அன்பின் ஆழம் – 26.1

வானத்து நிலவு விளையாட வரும் என்று சொல்லி சோறூட்டும் அன்னையின் வார்த்தைகளை கண்மூடித்தனமாக நம்பும் குழந்தையை போல, ஹரி சொன்ன மேஜிக் இன்று நடந்திடும், நாளை நடந்திடும் என்று காத்திருந்தாள் மீரா. ஆனால் வரதனின் மனதை மாற்ற எந்த ஜீனீயும்(Genie) வரவில்லை; அதிசயமும் நிகழவில்லை; நாட்கள் அதன் போக்கில் நகர, அரவிந்தனுடைய திருமண நாளும் நெருங்கியது.

“இந்த ஆரமும் ஜிமிக்கியும், மயில்கழுத்து நிற பட்டுப்புடவைக்கு எடுப்பா இருக்கும் மீரா!” அரவிந்தன் திருமண விழாவிற்கு தேவையானதை பெட்டியில் எடுத்து வைத்து கொண்டிருக்கும் மகளிடம் காட்டி ஆலோசனை சொன்னாள் நிர்மலா.

“அம்மா! அப்பா வரலேன்னா என்ன மா! நீயாவது வா மா!” இதோடு, நூறு முறையாவது கேட்டிருப்பாள் மீரா.

“எனக்கு மட்டும் வரக்கூடாதூன்னு ஆசையா. அப்பாவுக்கு விருப்பமில்லாத இடத்துக்கு என்னால வர முடியாது தங்கம்.” நிர்மலாவும் அதே பதிலை அதே பொறுமையுடன் நூறாவது முறையாக சொன்னாள்.

ஹரி மீது இருந்த வெறுப்பில், அவர் அரவிந்தன் திருமணத்திற்கு வர மறுத்தார். அரவிந்தன் நேரில் வந்து அழைத்த போதும், அவர் மனம் மாறவில்லை. ஹரி பேச்சுக்கு இணங்கி, அரவிந்தன் அவர்கள் காதல் விவகாரத்தை பற்றி அவரிடம் எதுவும் பேசாமல் திரும்பினான். கணவனின் கௌரவத்திற்கு மதிப்பு கொடுத்து, நிர்மலாவும் தன் சொந்த விருப்பு வெறுப்புகளை புறம் தள்ளினாள்.

“உனக்கு உன் புருஷன் விருப்பம் தான் பெருசு; பொண்ணு இவ்வளவு தூரம் போயிட்டு வரணுமே… அவளுக்கு துணையா வரணும்ன்ற அக்கறை இருக்கா உனக்கு…” முகத்தை தொங்கப்போட்டு முணுமுணுத்தாள் மீரா.

“அதான் உன் நண்பர்கள் கூட வராங்களே; அப்புறம் எனக்கு என்ன கவலை! சந்தோஷமா போயிட்டு வா!” மென்மையான சிரிப்புடன் மகள் கன்னத்தை கிள்ளினாள் நிர்மலா.

அரவிந்தனின் திருமணம் சொந்த ஊரில் நடக்க இருந்ததால், நண்பர்கள் அனைவரும் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். மகேஷும், கீதாவும் குடும்பத்தினருடன் வர, தானும் ஹரியும் மட்டும், சுழ்நிலை காரணமாக உறவுகளின்றி தனியாக செல்வது, அவளுக்கு மனவலியை தந்தது.

“என்னதான் உங்க கண்மூடித்தனமான பதிபக்தியோ!” அம்மா தன் ஆசைகளை புறந்தள்ளுவதை பற்றி கூறியவள், பெட்டியை மூடினாள்.

அதற்கும் மென்மையாய் சிரித்தவள், “நாளைக்கு நீயும், இப்படி தான் உன் கணவனுக்காக பேசுவ!” பெண்களுக்கே உள்ள இயல்பு என்று கண்சிமிட்டினாள்.

அதை கேட்டவள் விரக்தியில் சிரித்து, “முதல்ல கல்யாணம் ஆகுதான்னு பாரு!”  என்றாள்.

