அன்பின் ஆழம் – 29.2
வாசலில், அரவிந்தன்-அஞ்சலியை ஜோடியாய் கண்ட தாய்மனம், மகளை திருமண கோலத்தில் காணும் நாளை எண்ணி ஏங்கியது. அதே நினைப்பில் உள்ளே வந்தவள்,
“என்னங்க! அதான் உங்களுக்கு ஹரிய பிடிச்சிருக்குல்ல… உங்க விருப்பத்த மீரா கிட்ட சொல்ல வேண்டியது தானே!” படபடவென்று கேட்டாள்.
செய்தித்தாளில் இருந்து முகம் திருப்பியவர், “சொல்றேன். கொஞ்சம் டைம் கொடு!” நிதானமாக பதிலளித்தார்.
“இன்னும் எவ்வளவு டைம் எடுத்துக்க போறீங்க? அவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதுல்ல!” உண்மையை எடுத்து சொல்ல, மனைவியின் கவலை நிரம்பிய முகத்தை பார்த்து மென்மையாக சிரித்தார் வரதன்.
“ரெண்டு மாசத்துல சொல்றேன்!” நேரத்தை குறிப்பிட்டார்.
அவர் பிடிக்கொடுத்து பேசிய போதும், அந்த காலநேரம் அதிகம் என்று தர்க்கம் செய்தாள் நிர்மலா. மனைவியை தன் அருகில் அமரும் படி கைகாட்டி, “அவ பிறந்தநாளுக்கு பரிசா, என் சம்மதத்த சொல்லலாம்னு நினைக்கறேன்… அதுக்குள்ள உன் பொண்ணுக்கு ராக்கெட் ஸ்பீடுல வயசாகாதுல்ல!” கிண்டல் செய்ய, அவள் இன்னும் திருப்தி அடையாதவளாய் இருந்தாள்.
மனைவியின் கைகளை வருடியவர், “அதே சமயத்துல தான், அவ பேருல நான் போட்டு வெச்சிருக்கிற ‘போஸ்ட் ஆபிஸ் சேவிங்ஸ்'(Post Office Savings) ஒண்ணு முடியுது. அந்த பணத்த அவங்க ரெண்டு பேர் பேருலையும் சேர்த்து மாற்றி கொடுத்து, எனக்கும் பணம் பெருசு இல்ல… அவ மேல இருக்கிற அக்கறையில தான் இத்தன நாளா அவங்க காதல எதிர்த்தேன்னு சொல்லப்போறேன்.” தானும் இதை பற்றி தீவிரமாக சிந்திக்கிறார் என்று புரியவைத்தார்.
“இவ்வளவு அன்ப வச்சுக்கிட்டு, ஏன் தான் உங்களுக்கு வீண்பிடிவாதமோ!” கழுத்தை நொடித்தவள், காதல் ஜோடிகள், அவர் சம்மதத்தை தவிர வேறெதையும் பெரிதாக பொருட்படுத்த மாட்டார்கள் என்று தெளிவுபடுத்தினாள்.
வரதனுக்கும் அது தெரிந்திருந்த போதும், ஏதோ ஒரு வழியில் தன் அன்பை வெளிப்படுத்த ஆசைப்பட்டவர், அவர் நிலையில் உறுதியாய் இருந்தார்.
“அஞ்சலி மா!”, “அரவிந்த் பா!” அவர்களை கண்ட சிறுவர்கள், கூக்குரல் இட்டுக்கொண்டே வந்து கட்டியணைத்தனர். அவர்களும் பதிலுக்கு குழந்தைகளை அரவணைத்ததோடு நிறுத்தாமல், ஒவ்வொருவரையும் பெயர் வைத்து அழைத்து, நலன்விசாரித்தனர்.
புது இடம், புது அனுபவமாய் இருந்தது ஹரிக்கும் மீராவுக்கும். சுற்றி நடப்பதை எல்லாம் மௌனமாக நின்று வேடிக்கை பார்த்தனர். அஞ்சலி, மீராவை அழைத்து, ஒரு சில குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.
