அன்பின் ஆழம் – 26.2
கீதாவிடம், அஞ்சலியை பற்றி முழுவதுமாக சொல்லாதது தன் தவறு என்று உணர்ந்தான் அரவிந்தன். தன்னவளிடம் கண்ஜாடையில் மன்னிப்பு கேட்டவன்,
“அந்தாக்ஷரி விளையாடலாமா?” என்று பேச்சை திருப்பினான். அனைவரும் உடனே உற்சாகமாய் சம்மதம் தெரிவித்தனர்.
நேரம் போவதுகூட தெரியாமல், அனைவரும் போட்டிப்போட்டு உற்சாகமாய் பாட, மகேஷ் முறை வந்தது. ‘எ’ என்ற எழுத்தில் பாட வேண்டியவன், சிந்தனையில் கரைந்தான். பெரும்பாலான பாடல்களை பாடிவிட்ட நிலையில், என்ன பாடுவது என்று யோசிக்க, திடீரென்று ஒரு பாடல் நினைவுக்கு வந்து, முகமும் பிரகாசித்தது.
‘என் ஆசை மைதிலியே என்னை நீ காதலியே
தானே தந்தன்னா தானே தந்தன்னா
அத்தை மவள நினச்சிக்கிட்டு நித்தம் படிச்சேன் நூறு பாட்டு…’
என்று மனைவியை பார்த்து பாடினான். அனைத்து கண்களும் மைதிலி பக்கம் திரும்பியது. அவள் கன்னமெல்லாம் வெட்கத்தில் சிவந்தது. நண்பர்கள் அவளை சரமாறியாய் ஓட்டினார்கள். சிறிது நேரத்தில் சுதாரித்து கொண்டவள்,
“போதும் பா! ஒண்ணுக்கு ரெண்டு காதல் ஜோடிகள் இங்க இருக்கு; அவங்க மனசுல இருக்குறத பாட்டா படிக்க சொல்லுங்க!” புத்திசாலிதனமாக திசை திருப்ப, எல்லோரும், அஞ்சலியை குறிவைத்தனர்.
இவர்கள் அலறல் சத்தத்திலும் நிம்மதியாய் உறங்கும் குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்தாள் அஞ்சலி. தன்னவனை பார்வையால் விழுங்கிய படி தொண்டையை லேசாகச் செருமிக்கொண்டவள்,
‘நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்;
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்புறேன்…’
என்று உளமாற பாடி அரவிந்தனுக்கு கண்களாலேயே நன்றி தெரிவித்தாள். அவள் பாடலை மெச்சியவர்கள், அரவிந்தனை பாட சொல்லி ஓட்டினர். அவன் குறும்பு பார்வையும், நமுட்டு சிரிப்பும் கண்டவளுக்கு, எங்கே இவன், அனைவர் முன்னும் ‘அஞ்சலி பாப்பா’ என்று பாடி கிண்டல் செய்வானோ என்று பயந்தாள். கண்ணசைவால், ‘ப்ளீஸ் வேண்டாம் பா’ என்று அவள் ரகசியமாய் கெஞ்ச, அவள் உள்ளத்தை படித்தவன், இன்னும் அதிக குறும்பாக சிரித்து, அவளை சீண்டினான்.
அருகில் நெருங்கி வருபவன் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், அவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன்,
“…திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப் பாடல் வடித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர் காதலி….”
என்று உச்சஸ்தாயில் பாட, அதை கேட்டு திறந்த கண்கள் குளமானது. காதலில் மணமக்கள் உறைந்து போக, நண்பர்கள் அனைவரும் சேர்ந்து,
‘அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகுக்கு கவிதாஞ்சலி…’
என்று மிச்சத்தை பாடி முடிக்க, அவர்கள் சுயத்துக்கு வந்தனர். காதலில் மிதந்தவன், தன் குவிந்த கைகளால், அவள் முகத்தை ஏந்தி, “ஐலவ்யூ அஞ்சலி!” என்று சொல்லி கண்சிமிட்டினான்.
