அன்பின் ஆழம் – 28.1

“மீரா! உனக்காக தான் எல்லாரும் காத்துகிட்டு இருக்காங்க! சீக்கிரம் வா மா!” நிர்மலா அழைக்க,

“ரெண்டே நிமிஷம் மா!” பதில் சொன்னவள், கைப்பேசியை மறுபடியும் காதில் வைத்து,

“ப்ளீஸ் ஹரி! ஏதாவது பேசு டா!” ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக, எதுவும் பேசாமல், அழைப்பையும் துண்டிக்காமல், மௌனம் காத்த தன்னவனிடம் கெஞ்சினாள்.

“ஏன் மீரா, என்கிட்ட இத பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லல!” கேட்டவன் குரலில், ஏமாற்றம் பொங்கிவழிந்தது.

அன்று வரதன் அலுவலகத்தின் ஆண்டு விழா; அதிலும் வெள்ளி விழா. அதனால் அதை சிறப்பாக கொண்டாட வரதன் திட்டமிட்டிருந்தார். தொழில் நண்பர்கள், ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் இருநூறு பேர் அன்று விழாவில் பங்கெடுத்து கொள்ள வந்திருந்தனர்.

நண்பர்களுடன் தந்தை நல்லுறவில் இருந்திருந்தால், நிச்சயமாக மீரா, அவர்களிடம் சொல்லியிருப்பாள். அவர்களை அழைத்தும் இருப்பாள். அப்படியே, அவர் மனமிறங்கி, அரவிந்தனை அழைத்தாலும், ஹரியை அழைக்க வாய்ப்பே இல்லை என்று அறிந்தவள், அதை பற்றி சொல்லி, அவனை சங்கடப்படுத்துவதை காட்டிலும், சொல்லாமல் இருப்பதே மேல் என்று எண்ணி மறைத்தாள். அதுவும் அன்று ஞாயிற்றுக்கிழமை; பொதுவாக விடுமுறை நாட்களில் இருவரும் சந்திக்காததனால், மறைப்பதில் பிரச்சனை இல்லை என்று நினைத்தாள்.

“சொல்லக்கூடாதூன்னு இல்ல டா! உன்ன உரிமையா வரச்சொல்லி, கூப்பிட கூட முடியாத விழாவ பற்றி, சொல்லி, ஏன் உன் மனச கஷ்டப்படுத்தணும்னு நெனச்சேன்! மன்னிச்சிரு டா!” உண்மை காரணத்தை சொல்ல, அவளின் தர்மசங்கடமான நிலையை உணர்ந்தான் ஹரி.

“சரி பரவாயில்ல!” சமாதானமானவன், “ஆனா, நீ இல்லாம… நான் மட்டும் எப்படி நம்ம குழந்…. “தொடங்கியவன், திருத்தி, “முதல் பிரதியை வாங்கிட்டு வரது.

அவன் ஏக்கத்தை புரிந்துகொண்டாள். அவனுடன் செல்ல வேண்டும் என்று அவள் மனமும் விழைந்தது. தங்கள் புத்தக குழந்தையை விட இந்த விழா அவளுக்கு பெரிதில்லை தான். எனினும் அப்பாவின் மனநிலையை எண்ணி பயந்தாள்.

“எனக்கும் வரணும்னு தான் டா ஆசை; அப்பாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவாரு. நீ செஞ்ச நல்ல விஷயங்களிலேயே, தோண்டி தோண்டி குறை கண்டுபிடிச்சவரு, இதுல இருக்க காதல புரிஞ்சுப்பாரா என்ன? இப்போதைக்கு, அவருக்கு உன் மேல இன்னும் வெறுப்பு வராத மாதிரி நடந்துக்கிறது தான் முக்கியம்; அதனால நீ போயிட்டு வா; நான் சாயங்காலம் கண்டிப்பா வரேன்!” நிதர்சனத்தை சொல்ல, மேலும் அவளை கட்டாயப்படுத்தாமல், அழைப்பை துண்டித்தான்.

