அன்பின் ஆழம் – 28.2
“என்ன டி சொல்ற?” கேட்டவனால் துளியும் நம்பமுடியவில்லை. அவர் தன்னிடம் பேசுவதே, வெற்றியின் முதல்படி என்று நினைத்தான் ஹரி. ஆறு மணிக்கு அவள் வீட்டிற்கு வருவதாக சொல்ல,
“சரி! வரப்ப, அப்படியே, நம்ம குழந்தைய எடுத்துட்டு வா….” ஒரு கணம் யோசித்தவள், “ஹான்… அப்புறம் குலாப் ஜாமுனும்!” என்றாள்.
கேட்டவன் பெருங்குரலில் சிரித்து, “எவ்வளவு முக்கியமான விஷயம் பற்றி பேசிகிட்டு இருக்கோம்… இதெல்லாம் ரொம்ப முக்கியமா!” நக்கல் செய்தான்.
அதை கேட்டு உதட்டை சுழித்தவள், “எழுத்தாளரே! அது உங்க பிரச்சனை…எனக்கு இதெல்லாம் தான் முக்கியம்!” சொன்னவுடன் அவள் காலையில் சொன்னது நினைவுக்கு வர,
“சரி! நமக்கு என்ன முக்கியமான நாள்?” என்று ஆர்வமாய் கேட்டான்.
அவள் முதலில், சொல்ல மறுக்க, தனக்கு தெரிந்து கொள்ளாமல், தலையே வெடித்திடும் என்று அவன் கெஞ்ச, அதில் மயங்கியவள்,
“இன்னையோட, நான் உங்களுக்கு பிரபோஸ் செஞ்சு ஒரு வருஷமாகுது!” வெட்கம் கலந்து அவள் சொல்ல, அவனோ, தான் அவளை காத்திருக்க சொன்ன காலவகாசம் நெருங்கியும், அவர்கள் காதல் கதைக்கு தீர்வு கிடைக்கவில்லையே என்று வருந்தினான். அதை மானஸீகமாக உணர்ந்தவள் போல,
“ஆனா, இன்னைக்கு இரட்டிப்பு சந்தோஷத்தோட, நம்ம இத கொண்டாட போறோமுன்னு என் உள்மனசு சொல்லுது டா!” நம்பிக்கை வார்த்தை சொல்ல, அவனும் அதையே எதிர்பார்த்தான்.
ஹரி வழக்கமாக அமரும் வலது புறத்தில் இருந்த சோஃபாவில், இன்று வரதன் அமர்ந்திருந்தார். அருகில் இருந்த நீட்ட சோஃபாவில், ஹரி அமர்ந்தான்.
(இடமாற்றம், மனமாற்றம் தரும் என்ற நம்புவோம்.)
“சொல்லுங்க அங்கிள்! என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்களாமே!” ஹரி பணிவாக பேசி, அங்கு நிலவிய மௌனத்தை உடைத்தான். மீரா அவர்களுக்கு பருக ஏலக்காய் டீ கொடுத்து, தன்னவன் பக்கத்தில் உரிமையோடு உட்கார்ந்தாள். இவர்கள் வாதத்தை கேட்டு சலித்து போன, நிர்மலா, இரவு உணவு செய்வதில் கவனத்தை செலுத்தினாள். ஆனால் அவள் செவிகளோ, ஹாலில் நிகழும் உரையாடலில் தான் ஐக்கியமானது.
சட்டை பாக்கட்டிலிருந்து அந்த வியாபார அட்டையை எடுத்து அவனிடன் கொடுத்தார் வரதன். அதில் உள்ள விவரங்களை அவன் கவனிக்க, அவர் பேசினார்.
“என் நண்பன் ராஜசேகரன் பல தரப்பு தொழிலில் பணம் போடுறவன். அவன், உன் கதைகள படிச்சிருக்கான் போல… அதுல ஒண்ண, திரைப்படமா எடுக்க ஆசைப்படறான்… அது சம்பந்தமா, உன்கிட்ட பேசணுமாம்!” தகவல் சொன்னவர், கடமை முடிந்தது என்று பெருமூச்சுவிட, அதை கேட்ட காதல் ஜோடிகளின் மனதில் பல எண்ணோட்டங்கள்.
‘கடவுளே! ஹரி! இது உன் கொள்கைக்கு எதிராக இருக்கே டா! என்ன பதில் சொல்லப்போற!’ அவசரப்பட்டு அழைத்துவிட்டேனோ என்று மீரா மனதில் நினைத்து பதற, ஹரி, வெளிப்படையாக பேசினான்.
