அன்பின் ஆழம் 31.2

உதடுகள் அழைக்கமாட்டேன் என்று சொன்னதே தவிர, உள்ளம் அவள் பெயரை ஓயாமல் உச்சரித்துகொண்டே தான் இருந்தது. நிதானமாக அவள் பேசியதை எல்லாம் எண்ணி அசைப்போட்டவனுக்கு, அவள் இந்தமுறை வீண்பிடிவாதம் பிடிக்கவில்லை என்று புரிந்தது. எதிர்ப்பார்க்காத நேரத்தில் வந்த இந்த விருதால், தேங்கி நிற்கும் அவர்கள் காதலுக்க ஒரு திருப்பம் ஏற்படும் என்று உணர்ந்தவன், வழக்கம் போல தழைந்து போக முன்வந்தான்.

மனம் மாறுவதற்குள், தன் மாமன் மணிமாறனை அழைத்தான். மீராவின் பயத்தை எடுத்துச்சொல்லி, வாசுகியிடம் பேசும்படி கேட்டுக்கொண்டான். மீராவின் மென்மையான சுபாவம், வாசுகியின் பிடிவாதம் எல்லாம் அறிந்தவர், தங்கையிடம் சாமர்த்தியமாக பேசினால் தான் வேலைக்காகும் என்று உணர்ந்தார்.

“எனக்கு மட்டும் என் பையன் விருது வாங்குறத பார்க்க கூடாதூன்னு வேண்டுதலா… அவளும் வரது எனக்கு கொஞ்சமும் பிடிக்கல…” அண்ணனிடம் தீர்மானமாய் மறுத்தாள் வாசுகி.

‘பைத்தியக்காரி… உன்ன வான்னு அன்பா அழைக்கறதே அவ தானே’ மனதில் நினைத்தவர்,

“இங்க தான் நீ தப்பு பண்ணற வாசுகி! அவ மேல இருக்குற வெறுப்புல, நீ போகாதது… உன் பையன நீயே அவளுக்கு விட்டுக்கொடுக்குறா மாதிரி இல்ல…” தங்கை மேல் அக்கறை உள்ளவராய் பேசி, அவளை குழப்பினார்.

சிந்திக்க தொடங்கிய வாசுகி, அமைதியாய் இருந்தாள். அவள் அருகில் வந்து அமர்ந்தவர், “உன் மேல பாசம் இருக்கறுதுனால தானே, அவன் உன்ன விடாம வரச்சொல்லி கூப்பிடறான். அவள பற்றி யோசிக்காம, நீ, நம்ம ஹரிக்காக போயிட்டு வா…” என்றதும், அவள் எதுவும் பேசாமல், மறுப்பாய் தலையசைத்தாள்.

அவளை பேசவிடாமல், “அந்த பொண்ண பிடிக்கல பிடிக்கலன்னு சொன்னா மட்டும் ஒண்ணும் ஆக போறது இல்ல… ஒரு வாரம் அவளோட பேசிப்பழகினா, ஒருவேள உனக்கும் அவள பிடிச்சுபோகலாம்…”

அதை கேட்டவள், அண்ணனை பார்த்து முறைக்க, அதில் தடுமாறியவர், “ முறைக்காத… பிடிக்கலாம்னு தான் சொன்னேன்… இல்ல, ஏன் பிடிக்கலன்னு சொல்ல, சரியான ஒரு காரணம் கிடைச்சா போதும்… அத நம்ம ஹரிகிட்ட எடுத்துச் சொல்லி, அவ நம்ம ஹரிக்கி பொருத்தமானவ இல்லன்னு புரியவைக்கலாம்.” என்று, மீரா குணம் அறிந்தும், தங்கை மனம் மாற சிரமப்பட்டு பொய் சொன்னார்.

“ஒண்ணு என்ன… நூறு கண்டுபிடிக்கலாம்” உறுதியாக சொல்லி, கழுத்தை நொடித்தவள், “நானும் அவன்கூட போயிட்டு வரேன்!” என்று சம்மதம் சொன்னாள்.