“இந்த ஆன்டி, உன்ன மாதிரியே நிறைய ஸ்வீட்ஸ் சாப்பிடுவாங்க!” ஐந்து வயது சிறுமியிடம் மீராவை பற்றி அஞ்சலி சொல்ல, அச்சிறுமி பதிலுக்கு,
“சூப்பர் ஆன்டி! அப்போ அடுத்த முறை வரப்ப, எனக்கு பிங்க் கலர் பஞ்சு மிட்டாய் வாங்கிட்டு வருவீங்களா!” என்றாள் வெகுளியாக. மீராவும் மென்மையாய் தலையசைத்தாள்.
அந்த பக்கத்தில் அரவிந்தன் சிறுவர் கூட்டத்தின் நடுவில் நின்று, “இந்த அங்கிள் அட்டகாசமா கதை சொல்லுவாரு…!” வாண்டுகளிடமும், தன் நண்பனை பற்றி புகழ்ந்து கொண்டிருந்தான்.
“இங்கையுமா டா!” ஹரி வெட்கம் கலந்து சலித்து கொண்டான்.
கதை சொல்லும் படி அடம்பிடித்த குழந்தைகளுக்கு செவிசாய்த்தான் ஹரி. கால் மணி நேரத்தில் வருவதாய் சொல்லி, அஞ்சலியும், அரவிந்தனும் நகர்ந்தனர்.
சில நிமிடங்களில் காதல் ஜோடிகள், ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தனர். தன்னவனின் விரல்களை கோர்த்து, “நம்ம அரவிந்தன் பார்க்கவே ரொம்ப புதுசா இருக்கு டா ஹரி!” தூரத்தில், தெரிந்த நண்பன் உருவம் பார்த்தபடி பேசினாள் மீரா.
வேலையில் கம்பீரம், நண்பர்களிடம் குறும்பு, மனைவி மீது கொள்ளை ஆசை என்று பார்த்து பழகின கண்களுக்கு, இன்று அரவிந்தனின் வேறொரு முகமும் பளிச்சிட்டது. குழந்தைகள், அவனை ‘அப்பா!” என்று அன்பாய் அழைப்பதும், அவன் அவர்களுக்கு, கைத்தேர்ந்த தகப்பனை போல பணிவிடை செய்வதும், பார்க்க மெய்சிலிர்த்தது.
மீரா, மேலும் பேசினாள். “ஹரி! பேசாம, நம்மளும் ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கலாமா டா!” கண்டதும் காதல் என்பது போல் வினவினாள்.
“முதல்ல நமக்கு கல்யாணம் நடக்கட்டும்!” கிண்டல் செய்து அவள் மூக்கின் நுனியை வருடினான். சுருங்கிய அவள் முகத்தை ஒரு கணம் இரசித்தவன்,
“தத்தெடுத்துக்கலாம் டி! என் ராஜகுமாரி கேட்டு நான் இல்லன்னு சொல்வேனா!” தாழ்ந்த குரலில் அவன் பேச,
அவனை பிரமிப்பாய் பார்த்தவள், “ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காம, இப்படி உடனே சரி சொல்ற!” ஆர்வமாய் பார்த்தாள்.
“அரவிந்தன் வாழ்க்கையில் இல்லாத ஒரு விஷயம், நமக்கும் வேண்டாம்னு நெனச்சு தானே அப்படி சொல்ற!” அலட்டல் இல்லாமல் ஹரி சொல்ல, கேட்டவள் கண்கள் பளபளத்தது.
வாய்திறந்து சொல்லும் முன், தன் மனதை படிக்கும் இவனை என்ன சொல்ல, என்று நினைத்தவள், பேச வார்த்தையின்றி, அவன் தோளில் சாய்ந்தாள்.
உணர்ச்சிவசப்படும் தன்னவளை வளைத்து அணைத்தவன், “அவன் எனக்கும் நண்பன் டி; அவன் மேல அக்கறை காட்டுற “என்” ராஜகுமாரி, “எங்களுடைய” உயிர்தோழி ஆச்சே!” என்று அவளுக்கு மேலும் மெய்சிலிர்க்க வைத்தான்.
அடுத்த சில நிமிடங்களில், காரில் ஏறிய, மீரா, பின்சீட்டில் பக்கத்தில் இருக்கும் அஞ்ஜலியிடம் அவர்கள் சேவையை பற்றி பேசி, மெல்ல பேச்சு கொடுத்தாள். அஞ்சலியும், நன்றி தெரிவித்து, தங்கள் திட்டத்தை விளக்கினாள்.
