அன்பின் ஆழம் 32.1
மேகத்திற்கு பின்னால் ஒளிந்திருக்கும் நிலவு, சப்தமில்லாமல் தலை நீட்டி தரிசனம் தருவது போல, மீரா, வாசலில் காத்துக்கொண்டிருக்கும் நண்பர்களை நோக்கி அமைதியாக நடந்து வந்தாள். அந்த இருள் படர்ந்த அதிகாலையில், வெண்மதியை காட்டிலும், வெண்மையாய் மிளிர்ந்த அவள் முகத்தை கண்டவனுக்கு அங்கமெல்லாம் சிலிர்த்தது.
தந்தை பேசிய கடும் சொல்லை சுமந்து நடப்பவளின் வெளிறிய முகத்தை மிளிறும் வெண்ணிலவென தவறாக புரிந்துகொண்டவன், உற்சாகமாய், “ஹேப்பி பர்த்டே மீரா!” என்று தோளோடு வளைத்து வாழ்த்தினான்.
அவன் கைகளை விலக்கிவிட்டவள், “தாங்க்யூ ஹரி! சுரத்தே இல்லாமல் சொல்லி, காரை நோக்கி நடந்தாள்.
“ஹேப்பி பர்த்டே மீரா!” காரில் அமர்ந்திருந்த அஞ்சலியும், அரவிந்தனும் ஒருமித்தமாய் பெருங்குரலில் வாழ்த்து கூறி மீராவை வரவேற்க, அவர்களுக்கும், அதே சுரத்தே இல்லாத பதில்தான்.
அவள் செயல்கள் வினோதமாக இருந்த போதும், அதை கவனிக்காததை போல ஹரியும், வண்டியில் ஏறி அமர்ந்தான்.
நண்பர்களை, ரயில் நிலையத்திற்கு அழைத்து செல்ல, ஹரி, வாடகை கார் ஒன்று ஏற்பாடு செய்திருந்தான். ஓட்டுனர் முன், தனிப்பட்ட விஷயங்களை பேச விரும்பாதவன், அமைதியாக வந்த போதிலும், அவன் கண்கள், தன்னவளை விட்டு விலகவே இல்லை.
அரை மணி நேரத்தில், ரயில் நிலையத்தில் இறங்கியவர்கள், ஆளுக்கொரு பெட்டி எடுத்துகொண்டு நடக்க,
“நீங்க போயிட்டே இருங்க டா! நான் பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிட்டு வரேன்!” என்று சொல்லி, ஹரி நகர்ந்தான்.
சரி என்று அரவிந்தன் தலையசைக்க, பெண்கள் அவனை பின்தொடர்ந்தனர்.
“மீரா! நீ என்னோட வா!” ஹரி திடமான குரலில் அவளை அழைக்க,
“பாரு அஞ்சலி! பையன் எவ்வளவு உஷாரா கிடைக்குற கேப்புல எல்லாம் லவ் பண்ணறான்!” கிண்டல் செய்தான் அரவிந்தன்.
பதில் சொல்லாமல், மெலிதாக சிரித்து மழுப்பினான் ஹரி. டிக்கெட் கௌண்டர் வரையும், சிந்தனையில் கலந்தவளாய்,அதே அமைதியுடன் நடந்தாள் மீரா. வரிசையில் வந்து நின்றவன்,
“பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கவா, இல்ல டெல்லிக்கு டிக்கெட் வாங்கவா?” என்று வினவினான்.
பதிலேதும் சொல்லாமல், சுற்றி நடப்பதை வெறித்து பார்ப்பவளின், தோள்களை உலுக்கி, “பதில் சொல்லு டி!” குரலை உயர்த்தி கேட்டான் ஹரி.
அதில் சுயத்துக்கு வந்தவள், “ஹான்… என்ன கேட்ட ஹரி!” பாதி தூக்கத்தில் விழித்தவள் போல வினவினாள்.
“என்ன டி ஆச்சு உனக்கு?”