பத்து நிமிடங்களில், முன் வாசல் கதவருகே வந்தவன் சிந்தையெல்லாம் அவளே நிறைந்திருந்தாள். அவள் அருகில் இல்லாத வெறுமையில் நடந்தவனுக்கு, தன்னை கிட்டதட்ட மோத வந்த அந்த பைக்கின் ஹார்ன் சத்தம் கூட கேட்கவில்லை.

“ஹரி! என்னடா ஆச்சு உனக்கு?” பைக்கில் வந்த அரவிந்தன் அவன் கையை பற்றி கேட்க, அதில் சுயத்துக்கு வந்தவன்,

“அரவிந்தா! நீ எப்போடா வந்த?” கண்கள் அகல வினவினான்.

“நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு… நான் கூப்பிடறது கூட கேட்காத அளவுக்கு அப்படி என்ன டா யோசனை?” கேள்வியை திருப்ப,

“அது… அது… ஸ்ரீராம பார்க்க போயிட்டு இருக்கேன்!” மேலோட்டமாய் பதிலளித்தான் ஹரி.

புத்தகம், அதை சார்ந்த விஷயங்களில் ஹரிக்கு இருந்த ஈடுபாடு அறிந்தவன், வேறு எதுவும் கேட்காமல், சரி என்று தலையசைத்து,

“அஞ்சலி, குலாப் ஜாமுன் செஞ்சா! அத கொடுத்திட்டு போகலாம்னு தான் வந்தேன்!” காரணம் சொல்லி,

“ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு; இதோ வரேன்!” என்று நண்பனிடம் பைக் சாவியை கொடுத்துவிட்டு, மகேஷ் வீட்டை நோக்கி காற்றாய் பறந்தான்.

இரண்டே நிமிடத்தில் திரும்பி வந்தவன், “உனக்கு எடுத்திட்டு வந்த இனிப்பையும் மகேஷ் கிட்டையே கொடுத்திருக்கேன். மறக்காம வாங்கிக்கோ; நாளைக்கு மீராவுக்கு கொடு!” படபடவென்று சொல்லி,

“என்ன வீட்டுல விட்டுட்டு, நீ வண்டி எடுத்துட்டு போ!” அன்புக்கட்டளையும் இட்டான்.

“இரு! இரு!” பொறுமையாக பேசு என்று நண்பனின் தோளில் தட்டிக்கொடுத்தவன், “ஓடி வந்து இனிப்பு கொடுக்குற அளவுக்கு என்ன ஸ்பெஷல்!” ஹரி சாதரணமாய் கேட்க, அதற்கு அசடுவழிந்தவன்,

“அது… அது… இன்னையோட, எங்களுக்கு கல்யாணமாகி ஒரு மாசம் ஆச்சு டா!” என்று தலையை சொறிந்தான்.

அதை கேட்டு பக்கென்று சிரித்தவன், “இதையெல்லாமா கொண்டாடுவீங்க!” நக்கல் செய்ய, எதிரில் நின்றவன், இன்னும் அழகாய் வெட்கப்பட்டான்.

“எனக்கு பைக் வேண்டாம் டா! நீங்க ஜாலியா எங்கையாவது வெளிய போக பிளான் வெச்சுருப்பீங்க!” குறும்பாய் சொல்லி, பைக் சாவியை நீட்டினான் ஹரி.

“நோ வே நண்பா; ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் நாங்க வீட்டுல இருக்கோம்; அதனால, எல்லா கொண்டாட்டமும் வீட்டுல தான்!” உற்சாகமாய் சொன்னவன்,

“சரி! சீக்கிரம் வண்டி எடு! அஞ்சலி எனக்காக காத்துகிட்டு இருப்பா!” என்று நண்பனை விரட்டினான் அரவிந்தன்.

