அன்பின் ஆழம் – 24.1

வலதுபுறம் இருந்த பிள்ளையாரை கும்பிட்டு, அண்ணன் பேச்சுக்கு மறுபேச்சு சொல்லாமல், மாடி ஏறினாள் வாசுகி. அவள் மாடியேறுவதற்குள், வீட்டில் எதையும் மாற்றவும் முடியாது, அவளிடம் பேசி எதையும் புரியவைக்கவும் முடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்தவன், நடப்பது நடக்கட்டும் என்று பெருமூச்சுவிட்டான்.

வாடகை வண்டிக்கு பணம் செலுத்திவிட்டு வந்த மணிமாறன், “இத எடுத்துட்டு வா ஹரி!” அவன் தோளில் தட்டி சொன்னார்.

“என்ன மாமா இது… எல்லாம் தெரிஞ்ச நீங்களே, இப்படி ஒரு தகவல் கூட கொடுக்காம அம்மாவ அழைச்சிட்டு வரலாமா?” பெரிய பெட்டியை சுமந்தவன் புலம்ப,

அவரோ மென்மையான புன்னகையுடன், “எல்லாம், உன் நண்பன் செஞ்ச வேலை!” புதிர் போட்டார்.

நண்பன் என்றதும், அவன் கண்முன் நின்றது, அரவிந்தன் முகம் தான். ஆனால், சென்னையில் இருக்கும் அவனுக்கும், ஊரிலிருந்து அம்மா வருவதற்கும் என்ன சம்பந்தம் என்று மனதில் யோசித்தவன்,

“அரவிந்தனா?” என்றான் சந்தேகமாக.

“உம்…வேற யாரு… அவனேதான்…ஏன்… அவன் உன் கிட்ட எதுவும் சொல்லலியா?” கேட்டு, கண்சிமிட்டினார்.

“அய்யோ மாமா! புதிர்போடாம கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா?” பொறுமையிழந்தவன், பெட்டியை கீழே வைத்துவிட்டு அவரை ஆர்வமாய் பார்த்தான்.

“ரெண்டு வாரத்திற்கு முன்னால, அவனோட அம்மா, அப்பா ஊருக்கு வந்திருந்தாங்க! அதுவாவது உனக்கு தெரியுமா?” மறுபடியும் அவர் கேள்வி கேட்க, ஹரி ‘ஆம்’ என்று தலையசைத்தான்.

அரவிந்தனின் திருமணத்தை சொந்த ஊரிலேயே நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். அதற்கான வேலைகளை தொடங்க, அவர்கள் ஊருக்கு சென்றனர் என்று ஹரி அறிந்திருந்தான். ஆனால், அதற்கும், அம்மா திடீர் வருகைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்க, மணிமாறன் பேசினார்.

“அரவிந்தன், அவங்ககிட்ட உன் கதையோட பிரதிகளை கொடுத்து அனுப்பி இருந்தான். அத எனக்கு தெரிஞ்சவங்களுக்கு இலவசமா கொடுக்கவும் சொல்லியிருந்தான்.” என்றதும், நண்பன் எதற்கு நூறு பிரதிகள் மறுபடியும் வாங்கி கொண்டான் என்று விளங்கியது.

“அரவிந்தா….!” இவன் பாசத்திற்கு அளவேயில்லை என்று நெகிழ்ந்தவன், மாமன் சொன்ன மிச்சத்தையும் உன்னிப்பாக கவனித்தான்.

அரவிந்தன் அனுப்பிய பிரதிகளை, மணிமாறன், தன் சுற்றத்தினர் யாரிடமெல்லாம் கொடுக்கலாம் என்று பட்டியல் போட, அங்கு வந்த தங்கை வாசுகியின் கண்களை ஈர்த்தது, முன் அட்டையில் இருந்த ஓவியம். தான் வரைந்த ஓவியத்தை, மகன் தேர்ந்தெடுத்ததை எண்ணி நெகிழ்ந்தாள். இருந்தும், அந்த புத்தகத்தை கையால் தொடவிடாத அளவிற்கு அவள் சுயம் கட்டிப்போட்டது.