இயல்பாக இருக்க சிரமப்பட்டவள், ஒன்றும் இல்லை என்று தலையசைக்க, வரிசையில் இருந்து அவளை வெளியே அழைத்து வந்தான்.
“பிறந்தநாள் அன்னைக்கு, முழுக்க முழுக்க உன்னோட இருக்கேன்னு சொல்லி ஏமாத்திட்டேன்… அதானே வருத்தமா இருக்க…” காரணம் யூகித்தவன், “இப்போ கூட சரின்னு சொல்லு… எவ்வளவு செலவானாலும், பரவாயில்ல… உன்னோட நான் டிரெய்ன்ல வரேன்… இல்ல நீ என்னோட பிளேன்ல வா!” என்றான்.
இத்தனை நேரம் தேக்கி வைத்த துக்கம், தன்னவன் அன்பினால், கண்களில் வெள்ளப்பெருக்கெடுத்தது.
“மீரா!இப்போ எதுக்கு அழற?” தேம்பி அழும் அவள் கண்களை துடைத்தவன், அக்கம் பக்கம் சுற்றி பார்த்தான்.
தந்தை பேசிய கடும் சொற்கள், மனதில் எதிரொலிக்க, இன்னும் அதிகமாய் அழுதவள், அவன் மார்பில் சாய்ந்து விசும்பினாள். நிலமை கைமீறி போவதை எண்ணி பதறியவன்,
“மீரா! என்ன பண்ணற? இதுக்குதான் அம்மாவ அழைச்சிட்டு போக வேண்டாம்னு சொன்னேன்!” தலைதாழ்த்தி அவள் காதில் ஓதினான்.
நடந்ததை எல்லாம் அவனிடமிருந்து மறைக்க வேண்டும் என்று நினைத்துவிட்டு, இப்படி முட்டாள்தனமாக நடந்துகொள்வதை பற்றி தெளிந்தவள், அவனிடமிருந்து விலகி, கண்களை துடைத்து கொண்டாள்.
“ஸாரி டா ஹரி! ஏதோ உணர்ச்சிவசப்பட்டேன்!” என்று சொல்லி சமாளித்தாள்.
“ம்ஹூம்! “மறுப்பாய் தலையசைத்தவன், “இல்ல மீரா! உன்ன அவ்வளவு தூரம் தனியா அனுப்ப பயமா இருக்கு… நீயும் என்னோட பிளேன்ல வா!” யோசனை சொல்ல,
ஐந்து நிமிடம் அழுததற்கே பதறுபவன், அப்பா சொன்னதை எல்லாம் கேட்டால், பயணத்தையே ரத்து செய்துவிடுவான் என்று உணர்ந்தாள். உண்மையை உளறாமல் இருக்க, அவனிடமிருந்து விலகி இருப்பதே மேல் என்று நினைத்தாள்.
அவன் கைகளை இறுக பற்றி, மீண்டும் வரிசையில் போய் நின்றவள், “அட, வாங்க எழுத்தாளரே! நான் ஏதோ கொஞ்சம் அதிகமா ஃபீல் பண்ணிடேன்… நீங்க பிளாட்ஃபார்ம் டிக்கெட் வாங்கிட்டு, அப்படியே, போற வழியில எனக்கு சாக்கலேட் வாங்கி தாங்க…நாளைக்கு டெல்லியில பார்க்கலாம்!” சோகத்தை மறைத்து பேசி கண்சிமிட்டினாள்.
அவள் சொற்படி நடந்து, அவர்களை வழியனுப்பிவிட்டு வந்த போதும், ஹரிக்கு ஏதோ உறுத்தலாகவே இருந்தது. அவள் வீட்டை கடந்து போகும் போது ஒரு கணம் ஏக்கமாய் நின்று பார்த்தான்.
