அன்பின் ஆழம் 33.1

வாசுகி, ரயிலில் வர விருப்பம் தெரிவித்த அடுத்த கணமே, அரவிந்தன் அதற்கான ஏற்பாடுகளை செய்ய துவங்கினான். ரயில்வே துறையில் பணிபுரியும் தன் உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு, ஐவரும் ஒன்றாக பயணிக்க தேவையானதை செவ்வனே செய்து முடித்தான். தோழர்கள் இருவரும் பழைய பயணச்சீட்டை ரத்து செய்து, புதியதை பெற, ரயில் நிலையம் வரை செல்ல, தோழிகள் அந்நேரத்தில், சாந்தினி சௌக் (Chandni Chowk) சந்தையில் ஷாப்பிங்க் செய்ய திட்டமிட்டனர்.

“சரியா ஒரு மணிக்கு எல்லாம் வந்துடுங்க… லேட்டாக்கினா, உங்கள விட்டுட்டு நாங்க ஊருக்கு கிளம்பிடுவோம்!” அரவிந்தன், ஹாண்ட்பேகை அலசிக்கொண்டிருக்கும் பெண்களை எச்சரிக்க,

அதிலிருந்து தலைத்திருப்பிய மீரா, “ட்ரெயின வேணும்னா நிறுத்துவேன்னு சொல்லு… அஞ்சலிய விட்டுட்டு நீயாவது ஊருக்கு போறதாவது!” என்று உதட்டை சுழித்தாள். ஹாண்ட்பேகை மூடி, தோளில் மாட்டிக்கொண்டு, வாசுகி பக்கம் திரும்பியவள்,

“அம்மா! நீங்களும் எங்களோட வாங்களேன்!” மென்மையாக அழைத்தாள், மீரா.

‘இவளுக்கு எதுக்கு இந்த வீண்வேலை…’ ஹரி மனதில் பதற,

“இல்ல! நான் இங்கையே இருக்கேன்…ஒரு நாள் முழுக்க ட்ரெயின்ல வேற பயணம் செய்யணும்!”, நிதானமாக காரணம் சொல்லி, வாசுகி மறுக்க, ஹரி பெருமூச்சுவிட்டான்.

பொறுமையாக பதில்சொல்லும் வாசுகியை கண்டு வியந்தான் அரவிந்தன். “அம்மா! நீங்க அவங்களோட போயிட்டு வாங்க! இல்லேன்னா அவங்க ரெண்டு பேரும் அங்கேயே ஐக்கியமாயிடுவாங்க…” தோழியை பார்த்து கண்சிமிட்டியவன், வாசுகியிடம் யோசைனை சொல்ல,

“வாங்க மா! அந்தயிடம் ரொம்ப நல்லா இருக்கும்; இவ்வளவு தூரம் வந்துட்டு, அத பார்க்காம போனா எப்படி…” கணவனுக்கு, அஞ்சலி ஒத்தூதினாள். அவர்களின் கனிவான பேச்சில், மயங்கியவள், சரி என்று தலையசைத்து, உடன்வர சம்மதித்தாள்.

இவர்களை தனியே அனுப்பிவிட்டு எங்கே நிம்மதியாக இருப்பது என்று நினைத்த ஹரி, ரயில் நிலையத்தில் வேலை முடிந்ததும், அவர்களை சந்தையில் சந்திப்பதாக சொன்னான்.

வாசுகி, உடைமாற்றி கொண்டு வருவதாக சொல்லி நகர்ந்தாள்.

“ஹரி! அப்படியே, அந்த வீடியோ கேஸெட்ட வாங்கிட்டு வந்துடு!” என்று, ஹாண்ட்பேகிலிருந்து விலாச அட்டையை எடுத்து நீட்டினாள். அதை வாங்கியவன்,

“அவங்ககிட்டேந்து தள்ளி இருன்னு சொன்னேன்ல…சொல்பேச்சு ஏதாவது கேட்கறையா?” வம்பை விலைக்கு வாங்கியதாக சொல்லி கண்டிக்க,

“அதெல்லாம் பார்த்துக்கலாம் எழுத்தாளரே! நீங்க பயப்படாம போயிட்டு வாங்க!” விளையாட்டாக பதில் சொல்லி கண்சிமிட்டினாள் மீரா.

