அன்பின் ஆழம் – 23.1

அன்புள்ளங்களே!

முந்தைய எபிசோடில், கேட்டிருந்த பெண்களின் பெயர்கள், இதோ….

நண்பன் கனவை, தனதாக்கி வாழ்பவள் – மீரா

தந்தை-மகள் உறவில் விரிசல் விழாமல் காப்பவள் – நிர்மலா

தோழியை உறவாக்கி கொண்டவள் – அகிலா/ சாரதா (இருவருக்கும் பொருந்தும்)

பிறர் மனதை நோகடிக்க தெரியாதவள் – அஞ்சலி

மழலை மொழியால், மனதை கொள்ளை கொண்டவள்சஹானா

உயிராய் ஜனித்தவளையே உலகம் என்பவள் – கீதா

உறவாய் வந்தவளையும் உயிராய் நேசிப்பவள் – மைதிலி/ராணி(இருவருக்கும் பொருந்தும்)ஒற்றுமையாய் ஒரே இடத்தில் வசிக்கும் நாத்தனாரும், தம்பி மனைவியும்.

எபிசோடு 23.1

“சார்! அந்த மேஜை மேல இருக்குற ரெண்டு பெட்டியையும் எடுத்துட்டு வரட்டுமா?” கேட்டான், அரவிந்தனுக்கு மதியம், டீ கொண்டு வந்த பியூன்.

காலையில் வரும் போது கூட, பத்து பிரதிகள் பார்த்த ஞாபகத்தில், இன்னும் எத்தனை புத்தகங்கள் பாக்கி உள்ளது என்று அரவிந்தன் வினவ, “ஒண்ணே ஒண்ணு தான் சார்!” பதில் சொன்னவன், “அத நான் வீட்டுக்கு எடுத்துட்டு போட்டமா?” கேட்டான்.

அரவிந்தனும், அவன் ஆர்வத்தை மெச்சி, “தாரளமா எடுத்துட்டு போ! ஆனா, கட்டாயம் ஹரி சார் கிட்ட, கதை எப்படி இருந்துதுன்னு சொல்லணும், சரியா!” என்று நிபந்தனை போட, பியூன் தலைசொறிந்து, அசடுவழிந்தான்.

“அது… அது எனக்கு தமிழ் பேச மட்டும் தான் வரும். படிக்க தெரியாது. நம்ம ஹரி சார் எழுதினதுனால, ஒரு ஞாபகார்த்தமா வெச்சுக்கலாமேன்னு…” என்று இழுக்க,

அவன் வெகுளிதனத்தை கண்ட அரவிந்தனுக்கு, சிரிப்பு தான் வந்தது. சரி என்று தலையசைத்து, பெட்டிகளை எடுத்து வர சொன்னான்.

பெட்டிகளை திறக்கலாமா வேண்டாமா என்று அவற்றையே உற்று பார்த்து சிந்தித்தான் அரவிந்தன். இரண்டு வாரமாய், அந்த இடத்தை கடக்கும் போதெல்லாம், அரவிந்தன் கண்கள், மீதமிருந்த புத்தகங்களை கணக்கெடுக்க தவறவேயில்லை. முன்னூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில், வெறும் நூறு பிரதிகள் விற்க, இத்தனை நாட்களானதை எண்ணி வருந்தினான். ஹரியை பற்றி தெரிந்ததனால், அனைவரும் உடனே முன்வந்து, ஒரு புத்தகமாவது வாங்குவார்கள் என்று எதிர்பார்த்தவனுக்கு இது கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது.

ஒரு வழியாக, பிரதிகள் தீர்ந்த போதிலும், எத்தனை பேர் அவற்றுக்கு பணம் செலுத்தி இருப்பார்கள்; எத்தனை பேர் ஆர்வமாய் படித்து இருப்பார்கள் என்றும் யோசித்தான். சற்றுமுன் வந்த பியூன் போல, படிக்கும் எண்ணமே இல்லாமல் எடுத்துக்கொண்டு போனவர்கள் எத்தனை பேரோ என்று நினைத்தவனுக்கு, பெட்டிகளை திறக்க ஒரு வித தயக்கம்.