“பத்தாவது மாசம், எங்க திருமண நாள் பூர்த்தியாகுற அன்னைக்கு, காப்பகத்துலேந்து ஒரு கை குழந்தைய தத்தெடுத்துக்கலாம்னு இருக்கோம்.”
அதை கேட்ட மீரா, “நாங்களும் எதிர்காலத்துல உங்கள பின்பற்றலாம்னு இருக்கோம்!” பேச்சோடு பேச்சாக கூற, அஞ்சலி அதற்கு பதிலேதும் சொல்லாமல், அவள் தோளில் தட்டி, மென்மையாக சிரித்து மழுப்பினாள்.
கீதா வீட்டிற்கு அருகில் வந்ததும், மீரா, ஹரியை அழைத்துக்கொண்டு, எதிரில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்றாள். வீடு வாங்கும் தங்கள் எண்ணம் நல்லபடியாக கைக்கூட வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனு கொடுக்க சென்றாள்.
“அவ லூசு மாதிரி ஏதேதோ சொல்லறா அஞ்சலி!” தனிமையில் சிக்கிய மனைவியிடம், மீரா காரில் சொன்னதை நினைவூட்டி பதறினான் அரவிந்தன்.
அவளோ மெல்லிய புன்னகையுடன், “தெரியும் பா! உங்க ஃப்ரெண்ட் தானே… உங்கள மாதிரியே உணர்ச்சிவசப்பட்டு பேசுறா…” குறும்பாய் சொல்லி கண்சிமிட்டியவள், தானே சமயம் பார்த்து அவளிடம் பேசுவதாய் சொல்லி நகர்ந்தாள்.
தன்னையே ஜாடை பேச்சில் கிண்டல் செய்துவிட்டு நகரும் மனைவியின் கைகளை இழுத்து தடுத்தவன், “நிஜமாவே, உன் மேல எனக்கு அவ்வளவு காதல் அஞ்சலி மா… நம்பு டி!” காதில் கிசுகிசுத்து, பொதுயிடம் என்று கூட பாராமல் அவள் கன்னத்தில் இதழ்கள் பதித்தான்.
அவனிடமிருந்து எத்தனித்தவள், “உம் தெரியும்! தெரியும்!” நமுட்டு சிரிப்புடன் அவன் கன்னத்தை கிள்ளி, “வீட்டுக்கு போய், உங்க மிச்ச காதல காட்டுங்க… இப்போ உங்க தோழி கீதா கண்ணுல பட்டா, அப்புறம் விழா முழுக்க நம்மள கிண்டல் செய்துகிட்டே இருப்பா!” என்று சொல்லி கண்சிமிட்டினாள்.
அஞ்சலி சுவாசம் காற்றில் பரவியதும், சஹானா அவள் அருகில் இருப்பதை கண்டுகொண்டாள். வீட்டிற்குள் நுழைந்தவளிடம் அடுத்த நொடி தாவிக்கொண்டாள். அங்கு வந்திருந்த மகேஷ், மைதிலியை நலன் விசாரித்துவிட்டு, சஹானாவுடன் ஐக்கியமானாள் அஞ்சலி.
சில நிமிடங்களில் அங்கு வந்த மீரா, கீதா செய்துவைத்த பதார்த்தங்களை ருசித்து மகிழ்ந்தாள். கீதா, நண்பர்களை மட்டும் விழாவிற்கு அழைத்திருந்ததால் அவர்களும் சகஜமாக அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.
சஹானாவுக்கு பட்டுப்பாவாடை அணிவிக்க வந்த கீதாவின் மாமியார், குழந்தை அஞ்சலியிடமிருந்து வர மறுப்பதை கண்டு வியந்தாள். அவள் அரவிந்தன் மனைவி என்று கண்டுகொண்டவள்,
“கல்யாணமாகி மூணு மாசமாகுதே! ஏதாவது விசேஷம் இருக்கா!” ஜாடையாக வினவ, என்ன சொல்வது என்று புரியாமல், அஞ்சலி மென்மையாய் தலையசைக்க, அங்கு வந்த கீதா,
“அட! ஆமாம் அஞ்சலி! அரவிந்தன் இருந்த அவசரத்துக்கு, இதுவே ரொம்ப லேட்டு!” நண்பன் தோளில் தட்டி கிண்டல் செய்தாள்.
