அன்பின் ஆழம் – 29.1

வாரம் முழுவதும் காத்திருந்த அந்த வெள்ளிக்கிழமை மாலை பொழுதும் வந்தது. நிபந்தனைகள் என்ற பெயரில், ஹரி சொன்ன அனைத்தும், அவர்கள் அன்றாட வழக்கமாகவே மாறிவிட்டது. அடுத்த நான்கு மணி நேரம் தன்னவனுடன் செலவிடப்போகும் மிதப்பில், வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு திடீர் யோசனை.

நேராக, சமையலறைக்குள் புகுந்தாள். அரை மணி நேரத்தில், வெங்காய பகோடா செய்து வைத்து, தன்னவன் வருகைக்காக காத்திருந்தாள் மீரா. ஐந்தரை மணியளவில், வாயிற்கதவு மணி ஒலிக்க, மின்னல் வேகத்தில் போய் கதவை திறந்தாள்.

காற்றில் கலந்த எண்ணெய் வாசனை சுவாசித்தவன், “என்ன அவசரம் உனக்கு… அதுக்குள்ள சமைச்சிட்டியா?” செல்லமாக கண்டித்தான்.

கையில் வைத்திருந்த பகோடாவில் ஒன்றை அவன் வாயிலிட்டு, “என் நண்பன் கொடுத்தனுப்பி இருக்கிற ஸ்வீட்டோட சாப்பிட பகோடா மட்டும் செஞ்சேன். டின்னர் நம்ம வழக்கம்போல சேர்ந்து சமைக்கலாம்!” என்று கண்சிமிட்டியவள், அவன் கையில் இருந்த லன்ச் பேகை பிடுங்கினாள்.

“ஸ்வீட்டா?” அவன் முழிக்க, அதற்குள் லன்ச் பேகை அலசியவள், அதில் ஒன்றும் இல்லை என்று உணர்ந்தாள்.

“இன்னையோட அவனுக்கு கல்யாணமாகி, நூறு நாளாச்சே! அரவிந்த் மறந்துட்டானா… இல்லையே… மறக்க வாய்ப்பில்லையே…” கேள்வி-பதில் என்று அவளே சொல்லி முணுமுணுக்க,

அதை கேட்டவன், உதட்டை மடித்து, அவள் தலையில் செல்லமாக குட்டினான்.

“அவனுக்கு தான் வேற வேலை இல்லன்னா…. நீ அதுக்கும் மேல இருக்க… வழிவிடு டி!” சொல்லி, தன் அறைக்குள் புகுந்தான்.

உடைமாற்றி கொண்டு வந்தவனுக்கு, பருக ஏலக்காய் டீயும், ஒரு தட்டில் மொறு மொறு பகோடாவையும் கொடுத்தவள், நண்பனை கைப்பேசியில் அழைத்தாள்.

“சொல்லு டி! என்ன அதிசயம்… வெள்ளிக்கிழமை அதுவுமா உனக்கு என் ஞாபகம்?” அவளை வம்பிழுத்தான், அரவிந்தன்.

“இன்னையோட உங்களுக்கு கல்யாணமாகி நூறு நாளாச்சு… மறந்துட்டியா… எங்கடா ஸ்வீட்ஸ்!” அதிகாரமாய் செல்லம் கொஞ்ச,

அதை கேட்டு வாய்விட்டு சிரித்தவன், கைப்பேசியில் ஸ்பீக்கர் ஆன் செய்தான். “இன்னொரு வாட்டி நல்லா சத்தமா சொல்லு டி!” தோழியிடம் கேட்டவன், அருகில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் மனைவியை குறும்பாய் பார்த்தான்.

மீரா மறுபடியும் சொல்ல, அதை கேட்ட அஞ்சலி, சாலையிலிருந்து கவனம் சிதறாமல், “லேகியம் தான், எங்களோட இந்த ஸ்பெஷல் டே கொண்டாட செஞ்ச இனிப்பு! உனக்கும் கொடுத்து அனுப்பவா!” கிண்டலாக கேட்டாள்.

அவள் குரலை கேட்ட மீரா, “அட! அஞ்சலி! யாருக்கு உடம்பு சரியில்ல?” அஞ்சலியின் ஜாடை பேச்சை உடனே புரிந்துகொண்டு பதறினாள்.

