அன்பின் ஆழம் – 27.1

கவனமாக திட்டமிட்டு செய்தது எல்லாம், திசைமாறி போன நிலையில், இந்த திடீர் பயணம் தங்கள் காதல் கதைக்கு திருப்புமுனையாய் மாறும் என்று பெரும் நம்பிக்கை கொண்டிருந்தாள் மீரா. தன்னவள், அம்மாவின் கடுஞ்சொற்களுக்கு பலியாக போவதை எண்ணி, கவலையில் இருந்தான் ஹரி. வீட்டுப்பத்திரத்தை திரும்ப பெறாததை பற்றி, அம்மாவிடம் விளக்கிய போது, அவள் வருத்தத்தில் பேசிய வார்த்தைகள், இன்னும் அவன் காதில் எதிரொலித்து கொண்டு தான் இருந்தது.

 ‘போவோமா ஊர்கோலம் ….
பூலோகம் எங்கெங்கும்…’

பாடல் ஒலிக்க, பயணிகள் நிரம்பிய அந்த டௌன் பஸ், சாலையில் பறந்து கொண்டிருந்தது. இதமாக வீசிய காற்றில், ஜன்னல் வழியே தலை நீட்டி இயற்கை காட்சிகளை பிரமிப்பாய் கண்டுகளிக்கும் அவளின் கூந்தலும்  இசைகேற்ப அசைந்தது. 

“ஹரி! அங்க பாரு டா! அந்த குட்டி பையன், அத்தன ஆட்டையும் எவ்வளவு அழகா மேய்க்குறான்!” கண்கொட்டாமல் பார்த்தவள், அருகில் அமர்ந்திருக்கும் தன்னவனின் தோளை தட்டி உற்சாகமாய் சொன்னாள்.

பஸ்ஸில் ஏறியதிலிருந்து, கண்ணில் காண்பதை எல்லாம் மலைப்பாய் பார்த்து ஓயாமல் விமர்சித்துகொண்டே வந்தாள் மீரா. அவள் பேச கேட்டவன் தான் சலித்து போனான்.

“இதுல என்ன டி இருக்கு!”, பெருமூச்சுவிட்டவன்,

‘…கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்
கற்பனையில் மிதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்…’

தொடர்ந்து ஒலித்த பாடல் வரிகளை கேட்டு, பக்கென்று சிரித்தான்.

“நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கிற?” கண்ணை உருட்டி கேட்டாள்.

மனதில் தோன்றியதை எண்ணி இடம் வலமாக தலையசைத்து புன்னகைத்தவன், “அது… அந்த பாட்டுல வர கதாநாயாகி மாதிரியே நெல் வயலையும், சூரியகாந்தி தோட்டத்தையும் பிரம்மிப்பா பாக்குறயே… அதான்…” விளக்கம் சொல்ல,

“பார்க்காம…” உதட்டை சுழித்தவள், “இதெல்லாம் நான் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில தான் பாத்திருக்கேன்.” என்றாள்.

நகர்புறத்திலேயே பிறந்து வளர்ந்தவளுக்கு, இதெல்லாம் பேரதிசயமாக தான் தோன்றும் என்று புரிந்து கொண்டான். அவள் பக்கம் திரும்பி,

“எங்க ஊருல அழகான நீர்வீழ்ச்சி ஒண்ணு இருக்கு! அங்க அழைச்சிட்டு போகவா?” அக்கறையாய் கேட்டான்.

“அதெல்லாம் வேண்டாம் எழுத்தாளரே!” மறுத்தவள், “முதல்ல, என் மாமியார சந்திச்சு பேசணும்” காரியமே கண்ணாய் பேசியவள், “நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் அங்க போலாம்!” என்று கண்சிமிட்டினாள்.