புத்தகத்தை படித்தவர்கள், வலிய வந்து மகனை பற்றி பாராட்ட, அந்த கதை எதை பற்றி என்று கூட அறியாதவள், சம்பிரதாயத்திற்காக சிரித்து தலையசைத்தாள். நாளுக்கு நாள், மகன் எழுத்து திறனை பற்றிய நற்செய்திகள் காதில் விழ, கதையை படிக்கும் ஆர்வம், அவளுக்குள் மொட்டு விட்டது. படித்தவள் கண்கள் குளமானது. மற்றவர்களுக்கு அது வெறும் கற்பனை கதை; ஆனால், அவளுக்கு மட்டும் தான் தெரியும், அதில் எத்தனை எத்தனை உண்மை நிகழ்வுகள் ஒளிந்து கொண்டிருந்தன என்று.

மகனின் எழுதும் ஆசையை உதாசீனம் செய்ததை எண்ணி, மனம் நொந்தாள். அண்ணணிடம், உடனே ஊருக்கு அழைத்துச் செல்லும் படியும் கேட்டு கட்டாயப்படுத்தினாள்.

நடந்ததை எல்லாம் விவரமாக சொன்னவர், “ஆனா ஹரி! மீரா விஷயத்துல அவ இன்னும் அதே பிடிவாதமா தான் இருக்கா; அவ இங்க இருக்க போற ரெண்டு வாரத்துல, எப்படியாவது பக்குவமா பேசி புரிய வைக்க பாரு!” அறிவுரையும் அளித்தார்.

‘அதானே பெரிய சவால்’ மனதில் நினைத்தவன், சரி என்று தலையசைத்து, மாடியேறியவளின் பிரளய மழையை எதிர்கொள்ள மனதை பக்குவ படுத்தி கொண்டான்.

“ரெண்டு பெட்டி எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?” இயல்பாக கேட்டவள் முகத்தில் எந்த கோபமோ, வெறுப்போ இல்லை. அவர்கள் வருவதற்குள், வாசுகி குளித்து முடித்து, பருக ஃபில்டர் காபியும் தயாரித்து இருந்தாள்.

“ஹரி! நானும் குளிச்சிட்டு வரேன்!” கண் ஜாடை காட்டி, மணிமாறன், தாய்க்கும், சேய்க்கும் தனிமையை கொடுத்தார்.

மகனுக்கு ஆவி பறக்க, ஃபில்டர் காபி கொடுத்துவிட்டு சென்றாள் வாசுகி. என்ன குறை கூறப் போகிறாளோ என்ற பயத்துடன் உள்ளே நுழைந்தவனுக்கு, இது வரை அவள் வீட்டை பற்றியோ, மீராவை பற்றியோ, எதுவும் பேசாமல் இருந்தது, இன்னும் அதிக பயத்தை கொடுத்தது.

கொஞ்சம் காபியை பருகியவன், அவளை பின் தொடர்ந்தான். “அம்மா! காபி சூப்பரா இருக்கு! எத்தன நாளாச்சு உன் கையால ஃபில்டெர் காபி குடித்து!” மெல்லிய குரலில் பேச,

மேடையை சுத்தம் செய்து கொண்டிருந்தவள், அவன் பக்கம் திரும்பி, “எதுக்கு ஹரி பொய் சொல்ற? உனக்கு டீ தான் பிடிக்கும்னு எனக்கு தெரியாதா!” திடமாய் கேட்டாள்.

அவள் சொன்னது முற்றிலும் உண்மை தான். அதுவும் சில மாதங்களாக மீராவின் ஏலக்காய் டீக்கு அடிமையாகி இருந்த சுவை அரும்புகளுக்கு, வேறு எதிலும் நாட்டம் இல்லை. பதில் சொல்ல முடியாமல் நகர்ந்தான்.

