அன்பின் ஆழம் – 32.2
பல அன்புச்சண்டைகள், உரிமை போராட்டங்கள், மனஸ்தாபங்களுக்கு இடையே, விழா நல்லபடியாக முடிந்தது. இரவு உணவும், விழாவிலேயே உண்டுவிட்டு வந்த நண்பர்கள், விடுதிக்கு திரும்பினர்.
வாசுகி, உறங்கச்செல்ல, ஹரி, “வயிறு முட்ட சாப்பிட்டேன் மீரா! கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாமா?” யோசனை கேட்டான்.
சொற்பேச்சு கேட்காமல், அவள் இன்று அரங்கத்தில் செய்த காரியத்தை பற்றி கண்டிக்க தான் வலை விரிக்கிறான் என்று நொடியில் புரிந்துகொண்டவள், சாமர்த்தியமாக காரணம் சொல்லி, வர மறுத்தாள்.
‘தனியா சிக்காமையா போயிடுவ… இருக்கு டி உனக்கு’ பார்வையால் அவளை விழுங்க, “நான் வரேன் டா!” என்றான் அரவிந்தன். அவன் தன் பங்குக்கு அஞ்சலியை கேட்க, அவளும் அசதியாக இருக்கு என்று சொல்லி வர மறுத்தாள்.
நண்பர்கள் மட்டும் புறப்பட, வாசுகி, எதுவும் பேசாமல், சுவற்றை பார்த்தபடி புரண்டு படுத்தாள். அறையில் இருந்த இரு கட்டில்களில், ஒன்றில் வாசுகி படுக்க, மற்றொன்றை, அஞ்சலி-அரவிந்தன் உபயோகிப்பர் என்று நினைத்து, மீரா ஜன்னலோரம் இருந்த சோஃபாவில் உறங்கச்சென்றாள்.
அதை கவனித்த அஞ்சலி, “என்ன மீரா? அங்க படுக்கற… மெத்தையில வந்து படு…” அழைத்து மெத்தையை தட்டினாள்.
“இருக்கட்டும் அஞ்சலி! அரவிந்த் அங்க படுக்கட்டும்…” தாழ்ந்த குரலில் சொல்ல,
“அது சரி!” என்று எழுந்தவள், மீராவை வலுக்கட்டாயமாக தன் அருகில் இழுத்து, “இதுக்குதான் என்ன துணைக்கு கூப்பிட்டையா! ஹோட்டல் ரூமுல தனியா படுக்க பயம்னு சொல்லிட்டு, இப்போ சோஃபாவுல தனியா படுக்கற?” குறும்பாய் அவள் காதோரம் கிசுகிசுக்க,
“ஷூ அஞ்சலி! அவங்க காதுல விழப்போகுது!” மீரா பதற,
அதை ரசித்த அஞ்சலி, மெல்லிய குரலில், நமுட்டு சிரிப்புடன், “பரவாயில்ல விழட்டும்; நீ இவ்வளவு பயந்தாங்கோளின்னு அவங்களுக்கு தெரிஞ்சா, உனக்கு துணையா இருக்கட்டும்னு, சீக்கிரமே ஹரிய கல்யாணம் செஞ்சு வெச்சிடுவாங்க!” ரகசியம் என்ற பெயரில், உரக்கச் சொல்லி சீண்டினாள் அஞ்சலி.
வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க, செல்லமாக அஞ்சலியை அடித்து செல்லம் கொஞ்சினாள் மீரா.
ரகசியம் என்று நினைத்து தோழிகள் கிசுகிசுத்த பேச்சுக்கள் அனைத்தும் வாசுகியின் செவிகளை எட்டியது. எட்டிய வேகத்தில், மனதை துளைத்து, அதன் மேஜிக்கையும் காட்டியது.
இரண்டு நாட்கள் அலைச்சலில், நண்பர்கள் ஆழ்ந்து உறங்க, வாசுகி மட்டும் விடியற் காலையில் எழுந்துவிட்டாள். கூண்டில் அகப்பட்ட பறவையைபோல, அறையை சுற்றி வந்தவள், கிடைத்த நேரத்தில் கடவுள் ஸ்தோத்திரங்களை சொல்லி முடித்தாள். ஒரு மணி நேரம் கடந்தும் அவர்கள் எழுந்தபாடு இல்லை. புண்ணியம் தேட, ராம நாமத்தை எழுத விழைந்தவள், மகன் பெட்டியிலிருந்து ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்தாள். பேனாவை தேடிய கண்கள், அவன் விழாவில் அணிந்திருந்த சட்டையை கவனித்தது. அதில் மீரா ஏதோ வைத்தது நினைவுக்கு வர, அதை குடைந்தாள்.