இத்தனை காதல் கொண்டவளின் மனதை நோகடிக்க போகிறேனே என்று அவன் மனம் பதறியது. இன்னும் கொஞ்சம் நேரமாவது மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று, மீதமுள்ள பயணத்தில் அவள் வெள்ளந்தி மனம் பறைசாற்றிய இயற்கை காட்சிகளை அவளுடன் சேர்ந்து இரசித்தான்.

பேருந்திலிருந்து இறங்கியவனின் இதயம் இன்னும் வேகமாய் துடித்தது. இவர்கள் சந்திக்காமல் இருக்குமாறு ஏதாவது அதிசயம் நிகழாதா என்று எதிர்பார்த்தவன், வீட்டின் வாசலை நெருங்கினான். மீரா முகத்தில் எந்த படபடப்பும் இல்லை. அவன் தயக்கத்துடன் வாயிற் கதவை திறந்தான். அவளோ, அவன் ஏதோ பரிசுப்பொருள் திறந்தது போல, கண்கள் விரித்து சுற்றிப்பார்த்தாள்.

வீட்டின் வாயிலில் செழித்தோங்கிய வேப்பமரத்தின் இலைகள் காற்றில் கலந்து அதன் நறுமணத்தை பரப்பியது. வாசுகியின் கலைநயத்தை நுழைவாயிலுக்கு அழகு சேர்த்த மாக்கோலம் பறைசாற்றியது. இருபக்கமும் படர்ந்து வளர்ந்திருந்த துளசிச்செடிகளை பார்த்தவளுக்கு அந்த இடம் ஒரு பிருந்தாவனமாகவே காட்சியளித்தது.

‘ஹரி வாழும் வீடல்லவா… அப்படி தான் இருக்கும்!’ மனதில் நினைத்தவளின் உதடுகளில் மெல்லியதாய் ஒரு புன்னகை கோடு.

பத்தடி உள்ளே நடந்து வந்தவள் கண்ணை பறித்தது, அந்தி மாலை பொழுதை அழகூட்ட மொட்டுவிட்டிருக்கும் அந்த மல்லியும் முல்லை கொடியும். அதிலும் அந்த திண்ணை மேடைகளை கண்டவளுக்கு, வாசுகி வரைந்த ஓவியம் தான் நினைவுக்கு வந்தது. அந்த ஓவியத்தில் வரைந்திருந்ததை போலவே தனக்கும் வாசுகி தலை பின்னி, பூச்சூட்டுவாள் என்று கற்பனையில் மிதந்தவளை திடுக்கிடச் செய்தது அந்த குரல்.

“நண்பன் திருமணத்துக்கு போன இடத்துல, உன் கல்யாணத்தையும் முடிச்சிட்டு வந்துட்டியா!” வார்த்தைகளை உமிழ்ந்தாள், வாயிற் கதவு திறக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்த வாசுகி.

மகனுக்கு, மீராவை தவிற குறிப்பிட்டு சொல்லும்விதமாக, தோழிகள் வேறு யாரும் இல்லை என்று அறிந்தவள், வந்தவள் மீரா தான் என்று தெரிந்துகொள்ள, அவளுக்கு அறிமுக வசனங்கள் எதுவும் தேவைப்படவில்லை.

“ஏன் மா இப்படி எல்லாம் பேசுற; அவ உன்ன நேருல சந்திக்கணும்னு வந்திருக்கா!” மகன் பொறுமையாய் விளக்க,

சுட்டெரிக்கும் பார்வையில் ஏற்ற இறக்க, மீராவை பார்த்தவள், “என்னையா; இந்த வீட்டையா!” மீரா சுற்றிமுற்றி வீட்டை கண்களால் அலசியதை கவனித்தவள் குத்தலாய் கேட்டாள்.

