அன்பின் ஆழம் 31.1

பதிவாளர் அலுவலகத்திலிருந்து, நண்பர்கள் பணிக்கு திரும்ப, ஹரியும், மீராவும் மட்டும் சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்றனர். கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தாள் மீரா. கைக்கூடிய காரியங்களுக்கு நன்றி தெரிவித்தும், மனதில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றி தரும்படி பிள்ளையாரிடம் மனு கொடுத்துவிட்டும், ஒரு மணி நேரத்தில் வீடு திரும்பினர் காதல் ஜோடிகள்.

ஓராண்டு காலமாக வசித்த வீடே என்றாலும், இன்று, வாயிற்கதவை திறந்து நின்றவனுக்கு அங்கமெல்லாம் மெய்சிலிர்த்தது. பிள்ளையாருக்கு திருமஞ்சனம் செய்து கொடுத்த மஞ்சள் பிரசாதத்தில் கொஞ்சம் எடுத்து, ‘ஓம்’ என்று வாசற்கதவின் மையத்தில் எழுதும் தன்னவளை கண்கொட்டாமல் பார்த்து நின்றான் ஹரி.

‘அவளுக்கு சரின்னு மட்டும் சொல்லு; அப்புறம் பாரு…. நீ வெற்றியின் உச்சகட்டத்துக்கு போறது உறுதி’ அரவிந்தன் அன்று சொன்னது எத்தனை உண்மை என்று நினைத்து நெகிழ்ந்தான்.

“எழுத்தாளரே! என்ன பலத்த சிந்தனை?” கீச்சுக்குரலில் அவள் கேட்டதில், சுயத்துக்கு வந்தவன், மெல்லிய சிரிப்புடன் இடம் வலமாக தலையசைத்தான்.

“உள்ள வாங்க! நமக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க யாரும் காத்துக்கிட்டு இல்ல!” ஏளனமாக சொல்லி, அவனை உள்ளே இழுத்தாள். கசப்பான உண்மையையும், கனிவாக சொல்லும் தன்னவளின் கரம் பற்றி, பின்தொடர்ந்தான்.

பத்திரத்தின் நகலை ஹரி, தந்தை நிழற்படம் முன் வைக்க இருவரும் பிரார்த்தித்தனர். கண்மூடி வேண்டிய இருவரின் கோரிக்கையும் ஒன்றே.

“இன்னைக்கு ஆஃபிஸ் லீவு போட்டதுக்கு, வீட்டுல என்ன காரணம் சொல்லிட்டு வந்த டி?” ஒய்யாரமாய், தரையில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டிருப்பவளை வினவினான் ஹரி.

“ஒரு முக்கியமான விஷயமா, ஹரியோட வெளிய போயிட்டு வரேன்னு சொன்னேன்!” அலட்டல் இல்லாமல் பதிலளித்தவளை புருவம் உயர்த்தி பார்த்தவன்,

“எங்க… ஏதுன்னு உங்க அம்மா கேட்கலையா?” என்றான்.

“இங்க வந்து உட்காருங்க எழுத்தாளரே!” என்று அவனை வலிய இழுத்தவள், “நீதான் அக்மார்க் பையன்னு அவங்ககிட்ட பேரு வாங்கிட்டியே!” என்று குறும்பாய் சொல்லி கண்சிமிட்டினாள்.

“ஓ அப்படியா!” என்று அவள் அருகில் வந்தவன், “சரி, அப்போ, இன்னைக்கு கொஞ்சம் அத்துமீறலாமா…” இரகசியமாய் காதோரம் கிசுகிசுக்க, அதில் திடுகிட்டவள்,

“ஹரி! என்னடா சொல்ற?” கண்கள் அகல பார்த்தாள்.

பதறும் அவளை பார்வையால் விழுங்கியவன், “ஆசைய பாரு… ஏதாவது சினிமா பார்த்துட்டு, அப்படியே வெளிய சாப்பிட்டு வரலாமான்னு கேட்க வந்தேன் டி!” என்று அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினான்.

அவன் போட்ட நிபந்தனைகளுக்கு, இதுவே அத்துமீறல் தான் என்று மனதில் நினைத்து சிரித்தவள், “போலாம் டா! ஆனா, கொஞ்சமா பால் பாயசம் மட்டும் பண்ணறேன்… சாப்பிட்டு கிளம்பலாம்!” என்றாள்.