“அங்கிள்! எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுக்கற உங்க நண்பருக்கு என் நன்றிகள்!” தொடங்கியவனை ஆர்வமாய் பார்த்தார் வரதன்.
“ஆனா… என் முடிவ நான் சொல்றதுக்கு முன்னாடி, அனுபவசாலியா நீங்க, ஒரு விஷயம் தெளிவுபடுத்துங்க!” சுற்றிவளைக்க, பேச்சுவார்த்தை சுமூகமாய் முடியாது என்று புரிந்துகொண்டார் வரதன்.
“ஒரு தொழிலதிபரா, உங்களுக்குன்னு சில கொள்கைகள் இருக்கும். வாய்ப்புகள், இலாபம் தருவதாவே இருக்கட்டும்… ஆனா அது உங்க கொள்கைகளுக்கு எதிர்மறையா இருந்தா என்ன செய்வீங்க?” கேட்க, அவர் திணறினார்.
“அது… அது… பெரும்பாலும் கொள்கைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்!” என்றார்.
“உம்! கரெக்ட் அங்கிள்!” மேலும் கீழும் தலையசைத்தவன், “கதை எழுதும் என் நோக்கமும் அது மாதிரி தான். அத நாலு பேரு படிக்கணும்னு மட்டுமே நினைக்கறேன். அத சினிமா படமா எடுக்கறதுல, எனக்கு உடன்பாடு இல்ல!” மறுத்து பேசியவனை பார்த்தவர் முகத்தில் ஒரு ஏளனம்.
“இதெல்லாம் ஒரு கொள்கையா!” நக்கலாக சொன்னவர், “தானா வர சந்தர்ப்பத்த பயன்படுத்தி, முன்னேறுவத விட்டுட்டு, வீணா போன காரணமெல்லாம் கொள்கைனு சொல்ற…அப்புறம், வாய்ப்பு கிடைக்கல, குடும்ப சூழ்நிலைன்னு புலம்ப வேண்டியது!” என்றார்.
“உங்கள எதிர்த்து பேசுறேன்னு நினைகாதீங்க! கதை எழுதறத நான் ஒரு கலையா பாக்குறேன். இந்த புத்தகம் விற்பனையில வர பணம் எனக்கு அவசியம் தான். ஆனா, அது கூட, என் உழைப்புக்கு நியாயமா கிடைக்க வேண்டிய அளவு இருந்தா போதும்…இலாபம் தேவையில்ல…”
ஹரி பேசியதில், அவன் எழுதும் தன் நோக்கத்திற்கு கொடுக்கும் மரியாதையை உணர்ந்தார். தானே, சினிமா போன்ற துரைகளில் பெரிதும் ஆர்வம் கொள்ளாததால், அவன் மறுத்ததில் அவருக்கு வருத்தம் இல்லை. எனினும், பிடிவாதமாய் இருக்கும் மகளின் நல்வாழ்வை கருதி, வாதாடினார்.
“ஏன்…. திரைப்படம் எடுக்குறதும் ஒரு கலை தானே… நடிப்பு, வசனம், ஆடல், பாடல்னு எவ்வளவோ இருக்கே?”
மெல்லிய புன்னகையுடன், அவருக்கு பதிலளித்தான் ஹரி. “உண்மைதான் அங்கிள். ஆனா, படிக்குறவங்களுக்கு, அவங்கவங்க உறவுகள், கற்பனையில் வரணுமுன்றது என் ஆசை. படமா எடுத்தா, அந்த ஹீரோ, ஹீரோயின் முகம் மட்டுமே மனசுல பதிஞ்சிடும். மேலும், எல்லாத்தையும் படமா எடுத்துட்டா, அப்புறம், மக்களுக்கு புத்தகம் படிக்குற பழக்கம் நாளிடைவுல மறந்தே போயிடும்.”
அவன் தரும் ஒவ்வொரு விளக்கத்திலும் அவன் உறுதியை உணர்ந்தார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள, அவர் சுயம் தடுத்தது. வேலைக்கு நேர்காணல் செய்வது போல,
“நீ சொல்றது, எழுத படிக்க தெரிஞ்சவங்களுக்கு பொருந்தும்; நம்ம ஊருல இருக்குற பாமர மக்கள் எத்தனையோ பேருக்கு, உன் கதைய கொண்டு போய் சேர்க்க, இந்த திரைப்படம் உதவுமே!” அவனை மடக்கியதாய் எண்ணி பேசினார்.
