அன்பின் ஆழம் – 25.1

“வாழ்த்துக்கள் ஹரி!” உங்கள மாதிரி ஒரு கடின உழைப்பாளியை நான் இதுவரை சந்திச்சதே இல்ல!” பாராட்டியவர், அவனருகில் அமர்ந்திருந்த மீராவிடம், மூன்றாவது கதையின் முதல் பிரதியை கொடுத்தார்.

பெற்றவள், அந்த புத்தகத்தை, தாலாட்டி சீராட்ட, அவளை பார்வையிலேயே விழுங்கினான் ஹரி. இத்தனை நாட்கள் சகவாசத்தில், ஸ்ரீராமுக்கும் இவர்கள் உறவும், செய்யும் வினோதமான செயல்களும் பழகியிருந்தது.

மென்சிரிப்புடன், அதை இரசித்தவர், மேஜையிலிருந்து காசோலை ஒன்றை எடுத்து, ஹரியிடம் நீட்டினார். “இதுவரை நான் யாருக்கும் இவ்வளவு குறுகிய காலத்துல ரெண்டாவது ராயல்டி செக் கொடுத்ததே இல்ல!” என்று மேலும் பாராட்டினார்.

“நன்றி ஸ்ரீராம்!” பெற்றவன், தந்தையை மனதில் நினைத்து அதை கண்களில் ஒற்றிக்கொண்டு, பிரார்தித்தான்.

தன் எதிரே இருந்த ஒரு ஃபைலை, ஹரி பார்க்க ஏதுவாய், நடுவில் வைத்து திறந்தார். “உங்க முதல் கதைய, இதோட, நான்காவது முறையா அச்சிடறோம். இதுவரை, எந்த ஒரு புத்தகமும், இவ்வளவு அமோகமா விற்பனையாகி நான் பார்த்ததே இல்ல ஹரி,” மெச்சியவர், ஃபைலில் சுட்டிக்காட்டி, “விரிவான கணக்கு வழக்கு எல்லாம் இதுல இருக்கு… சரி பார்த்து சொல்லுங்க!” என்றார்.

அதை வாங்கி அலசியவன், “கதை எழுதறது மட்டும் தான் நான்! மற்றபடி, மார்க்கெடிங் செய்யறது எல்லாம் என் நண்பர்கள் தான்!” தன்னவளை பார்த்து கண்சிமிட்டியபடி, அவரிடம் விளக்கினார்.

“அப்படி என்ன செய்யறீங்க மீரா!” ஸ்ரீராம் கண்கள் விரித்து வினவ,

“அவன் மிகைப்படுத்தி சொல்றான் ஸ்ரீராம்! எல்லாம் அவன் திறமைக்கு கிடைச்ச சன்மானம்.” தன்னவனை கண்கள் உயர்த்தி பார்த்தவள், அவருக்கு பதில் சொன்னார்.

பெருந்தன்மையுடன் பேசும் காதல் ஜோடிகளை பிரமிப்பாய் பார்த்தார் ஸ்ரீராம். அவருக்கு பதில் சொல்ல முன் வந்தான் ஹரி. “நீங்க வேற ஸ்ரீராம்…. ஒருத்தன் என்னன்னா, வேலை செய்யும் அலுவலகத்துல… சொந்த ஊருலன்னு… தெரிஞ்ச இடத்துல எல்லாம் விநியோகம் செய்யறான்; ஒருத்தி, நவராத்திரி பண்டிகையில கலந்துக்க வரவங்களுக்கு பரிசா தரா; இதோ இவளும்….” கண் ஜாடையில் மீராவை காட்டி, “என் இன்னொரு நண்பனும், படிவம் மூலமா ஆர்டர் செஞ்சவங்களுக்கு நேருலேயே போய் கொடுக்குறது போதாதுன்னு, கூடுதல் பிரதிகள் வேற வித்துட்டு வராங்க….” சொல்லி பெருமூச்சுவிட்டவன், “இவங்க இப்படியே செஞ்சா, நாலு என்ன…. பத்து முறை கூட நீங்க அச்சிட வேண்டியிருக்கும்.” என்றான்.

