அன்பின் ஆழம் 30.2

“சரி கிளம்பு! நானும் உன்கூட வரேன்” என்றான்.

“பேசிகிட்டே நடக்க போறோமா எழுத்தாளரே!” கண்கள் அகல கேட்டாள்.

“ம்ஹூம்!” மறுப்பாய் தலையசைத்தவன், “லோன் எடுக்கறத பற்றி உங்க அப்பா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம்!” ஹரி, காரணம் சொன்னது தான் தாமதம். அவள் முகத்தில் கோபம் பரவியது.

“எங்கடா சண்ட போடாம, பிர்ச்சனை தீர்ந்துதேன்னு நெனச்சேன்… அதுக்குள்ள…” முணுமுணுத்தவள், “மன்னிச்சிரு ஹரி! இந்த விஷயத்த, நம்ம வீட்டுல யார்கிட்டையும் சொல்ல போறது இல்ல!” திடமாய் சொல்லி மறுத்தாள்.

“தப்பு மீரா! அவங்க நம்ம காதலுக்கு மறுப்பு சொல்றதுனால, இத பற்றி மறைக்க நினைக்கறது ரொம்ப தப்பு டி!” சிறுபிள்ளைக்கு அறிவுரை சொல்வது போல விளக்க, அதற்கும் மறுப்பாய் தலையசைத்தவள்,

“அதனால இல்ல டா… அவர் மறுப்பு சொன்னாலும் பரவாயில்ல… உன்ன அவமானபடுத்தி பேசுறாரு டா… “சொல்லி அவன் கைகளை இறுக பிடித்தவள், தாழ்ந்த குரலில், “ப்ளீஸ் ஹரி! இது உன் வெற்றியின் அடுத்த படி… உங்க அம்மாவோ, என்னோட அப்பாவோ… நம்மள ஆசிர்வாதம் பண்ணலேன்னாலும் பரவாயில்ல… சபிக்க வேண்டாம்னு நினைக்கறேன். “என்று தன் ஆதங்கத்தை கொட்டினாள்.

அவள் சொல்வது உண்மை என்ற போதும், அதை ஏற்க அவன் மனம் மறுத்தது. மகனை அதிகாரம் செய்பவளாய் மீராவை எண்ணும் தன் தாய்க்கும், பணம் பறிப்பவனாய் தன்னை பார்க்கும் வரதனுக்கும், நாளடைவில், இதை பற்றி தெரிய வந்தாலும் பிரச்சனை என்று நினைத்தவனுக்கு மறைக்க விருப்பமில்லை.

விஷயத்தை அறிபவர்கள், எப்படி இருந்தாலும், பிரச்சனை செய்வர் என்று தர்க்கம் செய்த மீரா, அவர்களுக்கு தெரியும் போது தெரியட்டும்; அவர்கள் கோபம் கொள்ளும் போது பேசிக்கொள்ளலாம் என்று தீர்மானமாய் சொன்னாள்.

அதீத நற்குணம் படைத்த ஹரி, மனமாறி, என்நேரமும், தன் தந்தையை பார்க்க வந்துவிடுவான் என்று அறிந்தவள்,

“இதுல நீ ஃபீல் பண்ணற அளவுக்கு ஒண்ணுமே இல்ல டா. நீ அப்படியே சொல்லணும்னு நெனச்சா, முதல்ல, உங்க வீட்டு பத்திரத்த எடுத்துட்டு போய் உங்க அம்மாகிட்ட கொடு… நாங்களாவாது நல்ல முறையில உறவாடறோம்.” நிபந்தனை போட்டு, அவன் கைகளை கட்டிப்போட்டாள்.

அடுத்த ஐந்து நிமிடத்தில், இருவரும் மகேஷ் வீட்டில் அருகருகில் உட்கார்ந்திருந்தனர். அவர்களை பார்த்த ராணியின் கணவருக்கு தான் திகைப்பு. ஒரு மணி நேரமாக அவர்கள் பேசியதற்கு செவி சாய்க்காத ஹரி, அரை மணி நேரத்தில், மனமாறியது எப்படி என்று மீராவை வியப்பாய் பார்த்தார்.