“இந்த வாயாடிகிட்ட அவங்கள ஜாக்கிரதையா இருக்க சொல்லு!” தோழியை செல்லமாக கன்னத்தில் அடித்து அரவிந்தன் நக்கலாய் சொல்ல, கழுத்தை நொடித்து, முகத்தை திருப்பி கொண்டாள்.

சந்தைக்கு வந்த வாசுகி, நின்ற இடத்திலிருந்து, அலைமோதும் மக்கள் கூட்டத்தை கண்கள் விரித்து பார்த்தாள். இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனத்தொகையும் அங்கேதான் உள்ளது என்பது போல் தோன்றியது. இவ்விடத்தில் தொலைந்துவிட்டால், வழி கேட்க கூட பாஷை தெரியாது என்று பயந்தவள், இரு பெண்களுக்கும் இடையில்  நடப்பதில் மிகவும் கவனமாக இருந்தாள். தோழிகளும், வாசுகி முன் அதிகம் பேசாமல், அடக்க ஒடுக்கமாக நடந்தனர்.

“அம்மா! இந்த இடத்தோட பேரு க்காரீ பாவ்லீ (Khari Baoli). இங்க கிடைக்காத உலர்ந்த பழ வகைகளே இல்ல…” சுற்றுலா வழிகாட்டி போல, அஞ்சலி விளக்கினாள். ஐந்து நிமிடத்தில், ஒரு கடைக்கு முன் வந்து நின்றனர் பெண்கள். முந்திரி, திராட்சை, பேரிச்சம்பழம் தாண்டி, உலர்ந்த பழங்களை பற்றி அதிகம் தெரியாத தோழிகள், அங்கு இருபது, முப்பது கூடைகளில் குவித்து வைத்திருந்த பொருட்களை பிரம்மிப்பாய் பார்த்தனர். ஹிந்தியில் எழுதியிருந்த பெயர் பலகைகளை படித்து, கடைக்காரரிடம் அவற்றை பற்றி வினவ, வாசுகி விளக்கினாள்.

“இது ஜாதிக்காய், அது சாரப்பருப்பு, அது வாதுமை பழம்…” ஒவ்வொன்றாய் கை நீட்டி காட்டி, “அதோ அங்க பழுப்பு நிறத்துல, சின்ன சின்னதா இருக்கே, அது  ஆளி விதை, அது பக்கத்துல கொடிமுந்திரி என்று தமிழ் பெயர்கள் சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல், எது எலும்புக்கு நல்லது, எது இதயத்திற்கு நல்லது, முகப்பொலிவுக்கு நல்லது என்று, மருத்தவராக, அழகு நிபுணராக, சகலகலாவல்லியாய் மூச்சுவிடாமல் விளக்கினாள். இருபுறமும் நின்ற பெண்கள், இமைக்காமல் அவளையே பார்த்து கொண்டிருந்தனர்.

மருத்துவகுணம் பொருந்திய ஆறேழு பொருட்களை கலவையாய், ஒரு குறிப்பிட்ட அளவை, கடைக்காரரிடம் கேட்கும்படி வாசுகி, மீராவிடம் சொன்னாள். கிளிப்பிள்ளை போல, தோரணை மாறாமல் கடைக்காரரிடம் ஒப்பித்தவள், வாசுகி பக்கம் திரும்பி.

“இதெல்லாம் எதுக்கு மா?” என்று ஆர்வமாய் கேட்டாள்.

“இத லேசா வறுத்து, பொடியாக்கி, தினமும் சாப்பிட்டு வந்தா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்…ஹரிக்கு செஞ்சி வச்சிட்டு போக…” காரணமும் சேர்த்து சொல்ல,

“அம்மா! நானும் இதே போல ஒரு செட்டு வாங்கிகிட்டமா?” ஆசையாய் கேட்டாள் மீரா.

தன் அன்பிற்காக ஏங்கும் அவள் எண்ணம் புரிந்த போதிலும், அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ள முடியவில்லை வாசுகியால். உணர்வுகளை ஒளித்து கொண்டவள், மறுப்பு தெரிவிக்காமல்,

“மூணு செட்டு கட்டி தரச்சொல்லு!” மீராவிற்கு பதிலளித்து, அவற்றுக்கான பணத்தையும் அவளே முன்வந்து கொடுத்தாள்.