வாசுகியின் உள்நோக்கத்தை சொல்லாமல், அவள் வருவதை பற்றி மட்டும் சொல்லி, சென்னைக்கு அழைத்து வந்து விடுவதாக சொன்னார். மாமா மீது முழு நம்பிக்கை கொண்டவன், கேள்வி எதுவும் கேட்காமல், நன்றி மட்டும் தெரிவித்தான்.

சமாதானம் செய்யாதே; குறுஞ்செய்தி அனுப்பாதே; என்று ஜம்பமாய் சொல்லிவிட்டு வந்தவளின் கண்கள், நொடிக்கு ஒருமுறை வாசலையும், கைப்பேசியையும் பார்த்துகொண்டே தான் இருந்தது.

‘எத்தனை முறை இல்ல ஹரி… எப்பவும், நீதானே டா விட்டுக்கொடுக்குற’ ஒருவழியாக தெளிந்தாள் மீரா. வாசுகியை அழைக்க சொல்லி, அவனை தொல்லை படுத்துவதை காட்டிலும், வேறென்ன வழி இருக்கு என்று சிந்தித்தவள் அஞ்சலியின் உதவியை நாடினாள்.

“ப்ளீஸ் அஞ்சலி! புரிஞ்சிக்கோ…எனக்கு இவ்வளவு தூரம் போய், ஹோட்டல்ல தனியா தங்கற அளவுக்கு எல்லாம் தைரியம் இல்ல…” வெளிப்படையாக சொல்லி, அஞ்சலியின் பதிலுக்காக காத்திருந்தாள்.

“வாய் தான் மீரா உனக்கு!” ஹரி போலவே சொல்லி, அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள்.

ஆனால், இம்முறை, அவளுக்கு கோபம் வரவில்லை. தன் இயலாமையை எண்ணி வருந்தினாள்.

“நீங்க எல்லாரும் வருவீங்கன்னு, நான் நெனச்சேன் அஞ்சலி… இப்படி ஆளுக்கொரு காரணம் சொல்லுவீங்கன்னு எதிர்ப்பார்க்கல… ப்ளீஸ், எங்களோட வா அஞ்சலி!”

ஒரு மணி நேரமாக நச்சரித்து கொண்டே இருந்தவளின், முகத்தை பார்க்க சகிக்கவில்லை அவளுக்கு. “சரி வரேன்! கல்யாணத்துக்கு அப்புறமும், இப்படி தான் என்ன துணைக்கு கூப்பிடுவியா…” குறும்பாய் கேட்டு வம்பிழுத்தாள் அஞ்சலி.

“டீச்சர்! நான் சொன்னத நீங்க சரியா கவனிக்கல… தனியா இருக்க தான் பயம்னு சொன்னேன். கல்யாணமானா, ஹரி தான் என் பக்கத்துலேயே இருப்பானே…” சொன்னவள் முகத்தில் வெட்கம் வழிந்தோடியது.

“அது சரி… நீ ரொம்ப தெளிவா தான் மா இருக்க… நான் தான் உன்ன அப்பாவின்னு தப்பா நெனச்சிட்டேன்!”  சரணாகதியானாள் அஞ்சலி.

தன்னவனுக்கு, இவர்கள் திட்டம் ஒரு இன்பதிர்ச்சியாக இருக்கட்டும் என்று நினைத்தாள் மீரா.

“நீயும் வரத பற்றி, அவங்ககிட்ட சொல்லி, டிக்கெட் வாங்க சொல்லு. நாளைக்கு முழுக்க எனக்கு மீட்டிங்க் இருக்கு. சாயங்காலம் தான் ஹரிய பார்ப்பேன்!” மழுப்பலாய் பதில் சொன்னவள், லேசான மனதுடன் வீடு திரும்பினாள்.