மகேஷுக்கு இதில் பெரும் ஆச்சரியம் இல்லை. “எப்படியும், உன் கோபம் இவகிட்ட செல்லுபடியாகாதுன்னு தெரியும்ல… இதுக்கு நீ அப்போவே சம்மதம் சொல்லி இருக்கலாம் டா!” மகேஷ் கிண்டல் செய்ய, அதற்கு ஹரி அசடுவழிந்தான்.

வெற்றிப்புன்னகையுடன் அந்த குறுகிய சோஃபாவில், தன்னவனை உரசி உட்கார்ந்திருக்கும் மீராவை பார்த்தபடி, மனைவியிடம் பேசினான், மகேஷ். “மைதிலி, எதுக்கும் இவகிட்டேந்து கொஞ்சம் தள்ளியே இரு!” என்றான்.

அதை கேட்ட, மீரா நமுட்டு சிரிப்புடன், “நீ முதல்ல லோன் எடுக்க வேண்டியத பற்றின விவரம் சொல்லு… எனக்கு வீட்டுக்கு கிளம்ப நேரமாகுது.” நண்பனிடம் அதிகாராமாய் சொல்லி,

“மைத்து மா! முதல் பாடம்… கணவர் சொல்ற அறிவுரை எதுவுமே காதுல போட்டுக்காத!” மைதிலியை பார்த்து கண்சிமிட்டினாள்.

“வாய்! வாய்!” செல்லமாக அதட்டியவன், படிவங்களை காட்டி விளக்கினான்.

“போன விஷயம் என்ன ஆச்சு பா?” இரவு உணவு உண்ண, சமையலறை மேடையில் உட்கார்ந்தவனுக்கு, தட்டில் சுட சுட சப்பாத்தி குருமா கொடுத்தபடி வினவினாள் அஞ்சலி.

அதில் ஒரு துண்டை வாயிலிட்டு மென்றவன், “ம்ம்… ஹரி, கடன் வாங்கிக்க மாட்டேன்னு சொல்லிட்டான்” உணவில் கவனமாய் இருந்தவன், மனைவிக்கு பதில் சொன்னான்.

சப்பாத்தி செய்து கொண்டே, அவள் விவரங்களை கேட்க, அவனும் அதை ருசித்தும், அவ்வப்போது அஞ்சலிக்கு ஊட்டியும், அனைத்தையும் விளக்கி முடித்தான். பொறுமையாக நடந்ததை எல்லாம் கேட்ட அஞ்சலி,

“அந்த வீட்டுல ஹரிய எப்படியாவது வாழவைக்கணும்னு மெனக்கெடற நீங்க, கடன் கொடுக்கறதுக்கு பதிலா, அந்த வீட்ட வாங்கிடலாமே!” யோசனை சொன்னாள்.

அவள் அக்கறையை புரிந்து கொண்டவன் மென்மையாக சிரித்தான். அவளை தன்னருகில் சேர்த்து வளைத்து அணைத்தவன், “உன் எண்ணம் புரியுது அஞ்சலி மா! ஆனா வீட்டுக்கு சொந்தகாரனாக விரும்புறவன, எப்படி வாடகைக்கு வந்து தங்க சொல்ல முடியும்?” கேட்க, அரவிந்தனின் உயர்ந்த குணத்தை மெச்சினாள்.

“நீங்க சொல்றது ரொம்ப சரி தான்…ஆனா, ஹரி வாங்க மறுத்தாருனா, வீடு வேற யாரோட கைக்காவது போயிடுமே!” நிதர்சனத்தை சொல்ல,

அவள் உதடுகளை நுணிவிரலால் வருடியவன், “அதெல்லாம் போகாது; அந்த வாயாடி இத்தன நேரத்துக்கு ஹரி கிட்ட அடம்பிடிச்சு அவன சம்மதிக்க வெச்சிருப்பா!” மீராவை பற்றி உறுதியாய் சொல்ல, அஞ்சலியும் அதை கேட்டு சிரித்தாள்.