ஹரி விளக்கம் சொல்லுவதற்குள், மீரா முந்திக்கொண்டாள். “உங்கள பார்க்க தான் மா வந்தேன்!” என்றவள், “அப்புறம்… அம்மா, அப்பான்னு நீங்க எல்லாரும் எங்களுக்கு இருக்கறப்ப, போன இடத்துல, நாங்க திருமணம் செஞ்சுக்க வேண்டிய அவசியமும் இல்ல… அவசரமும் இல்ல…” அழுத்திச் சொல்லி,

“எல்லாத்தையும் வாசலிலேயே பேச வேண்டாம்னு நினைக்கறேன்!” என்று உரிமையோடு வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்தாள்.

‘மீரா என்னடி பண்ணற!’ மனதில் நினைத்தவன், “ஒரு மணி நேரம் முன் வெகுளிதனமாக நடந்துகொண்டவளா, இப்படியெல்லாம் பேசுகிறாள் என்று திடுக்கிட்டு, அவளை பின்தொடர்ந்தான்.

‘எவ்வளவு திமிர்; எத்தனை வாய்கொழுப்பு;’ முணுமுணுத்தவள், தன் வீடு என்ற உரிமையை நிலைநாட்ட கம்பீரமாய் உள்ளே சென்றாள்.

அவ்வளவு கடுமையாக பேச வேண்டும் என்று மீரா திட்டமிடவில்லை; வீட்டுப்பிரச்சனை, ஊர்பார்க்க பெரிதாகிவிட கூடாது என்று தோன்றியது அவளுக்கு. தழைந்து பேசி, வாசுகியை ஜெயிக்க முடியாது என்றும் அறிந்திருந்தாள். வாசுகி தன்னை உள்ளே அழைப்பாள் என்று எதிர்பார்ப்பதும் முட்டாள்தனம் என்று உணர்ந்தவள், திடமாக பேசி, யார் சொல்லுக்கும் காத்திராது உள்ளே நுழைந்தாள்.

“என்னடி ஆச்சு உனக்கு!” தன்னவள் காதில் கிசுகிசுப்பதற்குள், வாசுகியும் உள்ளே வந்தாள். இருவரையும் ஏளனமாய் பார்த்தவள், வலதுபுறம் இருந்த அறைக்குள் தலைநிமிர்ந்து நடந்தாள்.

“என்ன நடந்தாலும், ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா பேசு டி!” தாழ்ந்த குரலில் கெஞ்சியவன், அம்மாவிடம் மன்றாட அறையை நோக்கி நடந்தான்.

சொல் பேச்சு கேட்பளா இவள்! அவன் பேச்சை காதில் கூட வாங்கினாளா என்பது சந்தேகம் தான். அன்பும் உபசரிப்பும் உடனே கிடைக்காது என்று தெரிந்தும் துணிவாக, மாமியாரை சந்திக்க வந்தவளின் முகத்தில் பயமோ, கவலையோ இல்லை.

மணம் முடித்து புகுந்து வீட்டிற்குள் வந்தது போன்ற மிதப்பில், நின்ற இடத்திலிருந்து வீட்டை கண்டுகளித்தாள்.

பளபளக்கும் கிரானைட் தரையில் வலம் வந்த கால்கள், காவித்தரையின் ஸ்பரிசத்தில் நெகிழ்ந்து போனது. கண்ணை பறிக்கும் அந்த வீட்டின் மையப்பகுதியில் இருந்த முற்றத்தை நோக்கி நடந்தாள். தலைத்தூக்கி பரந்து விரிந்த வானத்தை பார்த்து ஆழ்ந்து சுவாசித்தாள்.

அஸ்தமனமாகும் சூரியனின் செம்மஞ்சள் கதிர்கள் பரப்பும் ஒளிக்கும், முகத்தை தழுவும் இதமான தென்றல் காற்றிர்க்கும் ஈடாகுமா இந்த சாண்டிலியர் விளக்குகளும், ஏசி பெட்டிகளும் என்பது போல் தோன்றியது அவளுக்கு. பாரம்பரியத்தின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் அந்த வீட்டின் பெருமையை சில நொடிகளிலேயே உணர்ந்தாள் மீரா.