“ஸ்வீட் சாப்பிட ஏதாவது சாக்கு!” சலித்து கொண்டு எழுந்தவன், “சரி! சீக்கிரம் செய்… நான் அதுக்குள்ள என்னென்ன படம் புதுசா வந்திருக்குன்னு பாக்குறேன்” என்று வெள்ளிக்கிழமை வந்த செய்தித்தாளை புறட்டினான்.

அரை மணி நேரத்தில், பாயசத்தை ருசித்து கொண்டே, ஹரி குறித்து வைத்த படங்களில் ஒன்றை மீரா தேர்ந்தெடுக்க, அவன் கைப்பேசி ஒலித்தது.

“சொல்லுங்க ஸ்ரீராம்!” என்றான் ஹரி.

“ஹரி! உடனே கிளம்பி வர முடியுமா? உங்ககிட்ட ஒரு சந்தோஷமான செய்தி சொல்லணும்… கண்டிப்பா மீராவ அழைச்சிட்டு வாங்க…” என்று அவனை பேசவிடாமல் புதிர்போட்டார் ஸ்ரீராம்.

அவர் அவசியம் இல்லாமல் நேரில் வர சொல்லமாட்டார் என்று அறிந்தவன், உடனே வருவதாக சம்மதம் சொன்னான்.

அவர்கள் பேச்சை கேட்ட மீரா, “நீயே ஏதோ மனசு வந்து அதிசயமா ரொமான்ஸ் பண்ணற… அது அவருக்கு பொறுக்கலையாமா!” கழுத்தை நொடித்தவள், விரக்தியில் செய்தித்தாளை மடித்தாள்.

அவரை சந்தித்துவிட்டு, அங்கிருந்து நேராக படத்திற்கு போகலாம் என்று யோசனை சொன்னான் ஹரி. அதை கேட்டு, அவளும் உற்சாகமாய் கிளம்பினாள்.

“அடுத்த புத்தகம் பதிவிடலாமா… வேற ஏதாவது வாரயிதழ்லேந்து எழுத வாய்ப்பு வந்திருக்கா!” அமைதியாக அமர்ந்திருக்கும் ஸ்ரீராமிடம் ஹரி கேள்விகளை அடுக்கினான்.

“கூல்! கூல்! ஹரி! இத்தோட புத்தகம், தொடர்கதைகள்னு எட்டு கதை பதிவிட்டாச்சு… கொஞ்சம் மூளைக்கு ஓய்வு கொடுத்திட்டு, பாராட்டுகள் அனுபவிக்க நேரம் ஒதுக்குங்க!” மீண்டும் புதிராய் பேசியவரை ஆழமாய் பார்த்தான் ஹரி.

உள்ளூரில் நடக்கும் போட்டிகள், தமிழ் சங்க பாராட்டு விழாக்கள் என்று ஒவ்வொன்றிலும், ஹரிக்கு கிடைக்க வேண்டிய பேரும் புகழும் அவனிடம் கொண்டு சேர்ப்பதில் ஸ்ரீராம் மிகுந்த அக்கறை காட்டினார். அதைப்போன்ற ஒன்றை பற்றி பேசுவார் என்று அமைதியாய் இருந்தான் ஹரி.

மேஜையிலிருந்து, பளபளக்கும் ஒரு தாளை எடுத்தவர், எதுவும் பேசாமல் அதை மீராவிடம் கொடுத்தார். படிக்கும் அவளையே உற்றுப் பார்த்தார். படித்தவள் கண்கள் மகிழ்ச்சியில் நனைய, இருக்கும் இடம் மறந்து, அருகில் இருக்கும் தன்னவனை இறுக அணைத்து, “நீ சாதிச்சிட்ட டா ஹரி! உன் இலட்சியத்தின் உச்சிய தொட்டுட்ட டா!” என்று மனமுறுகினாள்.

இதழோர சிரிப்புடன், ஸ்ரீராம் அவள் நெகிழ்வதை இரசிக்க, விவரம் அறியாதவன், இருவரையும் மாறி மாறி பார்த்து முழித்தான்.