கேட்டதும் மிட்டாய் வாங்கிகொடுத்த அன்னையை போல வாசுகியை பாவித்தவள் நடப்பதை எல்லாம் எண்ணி நெகிழ்ந்தாள்.

அங்கிருந்து, புறப்பட்டவர்கள், அரை மணி நேரம் , வீதிகளை வலம் வந்தனர். ஒரு பை நிறைய அணிகலன்கள்,டெல்லி பயணத்தை நினைவூட்டும் காட்சி பொருட்கள்(souvenirs) என்று வாங்கிவிட்டு, துணிக்கடை ஒன்றில் நுழைந்தனர். பெண்கள் தினசரி அணிய காட்டன் சுடிதார்கள் வாங்கிகொண்டு புறப்பட, எதிரிலிருந்த புடவைகள் இருக்கும் பகுதி அவர்களை ஈர்த்தது.

தனக்கு அலுப்பாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு வாசுகி அவர்கள் பக்கத்திலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்து, சுற்றி வேடிக்கை பார்த்தாள்.

“ஷாப்பிங் முடிஞ்சுதா? எங்க இருக்கீங்க?” ஃபோனில் அரவிந்தன் வினவ,

“அரவிந்த் பா! புடவை பார்த்துட்டு இருக்கேன்! ஒண்ணொண்ணும் ஒவ்வொரு விதத்துல நல்லா இருக்கு… எத செலெக்ட் பண்ணறதுன்னு தெரியல… நீங்க வந்து செலெக்ட் பண்ணுங்க!” அஞ்சலி குழைய, ஐந்தாவது நிமிடம், அவன் கடையில் இருந்தான்.

கணவன் மனைவி இருவரும், புடவை வாங்கும் சாக்கில் கொஞ்சி குலாவ, ஏக்கமாய் பார்த்து நின்றாள் மீரா. எவரும் அருகில் இல்லாத போதே, நிபந்தனைகள் போடும் தன்னவன், அம்மா முன், புடவை தேர்ந்தெடுத்து கொடுத்துவிடுவானா என்று நினைத்தாள்.

“இவங்க புடவை வாங்கறதுக்குள்ள, நான் போய், ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வரேன்.” சாக்கு சொல்லி, மீரா அங்கிருந்து நகர பார்த்தாள்.

“இன்னும் எவ்வளவு டி ஸ்வீட்ஸ் வாங்குவ… ஏற்கனவே எக்ஸ்ட்ரா ரெண்டு பை ஆயிடுத்து!” அவர்கள் வாங்கி வைத்திருப்பதை கண்ணால் அளந்து கடிந்தான் ஹரி.

“நான் ஒண்ணும் எனக்காக கேட்கல,!” நிலமை புரியாமல் கோபப்படுகிறானே என்று சிடுசிடுத்தவள், “ஆஃபிஸ்ல, உனக்கு வாழ்த்து சொல்ல வரவங்களுக்கு எல்லாம் கொடுக்க!” என்று விளக்கினாள்.

தனக்காக பேசும் அவள் முகம் பார்த்து உறுகியவன், “சரி வா! நானும் உன் கூட வரேன்!” என்று சொல்லி, வாசுகியை, அரவிந்தனுடன் வர சொன்னான்.

இனிப்பு என்று பேச்சு கேட்ட அரவிந்தன், தோழியிடம், “மீரா! அன்னைக்கு போன அதே கடை, கண்டேவாலால(Ghantewala) வாங்கிக்க… அப்படியே நமக்கு, ஸோஹன் ஹல்வா(Sohan Halwa) மறக்காம வாங்கிட்டு வா டி!” நினைவூட்ட,

“புடவைய செலெக்ட் பண்ண சொன்னா, காதெல்லாம் அங்க தான் இருக்கு!” பொய்கோபம் கொண்ட அஞ்சலி அவன் காதை திருகினாள்.

அவனும் பயந்தது போல சிணுங்க, அவர்களை பார்த்து மென்மையாக புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்தாள் மீரா.

தன் ஏக்கத்தை மறைத்து சாமர்த்தியமாக அங்கிருந்து வந்துவிட்டோம் என்று நினைத்த மீராவிற்கு, வாசுகி அனைத்தையும் கவனித்தாள் என்று தெரியாது. அஞ்சலியை போல, மீராவிற்கும் ஆசைகள் இருக்கும் என்று வாசுகிக்கு புரியாமல் இல்லை. தான் சொல்லும் பதிலால் அனைத்தும் மாறும் என்று தெரிந்த போதும், அமைதியாக இருந்தாள் வாசுகி.

