அன்பின் ஆழம் – 24.2

பத்து நாட்களில், திரும்பி வந்து வாசுகியை அழைத்துச் செல்வதாக சொல்லி, மணிமாறன் ஊருக்கு புறப்பட்டார். அலுவலக வேலை, புத்தகம் பதிப்பிடுவது என்று ஓய்வில்லாமல் உழைக்கும் மகனை மலைப்பாய் பார்த்தாள் வாசுகி. இரவு பகல் பாராது, அயாரது உழைக்கும் மகனின் கண்களில் சாதிக்க வேண்டும் என்ற உற்சாகம் மட்டுமே நிறைந்திருந்தது. எனினும், மனம்விட்டு அவன் காதலுக்கு சம்மதம் சொல்ல ஒரு இனம்புரியா தயக்கம்.

“பாட்டி! இன்னைக்கும் மீரா அத்தை வரலியா?” பள்ளியில் இருந்து திரும்பிய ராணியின் பிள்ளைகள், கேட்டபடி வீட்டை நோட்டம் விட்டனர். தினமும், அவளுடன் விளையாடி, பாடம் கற்ற பிள்ளைகளுக்கு அவள் நாலைந்து நாளாக வராதது விசித்திரமாக இருந்தது.   

வாசுகி என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க, “அத்தைக்கு உடம்பு சரியா இல்ல; அதான் ஹரி மாமாவ பார்த்துக்க பாட்டி வந்திருக்காங்க!” பொய் காரணம் சொல்லி, குழந்தைகளை வீட்டிற்கு வருமாரு அழைத்தாள், ராணி. குழந்தைகளும், அத்தை கையால் சாப்பிட்டு எத்தனை நாளானது என்று புலம்பி கொண்டே சென்றனர். அதனை கண்ட வாசுகிக்கு, சங்கடமாய் இருந்தது.

உடனே தனக்கு தெரிந்த தேங்காய் இடியாப்பத்தை செய்துகொண்டு, ராணியின் வீட்டை தட்டினாள்.

“வா… வாங்க… மா… உள்ள வாங்க மா!” தயக்கத்துடன் ராணி அழைக்க, அவள் உரிமையோடு குழந்தைகளிடம் சென்று, இடியாப்பத்தை கொடுத்து சாப்பிட சொன்னாள். அவர்களும் மகிழ்ச்சியாய் அதை புசித்தார்கள். இருந்தாலும், மீரா சமைக்கும் விதவிதமான பதார்த்தங்களை பற்றி தான் அவர்கள் பெருமையடித்து கொண்டிருந்தனர்.

 ஏற்கனவே, வாசுகியின் குணம் அறிந்த ராணிக்கு பதற்றமாக இருந்தது. வாசுகிக்கு, மீரா வந்து போவதை பற்றி எந்தளவுக்கு தெரியுமோ என்று யோசித்தாள். குழந்தைகள் சரமாரியாக தினசரி நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள,

“அது… மீரா… நம்ம ஹரிக்கு தினமும் சமைக்க வருவா மா.” மெல்லமாக ராணி தொடங்க, வாசுகி முகத்தில் மெல்லிய புன்னகையே. “தெரியும் மா!” என்றாள்.

இவ்வளவு பொறுமையாக பதில் சொல்லும் வாசுகியை பார்த்த ராணிக்கு வியப்பாய் இருந்தது. தன்னையும் மீறி மனம்விட்டு பேசினாள். “அவ இங்க தினம் வரான்னு தான் பேரு. சமைச்சிட்டு, குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்திட்டு கிளம்பிடுவா. அதுக்கு அப்புறம் தான் ஹரி வீட்டுக்கு வருவான். அவனுக்கும் வேலை சரியா இருக்கும். பேருக்கு தான் காதலர்கள்; மற்றபடி ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கறது கூட இல்ல.”

மனதில் இருந்த குழப்பம் தீர்ந்த போதும், அதை வெளிக்காட்டி கொள்ளாமல், தலையை மட்டும் அசைத்தவள் புறப்பட எழுந்தாள். கிடைத்த சந்தர்ப்பத்தை ராணி விடுவதாக இல்லை.

“மீரா ரொம்ப நல்ல பொண்ணு மா. எல்லா விதத்திலும் ஹரிக்கு ஏத்தவ!” பரிந்துரை செய்ய,

அதை கண்டுகொள்ளாதவளை போல், “குழந்தைங்க எப்பவும் போல வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்கட்டும். எனக்கு தெரிஞ்சத நான் சமைச்சு தரேன்!” சொல்லி, குழந்தைகளை செல்லம் கொஞ்சிவிட்டு நகர்ந்தாள்.

