அன்பின் ஆழம் – 33.2

சென்னைக்கு வந்தவர்கள், டாக்ஸி ஒன்று ஏற்பாடு செய்துகொண்டு, வீட்டிற்கு திரும்பினர். முதலில், அஞ்சலியும், அரவிந்தனும் அவர்கள் வீட்டில் இறங்க, மீராவின் வீட்டு வாயிலில் வந்து நின்றது அந்த கார்.

மகள் வருகையை எதிர்ப்பார்த்து, வாசலிலேயே காத்திருந்தாள் நிர்மலா. அம்மாவை வாசலில் கண்ட மீராவுக்கு தான் பதற்றம். ஹரியிடம் ஏடாகூடமாக பேசி பிரச்சனை செய்துவிடுவாளோ என்று அவளையே பார்த்து நின்றாள். காரை நோக்கி விரப்பாக வருபவளை பார்த்த கண்கள், எதுவும் பேசிவிடாதே என்று கெஞ்சியது. அதை அலட்சியம் செய்தவள், மீராவை தாண்டி, கார் அருகில் நடந்தாள். ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் வாசுகியை பார்த்து,

“எப்படி இருக்கீங்க மா! உள்ள வாங்க!” அன்பாய் அழைத்தாள் நிர்மலா.

மகளை போலவே தாயும் நற்குணம்படைத்தவள் என்று உடனே புரிந்துகொண்டாள். மீராவை நேசிக்க துவங்கிய மனம், அவளை சார்ந்த விஷயங்களையும் நேசிக்க துவங்கியது. நற்சிந்தனைகள் மனதில் உதயமாக, கண்களும் நல்லதை மட்டுமே பார்த்தது.

“இல்ல இருக்கட்டும்!” நிதானமாக பேசி மறுத்தாள் வாசுகி. அதுவே வியப்பாக இருந்தது ஹரிக்கு. “இன்னொரு நாள் அம்மாவ அழைச்சிட்டு வரேன் ஆன்டி!” மென்மையாக பேசி, மீராவிடம் புறப்படுவதாக கண்ஜாடை காட்ட, மீரா பெருமூச்சுவிட்டாள்.

பயணம் நிறைவாக அமைந்த திருப்தியில் வருபவனை, அம்மா உள்ளே அழைத்து அப்பாவின் குத்தல் பேச்சுக்கு பலியாக்கிவிடுவாளோ என்ற பயம் அவளுக்கு.

“சரி தம்பி! ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க!” சொல்லி, மகளை பார்த்தவள், “மீரா! கொஞ்சம் உள்ள வா!” அதிகாரமாய் சொல்லி, நடந்தாள்.

பதற்றத்துடன் பின்தொடர்ந்தவளிடம், ஒரு பையை நீட்டி, “நீ சொன்னா மாதிரி மாவு அரைச்சி வெச்சிருக்கேன்! போய் கொடுத்திட்டு வா!” என்றாள்.

சொன்ன வேகத்தில் கொண்டு போய் கொடுத்துவிட்டு ஓடி வந்தவளின் கண்கள் குற்றவுணர்ச்சியில் ஈரமானது. விரைந்தோடி வந்தவள், தாயை தோள்சுற்றி இறுக கட்டியணைத்தாள்.

ஊருக்கு புறப்படும் முன், ஹரிக்கு தேவையானதை செய்து வைக்க சொன்னது என்னமோ உண்மைதான். ஆனால் கிளம்பும்முன் அப்பாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில், அம்மா, ஹரிக்கு  உணவு சமைக்க அக்கறை காட்டியிருக்கமாட்டாள் என்று நினைத்தாள் மீரா.

“கைய எடு டி! ஒருவாரமா பேசாம, இப்போ வந்து கட்டிப்பிடிச்சா, எல்லாத்தையும் மறந்துடுவேன்னு நெனச்சியா?” ஊருக்கு போனதிலிருந்து, குறுஞ்செய்திகள் மட்டுமே அனுப்பியதை சுட்டிக்காட்டி கடிந்தாள் நிர்மலா.

“ஸாரி மா! அப்பா மேல இருந்த கோபத்துல, உன்கிட்டையும் பேசாம இருந்துட்டேன்.” விசும்பினாள் மீரா.

“அப்பா மேலையும் நீ கோபப்படறது தப்பு!” அதிகாரமாய் சொன்ன தாயை ஆழமாய் பார்த்தாள் மீரா!

மகளுக்கு அறிவுரை சொல்ல, இதுவே சமயம் என்று, நிர்மலாவும் நிதானமாய் பேசினாள்.