அவளும் பதிலுக்கு “ஐலவ்யூ அரவிந்த்!” என்று சொல்லி மண்டியிட்டு அமர்ந்தவனை சேர்த்து அணைத்தாள். இருவருக்கும் இடையே குழந்தை நசுங்கிய போதும், அவள் நிம்மதியாகவே உறங்கினாள். அதை கண்ட தாய் பாசம் தான் பதறி, “ம்…ம்ஹும்…” என்று தொண்டை கனத்து குரல் கொடுத்தது.
காதல் பரிமாற்றம் செய்துகொண்ட காதல் ஜோடிகளை ஏக்கத்துடன் பார்த்து நின்றாள் மீரா.
“சரி! சரி! கல்யாணதுக்கு அடுத்து ரெடியா இருக்குற காதல் ஜோடிகள், உங்க மனசுல இருக்க காதல வெளிப்படுத்துங்க!” ஓட்டினாள் மைதிலி. அனைவரும் மீராவை பார்க்க, அவள் கண்களோ, தன்னவனை மட்டும் தான் கவனித்தது.
‘ஐலவ்யூ கூட சொல்லலேன்னு பாடி மானத்த வாங்கிடாத டி!” ஹரி கண்கள் கெஞ்ச, மீரா பாட ஆயத்தமாகி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
‘…உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா?
கண்ணில் காட்சி தோன்றி விட்டால் கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சியில் தான் கற்பனை வளர்ந்து விடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே …’
எத்தனை நாட்களானாலும், அவன் காதலை சொல்லி கேட்க காத்திருப்பேன் என்று, தன்னவனை விட்டுக்கொடுக்காமல் பாடியவளின் அன்பில், அவன் மெய்சிலிர்த்து போனான்.
அவர்கள் காதலுக்கு வரதன் சம்மதம் தெரிவிக்காததை மறைமுகமாக சொல்கிறாள் என்று அரவிந்தன் நினைத்தான்.
“அது சரி! கல்யாணமே பண்ணிக்காம இப்படியே ஜாலியா லவ் பண்ணிகிட்டே இருந்துடலாம்னு சொல்றியா டி!” என்று மைதிலி, அவள் கன்னத்தை கிள்ளி கிண்டல் செய்தாள். மீராவும் அதற்கு மென்மையாக சிரித்து, ஆம் என்பது போல் தலையசைத்தாள்.
ஆளுக்கொரு யூகத்தோடு, மீராவை பாராட்ட, ஹரியின் முறை வந்தது. இத்தனை இன்னல்களிலும், அவனை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் அவள் உயர்ந்த குணத்திற்கு, எதை பாடுவது என்று யோசித்தான். காதலை தான் வாய்விட்டு சொல்லவில்லை; அவள்தான் தன் வாழ்வில் அனைத்துமானவள் என்று அனைவர் முன்னிலையிலும் உணர்த்த தோன்றியது அவனுக்கு.
‘…எண்ணம் நீ வண்ணம் நீ, இங்கும் நீ எங்கும் நீ
வேதம் போலே உந்தன் பேரை ஓதும் உள்ளம் தான்
நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ; இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய; இது அடிமையான மனதோ…’
என்று மெய்மறந்து அவன் பாடிக்கொண்டே இருக்க, கேட்டவள் கண்கள் பளபளத்தது. அவன் ‘ஐலவ்யூ’ சொல்வதை காட்டிலும், அதிக காதலை உணர்ந்தாள்.
“டேய் ஹரி!” மகேஷ் அவன் பாடுவதை குறுக்கிட்டு, “நீதானே நாள்தோறும் நான் ‘பாடக்’ காரணம் இல்ல டா…. நீதானே நாள்தோறும் நான் ‘எழுத’ காரணம்னு பாடு” வரிகளை திருத்தி பாட, அனைவரும் உரக்க சிரித்தனர்.