அரவிந்தனை வீட்டில் விட்டு தனியாக வண்டியை செலுத்தியவனுக்கு, மீண்டும் மீரா ஞாபகம் வந்தது. நண்பன் திருமண நாளன்று , மீரா, வாசுகியை சந்தித்து பேசியது நினைவில் வர, தங்கள் காதல் கதை தேங்கி நிற்பதை எண்ணி வருந்தினான் ஹரி. பெற்றோர் சம்மதம் கிடைக்காமல் இருப்பது ஒரு புறம் என்றால், இன்று, மீரா இல்லாமல், தனியாக பிரதியை வாங்குவதில் அவனுக்கு துளியும் மனமில்லை;

வண்டியை ஓரம் கட்டியவன், ஸ்ரீராமை அழைத்தான். அவர் ஊருக்கு வந்த பிறகு, வாங்கிகொள்வதாய் சொல்ல நினைத்தான். தனியாக சென்று முதல் பிரதியை பெற்றுகொள்வதை காட்டிலும், தாமதமாக பதிப்பிப்பது மேல் என்று தோன்றியது ஹரிக்கு.

நான்கு, ஐந்து முறை அழைத்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பிரசவிக்கும் மனைவியை பார்க்க போகும் தருணத்திலும், தன் மேல் அக்கறை காட்டும் அவர் அன்பை அலட்சிய படுத்த கூடாது என்று அறிகுறி சொல்வது போல் இருந்தது. பெருமூச்சுவிட்டவன், மனமில்லாமல், மீண்டும் சாலையில் கலந்தான்.

மனம், மீரா இல்லாமல் புத்தகத்தை வாங்க மறுக்க, புத்தி, நிதர்சனத்தை ஏற்றுக்கொள் என்றது. சிக்னலில் நின்றவன், மனமும் புத்தியும் சண்டையிட, பச்சை விளக்கு மாறிய நேரம், மனம் வென்றது.  

நடப்பது நடக்கட்டும் என்ற தெளிவும், துணிச்சலும் உடலில் பரவ, வண்டியை வேகமாக, வரதன் அலுவலகம் நோக்கி செலுத்தினான் ஹரி. கால் மணி நேரத்தில், வளாகத்தில் நுழைந்தவன், புத்திக்கு யோசிக்க நேரம் கொடுக்காமல், இரண்டாம் தளத்தில் இருந்த அவர் அலுவலகத்தை நோக்கி வேகமாக நடந்தான்.

அழையா விருந்தாளியாக உள்ளே வந்தவனை, யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. ஆங்காங்கே வட்டமாக நின்று அரட்டை அடித்து கொண்டும், விருந்து உணவு உட்கொண்டும் இருந்தனர். ஹரி கண்கள், தன்னவளை மட்டும் தான் தேடியது.

வெள்ளி ஜரிகை போட்ட, கருநீல காக்ரா சோளியில் தாரகையாக மின்னியவளை பார்த்தவன் கண்கள் குளிர்ந்தது. தந்தையும், மகளும், விருந்தினர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். ஆழ்ந்து சுவாசித்தவன், நேராக வரதனை நோக்கி நடந்தான்.

“அங்கிள்!” திடமாக அழைத்தான் ஹரி. யார் என்று அவர் திரும்பி பார்க்க, தன்னவன் குரல் கேட்டு சட்டென திரும்பியவள், “ஹரி! நீயா!” திடுக்கிட, அவனை கண்டவர்கள் இருவரும் உறைந்து போய் நின்றனர்.

“ஒரு முக்கியமான வேலையா, மீராவ அழைச்சிட்டு போக வந்திருக்கேன். சரியா ஒரு மணி நேரத்துல, அவள திரும்ப கொண்டு வந்து விட்டுடறேன்!” தகவல் கொடுத்தவன், அவர் பதிலுக்கு காத்திராமல்,

“வா மீரா!” என்று உரிமையாக, அவள் இடது கையை பற்றி, கம்பீர நடையிட்டான். தொழில் நண்பர்கள், ஊழியர்கள் முன் கௌரவத்தை தக்க வைத்து கொள்ள, கோபத்தை மறைத்து மௌனமாக நின்றார் வரதன். ஹரி செயலில், ஸ்தம்பித்து போனவள், கயிற்றால் கட்டி இழுக்கப்பட்ட பொம்மையை போல, மறுகேள்வி இன்றி அவனை பின்தொடர்ந்தாள்.

