அன்பின் ஆழம் – 27.2

தன்னை புரிந்து கொள்ளாதவர்கள் மீது காட்டும் அக்கறையை, தன்னையே உலகம் என்று நினைக்கும் இவள் மீது காட்ட ஏன் இத்தனை தயக்கம் என்று ஒரு கணம் தடுமாறியவன்,

“மீரா! ஐ… ”, உதட்டை குவித்தான்,

அவன் வாயை பொத்தியவள், இடம் வலமாய் தலையசைத்து, “ப்ளீஸ் ஹரி! வேண்டாம்… என் மேல பரிதாப பட்டு சொல்லாத டா!” என்று தடுத்தாள்.

அவள் பெருந்தன்மையை மெச்சினான். வரும் வழியில் அவள் கண்டுகளித்த இயற்கை காட்சிகள் நினைவுக்கு வர, “சரி! வா! அந்த நீர்வீழ்ச்சிக்காவது அழைச்சிட்டு போறேன்!” என்றான்.

எனக்கே எனக்குன்னு வழிந்தோடிய நீர்வீழ்ச்சிய இப்போதான் பார்த்தேன்!” சொல்லி அவன் கண்களை வருடியவள், “உனக்கும் என்ன ரொம்ப பிடிக்கும்னு எனக்கு தெரியும் டா! நீ அத வெளிப்படுத்த இவ்வளவு சிரமப்படாதே!” உளமார சொல்ல, அவனும் நெகிழ்ந்தான்.

“ரயிலுக்கு, இன்னும் சுளையா நாலு மணி நேரம் இருக்கு! என்ன பண்ணலாம்னு, நீயே சொல்லு!” யோசனை சொல்லி சலித்து போனவன், முடிவை அவளிடமே விட்டான்.

“எழுத்தாளரே! நடந்துகிட்டே பேசி எத்தன நாளாச்சு; ஹோட்டல்ல சாப்பிட்டு, அப்படியே ஸ்டேஷன் வர நடக்கலாமா!” கொஞ்சி பேச, அவனும் உடனே சம்மதம் தெரிவித்தான்.

தன்னவளை வழியனுப்பிவிட்டு வந்தவனை கண்ட வாசுகி, மாலை எதுவும் நடக்காததை போல், மகனை நலன் விசாரித்தாள். அவனும் மீராவின் பேச்சுக்கு இணங்கி, தாயிடம் முடிந்த அளவுக்கு பணிவாய் நடந்து கொண்டான்.

மீரா, வாசுகி பேசியதை பற்றி நினைத்து வருத்தப்படாமல் இயல்பாக நடந்துகொண்ட போதும், அவளை தனியாக ஊருக்கு அனுப்பி வைக்க, அவனுக்கு மனமே இல்லை. கடைசி நிமிடம் வரை, தானும் வந்து விடுவதாக சொல்லி கொண்டே இருந்தான்.

வேறுவழியில்லாமல், மகேஷ், கீதாவிடம் அவளை பார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு, மனமில்லாமல் வீடு திரும்பினான். ஒன்பது மணியளவில், கைப்பேசியில், தன்னவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி கொண்டிருக்கும் மகனை, இரவு உணவு உண்ண அழைத்தாள், வாசுகி. மாலையில் மீராவுடன் ஹோட்டலில் சாப்பிட்டவனுக்கு பசியில்லை.

கைப்பேசியிலிருந்து தலைதிருப்பாமல், “எனக்கு பசிக்குல மா! நீ சாப்பிடு!” என்று சொல்ல, அவளும் மறுகேள்வி எதுவும் கேட்காமல், அங்கிருந்து நகர்ந்தாள்.

ஐந்து நிமிடத்தில், கையில் ஒரு தொண்ணையுடன் வந்தவள், மகன் வாயில், கேசரியை ஊட்டினாள். கைப்பேசியில் கவனமாய் இருந்தவனுக்கு, அதன் சுவை நாவில் பட்டதும், கண் முன்னே தன்னவள் முகம் வந்து நின்றது.

‘மீராவுக்கு எவ்வளவு பிடிக்கும்!’ மனதில் நினைத்து குமுறினான்.

அது புரியாமல், வாசுகி, “அன்னதான பிரசாதம் டா ஹரி! இன்னும் கொஞ்சம் சாப்பிடு!” சொல்ல, இம்முறை அவள் கையை உதறியேவிட்டான்.