சட்டைப்பையில், கணவரின் புகைப்படத்தை பார்தவளின் கண்கள், துயில் கொண்டிருக்கும் மீராவை பார்த்து பளபளத்தது. தனக்கு கூட தோணாத ஒன்றை செய்தவளின் அக்கறையில் மெய்சிலிர்த்து போனாள்.
டெல்லிக்கு வந்ததிலிருந்து மீராவின் நடவடிக்கைகளை கவனித்தவள், தன்னையும் அறியாது, அவளை நேசிக்க துவங்கினாள். “பேசிப்பழகினா தானே தெரியும். உனக்கு பிடிச்சாலும் பிடிக்கலாம்…’ அண்ணன் சொன்ன வார்த்தைகளை அசைப்போட்டவளுக்கு, மீராவை பிடித்து போய்விடுமோ என்ற ஐயம் ஆட்கொண்டது.
சிந்தையில் கலந்தவளாய் வாசுகி, மீராவையே பார்த்துக்கொண்டிருக்க, மீரா சோம்பல் முறித்து எழுந்தாள். “குட் மார்னின் மா!” மீரா, அன்பாக சொல்ல, சுயத்துக்கு வந்தவள்,
“ம்ம்…” சொல்லிவிட்டு, ராமஜெயம் எழுத துவங்கினாள்.
என்ன செய்தாலும், அவள் மனதை மாற்ற முடியாது என்று சலித்து கொண்ட மீராவிற்கு, பதிலுக்கு குட் மார்னிங்க் சொல்லும் மரபு வாசுகிக்கு தெரியாது என்றும் புரியவில்லை.
விழாவில் சந்தித்த, தொலைக்காட்சி நிபுணர், ஹரியை பேட்டிகாண வந்திருந்தார். அதைக்காண அனைவரும் ஆவலாய் ஹரியுடன் புறப்பட்டனர். ஒரு மணி நேரம் நடந்த நேர்காணலில், ஹரி தந்த பதில்களை கேட்ட, வாசுகியின் மனதில் பல எண்ணோட்டங்கள். திருமண வாழ்க்கையை பற்றி ஹரி அளித்த பதில்களில், மகன், மீராவை திருமணம் செய்து கொள்வதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறான் என்று புரிந்து கொண்டாள்.
காதலிப்பதை பெருமையாக, உரக்கச் சொன்ன தன்னவன், எந்த இடத்திலும், தன் பெயரை வெளிப்படையாக சொல்லாமல், வீண் பிடிவாதம் பிடிக்கும் பெற்றோரை விட்டுக்கொடுக்காமல் பதில் சொன்ன விதத்தில், அவன் அன்பில் உறுகிபோய் நின்றாள் மீரா. மூன்று வார்த்தையில் காதலை சொல்வதை காட்டிலும், அன்யோனியமாய் இருந்தது, அவன் தந்த பதில்கள்.
பேட்டி முடிந்ததும், மீரா, அந்த நிபுணரிடம், “ஸார்! எங்களுக்கு, இந்த பேட்டிய வீடியோ கேஸெட்டுல பதிவு செஞ்சு கொடுக்க முடியுமா…! என்று கேட்டாள்.
“தாராளமா மேடம்! நாளைக்கு காலையில எங்க அலுவலகத்துல வந்து வாங்கிக்கோங்க!” சொல்லி, தன் பெயர், விலாசம் உள்ள அட்டையை அவளிடம் கொடுத்தார்.
நண்பர்கள் சுற்றுலா ஸ்தலங்களை கண்டு களிக்க புறப்பட்டனர். முட்டி வலி என்று சொல்லி, வாசுகி விடுதியிலேயே இருப்பதாக சொல்லிவிட்டாள். அறைக்குவந்து இளைப்பாறியவள் சிந்தையெல்லாம் மீரா ஆக்ரமித்துகொண்டாள்.
ஊர் சுற்றி பார்க்க, ஹரி ஏற்கனவே முன் ஏற்பாடுகளை செய்திருந்ததால், நேரம் வீணாக்காமல், வரலாற்று சிறப்பு கொண்ட பல முக்கியமான இடங்களுக்கு அவர்களால் எளிதாக செல்ல முடிந்தது.
செங்கோட்டையும், அதை ஒட்டியிருந்த அழகான அருங்காட்சியகத்தையும் பார்த்துவிட்டு, இரண்டு மணி நேரத்தில் வெளியே வந்த நண்பர்கள், ஓயாமல் அதன் அருமை பெருமைகளை பேசிக்கொண்டே இருந்தனர். அருகில் சாந்த்னி சௌக்(Chandni Chowk) என்ற பிரபலமான சந்தை, எண்ணிலடங்கா பல ருசியான உணவு வகைகளுக்கு பேர் போனது என்று அறிந்த மீராவிற்கும், அரவிந்தனுக்கும் அளவில்லா மகிழ்ச்சி. மதியவுணவை அங்கே முடித்துகொண்ட நண்பர்கள், அங்கிருந்த புகழ்பெற்ற, கந்தேவாலா (Ghantewala) என்ற இனிப்பு கடையை பற்றியும் அறிந்தனர். அடுத்த நொடி அதற்குள் புகுந்த அரவிந்தனையும், மீராவையும் வெளியே இழுக்க பாடுபட்ட, அஞ்சலி, ஹரியின் நிலமை தான் திண்டாட்டமானது.