“இங்க பாரு மீரா! உங்க மேல தப்பு இல்லேன்னு எனக்கு தெரியும்; அப்பா கேட்டது தப்பு தான்! ஆனா அவருக்கு உண்மை காரணம் சொல்லாம, நீ இவ்வளவு பிடிவாதமா இருக்கறதுல யாருக்கு என்ன லாபம்னு சொல்லு…” கேட்க,

மீரா சிந்திக்க தொடங்கினாள். மகள் கன்னங்களை வருடியவள், “அப்பா ஊருக்கு போயிருக்காரு! திங்கட்கிழமை காலையில தான் வருவாரு. அதுக்குள்ள நிதானமா சிந்திச்சு, அவர்கிட்ட பொறுமையா நடந்தத எடுத்து சொல்ற வழிய பாரு!” பக்குவமாய் எடுத்து சொன்னவள்,

“அவர்கிட்ட வறட்டு பிடிவாதம் பிடிக்கறது முக்கியமா; இல்ல உங்க காதல் கைக்கூடுறது முக்கியமா… நீயே யோசிச்சு பாரு!” முடிவை அவளிடமே விட்டாள்.

*****************************************************************************************************************************

“ஹரி! மீரா தான் உனக்கு ஏத்த பொண்ணு!” வீட்டிற்குள் நுழைந்த அடுத்த கணமே வாசுகி, தன் சம்மதத்தை சொன்னாள்.

இரு கைகளிலும் சுமந்து கொண்டிருந்த பெட்டிகளை கூட கீழே வைக்காமல், அம்மாவை புருவங்கள் உயர்த்தி பார்த்தான் ஹரி. காண்பது கனவா, நிஜமா என்று குழம்பினான்.

“என்னமா சொல்ற?” கேட்டது சரிதானா என்று உறுதி செய்து கொண்டான்.

“ஆமாம் டா!  நாளைக்கே என் மருமகள வீட்டுக்கு அழைச்சிட்டு வா! எல்லாம் தெளிவா சொல்றேன்! அப்படியே மணிமாறனுக்கு ஃபோன் போட்டு தா… அவனும் இத கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவான்!” இத்தனை நாட்களாக, இவளா மீராவை வெறுத்தாள் என்பது போல பேசினாள்.

ஆனால், கேட்டவன் முகத்தில் அவள் எதிர்ப்பார்த்த அளவுக்கு, எந்த மகிழ்ச்சியும் இல்லை. அத்தனை முறை நம்பி ஏமாற்றம் அடைந்த வலி, கற்று கொடுத்த பாடம்… நிதானமாக சிந்தித்தான்.

கால்மணி நேரம் முன் கூட முகம் பார்த்து பேச விரும்பாதவள், மருமகள் என்று உரிமை கொண்டாடுவது ஏன் என்று யோசித்தவன், அவள், மீராவின் வீட்டை கண்ணால் அளந்தது நினைவுக்கு வர,

“ஏன் மா! அவங்க வீட்ட பார்த்ததும், நம்மளவிட வசதியானவங்கன்னு கணக்கு போட்டையா…. இல்ல வீட்டுக்கு ஒரே பொண்ணு… சொத்தெல்லாம் அவளுக்கு தானேன்னு மனச மாத்திகிட்டையா?” பொறிந்து தள்ளினான்.

மகன் குத்தல் பேச்சை கேட்டு நொந்தவள், “வேண்டாம் ஹரி! வீணா வார்த்தைய விடாத டா!” பொறுமையாக எச்சரித்தாள்.

அதை கேட்டு ஏளனமாக சிரித்தவன், “நான் ஒண்ணும் தப்பா கேட்கலியே… உள்ளத தானே சொன்னேன்!” தர்க்கம் செய்தவன், “என் மீராவோட நற்குணம் தெரிஞ்சும், வீட்டுப்பத்திரத்த திருப்பி கொண்டுவந்தா தான் சம்மதம் சொல்லுவேன்னு சொன்ன… இப்போ என்ன திடீர்ன்னு இந்த மனமாற்றம்…” அவள் போட்ட நிபந்தனையை சுட்டிக்காட்டி வினவியவன், “ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சிக்கோ! இப்படியெல்லாம் பேசினா, நான் வீட்டு பத்திரத்த வாங்கிட்டு வந்துடுவேன்னு நினைக்காத!” தீர்மானமாய் சொன்னான்.

“வேண்டாம் ஹரி! அது உங்கபாடு! நான் அதுல தலையிட மாட்டேன்.” மென்மையாக சொல்லும் தாயை இமைக்காமல் பார்த்தான்.