மகள், மாப்பிள்ளை அறைக்கு சென்று, வெகு நேரமானதை உணர்ந்த சாரதா, அவளை அழைக்க வந்தாள். கும்மாளம் அடித்து கொண்டிருக்கும் நண்பர்களிடம் பணிவாக பேசி, அஞ்சலியை அழைத்தாள். சஹானா கன்னத்தில் முத்தம் பதித்தவள், மனமில்லாமல் நகர்ந்தாள்.
“ஆன்டி! உள்பக்கம் நல்லா பூட்டிக்கோங்க!” கீதா ஜாடை பேச, சாரதா திருதிருவென முழித்தாள். அருகில் நின்ற அரவிந்தன், அவள் காதினை திருகி, “வாய்க்கொழுப்பு உனக்கு ரொம்ப அதிகம்” என்று பொய்கோபம் கொண்டான்.
நண்பர்கள் விடுதிக்கு திரும்ப, ஹரியும், மீராவும், அரவிந்தன் குடும்பத்தினரோடு மண்டபத்திலேயே உறங்கினர்.
திரும்பி பார்ப்பதற்குள் அகிலா வைத்த அலார சத்தம் ஒலித்ததில் அனைவரும் விழித்துக்கொண்டனர். அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன்னரே எழுந்தவர்கள், குளித்துமுடித்து, அலங்காரமும் செய்துகொண்டு தயாராகி இருந்தனர். ஹரி, அரவிந்தனுடன் இருந்தான். மீரா, அகிலா சொன்ன வேலைகளை செய்துகொண்டு அவளுக்கு உதவியாக இருந்தாள்.
நாதஸ்வரமும், மேளமும் இணைந்து ஒலிக்க, அந்த இடமே திருவிழா கோலம் பூண்டது. அங்கு மயில்கழுத்து நிற பட்டுப்புடவையில், இங்கும் அங்கும் நடந்து கொண்டிருக்கும் தன்னவளிடமிருந்து அவனால் பார்வையை திருப்பவே முடியவில்லை.
மேடையில், பூஜைக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்த ஐயர், சில பொருட்களை கேட்க, அகிலா, அவற்றை மீராவிடம் கொடுத்து அனுப்புவதாக சொன்னாள். மணமகன் அறைக்கு சென்று பொருட்களை எடுத்த அகிலா, மீராவிடம் திரும்பி,
“தலையில வெச்சுக்க, உனக்கு மல்லிப்பூ வேணுமா இல்ல முல்லைப்பூ வேணுமா மீரா!” என்று வினவினாள்.
மீரா, உடனே ஹரி பக்கம் திரும்பி, “எது டா வெச்சிக்கட்டும்?” சுருங்கிய கண்களுடன் கேட்க,
அப்படி ஒரு கேள்வியை எதிர்பார்காதவன், “உனக்கு எது பிடிச்சிருக்கோ, அதையே வெச்சுக்கோ!” பட்டும்படாமல் பதில் அளிக்க, இவர்கள் பேச்சை இரசித்த அரவிந்தன்,
“அவளுக்கு பிடிச்சது இருக்கட்டும்; உனக்கு எது பிடிக்கும்னு சொல்லு நண்பா!” அவன் தோளில் தட்டி குறும்பாய் கேட்டான்.
“அதெல்லாம் எனக்கு சொல்ல தெரியாது டா!” சொல்ல மறுத்தான் ஹரி.
இவன் வாய்திறந்து சொல்லமாட்டான் என்று அறிந்தவன், “முல்லைப்பூ வெச்சுகோ மீரா!” சொல்லி, “அப்படியே அஞ்சலிக்கும் போய் கொடுத்திட்டு வா! என்று கண்சிமிட்ட, பெண்கள் அவனை புருவம் உயர்த்தி பார்த்தனர்.
“ஹரி எவ்வளவு பணிவா பேசுறான். உனக்கு ஏதாவது கூச்சம் இருக்கா!” அகிலா, மகனை செல்லமாக கடிந்து கொண்டாள்.