யாரையும் பொருட்படுத்தாது, விரப்பாக நடக்கும் இருவரையும் கண்ட விருந்தினர்கள், தங்கள் கற்பனைக்கு எட்டியதை அருகில் உள்ளவர்களிடம் கிசுகிசுத்தனர். வரதன் கண்கள், மனைவியை சுட்டெரிக்க பார்த்தது.

நிர்மலா மிகவும் சாந்தமாக இருந்தாள். தன் அருகில் இருந்த பெண்ணிடம்,

“இவங்க எப்பவுமே இப்படி தான். ஆஃபிஸ்ல ஏதாவது பிரச்சனைன்னா, இப்படி உடனே திடுதிப்புன்னு கிளம்பிட வேண்டியது.” மகள் அலுவலகம் சார்ந்த வேலையாக நண்பனுடன் செல்கிறாள் என்று நிலமையை சமாளித்தாள்.

“ஓ! அப்படியா!” அந்த பெண்ணும் தலையசைக்க, மற்றவர்களும், அவரவர்கள் செய்து கொண்டிருந்த வேலைகளுக்கு திரும்பினர்.

மனைவி சாமர்த்தியமாக நிலமையை சமாளித்ததை எண்ணி, வரதன் பெருமூச்சுவிட, அவருடன் பேசிக்கொண்டிருந்த ஒரு நபர்,

“இப்போ வந்த பையன், ஒரு எழுத்தாளன் தானே!” கண்கள் சுருக்கி வினவினார்.

அதை கேட்ட, வேறொரு பெண், “அட! ஆமாம்! அதான் எங்கையோ பார்த்தா மாதிரி இருந்துது.” சொல்லி, நிர்மலா பக்கம் திரும்பி, “நீங்க நவராத்திரிக்கு, அவர் எழுதின புத்தகம் தானே கொடுத்தீங்க!” என்றாள்.

நிர்மலா, பதிலேதும் அளிக்கும், முன், மற்றொருவர், அந்த கதையை பற்றி, விமர்சிக்க, அதை கேட்டு இன்னொரு பெண்மணி, அடுத்தடுத்து வெளிவந்த புத்தகங்களையும் படித்ததாக சொல்லி, பெருமையடித்து கொள்ள, ஹரியின் விசிறிகளின் எண்ணிக்கை அதிகமானது. நிர்மலாவும் அவர்களுடன் உற்சாகமாய், ஹரி எழுதிய கதைகளை பற்றி பேச, வெள்ளி விழா, ஹரி எழுத்தின் வெற்றி விழாவாக மாறியது. வரதனும், வேறு வழியில்லாமல், மௌனம் காக்க வேண்டியதாயிற்று.

பைக் அருகில் வந்தவள், ஹரி செய்கையை எல்லாம் கண்டு பதறினாள்.

இவ்வளவு நேரம், எல்லாத்தையும் தைரியமா செஞ்சிட்டேன். இப்போ, இவள பேச விட்டா, போட்ட திட்டமெல்லாம் வீணாயிடும்.’ மனதில் நினைத்தவன்,

“உன் கையால தான் கதையோட முதல் பிரதிய வாங்கணும்; கேள்வி கேட்காம வண்டியில ஏறு!” கராராக சொல்லி, முறைத்தான்.

அவளும், அவன் அன்புக்கு இணங்கி, புறப்பட்டாள். பத்து நிமிடத்தில் ஸ்ரீராம் அலுவலகத்தை வந்தடைந்தனர். அவர்களை நலன் விசாரித்தவர், மீராவின் அலங்காரத்தை கவனித்து,

“உங்க வாரயிறுதி வேலையெல்லாம் விட்டுட்டு வந்துருக்கீங்க போல இருக்கே!” என்றார்.