‘மிஸ்டர் வரதன் இன்னைக்கு உன் மீராகிட்ட ரொம்ப கடுமையா நடந்துகிட்டாரு ஹரி. அவ ரொம்ப பாவம்’ , தகவல் கொடுத்த சன்னியின் குரல் மட்டும் அவனுக்கு கேட்டிருந்தால், எதுவுமே நடக்காதது போல், உள்ளே அமைதியாக உட்கார்ந்து செய்தித்தாளை புரட்டிக்கொண்டு இருப்பவரிடம், ஹரி சண்டைக்கு போயிருப்பானோ, என்னமோ…
“மீராவ உங்ககிட்ட மன்னிப்பு கேட்க சொன்னதுனால, நீங்க பேசினது சரின்னு ஆகாது!” நிர்மலா, கணவரிடம் சண்டைக்கு வந்தாள்.
குரலை உயர்த்தி பேசும் மனைவியை பார்த்து அவர் முறைத்தார். அதை பொருட்படுத்தாதவள், “கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருங்க… இத்தன நாளா உங்க சம்மதத்துக்காக பொறுமையா காத்துக்கிட்டு இருந்தவங்க, எதுக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிக்க போறாங்க… ஊரார் பேச்ச நம்பறத விட்டுட்டு, அவங்க ரெண்டுபேரு கிட்டையும் மனசவிட்டு பேசுங்க… எல்லாமே சரியாயிடும்!” முகத்துக்கு நேரே சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
மகளும், மனைவியும் பேசியதை எல்லாம் கேட்ட வரதனுக்கும், நண்பன் சொன்னது உண்மையா என்ற சந்தேகம் முளைத்தது.
‘மீரா அப்பா ஆச்சே! மனைவி சொல்லவதை எல்லாம் கேட்டுவிடுவாரா என்ன…!’
வாய்விட்டு அழுததிலேயே, மீரா ஓரளவுக்கு இயல்புக்கு திரும்பினாள். அரவிந்தனின் துறுதுறு பேச்சிலும், அஞ்லியின் அன்பிலும் கரைந்தவளின் ரயில் பயணமும் இனிதே தொடர்ந்தது. ஹரியும் அவ்வப்போது அவளை கைப்பேசியில் அழைத்து பேசினான். விமானத்தில் டெல்லி வந்தடைந்தவன், இரவு பதினோரு மணியளவில் ரயிலில் பயணித்து கொண்டிருக்கும் தன்னவளை அழைத்தான். அவர்கள் தங்கவிருக்கும் விடுதி, விழா முடிந்த பின், சுற்றுலா ஸ்தலங்களுக்கு சென்றுவர செய்த ஏற்பாடுகளை விவரித்தவன்,
“ராஜகுமாரிக்கு வேறேதாவது கோரிக்கைகள் இருக்கா?” குறும்பாய் கேட்டான்.
“ம்ம்… இருக்கு…!” நமுட்டு சிரிப்புடன் சொன்னவள், “நாளைக்கு காலையில எழுத்தாளர், ஸ்டேஷனுக்கு வந்து இந்த ராஜகுமாரிய அழைச்சிட்டு போகணும்!” என்றாள்.
“குதிரையிலேயே வரேன், போதுமா!” என்றதும், கேட்டவள் மனமும் குளிர்ந்தது. இன்னும் சில நொடிகள் கதையளக்க, தன்னவன் தாலாட்டும் பேச்சில், கவலைகள் மறந்து உறங்கினாள்.
அடுத்த நாள் காலை, டெல்லி ரயில் நிலையத்தில் தவம் கிடக்கும் தன்னவனை, ஜன்னல் வழியே கண்டுகொண்டவள், ரயில் நிற்கும் முன், படபடவென்று இறங்கி, அவனருகே ஓடினாள். அவனுக்கும், தன்னவளை கண்டு, முகமெல்லாம் புன்னகை ரேகைகள். அவளின் பெட்டியையும் சுமந்துகொண்டு பின்னால் வந்த அரவிந்தன், மீரா அருகில் சென்று,
“ஒரு நாள் தானே மா அவன பார்க்காம இருந்த…” என்று கண்சிமிட்டி, வம்பிழுக்க,
அதை கேட்ட அஞ்சலி, அவன் காதை திருகி, “அத நீங்க சொல்றீங்களா!” என்று செல்லமாக மிரட்ட,
ஹிந்தி பேசும் மக்களின் கூட்டத்தில், நண்பர்களின் தமாஷான தமிழ் பேச்சில், டெல்லியும் குதூகலமானது.