மகள் நிலமையை எண்ணி வருந்திய போதும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “எல்லாம் நடக்கும்; இப்படி புலம்பாம நல்லத மட்டும் யோசி!” கடிந்தவள், “நேரமாச்சு! வந்து படு! காலையில மறக்காம, அப்பாகிட்ட சொல்லிட்டு கிளம்பு!” அப்பாவுக்கு உரிய மரியாதை தரவேண்டும் என்றும் வலியுறுத்தினாள்.

ரயிலில் ஏறிய சில நிமிடங்களில், ஜன்னலோரம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு மைதிலி, நொறுக்கு தீனி தர, கீதா, அழும் குழந்தையை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். ஆண்கள், கிரிக்கெட் கமெண்ட்ரி, டிரான்சிஸ்டர் ரேடியோவில் கேட்டு அளவளாவி கொண்டிருக்க, மீரா மட்டும் தனி உலகத்தில் இருந்தாள்.

பொதுவாக, ரயில் பயணங்கள் களை கட்டுவதே மீராவின் குறும்பு தனத்தால் தான். ஆனால் இன்று, அவளிடம், அத்தனை அமைதி. தங்கள் காதல் ஒரே இடத்தில் தேங்கி நிற்பதை பற்றிய வருத்தம் ஒரு புறம், அரவிந்தனுடன் அவ்வளவு நெருக்கமாக பழகிய அப்பா, அவன் திருமணத்திற்கு வராதது மறுபுறம், கவலைகளுக்கா பஞ்சம் என்று இருந்தவள், தனிமையை நாடி நகர்ந்தாள்.

ஹரி மற்றவர்களுடன் சகஜமாக பேசிய போதும், அவன் கவனமெல்லாம் தன்னவள் மீது மட்டும் தான் இருந்தது. எழுந்து சென்றவள், கால் மணி நேரமாகியும், திரும்பவில்லையே என்ற கவலையில் அவளைத்தேடி, பின் தொடர்ந்தான். காதலர்கள் தனிமையை விரும்புகிறார்கள் என்று நண்பர்கள் அதை பொருட்படுத்தாமல், அவர்கள் வேலையில் மூழ்கி இருந்தனர்.

சிந்தனையில் கலந்தவளாய் ரயில் பெட்டியின் நுழைவாயிலில் நின்றிருந்தாள் மீரா. மென்மையாக அவள் தோளில் தட்டியவன், “என்ன ஆச்சு மீரா உனக்கு?” என்றான்.

அவன் முகம் பார்க்க திரும்பியவள், “நீ சொன்ன மேஜிக் எதுவுமே நடக்கலியே ஹரி!” தன்னவனை பார்த்தவுடன், மனதில் உள்ள துக்கம் பொங்கி எழுந்தது. 

அவனும் என்ன சொல்லி தேற்றுவது என்று புரியாமல் தவிக்க, “எல்லாம் சரியா நடந்திருந்தா, நம்ம மட்டும் இப்படி தனியா அரவிந்தன் கல்யாணத்துல கலந்துக்க வேண்டிய நிலமை வந்திருக்காதில்ல!” விரக்தியில் பேசினாள்.

தென்றல் காற்றில் அவள் நெற்றியில் படர்ந்திருந்த முடியை விலக்கிவிட்டவன், “அதான் எனக்கு நீ இருக்க; உனக்கு நான் இருக்கேனே! இத விட வேற என்ன வேணும்னு சொல்லு!” ஆறுதல் வார்த்தை சொல்ல,

அதற்கும் விரக்தியில் சிரித்தவள், “அப்படி சொல்லி தான் நம்மள நாமே தேற்றிக்கணும் எழுத்தாளரே!” எதற்கும் சமாதானமாகதவளாய் பேசி, நகர்ந்தாள்.

மீதமிருந்த பயணமும், காதலர்களுக்கு இடையில் பல ஒலி எழுப்பா கேள்வி-பதிலுடன் கடந்தது.

நண்பர்கள் அனைவரையும் ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வர, அரவிந்தன் ஏற்பாடுகள் செய்திருந்தான். அவர்களுக்காக, மண்டபத்திற்கு அருகில் ஒரு தங்கும் விடுதியில், அறைகளும் முன்பதிவு செய்திருந்தான்.