வீட்டிற்கு திரும்பியவளின் கண்கள் கணவனின் நிழற்படத்தை தான் முதலில் பார்த்தது. அவர் ‘சந்தேகம் தீர்ந்ததா!’ என்று கேட்பது போல் தோன்றியது அவளுக்கு. ஒவ்வொரு முறை மகனிடன் இதை பற்றி பேச முன்வரும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை உறுத்தியது.

நாட்கள் இப்படியே நகர, ஊருக்கு புறப்படும் நாளும் நெருங்கியது. மகன் எழுதிய புத்தகத்தின் முன் அட்டையை தடவியபடி சிந்தனையில் கலந்திருந்தாள் வாசுகி. பணியிலிருந்து திரும்பியவனுக்கு, அதை கண்டதும், தன்னவளுடன், புத்தகத்தை குழந்தையாய் பாவித்து கொஞ்சிய நினைவு. இப்போது, பாட்டியின் கையில் இருக்கும் பேரப்பிள்ளை போல தோன்றியது ஹரிக்கு. அந்த மிதப்பிலேயே உள்ளே நுழைந்தான்.

மகனை கண்டதும், படபடவென்று புத்தகத்தை மேஜையில் வைத்தாள். அவனும் எதுவும் பேசாமல், உடை மாற்றி கொண்டு வந்து, அவள் அருகில் உட்கார்ந்தான். புத்தகத்தை தன் கையில் எடுத்தவன்,

“அம்மா! நான் சொல்ல போற விஷயம், உனக்கு பிடிக்கலேனாலும் பரவாயில்ல; ஆனா அது தான் உண்மை!” புதிராய் தொடங்க, அவளும் அவனை ஆழ்ந்து பார்த்தாள்.

“நீ வரைந்த ஓவியத்த புத்தகத்தின் முன் அட்டையா போட சொன்னதே மீரா தான் மா! அவ ரொம்ப நல்லவ மா!” என்றதும், அவள் அத்தனை நேரம் அந்த படத்தை வருடியதை மகன் கவனித்திருக்கிறான் என்று புரிந்து கொண்டாள். அவள் அமைதியாக இருக்க, அவனே மேலும் பேசினான்.

வாசுகியின் கைகளை தன் உள்ளங்கைகளில் அடக்கி, “அம்மா! இப்போ, கதைகள வெளியிடறுதல, எனக்கு ஒரு பிடிமானம் வந்திருக்கு; முதல் கதைக்கு நல்ல வரவேற்பு; வாரயிதழுல எழுதின முதல் கதையும் நல்லபடியா முடிஞ்சு, அடுத்த கதையும் எழுத தொடங்கிட்டேன். இரண்டாவது புத்தகமும் அடுத்த வாரம் விற்பனைக்கு வந்திடும்.” விளக்கி, பெருமூச்சு விட்டவன்,

“உன் விருப்பத்திற்கு மீறி, இதெல்லாம் நான் செஞ்சாலும், முடிவுல என்னமோ நல்லதே நடக்குது. எனக்கும் எதையோ சாதிக்கறோமுன்னு ஒரு மன நிறைவு. இதெல்லாம் மீராவோட தூண்டுதல் இல்லாம சாத்தியமே இல்ல மா!”

மீரா பெயரை உச்சரித்ததும், மகனை தலை நிமிர்ந்து பார்த்தாள். எது எப்படியோ, மனதில் உள்ளதை பேசியே தீர வேண்டும் என்று உறுதியாய் இருந்தவன், அதை சற்றும் பொருட்படுத்தவில்லை.

“அவ எனக்கு மனைவியா வந்தா, இந்த சாதனையும், சந்தோஷமும் எனக்கு எப்பவும் நீடிக்கும். ஆனா, நீ மனசார எங்க காதலுக்கு சம்மதம் சொன்னா மட்டும் தான் இதெல்லாம் நடக்கும்!” மனதில் உள்ளதை பேசி, அவளை பார்த்தான்.

அவளிடம், அதே மௌனம். இரண்டு நிமிடங்கள் அவன் காத்திருக்க, அவன் வீட்டிற்கு வந்துவிட்டான் என்று அறிந்த குழந்தைகள் உள்ளே வந்தனர்.

கையில் இருந்த நோட்டு புத்தகத்தை அவனிடம் நீட்டி, “ஹரி மாமா! இதோ பாருங்க; நாங்க வீட்டுபாடத்த எழுதி முடிச்சிடோம். நாங்க எழுதி முடிச்சா தான் நீங்க வீட்டுக்கு வருவீங்கன்னு அத்த போன்ல சொன்னாங்க! அதே மாதிரி வந்துட்டீங்க;வாங்க நம்ம விளையாடலாம்!”  சொல்லி துள்ளி குதித்தனர்.