கால்மணி நேரத்தில் ஹாலிற்கு வந்தனர் இளஞ்ஜோடிகள். தன்னவன் அருகில் வந்து அமர்ந்தவள், கையில் ஒரு கட்டு விடைத்தாளோடு வந்து அமர்ந்தாள். அதை கவனித்தவன்,

“எத்தன தடவ சொல்றது அஞ்சலி மா! ஸ்கூல் வேலைய வீட்டுக்கு கொண்டு வராதன்னு…” முணுமுணுத்தான் அரவிந்தன்.

“ரொம்ப நெருக்கடிபா! கோவிச்சிக்காம, கரெக்ட் பண்ணிகொடுங்க ப்ளீஸ்!” அவன் தாடையை குவித்து செல்லம்கொஞ்ச,

அவளை முறைத்துக்கொண்டே அதை கையில் வாங்கியவன், “உன்ன கரெக்ட் பண்ண வீட்டுக்கு வந்தா, இத கரெக்ட் பண்ண சொல்ற!” பேப்பரை உயர்த்தி காட்டி, சிணுங்கினான்.

“ஒரே ஒரு மணி நேரம்தான்… ஐ பிராமிஸ்… அப்புறம் “ஒன்லி” ரொமான்ஸ்! சரியா!” கேட்டு கண்சிமிட்டியவளை கண்டு மயங்கியவன் சொன்னதை செய்தான்.

வணங்காமல் விடைத்தாளை திருத்தி கொண்டிருப்பவனின் கைப்பேசி ஒலித்தது. ஊரிலிருந்து அம்மா தான் ஆபத்பாந்தவளாய் அழைக்கிறாள் என்று பெருமூச்சுவிட்டான். திரையில் ‘மகேஷ் காலிங்க்’ என்று கண்டவன், ஸ்பீக்கர் ஆன் செய்து,

“சொல்லுடா மகேஷ்! என்ன இந்த நேரத்துல?” என்றான்.

“மீரா பேருல லோன் எடுக்க, ஹரி சம்மதம் சொல்லிட்டான் டா!” தகவல் சொன்னான் மகேஷ். அரவிந்தன் உடனே அஞ்சலியை பார்த்து, தன் யூகம் சரி என்று பெருமிதம் கொண்டு புன்னகைத்தான்.

“சம்மதம் சொன்னானா… இல்ல சொல்ல வெச்சாங்களா?” கிண்டலாய் கேட்ட அரவிந்தனுக்கு, அங்கு ஹரி, மீரா இருந்தது தெரியவில்லை.

மகேஷ் பெருங்குரலில் சிரிக்க, அதில் கடுப்படைந்த மீரா, “சொல்லுடா ஹரி அவன்கிட்ட… இந்த முறை நான் சண்டை கூட போடலன்னு…” முகத்தை சுருக்கினாள்.

“தைரியமா உண்மைய சொல்லு டா நண்பா! நாங்கலாம் உனக்கு பக்கபலமா இருக்கோம்!” என்று மேலும் அரவிந்தன் கிண்டல் செய்ய,

ஹரி ஓரப்பார்வையால் தன்னவளை விழுங்கி, “அடமெல்லாம் பிடிக்கல டா! ரொம்ப சரியா பேசினா… அதான் சரி சொல்லிட்டேன்!” என்றதும், அவன் காதலிக்கு கண்மூடித்தனமாக ஜால்ரா அடிப்பதாக கிண்டல் செய்து, அரவிந்தனும், மகேஷும் மேலும் சிறிது நேரம் ஓட்டினர்.

“சரி! இந்த சந்தோஷமான விஷயத்த கொண்டாட, ஐஸ்கிரீம் சாப்பிட போலாமா?” அரவிந்தன் யோசனை சொல்ல, மீரா கிண்டல்களை எல்லாம் மறந்து, கண்கள் விரிய சம்மதம் சொன்னாள். அதை கண்ட ஹரி அவளை திடமாக பார்த்து, “ஆஃபிஸ்லேந்து வந்து, இன்னும் வீட்டுக்கு போனபாடு இல்ல… மரியாதையா வீட்டுக்கு கிளம்பு!” உறுதியாய் சொல்ல, உதட்டை சுழித்தவள், ‘முசுடு எழுத்தாளர்’ என்று முணுமுணுத்தாள்.