“வீட்டுக்கு வந்தவங்களுக்கு குடிக்க ஒரு வாய் தண்ணி கொடுக்க மனசு இல்ல; அன்னதானம் செஞ்சு என்ன புண்ணியம்!” தன்னையும் மீறி அவள் மீது எரிந்து விழுந்தான்.

மகன் இன்னும் அவள் நினைப்பிலேயே தான் இருக்கிறான் என்று உணர்ந்தாள் வாசுகி. “ஆமாம் டா! மனசு இல்லதான்… நீ வேணும்னா, அவ வசிய பேச்சுக்கு, மயங்கி நம்ம சொத்த அவகிட்ட கொடுக்கலாம். எனக்கு அவ்வளவு பெரிய மனசு எல்லாம் இல்ல பா!” சீற்றம் கொண்டு பேசியவள், அங்கிருந்து நகர்ந்தாள்.

மீரா எவ்வளவு சொல்லியும் புரிந்து கொள்ளாமல் பேசுகிறாள் என்று கோபம் கொண்டவன், அவளை விடாமல் பின் தொடர்ந்தான்.

 “ஏன் மா, இப்படி பணம் பணம்னு அலையற? மனம் நொந்தான்.

மகன் தன்னை ஒரு பணப்பேயாய் பார்க்கிறானே என்று நினைத்து வருந்தினவளுக்கு கண்கள் வெள்ளப்பெருக்கெடுத்தது.

“சிறுக சிறுக சேமிச்ச பணத்துல, ‘என் கணவன், என் மகனுக்காக’ கட்டின இந்த வீட்ட, எவளோ ஒருத்தி, காதலிக்குறேன்ற பேருல வந்து அபகரிப்பா… அத ஏன்னு நான் கேள்வி கேட்டா, என்ன பணத்தாசை பிடிச்சவன்னு கேவலமா சொல்லுவியா ஹரி!” விசும்பியவள் தன் ஆதங்கத்தை கொட்டினாள்.

தன் செயலுக்கு வருந்தினான் ஹரி. அழும் அவள் தோள்பட்டையை இறுக பிடித்தவன், “மன்னிச்சிரு மா! உன் குணம் தெரியாதா… நான் அந்த அர்த்தத்துல சொல்லல மா…” தாழ்ந்த குரலில் கெஞ்சி, “உனக்கு மட்டும் இல்ல மா; எனக்கும் இந்த வீடு ரொம்ப ஸ்பெஷல் தான்; இது என் அப்பா வாழ்ந்த வீடு…” சொன்னது அவன் அப்பாவின் ஆத்மாவிற்கு கேட்கிறதா என்பது போல், கண்களால் வீட்டை அலசியவன், வாசுகி பக்கம் திரும்பி, “என்ன நம்பு மா பிளீஸ்… நான் இத சரியான கைகள்ல தான் ஒப்படைச்சிருக்கேன்!” விளக்க முயன்றான்.

அவனிடமிருந்து விலகி நின்றவள், “மன்னிச்சிரு ஹரி!  அதுக்கு மட்டும் என்னால ஒத்துக்கவே முடியாது! இந்த வீடு உனக்கு தான் சொந்தம்; உனக்கு மட்டும் தான் சொந்தம்!” பிடிவாதமாய் பேசியவள், கண்களை துடைத்து கொண்டு தன் அறைக்குள் புகுந்தாள்.

அரை மணி நேரமாக தன்னவனிடமிருந்து குறுஞ்செய்தி வராததுனால், விடாமல் அவனுக்கு போன் செய்திருந்தாள் மீரா. எட்டு மிஸ்டு கால்ஸ், கண்டவனுக்கு, தனியே பயணிக்கும் தன்னவளை பற்றிய கவலை.

பதறியவன், அவளை உடனே தொடர்பு கொள்ள, “என்ன எழுத்தாளரே! குட் நைட் கூட சொல்லாம தூங்கிட்டீங்களா!” எதார்த்தமாய் பேச, ஆழ்ந்து உள்மூச்சு வெளிமூச்சு விட்டு நிம்மதியடைந்தான்.

“இல்ல டி… இன்னும் தூங்கல….!” சொல்ல காரணம் தேட, அவன் குரல் கேட்டவளுக்கு, காரணம் கேட்டறியாமலேயே, அங்கு என்ன நடந்து இருக்கும் என்று புரிந்தது.