“நாள் நெருங்கிகிட்டே இருக்கு ஹரி! எப்போ டிக்கெட் வாங்கறது?” மதியவுணவு இடைவேளையில், வினவினான் அரவிந்தன்.

மீராவுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்களை பற்றி சொல்லாதவன், “நாளைக்கு காலையில வாங்கிடறேன் டா! அம்மாவும் வரதா சொல்லிருக்காங்க!” கூடுதல் தகவல் சொன்னான்.

“ஏற்கனவே ரொம்ப லேட் ஆயிடுத்து ஹரி! எனக்கு மதியம் அவ்வளவா வேலை இல்ல… நான் ஸ்டேஷனுக்கு போய் வாங்கிட்டு வரேன்!” யோசனை சொன்னான் அரவிந்தன்.

வாய்வார்த்தையாக மீராவிடம், அம்மா வருவதை பற்றி சொல்லுவதை காட்டிலும், மாலை, அவளிடம் பயணச்சீட்டையே காட்டி இன்பதிர்ச்சி தரலாம் என்று நினைத்தான் ஹரி.

“சரி அரவிந்தா! மீராவுக்கு போன் செஞ்சு, அவளுக்கு பிறந்தநாள் ட்ரெய்ன்ல மாமியாரோட கொண்டாடுணுமா, இல்ல டெல்லிக்கு போய், என்னோட மட்டும் தனியா கொண்டாடணுமான்னு கேளு… அதுக்கு ஏத்தா மாதிரி, டிக்கெட் புக் பண்ணு!” என்று சொல்லி கண்சிமிட்டினான்.

நண்பனை ஆழமாய் பார்த்தவன், “எலியும், பூனையுமா இருக்குறவங்கள ஒண்ணா அழைச்சிட்டு வரதே பெரிய விஷயம்… இதுல பிறந்தநாள் கொண்டாட்டம் வேற கேக்குதா… ரொம்ப தேறிட்ட டா ஹரி!” அவன் தோள்களை தட்டி மெச்சினான்.

கன்னத்தில் குழிவிழ சிரித்து மழுப்பியவன், பேசாமல் நகர்ந்தான்.

நண்பன் சொன்னது போலவே மீராவை அழைத்து கேட்டான். வாசுகியும் தங்களுடன் வருவதை அறிந்தவளுக்கு, துக்கம் தொண்டையை அடைத்தது. இம்முறையும் ஹரி தனக்காக விட்டுக்கொடுத்ததை எண்ணி பூரித்தாள். மாமியாருடன் பிறந்தநாள் கொண்டாட தயார் என்று பதில் சொன்னவள்,

“அரவிந்தா! அப்படியே, டிக்கெட்ட ஹரிகிட்ட கொடுத்து, பயணிகள் விவரம் எல்லாம் சரி பார்க்க சொல்லு!” நண்பனை அதிகாரம் செய்ய,

“நல்லா வேல வாங்குறீங்க டி ரெண்டு பேரும்!” பொய்யாக சலித்து கொண்டவன், சரி என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

அஞ்சலி காரணமேதும் சொல்லாமல், தானும் வருவதாக அரவிந்தனிடம் தன் விருப்பத்தை தெரிவித்தாள். ஒரு வாரம் மனைவியை பிரிந்து எப்படி இருப்பது என்று ஏங்கியவனுக்கு, லாட்டரி பரிசு வென்றது போல உணர்வு. சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், விரைவாக பயணச்சீட்டு வாங்க நினைத்தவனுக்கு, காதலர்களின் பேச்சு தன் எண்ணோட்டத்தை விட வேடிக்கையாக தோன்றியது.

(அவரவருக்கு, அவரவர் பிரச்சனை…..)

இரண்டு மணி நேரத்தில், அலுவலகம் திரும்பியவன், மீரா சொன்னதாய் சொல்லி, ஹரியிடம் பயணச்சீட்டை கொடுத்து சரி பார்க்க சொன்னான். அஞ்சலி பெயரை கண்டவனுக்கு, பெரும் வியப்பு.