அவன் பக்கம் திரும்பி, “மீராவ இம்ப்ரெஸ் பண்ண சொன்னா, எங்க அம்மாவ இம்ப்ரெஸ் பண்ணி நல்ல பேர் வாங்குற” நண்பனை கிண்டல் செய்தவன்,
“மீரா! நீ கவலைபடாத. இவனுக்கு, காதலிக்குறது எப்படின்னு நான் ட்ரெயினிங்க் கொடுக்கறேன்!” என்றான்.
அதற்குள் அங்கு வந்த அசோகன், ஹரியிடம், பந்தியை மேற்பார்வை பார்க்க சொன்னார். உடனே எழுந்தவன், தன்னவளை முறைத்தபடி நகர்ந்தான்.
சிலமணி நேரத்தில், நண்பர்கள் விடுதியிலிருந்து வர, மகேஷும், ஹரிக்கு உதவியாக வந்தவர்களுக்கு உணவு பரிமாறினான். தன்னவன் விருந்தினர்களுக்கு காசி ஹல்வா பரிமாற, அதை வாசனை பிடித்தவள் போல், கையில் ஒரு கிண்ணத்துடன் அவன் முன் நின்றாள்.
“எனக்கு கொஞ்சம் கொடுங்க எழுத்தாளரே!” முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு கேட்க, அவளை கண்கொட்டாமல் பார்த்தவன், கிண்ணத்தில் இனிப்பை பரிமாறி,
“உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா! அரவிந்த் அம்மா முன்னாடி, இப்படியா கேட்ப!” தனியாக சிக்கியவளை கண்டித்தான்.
உடனே உதட்டை சுழித்தவள், “உன்ன கேட்காம வேற யார கேட்பேன்!” புலம்பி, “சரி இப்போ சொல்லு! என் ட்ரெஸ்ஸிங்க் எப்படி இருக்கு?” இடம் வலமாய் அசைத்து காட்டி கண்சிமிட்டினாள்.
தன் கண்களுக்கு அவள் தேவதையாக தெரிந்த போதும், ஆசை வார்த்தை பேசி அவள் மனதில் சலனம் ஏற்படுத்த கூடாது என்று நினைத்தான்.
“நல்ல திருவிழா பொம்ம மாதிரி இருக்க!” என்று பொய் சொல்ல,
“ச்சீ போடா! முசுடு எழுத்தாளர்!” சிடுசிடுத்து அங்கிருந்து நகர்ந்தாள். ஒரு முறை திரும்பி பார்த்திருந்தால், தன்னவன், முல்லைச்சரம் சூடியவளையே பார்வையால் ஊடுருவுகிறான் என்று அறிந்திருப்பாள்.
அவன் சிந்தையை கலைக்கும் விதமாக, மகேஷ் அவன் தோளை தட்டி, அழைத்தான். நண்பர்கள் மீண்டும் பந்தியில் கவனத்தை செலுத்த, அங்கிருந்த பெண்கள் கூட்டம், ஹரியை பார்த்த வண்ணம் கிசுகிசுத்து கொண்டிருந்தனர். தன்னவளுடன் பேசியதை கேட்டிருப்பார்களோ, அல்லது, அவளை இமைக்காமல் பார்த்து இரசித்ததை கவனித்திருப்பார்களோ என்று தயங்கியவன், அவர்களுக்கு, இனிப்பை பரிமாறினான்.
படபடவென்று அங்கிருந்து நகர முயல, அதில் ஒரு பெண், “ஒரு நிமிஷம் நில்லுங்க!” அதிகாரமாய் அழைத்தாள். அவனும் தயக்கத்துடன் நின்றான்.
“நீங்க… நீங்க… எழுத்தாளர் ஹரி தானே!” கேட்க, புருவங்கள் உயர்த்தி அவர்களை பார்த்தான்.