அதே சமயம், அஞ்சலி, அரவிந்தனை கண்டித்து கொண்டிருந்தாள். “இருமல் இப்போ தான் குறைஞ்சிருக்கு… நீங்க முதல்ல, நான் சொன்ன வேலைய முடிங்க!”

அவர்கள் பேச்சை கவனித்த மகேஷ், “அப்படி என்ன வேலை டா செஞ்சிட்டிருக்க!” குறும்பாய் வினவ,

இதுதான் சாக்கு என்று அரவிந்தன் விடைத்தாள் திருத்துவதை பற்றி புலம்பினான். “டேய்! நான் படிக்குற காலத்துல கூட இவ்வளவு படிச்சது இல்ல டா.” என்று தன்னவளை பார்த்தவன், “அதுலையும், இவ ரொம்ப ஸ்டிரிக்ட் டீச்சர்… பேஜ் நம்பர் போடாததுக்கு எல்லாம் மார்க் குறைக்குறா டா!” என்று புகார் சொன்னவனுக்கு, அருகில் இருக்கும் டீச்சரிடமிருந்து உதையும் சேர்த்து கிடைத்தது.

உதை சத்தம் கேட்ட மகேஷ், மைதிலியிடம் திரும்பி, “நீ அஞ்சலியோடையும் சேராத மா!” அப்பாவியாக சொல்ல, அந்த இடமே சிரிப்பொலியில் நிரம்பியது. இன்னும் சில நிமிடங்கள் அரட்டை அடித்த நண்பர்கள், மறுநாள் மாலை ஒன்றுகூடி ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று திட்டமிட்டனர்.

மீரா பெயரில் வீட்டுக்கடன் வாங்குவது, மிகவும் சுலபமாக இருந்தது. அவர்கள் விண்ணப்பித்த மொத்த தொகையும் கிடைத்ததால், ஹரி வேறு எவரிடமும் கடன் வாங்க வேண்டிருக்கவில்லை. ராணியின் கணவர், விற்பனை சார்ந்த வேலைகளை கவனித்து கொண்டார்.

எல்லாம் தயாரான நிலையில், நல்ல நாள், மற்றும் நேரம் பார்த்து, வீட்டை ஹரி-மீரா பெயரில் மாற்றி அமைக்க, பதிவாளர் அலுவலகம் சென்றனர். மகேஷ், வங்கி ஊழியராக வந்ததால், அரவிந்தனும், கீதாவும் இவர்கள் தரப்பில் சாட்சி கையெழுத்திட வந்தனர்.

ராணியின் கணவர், தானே கட்டிடம் கட்டும் தொழில் செய்து வந்ததால், பதிவு செய்வதில் அடங்கிய விதிமுறைகள் அவருக்கு பரிட்சயமானதாக இருந்தது. மேலும், அங்க பணிபுரிந்த அதிகாரிகளின் நல்லுணர்வால், வேலையும் விரைவாக முடிந்தது.

ஹரி-மீரா பெயரில் பதிவு செய்த பத்திரத்தை, ராணியின் கணவர், வாழ்த்து சொல்லி நீட்ட, வழக்கம் போல, ஹரி, அதை, மீராவிடம் கொடுக்கும் படி கூறினான். தன்னவன் கையை கெட்டியாக பிடித்துகொண்டவள், இருவரும் சேர்ந்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாள். இருவரும் அவர் செய்த உதவிகளுக்கு மனதார நன்றி கூறி, பத்திரத்தை பெற்றனர்.

‘ஹரி-மீரா’ சேர்த்து எழுதியிருந்த இடங்களை வருடியவள், “இதே மாதிரி, பிள்ளையார் படம் போட்ட திருமண அட்டையில, நம்ம பேரு வரணும் டா!” ஏக்கத்துடன் சொன்னாள் மீரா.

