அன்பின் ஆழம் – 34.1

ஓராண்டு காலத்திற்கு பிறகு, வங்கி வேலைக்கு திரும்பிய மீராவை சக ஊழியர்கள் உற்சாகமாய் வரவேற்றனர். அவளோ, தன்னை நலன்விசாரிக்க வந்த ஒவ்வொருவரிடமும், ஏதோ ஒரு விதத்தில் ஹரி விருது வாங்கின தருணத்தை பற்றி பேச, அவர்களும், அவனுக்கு வாழ்த்து கூறி, டெல்லியிலிருந்து வாங்கி வந்த இனிப்புகளையும் மகிழ்ந்து ருசித்து சென்றார்கள்.

தன் இடத்தில் அமர்ந்திருந்த போதிலும், கண்கள் மட்டும் எட்டடி தூரத்தில் இருக்கும் தன்னவன் பக்கமே திரும்பி இருந்தது. அதுவும், வாசுகி ஊரில் இருக்கும் வரை, மாலை சந்திப்புகளுக்கு வாய்ப்பில்லை என்று அறிந்தவள், தன்னவன் தரிசனம் கிடைத்த வரை லாபம் என்றது போல, அவனையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள்.

தொட்டதுக்கெல்லாம் நிபந்தனைகள் போடுபவன் முகத்திலும் , இன்று வழக்கத்திற்கு மாறாக காதலின் அறிகுறிகள் தென்பட்டது போல உணர்ந்தாள் மீரா.

பார்வையால் அவளை விழுங்கி கொண்டிருப்பவன் மனதில், மாலையில் அவளுக்கு கொடுக்க நினைத்த இன்பதிர்ச்சியை பற்றிய எண்ண அலைகள் தான். அம்மாவின் மனமாற்றத்தை அறியும் அந்த தருணம், மீராவின் முகத்தில் தோன்றும் உணர்வுகளை கற்பனை செய்தான். மாமியார்-மருமகள் ஒன்று சேர்ந்த கையோடு, வரதனை சந்தித்து பேசலாம் என்றும் திட்டமிட்டிருந்தான். கிட்டத்தட்ட, தேசிய அளவில் தன் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தை அடையாளம் கண்டு, அவரும் மனம் மாறுவார் என்று பெரும் நம்பிக்கை கொண்டிருந்தான் ஹரி.

காதலி, மனைவியாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஹரி, ஏக்கத்துடன் அவளையே பார்த்துக்கொண்டிருக்க,

“டேய்! போதும் டா! கொஞ்சமாவது கண்ண சிமிட்டு!” குறும்பாக பேசி, அவன் தோளை தட்டியழைத்தாள் கீதா!

அதில் சுயத்திற்கு வந்து அசடு வழிந்தவனிடம், “மீட்டிங்க்கு நேரமாகுது; வா!” என்று கூறி தோழி அருகில் சென்றவள், “உனக்கும் தான் டி! கிளம்பு!” அவள் கையை பிடித்து அழைத்துச் சென்றாள்.

மீரா மறுபடியும், கட்டண செயலாக்கம் குழுவிற்கு தலைமை பொறுப்பு ஏற்றிருந்தாள். சமீபத்தில், அந்த குழு கவனித்து கொண்டிருக்கும் வேலைகளை பற்றி, மீராவிற்கு மேலோட்ட விவரங்களை தரவும், புதிதாக சேர்ந்த உறுப்பினர்களை அவளுக்கு அறிமுகம் செய்யவும், அரவிந்தன் மீட்டிங்க்கு ஏற்பாடு செய்திருந்தான். கீதா, ஹரி உட்பட, இருபது பேர் இருந்த அந்த குழு உறுப்பினர்களிடம், மீரா விரிவாக பேச, ஒரு மணி நேரம் பறந்தோடியது. சேகரித்த தகவல்களை அரவிந்தனுடன் கலந்தாலோசித்தவள், திட்டங்களை தீட்டினாள். அதை கேட்ட குழு உறுப்பினர்களும் உடன்பாடு தெரிவித்து, நன்றி கூறினர்.