அஞ்சலி நிலையை தெரிந்தவர்கள் ஒரு பக்கம் பதற, தெரியாதவர்கள், கீதா கிண்டல் செய்ததை இரசித்து, அஞ்சலியை ஆவலாய் பார்த்தனர்.
அருகில் இருந்த தோழியின் தலையில் செல்லாமாக தட்டிய அரவிந்தன், “லேட்டு தான்… என்ன செய்ய… உன் பொண்ண கொஞ்சவே என் பொண்டாட்டிக்கு நேரம் சரியா இருக்கு….” கிண்டலாய் பேசி, நிலமையை சமாளிக்க முயன்றான்.
குழந்தையை மார்போடு அணைத்த அஞ்சலி, “உங்க எல்லாருக்கும் ஒரு உண்மைய சொல்றேன். எனக்கு உடல்ரீதியா கொஞ்சம் பிரச்சனை. அதனால குழந்தை பிறக்க வாய்ப்பே இல்ல. அது தெரிஞ்சும், அரவிந்தன் என்ன கல்யாணம் செஞ்சிகிட்டாரு!” சொல்லி, தன்னவனின் கையிடுக்கில் தன் கையை பின்னி, கம்பீரமாய் உண்மையை சொன்னாள்.
“அஞ்சலி! இப்போ எதுக்கு இதெல்லாம்!” அரவிந்தன் பதற,
அவன் பக்கம் திரும்பியவள், “அரவிந்த் பா! இவங்க எல்லாம் உங்க நெருங்கின நண்பர்கள். நண்பர்கள் கிட்ட ஒளிவுமறைவு இருக்க கூடாது!” இன்னும் திடமாக சொல்ல, கீதாவின் மாமியார் உட்பட அனைவரும் அவளை வியப்பாய் பார்த்தனர்.
அரவிந்தனும், அவள் நற்குணத்தை மெச்சி, சேர்த்து அணைத்தான். பேச வார்த்தையின்றி நின்ற கீதா, அவர்கள் அன்யோன்னியத்தில் மெய்மறந்தாள்.
“யூ போத் ஆர் ட்ருலி மேட் ஃபோர் ஈச் அதர்!” பாராட்டி, அவர்கள் தோளில் தட்டிக்கொடுத்தவள், விழாவிற்கு தேவையானதை தயார் செய்ய நகர்ந்தாள்.
நண்பர்கள், அவளிடம் இயல்பாக பேச பாடுபட்டனர். அஞ்சலி அதை கவனிக்காதது போல், மென்சிரிப்புடன் பழகினாள்.
“கேக் கட்டிங்க்கு எல்லாம் ரெடி!” ரமேஷ் குரல் கொடுக்க, அஞ்சலி, சஹானாவை கீதாவிடம் கொடுக்க முன் வந்தாள். சஹானா வழக்கம் போல செல்ல மறுக்க,
“இருக்கட்டும் அஞ்சலி! வாங்க… நீயும் அரவிந்தனும் குழந்தையோட கேக் வெட்டுங்க!” எதார்த்தமாய் சொல்வதாய் நினைத்து, பேசினாள்.
குழந்தையை உயர்த்தி தூக்கியவள், “சஹானா குட்டி! அஞ்சு நிமிஷம் அம்மா, அப்பாவோட போய் கேக் கட் பண்ணிட்டு வா! அப்புறம் அத்த, உன்ன தூக்கி வெச்சுகிட்டே இருப்பேன்! சரியா!” சொல்லி வலுக்கட்டாயமாக, குழந்தையை கீதாவிடம் விட்டாள்.
பேசியது குழந்தையோடு என்ற போதும், அறிவுரை என்னமோ பெரியவர்களுக்கு தான். அவள் எண்ணத்தை புரிந்துகொண்ட கீதா, மறுபேச்சு இல்லாமல், குழந்தையை வாங்கிக்கொண்டாள்.
அனைவரும் கோர்வையாக பிறந்த நாள் வாழ்த்து பாட, அதில் குதூகலமான சஹானா குட்டியும் புதிதாய் முளைத்த இரு பற்கள் வெளியே தெரிய இளித்தாள்.
அஞ்சலி பேச்சு புரிந்தவள் போல, ஐந்து நிமிடத்தில், மீண்டும் அவளிடம் தாவிக்கொண்டாள். குழந்தையை மகிழ்ச்சியாக திரும்ப பெற்றவள்,
“ஒரு நிமிஷம் நில்லுங்க!” குரல் உயர்த்தி அழைக்கவும் அனைவரும் அவளை ஆவலாய் பார்த்தனர்.