இரண்டு வாரமாய் ஹரி, இதை பற்றி ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அதுவே, நண்பனிடம் நற்செய்தி மட்டுமே சொல்ல வேண்டும் என்ற அழுத்தத்தை அரவிந்தனுக்கு கொடுத்தது. இப்படியே யோசித்து கொண்டிருந்தால் ஒரு பயனும் இல்லை என்று பெட்டிகளை திறக்க துணிந்தான் அரவிந்தன்.

பெட்டி நிறைய பணம் இருப்பதை கண்டவனுக்கு அளவில்லா சந்தோஷம். உற்சாகத்துடன் ரூபாய் நோட்டுகளை மேஜையில் பரப்பி எண்ணியவனுக்கு மேலும் ஆச்சரியம். கிட்டத்தட்ட தொண்ணூறுக்கும் மேலான புத்தகங்களின் மதிப்புக்கு இணையான பணம் வசூலாகியிருந்தது. அதே உற்சாகத்துடன், படிவங்கள் இருக்கும் பெட்டியை திறந்தான்.

முப்பதுக்கும் மேலான படிவங்கள் இருந்தன். அத்தனையிலும் நேர்மறை கருத்துக்களை படித்தவனுக்கு மனநிறைவாக இருந்தது. அதிலும் ஒருவர், மேலும் இரண்டு பிரதிகள் கேட்டு விண்ணப்பித்து இருந்ததை பார்த்தவனுக்கு, உடனே அஞ்சலி நினைவில் வந்தாள். ஏனென்றால், இருவரில் யாருக்கு முதலில், புத்தகங்களின் கூடுதல் ஆர்டர் வருகிறது என்று அவர்கள், பந்தயம் வைத்து கொண்டிருந்தனர்.

கைக்கடிகாரத்தில் மணி பார்த்தவன், அவளுக்கு வகுப்பு நேரம் முடிந்திருக்கும் என்று உணர்ந்து, உடனே போன் செய்தான். அவள் குரல் கேட்டதும்,

“ஓய் அஞ்சலி பாப்பா! பந்தயத்துல நான் ஜெயிச்சுட்டேன். ஐ கோட் டூ ஆர்டர்ஸ்!” நமுட்டு சிரிப்புடன் பெருமையடித்து கொண்டான்.

“அப்படி கூப்பிடாதீங்கன்னு எத்தனை முறை சொல்றது?” அவள் சிடுசிடுக்க,

இன்னும் அழுத்தமாக, “அஞ்சலி பாப்பா! அஞ்சலி பாப்பா! அஞ்சலி பாப்பா! அப்படி தான் கூப்பிடுவேன்… நீயும் உன் தலைவிரி கோலமும்…” என்று சொல்லி சிரித்தான்.

சில நாட்களுக்கு முன், திடீரென்று அவள் வீட்டிற்கு சென்ற போது, அஞ்சலி, சாயம் வெளுத்த ஒரு பாவாடை சட்டையில், தலைவிரி கோலமாய், பாதி தூக்கத்தில், வந்து கதவை திறந்தாள். அதை கண்டவனுக்கு திரைப்படத்தில் நடித்த அந்த சின்ன குழந்தை போலவே தோன்ற, அதிலிருந்து, அவளை அப்படி அழைத்து வெறுப்பேத்தினான்.

“ஆமாம், அதுக்குன்னு நாள் முழுக்க சீவி சிங்காரிச்சிட்டு இருக்க முடியுமா?” சலித்து கொண்டவள், “எனிவே, பந்தயத்துல நான் தான் ஜெயிச்சேன்… எனக்கு காலையிலேயே முதல் ஆர்டர் வந்தாச்சு! அதுவும் பல்க் ஆர்டர்… சொளையா முப்பது பிரதிகள் கேட்டு இருக்காங்க. சாயங்காலம் சொல்லாம்னு நெனச்சேன்!” என்றவுடன், அந்த பக்கத்தில் மௌனம்.

“ஹெலோ பாஸ்! இருக்கீங்களா!” அவள் உரக்க அழைத்தாள்.