அலுவலகம் சார்ந்த விஷயங்களை பேசி முடித்த அரவிந்தன், அவன் பங்குக்கு, நண்பன் விருது வாங்கியதை பற்றி கூறி, இனிப்புகளை விநியோகித்தான்.

“உங்களுக்கு எல்லாம் நியாபகம் இருக்கா… ஹரி எழுதிய ‘தெவிட்டாத இன்பம்’… நீங்க எல்லாரும் வாங்கி படிச்ச அதே புத்தகம்…அதுக்குதான், சாஹித்யா அகாடமி விருது கொடுத்திருக்காங்க….!” பெருமையடிக்க,

ஏற்கனவே, மீரா பாடிய புகழாரத்தை கேட்டவர்கள், வேறுவழியில்லாமல், மறுபடியும் பொறுமையாக அத்தனையும் கேட்டபடி தலையசைத்தனர்.

‘இவங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்ல’ மனதில் நினைத்தான் ஹரி.

பார்வையாளர்களில், உண்மையிலேயே கருத்தூன்றி படித்த, ஓரிரண்டு பேர், தங்களுக்கு பிடித்தமான பகுதிகளை குறிப்பிட்டு சொல்ல, ஹரி பணிவாக நன்றி தெரிவித்தான். அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கும், பொறுமையாக பதிலளித்தான்.

வரிக்கு வரி முழுகதையை மனப்பாடமாய் அறிந்த மீராவும், கண்கள் விரிய, ஆர்வமாய் பேசினாள். நண்பனே ஆன போதிலும் அவன் எழுதிய கதையில், இவளுக்கு இவ்வளவு ஈடுபாடா என்று பஞ்ச பாண்டவ நண்பர்கள் நட்பை பற்றி அறிந்தவர்கள், வியப்பாய் பார்க்க,

“ரொம்ப ஓவரா வழியற டி; அவன் எழுதின கதைய பற்றி சொல்றேன்ற பேருல, சைட் டிராக்குல, உங்க காதல் கதைய லைவா ஓட்டுறா மாதிரி இருக்கு!” அருகில் உட்கார்ந்திருக்கும், தோழியின் காதோரம் ரகசியம் பேசினாள் கீதா.

அதற்குள் ஒருவர், “ஹரி சார்! நீங்க தப்பா நினைக்கலேன்னா, நான் ஒண்ணு சொல்லவா?” என்றார்.

“சொல்லுங்க மிஸ்டர் கிரி!”

“இனிமேல் அச்சிடும் புத்தகத்துல எல்லாம் வேற ஃபோட்டோ போடுங்க… அந்த சிவப்பு சட்டையில, உங்க அழகு குறைவா தெரியுது!”

அவர் சொல்லி முடிப்பதற்குள், நண்பர்கள் இருவரின் பார்வையும் மீரா பக்கம் திரும்பியது. ஹரி அக்கறையாய் பார்க்க, அரவிந்தனின் முகத்திலோ கர்வப் புன்னகை தாண்டவமாடியது.

தோழி பேச்சை கேட்டு நாணம் கொண்டு சிவந்த முகம், அடுத்த கணமே நண்பனின் கிண்டல் பார்வையில் கடுப்பேறியது.

“அந்த சட்டை எனக்கு ரொம்ப ராசியான சட்டை மிஸ்டர் கிரி… அது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்!” பதில் சொன்னவன், தன்னவளை பார்த்து கண்சிமிட்டினான். விட்டுக்கொடுக்காமல் பேசின தன்னவனின் பதிலில் நெகிழ்ந்தவள், அரவிந்தனை வெற்றி புன்னகையுடன் நோக்கினாள்.

இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் நண்பர்கள் மதியவுணவு இடைவேளையில் சந்தித்தனர். வெகு நாட்களுக்கு பிறகு கீதாவை சந்தித்தவள், அவளுடன் ஓயாமல் அரட்டை அடித்து கொண்டே, வாசுகி சமைத்த உணவை, ஹரியிடமிருந்து பிடுங்கி தின்று கொண்டிருந்தாள்.

“எப்படி டா ஹரி! எனக்கு பிடிச்ச கத்தரிக்காய் வற்றல் குழம்பு சாதம் கொடுத்து அனுப்பியிருக்காங்க!” கண்கள் அகல கேட்க,

மீராவிற்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று காலையிலிருந்து அம்மா தன்னை நச்சரித்தது நினைவுக்கு வர, அதை எண்ணி சிரித்தவன், பதில் சொல்லாமல் மழுப்பினான்.

அதற்குள், அரவிந்தன், மீரா டெல்லியில், எப்படியெல்லாம் மாமியார் முன் அடக்க ஒடுக்கமாக நடந்துகொண்டாள் என்பதை எல்லாம் கீதாவிடம் சொல்லி, கலாய்த்தான். நண்பன் கிண்டலில் மீராவின் முகம் சுருங்கிய போதும், வாய்மட்டும் அதன் வேலையில் கவனமாக இருந்தது.

சாப்பிட்டு முடித்து பணிக்கு திரும்ப எழுந்து கீதா, “இன்னைக்கு சாயங்காலம் எல்லாரும் வீட்டுக்கு வாங்களேன்… எவ்வளவு நாளாச்சு நம்ம அஞ்சு பேரும் சந்திச்சு!” யோசனை சொல்ல,

“இல்ல கீதா! இன்னைக்கு சாயங்காலம், மீரா அப்பாவ நேருல பார்த்து, விருது வாங்கின விஷயத்த சொல்லலாம்னு இருக்கேன்! நானும் மீராவும் இன்னொரு நாள் வரோம்!” தன்மையாய் பேசி ஹரி மறுக்க,

“பரவாயில்ல ஹரி…” கீதா அழைப்பையே காரணம் காட்டி, அவர்கள் சந்திப்பதை தவிர்த்துவிடலாம் என்று மீரா நினைத்தாள்.

“அப்பா ஊருலேந்து வந்துட்டாரு தானே!” திடமாய் கேட்டான் ஹரி.

மீரா, “ஆம்” என்று தலையசைக்க, “அப்போ, இன்னைக்கு சந்திச்சே ஆகணும்!” இன்னும் திடமாய் சொன்னான் ஹரி.

அப்பாவுடன் ஏற்பட்ட மன்ஸ்தாபங்களை பற்றி எண்ணி மீரா வருந்த, ஹரியோ, இன்று அவர்கள் திருமணமே நிச்சயமாகிவிடும் என்று உறுதியாய் இருந்தான்.

மேலும் அவர்களை கட்டாயப்படுத்தாமல், அரவிந்தன் பக்கம் திரும்பிய கீதா, “நீ எதுவும் சாக்கு சொல்லாதே! என் பொண்ணு அஞ்சலிய பார்க்காம ஏங்கி போயிருக்கா!” அதிகாரமாய் சொல்ல,

“கண்டிப்பா வரோம் டி! ஆனா உன் பொண்ணு தூங்கற வரைக்கும் இருன்னு சொல்லி கொடுமை படுத்தாத…” சஹானா அன்புத்தொல்லையை நினைவூட்டினான்.

அவனை குறும்பாய் பார்த்தவள், “சொல்லமாட்டேன் டா! நீ கிளம்பு… ஆனா அஞ்சலிய மட்டும் விட்டுட்டு போ!” என்று கண்சிமிட்டிவிட்டு நகர்ந்தாள்.

வெட்கத்தில் அசடுவழியும் நண்பனை பார்த்து, ஹரி ஏளனமாக சிரிக்க,

“எதுக்கு டா சிரிக்குற?” சண்டைக்கு வந்தவன், “நீயும் தானே அந்த இத்து போன சட்டைய பற்றி ஓவரா பிள்ட் அப் பண்ணி பேசின….” அவரவர்களுக்கு அவரவர் காதல், ஒஸ்தி என்று தர்க்கம் செய்ய, ஏற்கனவே வருத்தத்தில் இருந்த மீரா அதை கேட்டு அவனை முறைத்தாள்.