எதையும் தெளிவாக சிந்திப்பவனுக்கு, இது ஒரு சவாலாகவே இல்லை.
“அப்படிபட்டவங்களுக்கு, படிச்சு காட்டலாம்; இன்னும் சொல்லப்போனா, படிக்க விருப்பம் இல்லாதவங்க கூட, சும்மா காதால கேட்குறா மாதிரி, ஆடியோ புத்தகமெல்லாம், மேலைய நாட்டுல கண்டுபிடிச்சிருக்காங்க. நம்ம நாட்டுலையும், அது சீக்கிரமே பிரபலமாயிடும்.”
அடுத்து அவர் என்ன கேட்பார் என்று யூகித்தவன் போல, கூடுதல் தகவல் சொன்னான்.
மனம்தளராமல் அவன் கொள்கையில் உறுதியாக இருந்த போதும், வாழ்வாதாரம் மேன்பட, பணம் அவசியம் என்பதை உணர்த்த,
“நீ சொல்ற காரணமெல்லாம், பேச, கேட்க நல்லா இருக்கும். ஆனா, வாழ்க்கையில செட்டில் ஆகணும்னா, கொஞ்சம் பிடிவாதத்த தள்ளி வெச்சிட்டு, சாமர்த்தியமா யோசிக்கணும்!” மேலும் வாதாடினார்.
இவ்வளவு நேரம், கோபப்படாமல், தன்னுடன் நிதானமாக அவர் பேசியதே, பெரும் சாதனையாக தோன்றியது ஹரிக்கு. வாழ்க்கை பற்றிய தன் யூகத்தையும் தெளிவுபடுத்த நினைத்தான் ஹரி.
“வாழ்க்கைல செட்டில் ஆகுறது, என்ன பொருத்த வர, மானசீகமா கதை எழுதறது; வங்கி வேலைய பொருப்பா செய்யறது; முக்கியமா வேலைக்கும், குடும்பத்துக்கும், சரிசமமா நேரம் செலவிடுறது!” நிறைவான வாழ்க்கைக்கு அழகான விளக்கம் கொடுத்ததோடு நிறுத்திக்கொள்ளாமல்,
“மீரா கூட, நீங்க எவ்வளவு எளிமையானவருன்னு பல முறை சொல்லிருக்கா… குடும்பத்தோட நேரம் செலவிடணும்ன்ற ஒரே காரணத்துக்காக, நீங்க பல இலாபம் தரும் வியாபாரங்கள கூட வேண்டாம்னு சொன்னீங்களாமே!”
சொன்னவன், அருகில் அமைதியாக இருக்கும் தன்னவளை பார்த்து மெலிதாய் சிரிக்க, கேட்டவர் மனம் ஒரு கணம் நெகிழ்ந்தது. ஆனால், அதை வெளிக்காட்டி கொள்ளாதவர்,
“எங்க தலைமுறையோட நிலமை வேற…. இப்போ இருக்கிற விலைவாசி, போட்டி எல்லாம் சமாளிக்க, கிடைக்குற எல்லா வாய்ப்பும் பயன்படுத்திக்கணும்!” விடாப்பிடியாக பேச, ஹரியும் தன் நிலையிலிருந்து நகராமல், பேசினான்.
“உங்கள எதிர்த்து பேசணும்னு பேசல… இந்த விலைவாசி உயர்வே, நம்ம கண்மூடித்தனமா, பணம், பதவின்னு போட்டி போட்டு ஓடுறதுனால ஏற்பட்ட விளைவு…” தர்க்கம் செய்தவன், ஒரு கணம் தன்னவள் பக்கம் திரும்பி, மென்மையாக சிரித்தான்.
இது வரை பொதுவாகவே தன் வாழ்க்கை நெறிகளை பற்றி பேசியவன், தாழ்ந்த குரலில், “மீராவ என்னால நல்லா பார்த்துக்க முடியும் அங்கிள்!” கெஞ்ச, வரதன் புருவங்கள் உயர்த்தி, அவனை ஆழமாய் பார்த்தார். அவன் கண்ணில் மின்னிய உண்மையும் கவனித்தார்.