அவள் மன நிலையை உறுதிபடுத்திக்கொள்ள நினைத்தவன், “அதுமட்டுமில்ல! திங்கட்கிழமைலேந்து, நாங்க ஒரே இடத்துல தான் வேலை செய்ய போறோம். அவதான் எனக்கு உயர் அதிகாரி… இப்போ மட்டுமில்ல…எப்பவுமே அப்படிதான்…கல்யாணத்துக்கு அப்புறமும் அப்படிதான்… அத நான் கம்பீரமா சொல்லிப்பேன்… ஏன்னா, எங்களுக்குள்ள நல்ல புரிதல் இருக்கு… அத உனக்கோ, வெளிவுலகத்துக்கோ நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல… நாளைக்கு இத சாக்கா வெச்சு, திரும்ப அவ மனச காயப்படுத்தாத!” திடமாய் சொன்னான்.

கேட்டவள், “அதையும் புரிஞ்சிகிட்டேன் டா! எவ்வளவு உயர்பதவியில இருந்தாலும், அவ அன்னைக்கு சொன்னா மாதிரி… அவ கண்ணுக்கு நீதான் ஹீரோ…அவ உன்மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கா…உன்ன எந்த அளவுக்கு உயர்வா பாக்குறா…எவ்வளவு ஒழுக்கமான பொண்ணு… எல்லாம், இந்த பயணத்துல பலமுறை கண்கூடா பார்த்தேன் டா!” மெதுவாக பேசியவள்,  

அவள் விடுதியில், தனியாக தங்க பயந்தது, அப்பா நிழற்படத்தை சட்டையில் வைத்தது, ரயிலில், தன் தந்தைக்கு நிகராக அவனை பாதுகாப்புக்கு அழைத்தது, எல்லாவற்றையும் விளக்கி, மகனை ஆச்சரியத்தில் தள்ளினாள்.

அம்மா நிதானமாக தான் சிந்தித்து பேசுகிறாள் என்று உணர்ந்தவன், மற்றொரு பெரிய உண்மையை போட்டு உடைத்தான்.

“இன்னொரு விஷயமும் கேட்டுட்டு, அப்புறம் உன் முடிவ சொல்லு மா!” என்றவன், வீட்டை வாங்கியதை பற்றி கூறி, “வீடு எங்க ரெண்டு பேர் பேருலையும் தான் இருக்கு… லோன் மட்டும் முழுசா மீரா பேருல இருக்கு… ஆனா மாசாமாசம் கடன் தொகை நான் தான் கட்டறேன்… இதுல எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல… உனக்கும் தகவல் தான் கொடுக்கறேன்!” தெளிவுபடுத்தினான்.

வீடு வாங்கியதை பற்றி கேட்டவளுக்கு பிரமிப்பாய் இருந்த போதிலும், மீரா குணம் முற்றிலும் புரிந்துகொண்டவளுக்கு கோபம் வரவில்லை. உற்சாகம் இல்லாமல் வேலை செய்துகொண்டிருந்த மகனின், எழுதும் ஆசைக்கு உற்சாகமூட்டி, வீடு வாங்கும் அளவிற்கு, அவன் தகுதியை உயர்த்த, மீராவால் மட்டுமே முடியும் என்று நெகிழ்ந்தவள், தன் முடிவில் மாற்றம் இல்லை என்று உறுதியாக சொன்னாள்.

ஹரிக்கு தான், அம்மாவின் பேச்சில் பிடிமானம் வரவில்லை. உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறாள் என்று சந்தேகம் இருந்தது. மேலும், அவள் நிலையற்ற புத்தியால், மீரா இனி ஒரு போதும் துன்பப்படக்கூடாது என்று உறுதியாய் இருந்தான்.

“சரி மா! உன் மனமாற்றத்த நான் நம்பறேன். திங்கட்கிழமை சாயங்காலம், அவள அழைச்சிட்டு வரேன். அது வரைக்கும், நீ, உன் முடிவுல உறுதியா இருக்கியான்னு பார்க்கலாம்!” என்றான்.

மகன் சொன்னதற்கு சம்மதம் சொல்லி நகர்ந்தாலும், மீராவின் நினைவிலேயே கரைந்து இருந்தாள் வாசுகி. சமையலறையில் அவள் செய்து வைத்திருந்த பொடிகளும், ஊறுகாய்களையும், புசித்தவள் மனதிலும் ஆழமாய் ஊறி இருந்தாள் மீரா. மகனிடன், அவ்வப்போது, மீராவை உடனே அழைத்துவரும்படி நச்சரித்து கொண்டே இருந்தாள். அம்மாவின் தவிப்பை கண்டு ரகசியமாய் மகிழ்ந்த போதிலும், தன் முடிவில் திடமாய் இருந்தான் ஹரி.