மதியம் பன்னிரண்டு மணியளவில் விடுதியை வந்து அடைந்தனர் நண்பர்கள். மீராவின் பயத்தை மனதில் கொண்ட அஞ்சலி, அனைவரும் ஒரே அறையில் தங்கும்படி அரவிந்தனிடம் ஏற்பாடுகள் செய்யச்சொன்னாள். அறை உள்ளே வந்த மீரா, வாசுகியை நோக்கி நடந்தாள். மெத்தையில் கால்நீட்டி உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தாள் வாசுகி.
“எப்படி இருக்கீங்க மா! பிராயணம் எல்லாம் எப்படி இருந்துது?” அக்கறையாய் நலன்விசாரித்தாள் மீரா.
கால் மேல் கால் போட்டு, ஏளனமாய் பார்த்தவள், “அதுக்கென்ன… என் பையன் தான் என்ன சௌகரியமா பிளேன்ல அழைச்சிட்டு வந்தானே!” அழுத்திச்சொல்ல, மீராவின் முகம் மாறியது.
ஹரி தடுமாறி நிற்க, வாசுகியின் சுபாவம் அறிந்த அரவிந்தன், அவர்கள் பேச்சை திசைதிருப்ப முன்வந்தான். அஞ்சலியை, தன் மனைவி என்று அறிமுகப்படுத்த ஓரிரு நிமிடங்கள் உரையாடல் சுமூகமாக போனது. அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகளை ஹரி பட்டியலிட்டான். தன்னவள் அனாவசியமாக அம்மாவிடம் பேசாமல் இருக்கும்படியும் பார்த்துக்கொண்டான்.
மாலை, விழாவிற்கு தயாராகி வந்தவனை பார்த்தவளின் கண்களில் அத்தனை பூரிப்பு. தான் தேர்ந்தெடுத்து கொடுத்த வெளிர் நீல முழுக்கை சட்டையும், அடர் சாம்பல் நிற பேண்டையும் அணிந்துவந்தவனை இமைக்காமல் பார்த்து நின்றாள் மீரா. அவன் தோளில் சாய்ந்து அழ, தனிமையில் இரண்டு நிமிடங்கள் கிடைக்காதா என்று ஏங்கினாள். இத்தனை நாட்கள் பாடுபட்டதற்கு அறுவடை நாள் போல தோன்றியது அவளுக்கு.
‘எழுத்தாளரே ‘ என்று அழைத்து தன்னருகில் ஓடி வரமாட்டாளா என்று தோன்றியது அவனுக்கு. ‘ஐலவ்யூமீரா’ சொல்ல உதடுகள் துடித்தது.
வாசுகியின் மனநிலை அறிந்த இருவரும், ஆசைகளை மறைத்து, விழாவிற்கு புறப்பட்டனர். விழா நடக்கும் கமானி அரங்கத்தில்(Kamani Auditorium) இறங்கியதும், வாசுகி அவ்விடத்தை பிரமிப்பாய் பார்த்தாள். சொந்த ஊரை தாண்டி, வேறெங்கும் அதிகம் செல்லாதவளுக்கு, புதுயிடம், தெரியாத பாஷை என்ற பதற்றம் உள்ளே இருந்தது. மகன் அருகிலேயே அட்டையை போல ஒட்டிக்கொண்டு வந்தாள். அரங்கத்தில் உள்ளே நுழைந்தவன், சரளமாக ஆங்கிலத்தில் பேசி, தன்னை அறிமுகம் செய்துகொண்டான். தன்னுடன் வந்திருக்கும் நபர்களை பற்றி தகவல்கள் கொடுத்து, அனுமதி சீட்டு பெற்று கொண்டான். அதில் மூன்றை மட்டும் அரவிந்தனிடம் கொடுத்துவிட்டு, ஒன்றை மீராவின் கையில் நுழைத்தான்.