சமையல் செய்ய ஆயத்தமானவள், ஃப்ரிட்ஜை திறந்தாள். மகன் ஃப்ரிட்ஜ் வாங்கியதில் அவளுக்கு எதுவும் ஆச்சரியம் இல்லை, ஆனால் அதில் உள்ள பதார்த்தங்களை பார்த்து புருவங்கள் உயர்த்தினாள். புளிக்காய்ச்சல், வற்றல் குழம்பு, மாவு வகைகள் காய்கறி, பழங்கள் என்று நிரம்பி இருந்தது. மகன், பேச்சுலராக இருந்த காலம் தொட்டே, அடிப்படையான சமையல் செய்வான் என்று அவளுக்கு தெரியும்.

ஆனால், ஃப்ரிட்ஜில் இருந்த பொருட்களை கவனித்தவள், “சமையலுல, நல்லா தேரிட்ட போல!” வினவிக்கொண்டே, இட்லி மாவை எடுத்தாள்.

“அம்மா! அது… மீரா இங்க தினமும் வந்து சமைக்கரா!” எந்தவித அலட்டலும் இல்லாமல் சொன்னான். எப்படி இருந்தாலும், அவளுக்கு தெரிய தான் போகிறது என்ற தெளிவு அவனிடம்.

கேட்டவளுக்கு தான் வியப்பு. ஃப்ரிட்ஜின் பாதி திறந்த கதவின் இடுக்கில், சிலையாய் நின்றாள். அவள் வாய்திறந்து மீராவை ஏசுவதற்குள், மகன் முந்திக்கொண்டான்.

“நான் தினமும் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டா, உடம்புக்கு ஒத்துக்காதுன்னு தான், அவ எனக்காக வீட்டுலேயே சமைக்குறா….” விளக்க முயல, அவள் எதுவும் சொல்லாமல், இட்லி மாவை எடுத்து கொண்டு சமையலறைக்குள் புகுந்தாள்.

மகன் உடல்நலத்தில் இவ்வளவு அக்கறையாய் இருப்பவள் மீது என்ன குறைகூறுவது என்று தெரியாமல் தான் அவளும் மௌனமாய் நகர்ந்தாள். இது புரியாதவனாய், அவள் பின்னால் வந்தவன்,

“நீ தானே மா பொய் சொல்ல வேண்டாம்னு சொன்ன. அதான் உள்ளத உள்ளபடி சொன்னேன்.” என்று அவள் தோளினை பற்றி கொண்டான். “நீ இதெல்லாம் உபயோகிக்கணும்னு அவசியம் இல்ல. உனக்கு பிடிச்சத சமைச்சு தா. இது உன் வீடு; உன் கிட்சென்” அவளுக்கு முன்னுரிமை கொடுப்பதாய் நினைத்து பேசினான்.

அவனிடமிருந்து விலகி நின்றவள், கையில் இருந்த இட்லி மாவை ஒரு முறை பார்த்து தலை நிமிர்ந்தாள். “அவ தான் சிக்கனம்னா என்னன்னே தெரியாம, இவ்வளவு சமைக்குறா நா… நானும், வீம்புக்கு அதயெல்லாம் கீழ கொட்டி வீணாக்கணுமா?” உணவை வீணாக்க கூடாது என்று மகனுக்கு சொல்லி, மடக்கினாள்.

“அதுக்கில்ல மா… ஒருத்தருக்கு மட்டும் தனியா சமைக்க கூடாதூன்னு ஏதோ காரணம் சொன்னா…” யோசிக்காமல் பேச தொடங்கியவன், அடுத்து அம்மா, அவளும் கூட சேர்ந்து சாப்பிடுகிறாளா, குடும்பம் நடத்துகிறாளா என்று எல்லாம் கொந்தளிப்பாளே என்று பதறினான்.

“அது… அது… ராணி அக்கா குழந்தைங்க, மகேஷ் குழந்தைங்க எல்லாம் இங்க வந்து விளையாடுறப்ப சாப்பிடுவாங்க…” எப்படியோ மழுப்பி, தனக்கு நேரம் சரியில்லை என்று நகர்ந்தான்.

அறைக்குள் சென்று கதவடைத்தவன், ‘அய்யோ ஹரி! யோசிச்சு பேசு டா! உண்மைய சொல்றேன்னு, மீரா பேருக்கு களங்கம் வரா மாதிரி எதுவும் செஞ்சிடாத டா… அவ பாவம்!’ தனக்கு தானே புத்திமதி சொல்லி கொண்டான்.