பெண்களை ஈர்த்தது, அந்த சந்தையில் இருந்த குட்டி குட்டி கடைகளும், கண்ணை பறிக்கும் பொருட்களும். அவர்களை விட்டால், ஊருக்கு கிளம்பும் வரை இந்த கடை வீதியிலேயே தங்கிவிடுவர் என்று நன்கு அறிந்த அரவிந்தன், மனைவியை தோள் சுற்றி வளைத்து,
“அஞ்சலி மா! நாளைக்கு காலையில நீங்க ரெண்டு பேரும் மட்டும் வந்து ஷாப்பிங் பண்ணுங்க மா! இப்போ மிச்சத்த பார்த்து முடிச்சிடலாம் ப்ளீஸ்!” என்று செல்லம் கொஞ்சினான். அவளும் உடனே சம்மதம் சொல்ல, அதை பார்த்த ஹரி, மீராவிடம்,
“பார்த்துக்கோ! இப்படி தான் புருஷன் சொல்றத உடனே கேட்டுகணும்!” அறிவுரை சொன்னான்.
மறுகணமே உதட்டை சுழித்தவள், அவன் கையிடுக்கில் கோர்த்து, “அதெல்லாம் ரொம்ப கஷ்டம் எழுத்தாளரே! நீங்க என் பேச்ச கேளுங்க…அதான் நமக்கு செட்டாகும்!” என்றாள்.
“வாய்! வாய்!” செல்லமாக தலையில் குட்டி திட்டினாலும், மனதளவில், அவனும் அதையே தான் விரும்பினான்.
குதுப் மினார், ஹுமாயுன் டோம்ப் என்ற மற்ற சுற்றுலா ஸ்தலங்களுக்கு சென்று விட்டு, இரவு ஏழு மணியளவில், இந்தியா கேட்டை வந்தடைந்தனர். தேசத்தின் பெருமையை உணர்த்தும் அந்த இடத்தை கண்கள் அகல பார்த்தனர். அதையொட்டி இருந்த ராஜ்பத்(Raj Path) என்ற அழகிய நடைப்பாதையை கண்ட காதல் ஜோடிகளுக்கு பல நெஞ்சைவிட்டு நீங்காத பசுமையான நினைவுகள்.
“கொஞ்ச தூரம் கைக்கோர்த்து நடக்கலாமா ஹரி!” தாழ்ந்த குரலில் கேட்டவளின் அன்பில் விழுந்தவன் சரியென்று மென்மையாக தலையசைத்து சம்மதம் சொன்னான்.
“தனியா ரொமான்ஸ் பண்ணற வேலையெல்லாம் வெச்சுகாதீங்க! நாங்களும் வருவோம்!” அரவிந்தன் சீண்ட,
“ஏன் பா! உங்களுக்கு இந்த குறும்பு!” அஞ்சலி சலித்துகொண்டாள்.
மீரா, அவர்களையும் சேர்த்து இழுக்க, நால்வரும் நேர்கோட்டில் நடந்தனர்.
“மீரா! உன் மாமியார நல்லா காக்கா பிடிச்சு வெச்சிருக்க போல… முன் சீட்டுல உட்கார வெச்சு அவங்க வாய அடச்சிட்ட!” வாசுகி காலையிலிருந்து அமைதியாக இருப்பதை சுட்டிக்காட்டி வம்பிழுத்தான் அரவிந்தன்.
“அடச்சீ போடா… உனக்கு வேற வேலையில்ல!” சலித்து கொண்டாள்.
‘அவனே இத பற்றி ஒண்ணும் கேட்கலியேன்னு சந்தோஷமா இருந்தேன்…’ மனதில் எண்ணி பெருமூச்சுவிட்டவள், தன்னவனை பார்த்து அசடுவழிந்தாள்.
கண்கள் அகல அவளை பார்த்து முறைத்தவன், “இப்படியெல்லாம் செஞ்சா, அவங்களுக்கு உன்ன பிடிச்சிடும்னு வீணா ஆசைய வளர்த்துக்காத!” அவள் செய்தது தவறு என்று கண்டித்தான்.