நடைப்பாதையில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்தனர் காதல் ஜோடிகள். அமைதியாக நடக்கும் தன்னவளின் கைக்கோர்த்தவன்,

“ஃபலூடா(Falooda) வாங்கி தரட்டுமா?” எந்தவித அலட்டலும் இல்லாமல் கேட்டான்.

“இப்போ தானே ஸ்வீட் சாப்பிடாதன்னு திட்டின…” தலையை தொங்கப்போட்டு முணுமுணுத்தாள்.

சரி தான் என்று தலையசைத்தவன், “என்ன செய்ய! ராஜகுமாரிக்கு புடவை தான் வாங்கி தர முடியல… ஃபலூடாவாது வாங்கி தரலாமேன்னு…!” ஏக்கமாய் சொல்லி, ஆச்சரியத்தில் ஸ்தம்பித்து போய் நிற்கும் அவள் பக்கம் திரும்பினான்.

“ரொம்ப யோசிக்காத!” செல்லமாக அவள் தலையில் தட்டியவன், “இன்னுமும் உன் மனசுல இருக்குறத புரிஞ்சிக்க முடியேலேன்னா எப்படி… சரி சீக்கிரம் சொல்லு… ஃபலூடா சாப்பிடுறையா?” என்றான்.

ஆழ்மனதில் உள்ளதை படித்தவனின் அன்பில், வருத்தங்களை மறந்தாள், மீரா. “எழுத்தாளரே! சாப்பிடலாம்… நேத்து மாதிரி, பரான்ட்டேவாலி கலீ  (Paraanthewali Gali) போய் பராத்தா(Paratha) சாப்பிட்டு, க்யானில(Giani) ஃபலூடா(Falooda) சாப்பிடலாம்… ஆனா அவங்களும் வரட்டும்… சேர்ந்தே சாப்பிடலாம்!”

தனியாக உண்ணும் பழக்கம் இவளுக்கு அரவே இல்லை என்று உணர்ந்தவன், மென்மையாக சிரித்து சம்மதம் சொன்னான். இனிப்புகள் வாங்கிகொண்டு, அரவிந்தனை ஃபோனில் அழைத்து, திட்டத்தை தெரிவித்தான். மீரா சொன்னதை போல், அனைவரும், ஒன்றுகூடி மகிழ்ந்துண்டனர். இட்லி, தோசை மட்டுமே சாப்பிட்டு பழகின வாசுகியும், எந்த குறையும் கூறாமல், அனுசரித்து அமைதியாக உண்டாள்.

அது பாசத்தாலா, பசியாலா என்று, படைத்த அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்.

கடைசி நிமிடம் வரை ஏதோவொரு வேலையில் பரபரப்பாக இருந்தவர்கள், ட்ரெயின் ஏறியதும், நீண்ட சோம்பல் முறித்து பெருமூச்சுவிட்டனர். அதிலும் மீராவிற்கு மட்டற்ற மகிழ்ச்சி. கடந்த சில ரயில் பயணங்கள் கசப்பான நினைவுகளை மட்டுமே தர, இன்று, உடன் வரும் தன்னவன், அமைதியாக உட்கார்ந்திருக்கும் வாசுகி என்று நிறைவாக இருந்தது.

வாரத்தின் நடுவில் இயங்கும் ரயில் என்பதால், அன்று அவ்வளவு கூட்டம் இல்லை. ஆறு பேருக்கான அந்த பகுதியில், இவர்கள் ஐவர் மட்டுமே பயணம் செய்தனர். அது முட்டிவலியோடு வந்த வாசுகிக்கு வசதியாக போனது. கால் நீட்டி அவள் ஒரு புறம் அமர்ந்திருக்க, மீதமுள்ள இடத்தில் ஹரி அமர்ந்தான். மற்ற மூவரும், எதிரில் அமர்ந்தனர்.

சினிமா, விளையாட்டு, அலுவலகம் சார்ந்த விஷயங்களை பேசி ஓய்ந்த நண்பர்களுக்கு இரவு எட்டு மணியளவுக்கு எல்லாம் தூக்கம் எட்டிப்பார்த்தது. வாசுகி கீழ் தளத்தில் உறங்க, அதே பக்கத்தில், நடுவில் அஞ்சலியும், மேல் தளத்தில் அரவிந்தனும் படுத்து கொண்டனர்.