“அஞ்சலியும் வராளா டா அரவிந்தா!” ஆர்வமாய் கேட்டான் ஹரி.

“ம்ம்… ஆமாம் டா… தெரியல, திடீர்னு ராத்திரி சொன்னா…” அரவிந்தன், பொதுவாக பதில் சொல்ல, கேட்டவனுக்கு அனைத்தும் விளங்கியது. தன்னவளை பார்க்க வீட்டிற்கு காற்றாய் பறந்தான்.

தன்னவன் வருகைக்காக பால்கனியில் தவம் கிடந்தாள் மீரா. நுழைவாயிலில், அவன் உருவம் தெரிந்ததும், சமையலறையை நோக்கி விரைந்தோடினாள். மாடியேறி வந்தவனை, இதமான ஏலக்காய் வாசம் காதல் கலந்து வரவேற்றது. அவனை கவனிக்காதது போல, மிதமான சூட்டில், கொதிக்கும், தேனீரையே உற்றுப்பார்த்து கொண்டிருந்தாள்.

வழக்கமாக உடைமாற்றி கொண்டு வருபவன், இன்று, நேராக தன்னவளை நோக்கி நடந்தான்.

“யாரோ ஏலக்காய் டீ போட்டு தர வர மாட்டேன்னு சொன்னீங்க!” பின்புறம் நின்று, அவள் காதில் கிசுகிசுத்தான்.

இரண்டு நாட்களுக்கு பின், அவன் குரல் கேட்டவளுக்கு, அத்தனை பூரிப்பு. கண்களை மட்டும் அவன் பக்கம் திருப்பியவள், “யாரோ, அம்மாவ ஊருக்கு அழைச்சிட்டு வர மாட்டேன்னு சொன்னீங்க!” பதிலுக்கு கேட்க,

மென்மையாய் சிரித்து கொண்டே, அவளை தன் பக்கம் திருப்பியவன், “அஞ்சலிய நீதானே வர சொல்லி கட்டாயப்படுத்தின!” தன் யூகத்தை கேட்டான்.

அடுப்பின் தீயை அணைத்தவள், அவன் முகம் பார்க்க முடியாமல், தலைதாழ்த்தி பேசினாள்.

“மன்னிச்சிரு ஹரி! உன் நிலமை புரியாம, என் பிரச்சனைய மட்டும் பெருசா நெனச்சு பேசி, உன்கிட்ட சண்டை போட்டேன்.” தன் தவறை ஒப்புக்கொண்டாள்.

அவள் முகத்தை இரண்டு கைகளாலும் குவித்தவன், “சண்டையெல்லாம் இல்ல மீரா… என்கிட்ட மட்டும் தானே, உன் உணர்வுகள உன்னால வெளிப்படையா பகிர்ந்துக்க முடியும்…” அவள் செய்தது தவறில்லை என்று உணர்த்தியவன்,

“இந்த விருத வாங்குறப்ப, நீ என் கூட இருக்கணும் மீரா. விருத கையில வாங்கின அடுத்த நொடி, மேடையிலேந்து, நான் பாக்குற முதல் முகம் உன்னுதா இருக்கணும்… அதான் என் ஆசை…” சொன்னவனை கண்சிமிட்டாமல் ஆழமாய் பார்த்தாள் மீரா.

“இவங்க எல்லாம், இன்னைக்கு கோபப்பட்டு, நாளைக்கு நம்மள புரிஞ்சுப்பாங்க…ஆனா, நம்ம லட்ச்சியத்துடைய வெற்றிய குறிக்கும் இந்த தருணம், ஒரு முறை தான் வரும்… அப்போ, நீ என் கூட இல்லாம எப்படி?” தாழ்ந்த குரலில் கேட்டவனின் அன்பில் கரைந்தாள்.