“நீ அப்படி முறைச்சாலும், உண்மை அது தான்!” அவளிடமும் வாதம் செய்தவன், “ஊருல இருக்கறவங்க எல்லாருக்கும் சுமாரா தெரியறது, உனக்கு மட்டும் எப்படி தான் அழகா தெரிஞ்சுதோ!” மேலும் பேசி அவளை சீண்ட,

“எனக்கு கண்ணு தெரியாதுன்னு நெனச்சிக்கோ!” சொல்லி, தன் முன் இருந்த டப்பாவை வெடுக்கென்று மூடினாள்.

அவளை இன்னும் அதிகமாய் வம்பிகழுக்க நினைத்தவன், “ஆமாம்! ஆமாம்!   நடிகர் அரவிந்த் ஸ்வாமி மாதிரி ஸ்மார்ட்டா இருக்குற என்ன வேண்டாம்னு சொல்லிட்டு, இவன காதலிக்கறேன்னு சொல்றப்பவே…உனக்கு கண்ணு தெரியாதுன்னு நான் கண்டுபிடிச்சிட்டேன்!” குறும்பாய் பார்த்து சொல்ல,

அவள் கோபம் தலைக்கேறியது. அருகில் இருக்கும் தன்னவன் கையிடுக்கில் வளைத்து இறுக பற்றிக்கொண்டவள், “இவனுக்கு என்ன குறைச்சல்… பின்னனிபாடகர் ஹரிஹரன், ஹரிஷ் ராகவேந்திரா மாதிரி, என்னுடைய ஹரி ஒரு கலைஞன்!” கம்பீரமாய் சொல்லி, கிண்டல் செய்பவனை பார்த்து உதட்டை சுழித்தாள்.

“ஏண்டா அவள சீண்டற!” எங்கே அவள் கோபத்தால், தன் ரகசிய திட்டமெல்லாம் கெட்டுவிடுமோ என்று பயந்தவன், அரவிந்தனை கிண்டல் செய்வதை நிறுத்திக்கொள்ள சொன்னான்.

பணிக்கு திரும்ப எழுந்தவன், அவள் தலையில் செல்லமாக குட்டி, “என்கிட்ட ஏட்டிக்கு போட்டி பேசுறத விட்டுட்டு, உங்க அப்பாகிட்ட, நம்ம கலைஞன் நண்பனுடைய அருமை பெருமைய எடுத்து சொல்லு” என்றான்.

அதுதானே சவால் என்று அமைதியாக மனம் நொந்தாள் மீரா.

மாலை வீட்டிற்கு புறப்பட, சன்னி அருகில் வந்தவுடன், தந்தையை வேறொரு நாள் சந்திக்கலாம் என்று யோசனை சொன்னாள் மீரா. ஆனால் ஹரி அவன் திட்டத்தில் தெளிவாய் இருந்தான். திடமாய் பேசியவன், நேரில் அவர்கள் வீட்டு வாயிலில் வந்து நின்றான். சிந்தையில் கலந்தவள், அது கூட கவனிக்காமல், பின்சீட்டில் அமர்ந்திருந்தாள்.

“மீரா! இறங்கு!” கண்ணாடி வழியே அவள் முகத்தை ரசித்தவன் பலத்த குரலில் சொல்ல,

சுயத்திற்கு வந்தவள், வீட்டை மேலும் கீழுமாக பார்த்து, “என்னடா ஹரி! நம்ம வீட்டுக்கு வந்துட்ட!” குழப்பமாய் கேட்டாள்.

“விருது, சான்றிதழ் எல்லாம் இங்க தானே இருக்கு! போ…மாடிக்கு போய் அத எடுத்துட்டு வா!” அலட்டல் இல்லாமல் சொன்வனை பார்த்து இன்னும் அதிகமாய் குழம்பினாள்.