“எப்படி அஞ்சலி பாப்பா! புத்தகத்த வாங்கிகிட்டா தான் விடுவேன்னு அடம்பிடிச்சியா மா?” நம்பிக்கை இல்லாதவனாய் கேட்க,

“உங்களுக்கு எல்லாத்துக்கும் நக்கல் தான்!” என்றவள், தன்னுடன் பணிபுரியும் ஆசிரியர், மாதர் சங்கத்தின் உறுப்பினர் என்றும், இந்த புத்தகத்தில் பெண்மையை பற்றி உயர்வாய் சொல்லி இருப்பதால், இதையே அவர்கள் ஆண்டு விழா போட்டியில் பங்கெடுத்து கொள்ளும் மகளிருக்கு பரிசாய் வழங்கலாம் என்ற எண்ணத்தில், கேட்டிருப்பதாக விளக்கினாள்.

“கலக்கிட்ட அஞ்சலி! ஹரிக்கு இனிமே பெண்கள் மத்தியில சரியான மவுசுதான் சொல்லு. அநேகமா, ஃபீட்பாக் ஃபார்மோட சேர்த்து, அவனுக்கு, காதல் கடிதமும் வரப்போகுது பாரு!” என்று கலாய்த்து, பெருங்குரலில் சிரித்தான்.

“ஹரி என்ன, உங்கள மாதிரியா… மீரா இல்லேன்னா அஞ்சலி… அஞ்சலி இல்லேன்னா ராதான்னு, காதல் கடிதம் அனுப்புற பொண்ணுங்கள பார்த்து பல்ல இளிக்க…” அவள் பங்குக்கு கலாய்த்தாள்.

தன் மீது அவள் உரிமை கொண்டாடுவதை இரசித்தவன், “அந்த பக்கம் லேசா புகை… ய… ரா… மா…தி…ரி… இருக்கே…” என்று ராகமாய் இழுத்தான். அலுவலக நேரம் என்று நினைவுக்கு வர, “சரி! நம்ம இந்த நற்செய்திய சொல்ல, நாளைக்கு ஹரி வீட்டுக்கு போகலாமா?” யோசனை கேட்டான்.

“உம்” என்ற அவளும் சம்மதம் சொல்ல, மாலையில் நேரில் சந்தித்து பேசலாம் என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

ஹரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம் என்று அவனிடம் எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு திரும்பினான். இரவு உணவுக்கு பின், மீராவை அழைத்து, விற்பனை பற்றியும், ஆர்டர்கள் பற்றியும் விளக்க,

“கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு அரவிந்த்! ஹரி என்ன சொன்னான்?”

“ஹரி கிட்ட இன்னும் சொல்லல மீரா! நாளைக்கு, நம்ம எல்லாரும் அவன சந்திச்சு, இத பற்றி சொல்லி, அப்படியே அவன சந்தோஷத்துல மூழ்கடிக்கணும் டி!” என்று தன் திட்டத்தை உற்சாகமாய் சொல்ல, அவளோ விரக்தியில் சிரித்தாள்.

“அதெல்லாம் வேண்டாம் டா! நீ முதல்ல அவன்கிட்ட இத பற்றி சொல்லு. நான் இன்னொரு நாள் அவன பார்த்து பேசிக்கிறேன்.” வர மறுத்தாள் மீரா.

அதை கேட்டு அதிர்ந்தவன், “என்னடி ஆச்சு உனக்கு? எவ்வளவு பெரிய விஷயம் சொல்றேன்… இப்படி சுரத்தே இல்லாம பேசுறியே?” என்றான்.

“என்ன செய்ய சொல்ற டா? அவன, உங்க வீட்டு நவராத்திரி பண்டிகையில பார்த்ததோட சரி! விளையாட்டு போல ரெண்டு வாரமாச்சு!” என்று பெருமூச்சுவிட்டவள்,

“விற்பனை தொடங்கி, ஒரு மாசமாகியும், கருத்து சொல்லி ஒருத்தர் கூட பதில் போடலியேன்னு வருத்தமா இருக்கான் டா. எவ்வளவு சொல்லியும் அவனுக்கு நம்பிக்கையே வரல. வீணா ஏதாவது பேசி, எங்களுக்குள்ள மனஸ்தாபம் வந்துடுமோன்னு பயம். அதான் அவன் சாயங்காலம், வர லேட்டாகுமுன்னு சொன்னா கூட காரணம் எதுவும் கேக்குறது இல்ல. போன்ல பேசுறப்ப கூட, பேங்க் எக்ஸாம் சம்பந்தமான விஷயம் மட்டும் தான் பேசுவோம்.”, தன்னவனின் மனநிலையை நண்பனுக்கு விவரித்தாள்.