“பரவாயில்ல ஸ்ரீராம்! உங்க மனைவி எப்படி இருக்காங்க!” அக்கறையாய் கேட்டாள் மீரா.

அவள் பேசும் விதத்திலிருந்து இயல்பாக தான் இருக்கிறாள் என்று நினைத்தான் ஹரி. ஆனால், தனியாக அவள் கையில் சிக்கும் போதுதான் அவளின் உண்மை சுபாவம் தெரியும் என்றும் மனதில் நினைத்து சிரித்தான்.

“அவளுக்கு வந்தது ஃபால்ஸ் பேயின் தானாமா… ஆனா அதுலே ரொம்ப சோர்ந்து போனதுனால, அறுவை சிகிச்சை செய்யணும்னு சொல்லியிருக்காங்க. ரொம்ப பயந்து போயிருக்கா; இரவு ஒன்பது மணிக்குள்ள நான் அங்க போகணும்!” கவலைகலந்து சொல்ல,

எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று, மீரா ஆறுதலாய் பேசினாள். அவரும் சிரித்த முகத்துடன், முதல் பிரதியை எடுத்து வருவதாக சொல்லி, நகர்ந்தார்.

“என்ன மன்னிச்சிரு மீரா! நீ அவ்வளவு சொல்லியும், நான் உன்ன கட்டாயப்படுத்தி அழைச்சிட்டு வந்துட்டேன்… என்னால இத ஒத்திப்போடவும் முடியல… நீ இல்லாம வாங்கிக்கவும் மனசு வரல டி!” தலையை தொங்க போட்டு ஹரி வருந்த, அதற்குள், திரும்பி வந்த ஸ்ரீராம், பிரதியை மீராவிடம் கொடுத்தார்.

மற்ற விஷயங்களை பேசி முடித்து, மீண்டும் மனைவியை பற்றி கவலை கொண்டவராய் பேசினார். புத்தகத்தை செல்லம் கொஞ்சிய படி, அவர்கள் உரையாடலை கேட்டவள், “தலைச்சன் பிள்ளைல்ல ஸ்ரீராம்! அதான் பயப்படுறீங்க. எங்களுக்கும் முதல்ல அப்படி தான் இருந்துது… இதோ பாருங்க… இப்போ நாலு பிள்ளைகள் வந்தவுடனே, எல்லா சவால்களையும் தைரியமா சமாளிக்குற பக்குவமும் தானா வந்திடுத்து!” அறிவுரை ஸ்ரீராமுக்கும், பதில் தன்னவனுக்கும் ஒரே நேரத்தில் சொன்னாள்.

இவள் செய்கை, வேடிக்கை பேச்சு எல்லாம் பார்த்துப் பழகியவர், பாதிக்கு மேல் அவள் சொன்னது புரியாத போதும், புரிந்தது போல தலையசைத்தார். அவருக்கு வாழ்த்துக்கள் கூறி, காதல் ஜோடிகள் பைக் நிறுத்திய இடத்தை வந்தடைந்தனர்.

“உனக்கு என் மேல கோபமே இல்லையா மீரா?” ஆதங்கத்தில் மீண்டும் கேட்டான்.

அவன் கைகளை இறுக கோர்த்தவள், “நம்ம குழந்தையவிட வேறெதுவும் முக்கியம் இல்ல ஹரி! நீ செஞ்சது ரொம்ப சரி டா!” சொன்னவள்,

“ஆனா, நான் திரும்ப சாயங்காலம் வருவேன்… இன்னும் முழுசா என் குழந்தைய கொஞ்சி முடிக்கல, “என்று புத்தகத்தை மார்போடு அணைத்தாள். அதை கண்டு சிரித்தவன்,

“ஆனாலும், உனக்கு துளி கூட வெட்கமே இல்ல டி! ஸ்ரீராம் கிட்ட இப்படியா பேசுவ!” செல்லமாக கண்டித்தான்.