முற்றத்தில் நின்றவளுக்கு வீட்டின் அத்தனை அறைகளும் கண்ணில் பட்டது. நேரெதிரே இருந்த சமையலறையை பார்த்தவுடன், தன்னவனுக்கு ஏலக்காய் டீ தயாரிக்க, அவள் மனம் விழைந்தது. அதன் வலதுபுறம் அமைந்த சுழல் படிகளை கண்ணுக்கு எட்டும் வரை பார்த்தவளின் எண்ணோட்டம், தன்னவனுடன் சேர்ந்து வாழும் நாளை கற்பனை செய்தது.

 இடப்பக்கம் இரு அறைகள், வலப்பக்கம் இரு அறைகள் என மொத்தம் இருந்த நான்கு அறைகளில், இதில் தன்னவன் அறை எது என்று சிந்தித்தவள் முகத்தில் வெட்கப்புன்னகை. அறைகளின் இடையில் இருந்த சுவர்களுக்கு வாசுகியின் ஓவியங்கள் உயிரூட்டின. அருங்காட்சியகத்திற்கு வந்ததை போல், ஒவ்வொன்றையும் நிதானமாக பார்த்து இரசித்தவளின் கண்கள், அறை வாயிலில் நிற்கும் தன்னவனின் உருவம் பார்த்து நின்றது.

தலையை தொங்கப்போட்டு அவள் அருகே வந்தவன், “அம்மா இன்னும் கோவமா தான் இருக்காங்க மீரா! அவங்க வெளிய வந்து உன்கிட்ட பேசுவாங்களான்னு கூட தெரியல டி!” எப்படி சொல்வது என்று சங்கடப்பட,

அவள் கண்கள் தன்னவனை தாண்டி மீண்டும் அந்த அறையை பார்த்தது.

கையில் ஒரு கூடைப்பையுடன் வெளியே வந்தாள் வாசுகி. அவர்கள் இருப்பதை பொருட்படுத்தாமல், வாசலை நோக்கி விரப்பாக நடந்தாள்.

“அம்மா! உன்ன பார்க்க தானே மா மீரா இவ்வளவு தூரம் வந்திருக்கா!” விடாமல் மகன் நச்சரிக்க,

மகன் பக்கம் திரும்பி முறைத்தவள், “நானா வர சொன்னேன்!” கேள்வியை திருப்பி, மீராவை பார்த்து, “அழையா விருந்தாளிகளை எல்லாம் உபசரிக்கணும்னு எனக்கு அவசியம் இல்லை; இன்னைக்கு பிரதோஷம்; கோவிலுக்கு போய் அந்த சிவபெருமான தரிசனம் பண்ணாலாவது புண்ணியம்!” சொன்னவள், கதவை நோக்கி நகர்ந்தாள்.

ஹரி விடாமல் அவளிடம் வாதம் செய்ய, அவன் கையை இறுக பிடித்து, அமைதியாய் இருக்க சொல்லி கண்ஜாடை காட்டினாள் மீரா. அவனும் தலையசைத்து நின்றான்.

“நீங்க கோவிலுக்கு போயிட்டு வாங்க மா! பரவாயில்ல!” தன்மையாய் சொன்னவள் மனதில், ‘அந்த சாமியாவது எங்க காதல உங்களுக்கு புரிய வைக்கட்டும்!’ என்று நினைத்தாள்.

இவள் என்ன, எனக்கு அனுமதி தருவது என்று நினைத்தவள், சண்டையிட அவர்களை திரும்பி பார்த்தாள். ஆனால், வாசுகி வாய்திறந்து பேசும் முன், மீராவே தொடர்ந்து பேசினாள்.