ஹரி மேலும் பேசினான். “என்னால அவளுக்கு சொகுசு கார் வாங்கி தர முடியாது தான். ஆனா, அடிப்படை வசதிகள் கொண்ட சாதாரண கார் நிச்சயமா வாங்கி தர முடியும்; அதே மாதிரி, லாக்கர்ல பூட்டி வெச்சுக்குற அளவுக்கு நகை வாங்கி கொடுக்க முடியலேனாலும், போட்டு, அனுபவிக்குற அளவுக்கு வாங்கி தர முடியும்.” பணிவாய் சொல்லி, பெருமூச்சுவிட்டவன், தன்னவள் கைகளை கோர்த்து,
“நாங்க ஒருவருக்கொருவர் செலவிடும் நேரம்தான், நாங்க சேர்க்குற பெரிய சொத்து!” பசுமையான நினவுகளே அழியாத செல்வம் என்று சொல்லி, தன்னவளை பார்த்து கண்சிமிட்டினான். அவளும் நெகிழ்ந்து, தலையசைத்தாள்.
தான் மடக்கி கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும், அவன் தெளிவாக பதில் சொல்வதில், வரதன் சுயம் ஆட்டம் கண்டது.
அதை மறைக்கும் பொருட்டு, எழுந்தவர், “வாழ வழி காட்டினா, வயசானவன் மாதிரி தத்துவம் பேசுற! தேடி வந்த வாய்ப்ப, பயன்படுத்தரதும், புறம்தள்ளறதும், உன் இஷ்டம்!” குரல் உயர்த்தி சொல்லி, வழக்கம் போல அவர் அறைக்குள் புகுந்தார்.
இத்தனை நேரம் முகம் கொடுத்து பேசினவர், மனம்மாறிவிடுவார் என்று நம்பியவன், மௌனமாக இருந்த தன்னவள் பக்கம் திரும்பி,
“புரிஞ்சுக்கோ மீரா! உங்க அப்பா சொல்றது கேட்க கூடாதூன்னு இல்ல… இப்படி ஒரு விஷயம் என் மனசுல ஆணிவேர் மாதிரி பதிஞ்சிடுத்து டி!” தலைகுனிந்து வருந்தினான்.
அவன் கைகளை தன்பக்கம் இழுத்து கொண்டவள், “நான், உன்ன ஒண்ணுமே கேட்கலியே ஹரி!” என்றதும், அவளை புருவங்கள் உயர்த்தி பார்த்தான்.
“உனக்கு எது சரின்னு படுதோ, அத நீ துணிஞ்சு செய்; உன் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு டா! நீ எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம்!”
இந்த முறையும் விட்டுக்கொடுக்காமல் பேசியவளின் அன்பில் மூழ்கினான். அவள் கைகளை வருடிய படி, “அப்படி சொல்லாத மீரா; உங்க அப்பாவ பற்றி, என்னவிட உனக்குதான் நல்லா தெரியும்; அவர் நம்ம நல்லதுக்கு தான் இத சொன்னாருன்னு உனக்கு தோணினா, அத வெளிப்படையா சொல்லு டி… உன் சந்தோஷத்த விட, எனக்கு, என் கொள்கை ஒண்ணும் பெருசு இல்ல!”
மென்புன்னகையுடன், மறுப்பாய் தலையசைத்தவள், “நிச்சயமா இல்ல ஹரி! அவர இம்ப்ரஸ் பண்ணனும்னு, நீ தழைஞ்சு போயிருந்தா தான் நான் வருத்தபட்டிருப்பேன்.இப்போ அவர் மனசுல இடம் பிடிக்கணும்னு, உன்ன நீ மாத்திக்காத டா! விட்டுக்கொடுக்க வேண்டிய விஷயத்துக்கு மட்டும் விட்டுக்கொடு… எல்லாத்துக்கும் அவசியமில்ல!” தெளிவாக விளக்கி, எதை பற்றியும் கவலைப்படாமல், வீட்டிற்கு போய் சாப்பிட்டு, நிம்மதியாய் உறங்க சொன்னாள்.
முன் வாசல் வரை சென்றவன், “இருந்தாலும், இந்த நாள் இப்படி முடிஞ்சிருக்க வேண்டாம்ல” விரக்தியில் பேச,
“எழுத்தாளரே! வரதன், வாசுகி எல்லாம், நமக்கு பதில் சொல்ல முடியாமதான் ஓடி ஒளிஞ்சுக்குறாங்க. அவங்க தனிமையில் சிந்திக்க துவங்கிட்டாங்க. நீங்க எனக்கு ‘ஐலவ்யூ’ சொல்ல ரெடியா இருங்க; நான் போய், என் நண்பன் கொடுத்த குலாப் ஜாமுன் சாப்பிடுறேன்!” என்றாள்.