“வாழ்த்துக்கள் ஹரி! இந்த வருடம், தமிழ் மொழி சார்ந்த புத்தகங்கள் பிரிவுல உங்க ‘தெவிட்டாத இன்பம்’ கதைக்கு ‘’சாகித்ய அகாடமி விருது’ கொடுக்க அறிவிச்சிருக்காங்க” ஸ்ரீராம் விளக்க, கேட்டவன் இன்பதிர்ச்சியில் உறைந்து போனான்.

எத்தனை உயர்ந்த விருது அது… தேசிய அளவில் தன் எழுத்துக்கு அங்கீகாரம் கிடைத்ததை எண்ணி பூரித்தான். அவன் காதில் மறுபடியும், அரவிந்தன் சொன்ன வார்த்தைகள் தான் எதிரொலித்தது.

‘அவளுக்கு சரின்னு மட்டும் சொல்லு; அப்புறம் பாரு…. நீ வெற்றியின் உச்சகட்டத்துக்கு போறது உறுதி’, நினைவூட்டிக் கொண்டவன், மீராவின் கைவிரல்களை இறுக கோர்த்தான்.

“உன்னால தான் டி இதெல்லாம் நடக்குது!” மனமுறுகி பேசியவன், “வீடு, விருதுன்னு ஒரே நாளுல இவ்வளவு சந்தோஷத்த கொடுக்க உன்னால மட்டும் தான் முடியும் மீரா!” அவள் தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கூற,

அவள் பங்குக்கு, இல்லை என்று மறுப்பாய் தலையசைத்து, அவன் கன்னத்தை வருடியவள், “இல்ல டா! இதெல்லாம், உன்னுடைய உழைப்புக்கு கிடைச்ச சன்மானம்!” என்றாள்.

“ஹெலோ….” தாழ்ந்த குரலில் அழைத்து, ஸ்ரீராம் தொண்டை செருமிக்கொண்டதில், சுயத்துக்கு வந்தனர் காதல் ஜோடிகள்.

“ஒரு பேச்சுக்கு கூட, ரெண்டு பேரும் என் பேர சொல்ல மாட்டேன்றீங்களே!” அவர் முகத்தை சுருக்கி கேட்க, இருவரும் அசடுவழிந்தனர்.

“நீங்க இல்லாம எப்படி ஸ்ரீராம். ஒரு பதிப்பாளரா மட்டும் இல்லாம, உடன் பிறவா சகோதரன் போல, என் மேல அன்பும், அக்கறையும் காட்டுற உங்க பாசத்த எப்படி மறப்பேன்” என்று ஹரி தொடங்க,

“அதுமட்டுமில்ல ஸ்ரீராம்! ஹரி இந்த வீட்டுக்கு குடிபோன அன்னைக்கு தான் நீங்க அவனுக்கு போன் செய்து, புத்தகம் பதிவிடற விஷயமா பேசினீங்க… இன்னைக்கு அதே வீட்ட ஹரி வாங்கிட்டு வரான்… அவனுக்கு எவ்வளவு பெரிய அடையாளத்த தேடி தந்து இருக்கீங்க… எல்லாம் உங்க நல்லாசியில தான் நடக்குது!” மனதார நன்றி தெரிவித்தாள்.

அவரும், அவையாவும், ஹரியின் நற்குணத்திற்கும், திறமைக்கும் கிடைத்த சன்மானங்கள் என்று சொல்லி, விழா நடைபெரும் நாளையும் தேதியையும் பற்றி குறிப்பிட்டார். அவருக்கு நன்றி தெரிவித்து வெளியே வந்த காதல் ஜோடிகளுக்கு, இதைப்பற்றி அரவிந்தனிடம் முதலில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது.

விருதை பற்றி நண்பனிடம் சொன்னவன், “அடுத்த மாசம் புது டெல்லியில நடக்குது டா! நீயும் கண்டிப்பா வரணும்!” ஹரி சொல்ல,

“நான் இல்லாம எப்படி டா! கண்டிப்பா வரேன்!” உறுதியாய் சொன்னவன், கீதா, மகேஷிடமும் கலந்தாலோசித்துவிட்டு, ரயிலில் பயணச்சீட்டு பதிவு செய்யலாம் என்று ஆலோசனை சொன்னான்.