“எல்லாம் உன் உயிர்தோழனுக்கு தான் மீரா!” ஒரு நொடி, அரவிந்தனை பார்த்து முறைத்தவள், “அவருக்கு சரியான வறட்டு இருமல்…தினமும் ஏதாவது காரணம் சொல்லி, திருமண நாள் கொண்டாட வேண்டியது… அளவு தெரியாம ஸ்வீட் சாப்பிட வேண்டியது…” போட்டுக்கொடுத்தாள். கடிந்து கொள்ளும் போதும், காதலாய் பேசும் மனைவியை கண்கொட்டாமல் பார்த்தான் அரவிந்தன்.

“சரியா சொன்ன அஞ்சலி! இங்க ஒருத்தி ஸ்வீட்டோட சாப்பிட பகோடா வேற செஞ்சிருக்கா!” ஹரி, அவன் பங்குக்கு சொல்ல, அஞ்சலி, “நல்ல நண்பர்கள் தான்!” என்று சலித்து கொண்டாள்.

 இன்னும் சில நிமிடங்கள், இருவரும், அரவிந்தனையும், மீராவையும் மாறி மாறி கேலி செய்தனர்.

“டின்னர் எங்களோட சாப்பிட வாங்களேன்!” மீரா அழைக்க, அஞ்சலி இன்னொரு நாள் வருவதாக சொல்லி, அன்பாய் மறுத்தாள்.

உடனே ஹரி, “பயப்படாத அஞ்சலி! இன்னைக்கு சமையல் என் ராஜ்ஜியம்; தைரியமா சாப்பிட வாங்க!” ஹரி தன்னவளை பார்த்து கண்சிமிட்டி, அவர்களை அன்புடன் அழைக்க,

“அது…அது… நாங்க இப்போ குழந்தைகள் காப்பகம் போறோம்… எங்களோட இந்த ஸ்பெஷல் டே கொண்டாட!” உண்மை காரணம் சொன்னாள் அஞ்சலி.

ஹரி அவர்களை மேலும் வற்புறுத்தாமல், சம்மதம் சொல்ல, அவர்கள் எண்ணத்தை கேட்டு நெகிழ்ந்த மீரா, “நாங்களும் உங்களோட அங்க வரலாமா அஞ்சலி?” ஆர்வமாய் கேட்டாள்.

அங்கு செல்ல, முன்னரே தகவல் கொடுக்க வேண்டும் என்று சொல்லி, வேறொரு நாள் அவர்களை அழைத்து செல்வதாக உறுதி அளித்து அழைப்பை துண்டித்தாள்.

டீ டம்ளரை, எடுத்து சென்றவன், “கேசரி வேணுமா; ரவா லட்டு வேணுமா!” சமையலறையிலிருந்து குரல் கொடுத்தான்.

அடுத்த நொடியே, அவனருகே ஒடியவள், “இவ்வளவு நேரம் கிண்டல் பண்ண….” சுருங்கிய முகத்துடன் கேட்டாள் மீரா.

அவள் முகத்தை தன் உள்ளங்கையில் குவித்து, “என் ராஜகுமாரி கேட்டு, இல்லன்னு சொல்ல முடியுமா!” அழுத்திச் சொல்லி, இடம் வலமாக முகமேந்திய கையை ஆட்டினான்.

“ஐலவ்யூ டா!” தன்னவனை கண்கொட்டாமல் பார்த்து சொன்னாள் மீரா.

அதில் கொஞ்சம் தடுமாறியவன், “ம்ம்..சொல்லு, கேசரியா? ரவா லட்டா?” கண்டுகொள்ளாததை போல் கேட்டான்.

“முசுடு எழுத்தாளர்! கொஞ்சமாவது ரொமான்ஸ் பண்றையா!” சிடுசிடுத்தவள், “கேசரி… திராட்சை போடாத!” தேவையானதை சொல்லி, விரப்பாக ஹாலை நோக்கி நடந்தாள்.

அவள் சிணுங்கல்களை இரசித்த இதயம், விலகிச்செல்பவளை எட்டிப்பிடிக்க எத்தனித்தது; புத்தியோ கட்டிப்போட்டது.

புதிதாய் ஒரு வாரம் தொடங்கியது. மீரா வந்ததும், அவளையே சுற்றி வரும் ராணியின் பிள்ளைகளும் அன்று இல்லை. அதனால், விரைவாக இரவு உணவு சமைத்தவள், லேப்டாப்பில், மீதமுள்ள அலுவலக வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள். பழையபடி, வங்கிக்கு திரும்ப, இரண்டு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ளதை நினைத்து புன்னகைத்தாள். கோடை விடுமுறைக்கு காத்திருக்கும் சிறுமியை போல, லேப்டாப்பில் கேலெண்டரை திறந்தவள், வெண்டார் கம்பெனியில், பணி முடிய, மீதமிருந்த நாட்களை, விரல் விட்டு எண்ணிக்கொண்டிருந்தாள்.