முகத்தை அப்பாவியாக வைத்து, பயந்ததை போல நடித்தவள், “எங்கடா முசுடு எழுத்தாளர் இத பற்றி இன்னும் கேட்கலியேன்னு நெனச்சேன்….” என்று குழைந்தாள்.

அவள் செய்கையை கண்டு வாய்விட்டு சிரித்தவன், “கேட்பேன்னு தெரியுதுல்ல!” அவள் தலையில் லேசாக தட்டியவன், முகத்தில் புன்னகை ததும்ப,

“சரி வா! வா! உன் நண்பன் வேற, உனக்கு குலாப் ஜாமுன் கொடுத்திட்டு போயிருக்கான்!” என்று அரவிந்தன் சொன்ன காரணத்தையும் சேர்த்து விளக்கினான்.

“நமக்கும் தான் இன்னைக்கு முக்கியமான நாள் தெரியுமா?” சொன்னவள் பேச்சில் ஏக்கம் எதிரொலித்தது.

அன்று தன் அம்மாவை சந்தித்தது பற்றி, குறிப்பிடுகிறாளா என்று கேட்டதற்கு, இல்லை என்று மறுப்பாய் தலையசைத்து, வேறொன்று உள்ளதாக சொன்னாள்.

“சாயங்காலம் வீட்டுக்கு வரப்ப சொல்றேன்!இல்லேன்னா, ஏதாவது காரணம் சொல்லி, வராதன்னு சொல்லிடுவீங்க எழுத்தாளரே!” சொல்லி கண்சிமிட்ட, அவனும் கன்னத்தில் குழிவிழ சிரித்தான்.

நிபந்தனைகளை மறந்து, அவனும் அவளுடன் அதிக நேரம் செலவிட ஏங்குகிறான் என்று பாவம் அவள் அறியவில்லை.

கடிகாரத்தை பார்த்தவன், வரதனிடம் கேட்ட காலவகாசத்தில், இன்னும் கால் மணி நேரமே இருப்பதை கண்டு, அவளை புறப்பட சொன்னான். பத்தே நிமிடத்தில், அவளை பத்திரமாக கொண்டு வந்து விட்டவன், அவளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதற்கு, மன்னிப்பு கேட்க,

அவன் வாயை பொத்தியவள், மறுப்பாய் தலையசைத்து, “இப்படியே என் மேல எந்த சூழ்நிலையிலும் உரிமை கொண்டாடுவியா டா!” அடிமனதிலிருந்து பேசினாள்.

அவள் கையை குவித்து கொண்டவன், இதழோர புன்னகையுடன், கண்ணசைத்து, செய்வேன் என்று உறுதி அளித்தான்.

ஆண்டு விழாவை செவ்வனே முடித்து, நாலு மணியளவில் வீடு திரும்பிய குடும்பத்தினர், ஆளுக்கொரு திசையாக சென்றனர். ஹரி செய்கையை பற்றி, அப்பா தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்பதே ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. அம்மாவும் எந்த அறிவுரையும் சொல்லவில்லை. தன்னவனை சற்று நேரத்தில் மீண்டும் சந்திக்க போவதை பற்றிய எண்ணோட்டத்தில் இருந்தாள்.

மடியில் லேப்டாப்புடன், சோஃபாவில் ஒய்யாரமாய் கால் நீட்டி அமர்ந்திருந்தாள். புத்தகங்களை படிவம் மூலம் கேட்பவர்களுக்கு, நேரிலும், தபாலிலும் விநியோகிக்கும் பொருப்பு முழவதையும், அவள் கவனித்து வந்தாள். அது சம்பந்தமாக, அந்த வாரம் செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டு கொண்டிருக்க, அச்சமயம், வரதன் அவள் வலது பக்கம் இருந்த சோஃபாவில் வந்து அமர்ந்தார். அப்பாவுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, நொடியில், கால்களை மடக்கி கொண்டாள்.