பிரம்மாண்டமான அரங்கத்தில் நுழைந்தவள், மிதமாக வீசிய ஏ.சி காற்றின் குளிரில், கைகளை இறுக கட்டிக்கொண்டு நடந்தாள். ஒரே சீராக அமைக்கப்பட்ட இருக்கைகள், இதமான வெளிச்சம் தரும் மங்கலான விளக்குகள், பளபளக்கும் திரைகள் கொண்ட மேடை என ஒவ்வொன்றாய் பார்த்து வியந்தாள். விருந்தினர்கள், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் உரையாட, எல்லாம் அன்னியமாக தோன்றியது வாசுகிக்கு.
“அம்மா! என் ஃபோன, நீ வச்சுக்கோ; அரவிந்தன் கூடவே இரு!” ஹரி விளக்கி, மீரா பக்கம் திரும்பியவன், “மீரா! வா… முன்னாடி போகலாம்!” என்று அழைத்தான். அரவிந்தனும், அஞ்சலியும் அவர்களுக்கு வாழ்த்து கூற, தனியே விட்டுச்செல்லும் மகனை இமைக்காமல் பார்த்து பயந்து நின்றாள் வாசுகி.
தன்னவனை பின்தொடர்ந்து பத்தடி தூரம் நடந்தவள், “ஹரி! ஒரு நிமிஷம்!” என்றாள். அவன் சட்டை பாக்கெட்டில் ஒரு பொருளை வைத்து, “எழுத்தாளரே! நீங்க சாதிச்சுடீங்க!” சொல்லி, தட்டிக்கொடுத்தாள்.
கீச்சுகுரலில் அவள் அழைத்ததில் நெகிழ்ந்தவன், சட்டை பாக்கெட்டில் அவள் வைத்ததை எடுத்தான். பார்த்தவனின் கண்கள் பளபளத்தது; அது, அவன் தந்தையின் நிழற்படம். பால் காய்ச்சும் நாளன்று, குலதெய்வம் என்று சொல்லி, மீரா தன்னிடமிருந்து வாங்கிகொண்ட அந்த புகைப்படம். அவன் கண்களை துடைத்துவிட்டவள், நல்வார்த்தை கூறினாள். அவர்களையே இமைக்காமல் பார்த்துகொண்டிருக்கும் வாசுகியை கவனித்தாள் மீரா.
“ஹரி! நீ முன்னாடி நட; நான் வாஷ்ரூம் போயிட்டு வரேன்!” என்று வெளியே வந்தாள்.
அரவிந்தனிடம், அவர்களுக்கு நியமிக்கப்பட்ட இருக்கைகளில் அமரும் படி சொல்லி, “அம்மா! நீங்க என்னோட வாங்க!” என்று அன்பாய் வாசுகியின் கை பிடித்து தன்னுடன் அழைத்துச்சென்றாள் மீரா.
புது இடம், வேற்று மொழி பேசும் மக்கள் என சுற்றி பார்த்தவள், வேறுவழியில்லாமல், மீராவுடன் அமைதியாக நடந்தாள். மென்மையாக கரம் பிடித்தவளின் ஸ்பரிசத்திலேயே, பாதுகாப்பாக இருப்பதை போல உணர்ந்தாள் வாசுகி.
(மேஜிக் வேலை செய்ய தொடங்கிவிட்டதோ….)
மேடைக்கு மிக அருகில் அமைந்திருந்த இருக்கைகளின் பக்கம் நின்றவள், அங்கிருந்த ஊழியரிடம், வாசுகியை கைக்காட்டி, ஹிந்தியில் சரளமாக பேசினாள். அவரும் இவள் சொல்வதற்கெல்லாம் தலையசைக்க, இரண்டு நிமிடத்தில், இருவரும் வாசுகியிடம் வந்தனர்.