அவள் குறும்பு பேச்சில் நம்பிக்கை கொண்டவன், ஏக்கத்துடன் அவள் கன்னங்களை வருடி, மனமில்லாதவனாய் நகர்ந்தான்.
தன் அறைக்குள் வந்தவர் மனதில் பல மாற்றங்கள். குறிக்கோள் இல்லாதவன், மகளை வசியம் செய்கிறவன் என்றெல்லாம், ஹரியை பற்றி எண்ணியவருக்கு இன்று பல விஷயங்கள் புலப்பட்டது. காலையில் அவனிடம் கண்ட துணிவும், மாலையில் அவன் கொள்கையில் உறுதியாய் நின்ற தெளிவும், அவர் மனதை கவரத்தான் செய்தது. எனினும் சுயம் அவரை கட்டிப்போட்டது.
மேஜையில் இருந்த இரண்டு பொருட்கள், அவருக்கு நிதர்சனத்தை விளக்கியது. தொழில் தொடங்கிய நாளில் எடுத்த புகைப்படமும், இன்று வெள்ளி விழாவின் நினைவாக ஊழியர்களுக்கு பரிசளித்த கோப்பையும், அவருக்கு, ஏற்ற இறக்கம் கொண்ட தன் வளர்ச்சியின் பாதையை கண்முன் நிறுத்தியது.
ஹரியும் இதற்கு விதிவிலக்கில்லை என்று புரிந்துகொண்டவர், விரைவில் தன் சம்மதத்தை சொல்ல நினைத்தார்.
“இப்படி பேசிக்கிட்டு இருக்குறப்ப கோபப்பட்டு, ரூமுக்கு வந்து கதவ சாத்திகிட்டா, எதுவும் மாற போகறது இல்ல” உள்ளே வந்த நிர்மலா, கணவனை கடிந்து கொண்டாள். அவர் கையில் ஒரு புத்தகத்தை திணித்து,
“ஹரி, உங்க கிட்ட தர்க்கம் செய்யணுமேன்னு பேசல. அவன் கதைகள சினிமாவா எடுக்க கூடாதூன்னு எப்பவோ முடிவெடுத்துட்டான். இந்த செய்திய படிங்க!” சொல்லி, அறிமுக விழாவை பற்றி வாரயிதழில் வந்த செய்தி ஒன்றை கணவனிடம் காண்பித்தாள்.
அதை படிக்காமல் மூடியவர், “எனக்கும் தெரியும் டி! யோசிக்க கொஞ்சம் டைம் கொடு; நல்ல முடிவா சொல்றேன்!” தாழ்ந்த குரலில் பேச, கணவரை ஆழமாய் பார்த்தாள் நிர்மலா. கணவன் மனதில் மாற்றம் மலர்ந்ததை புரிந்துகொண்டாள்.
“யோசிங்க! ஆனா, உங்க பொண்ணு, உங்களவிட பிடிவாதகாரி! அத மறந்துடாதீங்க!” அவள் குறும்பாய் சொல்ல,
“ம்ம்..தெரியும்!” என்று மென்மையாய் தலையசைத்து சிரித்தார்.
விடாமுயற்சி என்னும் மேஜிக், வரதன் மனதில் புகுந்து வேலைசெய்ய தொடங்கிவிட்டது என்று மீரா மட்டும் அறிந்திருந்தால், இரட்டிப்பு சந்தோஷத்துடனே, குலாப் ஜாமுனை ருசித்திருப்பாள்.
ஔவியம் கொண்டாரோ – இல்லை
ஓராண்டு காலம் பொறுமை காத்தவர்களின்
ஒற்றுமை கண்டு மிரண்டாரோ-மகளின்
ஐவிரல் கோர்த்து, கம்பீரமாய்
ஏழேழு ஜென்மத்திற்கும் என்னவள் என்று
எடுத்துச் சொன்னதில் வியந்தாரோ!
ஊர் பார்க்க சபையில் வந்து பேசியவனின்
உறுதியில் நிலைகுலைந்தாரோ – மீராவிற்கு
ஈடுயிணை ஆகுமா, பணமும் பதவியும்- அவன் கேட்டதில்
இவர் இருமாப்பு தான் சரிந்ததோ!
ஆட்டம்கண்டு தோற்றது அவர் சுயம்-வென்றது
அவர்கள் அன்பின் ஆழம்….