப்போதும் பிடிக்கொடுக்காமல் பேசியவள், “எழுத்தாளரே! நீங்க எனக்கே எனக்காக எழுதற புத்தகத்துல, இன்னைக்கு, அம்மா நம்ம காதலுக்கு சம்மதம் சொன்ன மகிழ்ச்சியான தருணம் மட்டும் தான் இருக்கணும்… அதான் டைம் கேட்டேன்!” வேறொரு காரணம் சொல்லி,

“ஆனா, நான் தேம்பி தேம்பி அழுதத பற்றி அதிகமா எழுதிடாதீங்க…” அப்பாவியாக முகம் வைத்து கேட்க, அவனும் சிரித்தான்.

“சரி! கதை தலைப்பு என்னன்னு சொல்லு பார்க்கலாம்!” குறும்பாய் கேட்டான்.

“ம்ம்..ம்…” ஆழமாய் யோசித்தவள், “க்ளூ கொடு டா!” என்றாள்.

“முதல் வார்த்தை ‘அ’ல தொடங்கும், இரண்டாவது வார்த்தை ‘ஆ’ல தொடங்கும்” என்றதும், அதை அவன் பல முறை சொல்லி, கேட்டு சலித்து போனவள்,

“வேற ஏதாவது க்ளூ கொடுங்க எழுத்தாளரே!” என்று செல்லம் கொஞ்சினாள்.

“ம்ம்…இப்போ நான் உனக்கு சொன்ன அறிவுறையில அதோட பொருள் இருக்கு!” என்றான்.

அதை மனதில் அசைப்போட்டவள், “அனைத்தும் ஆனவளே!” என்றாள்.

அதை கேட்டு மென்மையாக சிரித்தவன், “தலைப்பு ரொம்ப நல்லா இருக்கு… ஆனா அது இல்ல… உனக்கே உனக்குன்னு இன்னும் பொருத்தமான தலைப்பு தேர்ந்தெடுத்திருக்கேன்!” என்று சொல்ல, தலைப்பை இன்றும் அறிய முடியாததை எண்ணி, அவள் முகம் சுருங்கியது.

வாடிய அவள் முகத்தை கையிலேந்தி, குறும்பாய் பார்த்தவன், “ஆனா… நீ என்னைக்கு தலைப்ப சரியா சொல்லுறியோ, அன்னைக்கு தான் நான் அந்த புத்தகத்த, உன்கிட்ட கொடுப்பேன்!” என்றான்.

“இதுவேறையா…” பெருமூச்சுவிட்டவள், “எழுத்தாளரே! கல்யாணம் ஆகட்டும்… நிபந்தனைகள் போடக்கூடாதூன்னு ஒரு நிபந்தனை போடறேன் பாருங்க!” சொல்லி அவன் கன்னத்தை கிள்ளிவிட்டு, சன்னியில் பறந்தாள்.

‘எவ்வளவு பொருத்தமான தலைப்பு…’ அவன் எழுதிவைத்திருப்பதை எண்ணி நெகிழ்ந்து நின்றான் ஹரி.

சன்னியில் பறந்தவளின் நினைவில் தன்னவன் மட்டுமே நிறைந்திருந்தான். தாங்கள் திருமண பந்தத்தில் விரைவில் இணைய வேண்டும் என்று அவன் சொன்ன வார்த்தைகளில் கலந்திருந்த ஏக்கத்தையும், வலியையும் அவள் உணர்ந்தாள்.

‘நீ முதல்ல, இப்படி தொட்டதுக்கெல்லாம் கோபப்படாம இரு. அவன் சொல்படி நட; அது போதும்.’  அம்மா அன்று சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்து தனக்குள் சிரித்தாள்.

வீம்பு பிடிப்பதை விட்டொழித்து, அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடலாம் என்று நினைத்தாள். விட்டுக்கொடுத்து போக நினைத்தவள், வீட்டிற்குள் நுழைய, அவள் கண்ணில் முதலில் தென்பட்டது அந்த கேஸெட். காலையில் வைத்துவிட்டு போன, அதே இடத்தில் இருந்தது. இம்மியளவும் இடத்தைவிட்டு நகரவில்லை.