“அம்மா! நீங்க, இங்கையே உட்காருங்க! மேடையில நடக்கறத பார்க்க வசதியா இருக்கும்!” என்று சொல்லி, விழாவின் அழைப்பு அட்டையை அவளிடம் கொடுத்தாள். பெற்றுக்கொண்டவள், அதை முன்னும், பின்னும் திருப்பி பார்க்க, மீராவே மேலும் பேசினாள்.
“விழா முடிஞ்சதும், நானே இங்க வந்து உங்கள அழைச்சிட்டு போறேன்!” என்று சொல்லி நகர்ந்தாள். பயத்தில், அவள் கையை உடனே பற்றிக்கொண்டவள்,
“நான் மட்டும் இங்க தனியா உட்காரணுமா? நீ வரல்ல!” பகை மறந்து வினவினாள் வாசுகி.
பயத்தில் கேட்டாலும், அதில் பாசத்தை உணர்ந்தவள், மெல்லிய சிரிப்புடன், “இல்லம்மா! ஒரே ஒரு சிறப்பு விருந்தினருக்கு தான் இங்க உட்கார அனுமதி. இங்கேந்து, மேடையில் நடக்குற நிகழ்ச்சி எல்லாம் நல்லா தெரியும்…அதோ அங்க பாருங்க…” கை நீட்டியவள், ஹரி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, பயப்பட வேண்டாம் என்று சொல்லி நகர்ந்தாள்.
தனியாக அமர்ந்திருக்கும் வாசுகி, சுற்றி முற்றி பார்த்தாள். பக்கத்தில் இருப்பவர்கள், படித்தவர்களாகவும், நவீன உடை அணிந்தவர்களாகவும் தென்பட்டனர். அவசரத்தேவைக்கு கூட இவர்களிடம் உதவி கேட்க முடியாது என்று மனதில் நினைத்தவள், பின்னால் திரும்பி, மீராவை தேடினாள். பின்னால் இருந்த அலைமோதும் மக்கள் கூட்டத்தில், கண்ணுக்கெட்டும் வரை மீரா தென்படவில்லை.
ஏக்கத்துடன், மகனையே பார்த்து நின்ற வாசுகியை கவனித்த அந்த நொடி, மீராவிற்கு இப்படியொரு யோசனை தோன்றியது. ஹரியிடம் சொன்னால் தர்க்கம் செய்வான் என்று எண்ணியவள், ரகசியமாய் தன் திட்டத்தை செயல்படுத்தினாள். நிகழ்ச்சி துவங்க பத்து நிமிடங்களே இருந்த நிலையில், அரவிந்தன் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள். தன்னருகில் வந்து அமர்ந்த தோழியை கண்டவனுக்கு, அவள் எண்ணம் விளங்கியது.
வழக்கமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் விழா ஆரவாரமாய் துவங்கியது. முன்னுரை பேச்சு, விழாவை சிறப்பிக்க வந்தவர்களுக்கு பொன்னாடை செலுத்தி மரியாதை செலுத்தல், கலை நிகழ்ச்சிகள் என ஒரு மணி நேரம் போக, பரிசு கொடுக்கும் நிகழ்வும் தொடங்கியது. அந்த ஆண்டு பரிசு வாங்கும் எழுத்தாளர்களை ஒவ்வொருவராய் அழைத்து, அவர்களை கௌரவப்படுத்தினர். விழா நடத்துனர், எழுத்தாளரை பற்றியும், அவர் எழுதின புத்தகத்தை பற்றியும் ஓரிரு வரிகளில் விவரிக்க, பலத்த கரகோஷத்துடன் எழுத்தாளர்கள் கம்பீரமாய் விருதை பெற்றுக்கொண்டனர். சிறப்பு வரிசையில் அமர்ந்திருக்கும் அவர்கள் உறவினர்களை பற்றியும், அறிவிப்பாளர் ஓரிரு வரி சொல்ல, அவர்கள் முகமும் அந்த மாபெரும் திரையில் மின்னியது.