பூரிப்பு, வெட்கம், மகிழ்ச்சி என்று உணர்ச்சிகளின் கலவையாய், அவளிடம் பணிவாக “ஆமாம்” என்று சொல்ல, அந்த பெண், உடனே, கதையை பற்றி விமர்சனம் சொல்லி பாராட்டினாள். அருகில் இருந்த தோழிகளிடமும், அவனை பற்றி பெருமையாக பேசிக்கொண்டே இருக்க, ஹரி பெரும்பாலும் தலையை மட்டும் அசைத்து கொண்டிருந்தான்.
நண்பன் ஒரே இடத்தில் வெகு நேரமாக இருப்பதை கண்டு மகேஷ் அருகில் வர, உரையாடல் எதை பற்றியது என்று அவனுக்கும் விளங்கியது. மகேஷும் அவன் அருமை பெருமைகளை ஓதினான். சுற்றி இருந்தவர்கள் பார்வை எல்லாம் தன் மீது விழுவதை பார்த்தவன், வெட்கத்தில், “நன்றிகள் மா! நீங்க முதல்ல சாப்பிடுங்க!” சொல்லி, அங்கிருந்து நகர்ந்தான் ஹரி.
மணமக்கள் மிதமாக எரிந்து கொண்டிருக்கும் ஹோமத்திற்கு முன்னால் அமர்ந்து, ஐயர் சொல்லும் மந்திரங்களை உச்சரித்து கொண்டிருந்தனர். அஞ்சலி ஆத்மார்த்தமாக சடங்குகளில் கவனம் செலுத்த, அரவிந்தனோ, கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம், அவள் காதில் கிசுகிசுத்து அவளை வெட்கத்தில் ஆழ்த்தினான். நண்பன் குணம் அறிந்த கீதா, கண்டிப்பான ஆசிரியர் போல, அவ்வப்போது, கண்ணசைவால் அவனை செல்லமாக மிரட்டி கொண்டிருந்தாள். சஹானா கண்ணில் அஞ்சலி படாதவாரு பார்த்துக்கொள்ளும் பொறுப்பில், இரமேஷ் நியமிக்கப்பட்டார்.
முகூர்த்த நேரம் நெருங்க, கையில் அக்ஷதையுடன் மேடை அருகே அனைவரும் வந்து சூழ்ந்து நிற்க, பெற்றோர், பிள்ளைகளின் அருகில் மனதில் பூரிப்புடன் ஆவலாய் நின்று கொண்டிருந்தனர். அஞ்சலி, மீராவை அருகில் இருக்க சொல்லி வலியுறுத்தினாள். அவள் பங்குக்கு ஹரியை தன் அருகில் ஈர்த்துகொண்டாள்.
ஐயர், “மாங்கல்யம் தந்துனானேன….” மந்திரத்தை உச்சரித்து கெட்டி மேளம் ஒலிக்கட்டும் என்று சொல்ல, அரவிந்தன் தன்னவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டே தாலி கட்டினான். சொந்த பந்தங்கள் தம்பதிகளை மனமாற வாழ்த்தி, அஷதை சேர்த்தனர். தன்னவள் விழியில், ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது.
“அகஷதை கண்ணுல விழுந்திருத்தா அஞ்சலி!” கண்ணீர் தேம்பிய அவள் முகத்தை பார்த்து வினவினான் அரவிந்தன்.
இல்லை என்று மறுப்பாய் தலையசைத்தவளிடம், “உனக்கு என்னோட வாழ பயமா இருக்கா?” கேட்க, அருகில் இருந்தவர்கள் அவனை ஆழமாய் பார்த்தனர்.
அதற்கும் இல்லை என்று அவள் தலையசைக்க, “பின்ன ஏன் அஞ்சலி அழற!” என்று மென்மையாக கேட்டவன், “ஐயர் சொன்ன மந்திரத்தோட பொருள் உனக்கு தெரியுமா?” என்று வினவினான். அவனை புதிராய் பார்த்தவள், அதற்கும் தெரியாது என்று தலையசைக்க, அரவிந்தன், அனைவருக்கும் கேட்குமாறு அதன் பொருளை சொன்னான்.