இவ்வளவு பிடிவாதம் கொண்ட பெற்றோரிடம், எதற்காக, கனவிலும் பிறர் மனம் நோகடிக்க தெரியாத தன்னவனை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைத்து, பேசாமல் நகர்ந்தாள். ஹரி சொன்ன அறிவுரை எல்லாம் காற்றில் பறந்தது.

அடுத்துவந்த வார நாட்களில், மாலை நேரங்களை வாசுகியுடன் செலவிட்டாள். வாசுகி அவளுக்கு பிடித்தமான உணவு வகைகளை சமைப்பதும், அவள் மூவருக்கும் ஏலக்காய் வாசம் நிரம்பிய தேநீர் தயாரிப்பதுமாய், மாலைப்பொழுதுகள் இனிமையாய் நகர்ந்தன.

வாசுகியின் மனமாற்றத்தை அறிந்த நண்பர்கள், அதை கொண்டாடும் விதமாக அவர்கள் வீட்டிற்கு வந்தனர். மாமியாரை எப்படி எல்லாம், டெல்லி பயணத்தில் கவர்ந்தாள் என்று அரவிந்தனும், அஞ்சலியும், அவளை சரமாரியாய் ஓட்டினார்கள். மீராவும், தன்னிடம், வாசுகியின் சம்மதத்தை, ஹரி எப்படி சொல்லாமல் இன்பதிர்ச்சி கொடுத்தான் என்று தன்னவனை பார்வையால் விழுங்கியபடி, நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டாள்.

கிட்டத்தட்ட, திருமணமாகி புகுந்த வீட்டில் வாழ்வது போல மகிழ்ச்சியில் மிதந்தவளுக்கு, வீடு திரும்பியதும், எல்லாம் கனவு போல மறைந்து போய்விடும். தந்தையிடம் பேசினாளா என்று தினமும் அக்கறையாய் விசாரித்த தன்னவனுக்கு, ஏதோ ஒரு காரணம் சொல்லி மழுப்பி கொண்டிருந்தாள்.

அவளாக வந்து காரணம் சொல்லும்வரை, மகளிடம் பேசக்கூடாது என்று வரதன் பிடிவாதமாய் இருந்தார். வாசுகியின் சம்மதத்தை பற்றி, நிர்மலாவிடம் கூறிய பின்பும், அவள் மகளிடம் சரியாக பேசவில்லை. மகளின் பிடிவாத குணம் அவளுக்கு துளியும் பிடிக்கவில்லை.

இவர்கள் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு ஒரு முடிவே இல்லாமல், வியாழக்கிழமையும் உதித்தது.

“அம்மா! ஹரி அம்மாவே மனசு மாறி எங்க காதலுக்கு சம்மதம் சொல்லிட்டாங்க… அப்பாகிட்ட ஒரு முறை அந்த கேஸெட்ட போட்டு பார்க்க சொல்லேன் மா!” அலுவலகம் புறப்பட்டவள், அம்மாவிடம் கெஞ்சினாள்.

‘அப்படி என்னதான் இருக்கோ அந்த கேஸெட்டுல’ மனதில் சலித்துகொண்டவள்,

“உங்க பிரச்சனைக்கு நடுவுல நான் வரதாவே இல்ல… உனக்கு வேணும்னா, நீயே அவர்கிட்ட பேசிக்கோ!” திடமாய் சொன்னவள், “யார் சம்மதம் சொன்னாலும், உங்க அப்பா சம்மதம் தான் எனக்கு பெருசு…” தன் விருப்பத்தை தெளிவுபடுத்தினாள்.

அம்மாவும் முரடு பிடிப்பதாக எண்ணியவள், “உங்களுக்கு, என் வாழக்கை மேல உண்மையிலேயே அக்கறை இருந்தா, இன்னைக்கு மதியம் தொலைக்காட்சியில ஹரியோட நேர்காணல் ஒளிப்பரப்புறாங்க… முடிஞ்சா, அதையாவது பாருங்க…” எரிச்சலடைந்தவள், “நான், அந்த நிகழ்ச்சிய ஹரி வீட்டுல, பார்த்துட்டு தான் வருவேன்!” தான் வீடு திரும்புவதற்கு தாமதமாகும் என்றும் தகவல் கொடுத்தாள்.