“தமிழ் மொழி பிரிவில், இந்த வருடம், விருது பெரும் எழுத்தாளர், மிஸ்டர்.ஹரி நந்தகுமார், அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்.” அறிவிக்க, கம்பீரமாய் மேடை ஏறினான் ஹரி.
தன்னவனை இமைக்காமல் பார்த்து நெகிழ்ந்தாள் மீரா. அருகில் இருக்கும் அரவிந்தன், அவள் கையை இறுக பிடித்துகொண்டு, “நீ சாதிச்சிட்ட மீரா! அவன் கனவ நனவாக்கிட்ட டி!” மனதார பாராட்டி அவள் நெற்றியில் முட்டினான். அன்று, ஹரி காதலுக்கு சம்மதம் சொல்வானா என்ற பதற்றத்துடன் அலுவலக விழாவில் அவள் அருகில் அமர்ந்த நியாபகம் அரவிந்தனுக்கு நினைவு வந்தது.
‘இன்னாருக்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவனன்று…..’ கண்ணதாசனின் பாடல் வரிகள் எவ்வளவு உண்மை என்று, இருபுறமும் இருக்கும் பெண்களை இடம் வலமாக பார்த்தவன் நெகிழ்ந்தான்.
மேடை ஏறி வந்தவனை பார்த்த தாய் மனமும் பூரித்தது. இருக்கையிலிருந்து முன்வந்து உட்கார்ந்தவள், எம்பி எம்பி தன் மகன் விருது வாங்குவதை பார்த்து நெகிழ்ந்தாள்.
“மிஸ்டர் ஹரி தான் எழுதிய, ‘தெவிட்டாத இன்பம்’ என்னும் குடும்ப நாவலுக்காக இந்த விருதை பெறுகிறார். அதுவும் இது அவருடைய முதல் கதை என்பது குறிப்பிடத்தக்கது!” அறிவிக்க, திரையில், புத்தகத்தின் அட்டைப்படத்தை ஒளிப்பரப்பினர்.
அறிவிப்பாளர் மேலும் பேசினார், “மாமியார்-மருமகளை பற்றிய இந்த நேர்மறை சிந்தனை நிறைந்த கதை புத்தகத்தின் முன் அட்டை ஓவியத்தை வரைந்தவர், வேறு யாரும் இல்லை…அது எழுத்தாளரின் தாய், திருமதி வாசுகி நந்தகுமார். மகனை ஊக்குவிக்க, அவர்களும், இன்று விழாவில் பங்கெடுத்துக்கொள்ள வந்திருக்காங்க…” சொல்ல, திரையில், வாசுகியின் முகம் தெரிந்தது.
அதே சமயத்தில், செப்பு தகடில், ‘சாஹித்யா’ என்று ஹிந்தி எழுத்தில் பொறிக்கப்பட்ட விருது, காசோலை, சான்றிதழுடன் நின்றவனின் கண்கள், வானை பிளக்கும் கரகோஷத்தின் நடுவில், தன்னவளை தேட, அந்த இடத்தில், வாசுகியின் முகம் மட்டுமே தென்பட்டது.
“வளர்ந்து வரும் எழுத்தாளர் மிஸ்டர். ஹரி, இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட்டு, மேன்மேலும் வளர வேண்டும்” என்று அறிவிப்பாளர் வாழ்த்த, ஹரி, சிறப்பு விருந்தினர்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும் அம்மாவை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே மேடையிலிருந்து, கீழே இறங்கி வந்தான்.
அம்மாவின் முகத்தில் இருந்த பெருமையும், சந்தோஷமும், அவனுக்கு நிறைவாய் இருந்த போதும், மீராவின் உழைப்பை இந்த அரங்கம் அடையாளம் காணவில்லை என்று வருந்தினான்.
தொடர்ந்து படிக்க, Click Here அன்பின் ஆழம் 32.2