“நீ இந்த அளவுக்கு யோசிக்கறத புரிஞ்சிக்காம, ஒரே நொடியில வரலன்னு சொல்லிட்டேனே டா… “மனம்நொந்தவள், “ஐலவ்யூ ஹரி!” என்று தன் அன்பை வெளிப்படுத்தினாள்.

“நானும் உனக்கு திருப்பி சொல்ற நாள் சீக்கிரம் வரும்!” நம்பிக்கை வார்த்தை சொல்லி, அங்கிருந்து நகர்ந்தான்.

‘எத்தனை நற்குணம் படைத்தவன்’ மனதில் நினைத்தவள், இனி, ஒருபோதும் இவன் மனம்கோணும் படி நடந்துகொள்ளக்கூடாது என்று ரகசிய தீர்மானம் செய்துகொண்டாள்.

பல சண்டைகளுக்கும், சமாதானங்களுக்கும் நடுவில், டெல்லி பயணத்தை திட்டமிட்ட, காதல் ஜோடிகள், தொடர்ந்து வந்து வெள்ளிக்கிழமை அன்று வழக்கம் போல சந்தித்தனர்.

ஹரி, ஊருக்கு போக தேவையான துணிகளை எடுத்து வைக்க, மீரா பரிசளித்த சிவப்பு சட்டையை பெட்டிக்குள் வைத்தான்.

“ஹரி…..!” அதிர்ச்சி அடைந்தவள், “இது எதுக்கு டா!” கண்கள் அகல கேட்டாள்.

“விருது வாங்குறப்ப போட்டுக்க தான்!” அலட்டல் இல்லாமல் அவன் பதில் சொல்ல, பாய்ந்து வந்து அந்த சட்டையை கைப்பற்றினாள். அதை மார்போடு சேர்த்து அணைத்தவள்,

“ப்ளீஸ் ஹரி! அது எவ்வளவு பிரம்மாண்டமான விழா தெரியுமா!” என்று, வேறு நல்ல சட்டை அணிந்துகொள்ளும் படி கெஞ்சினாள்.

மறுத்து பேசியவனின் வாதம், வழக்கம்போல், அவளிடம் தோற்றுப்போக, அவள் தேர்ந்தெடுத்து கொடுத்த வேறு சட்டையை அணிய ஒப்புக்கொண்டான். எதற்கும், சட்டை தன்னிடம் இருக்கட்டும், என்று அவன் மீது நம்பிக்கை இல்லாமல், அதை எடுத்துக்கொண்டு மீரா ஹாலுக்கு ஓடி வர, வாயிற்கதவு மணி ஒலித்தது.

வாயிற்கதவின் இருப்பக்கம் நின்றவர்களுக்கும், ஒருவரை ஓருவர் பார்த்து பேரதிர்ச்சி. ஊரில் இருந்து, திடுதிப்பென்று வந்து நின்றாள் வாசுகி.

“உள்ள வாங்க மா!” கையில் இருந்த சட்டையை பின்னால் மறைத்து மீரா தாழ்ந்த குரலில் அழைக்க,

அவளை மேலும் கீழுமாய் ஏளனமாய் பார்த்தவள், “என் மகன் வீட்டுக்குள்ள என்ன வர சொல்ல, நீ யாரு?” கர்வமாய் பேசி உள்ளே நுழைந்தாள் வாசுகி. பின்னால் நின்றுகொண்டிருந்த மணிமாறன், தங்கள் திடீர் வருகைக்கு கண்ஜாடையில் மன்னிப்பு கேட்டார்.

மீரா, தன் பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட, தன் வீடு என்று உரிமை கொண்டாட வலம் வந்த வாசுகியின் கண்ணில், அந்த பயணச்சீட்டு தென்பட்டது.