ஜன்னல்கள் பூட்டி இருக்கிறதா என்று சரி பார்த்துவிட்டு, விளக்குகளை அணைத்தவன், “குட் நைட் மீரா!” சொல்லி, அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

சிந்தையில் கலந்தவளாய், கைப்பேசியை மட்டும் முகமருகில் வைத்து தட்டிக்கொண்டிருந்தவளின் காதில், அவன் பேசியது விழவே இல்லை.

“மீரா! என்ன யோசனை?” அவள் தோளை பிடித்து உலுக்கினான்.

கவலைகள் மறந்திருந்தவளை சோதிக்க வந்தது, அந்த குறுஞ்செய்தி. மறுநாள் இரவு வீட்டிற்கு வரும் போது, ஹரியையும் உள்ளே அழைத்து வரும்படி நிர்மலா சொல்லியிருந்தாள். அதற்கு மறுப்பு தெரிவித்தாள் மீரா. அவன் உள்ளே வராத பட்சத்தில், தானே ஹரி வீட்டிற்கு போக வேண்டியிருக்கும் என்று  தாய் பதிலனுப்பியதில் திடுக்கிட்டாள் மீரா.

தந்தை பேசியதை பற்றி ஹரி காதுகளுக்கு போடவே கூடாது என்று நினைத்தாள் மீரா. அது இப்போது சாத்தியம் இல்லை என்று தோன்றியது அவளுக்கு.

“தூக்கம் வரல்ல ஹரி!” காலையில் சொல்லிக்கொள்ளலாம் என்று ஒத்திப்போட்டாள்.

அவள் மனதை படிப்பதில் பி.எச்.டி வாங்கியவனிடம் பொய் சொல்கிறாள் என்பதை மறந்திருந்தாள் மீரா. அருகில் வந்து அமர்ந்தவன், மென்மையாக அவள் இடது கையை வருடி, “நீ தூங்கு! நான் அப்புறம் போய் படுக்கறேன்.!” என்றான்.

அந்த அன்பில் கரைந்தவளின் கண்கள் குளமாகின. அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், “இவங்க எல்லாம் நம்மள கடைசிவரைக்கும் புரிஞ்சிக்கவே மாட்டாங்களா ஹரி?” எதிர்ப்பு தெரிவிக்கும் வரதனுக்கும், வாசுகிக்கும் பொதுவாக கேட்டாள்.

அவள் கேட்டது முற்றிலும் உண்மை என்று உணர்ந்தவன், “எனக்கும் தெரியல மீரா! நாம என்ன பண்ணா இவங்களுக்கு நம்மள பிடிக்கும்னு எனக்கும் தெரியல டி!” மனம் நொந்தான்.

“எனக்கு தெரியும் ஹரி!” தலைத்திருப்பி சொல்ல, அவளை ஆழமாய் பார்த்தான் ஹரி. “வேண்டாம்னு சொல்ல, நம்மகிட்ட தேடி தேடி குறை கண்டுபிடிக்கறவங்க, கொஞ்சம் அவங்க பிடிவாதத்த இறக்கி வெச்சுட்டு, வேணும்னு நெனச்சா போதும் டா!”  

“கரெக்ட் மீரா! இந்த முறை அம்மா ஊருக்கு போறதுக்குள்ள, இன்னும் திடமா பேசிப்பாக்குறேன்!” நம்பிக்கையூட்டி, “இப்போ எதையும் யோசிக்காம தூங்கு!” என்று எழுந்தான்.

எழுந்தவன் கை பிடித்து தடுத்தவள், “எழுத்தாளரே! நீங்களும் வீண் பிடிவாதம் பிடிக்காம அந்த வீட்டுப்பத்திரத்த அவங்ககிட்ட கொடுத்தாலே போதும்… பேசணும்னு அவசியமில்ல!” வழிவுண்டு என்று சொல்ல,

அதற்கு மறுப்பாய் தலையசைத்தவன், “சண்டே வந்து உங்க அப்பாகிட்ட விருதையும் சான்றிதழையும் காட்டுறேன். அவர் மனசு மாறுதான்னு பார்க்கலாம்!” சொல்லி, அவள் கன்னத்தை வருடி, “நிம்மதியா தூங்கு!” என்று நகர்ந்தான்.