“அம்மாவோட சண்டை போட்டியா!” சுற்றி வளைக்காமல் கேட்டாள்.

“மீரா!…அது…!” அவன் விளக்க முயல,

“இங்க பாரு ஹரி! உனக்காக தான் அந்த வீட்டு பத்திரத்த வெச்சுகிட்டு இருக்கேன். அவங்க திருப்பி கேட்குறதுல தப்பே இல்ல. அதனால, திருப்பி கொடுக்கற வரைக்கும் அவங்ககிட்ட வாக்குவாதம் செய்யாம இரு; அப்படி உன்னால முடியலேன்னா, உன் பேச்ச மீறி, நானே அவங்ககிட்ட கொண்டு போய் கொடுத்திடுவேன்!” அவள் பங்குக்கு மிரட்ட,

அவள் குரலை கேட்டு, கோபம் தணிந்தவன், “என் கிட்ட சண்டை போட மாட்டேன்னு சொன்னியே” அவளை வம்பிழுத்தான்.

“இது சண்டை இல்ல டா! அவங்க தரப்புலையும் நம்ம யோசிக்கணும்.” சொன்னவள், “போய் அவங்ககிட்ட சமாதானமா பேசு; மனசுல பாரத்தோட பாவம் அவங்களுக்கு தூக்கம் வராது!” மீண்டும் வாசுகிக்காக அவள் பேச, அவன் நெகிழ்ந்து போனான்.

“நீங்க சொன்னத செஞ்சிட்டு, கால் மணி நேரத்துல கூப்பிடறேன் ஆஃபிஸர் மேடம்!” பழைய நினைவில் அவளை அப்படி அழைக்க, அவளும் சரி என்று அழைப்பை துண்டித்தாள்.

அம்மாவின் அறைக்குள் சென்றவன், மீரா சொன்னதை போலவே அவள், தூக்கம் வராமல் தவிப்பதை கவனித்தான். மென்மையாக அவள் கையை வருடியவன்,

“அம்மா! உன் எண்ணம் எனக்கு புரியுது; இந்த வீடு எந்த காலத்துலேயும் நம்மள விட்டு போகாது; நீ கேட்டத செய்யற வர, நானும் என் காதல் சம்பந்தமா உன்கிட்ட எதுவும் கேட்க மாட்டேன், சரியா!” என்று மென்மையாக பேசி மன்னிப்பு கேட்டான்.

மகன் வார்த்தையில் நம்பிக்கை கொண்டவள், சரி என்று மென்மையாக தலையசைத்தாள்.

மீண்டும் தன்னவளுக்கு அழைத்தவனின் முதல் கேள்வி, “ஏய்! கதவு கிட்ட நிந்துகிட்டு பேசுறியா?” இரவு ரயிலில் பயணிப்பவள் மீது அக்கறை உள்ளவனாய் வினவினான்.

வரும்போது, தன் மனவுளைச்சலில் அவனுக்கு வீணாக தொல்லை கொடுத்து தனிமையில் நின்றதை நினைத்து கேட்கிறான் என்று புரிந்து கொண்டவள், “எழுத்தாளரே! எனக்கு அவ்வளவு தைரியம் எல்லாம் இல்ல; நான் பாதுகாப்பா மேல் பெர்த்துலேந்து தான் பேசிகிட்டு இருக்கேன்” என்றாள்.

“எப்படி டி! உங்க அப்பா பேசினதுக்கு அவ்வளவு பீல் பண்ண; எங்க அம்மா அவருக்கு மேல பேசி, உன் மனச புண்படுத்திருக்காங்க… இவ்வளவு பொறுமையா இருக்க!” மனதில் இருந்த கேள்வியை கேட்டேவிட்டான்.

“நீங்க தானே பார்த்து பொறுமையா பேச சொன்னீங்க!” அவள் குறும்பாய் சொன்னதிலேயே, அது உண்மை காரணம் இல்லை என்று புரிந்துகொண்டான்.