அசதியாய் வீட்டிற்கு திரும்பியவன், “மகேஷ், உன்கிட்ட ஏதாவது சொன்னானா மீரா?” திடமாய் கேட்க, லேப்டாப்பில் இருந்து தலை நிமிர்த்தியவள், இல்லை என்றாள்.

“ராணி அக்காவ பார்த்தையா?” அடுத்த கேள்வி அடுக்க, அவர்கள் வீட்டில் இல்லை என்று தகவல் சொன்னவள், லேப்டாப்பை மூடிவிட்டு, அவனுக்கு டீ தயாரிக்க நகர்ந்தாள். அவளை பின்தொடர்ந்தவன்,

“உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும். வீட்டுக்கு வர லேட் ஆகும்னு, அம்மாவுக்கு போன் பண்ணிடு!” சொன்னவன், உடைமாற்றி கொண்டு வருகிறேன் என்று நடந்தான்.

அவனுடன் செலவிடும் ஒவ்வொரு மணித்துளியும், அவளுக்கு வெகுமதி தான். ஆனால், இன்று அவன் முகத்தில் துளிகூட உற்சாகம் இல்லை. பேச்சிலும், தெளிவு இல்லை. சிந்தையில் கலந்தவள், ஹாலில் வந்து அமர்ந்தவனிடம் டீயை கொடுத்து,

“என்னடா விஷயம்?” அக்கறையாய் வினவினாள்.

“நம்ம நெனச்சா மாதிரி தான் எதுவும் நடக்கலேன்னாலும், ஏதோ நல்லாபோயிட்டு இருக்குன்னு பார்த்தா….” நிறுத்தி கொஞ்சம் டீயை பருக,

அந்த ஒரு நொடி காத்திருந்தவளின் மனதில் ஆயிரம் எண்ணோட்டங்கள்.

‘அலுவலகத்தில் ஏதாவது பிரச்சனையா, புத்தகம் பதிப்பிப்பதில் ஏதாவது நெருக்கடியா, அம்மா உடல் நலத்தில் ஏதாவது குறைவா, என்று காரணங்கள் தேடி மின்னல் வேகத்தில், மனம் அலைப்பாய, அவனே மேலும் பேசினான்.

“ராணி அக்காவும், அவங்க வீட்டுக்காரரும், சனிக்கிழமை காலையில வந்திருந்தாங்க. மாமாவுக்கு வியாபரத்துல அதிக நஷ்டமாம்… பண நெருக்கடிய சமாளிக்க, இந்த வீட விற்க போறாங்களாம்… அதனால…அதனால… எந்த நேரமும், வீட்ட காலி செய்ய தயாரா இருக்க சொன்னாங்க!” விளக்கியவனின் முகம் வாட,

வீண்பயம் கொண்டவள், “இவ்வளவு தானே!” பெருமூச்சுவிட்டு, “வேற வீடு பார்த்துக்கலாம் டா… இதுக்காகவா இவ்வளவு கவலையா இருக்க!” என்றாள்.

“அவ்வளவு சுலபமா, என்னால அப்படி எடுத்துக்க முடியல டி! எத்தனை பசுமையான நினைவுகள், எனக்கு இந்த வீடு தந்திருக்கு…” சொன்னவன் கண்கள், வீட்டை ஒரு சுற்று வலம் வந்தது.

அவன் குடி வந்த போது, வெறுமையாக தோன்றிய வீடு, இன்று அவன் வளர்ச்சியின் முத்திரைகளால் நிரம்பி வழிந்தது. சுவரெங்கும் , அவன் திறமையை பறைசாற்றிய  சான்றிதழ்கள், ஷோகேஸ் முழுவதையும் நிரப்பிய கோப்பைகள், காகித வாசம் குறையாத, அவன் புத்தகத்தின் பிரதிகள் என்று, திரும்பும் பக்கமெல்லாம் தன் எழுத்து பயணத்தை நினைவூட்டும் பொருட்கள்.

கண்மூடி சிந்தித்தவனுக்கு, தன்னவள், கீச்சுக்குரலில் ‘எழுத்தாளரே” என்று அழைக்கும் கானம்… சுவாசத்தில் கலந்த ஏலக்காய் டீயின் நறுமணம்… செல்லச் சண்டைகளின் எதிரொலி, தோள் சாய்ந்தவளின் ஸ்பரிசம், புத்தக குழந்தையை சீராட்டும் அவள் காதல் என்று கணக்கில் அடங்கா பசுமையான நினைவுகள்.