“மங்களம் நிறைந்தவளே! உன்னோடு இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன். என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுபபோகங்களுடன் நூறாண்டு வாழ்வாயாக!”
சொல்லி முடித்தவன், “இந்த நொடி, நம்ம கணவன்-மனைவியா அடி எடுத்து வைக்குற தருணம் அஞ்ஜலி மா! இப்படி அழுது என் மனச காயப்படுத்தாம, சந்தோஷத்த வேற விதமா வெளிப்படுத்தலாமே!” ஏக்கமாய் கேட்க,
கண்களை துடைத்து கொண்டு சிந்தித்தாள். மீரா உட்பட, அவன் விளக்கத்தை கேட்ட அனைவரும் கண்களை துடைத்து கொண்டு புதுமண தம்பதிகளை ஆர்வமாய் பார்த்தனர்.
அஞ்சலி, தன்னவன் அருகில் நகர்ந்து, அவன் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து, தன் அன்பை வெளிப்படுத்தினாள். அவள் செயலில் அவனும் நெகிழ்ந்து போனான். அருகில் இருந்தவர்கள் அரவிந்தன் தந்த விளக்கத்தை பாராட்டி, ஆரவாரமிட, புதுமணதம்பதிகள், இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தனர்.
விருந்தினர் ஆளுக்கொரு திசையாய் நகர, தம்பதிகள் விரல் கோர்த்து, அக்னியை மூன்று முறை வலம் வந்தனர். நண்பன் அருகில் வந்த கீதா, “முத்தம் வாங்க இவ்வளவு பில்ட் அப் அவசியமா?” காதில் கிசுகிசுக்க, பேச வார்த்தையின்றி அசடுவழிந்தான் அரவிந்தன்.
அசோகன், ஹரியை அழைத்து, மொய் பணத்தின் கணக்கு வழக்குகளை நிர்வாகிக்க சொன்னார். மணமக்கள் அருகே அமர்ந்து நேர்த்தியாக பணத்தை அடுக்கி, அவன் நோட்டு புத்தகத்தில் எழுத, கவருக்கு பதிலாக, யாரோ, வெள்ளை காகிதம் ஒன்றை நீட்டினார்கள். தலை நிமிர்த்தி பார்த்தவன் கண்கள் விரிந்தது. பந்தியில் பார்த்த அதே பெண்.
“ஹரி சார்! உங்க ஆட்டோகிரஃப் போடுங்க ப்ளீஸ்!” அவள் கேட்க, மந்திரம் ஓதிக்கொண்டிருந்தவன், தலை திருப்பி நண்பனை பார்த்தான். ஹரியும், அசடுவழிந்து கொண்டே கையெழுத்து இட, அவள் நன்றி தெரிவித்து நகர்ந்தாள்.
“நான் சொன்னது நடந்திடுத்து பார்த்தியா?” கண்சிமிட்டினான் அரவிந்தன். ஐயர் அவனை மந்திரம் சொல்வதில் கவனம் செலுத்த சொல்லி அழைத்தார். ஆனால் அவன் கண்களோ, நண்பன் தொடர்ந்து போடும் ஆட்டோகிரஃபுகளையே கணக்கு எடுத்து கொண்டிருந்தன.
இரண்டு மணி நேரத்தில், விருந்தினர்கள், உணவு அருந்திவிட்டு, அழைப்புக்கு நன்றி தெரிவித்து புறப்பட்டனர். மீராவும், மைதிலியும் அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து கொண்டிருந்தனர். மேலும் சில தாம்பூல பைகளை கேட்க, ஹரி அவற்றை எடுத்து வந்தான். பெரிய சாக்கு மூட்டையிலிருந்து அவற்றை எடுத்து, நேர்த்தியாக மேசையின் மேல் அடுக்க, கையெழுத்து கேட்ட பெண் மீண்டும் அவனை தேடி வந்தாள். அதுவும், இம்முறை நாலைந்து பெண்களுடன்.