மகிழ்ச்சியில் மூழ்கிய காதல் ஜோடிகள், படம் பார்க்கும் எண்ணத்தை கைவிட்டனர். மதிய உணவு அருந்திவிட்டு, வீடு திரும்பினர். பயணத்தை பற்றிய திட்டங்களை வரைந்தனர். ரயில் பயணம், விழா நடக்கும் நாள் எல்லாம் சேர்ந்து, குறைந்த பட்சம், ஒரு வாரம் தேவைப்பட்டது. கேலெண்டர் பார்த்தவள், கிட்டத்தட்ட அதே சமயத்தில், வங்கிக்கு திரும்பும் நாளும் வர,

“ஹரி! இந்த விழா முடிஞ்ச பிறகே, நான் வங்கி வேலையுல சேரறேன் டா. இல்லேன்னா வந்ததும், வராதுமா லீவு எடுக்க வேண்டிருக்கும்!” யோசனை சொன்னாள்.

“கரெக்ட் மீரா! அரவிந்த், கீதா, நான் எல்லாரும் ஒரே சமயத்துல லீவு எடுப்போம். நீயும் லீவு கேட்டு, இல்லேன்னு, சொல்லிட்டாங்கனா…” என்று அவள் திட்டத்திற்கு சம்மதம் சொன்னவன்,

“அப்புறம்… இன்னொரு விஷயம் கவனிச்சியா!” என்று அவளை குறும்பாய் பார்த்து, “அந்த வாரம் தான் என் ராஜகுமாரியோட பிறந்தநாளும் வருது…” என்றான். அதை கேட்டவள், வெட்கத்தில் தலை தாழ்த்தினாள்.

மென்மையாய் அவள் முகத்தை நிமிர்த்தியவன், பிறந்தநாள் பரிசா, என் ராஜகுமாரிக்கு, இந்த விருது வாங்கி தர போறேன்… சந்தோஷமா?” என்றான்.

இடம் வலமாக தலையசைத்தவள், “அன்னைக்கு என்கிட்ட ‘ஐலவ்யூ’ சொல்லுவியா ஹரி!” ஏக்கமாய் கேட்க, நொடியில் அவன் முகம் வாடியது. பதில் சொல்லமுடியாமல், அவன் தலைகுனிய, அப்படி கேட்டிருக்க கூடாதோ என்று மீரா வருந்தினாள்.

“மீரா! இந்த விருத பற்றி, உங்க அப்பாகிட்ட வந்து சொல்லவா… அவர் மனசு மாற வாய்ப்பு இருக்கே!” என்று தாழந்த குரலில் கேட்டான்.

இவன் வந்தால், உணர்ச்சிவசப்பட்டு, வீடு வாங்கிய விஷயத்தையும் சேர்த்து உளறிவிடுவானே என்று பயந்து, தானே தந்தையிடம் சொல்கிறேன் என்றாள்.

“விடுங்க எழுத்தாளரே! அன்னைக்கு முழுக்க முழுக்க என்னோட தான் இருக்கணும், சரியா!” வேறு கோரிக்கை வைக்க, அவனும் மென்சிரிப்புடன், “இருப்பேன் டி!” என்று தலையசைத்தான்.

தொடர்ந்து வந்த நாட்களிலும் இதே மகிழ்ச்சி நிலவியது. செய்தி கேட்ட வாசுகி, மகனின் வளர்ச்சியை கண்டு நெகிழ்ந்தாள். அவனும், அவளை தன்னுடன் டெல்லிக்கு வரச்சொல்லி அன்பாய் அழைத்தான். மீரா வரும் இடத்திற்கு, தனக்கு வர விருப்பமில்லை என்று தீர்மானமாய் சொல்லிவிட்டாள். ஹரிக்கும், விருது வாங்கும் தருணத்தில், தன்னுடன் மீரா இருப்பது தான் முக்கியம் எனப்பட்டது. தன் மீது அதீத நம்பிக்கை கொண்டவளுக்கே, இந்த விருது சமர்ப்பணம் என்று அனைவர் முன்னிலையிலும் சொல்ல விழைந்தவன், மீரா கட்டாயம் வர வேண்டும் என்று எண்ணினான். அதனால், வாசுகியிடம் அதிகமாக இதை பற்றி பேசிக்கொள்ளவில்லை.