“உங்களுக்கு, ஹரி என்ன கல்யாணம் செஞ்சுக்க நினைக்குறது பிடிக்கலன்னு எனக்கு தெரியும். ஆனா, என்கிட்ட முகம் கொடுத்து பேசாம… ஏன் என்ன பிடிக்கலன்னு காரணம் சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்!” கேட்டவள், அவள் அருகில் சென்று,

“நீங்க எதிர்ப்பார்க்கிற மருமகளா, என்ன முடிஞ்ச அளவுக்கு மாத்திக்க, நான் தயாரா இருக்கேன்! அதுக்கு வாய்ப்பே கொடுக்காம, இப்படி வெறுப்ப காட்டினா, அது எந்த விதத்துல நியாயம்னு சொல்லுங்க?” மனதில் உள்ளதை கொட்டினாள் மீரா.

செய்வதை எல்லாம் செய்துவிட்டு, அவள் அப்பாவியாக பேசுவது போல் தோன்றியது வாசுகிக்கு. மனதில் அடக்கி வைத்த எரிச்சலும் கோபமும், விஸ்வரூபம் எடுத்தது.

“காரணம் தானே வேணும் உனக்கு!” கர்ஜித்தவள், கண்கள் உருட்டி, அதிகாரமாய் பேசினாள்.

“ஆபிஸ்ல அதிகாரம் செய்யறுது போதாதுன்னு, வாழ்நாள் முழுக்க அவன் உனக்கு அடிமையா இருக்கணும்னு, என் மகன கல்யாணம் செஞ்சுக்க நினைக்குற; எழுதனும்ன்ற அவன் பலவீனத்த, உனக்கு சாதகமாக்கி, பணவுதவி செய்யுறா மாதிரி செஞ்சு, எங்க வீட்டு பத்திரத்த வாங்கி வெச்சுகிட்ட… இவ்வளவு காரணம் போதுமா… இல்ல இன்னும் சொல்லவா?” கேட்டு, பதில் வராது என்ற ஆணவத்தில் பின்முதுகை காட்டி நகர்ந்தாள்.

மீரா சமைத்த உணவை உண்ட நாக்கு, ருசியும், அன்பையும் மறந்து பேசுவதை போல் இருந்தது ஹரிக்கு. அம்மாவின் குத்தல் பேச்சில், தன்னவள் இடிந்து போயிருப்பாள் என்று வருந்தினான் ஹரி.

“கொஞ்சம் நில்லுங்க மா! உங்க ரெண்டு காரணத்துக்கும் என்கிட்ட விளக்கம் இருக்கு! கேட்டுட்டு கிளம்புங்க!” உறுதியாக சொன்னவளை, தாயும், மகனும் ஆர்வமாய் பார்த்தனர்.

“உங்களுக்கு என்ன பற்றி எதுவும் தெரியாது… அதனால அப்படி பேசுறீங்க… பரவாயில்ல!” சொல்லி மீண்டும் அவள் எதிரே வந்து நின்றவள்,

“பணத்தையும், பதவியையும் பார்த்து மயங்குபவரா உங்க பிள்ளை?” அதிரடியாய் கேட்டவளின் கண்களை பார்க்காமல் இருக்க முடியவில்லை வாசுகியால்.

மீரா, மென்மையாக மேலும் பேசினாள். “தன் ஆசைகளையும், கனவுகளையும், புறம்தள்ளினாரு; தாய் மனசு நோகக்கூடாதூன்னு, உங்களுக்கு பிடிக்கும்ன்ற ஒரே காரணத்துக்காக வங்கி வேலையில சேர்ந்தாரு; இந்த நற்குணங்கள் பார்த்து தான் அவர்மேல எனக்கு ஈர்ப்பு வந்துது. தாய் மனம் கோணாது நடக்கும் பிள்ளை, மனைவியையும் நல்லா பார்த்துப்பாங்கன்னு சொல்லுவாங்களே… அது உங்களுக்கு தெரியாதா? அத நம்பி தான் நான் அவர காதலிச்சேன்!” விளக்கம் கொடுத்து, தன்னவன் அருகில் சென்றாள்.