ஊருக்கு வந்த நண்பர்களை ஆரத்தழுவி வரவேற்றான். அவர்களும் அவனை புது மாப்பிள்ளை என்று கிண்டல் செய்து ஓட்டினார்கள். கிண்டல்களும் கேலிகளும் ஓய, நண்பர்கள் கையில் ஆளுக்கொரு சாவியை நீட்டி, அறை எண்ணையும் குறிப்பிட்டான்.

“எனக்கு ரூம் வேண்டாம் டா அரவிந்தா! நான் உன்னோட மண்டபத்துலேயே இருக்கேன்!” சொல்லி ஹரி மறுக்க,

தன்னவன் அருகில் இல்லாமல், தனியாக புது இடத்தில் எப்படி தங்குவது என்ற பயம் மீராவுக்கு. குடும்பத்தோடு வந்த நண்பர்களையும் தொந்தரவு செய்யவும் அவளுக்கு மனமில்லை.

“எனக்கும் ரூம் வேண்டாம் டா அரவிந்தா! நானும் உங்ககூடவே வரேன்!” மீரா அடுத்த நொடி மறுக்க,

“ஹரிய விட்டு கொஞ்ச நேரம் கூட மேடம்மால தனியா இருக்க முடியாதா?” கீதா கிண்டல் செய்து, அவர்கள் எப்படி பல முறை ரயிலில் தனியாக சந்தித்து பேசிக்கொண்டனர் என்றும் போட்டுக்கொடுத்தாள். தோழியின் மனப்போராட்டங்களை அறிந்திருந்தால், நிச்சயமாக அப்படி கிண்டல் செய்து பேசி இருக்கமாட்டாள்.

அவள் கேலிப்பேச்சை கேட்டு, கழுத்தை நொடித்தவள், “நான் ஒண்ணும் ஹரிக்காக போல; என் நண்பன் அரவிந்தனுக்காக போறேன்!” என்று சொல்லி நண்பன் தோளை சுற்றி வளைக்க,

அரவிந்தனும், “அப்படி சொல்லு மீரா!” என்று ஒத்தூதினான்.

அதை கண்டு இன்னும் அதிகமாய் சிரித்த கீதா, “அது சரி! அவனுக்கு அஞ்சலி பின்னால சுத்தவே சரியா இருக்கும். இவன நம்பி போகறத்துக்கு, நீ எங்களோடவே இருக்கலாம். இல்ல ஹரிய நம்பியாவது போலாம்!” என்று ஓட்டினாள்.

தன்னவனை பார்த்து முறைத்தவள், ‘என்ன அம்போன்னு விட்டு போற இவன நம்பியா…முசுடு எழுத்தாளர்!’ மனதில் திட்டியவள், “அரவிந்தன்னா…. அரவிந்தன் பின்னாலேயே போகுறது இல்ல… அவன் கல்யாணத்துக்கு தேவையான வேலைகளை கூடமாட செய்யறதுக்குன்னு சொன்னேன். எனக்கு என்ன உன்ன மாதிரி குடும்பமா குழந்தை குட்டியா… இங்க சும்மா தானே இருக்க போறேன்.” நீண்ட காரணம் சொல்ல, கீதாவுக்கும் அது சரி என்று பட்டது.

மாலை ஐந்து மணியளவில் ஜானவாசம் என்று அரவிந்தன் சொல்ல, நண்பர்கள், கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு வருவதாக சொல்லி, அவரவர்கள் அறையை நோக்கி நடந்தனர். விடுதியில் தங்கி இருக்கும் வேறு சில விருந்தினர்களை சந்தித்துவிட்டு வருவதாக அரவிந்தன் சொல்ல, ஹரியும், மீராவும் அவனுக்காக வரவேற்பு பகுதியில் காத்து கொண்டிருந்தனர்.