மதியம், மகள் சொன்ன நேரம் நெருங்க, நெருங்க, நிர்மலாவிற்கு அந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அதிகறித்தது. அவள் ஆர்வத்தை சோதனை செய்வது போல, மதிய உணவு அருந்த வந்த வரதன், மீதமுள்ள வேலையும், வீட்டிலேயே செய்வதாக சொல்லி சோஃபாவில் அமர்ந்தார்.

பத்து நிமிடங்கள், குறுக்கும் நெடுக்குமாய் நடந்து தவித்தவள், ஏதோ ஒரு உத்வேகத்தில், கணவன் இருப்பதையும் பொருட்படுத்தாது, தொலக்காட்சியை உயிர்ப்பித்தாள். மகள் குறிப்பிட்டிருந்த சேனலை திருப்ப, நேர்காணல் ஏற்கனவே தொடங்கிவிட்டதை உணர்ந்தாள். ஹரியை திரையில் கண்ட வரதன், மனைவியை பார்த்து முறைக்க,

“உங்களுக்கு வேண்டாம்னா, பார்க்காதீங்க… எனக்கு அவன் அப்படி என்ன தான் பேசினான்னு தெரியாம, மண்டையே வெடிச்சு போயிடும்!” கராராய் சொல்லி, தலையை திருப்பி கொண்டாள்.

வரதன், தன் பொருட்களை எடுத்துக்கொண்டு நகர, நிர்மலா, தொலைக்காட்சியின் ஒலியை கூட்டினாள்.

“ஓ.கே மிஸ்டர். ஹரி! இத்தனை நேர்மறை சிந்தனைகள் நிறைந்த கற்பனை கதைகள் கொடுத்த நீங்க, உங்களுக்கு வரப்போகும் மனைவிய பற்றி கூட நிறைய கற்பனை செஞ்சு வச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்!” குறும்பாய் கேட்டவர், “சொல்லுங்க! வருங்கால மனைவிய பற்றின, உங்க எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?” என்றார்.

அதற்கு மென்மையாக சிரித்தவன், “எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுத்து!” சிறிதும் தயக்கமில்லாமல் பதிலளித்தான்.

அந்த பதிலை, நேரில் பார்த்தவர்களுக்கும், நிகழ்ச்சியில் கேட்ட ஒவ்வொருவருக்கும் வியப்பாய் இருந்தது. அதை கேட்ட வரதன், மனைவியை பார்த்து ஏளனமாக சிரித்து, மறுபடியும் சோஃபாவிலேயே உட்கார்ந்தார்.

‘இதையா பார்க்க சொல்லி எங்கள கட்டாயப்படுத்தினா மீரா!’ பெற்றொர் இருவரின் மனதிலும் ஒரே கேள்வி.

“என்னது? கல்யாணம் ஆயிடுத்தா! எப்போ? எங்க?” பேட்டியாளர் கண்கள் அகல கேட்க,

அப்போதும் சிரித்து மழுப்பியவன், “கெட்டி மேளம் கொட்டி, அக்ஷதை மழையின் நடுவில் தாலி கட்டறது தான், நீங்க சொல்ற கல்யாணம்னா… அப்போ, எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல!” மேலும் அவரை குழப்பினான் ஹரி.

“மோதிரம் மாற்றி… பதிவு திருமணம்…” வேறு வழிமுறைகளை பேட்டியாளர் பட்டியலிட, எல்லாவற்றிருக்கும் இல்லை என்று தலையசைத்தான் ஹரி.

“அப்போ, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பா!” சமீபத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கத்தில், இளைஞர்கள் பின்பற்றுவதை போலவா, என்று கேட்கவே தயங்கினார் பேட்டியாளர்.