“அவர் திறமைக்கும், உழைப்புக்கும், தொட்டதெல்லாம் துலங்கும். உண்மைய சொல்லணும்னா, அவர் நற்குணத்துக்கு, நான் தான் அடிமையானேன்;” நெகிழ்ந்தவள், அவன் கை இடுக்கில், தன் கையை வளைத்து, அவனை தலைநிமிர்ந்து பார்த்து, “எனக்கு எப்பவுமே, அவர் ஹீரோ தான்!” அழுத்திச் சொல்லி, தன் அன்பை வலியுறுத்தினாள்.

ஒவ்வொரு இடத்திலும், தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசும் அவள் அன்பில் மெய்சிலிர்த்து போனவன், அருகில் இருக்கும் தன்னவளின் கண்கள் பார்த்து புன்னகைத்தான்.

சிலை போல நின்றவள் அருகில் சென்றாள் மீரா. வீட்டை கண்ணால் காட்டியவள், “அதே மாதிரி, இந்த வீட்ட எவ்வளவு பொக்கிஷமா நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியும்! ஹரியோட கட்டாயத்துனால தான், வீட்டு பத்திரத்த வாங்கிகிட்டேன்.” சொன்னவள் பார்வை, ஒரு கணம் தன்னவனை பார்த்து திரும்பியது. “அவர் பணத்த திருப்பி கொடுத்த பிறகும், நானே வெச்சுகிட்டு இருக்கேன்னா, அது, நான் அவர் தன்மானத்திற்கு கொடுக்குற மரியாதை. அது எப்பவும், உங்களுக்கு மட்டும் தான் சொந்தம்; அதுல எந்த மாற்றமும் இல்ல!” நம்பிக்கையூட்டியவளை தலைநிமிர்ந்து பார்த்தாள் வாசுகி.

“நம்புங்க மா!” கண்கள் கெஞ்ச, “ஒரு பொண்ணு தாலிக்கயிற எந்தளவுக்கு போற்றி, பேணிக்காப்பாளோ, அந்தளவுக்கு, அத பத்திரமா வெச்சிருக்கேன்; அது உங்கள விட்டு எங்கையும் போகாது!” உளமாற சொன்னவளின் பேச்சில், வாசுகி மனம் தடுமாறியது என்னமோ உண்மைதான். ஆனால் அதை ஒப்புக்கொள்ள அவள் சுயம் தடுத்தது.

“அவ்வளவு தானே! நான் இப்போ கிளம்பவா!” அங்கிருந்து நகர்வதிலேயே குறியாய் இருந்தாள் வாசுகி.

“இவ்வளவு பொறுமயா பேசுறாளே… அவளுக்கு ஏதாவது பதில் சொல்லிட்டு போ மா!” ஹரி குறிக்கிட,

“என் முடிவ நான் அப்போவே சொல்லிட்டேன் ஹரி! அதுல எந்த மாற்றமும் இல்ல!” திடமாய் சொல்லி நகர்ந்தாள் வாசுகி.

தன்னவனுக்கு கண்ஜாடை காட்டி, அவளை தடுக்க வேண்டாம் என்று சொன்னாள் மீரா.

வாசுகி அவ்விடத்தை விட்டு விலகிய பின்பும், காதலர்களுக்கு இடையே சில நொடிகள் மௌனம் நிலவியது. ஹரி பேச்சை கேட்காது, தான் அத்துமீறி நடந்ததாய் எண்ணி அவள் பயந்தாள். அம்மாவின் செயலுக்கு, தன்னவளிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று அவன் தயங்கினான்.