“நானா!” நான் எப்படி ஹரி… அம்மா இருப்பாங்களே!” அவள் தயங்க,

இதழோரம் எட்டிப்பார்த்த சிரிப்பை சிரமப்பட்டு மறைத்தவன், “அதான் ஒரு வாரம் டெல்லியில அவங்க கூடவே இருந்தையே… இப்போ என்ன பயம்… போய் எடுத்துட்டு வா… நேரமாகுது!” கராராய் சொல்லி,

“நான் அதுக்குள்ள ஸ்ரீராம்  ஆஃபிஸுல இருக்காறான்னு கேட்கறேன்… அப்படியே அவரையும் போய் பார்த்துட்டு வந்துடலாம்!” சொன்னவன், அவள் பதிலுக்கு காத்திராமல், கைப்பேசியில் பட்டண்களை அழுத்தினான்.

எல்லா பக்கங்களிலும் கவலையால் சூழ்ந்திருப்பதை போல உணர்ந்தவள், மெதுவாக படிக்கட்டுகளை நோக்கி நடந்தாள். அவள் நகர்ந்ததும், கைப்பேசியை பாக்கெட்டில் வைத்துகொண்டு, வலதுபுறம் இருந்த பிள்ளையாரை கும்பிட்டு, நன்றி தெரிவித்தவன், அவளை ரகசியமாய் பின் தொடர்ந்தான்.

வீட்டின் வாசல் வரை வந்து நின்றவளுக்கு, கதவை தட்ட ஒரு தயக்கம். இரண்டு நாட்களாக மீராவை சந்திக்க ஆவலாய் காத்திருந்த வாசுகிக்கு, இருப்புகொள்ளவில்லை. கடிகார முள் ஐந்தை தொட்டதும், கதவை திறந்துவிட்டாள்.

திடீரென்று கதவு திறக்க, அதில் திடுக்கிட்டவள், “அம்மா… ஹரி…விருது…!” என்று பேச வார்த்தைகளை தேடினாள்.

ஆனால், தாரகையாய் நிற்கும் மீராவை கண்டவளின் முகமோ, புன்னகையில் மின்னியது. மகன், மீராவிடம் அனைத்தையும் சொல்லி தான் அவளை அழைத்து வந்திருப்பான் என்று நினைத்தாள். மீராவின் கையை இறுக பற்றி, உள்ளே இழுத்தவள், “உள்ள வா மா மீரா! வந்து உட்காரு… என்ன சாப்பிடுற…. காபியா? டீயா?… எத வழக்கமா ரெண்டு பேரும் குடிப்பீங்க!” பேசிக்கொண்டே இருந்தாள் வாசுகி.

ஏற்கனவே, பலவற்றை, எண்ணி கவலையில் மூழ்கியிருந்தவள், வாசுகியின் பேச்சு, கனவா, நிஜமா என்று புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு சிலையாய் நின்றாள்.

ஓசையில்லாமல் அவளை பின்தொடர்ந்தவன், பின்னாலிருந்து, அவள் தோள்களை இருபுறமும் பிடித்துகொண்டு, “ம்ம்… கேட்குறாங்கல்ல… பதில் சொல்லு மீரா… ஏலக்காய் டீன்னு சொல்லுமா!” என்று அவள் காதோரம் ரகசியமாய் பேசினான்.

தாய்-மகன் இருவருமே வித்தியாசமாய் நடந்து கொள்வதை பார்த்தவள், காண்பது கனவு தான் என்ற முடிவுக்கே வந்துவிட்டாள். நகர்ந்தால் இந்த இன்பமான கனவு கலைந்துவிடுமோ என்று, அசையாமல் நின்றாள்.

அவள் எதிரே வந்து நின்றவன், “உன் மாமியார் தான், உன்ன இங்க அழைச்சிட்டு வர சொன்னாங்க!” என்று ஒரு வழியாக அவளிடம் உண்மையை உடைத்து, தாயை தோளோடு சேர்த்து வளைத்து அணைத்தான்.