“ஹரி சார்! எங்க நீங்க கிளம்பிட்டிங்களோன்னு நெனச்சேன்!” சொன்னவள், ஒரு பட்டியலை அவனிடம் நீட்டினாள். என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்க்கும் தன்னவளை ஒரு நொடி பார்த்த கண்கள், பட்டியலை படித்தது.
“இதுல எங்க முகவரி, தொலைப்பேசி எண் எல்லாம் இருக்கு. உங்க அடுத்த புத்தகம் வெளியிட்ட உடன கண்டிப்பா எங்களுக்கு சொல்லுங்க!” அவள் விளக்க,
மற்றொரு பெண், “உங்க க்ரைம் த்ரில்லர் கூட, வாரயிதழுல போடறதுக்கு பதிலா, புத்தகமா வெளியிடுங்க… சஸ்பென்ஸ் தாங்க முடியல!” ஆலோசனை சொல்ல, சரி என்று தலையசைத்தவன், கண்கள் தன்னவள் பக்கம் திரும்பியது.
அவள் இன்னும் குழம்பியவளாகவே இருந்தாள். பல சந்தர்ப்பத்தில், தன் காதலை சொல்லாமல் அலைக்கழித்த போதும், மற்றவர்கள் முன், அவளை விட்டுக்கொடுக்க அவனுக்கு மனமில்லை.
“எழுதறது மட்டும் தான் நான்; மற்றபடி மார்க்கடிங், டிஸ்ட்ரிபியூஷன் எல்லாம் இவங்க தான்!” சொன்னவன் மீராவை கைகாட்டினான்.
“இவங்க…” யார் என்று அப்பெண்கள், தயக்கத்துடன் கேட்க,
“என் வருங்கால மனைவி!” ஹரி கம்பீரமாய் பதில் சொல்ல, அப்பெண்களை போல், மீராவும் அவனை பார்த்து வியந்தாள்.
வரவேற்பு விழாவை, சென்னையில் வைத்து கொள்ளலாம் என்று தீர்மானித்ததால், மாலையில் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. ஊருக்கு இரவு ரயிலில் போக திட்டமிட்டிருந்ததால், நண்பர்கள், அருகில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களை கண்டுகளிப்பதாக சொல்லி புறப்பட்டனர். ஹரி அங்கெல்லாம் பல முறை சென்று வந்திருந்ததனால், வரவில்லை என்று சொல்லிவிட்டான். மீராவும் ஹரியுடன் இருப்பதாக சொல்ல, அவளையும் அவர்கள் வற்புறுத்தவில்லை.
நுழைவாயிலில் இருந்த பென்ச் ஒன்றில், நண்பர்கள் இரு துருவங்களாக அமர்ந்திருப்பதை, மாடியில் இருந்து கண்ட அரவிந்தன், அவர்கள் உடல் மொழியிலிருந்தே, ஏதோ மனஸ்தாபம் என்று புரிந்துகொண்டான்.
உடனே கீழே வந்தவன், “என்ன டா! உன்ன ஊருக்கு போக வேண்டாம்னு சொல்லி அடம்பிடிக்குறாளா?” குறும்பாக கேட்டு அவர்கள் எதிரில் வந்து அமர்ந்தான்.
அரவிந்தன் திருமணம் முடிந்த கையோடு, ஹரி ஊருக்கு சென்று தன் அன்னையுடன் நாலைந்து நாட்கள் இருந்துவிட்டு வருவதாக ஏற்கனவே திட்டிமிட்டிருந்தது. தன்னவனை பிரிந்து இருக்க வருத்தம் கொள்கிறாளோ என்று எண்ணினான் அரவிந்தன்.
“அவளுக்கும் என்னோட ஊருக்கு வரணுமா டா!” தொடங்கியவன், “நீயே சொல்லு… இப்போ இருக்கிற நிலமையில அவ அம்மாவ சந்திக்கணுமா?” நண்பனை மீராவுக்கு அறிவுரை சொல்ல சொன்னான்.