“நீ இங்கியே தங்கலாமே மீரா…. மண்டபத்த விட இங்க வசதியா இருக்குமே!” எதிர் சோஃபாவில் அமர்ந்தவளிடம் ஆலோசனை சொல்ல,    

சுட்டெரிக்கும் பார்வையில் அவனை பார்த்தவள், “வசதியா இருக்கும்; பாதுகாப்பா இருக்குமா?” கேள்வியை திருப்பி, “உனக்கெங்க அக்கறை… என்ன பற்றி யோசிக்காம நீதான் கிளம்பிட்டியே!” கொந்தளித்தாள்.

அதில் கொஞ்சம் தடுமாறியவன், “அதான் பக்கத்துல கீதா, மகேஷ் எல்லாம் இருக்காங்களே டி! கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரப்போறாங்க!” பொறுமையாக பேச,

“அவங்களும் நீயும் ஒண்ணா!” கோபமும், காதலும் அவள் கண்களில் பளபளக்க, அதை கேட்டவன் மனமும் கலங்கியது.

“அக்கறை இல்லாம இல்ல மீரா!” நானும் பக்கதுல்ல தானே இருந்திருக்க முடியும்; கூடவே இருக்க முடியாதுல…” வித்தியாசத்தை எடுத்துரைத்தவன், “அதான் அரவிந்தனோட போக நெனச்சேன்……” தயக்கத்துடன் அவளுக்கு புரிய வைத்தான்.

“இதெல்லாம் யோசிச்சு தான், நம்ம தனியா வந்திருக்கோமேன்னு சொல்லி நானும் புலம்பினேன்; இப்போ புரியுதா… உனக்கு நீ; எனக்கு நான் சொல்றது எல்லாம் வசனத்துக்கு நல்லா இருக்கும்; நடைமுறைக்கு துளி கூட செட்டாகாது!” சொன்னவள் துக்கம் தொண்டையை அடைக்க, வாயிலை நோக்கி நகர்ந்தாள்.

நண்பன் வருவதற்குள், இவளை சமாதானம் செய்ய வேண்டும் என்று அவள் பின்னால் ஓடினான் ஹரி. கைக்கட்டி கொண்டு, சிந்தையில் கலந்தவளாய், சாலையை நோக்கி நின்றவள் அருகில் சென்று, “எனக்கு மட்டும் நம்ம நிலமைய நெனச்சு வருத்தம் இல்லன்னு நினைக்குறியா மீரா!” தொடங்கியவன், இன்னும் தாழ்ந்த குரலில், “வெளிய காட்டிக்காம இருக்கேன் டி… அதுவும் இப்போ அரவிந்தனுக்காக குறிப்பா…” சொன்னது தான் தாமதம். அவன் பக்கம் திரும்பியவள்,

“மன்னிச்சிரு ஹரி! நமக்கு எதுவுமே சரியா நடக்க மாட்டேங்குதுன்ற விரக்தியில அப்படி பேசிட்டேன்… நீயும் என்ன பண்ணுவ டா!” ஒருவழியாக சமாதானமானாள்.

“பரவாயில்ல மீரா! என்கிட்ட தானே உன்னாலையும் மனசவிட்டு பேச முடியும்!” பெருந்தன்மையுடன் அவள் அப்படி நடந்துகொண்டது தவறில்லை என்று சொன்னவன்,

“அரவிந்தனுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும்னு நம்ம எவ்வளவு ஆசையா இருந்தோம். இப்போ நம்ம பிரச்சனைய பெருசு படுத்தி, அவன் சந்தோஷத்த கெடுக்கணுமா சொல்லு!” ஹரி கேட்க, அவளும் இல்லை என்று இடம் வலமாக தலையசைத்தாள்.

“குட்! இப்போ எல்லாத்தையும் மறந்துட்டு, சிரி! மிஸ்டர் வரதன்ன இம்பெரெஸ் பண்ண வேற வழி என்னன்னு, ஊருக்கு போய் யோசிக்கலாம்!” சொல்ல,

அவசரபட்டு இவனுக்கு வீண் மனவுளைச்சல் கொடுத்துவிட்டோமே என்று நினைத்தவள், மறுபடியும், “ஐ ஆம் வெரி ஸாரி டா!” என்றாள்.