அவள் மனமும் அதே உணர்வுகளில் மிதக்க, “எத்தனை எத்தனை நினைவுகள் இல்ல ஹரி!” என்றாள்.

“அதையே தான் நானும் சொல்றேன்; அதனால தான் டி, என்னால இந்த வீட்ட அவ்வளவு சுலபமா விட முடியல….” சொன்னவன், அவள் கைகளை வருடி, “நான் இந்த வீட்ட வாங்கலாம்ன்னு நினைக்கறேன் மீரா! என்றான்.

 “ஹரி! என்ன சொல்ற! இது எவ்வளவு பெரிய பொறுப்பு தெரியுமா டா!” கண்கள் அகல கேட்டாள்.

“உம்” என்று மேலும் கீழும் தலையசைத்தவன், “தெரியும் டி! அதான், நான் ஒரு திட்டம் யோசிச்சு வெச்சிருக்கேன்! இது சாத்தியமா இல்லையான்னு, நீதான் சொல்லணும்… அத பற்றி பேசத்தான், உன்ன வெயிட் பண்ண சொன்னேன்!” என்றான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில், லேப்டாப்பை எடுத்து வந்தவன், இரண்டு நாட்களாக போட்ட, வரவு-செலவு பட்டியலை, அவளிடம் காண்பித்தான்.

“இன்றைய தேதில, இந்த வீட்டின் மதிப்பீடு…” என்று தொடங்கியவன், அதில் அடங்கிய செலவுகளை குறிப்பிட்டு, “புத்தக விற்பனை, சம்பள உயர்வுன்னு சிறுக சிறுக சேர்த்து, நம்ம ஜாயிண்ட் அக்கௌண்ட்ல இருக்கிற சேமிப்பு, இந்த வீட்டின் வாடகை பணத்த மிச்சம் செஞ்சா வர தொகை… இதுல மாசாமாசம் நம்ம ‘ஈ.எம்.ஐ (EMI) கட்டிட முடியும். அதனால, வீட்டின் மொத்த மதிப்புல, எண்பது சதவீதம் வரை வீட்டுக்கடன் எடுக்கலாம்னு நினைக்கறேன்…’டவுன் பேமெண்ட்‘(Down Payment) கொடுக்க….” கேட்க தயங்கியவன், “நீ முதலீட்டா கொடுத்த பணத்த… பணத்த… உபயோகிக்கலாமா மீரா?” கேட்டு அவளை ஆர்வமாய் பார்த்தான்.

அவள் முகத்தில் உற்சாகம் இல்லை. வருத்தம் வழிந்தோடியது.

“வார்த்தைக்கு வார்த்தை, ‘நம்ம… நம்மன்னு ‘சொல்லிட்டு, கடைசியில, உன் பணம்… என் பணம்னு நீ பிரிச்சு பேசுறதுதான் வலிக்குது டா.” தன்னை உரிமையோடு கேட்காமல், அன்னியராய் பார்க்கிறான் என்று சுட்டிக்காட்டினாள்.

“கோவப்படாம கேளு மீரா!” தொடங்கியவன், நிதர்சனத்தை எடுத்துரைத்தான்.

“இன்னும் உங்க அப்பா, நம்ம காதலுக்கு சம்மதம் சொல்லல. அவருக்கு என்ன பிடிக்காம போனதுக்கு, இந்த பணமும் ஒரு காரணம். மறுபடியும், இதால பிரச்சனை வந்து, நம்ம சேரவே முடியாம போயிடுமோன்ற பயத்துல தான், கேட்குறேன் டி!” என்று அவள் கன்னத்தை வருடினான்.

அவன் கையை வெடுக்கென்று தள்ளியவள், “எந்த காரணமும் சொல்லி, நீ பேசினத நியாயப் படுத்தாத டா!” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.

“சரி விடு! இதெல்லாம் சரி வராது!” மனம்நொந்து அவன் லேப்டாப்பை மூட, வாடிய அவன் முகத்தை பார்த்து, தன் செயலுக்கு வருந்தினாள் மீரா.

“ஐ ஆம் சாரி டா!” வருந்தி அவன் தோளில் சாய்ந்து, கைகளை பின்னியவள், “நீ பேசினத கேட்டதுக்கு அப்புறம் தான், இந்த வீட எவ்வளவு நேசிக்குறேன்னு புரிஞ்சிண்டேன் ஹரி… அடுத்த நிமிஷமே, நான், நம்ம கணவன்-மனவியா இந்த வீட்டுல சேர்ந்து வாழ போறத பற்றி கற்பனை செய்ய தொடங்கிட்டேன் தெரியுமா… அதான், நீ பேசினத கேட்டு எனக்கு வருத்தமா இருந்துது!” மனம் திறந்து பேசினாள்.