“வரும் டி நிச்சயமா வரும்!” ஆறுதல் சொன்னவன் மனதிலும், சொல்லிலடங்கா கவலைகள்.

மகேஷ், வங்கியின் சார்பாய் பத்திரத்தை பெற காத்திருக்க, ஹரி, அதை அரவிந்தனிடம் கொடுத்து, “உன்னால தான் டா, நான் மீராவ காதலிக்க சம்மதம் சொன்னேன். எங்களோட ரெண்டு பேரும் இணைஞ்சு இருக்கிற இந்த பத்திரத்த, எங்க சார்புல நீ தான் கொடுக்கணும் அரவிந்தா… நீ கொடுக்குற வேளை, நாங்க கணவன்-மனைவியா அடுத்த கட்டத்த நோக்கி பயணிக்கணும்!” ஏக்கமாய் கேட்டான்.

காதலை ஏற்கவே தயங்கியவன், இன்று, மீராவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஏங்குவதை கண்டு பூரித்தான் அரவிந்தன். பத்திரத்தை கையில் வாங்கிக்கொண்டவன், “கண்டிப்பா நடக்கும்  ஹரி! உங்க இல்லற வாழ்க்கை இந்த வீட்டுலதான் தொடங்கும்!” வாழ்த்தியவன், மகேஷிடம் பத்திரத்தை ஒப்படைத்துவிட்டு, ஹரியை ஆரத்தழுவினான்.

அரவிந்தன் அன்பை எண்ணி மெச்சியவள் கண்கள் பளபளத்தது. அதை கவனித்த அரவிந்தன், மறுகையை நீட்டி, தலையசைத்து, அவளை அருகில் வரும்படி அழைத்து கண்சிமிட்டினான். ஓடி வந்தவளை, மறுபுறம் சேர்த்து அணைத்தவன், இருவர் காதிலும் குறும்பாக கிசுகிசுத்தான். நண்பர்கள் நெருக்கத்தை இரசித்த ரமேஷ், மகிழ்ச்சியான தருணங்கள் படம் பிடிக்க வேண்டும் என்று நினைத்தார். தான் கொண்டு வந்த கேமேராவில், அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்தார்.

அதை கவனித்த கீதா, “நாங்க ரெண்டு பேரும் இல்லாம, எப்படி ஃபோட்டோ எடுப்பீங்க!” பொய்கோபம் கொண்டவள், மகேஷ் கைப்பிடித்து, அவர்கள் அருகில் இழுத்து சென்றாள்.

“போய் நில்லுமா! நிறைய ஃபோட்டோ எடுக்கறேன்.” மகிழ்ச்சியாய் சொன்னவர், நண்பர்கள் செய்யும் ஆரவாரத்தை வளைத்து வளைத்து படம் பிடித்தார். பஞ்ச பாண்டவ நண்பர்கள், ஆனந்தத்தில் மிதக்க, பளிச் பளிச் என்று சிரித்து, போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அந்த இடமே திருவிழா கோலம் பூண்டது.

ஔபாசனத்தின் புனித தீ சுடர் இல்லை!

ஓதுவாரின் வேத பாராயணமும் இல்லை!

ஒருமித்த  சிந்தனை கொண்ட நண்பர்களின் புன்னகை,

ஐமுக விளக்கின் ஜோதியாக வீசி வாழ்த்தியது நன்னிலை!

ஏலக்காய் நறுமணம் சுவாசித்த சுவர்கள்;

எழுதுகோல் சிந்திய மையின் கறைகள்;

ஊர் போற்ற வென்ற கோப்பைகள்;

உண்மை உழைப்பிற்கு கிடைத்த சன்மானங்கள்;

ஈட்டிய பசுமையான நினைவுகள் நிறைந்த,

இல்லம்-இனிய-இல்லம் (Home Sweet Home) சொந்தமானது;

ஆசைகளும் நிறைவேறியது;

அனைத்திற்கும் அடிக்கல்லானது அவர்கள் அன்பின் ஆழம்…