மீராவும், தன் பெற்றோரிடம், இதை பற்றி பகிர்ந்துகொண்டாள். நிர்மலா வெளிப்படையாக மகிழ்ந்த போதிலும், வரதன் எந்தவித உணர்ச்சியும் காட்டவில்லை. விருதின் மகத்துவம் அறிந்ததால், அவரால், ஹரியின் திறமையை எடைப்போட முடிந்தது. மகளுக்கு ஏற்றவன் என்ற முடிவுக்கு வந்த போதிலும், அவள் பிறந்தநாள் பரிசாகதான் தன் சம்மதத்தை சொல்ல வேண்டும் என்று உறுதியாய் இருந்தார்.

 செய்தி கேட்ட நண்பர்கள் அவனை நேரில் சந்திக்க ஓடி வந்தனர். விருந்து, கொண்டாட்டம் என அவர்கள் பாணியில் ஒன்றுகூடி மகிழ்ந்தனர். அவர்களையும் டெல்லிக்கு வரும்படி ஹரி அன்பாய் அழைத்தான். ஆனால், கீதா, குழந்தையுடன் அவ்வளவு தூரம் பயணம் செய்வது கடினம் என்றாள். மகேஷுக்கு வேலையில் நெருக்கடி இருந்ததால், விடுப்பு எடுக்க முடியவில்லை.

“ஹரி! எனக்கும் வரணும்னு தான் ஆசை… ஆனா, அந்த சமயத்துலதான் பள்ளியில நாங்க சுற்றுலா பயணம் போறோம். அவங்ககிட்ட வரேன்னு சொல்லிட்டேன்… அவங்களும் எல்லா ஏற்பாடுகளும் செஞ்சிட்டாங்க… இப்போ போய் சொன்னா…” தயங்கினாள் அஞ்சலி.

அவள் நிலமையை புரிந்துகொண்டான் ஹரி. மனைவியை பிரிந்து ஒரு வாரம் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்தில் வாடினான் அரவிந்தன். நண்பர்களுடன் மட்டும் எப்படி அவ்வளவு தூரம் தனியாக செல்வது என்று தயங்கினாள் மீரா.

அரவிந்தன் திருமணத்திற்கு போன இடத்தில், ஒரு நாள் தனியாக தங்குவதற்கே யோசித்தவள், தன் பயத்தை ஹரியிடம் தெரிவித்தாள். துணைக்கு வாசுகியை அழைத்து வரும்படி, அவள் கூற, தன் அம்மாவின் மனநிலையை அறிந்தவன் தீர்மானமாய் முடியாது என்றான். அதற்கு பதிலாக, அவள் அம்மாவை துணைக்கு அழைத்து வரும்படி யோசனை சொன்னான். தன் தந்தையை மீறி, அம்மா வர மாட்டார் என்று உறுதியாய் அறிந்திருந்தாள் மீரா. அவளிடன் இதைப்பற்றி பேசினால், தன்னையும் அவ்வளவு தூரம் அனுப்ப மறுப்பாளோ என்றும் பயந்தாள்.

காதலர்களுக்கு இடையே தொடங்கிய, பேச்சுவார்த்தை, வாக்குவாதமாக மாறி, ஒரு வாரத்தில், மனஸ்தாபமாக உருவெடுத்திருந்தது. இருவரும் தழைந்து போக மறுக்க, பிரச்சனைக்கு தீர்வு காணாமல், வழக்கமாக சந்திக்கும் வெள்ளிக்கிழமை மாலையும் வந்தது.

அலுவலகத்திலிருந்து வந்தவள், வழக்கத்துக்கு மாறாக தானே சமைத்தாள். வீடு திரும்பியவன், அதில் எரிச்சலடைந்து, எதுவும் பேசாமல் உடைமாற்றி கொண்டு வந்து உட்கார்ந்தான். அவனிடம் பருக ஏலக்காய் டீ கொடுத்தவள்,

“ப்ளீஸ் ஹரி! என் நிலமைய புரிஞ்சுக்கோடா! அவங்க வந்தா எனக்கு பாதுகாப்பா இருக்கும்!” சூழ்நிலை கைதியாக கெஞ்சினாள்.