அதை கேட்டவர் வாய்விட்டு சிரித்த போதும், உண்மையை உணர்ந்தார்.  “வேடிக்கையா நீங்க சொன்னாலும், அவங்க எல்லாரும் உங்க மேல வெச்சுருக்கிற அன்பு அதுல தெரியுது. இப்படி பட்ட நண்பர்கள் கிடைச்சது, உங்க நல்லதிர்ஷ்டம்.” என்று சொல்ல,

அதை எப்படி மறுக்க முடியும் என்பதை போல், அவனும் மேலும் கீழுமாக வேகமாக தலையசைத்தான்.

அரட்டை அடித்து, அவரின் அலுவலக நேரத்தை வீணாக்க விரும்பாதவன், மற்ற விஷயங்களை பற்றி பேச நினைத்தான்.

“அடுத்து நம்ம அந்த த்ரில்லர் கதைய வெளியிடலாமா?” யோசனை கேட்டான் ஹரி.

“அத நான் படிச்சேன் ஹரி! நல்லா தான் இருக்கு… ஆனா….” தயங்கியவர், “மக்கள், நீங்க எழுதற குடும்பம், காதல் சார்ந்த கதைகள விரும்பி படிக்குறாங்க. ஒருவேள, இந்த கதைக்கு அந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கலேன்னா, அது உங்க எழுத்து பயணத்த பாதிக்குமோன்னு யோசனையா இருக்கு….” அக்கறையாய் விளக்க,

“எனக்கும் அந்த பயம் இருக்கு ஸ்ரீராம்! ஆனா, முயற்சி செஞ்சா தானே, வெற்றியா தோல்வியான்னு தெரியும்?” திடமாய் கேட்டான்.

துணிந்து பேசும் தன்னவனை இமைக்காமல் பார்த்தாள் மீரா. ஸ்ரீராமும், அவன் சொன்னதில் இருந்த நியாயம் அறிந்து, ஆழ்ந்து சிந்தித்தார். சில நிமிடங்கள் யோசித்தவர்,

“இப்படி செய்யலாமா ஹரி!” கேட்க, எதிரில் இருக்கும் இருவரும் ஆர்வமாய் பார்த்தனர். “முதல்ல, இத தொடர் கதையா வாரயிதழுல எழுதி பாருங்க. மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சா, கண்டிப்பா புத்தகமா வெளியிடலாம். இல்லேன்னா, எப்படி இத மேம்படுத்தலாம்னு யோசிச்சு நிதானமா வெளியிடலாம்.” என்றார்.

வேண்டாம் என்று புறம் தள்ளாமல், தன் நலன் கருதி பேசும் அவர் அன்பை என்ன சொல்வது என்பது போல் இருந்தது ஹரிக்கு. “அப்படியே செய்யலாம் ஸ்ரீராம்!” சொல்லி, “தூணாய் தோள் கொடுக்கும் நண்பர்கள் மட்டும் இல்ல… உங்க அறிமுகம் கிடைச்சதும் என் நல்லதிர்ஷ்டம் தான்.” மனதார நன்றி தெரிவித்தான்.

பணிவும், தன்னடக்கமும் கொண்ட இவன் நற்குணத்தை மெச்சியவர், “நன்றி ஹரி! எனக்கும் அப்படிதான்!” என்று கண்சிமிட்டினார்.

மற்ற விஷயங்களை பேசி முடித்து விடைபெற, “ஹரி! அப்புறம், உங்களுக்கு வேணும்னா, புத்தகத்துல போட வேற புகைப்படம் எடுத்துட்டு வரீங்களா? இப்போ முகத்துல கூடுதல் பொலிவு தெரியுதே!” குறும்பாக கேட்டார்.

“இல்ல, அதே இருக்கட்டும்!” பணிவாய் ஹரி மறுக்க,

“அதுக்கில்ல; அந்த சிவப்பு சட்டை கண் கூசும் அளவுக்கு இருக்கு; வேற கலர் சட்டைல எடுத்த போட்டோ இருந்தா….” அவர் சொல்லி முடிப்பதற்குள்,

அருகில் இருக்கும் தன்னவளை, உரிமையோடு தோள் சுற்றி வளைத்து, “ம்ஹும்… வேண்டாம்… அது ரொம்ப ராசியான சட்டை; ராசியான போட்டோ!” வார்த்தைகளால் சொல்லி முடிப்பதற்குள், அவளை வளைத்த விதத்திலேயே புரிந்து கொண்டார்.