“அப்படியெல்லாம் சொல்லி, எங்க உறவ கொச்சை படுத்தாதீங்க!” திடமாய் சொன்ன ஹரி, நொடியில் இருக்கும் இடத்தை உணர்ந்தான். பல ஆயிரம் பேர் பார்க்கவிருக்கும் நிகழ்ச்சியில், அது சரியா தவறா என்று வாதம் செய்வது உத்தமம் இல்லை என்று சுதாரித்துகொண்டவன், தாழந்த குரலில்,

“மன்னிச்சிருங்க! அது சரி/தவறுன்னு விவாதிக்க நான் விருபம்பல…அது என் தனிப்பட்ட கருத்து…எனக்கு இன்னும் நம்ம முன்னோர்கள் வகுத்த கலாசாரத்திலும், பழக்கவழக்கத்திலும் நிறைய நம்பிக்கை உண்டு!” தெளிவுபடுத்தினான்.

காதலி என்று சாதரணமாக சொல்லாமல், புதிதாய் ஏதோ சொல்ல வருகிறானோ என்று தோன்றியதில், “உங்க காதலின்னு சிம்பிளா சொல்லலாமே!” என்றார்.

“ஐலவ்யூ சொல்லி பிரபோஸ் பண்ணியிருந்தா, அப்படி சிம்பிளா காதலின்னு அறிமுகப்படுத்தியிருப்பேன்!” சிம்பிள் என்ற வார்த்தையை அழுத்திச் சொன்னவன், “அவ என்கிட்ட வந்து… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் ஹரி… நீ எழுதறதுல மட்டும் கவனம் செலுத்து… நான் குடும்ப பொறுப்புகள பார்த்துக்கறேன்… நீ உலகம் போற்றும் எழுத்தாளனா வளர்ந்து, இந்த ராஜகுமாரிய அன்பா பார்ததுக்க மாட்டீயான்னு, என் மேல அதீத நம்பிக்கை வெச்சு பேசினவள, மனைவின்னு சொல்லாம, எப்படி சிம்பிளா காதலின்னு சொல்லமுடியும்?” மனம் திறந்து பேசி பெருமூச்சுவிட்டவன், “எழுதணும்ன்ற என் லட்சியத்த தனதாக்கி, நான் தடுமாறும் போதெல்லாம் தோள் கொடுத்து தாங்குறவள நான் மானசீகமாக கல்யாணம் செய்துகிட்டேன். அது உங்க கண்ணுக்கு தெரிய வாய்ப்பில்ல தான்!” கண்ணோரம் கசிந்த நீர்த்துளியை துடைத்து கொண்டான்.

விருது வாங்கும் சமையத்தில், அவளுக்கு கிடைக்காத அடையாளம், இந்த பேட்டியின் மூலம் கிடைக்கவேண்டும் என்று நினைத்தான். ஆனால் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் அதிகமாக பேசியதாகவும் தோன்றியது அவனுக்கு.

அவர்கள் அன்பின் ஆழத்தை உணர்ந்த பேட்டியாளர், “இவ்வளவு சிந்திச்சு பேசுற, நீங்க, ஏன் இன்னும் உங்க மனைவிய கல்யாணம் செய்துக்கல… பெற்றோர் சம்மதம்… ஜாதி…மதம்… அப்படி ஏதாவது…” நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்த எண்ணியவர், பக்குவமாய் கேள்விகளை தொடுக்க,

“ச்சே! ச்சே! அதெல்லாம் ஒண்ணுமே இல்ல… எங்க ரெண்டு பேரோட பெற்றோரும், முற்போக்கு சிந்தனை கொண்டவங்க… எப்பவுமே எங்க நன்னலம் கருதி தான் எந்த முடிவையுமே எடுப்பாங்க…சொல்லப்போனா… எங்க உறவ பற்றி தெரிஞ்சிருந்தும், நாங்க பேசிப்பழக தடை சொன்னதே இல்ல தெரியுமா!” என்று சொல்லி அவர் வாயை அடைத்தான்.