‘பதில் சொல்லு மா’ என்று அவளை பார்த்து கண்களால் கெஞ்சியவன், குழந்தைகளோடு விளையாட துவங்கினான். எதுவும் பேசாமல் அவளோ சமையலறைக்குள் சென்றாள்.

கால் மணி நேரத்தில், மகனுக்கு பருக டீயும், குழந்தைகளுக்கு நறுக்கிய ஆப்பிள் பழத்தை கொண்டு வந்தவள், அவர்கள் அருகில் அமர்ந்தாள். அதை வாங்கி கொண்ட மூத்தவள், “பாட்டி, ஆப்பிள் தோல்பகுதியில் நிறைய வாக்ஸ்(Wax) இருக்காம், அது உடம்புக்கு நல்லது இல்லன்னு சொல்லி, அத்த தோல் இல்லாம தான் எங்களுக்கு கொடுப்பாங்க!” தர்க்கம் செய்ய, ஹரி முகத்தில் ஒரு பதற்றம்.

குழந்தையை பார்த்து லேசாக சிரித்த வாசுகி, “அதெல்லாம் பாட்டிக்கு தெரியாது கண்ணு; அடுத்த வாரம் உங்க அத்த வந்து சரியா நறுக்கி தருவாங்க; இப்போ இத சாப்பிடுங்க!” சொல்ல, பிள்ளைகள் சரி என்று தலையசைக்க, பெற்ற பிள்ளையின் கண்கள் பளபளத்தது.

ஒரு மணி நேரத்தில், குழந்தைகள் வீட்டிற்கு புறப்பட, கதவடைத்து வந்தவன்,

“அம்மா! நீ சொன்னது நிஜம் தானா!” தாழ்ந்த குரலில் கேட்டான்.

“ம்ம்!” என்று கண்சிமிட்டியவள், “ஆனா எனக்கு ஒரு நிபந்தனை இருக்கு ஹரி!” சொல்ல, ‘நான் மீராவுக்கு போடாத நிபந்தனையா!’ மனதில் எண்ணி சிரித்தவன்,

“சொல்லு மா! எதுவா இருந்தாலும் செஞ்சிடலாம்!” உற்சாகமாய் கேட்டான்.

“இங்க பாரு ஹரி! இந்த முறை, நடந்தத, கேட்டத எல்லாம் பார்க்கும் போது, அந்த பொண்ணு நல்லவதான்னு எனக்கு புரியுது. இருந்தாலும், அவகிட்ட நீ கடன் வாங்கினது எனக்கு சுத்தமா பிடிக்கல. என்னதான் நல்ல பொண்ணா இருந்தாலும், அவள சார்ந்து என் மகன் வாழறத நெனச்சா எனக்கு சங்கடமாயிருக்கு.

அதனால, அவகிட்ட வாங்கின கடன முதல்ல திருப்பி கொடுக்குற வழிய பாரு; அப்படியே நம்ம வீட்டு பத்திரத்த வாங்கிட்டு வா; அதுக்கு அப்புறம் நீ நெனச்சா மாதிரி அவள கல்யாணம் செஞ்சுக்க!” அவளும் மனம் விட்டு பேச, மகிழ்ச்சியில் அவளை கட்டி அணைத்தவன் நன்றி சொல்லி, அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டான்.

அம்மாவிடம் இத்தனை மாற்றங்கள் கண்ட ஹரிக்கு அளவில்லா சந்தோஷம். தன் பங்குக்கு, அவனும் மனம்விட்டு பேசினான். “இவ்வளவு தானே மா! இன்னும் சரியா ஒரு மாசத்துல என்னால கடன் அடைச்சிட முடியும்.” உறுதியாய் சொன்னவன்,

“அம்மா…” என்று குழைந்தான். “நான் மீராவ அழைச்சிட்டு வந்து உனக்கு அறிமுகம் செய்யவா!” தயக்கத்துடன் கேட்க,

உடனே, மறுப்பாய் தலையசைத்தவள், “அவசர படாத ஹரி! நான் சொன்னத முதல்ல செய்!” என்று கராராக சொல்லி, “கடன் அடைச்சா மட்டும் போதாது. குடும்ப பொறுப்புகள தனியா சுமக்குற அளவுக்கு, நீ உன் வரவு செலவுகள திட்டமிடணும்” எந்த சூழ் நிலையிலும் பணத்திற்கு, அவளை சார்ந்து வாழக் கூடாது என்றும் தெளிவு படுத்தினாள்.

அவள் எண்ணம் அறிந்தவன், “பயப்படாத மா! நானும் தெளிவா இருக்கேன். எக்காரணத்துக்கும் வங்கி வேலைய விட மாட்டேன். அதே சமயத்துல அது, என் எழுத்து பயணத்துக்கு தடையா இருக்காது!” விளக்க, அவள் மனதிலும் நிம்மதி பிறந்தது.