“அன்னைக்கு அரவிந்தன வம்பிழுக்க அப்படி பேசினேன் டா! உனக்கு பிடிச்சா மாதிரி வேற போட்டோ கொடு!” பருக ஏலக்காய் டீ கொண்டு வந்தவள், அவன் அருகில் அமர்ந்து புதிதாக புகைப்படம் எடுக்கலாம் என்று சொன்னாள்.

“யார் என்ன சொன்னாலும், அது எனக்கு ஸ்பெஷல். என் ராஜகுமாரி எனக்கு கொடுத்த முதல் பரிசு. என் பொக்கிஷம்!” சொல்லி, அவள் மூக்கை விரலால் தழுவினான்.

“மாசத்துக்கு ஒண்ணு வாங்கி தரேன்னு சொல்றேன்; அந்த இத்து போன சட்டைக்கு இவ்வளவு வியாக்கியானம் பேசுற…..” சுருங்கிய முகத்துடன் முணுமுணுத்தாள்.

அவள் முகபாவனையை பார்த்தவனுக்கு மேலும் அவளை சீண்ட தோன்றியது.

“வாங்கிக்க நான் ரெடி மா! உங்க அப்பா தான் சமயம் பார்த்து ஊருக்கு போயிருக்காரு!” பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு, அவர் சம்மதம் பெற ஆவலாய் காத்திருப்பதை குறிப்பிட்டான்.

ஏதோ ஒரு சாக்கு சொல்லி, தட்டிக்கழிப்பதே இவனுக்கு வாடிக்கையாய் போகிறது என்று நினைத்தவள், “அதான் எல்லாம் கைகூடி வருதுன்னு தெரியுதுல … உங்க விதிமுறைகள கொஞ்சம் தளர்த்திகிட்டா தான் என்ன எழுத்தாளரே?” உதட்டை சுழித்தவள், “ஹரின்னு பேரு வெச்சா, பெரிய அரிச்சந்திர சக்கரவர்த்தின்னு நெனப்பு… புலம்பிக்கொண்டே காலி டம்ளர்களை எடுத்துகொண்டு, சமையலறைக்குள் நுழைந்தாள்.

அவள் சிணுங்கல்களில் மயங்கியவன், அவளை பின் தொடர்ந்தான். தன்னவன் மீதிருந்த பொய்கோபத்தில், காய்கறிகளை படார் படார் என்று வெட்டி கொண்டிருப்பவளின் அருகில் சென்று, “சரி! நம்ம சேர்ந்து சமைக்கலாம். என்னோட டின்னர் சாப்பிட்டு கிளம்பு!” காதில் கிசுகிசுத்தான்.

அதை கேட்டு, மின்னல் வேகத்தில் திரும்பியவள், “என் மேல பரிதாபப்பட்டு உங்கள யாரும் காதலிக்க சொல்லல…” அவன் கையில் கத்தியை திணித்து, “இந்தாங்க நீங்களே மிச்ச சமையல செஞ்சுக்கோங்க!” என்றபடி கதவை நோக்கி நடந்தாள்.

“இப்படி என்னையும், சமையலையும் பாதில விட்டுட்டு போகுறது நியாயமே இல்ல டி!” திரும்பி வந்துவிடு என்று அவன் ஏக்கத்துடன் அழைக்க, அதை உணர்ந்தவள் போல் திரும்பி பார்த்து முறைத்தாள்.

 வேகமாக நடந்து வந்து அவன் எதிரே நின்றவள், “போகாம இருந்தா ஐலவ்யூ சொல்லுவீங்களா எழுத்தாளரே; சமைச்சா ஊட்டிவிடுவீங்களா?” அதிகாரமாய் கேட்க, அவன் நமுட்டு சிரிப்புடன்,

“நாலு நாளுல நீ கேட்டத எல்லாம் செய்யறேன்!” பதில் சொல்லி கண்சிமிட்டினான்.