அவன் மௌனம் காக்க, விளையாடுவதை நிறுத்தி, உண்மை காரணத்தை சொன்னாள். “பட்டப்படிப்பு எல்லாம் படிச்சு, தொழில்ரீதியா தினமும், முன்னறிமுகம் இல்லாத பலர சந்திச்சி பேசுறவருக்கே, எப்படி ஒருத்தர் மனச புண்படுத்தாம பேசணும்ன்ற அடிப்படை நாகரிகம் தெரியுல… இதுல, உன்னையும், உங்க வீட்டையும் மட்டுமே உலகமா நெனச்சு வாழுறவங்ககிட்ட அந்த பக்குவத்த எப்படி எதிர்ப்பார்க்க முடியும் சொல்லு…”அது அவள் மகன் மீது வைத்த அன்பின் ஆழம் என்று உணர்த்த,

அவள் பக்குவமான விளக்கத்தில் நெகிழ்ந்து போனவன், “தாங்க்ஸ் மீரா!” தன் நிலமையை புரிந்துகொண்டதற்கு நன்றி தெரிவித்தான்.

“எழுத்தாளரே! யாருக்கு வேணும் உங்க தாங்க்ஸ்! நீங்க வீம்பு பிடிக்காம, வீட்டு பத்திரத்த எடுத்துட்டு வந்து அம்மாகிட்ட கொடுத்திறுந்தீங்கனா, இந்நேரத்துக்கு, அவங்க கையால விருந்தே சாப்பிட்டு இருப்பேன்.” சந்தர்ப்பம் பார்த்து அவன் பிடிவாதத்தை சுட்டிக்காட்டினாள்.

அதற்கு மென்மையாக சிரித்தவன், “மேடம், உங்க சேமிப்பு பணத்த, ‘நம்ம பணமுன்னு’ சொல்லி என்கிட்ட கொடுத்தா மாதிரி, என்னோட இந்த முடிவுக்கு பின்னாலையும், நம்ம வாழ்க்கைக்கான நன்மை இருக்கு!” தன் முடிவில் உறுதியாய் இருந்தவன், அவள் வழியிலேயே பேசி மடக்கினான்.

கைப்பேசியில் சார்ஜ் போகும் வரை தன்னவளுடன் பேசியவன், விடுமுறை நாட்களையும் இனிதே செலவிட்டு ஊருக்கு திரும்பினான்.

ஒரு மாதத்திற்கு பிறகு…

ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில்….

கைப்பேசியில், தன்னவளை அழைத்தவன், அவள் குரல் கேட்டதும், “மீரா! ரெடியா இரு! ஒரு மணி நேரத்துல நான் உங்க வீட்டுக்கு வரேன்!”

“ஹரி! நான் வீட்டுல இல்ல டா! என்ன விஷயம்?” மெல்லிய குரலில் அவள் வினவ,

“நம்ம நாலாவது குழந்தை ரெடி! ஸ்ரீராம் வந்து வாங்கிக்க சொன்னாரு!” அவள் மொழியிலேயே பதிலளித்தான்.

“நாம நாளைக்கு தானே போகறதா திட்டமிட்டிருந்தோம்!” குரலில் உற்சாகமில்லாதவளாய் கேட்க, ஹரி முகம் சுருங்கியது.

ஸ்ரீராம் தன் மனைவிக்கு பிரசவ வலி வந்த நிலையில், ஊருக்கு புறப்பட வேண்டியதாயிற்று. அவர் திரும்பி வர, பத்து நாட்கள் மேலாகும் என யூகித்தவர், ஹரியிடம், தயாராய் இருக்கும் முதல் பிரதியை உடனே வந்து பெற்று கொள்ளும்படி கேட்டுகொண்டார். அவனும் காலதாமதம் வேண்டாம் என்று நினைத்து மீராவை அழைத்தான்.

தவிர்க்க முடியாத காரணத்தால் திட்டம் மாறியதாய் அவன் விளக்க,

“இல்ல ஹரி!” மறுத்து காரணம் சொன்னவள், “என்னால வர முடியாது டா! அப்பா செம்ம டென்ஷன் ஆயிடுவார். நீ போய் வாங்கிட்டு வா; நான் சாயங்காலம் உன்ன நேருல சந்திக்கறேன்…” சூழ்நிலை கைதியாய், அவள் மன்றாட, அந்த பக்கத்தில், மௌனம் மட்டுமே நீடித்தது.

சகலமானவள் வர மறுத்ததும், அவளிடம் சண்டையிட்டானா, சமாதானம் பேசினானா; இல்லை அவளை சிக்கலில் விட்டானா, பதில் சொல்லும், அவன் அவள் மீது வைத்த அன்பின் ஆழம்…