இனி எங்கே நிம்மதியாக தூங்குவது என்று தோன்றியது மீராவிற்கு. அப்பா பேசியது தெரியும் வரை, அவனாவது நிம்மதியாக இருக்கட்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.

பல கவலைகளுடன் நித்திரை கொண்டவள் நடுஜாமத்தில் விழித்து கொண்டாள். சல சலவென்று இலக்கை நோக்கி நிற்காமல் ஓடும் ரயிலோசை… எதிரில் பிடிக்கொடுக்காமல் பழகும் மாமியார்… எங்கு இருக்கிறாள் என்று புரியாமல், திடுக்கிட்டு அமர்ந்தாள். கண்கள் தன்னவனை தேட, அவன் நிம்மதியாக உறங்கி கொண்டிருப்பதை கவனித்தாள்.

“ஹரி! எழுந்திரு டா! ஹரி…ஹரி…” எம்பி எம்பி, மேல் தளத்தில் படுத்திருக்கும் அவனை எழுப்ப முயன்றாள். ஐந்து நிமிடங்கள் அவனை ஓயாமல் தட்டியதில், வாசுகி புரண்டு படுத்தது தான் மிச்சம்.

“என்னடி வேணும் உனக்கு?” கண்கள் கசக்கி எழுந்தவன், சிடுசிடுக்க,

“வாஷ்ரூம் போகணும்; கொஞ்சம் துணைக்கு வா!” கேட்டவளுடன், வணங்காமல் சென்று வந்தான். இவர்கள் பேச்சு கேட்ட வாசுகி முழித்து கொண்டாள். அவர்களை ஏற இறக்க பார்த்தாளேயொழிய, எதுவும் பேசவில்லை. ஐந்து நிமிடத்தில் திரும்பி வந்தவர்களும், அமைதியாக உறங்க சென்றனர்.

சூரியன், அதன் மென்கரங்களால் வருடி, ரயிலில் பயணிப்பவர்களை எழுப்பி கொண்டிருந்தது. “காபி! டீ! மசாலா சாயா!”விற்பனையாளர்களின் கூக்குரலுக்கு, பதில் சொல்லும் வகையில், பலர் வயிறும் பசியால் ரம்மியமாய் இசைத்தது. ஒருவர் பின் ஒருவராய் பல் துலக்கிவிட்டு வர, மீரா தனக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு,

“ஹரி! என் கூட வா!” தன்னுடன் வரும்படி வற்புறுத்தினாள்.

அன்றைய செய்தித்தாளில் மூழ்கி இருந்தவன், அதிலிருந்து தலைதூக்கி, “இப்போ என்ன பயம் மீரா? காலை வேளைதானே?”  சலித்துகொண்டான்.

அவர்கள் பேச்சை கேட்ட அரவிந்தன், “நல்லா சொன்ன டா!” நண்பனுக்கு ஒத்தூதி, மீராவை கண்கொட்டாமல் பார்த்து, “இவ சரியான தொட்டாச்சிணுங்கி டா… ஊருக்கு வரப்பவும் இப்படி தான் செஞ்சா… தைரியமா இருக்குற அஞ்சலியையும் தனியா போகாதேன்னு சொல்லி அறிவுரை வேற…”என்று கேலி செய்தான்.

பதிலுக்கு, ஹரி, அவள் நடு இரவில் எப்படி எழுப்பினாள் என்றும், தன் தூக்கம் அதனால் கலைந்தது என்றும் புலம்ப, மீராவிற்கு கோபம் தலைக்கேறியது.

“பாதுகாப்புக்காக தானே உன்ன கூப்பிட்டேன்… அத போய் கேலி செய்யறையே ஹரி!” சுருங்கிய முகத்துடன் சொல்ல,

அவள் பயத்தை முழுவதுமாக அறியாதவன், “பின்ன என்ன மீரா! ஓடுற ட்ரெயின்ல, உன்ன யாரு வந்து தூக்கிட்டு போவாங்க?” என்று தர்க்கம் செய்தான் ஹரி.