“உங்ககிட்ட எல்லாம் உண்மைய சொன்னது, நீங்க என்ன பார்த்து பரிதாப படவோ, இல்ல உங்க நண்பன பாராட்டவோ இல்ல!” தீர்கமாய் சொல்ல, அனைவரும் கண்கொட்டாமல் பார்த்தனர்.
டீச்சர் அல்லவா…அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவர அவளுக்கு சொல்லி தர வேண்டுமா….
“அவங்க அவங்களுக்கு அவங்கவங்க வாழ்க்கை இருக்கு. யாரும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கவோ, தியாகம் செய்யவோ, வாழ்க்கைய மாத்தி அமைச்சிக்கவோ அவசியம் இல்ல.” பொதுவாக சொல்ல, அது மீராவிற்கும் உறைத்தது.
‘செம்ம அஞ்சலி!’ மனைவியின் தைரியத்தை எண்ணி நெகிழ்ந்தான் அரவிந்தன்.
“வா சஹானா குட்டி! அத்த உனக்கு மம்மு ஊட்டிவிடறேன்!” குழந்தையிடம் பேசியவள், கீதாவிடம் உணவு கேட்டாள்.
இன்னும் எல்லோரும் சிலை போல நிற்க, ஹரி அஞ்சலி அருகில் வந்தான்.
“நீ சொன்னதுல ஒரு விஷயம் மட்டும் இடிக்குது அஞ்சலி…. அத உன்கிட்ட எப்படி கேட்குறதுன்னு தயங்கறாங்க….” ஹரி குறும்பாய் அவள் காதில் கிசுகிசுக்க, அஞ்சலியுடன் சேர்ந்து அனைவரும் அவனை ஆழமாய் பார்த்தனர்.
“என்ன ஹரி?” குழம்பினாள் அஞ்சலி.
“அதுதுதுதுது…….” என்று நமுட்டு சிரிப்புடன் இழுத்தவன், நண்பனை சேர்த்து அணைத்து, “இவர் எந்த பொண்ணையும் சிஸ்டர்னு கூப்பிட மாட்டாராம்… அப்போ நீங்க சஹானாவுக்கு எப்படி அத்தை-மாமா முறையாவீங்க…” ஹரி விளக்கம் சொல்ல, அந்த இடமே சிரிப்பொலியில் நிறைந்தது.
ரமேஷும் தன் பங்குக்கு, அன்று அரவிந்தன் அவரை ஓட்டியதை பற்றி அஞ்சலியிடம் விளக்க, அனைவரின் உள்ளமும் லேசானது. அசடுவழியும் தன்னவனை பார்வையால் விழுங்கியபடி அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டு இரசித்தாள் அஞ்சலி.
விருந்து உணவை அருந்திவிட்டு, சஹானா உறங்கியவுடன், நண்பர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர்.
பத்து நிமிடங்களுக்கும் மேல் நிசப்தமாக இருந்தது அந்த பயணம்.
“எனக்கும் சேர்த்து தானே, கீதா வீட்டுல பதில் சொன்ன அஞ்சலி!” மென்மையாக பேசத் தொடங்கினாள் மீரா.
அதை கேட்டு சிரித்தவள், அருகில் இருப்பவளை பார்க்க ஏதுவாய் திரும்பி அமர்ந்தாள். “புரியுது இல்ல… எங்கள பற்றி யோசிக்காம, நீங்க உங்க வாழ்க்கைய பாருங்க!” திடமாய் சொல்ல,
“அதுக்கில்ல அஞ்சலி….” விளக்க முயன்றாள் மீரா.
அவள் கையை இறுக பிடித்து, “எந்த காரணமும் எனக்கு வேண்டாம்… சீக்கிரம் கல்யாணம் செஞ்சுகிட்டு, வசவசன்னு குழந்தை பெத்துக்கோங்க…. அது எப்படி அந்த குழந்தைங்க எல்லாம் அரவிந்தன மாமான்னு கூப்பிடாம போகுதுன்னு நானும் பாக்குறேன்!” குறும்பாய் சொல்லி, ஓரக்கண்ணால், காரை செலுத்திக்கொண்டிருக்கும் தன்னவனை கண்ணாடி வழியே பார்த்து செல்லமாக முறைத்தாள்.