இட்லி செய்து கொண்டிருந்தவளுக்கு பல எண்ணோட்டங்கள்.

‘ஒருத்தர் மட்டும் தனியா சாப்பிட கூடாதூன்ற மரபு தெரிஞ்ச பொண்ணா இவ.’ முதல் முதலாக, மீராவை பற்றிய நல்லெண்ணம் வாசுகியின் மனதில் உதித்தது.

மீரா நேர்த்தியாக வைத்திருந்த சமையலறையில் இரண்டு மணி நேரம் செலவழித்தவளுக்கு, அந்த நல்லெண்ணங்கள் பன்மடங்கானது. மேற்கத்திய கலாச்சாரத்தின் மோகத்தில் விழும் தலைமுறையில், இவள் இன்னும் பாரம்பரிய உணவுகளை சமைத்து, மகன் ஆரோக்கியம் மீது கவனமாய் இருந்ததை, அவள் செய்து வைத்திருந்த சத்துமாவு கஞ்சியும், சாம்பார் பொடியும்,  பறைசாற்றின.

காலை உணவு சாப்பிட்டவளின் நாவும், மீரா கைப்பக்குவத்திற்கு அடிமையானது. மிருதுவான இட்லி, தக்காளி சட்னியின் அளவான உப்பு, காரம் என்று ஒவ்வொன்றிலும், அவளுடைய அன்பும் அக்கறையும் பிரதிபலித்தது.

 பெண் சம உரிமை என்று பேசும் பெண்களுக்கு மத்தியில், திருமணம் கூட ஆகாத நிலையில், மகனுக்காக இத்தனை வேலைகளை செய்வதை எண்ணி நெகிழ்ந்தாள். அதே சமயத்தில், தினமும் இப்படி இவர்கள் தனிமையில் சந்திப்பது சரியா என்றும் தோன்றியது. அக்கறையா, அதிகபிரசங்கி தனமா என்று பாகுபடுத்த முடியாமல் குழம்பினாள்.

ஹரி அலுவலகத்திற்கு புறப்பட்டான். மணிமாறனும் தொழில் நண்பர்களை சந்திப்பதாக சொல்லி, வெளியே கிளம்பினார். வீட்டை தனியாளாக சுற்றி வந்தவளின் கால்கள், பூஜை மேடையின் முன் நின்றது. அன்று அவள் வைத்துவிட்டு போன அதே ஜோடி வெள்ளி விளக்குகள்; இத்தனை மாதங்களாகியும், மீரா அவற்றை அப்புறப்படுத்தவில்லை என்று மனதில் நினைத்தவளின் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்பு கோடு. சுவற்றில் மாற்றியிருந்த கணவன் நிழற்படத்திற்கு முன் நின்றாள்.

“நீங்க தான், இங்க நடக்குற அத்தனைக்கும் ஒரே சாட்சி. ஹரி கிட்ட என்ன சொல்லணுமுன்னு எனக்கு தெரியல. நீங்களே எனக்கு வழி காட்டுங்க!” ஆத்மார்த்தமாக கணவனிடம் வேண்டிக்கொண்டு, பாரத்தை இறக்கி வைத்தாள்.

அலுவலகம் புறப்பட தயாராகி வண்டியில் அமர்ந்தவன், மீராவை அழைத்து, அம்மாவின் திடீர் வருகையை பற்றி சொன்னான். இரண்டு வாரம் அவள் தன்னுடன் இருப்பதை பற்றி தயங்கி தயங்கி அவன் கூற,

“அதான், நம்ம ஏற்கனவே, இத பற்றி பேசி வெச்சுருக்கோமே ஹரி! அவங்க ஊருக்கு கிளம்பினதுக்கு அப்புறம் நான் வரேன். அது வரைக்கும் என் சமையலேந்து உனக்கு விடுதலை டா!” இயல்பாக பேசினாள்.

‘விடுதலையா! உன் கைப்பக்குவத்துக்கு மெல்ல மெல்ல அடிமையாறேன் டி!” மனதில் நினைத்தவன் சிரித்து, “அதுவரை நம்ம எங்கையாவது வெளியில சந்திச்சுக்கலாம் மீரா!” யோசனை சொன்னான்.