“நீ என் நிலமைய புரிஞ்சுக்கோ மீரா…” பதிலுக்கு சொன்னவன், “உங்க ரெண்டு பேரையும் ஒரே இடத்துல வெச்சு சமாளிக்குற என்பாடு தான் திண்டாட்டமாயிடும்!” எதார்தத்தை சொன்னான்.

“எனக்கு மட்டும் உன்ன கஷ்ட படுத்தணும்னு ஆசையா… என் பாதுகாப்புக்காக தானே கேட்குறேன்…” முணுமுணுத்தாள்.

அதில் இன்னும் அதிகமாய் எரிச்சலடைந்தவன், “என்ன பெரிய பாதுகாப்பு… அதான் ஒருத்தருக்கு ரெண்டு பேரா நானும், அரவிந்தனும் வரோமே…” என்று கோபம்கொண்டான்.

“வரீங்க… அவ்வளவுதான்… கூடவே தங்க முடியுமா…” தன் பயத்தை தெளிவுபடுத்தி முகத்தை தொங்கப்போட்டாள்.

அவள் முகத்தை ஏந்தியவன், “கொஞ்சம் நிதானமா சிந்திச்சு பாரு டி! பாஷை தெரியாத இடத்துல, அவங்களுக்கே பாதுகாப்புக்கு ஒரு ஆளு தேவை… நீ என்னடானா அவங்கதான் வரணும்னு சொல்ற!” மென்மையாக பேசி பார்த்தான்.

“அவங்க கூட இருக்கணும்… அதுவே எனக்கு பாதுகாப்பா இருக்கும்!” விடாபிடியாய் பேச, அவன் பொறுமை இழந்தான்.

“ஒரு உயர் பதவியில இருக்குற பொண்ணு மாதிரியா பேசுற… எத்தனையோ பெண்கள், வெளிநாட்டுல எல்லாம் தனியா போய் இருக்காங்க… இங்க இருக்குற டெல்லிக்கு போயிட்டு வர இவ்வளவு பயப்படற…” சொன்னவனை, ஆழமாய் பார்த்தாள் மீரா. அவள் மௌனம் சாதிக்க, அவனே மேலும் பேசினான்.

“உனக்கு இருக்குற வாயிக்கு, உன்ன யாராவது நெருங்கதான் முடியுமா!” விளையாட்டாக சொல்ல, அதை கேட்டு வெடுக்கென்று எழுந்தாள்.

“என்ன யாரோடையும் ஒப்பிட்டு பேசாத! எனக்கு தனியா வர பயம்… அவ்வளவுதான்! சொன்னவள், தன் பொருட்களை எடுத்துக்கொண்டு, வாயிலை நோக்கி நடந்தாள்.

“கடைசியா சொல்றேன் ஹரி! முடிஞ்சா அம்மாவ வர சொல்லு… இல்ல நானும் டெல்லிக்கு வரல!” தீர்மானமாக சொல்லி நடைகட்டினாள்.

இருக்கையில் இருந்து எழாமல், “எனக்கும் இந்த விருது முக்கியமில்ல… நானும் போகல!” ஏட்டிக்கு போட்டி சொல்ல,

அதை கேட்டு திரும்பியவள், அவனை கண்சிமிட்டாமல் பார்த்தாள்.

“என்ன அப்படி பாக்குற… எத்தனையோ விஷயத்துல நான் உனக்கு விட்டுக்கொடுத்திருக்கேன்… நீயும் ஊருக்கு வா… இல்ல நானும் போகல…!” உறுதியாய் சொல்லியும், அவள் எதுவும் பேசாமல் நகர்ந்தாள்.

“கண்டிப்பா, இந்த முறை, உன் பின்னால வந்து சமாதானம் செய்ய மாட்டேன் டி! போறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சிக்கோ!” உரக்க சொல்ல,

அவனருகில் வேகமாக வந்தவள், “பின்னால வந்து சமாதானமும் படுத்தாத… ‘உன் கையால ஏலக்காய் டீ குடிச்சு எவ்வளவு நாளாச்சுன்னு’ மெசேஜ் அனுப்பி கெஞ்சவும் கெஞ்சாத!” சவால் விட்டு, விரப்பாக வெளியேறினாள்.

தொடர்ந்து படிக்க, Click Here அன்பின்  ஆழம் – 31.2