அதை ஆராய்ச்சி செய்தவள், “என்னடா ஹரி! ட்ரெயின்ல டிக்கெட் போட்டிருக்கு.” சலித்து கொண்டவள், “என்னால முட்டி வலியோட, ட்ரெயின்லலாம் வர முடியாது. பிளேன்ல அழைச்சிட்டு போறதுனா நான் வரேன்…இல்லேன்னா…”என்று, அண்ணன் பக்கம் திரும்பியவள், “மணி, நம்ம நாளைக்கே ஊருக்கு கிளம்பலாம்!” என்று பிரச்சனை செய்தாள்.

“என்ன மா! வந்தததும் வராதுமா பிரச்சன பண்ணற!” ஹரி பொறுமை இழக்க, அதை இன்னும் பெரிதாக்கி, மீராவை பற்றி குறைகூறலாம் என்று நினைத்தாள் வாசுகி.

ஆனால் அதற்குள் மீரா, முந்திக்கொண்டாள். “ஹரி! கீழ வா! நான் உன்கிட்ட பேசணும்!” திடமாக சொல்லி, “அம்மா! நம்ம டெல்லியில சந்திக்கலாம்!” வாசுகியிடம் கூறிவிட்டு புறப்பட்டாள்.

வாசுகியிடம் சொன்னதிலேயே, மீராவின் மனநிலையை புரிந்துகொண்டவன், “அவங்க வேணும்னே பிரச்சனை பண்ணனும்னு பேசுறாங்க மீரா!” சிடுசிடுக்க,

“தெரியும் ஹரி!” தெளிவாய் பேசியவள், “ஆனா, அவங்களோட வாதம் செய்ய இது நேரமில்ல… எனக்கு அவங்க டெல்லிக்கு வரணும்… உனக்கு நான் வரணும்… அவங்கள பிளேன்லயே அழைச்சிட்டு வா… பார்த்துக்கலாம்!” இன்னும் தெளிவாக விளக்கினாள்.

“அதான், உனக்கு துணைக்கு அஞ்சலி வராளே!” ஹரி தர்க்கம் செய்ய, “நீ விருது வாங்கறத பார்க்க, அவ்வளவு தூரம் ஆசையா வந்தவங்கள திரும்பி போக சொல்லுவியா!” கேட்டு அவனை மடக்கினாள்.

“ஆனா… உன் பிறந்தநாள்…”, ஹரி ஏக்கமாய் கேட்க, அவன் கன்னத்தை வருடியவள்,

“பிறந்தநாள் அடுத்த வருஷம் வரும்; நீ விருது வாங்கும் தருணம் ஒரு முறை தான் வரும்!” நிதர்சனத்தை சொல்லி, வாயடைத்தாள்.

இவள் அன்பை, தாயிடம் சொல்ல, வான்தேவதை யாராவது தரை இறங்குகிறார்களா என்பது போல், இருள் படர்ந்த வானத்தை ஏக்கமாய் பார்த்து நின்றான் ஹரி.

மீரா பிறந்தநாள் அன்று…

“அப்பா! ஹரி விருது வாங்குற விழாவிற்கு ஊருக்கு போயிட்டு வரேன்!” பெட்டியுடன் ஹாலுக்கு வந்தவள் மென்மையாய் சொல்ல, அவளை தலைத்தூக்கி பார்த்தார் வரதன்.

காலையிலிருந்து மகளுக்கு, பிறந்தநாள் வாழ்த்து கூட கூறாமல், விரப்பாக இருந்தவர், மகளுக்கு எப்படி இன்பதிர்ச்சி கொடுக்க போகிறார் என்று ஆவலாய் பார்த்து நின்றாள் நிர்மலா.

பெட்டியுடன் நிற்கும் மகளை ஏற இறக்க பார்த்தவர், “ஓ போயிட்டு வந்துடுவியா… அப்படியே போயிடுவேன்னு தானே நெனச்சேன்.” குத்தலாய் பேச, கேட்ட பெண்கள் இருவரும் திகைத்து நின்றனர்.

“அப்பா!”