“இதுக்கு தான் நான் முதல்லேயே சொன்னேன் மீரா! அவங்கள பார்த்து பேசி ஒண்ணும் நடக்க போகிறது இல்லன்னு!” தொடங்கியவன், அவள் கன்னத்தை வருடி, “இப்போ தேவையில்லாம நீ இந்த பேச்ச எல்லாம் கேட்க வேண்டியதா போச்சு பாரு!” மனம் வருந்தினான்.

இல்லை என்று மறுப்பாய் தலையசைத்து மென்மையாக சிரித்தவள், “உண்மைய சொல்லட்டுமா டா! இப்போ தான் மனசுக்கு ரொம்ப லேசா இருக்கு ஹரி! இத்தன நாளா, அவங்க என்ன பற்றி என்ன நினைக்குறாங்களோ, நேருல பார்த்தா என்ன சொல்லுவாங்களோன்னு கற்பனை செஞ்சு செஞ்சு மூளையே வெடிச்சுடும் போல இருந்துது. மனசுல இருக்குறத எல்லாம் அவங்க கிட்ட கொட்டினவுடனே நிம்மதியா ஃபீல் பண்ணறேன்!” என்றாள்.

“நான் வருத்த பட கூடாதூன்னு தானே ஏதேதோ பேசி சமாளிக்குற!” அவள் பதிலில் திருப்தி அடையாதவனாய் வினவினான்.

 “உன்கிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன ஆகப்போகுது.” மென்மையாக சிரித்தவள், “எழுத்தாளரே! உங்ககிட்ட மட்டும் தான் என்னோட சுகதுக்கம் எல்லாம் வெளிப்படையா காட்டிக்க முடியும்; பாருங்க, இந்த முறை நான் உங்ககிட்ட சண்டையே போடுல!” என்று சொல்லி கண்சிமிட்டினாள்.

உண்மைதான் என்பது போல் தலையசைத்தவன், சற்றுமுன் அவள் தன்னை பற்றியும், வீட்டை பற்றியும் அம்மாவிடம் எவ்வளவு உயர்வாக பேசினாள் என்று எண்ணி அசைப்போட்டான்.

முகவாயை பிடித்து அவள் தலையை நிமிர்த்தியவன், “உனக்கு என்ன அவ்வளவு பிடிக்குமா டி!” காதல் ததும்பும் குரலில் கேட்டான்.

இமைகள் குடைசாய தரையை பார்த்தவள், “பிடிச்சதுனால தானே, அரவிந்த் கல்யாணத்துல என் ட்ரெஸ்ஸிங்க் எப்படி இருக்குன்னு கேட்டு உன் பின்னாடியே வந்தேன்… என்ன கொஞ்சமாவது மதிச்சியா டா, முசுடு எழுத்தாளரே!” அவள் செல்லம் கொஞ்ச, அவன் கவலைகள் மறந்து வாய்விட்டு சிரித்தான்.

“பின்னாடி வந்தா எப்படி தெரியும்; முன்னாடியில்ல வந்திருக்கணும்!” அவள் பேசியதில் பிழை கண்டறிந்தவனை போல சீண்ட,

உதட்டை சுழித்தவள், “இந்த ஜோக்குக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல!” என்று முறைத்தாள்.

அவள் முகத்தை மொத்தமாக கையில் குவித்தவன், “நீ என் இராஜகுமாரி டி!” அழுத்திச் சொல்லி, “நான் உன்கிட்ட சொல்ல நெனச்சத எல்லாம் உனக்கே உனக்காக எழுதிகிட்டு இருக்க அந்த புத்தகத்துல குறிப்பிட்டிருப்பேன்; படிச்சு எப்படி வெட்கபட போறன்னு மட்டும் பாரு!” குறும்பாய் பார்த்து கண்சிமிட்டினான்.

“நீங்க கைத்தேர்ந்த எழுத்தாளர் தான்; அதுக்காக, எல்லாத்தையும் எழுதியே காட்டணுமா….அப்பப்போ கொஞ்சம் வாய்திறந்தும் சொல்லலாமே… தப்பு இல்ல!” என்று மேலும் குழைந்து பேசி அவன் மனதை கொள்ளை கொண்டாள்.