மீரா ஒரு போதும் தன்னை, பணத்தாலோ, பதவியாலோ அதிகாரம் செய்யமாட்டாள் என்று அறிந்தவனின் மனம், அதை அம்மாவிடம் எடுத்து சொல்ல துடித்தது. சொல்வதை காட்டிலும், செயலால் நிரூபிக்கலாம் என்று விளக்கும் எண்ணத்தை கைவிட்டான்.

இரண்டு நாட்களில், அம்மா ஊருக்கு புறப்பட, தன்னவளை காணும் ஆசையில் அலுவலகத்திலிருந்து ஓடோடி வந்தான். வெகு நாட்களுக்கு பிறகு சந்தித்த குழந்தைகள் அவளை விடுவதாக இல்லை. ஒரு மணி நேரம் அவர்களுடன் செலவழித்துவிட்டு, ஒரு வழியாக தன்னவனுக்கு நேரம் ஒதுக்கினாள் மீரா.

அவள் தயாரித்த ஏலக்காய் டீயை பருகி கொண்டே, அம்மாவுடன் பேசிய அத்தனையும் சொன்னான். அவளும், நடப்பதை எல்லாம் எண்ணி நெகிழ்ந்தாள். ஒரு முறையாவது வாசுகியை நேரில் பார்த்து பேசியிருக்கலாம் என்று குறைப்பட்டவள், முகத்தில் கவலை கோடுகள்.

“இப்போ எங்க அப்பா மட்டும் தான் டா, நம்ம காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்குறாரு. என்ன சொல்லி அவருக்கு புரிய வெக்குறது!” சொல்லி, தலையை தொங்கப்போட்டாள்.

அவள் அருகில் வந்து ஆதரவாய் தோள் வளைத்து அணைத்தவன், “இன்னும் ஒரே மாசம் தான் டி! உன்கிட்ட வாங்கின பணத்த திருப்பி கொடுத்துட்டா, உங்க அப்பாவும் நம்ம காதலுக்கு சம்மதம் சொல்ல போறாரு!” இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று சொல்லியும், அவள் சமாதானமான பாடு இல்லை.

அவள் முகவாயை ஏந்தி கண் பார்த்தவன், “அப்புறம் நீ கேட்ட அந்த மூணு வார்த்தகளை சொல்லி சொல்லி உன்ன காதலிப்பேன்.” என்றதும், அவள் கண்கள் படபடக்க, முகமெல்லாம் வெட்கம் வழிந்தோடியது.

“யாரோ வெட்கமே வராதுன்னு தர்க்கம் செஞ்சாங்க; இப்போ என்னடானா, சொல்றேன்னு சொன்னதுக்கே இவ்வளவு வெட்க பட்டா என்ன செய்யறது?” அவளை கண்டுகொள்ளாமல் ஜாடையாக பேச,

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல எழுத்தாளரே! நீங்க சொல்றதுகுள்ள, எனக்கு நாணம், வெட்கம் எல்லாம் மறந்து போயிடும்!” சுதாரித்து கொண்டாள்.

அவனும் விடுவதாக இல்லை. “அப்படியா!” என்று இழுத்தவன், ”நான் ரொமான்டிக்கா சொல்ல வரப்ப, நீ மட்டும் கண்சிமிட்டி பாரு… இருக்கு உனக்கு….” சவால் விட,

“பார்க்கலாம்! பார்க்கலாம்! நீங்க எந்த அளவுக்கு ரொமான்டிக்கா சொல்லி கிழிக்குறீங்கன்னு.” விடாபடியாய் பேசி உதட்டை சுழித்தாள்.

ஔதாரிய குணம் கொண்டவள் தேர்ந்தெடுத்து கொடுத்த

ஓவியம் பார்த்து மனம் மாறினாளோ;

ஒருவருக்கு மட்டும் சமைத்தல் கூடாது, மரபு அறிந்தவளை கண்டு,

ஐயங்கள் தீர்ந்ததோ;

ஏகபோகமாய் அக்கம்பக்கத்தினர் அவள்மீது அன்பு செலுத்தியதில்,

எதார்தத்தை புரிந்து கொண்டாளோ;

ஊட்டி வளர்த்த மகனுக்கு அவள் அன்பாய் சமைத்த

உணவு இவள் சுயத்தை உலுக்கியதோ;

ஈன்றெடுத்த பிள்ளையின் விருப்பத்திற்கு இணங்கி

இறக்கம் கொண்டாளோ;

ஆயிரம் காரணங்கள் இருந்தும் மூலகாரணம்,

அவள் அவன் மீது வைத்த அன்பின் ஆழம்

அவன் ‘அவனவள் ‘ மீது வைத்த அன்பின் ஆழம்….