“என்னங்க… என்ன பேசுறீங்க!” பதறிய மனைவி, அவரருகே வந்தாள்.

பெண்ணை பொருட்படுத்தாமல், மனைவியை பார்த்தவர், “உனக்கு தெரியாதுல்ல மா…இவளுக்கும், அவனுக்கும் கல்யாணமாகி ஒரு மாசமாயிடுத்து. ரெஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிகிட்டாங்க… நேத்து தான் என் நண்பன் சரவணன் சொன்னான்.” விளக்க, யார் பக்கம் சாய்வது என்று குழம்பி நின்றாள் நிர்மலா.

தாங்கள் வீட்டை பதிவிட சென்ற அன்று, தந்தைக்கு தெரிந்த யாரோ அவரிடம் தவறான தகவல் கொடுத்திருக்கிறார் என்று உடனே புரிந்து கொண்டாள் மீரா. ஆனால் உண்மையை சொல்ல அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.

ஏதோ ஒரு நண்பன் சொல்லும் வார்த்தையில் வைக்கும் நம்பிக்கையை, பெற்ற மகள், தன்னிடம் வைக்கவில்லை என்ற ஆதங்கம் அவளுக்கு.

“ஆமாம் பா! கல்யாணம் செஞ்சிகிட்டோம்; இப்போ நாங்க ஹனிமூன் போயிட்டு வரோம். உங்க டாக்டர் நண்பர் யாராவது வந்து, உங்க பொண்ணு கர்ப்பமா இருக்கான்னு கூடிய சீக்கிரம் சொல்லுவாங்க!” ஏட்டிக்கு போட்டி பதிலளித்தாள்.

அவள் கொச்சை பேச்சை சகித்துக்கொள்ள முடியாமல், நிர்மலா, “மீரா! அப்பா கிட்ட இப்படி மரியாதை இல்லாமையா பேசுவ… அவர்கிட்ட மன்னிப்பு கேளு டி!” என்று கொந்தளிக்க,

“என்னையே ஏன் மா தப்பு சொல்ற” மனம்நொந்தவள், “இவர் சம்மதம் சொல்ற வர என்கிட்ட தன் காதல கூட சொல்லக்கூடாதூன்னு பொறுமையா காத்துக்கிட்டு இருக்கான் மா ஹரி…அவன ஏன் தான் இவருக்கு பிடிக்கலையோ…எங்கள இவர் புரிஞ்சிக்கவே மாட்டாரு மா!” கதறினாள் மீரா.

ஹரியை பற்றி, தனக்கே தெரிந்ததால், அவன் அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது நிர்மலாவிற்கு.

“அப்போ, எதுக்காக அங்க போனீங்கன்னு அப்பா கிட்ட சொல்லு!” தன்மையாய் கேட்டாள் நிர்மலா.

கண்களை துடைத்து கொண்டு விரப்பாய் பார்த்தவள், “அதையும், எங்கள ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல பார்த்ததா போட்டுக்கொடுத்தாரே… அவர் ந..ண்..ப..ர்..” அழுத்திச்சொல்லி, “அவரையே கேட்டு தெரிஞ்சிக்க சொல்லு!” என்று, பெட்டியை தூக்கியவள்,

“ஹரிக்கு இது முக்கியமான நாள். நான் கண்டிப்பா அவன் பக்கத்துல இருக்கணும். நாங்க எந்த தப்பும் பண்ணல; செய்யவும் மாட்டோம்; என் ஹரி செய்ய விடவும் மாட்டான்;” தீர்க்கமாய் சொல்லி, வருத்தங்களை மனதில் புதைத்து, வாசலை நோக்கி நடந்தாள்.

சம்மதம் சொல்ல நினைத்தவர், சந்தேகம் கொண்டதுதான் சரியா-இல்லை

தந்தை மனம்நோக மகள் தர்க்கம் செய்ததுதான் தவறா- பதில் சொல்லும்,

அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்…