“அதெல்லாம் எனக்கு தெரியாது ஹரி! எத்தனையோ ட்ரெயின்ல பொண்ணுங்கள கலாட்டா செய்யறவங்கள பார்த்திருக்கேன்… வாஷ்ரூம் கிட்ட நிந்துகிட்டு தான் சிகரெட் பிடிச்சு கும்மாளம் அடிப்பாங்க… அதுமட்டும் இல்ல…” சொல்ல தயங்கியவள், “சில வாஷ்ரூம் கதவுக்கு தாழ்ப்பாள் கூட சரியா இருக்காது… அதனால, எங்கப்பா என்ன தனியா விடவே மாட்டாரு தெரியுமா!” முகத்தை அப்பாவியாக வைத்து பேசியவள், தன்னையும் அறியாது அப்பாவை நினைத்துகொண்டாள்.

அரவிந்தன் திருமணத்திற்கு சென்ற போதும் அவள் ஒருபோதும் தனியாக செல்லவில்லை என்று நினைவில் வர, அவள் உண்மை சுபாவம் இதுவே என்று உணர்ந்தான் ஹரி. “சரி வா! கூட வரேன்!” மென்மையாக சிரித்து கொண்டே, அவளை அழைத்துச் சென்றான்.

மீண்டும் இருக்கைக்கு திரும்பும் வழியில் தான், அவளுக்கு வாசுகி அவர்களுடன் இருப்பதே நினைவுக்கு வந்தது.

“ஹரி! அம்மா இருக்குறதே மறந்துட்டேன் டா! என்ன தப்பா நினைச்சிருப்பாங்க தானே… உன்ன தனியா அழைச்சிட்டு வந்து பேசுறதுக்கு,  நடிக்கறேன்னு சொல்லுவாங்கல்ல… ”அவளது கற்பனை குதிரை ரயிலை காட்டிலும் வேகமாக ஓட, அதை கேட்டவனுக்கு, சிரிப்பு தான் வந்தது.

“யாருக்கு தெரியும்! ஒரு வேளை, இப்படி ஒரு பயந்தாங்கோளிய கல்யாணம் செஞ்சிக்காதன்னு சொல்லுவாங்களோ!” சிந்திப்பதை போல நடித்தவன், அப்பாவியாக முகம் வைத்து கொண்டு, “அப்படி சொன்னா, நான் என்ன செய்ய மீரா?” கேள்வியை அவளிடமே திருப்ப,

“மீராவுக்கு, கராத்தே, குங்ஃபூ எல்லாம் சொல்லி தரேன்னு சொல்லுங்க எழுத்தாளரே!” பதில் சொல்லி கண்சிமிட்டினாள்.

ஏதோ ஒரு காரணம் சொல்லி இவர்கள் காதலை மறுக்கும் பெற்றொர் குணம் பழகிவிட்டவர்களுக்கு, எதையும் விளையாட்டாக பார்க்கும் மனோபாவம் வந்துவிட்டது போல…

வெள்ளந்தியாக , மீரா தன் பயத்தை ஹரியிடம் வெளிப்படையாக சொன்ன அந்த தருணம் தான், மீரா மேல் வாசுகிக்கு கொள்ளை அன்பு வந்தது என்று அவர்கள் மட்டும் அறிந்திருந்தால்….

கொஞ்சம் கொஞ்சமாய் மீராவை நேசிக்க துவங்கிய வாசுகியின் மனம், ரயில் பயணத்தில் தெளிந்தது. நகர்புறத்தில் வாழ்ந்த போதிலும், உயர்பதவியில் இருந்த போதிலும், பெண்களுக்கே உரிய பாதுகாப்பு, என்று வரும் போது, அவள் தன் மகன் ஹரியை எந்தளவுக்கு கண்மூடித்தனமாக நம்புகிறாள் என்று கண்கூடாக பார்த்தாள் வாசுகி. அதில் அவர்கள் காதலின் புரிதலையும் உணர்ந்தாள். இத்தனை இளகிய மனம் கொண்டவள், அன்பால் அரவணைப்பாளே தவிர, ஒருபோதும், அதிகாரம் செய்ய மாட்டாள் என்று புரிந்துகொண்டாள். வீட்டிற்கு சென்றதும், முதல் காரியமாக, தன் விருப்பத்தை, அண்ணனிடமும், மகனிடமும் சொல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்தாள்.   

தொடர்ந்து படிக்க Click Here அன்பின் ஆழம் 33.2