“யாருக்கு வேணும் உன் ஸாரி!” செல்லமாய் தலையில் குட்டியவனை கண்கள் அகல பார்த்து, “எழுத்தாளரே! நிஜமாவா!” என்று வியந்தாள்.

“சிரின்னு சொன்னேன் டி! அதுக்குள்ள உனக்கு எண்ணம் எங்க போகுது பாரு;” கிண்டல் செய்து சிரித்தான். அவளும் மயக்கும் அந்த குழிவிழும் கன்னத்தில் நறுக்கென்று கிள்ளினாள்.

திருமணத்தை எளிமையாக நடத்த வேண்டும் என்று இளஞ்சோடிகள் சொன்னதை சற்றும் பொருட்படுத்தாமல், தோழிகள் இருவரும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். அது நுழைவாயிலில் தொடங்கி, திருமண மேடை வரை, திரும்பும் திசை எங்கும் நேர்த்தியாக செய்திருந்த வேலைப்பாட்டில் பிரதிபலித்தது.

பூ அலங்காரம், மணமக்கள் பெயர்கள் பதித்த மின்னும் பலகை, சிவப்பு கம்பளம், ஹாலின் பரப்பளவை நிரப்பிய ஒரே சீராக அடுக்கப்பட்ட நாற்காலிகள், எம்பிரோயிடரி வேலை செய்த வண்ண வண்ணமான சாடின் திரைச்சீலைகள், ஆங்காங்கே தொங்கவிடப்பட்ட அலங்கார தோரணங்கள் என்று பிரம்மாண்டமாய் திகழ்ந்தது.

மணமேடையின் மையப்பகுதியில் வரைந்திருந்த அரிசிமாவு கோலமும், அதன் மேல் வைக்கப்பட்டிருந்த ஹோம குண்டமும், நாளைய முக்கியமான நிகழ்வுக்கு தயார் நிலையில் இருந்தது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் தாயாரின் பெரிய படம், மேடையின் பின்னணியிலும், உட்கூரை முதல் தரை வரை தொங்கவிடப்பட்ட பூ சரங்களும், துணி ஜோடனைகளால் அலங்கரிக்கப்பட்ட நான்கு மூலையில் இருந்த தூண்களும் விழாக்கோலத்தில் மின்னியது.

நண்பர்கள் மாலை ஐந்து மணியளவில் தயாராகி, மண்டபத்தை வந்தடைந்தனர். அதற்குள், அரவிந்தன் மாப்பிள்ளை கோலத்தில், கோட்டு சூட்டில், கழுத்தில் மாலையும், கையில் பூச்செண்டுமாய் ஜானவாச காரில் அமர்ந்திருந்தான். அவனை கண்ட பிள்ளைகள், மாமா என்று அன்பாக அழைத்து கொண்டே அவனருகில் சென்று அமர்ந்தனர். ஜானவாச காரில் ஊர் பார்க்க வலம் வந்தவனை பின் தொடர்ந்து, அளவளாவிக் கொண்டு வந்தனர் உற்றார் உறவினர். அருகிலிருந்த கோயிலுக்கு சென்றுவிட்டு, மண்டபம் திரும்ப, தன்னவனுக்காக மணக்கோலத்தில் காத்திருந்தாள் அஞ்சலி. அவன் தேர்ந்தெடுத்து கொடுத்த தாமரை நிற புடவையில், தேவதையாய் ஜொலித்தவள் அவன் பக்கம் வந்து அமர்ந்தாள். தன்னவளை பார்க்க திரும்பிய கழுத்து, அப்படியே உறைந்து போனது.

அருகில் வந்த கீதா, “ஆனாலும் ரொம்ப வழியுது டா!” என்று, அவன் கழுத்தை திருப்பி, “கொஞ்சம் அக்கம் பக்கம் தலைய திருப்பி மத்தவங்களையும் பார்த்து சிரி!” அவன் காதில் கிசுகிசுத்து, அஞ்சலியையும் நலன்விசாரித்தாள். அஞ்சலியை கண்ட சஹானா, அவளிடம் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்து அவள் மடியில் ஏறிக்கொண்டாள். மழலை பட்டாளத்தின் நடுவில், காதல் ஜோடிகளும், வெட்கமும், பூரிப்பும் கலந்த உணர்ச்சிகளோடு, புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு மண்டபத்திற்கு திரும்பினர்.