“அப்போ, நீ அவகிட்ட எதுவுமே சொல்லலியா ஹரி!” கண்ணோரமாய், மகனை பார்த்து கேட்டாள் வாசுகி.

சோகமே வாழ்க்கை என்று எல்லா நம்பிக்கையும் இழந்து நின்றவளுக்கு, வாசுகியின் மனமாற்றம் எதிர்ப்பார்க்காத நேரத்தில் வந்த பேரதிசயம். மனதில் புதைத்து வைத்த வருத்தங்கள், மனதை நெகிழவைக்கும், தருணங்கள் என சுகதுக்கம் ஒன்றோடு ஒன்று அலைமோத, தேக்கிவைத்த கவலைகளெல்லாம், கண்ணின் வழியே தாரை தாரையாய் வழிந்தோடியது.

எதிரில் நின்ற வாசுகி தோளில் சாய்ந்து ஓ என்று கதறியவளை, சமாதானம் செய்யாமல் அமைதியாய் நின்றான் ஹரி.

‘எத்தனை நாள் சோகம்… வாய்விட்டு அழுது, அவள் பாரத்தை இறக்கி வைக்கட்டும்!’ என்று தோன்றியது அவனுக்கு.

ஓயாமல் தேம்பி தேம்பி அழுபவளின், தலையை வருடியும், தோளில் தட்டிக்கொடுத்தும், மென்மையாய் பேசினாள் வாசுகி.

“மன்னிச்சிரு மீரா! ஹரியோட பலவீனத்த பயன்படுத்தி, காதல்ன்ற பேருல அவன என்கிட்டேந்து பிரிச்சிடுவியோன்னு பயந்து தான், அப்படியெல்லாம் பேசிட்டேன் மா…மனசுல வெறுப்ப வச்சிகிட்டு பாக்குறப்ப, எல்லாமே கெட்டதா தெரிஞ்சுது …

 ஆனா, இந்த டெல்லி பயணத்துல, என்னையும் அறியாம உன்ன நேசிக்க துவங்கிட்டேன் மீரா… அப்போ தான், நீ அவனுக்காக பார்த்து பார்த்து செய்யற விஷயத்துல எல்லாம் குறை மட்டுமே தேடின கண்கள், நீ அவன் மேல பொழியுற தன்னலமற்ற அன்பின் ஆழத்த கவனிக்க ஆரம்பிச்சுது…அழாத மா… மன்னிச்சிட்டேன்னு சொல்லு தங்கம்…” மனம் திறந்து கெஞ்சினாள் வாசுகி.

வாசுகியின் மென்மையான பேச்சில் சுயத்திற்கு வந்தவள், “எனக்கு ஹரிய பிடிச்ச காரணமே, அவன் கதையில வர, உறவுகள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அன்ப பார்த்து தான்…. நீங்களும், அந்த கதையில வர மாமியார் மாதிரியே, என்னோட பாசமா பழகுவீங்களா?” ஏக்கமாய் கேட்டவளின் முகம் பார்த்தவளுக்கும் கண்கள் கலங்கியது.

“பழகுவேன் டா தங்கம்!” சொல்லி, மீராவின் கண்களை துடைத்துவிட்டவள், வலதுபுறம், மேஜயிலிருந்த டப்பாவை திறந்தாள். அதிலிருந்து, ஒரு துண்டு மைசூர்பாகை எடுத்து, அவள் வாயிலிட்டு,

“இனிப்போடு தொடரட்டும் நம்ம உறவு!” என்று சொல்லி, “உனக்கு குறிப்பா எது பிடிக்கும், பிடிக்காதுன்னு தெரியாது… நாளைக்கு நீ வரப்ப, உனக்கு பிடிச்ச இனிப்பு செஞ்சு வெக்கறேன்… சரியா!” என்று மென்மையாய் பேசினாள்.