வெகு நேரமாய் அவள் எதுவும் சாப்பிடவில்லை என்று உணர்ந்தவன், “சரி! முதல் முதல்ல இராஜகுமாரி நம்ம வீட்டுக்கு வந்துருக்கீங்க; சாப்பிட என்ன எடுத்துட்டு வரட்டும்?” அவள் நெற்றியில் முட்டி கேட்டான்.

“ஒண்ணும் வேண்டாம் டா! எனக்கு பசிக்குல!” உண்ண மறுத்தாள்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எதையாவது உண்ணும் அவள் குணம் தெரிந்த அவனுக்கு, அதை பொய் என்று உடனே உணர முடிந்தது.

“சரி வா! எனக்கு ஏலக்காய் டீ போட்டு தா! அஞ்சு நாளைக்கு அப்புறம் தான் உன் கையால திரும்ப குடிக்க முடியும்” ஏக்கமாய் சொல்லி, அவள் கைப்பிடித்து அழைத்துச் செல்ல முயன்றான்.

அவன் கேட்டதை செய்ய வேண்டும் என்று மனம் விழைந்த போதும், மறுத்து பேசி, “வா! பக்கத்துல ஏதாவது ஹோட்டல் இருந்தா அங்க போய் டீ குடிக்கலாம்!” யோசனை சொன்னாள்.

“என்ன ரோஷமா!” கேட்டவன் பார்வை அவளை சுட்டெரித்தது.

“ச்சே ச்சே… அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல டா!” மென்மையாய் சிரித்தவள், “அம்மா மனசு வருத்த படறா மாதிரி நம்ம எதுவும் செய்யக்கூடாது.” உண்மை காரணத்தை சொல்ல, அவனும் அதை புரிந்து கொண்டான்.

“வா! நான் உனக்கு வீட்ட சுத்தி காட்டுறேன்; அப்புறம் எங்க மாமா வீட்டுக்கு போய், அத்தை கையால டீ குடிக்கலாம்… அவங்களுக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்!” திட்டம் சொல்ல,

“ம்ஹூம்! வேண்டாம் ஹரி! அம்மா தான் எனக்கு வீட்ட சுத்தி காட்டணும்; அத்தை-மாமா உறவுகள் எல்லாம் அம்மவோட மனசுல இடம் பிடிச்சதுக்கு அப்புறம் தான்!” திடமாய் மறுக்க,

தன் அம்மா எவ்வளவோ வெறுத்து பேசியும், அவளுக்கு மீண்டும், மீண்டும் முன்னுரிமை கொடுக்கும் இவளை என்ன சொல்வது என்று மெய்சிலிர்த்து போனான். தன்னையும் அறியாமல், அவன் கண்கள் ஈரமாக,

அதை துடைத்துவிட்டவள், “எழுத்தாளரே! அப்பப்போ கொள்கைய மறந்து காதலிக்க ஆரம்பிச்சுடுறீங்க” கிண்டல் செய்து, “இந்த நற்பண்பு எல்லாம் என்னோட ஹரி, அவர் மாமனார்கிட்ட நடந்துக்கிறத பார்த்து கத்துக்கிட்டது” விளக்கம் சொல்ல, கன்னத்தில் குழிவிழ சிரித்தவன் கண்கள் மேலும் பளபளத்தது.

தன்னை புரிந்து கொள்ளாதவர்கள் மீது காட்டும் அக்கறையை, தன்னையே உலகம் என்று நினைக்கும் இவள் மீது காட்ட ஏன் இத்தனை தயக்கம் என்று ஒரு கணம் தடுமாறியவன்,

“மீரா! ஐ… ”, உதட்டை குவித்தான்….

தொடர்ந்து படிக்க Click Here –> அன்பின் ஆழம் 27.2