மற்ற சம்பிரதாய சடங்குகளை முடித்து சுதந்திரமாய் மேடை இறங்கிய மணமக்களை, விருந்தினர்கள் வழிமறைத்து கதையளந்தனர். அஞ்சலியை அவள் தோழிகள் அழைத்துச் செல்ல, சஹானா அவளை விடுவதாக இல்லை.

“சஹானா என்னோட இருக்கட்டும் கீதா! நீ சாப்பிட்டு வந்து அழைச்சிட்டு போ!” கீதாவிடம் சொல்லிவிட்டு, அஞ்சலி நகர்ந்தாள்.

‘நான் சஹானா பாப்பாவா இருக்க கூடாதா’ மனதில் நினைத்தவன், விலகி செல்லும் தன்னவளையே ஏக்கத்துடன் பார்த்து நின்றான்.

“என் பொண்ண பார்த்தா உனக்கு பொறாமையா இருக்கா டா!” அரவிந்தன் காதில் குறும்பாக கிசுகிசுத்தாள் கீதா.

அவள் பேச்சில் வெடுக்கென்று திரும்பியவன், “எப்படி டி! என் மைண்ட் வாய்ஸ்(Mind Voice) உனக்கு கேட்டுது?” விரிந்த கண்களுடன் தோழியை கேட்க,

“எது…. அதுக்கு பேரு மைண்ட் வாய்ஸா” நக்கல் செய்தவள், “முடியல டா அரவிந்தா! விட்டா இப்போவே தாலி கட்டி ஹனிமூன் கூட்டிட்டு போயிடுவ போல….” என்று சலித்து கொள்ள, அவனும் அசடுவழிந்தான்.

ஆனால், அடுத்த கணமே, “நீ சொல்ற ஐடியாவும் நல்லாதான் இருக்கு. நான் வெளியில வெய்ட் பண்றேன். நீ போய் உன் பொண்ண வாங்கிகிட்டு, அப்படியே அஞ்சலிய வெளிய கொண்டு வந்து விட்டுடு….” சொல்லி கண்சிமிட்ட

அவன் தோளில் செல்லமாய் அடித்தவள், “நீ ஒரு மார்க்கமா தான் டா இருக்க.” கிண்டல் செய்து அங்கிருந்து நகர்ந்தாள்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், இரவு உணவு அருந்திவிட்டு, தோழிகள் அகிலாவிற்கு மணமேடையில் சீர் தட்டு அடுக்க உதவினர். விருந்தினர்கள் நாளை வருவதாக சொல்லி புறப்பட, நண்பர்கள் மட்டும், அரவிந்தனுடன் அரட்டை அடித்து கொண்டிருந்தனர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு, ஒரு வழியாக பசி வந்த குழந்தை அம்மாவை தேட, அஞ்சலியும் ,அவள் தோழியும், சஹானாவை அழைத்து வந்தனர்.

சஹானா அஞ்சலி மடியைவிட்டு இறங்காமல், சாமர்த்தியமாக பால் பாட்டிலை மட்டும் வாங்கிக்கொள்ள, அஞ்சலியும் தோழியும் அங்கே இருக்க வேண்டியதாயிற்று.

“அரவிந்தா! அஞ்சலி உனக்கு மேல ஸ்பீடா இருக்கா டா! குழந்தை பெத்து வளக்கறுதல பட்டமே வாங்கிட்டா பாரு!” கீதா அவளை ஓட்ட, நான்கு ஜோடி கண்கள் மட்டும் ரகசிய பரிமாற்றம் செய்து கொண்டன. கீதாவிடம், அஞ்சலியை பற்றி முழுவதுமாக சொல்லாதது தன் தவறு என்று உணர்ந்தான் அரவிந்தன். தன்னவளிடம் கண்ஜாடையில் மன்னிப்பு கேட்டவன்….

தொடர்ந்து படிக்க, Click Here –> அன்பின் ஆழம் 26.2