அதை கேட்ட ஹரி, வாய்விட்டு சிரித்தான். “அம்மா! அவளுக்கு, இனிப்புன்னு ஒரு பேப்பருல எழுதி வெச்சா கூட அப்படியே விழுங்கிடுவா!” கேலி செய்து தன்னவளையே இமைக்காமல் பார்த்தான்.

“அப்போ, இந்தா… இன்னும் கொஞ்சம் சாப்பிடு!” என்று மேலும் வாசுகி அவளுக்கு ஊட்டிவிட, ஹரி கண்ட, மாமியார்-மருமகளின் ‘தெவிட்டாத இன்பம்’ கனவு, அவர்களிடையிலும் தொடங்கியது.

உரிமையோடு ஏலக்காய் டீ, மூவருக்கும், தயாரித்து கொண்டு வந்தாள் மீரா. பல நாட்களுக்கு பிறகு அவள் கையால் தயாரித்த தேநீரை பருகிக்கொண்டே, அம்மாவின் மனமாற்றத்தை பற்றி விளக்கினான் ஹரி.

வீட்டுப்பத்திரத்தை கொடுத்தால் தான் தன்னை ஏற்பேன் என்று பிடிவாதமாய் இருந்தவள், அது நடக்காமலே, இன்று அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்துவிட்டாள். அதுவே, மீராவை பொறுத்தவரை பெரும் சாதனை. அதையும் தாண்டி, அவர்கள் வீடு வாங்கிய விஷயம் வரை, அனைத்தையும் அறிந்தவள், பாசமாய் பழகுகவதை எண்ணி வியந்தாள் மீரா.

எல்லாவற்றையும் செய்துவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல, மௌனமாய் ஏலக்காய் டீயை பருகி கொண்டிருப்பவனை இமைக்காமல் பார்த்து அமர்ந்தாள் மீரா.

“சரி! கிளம்பு மீரா! உங்க அப்பாவுக்கு விருத காட்டிட்டு,  அப்படியே அவர்கிட்ட நம்ம கல்யாணத்த பற்றி திடமா பேசுறேன்!” என்று ஹரி எழுந்தான்.

“ஆமாம் மீரா! உங்க கல்யாண தேதிய முடிவு செஞ்சிட்டு, நான் ஊருக்கு கிளம்பறேன் மா!” வாசுகியும் வலியுறுத்த,

இருவருக்கும் சேர்த்து, மீரா மறுப்பாய் தலையசைத்தாள்.

“என்னடி மாட்டேன்ற!” ஹரி கோபம் கொள்ள,

“இல்ல ஹரி! இன்னைக்கு வேண்டாம்… இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… அவர்கிட்ட பேசி, இந்த நாள ஒரு கசப்பான நாளா மாத்திடாத ப்ளீஸ்!” மறைமுகமாக பேசி மன்றாடினாள் மீரா.

“அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது…பக்குவமா எடுத்து சொன்னா, அவர் கண்டிப்பா புரிஞ்சுப்பாரு… நீ தைரியமா வா!” வலுக்கட்டாயமாக அவளை இழுத்தான் ஹரி.

அவன் பிடியிலிருந்து விலகியவள், “புரிஞ்சுக்க மாட்டார் ஹரி! நம்ம பேசுறது எல்லாம் காது கொடுத்து கூட கேட்கமாட்டார் டா… ஊரார் பேச்ச தான் நம்புவார்!” மனதில் உள்ளதை உரக்க சொல்லிவிட்டாள் மீரா.

அவள் ஜாடை பேச்சிலேயே, ஏதோ ஒன்றை மறைக்கிறாள் என்று புரிந்துகொண்டான் ஹரி. அவளை சோஃபாவில் உட்காரவைத்தவன், தன்மையாய் பேசினான்.

“என்ன ஆச்சு உனக்கு… ஏதாவது பிரச்சனையா?” வினவினான்.