பிடிவாதமாய் பேசும் அவன் கையை நறுக்கென்று கிள்ளிவிட்டு, “அப்போ, நானும் நாலு நாளுக்கு அப்புறம் வந்து சமைச்சு தரேன்.” கராராக பேசி, புறப்பட்டாள்.

வண்டியை உயிர்ப்பித்தவளுக்கு, ஏனோ ஒரு தயக்கம். அவன் காதில் விழும் அளவிற்கு விடாமல் ஹார்ன் அடித்தாள். ஹரியும் பால்கனிக்கு விரைந்தோடி வந்தான். தன்னவன் கண்ணில் பட்டதும்,

“எழுத்தாளரே! இந்த நாலு நாள், முடிஞ்ச அளவுக்கு உங்க பேச்சுலர் லைஃப் என்ஜாய் பண்ணிக்கோங்க. அதுக்கு அப்புறம் நான் சொல்றது தான் சட்டம். வீட்டுக்கு போ, சந்திக்காதன்னு விரட்டி விடுற வேலையே வேண்டாம்!” விரல் ஆட்டி கட்டளை இட்டாள்.

‘நானும் உன்ன விட்டாதானே!” மனதில் நினைத்து சிரித்தவன், “சரி! சரி! கிளம்பு!” என்று கையசைத்தான்.

எழுத்தாளரே என்ற அவள் குரலில், இவன் மயங்க, அவன் கன்னத்தில் குழி விழும் சிரிப்பில் இவள் இதயம் துடிக்க மறக்க, இணையும் நாளை எண்ணி இருவரும் இன்பத்தில் மிதந்தனர்.

நான்கு நாட்கள் தாண்டியும் , இதே நிலைமை நாள்கணக்கே இல்லாமல் நீளப்போகிறது என்று, இவர்கள் மட்டும் அறிந்திருந்தால்…

“கல்யாண பத்திரிக்கை கொடுக்க, உங்க வீட்டுக்கு எப்போ வரலாம்னு சொல்லு கீதா!” மதிய உணவு இடைவேளையில் சந்தித்த தோழியை கேட்டான் அரவிந்தன்.

கீதா மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பி இருந்தாள். அவள் மீண்டும் வந்தது ஹரிக்கு பெரும் உதவியாக இருந்தது. உரிமையோடு அவளிடம் பணிப்பளு உள்ள நாளில் உதவி கேட்கவும், அவளே முன்வந்து பல சந்தர்ப்பங்களில் பணிச்சுமையை ஏற்பதுமாக நாட்கள் ஓடின. அவனும் வங்கி தேர்வுகளை சிறப்பாக முடித்து, பதவி உயர்வும் பெற்றிருந்தான்.

“இரமேஷ் இப்போ ஊருல இல்ல; திங்கட்கிழமைக்கு மேல எப்போ வந்தாலும் எனக்கு ஓகே டா!” பதில் சொல்ல,

“சரி! அடுத்த வாரம் அஞ்சலி எப்போ ஃப்ரீயா இருப்பான்னு கேட்டுட்டு உனக்கு சொல்றேன்!” அவளையும் உடன் அழைத்து வருவதாக சொல்ல,

அதை கேட்டு உரக்க சிரித்தவள், “டேய், அதான் கல்யாணத்துக்கு அப்புறம் அவ உன்கூடவே தானே இருக்க போறா… இப்படியா அட்ட மாதிரி ஒட்டிப்ப!” கிண்டல் செய்து, அருகில் இருக்கும் ஹரி தோளை தட்டி, “இவன பாரு! காதலிக்கிறது தோழியாவே இருந்தாலும், எவ்வளவு பொறுப்பா, வேலை, பிரமோஷன்னு பாடு படுறான்.” இருவரையும் ஒப்பிட்டு பேசினாள்.

‘அவன் படும் பாடு எனக்கு தெரியாதா என்ன…’ என்று மனதில் நினைத்தவன், “குழந்தை குடும்பமுன்னு பொறுப்பு வந்து உனக்கு வயசாயிடுச்சு டி; அதான் என்ன மாதிரி வாலிபர்களோட காதல் ஃபீலிங்க்ஸ் உனக்கு புரியல…” அவளை கலாய்க்க,

“அடப்பாவி!” என்று கண்கள் அகல அவனை பார்த்தாள் கீதா.