“அவங்கள பார்க்கணும்னு எங்களுக்கு ஆசையா இருக்கு… இங்க இருக்காங்களா” கேட்டவர், அவனுடன் வந்தவர்களை கவனிக்க,

“மறுபடியும் மன்னிக்கவும்! லட்சியம் நிறைவேறும் வர, அவள காதலிக்க கூட மாட்டேன்னு சொல்லிருக்கேன்… அதனால….”

அவன் சொல்லி முடிப்பதற்குள், “அதனால என்ன… இப்போ, இந்த உலகத்துக்கு முன்னாடி கம்பீரமா உங்க காதல அவங்களுக்கு சொல்லுங்க!” உற்சாகமாய் யோசனை சொன்னார்.

“ம்ஹூம்!” மென்மையாய் தலையசைத்தவன், “இத்தன நாளா பொறுமையா காத்துக்கிட்டு இருக்கறவளுக்கு, அவ கண்ண பார்த்து சொல்லணும்னு ஆசை படறேன்… அவகிட்ட மட்டும் சொல்லணும்… நான் சொல்றது அவளுக்கு மட்டும் தான் கேட்கணும்…” வார்த்தைக்கு வார்த்தை, அவன் குரல் சரிய, அதில் அவன் காதலின் வலிமையை உணர்ந்தவர், அமைதியானார்.

இத்தனை பக்குவமாக யோசித்து காதலிப்பவர்கள், கட்டாயம் திருமணம் பந்தத்தில் இணைந்த பிறகு, அவர்கள் சேனலுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டவர், “மிஸ்டர். ஹரி! எழுதும் போது மட்டுமில்ல… பேசும் போது கூட, ரொம்ப கருத்தூன்றி பேசுறீங்க!” மெச்சியவர், “உங்க கற்பனை கதைய விட, உங்க காதல் கதை ரொம்ப சுவையாவும் சுவாரசியமாவும் இருக்கு!” என்றும் மனதார பாராட்டினார்.

பார்வையாளர்களுக்கு இது மற்றொரு எபிசோடாக இருந்த போதும், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு, பல விடை தெரியா கேள்விகளுக்கு, பதில் கிடைத்தது.

ஹரி பேசியதை இமைக்காமல் பார்த்தவர் கண்ணிலும் ஈரம். மனைவி பக்கம் திரும்பியவர், “மீரா சொன்னது உண்மை தான் நிர்மலா! ஹரி நற்குணம், அவன் பேசின ஒவ்வொரு வார்த்தையிலும் விளங்குது…எத்தனையோ முறை அவன அவமானப்படுத்தி பேசியும், அவன் யாரை பற்றியும் குறைகூறாம, எவ்வளவு பக்குவமா பேசியிருக்கான்…” உணர்ச்சிவசப்பட்டவர், “அவ வீட்டுக்கு வந்ததும், அவகிட்ட நான் பேசினதுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டு, ரெஜிஸ்டர் ஆஃபிஸ் எதுக்கு போனாங்கன்னு வாய்விட்டு கேட்கறேன் மா!” தவறை ஒப்புக்கொண்டார்.

“வேண்டாம்! மன்னிப்பு கேட்காதீங்க!” திடமாய் மறுப்பு தெரிவிக்கும் மனைவியை ஆழமாய் பார்த்தார் வரதன்.

“நீங்க பேசினது தப்பு தான்…அதுக்காக, அப்பான்னு கூட பார்க்காம, அவ இவ்வளவு பிடிவாதமா இருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கல… விட்டுக்கொடுத்து போக அவளுக்கும் தெரியணும்” தர்க்கம் செய்ய,

“ஆனா அன்னைக்கு என்ன நடந்துதுன்னு அவகிட்ட கேட்காம எப்படி நம்ம தெரிஞ்சிக்கிறது… ஹரி கிட்ட பேசட்டுமா?” யோசனை கேட்டார்.

அதற்கும் மறுப்பாய் தலையசைத்தவள், “இந்த பிரச்சனை ஹரி காதுக்கு போயிருந்தா, கண்டிப்பா உங்ககிட்ட தன்மையா பேசச்சொல்லி அவளுக்கு அறிவுரை சொல்லிருப்பான்…. ஆனா உங்க பொண்ணு, அவன்கிட்டையும், தலையிடாதன்னு பிடிவாதம் பிடிச்சிருப்பா… அதனால, நம்ம அரவிந்தன் கிட்ட பேசலாம்!” என்றாள்.