அதை நிதானமாக உள்வாங்கியவன்,” எல்லாம் சரி மீரா! அவன் எதிர்பார்த்த கருத்துக்கள், நிறைய வந்திருக்கு. கண்டிப்பா சந்தோஷப்படுவான்; நீயும் வா!” என்று வற்புறுத்தினான்.

ஏதோ ஒரு சாக்கு சொல்லி, தன்னை பார்க்காமல் தட்டி கழித்தவனுக்கு ஒரு பிடிமானம் வரும் வரை, அவனை நேரில் பார்க்க கூடாது என்று அவளும் பிடிவாதமாய் இருந்தாள். “பரவாயில்ல டா! நீ அவனோட தனியா பேசு. நீ சொல்லும் நற்செய்தி அவனுக்கு தன்னம்பிக்கை கொடுக்கட்டும். அப்புறம் சந்திக்கலாம்!” தீர்மானமாய் மறுக்க, வேறுவழியில்லாமல், அரவிந்தனும் சம்மதித்தான்.

ஒரு காலத்தில், ஹரியின் சூழ்நிலையை பற்றி கேட்டு மொக்கை கதை என்று சொன்னவள், இன்று இத்தனை நிதானமாகவும், பக்குவமாகவும் பேசுவதை நினைத்து வியந்தான். அஞ்சலியிடமும் எடுத்து சொல்லி, அவளிடமிருந்து படிவங்களை மட்டும் வாங்கி கொண்டான்.

வெள்ளிக்கிழமை மாலை, அரவிந்தன், ஹரி வீட்டிற்கு திடீர் விஜயம் செய்ய, அவனை கண்டவனுக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது.

“என்னடா! சொல்லாம கொள்ளாம வந்து நிக்குற?” கேட்டவனுக்கு பதில் சொல்லாமல்,

இழுத்து உள்மூச்சு வாங்கியவன், “மீரா வெஜிடபிள் பிரியாணி தானே செஞ்சிருக்கா?” மற்றொரு கேள்வியை கேட்டு மடக்கினான்.

“அது சரி! இவ்வளவு அதிகமா சமைச்சிருக்காளேன்னு யோசிச்சேன். இப்போ புரியுது!” என்று சிரித்தவன், நண்பனை தழுவி உள்ளே அழைத்தான்.

அரவிந்தன், பையிலிருந்து, ஒரு என்வெலப்பையும், இனிப்பு டப்பாவையும் எடுத்து, நண்பனிடம் நீட்டி, “குட் நீயுஸ் உனக்கு; குலாப் ஜாமுன் என் தோழிக்கு!” என்று கோர்வையாய் சொல்ல, ஹரி புதிராய் பார்த்தான்.

இனிப்பு டப்பாவை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு வந்து, நண்பன் அருகில் அமர்ந்தவன், அந்த மெல்லிய என்வெலப்பை பிரித்தான். படிவங்களை பார்த்தவன் கண்களில் பூரிப்பு. புருவங்கள் வளைந்தும், உதடுகள் விரிந்தும், கருத்துக்களை ஒவ்வொன்றாய் படித்து முடித்தான். தன்னுடன் நெருங்கி பழகினவர்கள், அவ்வப்போது பேசினவர்கள், என்று பலர் கருத்து சொல்லியிருந்தனர். கடைசி படிவத்தை மடித்தவன்,

“தாங்க்ஸ் நண்பா! இதெல்லாம் உன்னால தான் டா!” நன்றி சொல்ல,

“அதெல்லாம் இருக்கட்டும்! இந்தா ஆர்டர் ஃபார்ம்! புத்தகங்கள் எடுத்துட்டு வா!” அலட்டல் இல்லாமல் கேட்டான் அரவிந்தன்.