நண்பன் காதல் கதையை பற்றி அறிந்த ஹரி, “அவன கிண்டல் செய்யாத கீதா; அவன் அந்த அளவுக்கு அஞ்சலிய நேசிக்கிறான்!” அரவிந்தனுக்காக பேச,

பதிலுக்கு அரவிந்தனும், “இவன் மட்டும் என்னவாம்; மீராவுக்காக தான் இத்தனையும் செய்யறான்!” நண்பனை புகழ்ந்தான்.

“போதும் டா உங்க புகழாரம்; உலகத்துக்கே தெரியும், நீங்க நட்புக்கு பெயர் போனவங்கன்னு!” சலித்து கொண்டு எழ, அவள் கையை பிடித்து தடுத்தவன்,

“உன் நட்பும் தான் உயர்ந்தது டி” என்று தாழந்த குரலில் தொடங்கி, “நீ கொடுத்த யோசனையில தான், என் புத்தகம் பலர் கைக்கு போய் சேர்ந்துது. தக்க சமயத்துல நீ வேலைக்கு திரும்பி, எனக்கு உதவி செய்றதுனால தான், என்னால சுலபமா அடுத்த கட்டத்துக்கு போக முடிஞ்சுது” மனதார நன்றி தெரிவித்தான் ஹரி.

அவன் பேச்சில் நெகிழ்ந்தவள், “இட்ஸ் ஓகே டா!” நண்பன் தோளில் ஆதரவாய் தட்டி, “இவங்க எல்லாம் செய்யறதோட ஒப்பிட்டா, நான் செஞ்சது ஒண்ணுமே இல்ல…” தன்மையாய் பேச,

“அப்படி சொல்லாத… நீ செஞ்சது ஒவ்வொண்ணும், என் இலட்சிய பதையில ஒரு திருப்புமுனை…” ஹரி மறுத்து பேசி புகழ்ந்தான்.

இவர்கள் உணர்ச்சி பொங்கும் பேச்சுக்கு ஒரு முடிவுகட்ட, “பாரு பாரு கீதா… உனக்கு வயசாயிடுச்சுன்னு சொன்னேன்ல… அதான் கிழவி மாதிரி சென்டிமென்ட்டா பேசுற…” மேலும் சீண்ட,

“உனக்கு எல்லாம் விளையாட்டு தான் டா!” செல்லமாக அவன் தோளில் தட்டி, வேலை இருப்பதாக சொல்லி நகர்ந்தாள்.

அரவிந்தனும் எழுந்துகொள்ள, ஹரி மெல்லமாக பேசினான். “அடுத்த வாரம், மீரா வீட்டுக்கும் நேருல போய் பத்திரிக்கை கொடுத்துட்டு வா அரவிந்தா!” என்றதும், நண்பனை புருவங்கள் உயர்த்தி பார்த்தான்.

“ஆமாம் டா! இன்னைக்கு சாயங்காலம், மீரா அப்பாவ சந்திச்சு, பணத்த திருப்பி கொடுக்க போறேன்….” என்று அனைத்தையும் விளக்கினான். அன்று ஏற்பட்ட மனஸ்தாபத்திற்கு பிறகு, அவனிடம் எதுவும் மறைக்க கூடாது என்று, ஹரியும், மீராவும் முடிவே செய்துவிட்டனர்.

அரவிந்தனும், நண்பனுக்கு நல்லது நடக்கட்டும் என்று வாழ்த்தி, மீரா வீட்டிற்கு போய்வருவதாக சொல்லி, சம்மதம் தெரிவித்தான். 

    

அவன் எதற்கு வந்திருக்கிறான் என்று புரியாமல் மௌனமாக அமர்ந்திருந்தார் வரதன். ஹரி, அவர் வலது புறம் இருந்த அதே ராசியான சோஃபாவில், நிமிர்ந்து அமர்ந்திருந்தான்.

தொடர்ந்து படிக்க Click Here … அன்பின் ஆழம் – 25.2