அவன் தனக்கு முக்கியத்துவம் கொடுப்பதை எண்ணி மகிழ்ந்தவள், “எழுத்தாளரே! எனக்கு சொன்ன ரூல்ஸ் உங்களுக்கும் பொருந்தும். மாலை நேரங்கள அம்மாவோட செலவிடுங்க! அவங்க உங்களுக்காக தான் ஊருலேந்து வந்திருக்காங்க!” அன்பாய் மறுத்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக அவன் கொள்கைகளுக்கு செவி சாய்க்க பழகியவளுக்கு, இந்த தற்காலிகமான பிரிவை ஏற்கும் மனபக்குவமும் வளர்ந்திருந்தது. அவள் கொஞ்சல் பேச்சுக்கும், சிணுங்கல்களுக்கும் அடிமையானவனின் மனம் தான், இரண்டு வாரங்கள் பார்க்காமல் இருக்க முடியுமா என்று ஏங்கியது. அவன் வேறு காரணங்களை தேட,

“அது வரைக்கும் வண்டி உன் கிட்டையே இருக்கட்டும் டா! மகேஷ், என்ன தினமும் பிக்அப் டிராப் செய்ய சொல்றேன்.”  முடிவே செய்துவிட்டாள்.

கண்களில் ஏக்கத்துடன், சன்னியை தழுவினான் ஹரி.

‘மீரா இல்லாத குறையே தெரியாம, நான் உன்ன பாத்துக்கறேன் ஹரி! ஐ பிராமிஸ்!’ நம்பிக்கையூட்டும் சன்னியின் வார்த்தைகளை காதில் வாங்காமல் மௌனமாய் இருந்தான்.

ஐ வில் மிஸ் யூ டா!” மீராவின் குரல் ரம்மியமாய் காதில் ஒலிக்க,

ஐ வில் மிஸ் யூ டூ மீரா!” ஏக்கம் ததும்ப பதிலுக்கு சொன்னான்.

ஐ லவ் யூ ஹரி!” இடைவிடாமல் சொல்லி, அவனும் பதிலுக்கு சொல்லிவிடுவான் என்று ஆர்வமாய் காத்திருந்தாள்.

“உம்!” எதிர்முனையிலிருந்து அவ்வளவு தான் ஒலித்தது.

“உம்ம்….” என்று அவள் இழுக்க, அந்த தோரணையில் இருந்த எதிர்பார்ப்பை எண்ணி, வாய்விட்டு சிரித்தான்.

“செம்ம உஷார் டா நீ!” அவன் உறுதியை மெச்சியவள், “வலிய வந்து ஐலவ்யூ சொன்ன அந்த நல்லவனோட காதல அலட்சிய படுத்தினேன்ல… கர்ம வினை என்ன சும்மா விடுமா!” அரவிந்தன் காதலை நிராகரித்ததை சுட்டிகாட்டி புலம்பினாள்.

அதை கேட்டு, இன்னும் அதிகமாய் சிரித்தவன், “அந்த நல்லவன் செஞ்ச வேலையினால தான் டி, எங்க அம்மா இப்போ கிளம்பி வந்திருக்காங்க!” என்று, மணிமாறன் சொன்ன அனைத்தையும் அவளுக்கு விளக்கினான்.

“ஏதோ நல்லது நடக்க போகுதுன்னு என் உள்மனசு சொல்றது டா!” முழுவிவரத்தையும் கேட்டவள், தாழ்ந்த குரலில் சொல்ல,

“உம்! உன் எண்ணம் பலிக்கட்டும்!” அவனுக்கும் அதே நப்பாசை.

வான் தேவதை, இவர்கள் வேண்டுதலுக்கு செவிசாய்த்து, ‘ததாஸ்து ‘ என்று மொழிந்ததை கேட்டிருந்தால், இத்தனை கவலை கொண்டவர்களாக இருந்திருக்க மாட்டார்கள்.

தொடர்ந்து படிக்க, Click Here –> அன்பின் ஆழம் 24.2