ஒரே படிவத்தில், முப்பது பிரதிகள் கேட்டிருப்பதை கண்டவனுக்கு, வியப்பு. “என்னடா நடக்குது?” என்று நண்பனை பார்க்க, அரவிந்தன் அத்தனையும் விளக்கினான்.

“உங்க அன்புக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன் டா!” ஹரி உணர்ச்சிவசப்பட,

“முதல்ல என் தோழி சமைச்ச பிரியாணிய ஒரு தட்டுல போட்டு எடுத்துட்டு வா! ரொம்ப பசிக்குது டா” என்று அவனை விரட்டினான். எதையும் விளையாட்டாக பேசும் அவனை பார்த்து சிரித்தவன், நண்பன் சொன்னதை செய்தான்.

“மீராவுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குடா; பாவம் அவ!” மெல்லமாக அரவிந்தன் தொடங்க,

“போட்டுக்கொடுத்துட்டாளா அவ!” தன்னவளை ஏசினான்.

அப்படியெல்லாம் இல்லை என்று அரவிந்தன் விளக்க முயல, ஹரி குறுக்கிட்டான். “வேணும்னு எதையும் செய்யல டா! நிஜமாவே, வேலை அதிகமா இருந்துது. கருத்துக்கள் வரலையேன்னு வருத்த பட்டேன் தான். ஆனா, அதுக்காக, அதையே நெனச்சு எல்லாம் சோர்ந்து போகல. வாரயிதழுக்கு கொடுக்க வேண்டிய எபிசோடு, எக்ஸாமுக்கு படிக்குறதுன்னு சரியா இருந்துது. அவ்வளவுதான். அதுக்குள்ள, அவ வீணா மனச போட்டு குழப்பிட்டு இருந்திருக்கா!” மனதில் ஓடிய பயங்களை காட்டிக்கொள்ளாமல் பேசினான்.

“எப்படியோ ஹரி! அவளுக்கு நீதான் உலகம்; அத மறந்துடாதே!” அவள் அன்பின் ஆழத்தை நினைவூட்ட, ஹரியும் அதை நன்கு அறிந்தவனாய் தலையசைத்தான்.

கொண்டு வந்த பையிலிருந்து, மற்றொரு என்வெலப்பை எடுத்து ஹரியிடம் நீட்டினான். அது சற்று கனமாகவே இருந்தது.

“என்னடா இது?” கேட்டு, தயக்கத்துடன் பிரிக்க, அதில் பணம் இருந்தது. அதை, அரவிந்தன் அலுவலகத்தில், புத்தகம் விற்பனை செய்ததிலிருந்து வந்த தொகை என்று விளக்க, ஹரி, உடனே, அதை அரவிந்தன் சட்டை பாக்கடிலேயே நுழைத்தான்.

“நீ ஏற்கனவே, பிரதிகளுக்கு பணம் கொடுத்துட்ட! இது உன் பணம்” என்று நினைவூட்டினான் ஹரி.

“ஏண்டா! என் நண்பன் எழுதின புத்தகங்கள நான் வாங்கிக்க கூடாதா!” என்று அரவிந்தன் தர்க்கம் செய்தான்.

“வாங்கிக்க! யாரு வேண்டாம்னு சொன்னா! ஒண்ணோ, ரெண்டோ வாங்கிக்க. இப்படி மொத்த பாரமும் தலையில போட்டுக்காத!” விளக்கிய ஹரி, தாழ்ந்த குரலில், “ப்ளீஸ் டா அரவிந்தா! புரிஞ்சுக்கோ! என் பக்கத்துல இருந்து எனக்கு தட்டி கொடு; பணத்த கொடுத்து என் தன்னம்பிக்கைய சோதிக்காத! என்னால முடியும் டா! நான் சமாளிப்பேன்!” நொந்து பேச,

அதில் மனமுறுகியவன், “மன்னிச்சிரு டா! உன்மேல பரிதாபப்பட்டு கொடுக்கல! நீ கட்டாயம் ஜெயிப்பன்னு எனக்கு தெரியும்… ஆனா, அது வர… மீரா… அவ எத்தன நாள் காத்துகிட்டு இருப்பா சொல்லு …”  அவளிடம் வாங்கின கடன் தொகையை விரைவாக திருப்பினால் வரதன் மனம் மாறும் என்று யூகித்து வலியுறுத்தினான்.