நிதானமாக சிந்தித்து பேசும் மனைவிக்கு செவிசாய்த்தார் வரதன்.

பேட்டியை நேரில் கண்டபோதும், இன்று திரையில் தன்னவன் பேசுவதை பார்த்து பூரித்தாள் மீரா. தன்னையும் மறந்து, அவன் தோளில் சாய்ந்தாள். அவனும் அவளை அணைத்து தலைசாய்க்க, அவர்களுக்கு தனிமையை கொடுக்க, வாசுகி அங்கிருந்து நகர்ந்தாள்.

மகன் நேர்காணலில் அளித்த பதில்களில், அவர்கள் காதலின் வலிமையை உணர்ந்தவள், நாளுக்கு நாள் மீராவுடன் பழகியதில், இன்னும் அதிகமாய் புரிந்துகொண்டாள்.

“என்ன உனக்கு அவ்வளவு பிடிக்குமா ஹரி?” தாழ்ந்த குரலில் அவள் கேட்க,

“இது என்ன கேள்வி!” அவள் தலையில் செல்லமாக முட்டினான்.

அவன் விளையாட்டு பேச்சில் மயங்காதவள், சிந்தனையில் கரைய, கண்கள் கசிந்த நீர்த்துளி, அவன் தோள்பட்டையை நனைத்தது.

அதில் பதறியவன், நிமிர்ந்து உட்கார்ந்து, அவள் முகத்தை ஏந்தி, “என்ன டி ஆச்சு உனக்கு?” என்றான்.

“இவ்வளவு காதலோட, நீ ஒருமுறை கூட என்கிட்ட பேசினதே இல்லையே ஹரி!” ஏக்கமாய் கேட்க,

அவள் கண்களை துடைத்துவிட்டவன், “இது மட்டுமில்ல மீரா… இன்னும் நிறைய பேசணும்னு ஆசை… அப்படி பேச நினைக்கும் போதெல்லாம், உங்க அப்பாவுக்கு கொடுத்த வாக்கு நினைவுக்கு வரும் டி…” என்றதும்,

கேட்டவள் முகத்தில் ஒரு வருத்தம். ‘இவ்வளவு நற்குணம் கொண்டவனை ஏன் தான் அப்பா புரிஞ்சிக்க மாட்டேன்றாரோ’ என்று மனதில் எண்ணி நொந்தாள்.

தன்னையும் அறியாமல், அப்பா பேச்சை எடுத்தவன், “நீ அப்பா கிட்ட மனச விட்டு பேசுற வரைக்கும், நம்ம காதல் கதை இப்படியே தான் தேங்கி நிற்கும்.” திடமாய் சொன்னான். அவள் பிடிவாத குணம் அறிந்தவன்,

“இன்னைக்கு ராத்திரிகுள்ள நீ பேசலேன்னா, நாளைக்கு காலயில எட்டு மணிக்கு எல்லாம், உங்க வீட்டு வாசல்ல வந்து நிற்பேன்!” உறுதியாய் சொல்ல,

“ம்ம்… பேசுறேன்!” வேறுவழி என்ன என்பது போல, சலித்துகொண்டு கிளம்பினாள் மீரா.

தழைந்து போனால், தேங்கி நிற்கும் காதலும், திருமணமாய் தழைக்கும் என்று தெளிந்தாளா மீரா?

அக்கறை என்ற பெயரில் அடம்பிடித்த தந்தை, அரவிந்தனிடம் மனம்விட்டு பேசினாரா – இல்லை

பிடிவாதமே உருவமாய் இருக்கும் தந்தை-மகள் பனிப்போருக்கு, பணிவாய் சமாதானம் பேசினானா ஹரி?

வரதன் உண்மையை எவ்வாறு அறிந்தார்?

பதில் சொல்லும், அவர்கள், ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்...