அவள் உண்மை உணர்வை புரிந்து கொண்டவன், தன்னவளின் தலையில் சாய்ந்து, “ஆசை இருக்க அளவுக்கு பயமும் இருக்கு டி… அதான் நானும் தயங்கறேன்…” பயத்தை ஒப்புக்கொண்டான்.

தலைநிமிர்ந்து, அவனை பார்த்தவள், “பயப்படாத ஹரி! துணிஞ்சு இறங்கு.” ஊக்கம் சொல்ல, அவன் முகத்திலும் ஒரு மெல்லிய புன்னகை.

அவனின் மனம் மாறுவதற்குள், இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போக வேண்டும் என்று தோன்றியது மீராவிற்கு.

“வாங்க எழுத்தாளரே! நம்ம நண்பன் கிட்ட போய் இந்த நற்செய்தி சொல்லிட்டு, அப்படியே அவன லோன் ஏற்பாடு செய்ய சொல்லலாம்!” யோசனை சொன்னாள்.

“இப்போவே வா!” கேட்டவன், அவள் இழுத்து இழுப்பில், மாடி ஏறினான்.

அங்கு ராணியும் அவள் கணவரும் கூட இருந்தனர். ஹரி எடுத்த முடிவில், அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி.

“தாங்க்ஸ் டா ஹரி! கூட்டு குடும்பமா இருக்கிற இந்த வீட, ஒரு முகம் தெரியாதவருக்கு விற்க வேண்டிய சூழ்நிலை வந்துடுத்தேன்னு கவலையா இருந்தேன்!” ராணி நன்றி தெரிவிக்க,

“ஸாரி மீரா!” இத எப்படி, உன்கிட்ட சொல்றதுன்னு தெரியாம தான், காருல வரப்ப, இந்த பேச்ச எடுக்கல டி!” மகேஷ் மன்னிப்பு கேட்டான்.

காதலர்கள் பெருந்தன்மையுடன் அவர்களின் இக்கட்டான நிலமையை புரிந்து கொண்டனர்.

நண்பர்களிடம் லோன் பற்றிய விவரங்களை மகேஷ் விளக்கினான். ஹரியும் தேவையான ஆவணங்களை ஒரு வாரத்தில் தயார் செய்வதாக சொன்னான். காதலர்கள், நன்றி தெரிவித்து புறப்பட்டனர்.

வண்டியை உயிர்ப்பித்தவள், “எழுத்தாளரே! நம்ம பணம்; நம்ம வீடு; நம்ம வாழ்க்கை; சரி தானே!” அவன் மனதில் இருந்ததை உறுதி செய்து கொண்டாள்.

“சரி சரி… பிரிச்சு பார்க்க மாட்டேன்! கிளம்பு டி!” கன்னத்தில் குழிவிழ சிரித்து ஒப்புக்கொண்டான்.

அவன் மார்பில் தட்டி, “என் ஹரியோட உயர்ந்த உள்ளத்த மிஸ்டர் வரதன் கண்டிப்பா புரிஞ்சுப்பாரு!” சொல்லி, கண்சிமிட்டினாள்.

அன்று சாஹானாவின் முதல் பிறந்தநாள். விழாவிற்கு புறப்பட்டு கொண்டிருந்த மீரா, கைப்பையில் பொருட்களை சரி பார்த்த படி,

“அம்மா! நான் வீட்டுக்கு வர ஒன்பது மணியாகும்!” தகவல் சொல்லி, “அப்பாவிடமும், “போயிட்டுவரேன் பா!” மெல்லிய குரலில் சொன்னாள்.

கடிகாரத்தில் மணி பார்த்த நிர்மலா, மகள் இவ்வளவு சீக்கிரம் கிளம்பும் அவசியம் என்ன என்று வினவ, மீரா, விழாவிற்கு போகும் வழியில், அரவிந்தன்-அஞ்சலியுடன் வெளியில் செல்வதாக தகவல் சொன்னாள். சரி என்று சம்மதம் சொன்ன நிர்மலா, மகளை வழியனுப்பிவிட்டு வந்தாள்.

வாசலில், அரவிந்தன்-அஞ்சலியை ஜோடியாய் கண்ட தாய்மனம், மகளை திருமண கோலத்தில் காணும் நாளை எண்ணி ஏங்கியது. அதே நினைப்பில் உள்ளே வந்தவள்….

தொடர்ந்து படிக்க, Click Here –> அன்பின் ஆழம் 29.2