அதற்கும் மறுப்பாய் தலையசைத்தவன், “எத்தன நாளானாலும் அவ எனக்காக கண்டிப்பா காத்துகிட்டு இருப்பா டா!” தன்னவள் மீது இருந்த அதீத நம்பிக்கையில் அழுத்திச் சொன்னவன், “ஆனா கவலை படாத… அவள அப்படியே விட்டுட மாட்டேன்… அவ என் உயிர் டா! கடினமா உழைச்சு, அவளுக்கு சீக்கிரமே மகிழ்ச்சியான வாழ்க்கைய தருவேன்.” உறுதியாய் சொன்னான். அரவிந்தனும், அவனை கட்டாய படுத்தும் எண்ணத்தை கைவிட்டான்.

இருந்தும், நண்பனுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று நினைத்தவன், “சரி! இந்த பணத்த எடுத்துக்கிட்டு, எனக்கு இன்னொரு நூறு பிரதிகள் கொடு” என்றான்.

“எதுக்கு டா அவ்வளவு? என்ன செய்ய போற?” காரணம் கேட்டவனுக்கு,

“அட கொடு டா! எல்லாத்துக்கும் எதிர்கேள்வி கேட்டுகிட்டு!” அதிகாரமாய் பேசி அவன் வாயை அடைத்தான்.  ஹரியும், கைவசம் அவ்வளவு பிரதிகள் இல்லயென்றும், ஸ்ரீராமிடம் பேசி, ஏற்பாடுகள் செய்வதாய் சொன்னான்.

அரவிந்தன் வருகைக்கு பிறகு, ஹரியிடம் மாற்றம் இருக்கும் என்று பெரிதாக நம்பினாள் மீரா. ஆனால் அவள் எண்ணத்திற்கு எதிராகவே இருந்தது. அலுவலகத்தில் புத்தகம் வாங்கி கொண்டவர்களை நேரிலும், ஈமெயிலிலும் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்ததை பற்றி சொன்னானேயொழிய, அவன் பேச்சில் எந்த உற்சாகமும் இல்லை.

நண்பர்கள் போட்டி போட்டு விநியோகம் செய்ததால் தான், புத்தகங்கள் அமோகமாய் விற்றன என்றும், மற்றபடி, இந்த எண்ணிக்கை எல்லாம் வெறும் கண்துடைப்பே என்றும் நம்பினான். ஒரு முகம் தெரியாதவரிடமிருந்து வரும் நேர்மறை கருத்தே, தன் திறமைக்கு கிடைக்கும் சன்மானம் என்று மீராவிடம் தீர்மானமாய் சொன்னான். அவன் உணர்ச்சிகளுக்கு மரியாதை கொடுத்து, அவளும் மௌனமாகவே இருந்தாள்.

மாலையில் அவள் சமைத்துவிட்டு போவதும், அவன் பிறகு வருவதுமாய், நாட்கள் நகர்ந்தன. அப்படி ஒரு நாள், மீரா சமைத்து கொண்டிருக்கும் போது, வாசற்கதவு மணி ஒலித்தது. தன்னவனாக இருக்குமோ என்று ஆசையாசையாய் போய் அவள் கதவை திறக்க,

“அத்த! இந்தாங்க, அம்மா இந்த லெட்டர் உங்ககிட்ட கொடுக்க சொன்னாங்க!” அவள் கையில் அவற்றை நுழைத்து, உரிமையுடன் விளையாட தொடங்கினர், ராணியின் பிள்ளைகள்.பிரித்து பார்க்காமலேயே, அது என்னவாக இருக்கும் என்று புரிந்தது, அவளுக்கு.….

தொடர்ந்து படிக்க,

Click Here –>> அன்பின் ஆழம் 23.2