தொலைக்காட்சி பார்க்க வந்திருக்கிறார் என்று நினைத்தாள் மீரா. ஆனால், அவர் சட்டை பையிலிருந்து, ஒரு வியாபார அட்டையை எடுத்து, அவளிடம் நீட்டினார்.

“இந்த கார்டுல இருக்க விலாசத்துக்கு போய், அவன, என் நண்பன் ராஜசேகரன சந்திக்க சொல்லு!”

‘அவன்’ என்று அவர் குறிப்பிட்டது, தன்னவனை தான் என்று உடனே புரிந்துகொண்டாள் மீரா. அவன் பெயரை கூட உச்சரிக்கக் கூடாது என்று நினைக்கும் அளவுக்கு, என்ன வெறுப்பு என்று தோன்றியது அவளுக்கு.

“யார்கிட்ட கொடுக்கணும் பா!” மென்மையாக கேட்டாள் மீரா.

தன் நண்பன் ராஜசேகரனின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று நினைத்தவர், வேறுவழியில்லாமல், “அதான்… அவன்… அந்த ஹரி!” ஒருவழியாக பெயரை சொன்னார்.

அந்த அட்டையை முன்னும் பின்னும் திருப்பி அலசியவள், “என்ன விஷயமான்னு தெரிஞ்சிக்கலாமா?”

“அது… அது.. அவன இன்னைக்கு விழாவுல பார்த்தவங்க, அவன் எழுதின புத்தகத்த பற்றி எல்லாம் பேசினாங்க… அது விஷயமா என் நண்பன் அவன பார்க்கணுமாம்….” அவர் சொல்வதற்குள் மீரா குறுக்கிட்டாள்.

“உங்களுக்கு உங்க நண்பன் எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி, எனக்கு என் நண்பன் முக்கியம். உங்க நண்பன ஹரி சந்திச்சே ஆகணும்னு நெனச்சீங்கன்னா, நீங்களே அவன்கிட்ட இத நேருல கொடுங்க!” சொன்னவள், சொன்ன வேகத்தில் அந்த கார்டை அவர் கையில் நுழைத்தாள்.

இத்தனை நாட்களாக, ஹரி திறமையை பற்றி, தான் சொன்னதை எல்லாம் அலட்சியம் செய்த தந்தை, இன்று, யாரோ ஒரு நண்பருக்காக, ஹரி பேச்சை எடுத்தார் என்ற ஆதங்கம். தன்னவனுக்கு தக்க மரியாதை அவர் கொடுக்க வேண்டும் என்று நினைத்தாள்.

“நல்லது செய்ய நினைக்குற என்னையே எதிர் கேள்வி கேக்குற; பரவாயில்ல… என்னால ஒருத்தருக்கு நன்மை ஏற்பட்டா, எனக்கும் சந்தோஷம் தான்!”ஏளனமாக பதில் சொன்னவர், “எப்போ வருவான்னு கேட்டு சொல்லு!” என்றார்.

“இன்னைக்கே! ஆறு மணிக்கு வர சொல்றேன் பா!” சிறிதும் யோசிக்காமல் பதில் சொல்லி, தன் காதலின் வலிமையை உணர்த்தினாள்.

தொழில்ரீதியான நண்பனை இழந்துவிடக்கூடாது என்று நினைத்தவர், மகள் பேச்சுக்கு இணங்கினார். தந்தை கர்வத்தை வென்றுவிட்டதாய் எண்ணி, மகள் மகிழ்ந்தாள். வரதன் சொல்ல வந்ததை குறுக்கிடாமல், முழுவதையும் கேட்டிருந்தால், கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருப்பாளோ என்னமோ. விதியை மாற்ற யாரால் முடியும்….

தொடர்ந்து படிக்க Click Here –> அன்பின் ஆழம் 28.2