அவன் பேசுவதற்குள், “சும்மா இருந்தா நிலமை மாறிடுமா அரவிந்தா!” தர்க்கம் செய்தவள், “இதோட ரெண்டு முறை அவங்க சென்னைக்கு வந்துட்டாங்க. இப்படியே பார்க்காம இருந்தா ஒண்ணும் மாற போகிறது இல்ல. ஒரு தடவ எனக்கு அவங்கள நேருல பார்த்து பேச சந்தர்ப்பம் கொடுக்க சொல்லு டா!” கெஞ்சினாள்.
இருதரப்பிலும் யோசித்தவனுக்கு, மீரா சொல்வது தான் சரி என்று பட்டது. அவன் முடிவை கேட்டு, மீரா துள்ளி குதித்தாள்.
“தேவையில்லாம பிரச்சனைய இழுத்து விட்டுக்குற; அவ்வளவுதான் சொல்லிட்டேன்!” ஹரி மீண்டும் எச்சரிக்க,
“அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம் எழுத்தாளரே! உங்க மாமனார விடவா என்னோட மாமியார் குத்தலா பேசிட போறாங்க!” விளையாட்டாய் பதிலளிக்க,
“இப்போ அப்படி தான் சொல்லுவ; அப்புறம் உன் கோபத்த என்கிட்ட காட்டினேன்னா இருக்கு டி உனக்கு!” வழக்கமாக அவள் பேசாமலும் பார்க்காமலும் இருப்பதை நினைவூட்டினான்.
“கோபப்பட்டாலும் நீங்க தான் வந்து என்ன சமாதானம் செய்வீங்களே எழுத்தாளரே!” தன்னவன் கன்னத்தை கிள்ளி செல்லம் கொஞ்சினாள்.
காதலர்களின் செல்லச் சண்டை கண்டு இரசித்தான் அரவிந்தன்.
அரைமணி நேரத்தில், இருவரும் புறப்பட, ஹரி அவளை இரவு, ரயில் நிலையத்தில் விடுவதாக சொல்ல, அரவிந்தனும், நண்பர்களிடம் தகவல் சொல்லுவதாக சொன்னான். வழியனுப்ப வந்த அஞ்சலி, மீராவின் கைகளை இறுக பிடித்துக்கொண்டு,
“தாங்க்ஸ் மீரா! நீ மட்டும் அன்னைக்கு என்ன கட்டாயப்படுத்தலேனா….” உணர்ச்சிவசப்பட,
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல அஞ்சலி…..” மீராவும் மென்மையாக பேச
இவர்களை விட்டால், இப்படியே பேசிக்கொண்டிருப்பார்கள் என்று நினைத்து குறுக்கிட்டான் அரவிந்தன்.
“சரி! சரி! சீக்கிரம் உன் மாமியார பார்த்து பேசி, உங்க கல்யாணத்துக்கு நாள் குறி மீரா; நாங்க தம்பதிகளா கலந்துக்குற முதல் சுப நிகழ்ச்சி உங்க கல்யாணமா இருக்கட்டும். அவன் பாணியில் சொல்லி,
நண்பன் தோள் சுற்றி வளைத்து, வெற்றியோட திரும்பி வா நண்பா!” என்று வாழ்த்தினான்.
காதல் ஜோடிகளும் நம்பிக்கையுடன் புறப்பட்டனர்.
பக்குவமாய் சமைத்தவளின் பாசம் நினைவில் கொள்வாளா- வீட்டுப்
பத்திரம் பறித்தவள் என்று பழி சுமத்துவாளா -பேசுவது
தன்னவனின் தாய் தானே என்று தழைந்து போவாளா,
தானே தாரம் என்று தர்க்கம் செய்வாளா?
பதில் சொல்லும், அவர்கள் அவன் மீது வைத்த அன்பின் ஆழம்…