“அஞ்சலி… ” மீண்டும் தொடங்கியவளை, தடுத்து,
“இங்க பாரு மீரா…ஏதாவது ஏடாகூடாமா முடிவு எடுத்தன்னு எனக்கு மட்டும் தெரிஞ்சுதுன்னா, அப்புறம் உன் ஆருயிர் சிநேகிதன எங்கையாவது கண்காணாத இடத்துக்கு நாடு கடத்திடுவேன்… அப்புறம் உங்க நட்ப பிரிக்க வந்த வில்லியா என்ன பார்க்காத..சொல்லிட்டேன்!” முகத்தை விரப்பாக வைத்து சொல்ல, கேட்ட அரவிந்தனுக்கு ஒரே சிரிப்பு.
மீரா முடிவு எதுவோ, தனதும் அதுவே என்று நினைத்த ஹரி, இவர்கள் பேச்சில் குறுக்கிடவே இல்லை.
கணவன்-மனைவி இருவரும் அவளை செல்லமாக கண்டிக்க, அதற்கு உதட்டை சுழித்தவள், “என் நண்பன என்கிட்டேந்து பிரிக்கறது இருக்கட்டும்… உன்னால என்ன விட்டு போக முடியுமான்னு சொல்லு அஞ்சலி…” கேட்டு அவள் வாயை அடைத்தாள்.
பெண்கள் இருவரும் அன்பை பரிமாற, அரவிந்தன் காருடன் சேர்த்து, அவர்களையும் ஓட்டினான்.
‘மீராவ பேசி ஜெயிக்க முடியுமா!’ தன்னவளை பற்றி மனதில் நினைத்தவன், அவர்கள் செய்யும் குறும்பை மௌனமாக இரசித்தான்.
கொழுத்த புதன்கிழமை மதியம், மகேஷ் வேலையில் மும்முறமாக இருந்தான். இன்டெர்காமில் அவனை தொடர்பு கொண்ட மேலதிகாரி, அவர் அறைக்கு வரும்படி அழைத்தார்.
உள்ளே நுழைந்தவன் அவருக்கு வணக்கம் சொல்ல, அவரும், எதிரில் இருக்கும் இருக்கையில் அமரும்படி கூறினார். மேஜையில் இருந்த ஃபைலை அவன் பக்கம் தள்ளி,
“உங்க நண்பருக்கு, நீங்க கேட்ட லோன் அமௌண்ட் முழுசா சான்க்க்ஷன் ஆகல மகேஷ்!” என்றார்.
கேட்டவன் முகம் ஒரு நொடியில் வாடியது. தானே ஆவணங்களை பரிசோதித்ததில், அவன் கேட்ட தொகைக்கு வீட்டுக்கடன் கிடைப்பது கடினம் என்று அறிந்திருந்தான் மகேஷ். நண்பனிடம் எதிர்மறையாய் பேச தயங்கியவன், மேலதிகாரியிடம் கலந்தாலோசித்தால் வழி பிறக்கும் என்று பெரும் நம்பிக்கை கொண்டிருந்தான்.
“உங்களுக்கே காரணம் தெரியும்….” அவர் சொல்ல முன் வர, “இட்ஸ் ஒகே! முயற்சி செஞ்சதுக்கு நன்றி!” சொல்லி அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் சொல்லும் பதிலில், ஹரி மட்டும் அல்லாது, தங்கள் குடும்பத்தினரும் வருந்துவார்கள் என்று எண்ணினான். அன்னியர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடவே யோசித்தவனுக்கு, அதை விற்க துளியும் விருப்பமில்லை. வேறுவழி என்ன என்று தீவிரமாக யோசித்தவன், அரவிந்தனையும், தன் மாமாவையும் அழைத்து பேசி, ஒரு புதிய திட்டம் வடித்தான்.
நிறைவான நினைவுகளை தந்த வீடு,
நித்தமும் நேசித்த வீடு,
நிலைத்து நிற்க,
நண்பன் சொல்லும் நிதர்சனங்களை புரிந்துகொண்டு,
நிபந்தனைகளுக்கு செவி சாய்ப்பானா!
பதில் சொல்லும், ஹரி, வீட்டின் மீது வைத்த அன்பின் ஆழம்…