“உம்!” என்று விசும்பி கொண்டே தலையசைத்தவள், நடந்ததை எல்லாம் விளக்கினாள். அனைத்தையும் கவனமாக கேட்டவன்,

“தப்பு உன் மேல தான் மீரா!” ஒரே வரியில் தன் முடிவை சொன்னான்.

தனக்காக பரிதாபப் படுவான் என்று நினைத்தால், தன்னையே குறைகூறுகிறானே என்று தோன்றியது அவளுக்கு. எதுவும் பேசாமல், அவனை ஆழமாய் பார்த்தாள்.

“ஆமாம் மீரா! தப்பு உன் மேல தான் டி!” மறுபடியும் சொன்னவன், “அவங்களுக்கு உண்மை தெரியறப்ப, புரியவைக்கலாம்னு சொல்லிட்டு, இப்போ, பிரச்சனைய இவ்வளவு தூரம் இழுத்து விட்டிருக்க!” கடிந்தான் ஹரி.

“அவர் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவாரு… நான் அவர்கிட்ட பொறுமையா, உண்மைய எடுத்து சொல்லணுமா…” கேட்டு ஏளனமாக சிரித்தாள்.

“ஆமாம் சொல்லணும்… பேசினது யாரு… உன்னோட அப்பா தானே… அவர்கிட்ட எதுக்கு டி உனக்கு இவ்வளவு வீம்பு !” தழைந்து போ என்றான்.

“ஹரி சொல்றது சரி தான் மீரா!” இவர்கள் பேச்சை கேட்ட வாசுகி, மகனுக்கு ஒத்தூதி, மீரா அருகில் வந்து அமர்ந்தாள். அவள் முகத்தை மென்மையாக கையில் ஏந்தியவள்,

“நானும் தான், நீங்க இந்த வீட்டுல குடும்பம் நடத்துறீங்க, அப்படி இப்படின்னு எல்லாம் கொச்சையா பேசியிருக்கேன்… அதெல்லாம் பெருசு படுத்தாம, என்கிட்ட எவ்வளவு தன்மையா பழகுற… அப்படி இருக்கறப்ப, அப்பாகிட்ட இவ்வளவு பிடிவாதமா இருக்குறது நல்லதா…” சிந்திக்க சொன்னாள்.

எதற்கும் பிடிக்கொடுக்காமல் மௌனமாய் இருந்தவளை, வரச்சொல்லி மீண்டும் அழைத்தான் ஹரி. தன்னவன், இனி ஒருபோதும், அப்பாவின் குத்தல் பேச்சுக்கு பலியாக கூடாது என்று நினைத்தவள்,

“வேண்டாம் ஹரி! நானே இந்த விஷயத்த பற்றி அப்பாகிட்ட தனியா பேசுறேன். எனக்கு கொஞ்சம் டைம் கொடு!” என்று யோசனை சொன்னாள்.

இவள் பிடிவாத குணம் அறிந்தவன், “சரி! நாளைக்கு வரேன்!” என்றான்.

“நாளைக்கே வா!” கண்கள் அகல பார்த்தவள், “நாலு நாளாவது டைம் கொடு டா!” என்றாள்.

“இங்க பாரு மீரா… பிடிவாதம் பிடிக்க இது நேரமில்ல… குதர்க்கமா எதையும் யோசிக்காம, அவர்கிட்ட பேசு.” அறிவுருத்தியவன், “வெள்ளிக்கிழமை சாயங்காலம் வரைக்கும் தான் காத்திருப்பேன். அதுக்குள்ள, நீ அவர்கிட்ட பேசலேனா, நானே போய் அவர்கிட்ட பேசுவேன்…அப்போ சண்டைக்கு வராத!” எச்சரித்தான்.

அதற்கு சம்மதம் தெரிவித்தவள், வாசுகியிடம், தினமும் மாலையில் வந்து சந்திப்பதாக சொல்லி, வீட்டிற்கு புறப்பட்டாள்.

தொடர்ந்து படிக்க Click Here அன்பின் ஆழம் 34.2