இருவரும் எதிப்பார்த்த அந்த திங்கட்கிழமையும் வந்தது. அலுவலகம் புறப்படும் மகனிடம்,

“மறக்காம மீராவ அழைச்சிட்டு வா டா! முடிஞ்சா, பர்மிஷன் போட்டு சீக்கிரமே அழைச்சிட்டு வா!” யோசனை சொல்ல,

தாயை பாசமாய் அரவணைத்தவன், “பர்மிஷன் எல்லாம் போட முடியாது. சரியா அஞ்சு மணிக்கு வந்துடுவோம்!” மெல்லிய புன்னகையுடன் சொல்ல, அவளும் சிறுபிள்ளை போல சரி என்று தலையசைத்தாள்.

“அப்பா! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!” பத்து நாட்களுக்கு பிறகு, நேரில் காணும் தந்தையிடம் பேசினாள் மீரா.

“உண்மைய சொல்லு!” கராராக வினவினார் வரதன்.

தான் அறிவுறுத்தியபடி, மகள் பக்குவமாக நடந்துகொள்கிறாள் என்று ஆர்வமாய் பார்த்து நின்றாள் நிர்மலா.

கையில் வைத்திருந்த வீடியோ கேஸெட்டை நீட்டியவள், “இத ஒரு முறை போட்டு பாருங்க! ஹரி எவ்வளவு நல்லவன்னு உங்களுக்கு புரியும்!” மென்மையாக பேசினாள்.

நேரடியாக பதில் சொல்லாமல், சுற்றி வளைத்து அவள், ஹரிபுராணம் பாடுகிறாளே என்று எரிச்சலடைந்தவர், “எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்ல… கல்யாணம் செஞ்சுகிட்டீங்களா, இல்லையா?” கடுகடுவென வினவினார்.

தங்கள் காதலை பற்றி, தெரிந்துகொள்ள கூட முயற்சி செய்யாமல், யாரோ ஒரு நண்பன் சொன்ன விஷயம் உண்மையா, பொய்யா என்று தெரிந்துகொள்ள மட்டும் ஆர்வம் காட்ட நினைக்கும் இவரிடம் எதற்கு நேரடியாக பதிலளிப்பது என்று தோன்றியது மீராவுக்கு.

“நான் இன்னைக்கு பழையபடி வங்கி வேலைக்கு போறேன்… ஹரி பக்கத்துல உட்கார்ந்து வேலை செய்ய போறேன்! அழுத்தமாக சொன்னவள், “வங்கி விதிமுறைகள்படி கணவன் -மனைவி ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேல செய்ய முடியுமான்னு, கொஞ்சம் யோசிச்சு பாருங்க!” விரப்பாக சொல்லி, கேஸெட்டை மேஜையில் வைத்துவிட்டு அலுவலகம் புறப்பட்டாள்.

‘எப்படியோ போங்க ரெண்டு பேரும்!’ நம்பிக்கை இழந்தவளாய் நகர்ந்தாள் நிர்மலா.

மனம்நொந்தவள், சன்னியுடன் வாசலுக்கு வர, உற்சாகமாய் அவளை நோக்கி நடந்து வந்தான் ஹரி. மாலையில் அவளை வாசுகியிடம் அழைத்துச்சென்று இன்பதிர்ச்சி கொடுக்க நினைத்தவன், தந்தை-மகளின் வாதத்ததை பற்றி அறியவில்லை.

முகத்திலுள்ள பூரிப்பை மறைத்து விரப்பாய் வந்த அவனையும்,

மனதிலுள்ள சோகத்தை மறைத்து புன்முறுவலுடன் காத்திருந்த அவளையும்,

மிருதுவாக சுமந்து சென்றது, இருவரின் ரகசியம் அறிந்து அந்த சன்னி!!!

பேசிப்பழகி பார்த்ததில், பித்தம் தெளிந்து உறவாட நினைத்தது தாய்மனம்-நண்பன்

பேச்சை கேட்டு பிதற்றியதில் உறவில் பிளவை உண்டாக்கியது தந்தைகுணம்.

விட்டுக்கொடுத்து போவாளா-இல்லை

வீண்பிடிவாதம் பிடிப்பாளா மீரா-பதில் சொல்லும்,

அவள் அவர்கள் அனைவரின் மீதும் வைத்த அன்பின் ஆழம்….