நடப்பதை நிறுத்தி, அவன் பக்கம் திரும்பியவள், “அப்படியில்ல ஹரி… எனக்கு திடீர்னு தான் அப்படி தோணித்து…. உள்ள போற நம்மள கண்கொட்டாம பார்த்துகிட்டே இருந்தாங்க டா… அவங்களுக்கும் முன் சீட்டுல உட்கார்ந்து, கண்குளிர பார்கணும்னு ஆசையா இருக்கும்னு தான்…” தான் செய்ததை நியாயப்படுத்த தன்மையாக பேசினாள்.
“நீ எந்த விளக்கமும் கொடுக்காத மீரா… உனக்கு என் ஆசை முக்கியமில்ல… நீ என்ன ஏமாத்திட்ட… அவ்வளவுதான்!” தீர்மானமாக சொல்லி நடந்தான்.
“ஹரி ப்ளீஸ்… அப்படி சொல்லாத டா!” மீரா கெஞ்சி நிற்க,
இவர்கள் வாதம் சண்டையாக மாறிவிடுமோ என்று பயந்து, அரவிந்தன் குறுக்கிட்டு பேசினான்.
“டேய் நில்லு டா! எனக்கும் தான் உன் மேல கோபம்!” நண்பனை அதிகாரமாய் அழைத்த அரவிந்தன் புதிர் போட்டான்.
குழப்பமாய் நின்ற நண்பன் அருகில் மூவரும் நடந்து சென்றனர்.
“மீரா முன்வரிசையில உட்காருலன்னு இவ்வளவு ஃபீல் பண்ணற உனக்கு, என்ன முன்வரிசையில உட்கார வெக்கணும்னு தோணிச்சா டா…” பொய்கோபம் கொண்டு செல்லச்சண்டையிட,
ஹரியின் கோபம் காற்றில் பறந்தது. தன்னவள் மீது இன்னும் அதிகம் காதல் கொண்டவனாய், அவள் கைக்கோர்த்து முழுநிலவின் ஒளியில் மின்னிய அந்த அழகிய பாதையில் நடந்தான். காதல் ஜோடிகளை ரசித்த படி, இளஞ்சோடிகள், அவர்களை பின்தொடர்ந்தனர்.
விடுதிக்கு திரும்பியவன், வாசுகிக்கு உணவு பரிமாற,
“ஹரி! நம்மளும் நாளைக்கு இவங்களோட டிரெய்ன்லேயே போலாம்!” என்று அலட்டல் இல்லாமல் சொன்னாள். சொன்னவளை ஆழமாய் பார்த்தார்கள் நண்பர்கள்.
தன்னவளுடன் போவதில், அவனுக்கு மகிழ்ச்சியே என்றாலும், அம்மாவின் நிலையற்ற மனதை எண்ணி நொந்தான் ஹரி.“என்னம்மா! நிமிஷத்துக்கு நிமிஷம் மனச மாத்திக்கிட்டு இருக்க!” அவன் சிடுசிடுக்க,
“உனக்காக இவ்வளவு தூரம் வந்த நண்பர்களோடு சேர்ந்து போலாம்னு, என் முட்டி வலி கூட பொருட்படுத்தாத சொன்னேன்….” என்று முட்டிகளை நீவிவிட்டுக்கொண்டவள், “அப்புறம் உன் இஷ்டம்!” என்று சலித்துகொண்டாள்.
ஹரி, தங்களுடன் வர வேண்டும் என்று மீரா விரும்ப, அதை உணர்ந்தவன் போல், “பார்த்துக்கலாம் மா! எல்லாரும் டிரெய்ன்லேயே போலாம்!” என்று அரவிந்தன், பதில் சொல்லி, நண்பனுக்கு கண்ஜாடை காட்டினான்.
முன்சீட்டை விட்டுக்கொடுத்தது வீண் போகவில்லை என்று, வெற்றி புன்னகையுடன் தன்னையே பார்த்து கொண்டிருக்கும் விழிகளை கவனித்தவன் முகத்திலும் மென்சிரிப்பு.
குறைசொல்ல ஆயிரம் காரணம் உண்டு, என்று கங்கணம் கட்டி வந்தவள்
முட்டிவலியோடு, முகம் பார்க்க பிடிக்காதவளுடன் பயணம் செய்வது ஏனோ?
பேசிப்பழகி பார்த்து, பேரழகியின் அன்பில் கரைவாளோ-இல்லை
குற்றம் குறை கண்டு அவர்கள் காதலை நிலை குலைய செய்வாளோ?
ரயில் சிநேகத்தில், அவர்கள் நேசத்தை புரிந்துகொள்வாளோ-இதயத்தை
ரணமாக்கும் அளவிற்கு வாதம் செய்து காயப்படுத்துவாளோ?
பதில் சொல்லும், அவள், அவர்கள் மீது வைத்த அன்பின் ஆழம்….