அன்பின் ஆழம் – 22.2

இதற்கிடையில், ஹரியின் புத்தகங்கள், பொது இடங்களில் விற்க தொடங்கின. விற்பனைகள் நல்லவிதமாக நடக்கிறது என்று ஹரியின் காதில் விழுந்த செய்தி, அவனுக்கு நம்பிக்கையூட்டியது.

அரவிந்தன் தன்னிடம் இருந்த நூறு பிரதிகளை அலுவலகத்திற்கு கொண்டு வந்தான். ஊழியர்கள் அதிகம் நடமாடும் ஒரு பகுதியில், மேஜை ஒன்று அமைத்து, புத்தகங்களை அதன் மேல் நேர்த்தியாக பரப்பினான். கூடவே, பூட்டப்பட்ட இரண்டு பெட்டிகளை வலது புறத்தில் வைத்தான். நண்பனின் திறமையை அடையாளம் காட்ட தயாராக இருக்கும் அந்த புத்தகங்களை பார்த்து பெருமூச்சுவிட்டவன், ஊழியர்கள் அனைவரையும், புத்தகங்கள் அடுக்கி இருந்த இடத்திற்கு வர சொல்லி இண்டர்காமில் அறிவித்தான்.

ஹரியை தன்னருகில் வந்து நிற்க சொன்னான். “அனைவருக்கும் காலை வணக்கம்!” என்று கம்பீரமாய் தொடங்கி, “ நீங்க எல்லாரும், ஏற்கனவே, நம்ம ஹரிய, ஒரு திறமைசாலியா, கடின உழைப்பாளியா, உதவும் மனப்பாங்கு உடையவனா பார்த்திருப்பீங்க!” அரவிந்தன், நண்பனை பற்றி பறைசாற்ற,

 ‘இவன விட்டா என்ன பற்றி நாள் முழுக்க புகழ்ந்துகிட்டே இருப்பான்.” மனதில் நினைத்து சிரித்தான் ஹரி.

“ஆனா, உங்களுக்கு எல்லாம் தெரியாத இன்னொரு திறமை, அவனுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு இருக்கு!” அரவிந்தன் புதிர் போட, பார்வையாளர்கள் மத்தியில் ஒரு மெல்லிய கிசுகிசுப்பு சப்தம் பரவியது.

அந்த சப்தம் அடங்க ஒரு சில நொடிகள் காத்திருந்தவன், “நம்ம ஹரி ஒரு மிகச்சிறந்த எழுத்தாளனும் கூட! அவன் முதல் கதையான ‘தெவிட்டாத இன்பம்’ புத்தகமா இதோ, இங்க இருக்கு!” என்று புத்தகங்களை கைக்காட்ட, சகஊழியர்களின் கண்கள், அந்த மேஜை பக்கம் திரும்பின.

அருகில் இருக்கும் நண்பன் தோளை சுற்றி வளைத்தவன், புத்தகத்தை பற்றிய ஒரு சில அறிமுக குறிப்புகள் கொடுத்த பிறகு,

“நீங்களும், நம்ம ஹரியோட புத்தகத்த வாங்கி படிச்சு, எப்படி இருக்குன்னு சொன்னா அவனுக்கு அது பேருவகையா இருக்கும். புத்தகத்துக்கான விலைய, இந்த பெட்டியில செலுத்திடுங்க!” சொன்னவன், முதல் பெட்டியை கைக்காட்டினான்.

“ஒரு முக்கியமான விஷயம்!” என்று தொடங்கியவன், மேலும் பேசினான். “பணம் ஒரு பிரச்சனை இல்ல! நீங்க படிக்க விரும்பினா, பிரதிகள இலவசமா கூட எடுத்துட்டு போலாம். படிச்சு முடிச்சுட்டு, பிடிச்சிருந்தா, பணம் செலுத்தலாம்னு யோசிக்கறீங்களா… எனக்கு அதுவும் ஓகே. நம்ம நண்பனுக்கு நீங்க கொடுக்குற உற்சாகம் தான் அவசியம்!” என்று தெளிவுபடுத்த,

சில ஊழியர்கள் முன்வந்து, கட்டாயமாக வாங்கி கொள்வதாக சொன்னார்கள். அதில் ஒருவர், “இந்த பெட்டி எதுக்கு சார்?” என்று வினவ, அரவிந்தன், படிவங்களை பற்றி விளக்கி, அதில் செலுத்துமாறு கேட்டுக்கொண்டான். மேலும் சில கேள்வி பதில்களுக்கு பின், அவரவர் இருக்கைகளுக்கு திரும்பினர்.

“எதுக்கு டா, புத்தகங்கள இலவசமா எடுத்துக்க சொன்ன? அது உனக்கு வீண்செலவு இல்லையா?” அருகில் நடந்து வரும் நண்பனை அக்கறையாய் விசாரித்தான் ஹரி.  

“விளம்பரம் நண்பா! மார்கெடிங்க் ஸ்ட்ராடெஜி!” என்று கண்சிமிட்டிவிட்டு, ஒரே தாவலில், அறைக்குள் நுழைந்தான்.

அவன் கண்மூடித்தனமான அன்பை எண்ணி பூரித்தவன், பணிக்கு திரும்பினான். அதிகார துஷ்பிரயோகம் செய்து யாரையும் பணம் செலுத்த சொல்லி கட்டாய படுத்தாமல், அதே சமயத்தில், நண்பனின் திறமையை பரப்ப, பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்று நினைத்து, அவன் அப்படி செய்தான் என்று, பாவம் ஹரிக்கு தெரியாது. அது தான் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த, அரவிந்தன் ஸ்ட்ராடெஜி!!!

சரஸ்வதி பூஜை நாளும் உதிக்க, மீரா, தன் அம்மாவை எப்படி அரவிந்தன் வீட்டிற்கு அழைத்து செல்வது என்ற கவலையில் இருந்தாள். ஹரி வரும் இடத்திற்கு அம்மா வருவாரா என்ற சந்தேகம், அவளை அழைக்க விடாமல் கட்டிப்போட்டது.

சரஸ்வதி தேவியின் படத்தை மையப்பகுதியில் வைத்து, பூஜைக்கு தேவையான அலங்காரங்களை நிர்மலா செய்து கொண்டிருந்தாள். வாசலில் கோலமிட்டு, வீடெங்கும் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்துவிட்டு வந்தவளிடம், அப்பாவின் லேப்டாப், காசோலை புத்தகம், மற்றும் சில, அலுவலக பத்திரங்களை எடுத்து வரச்சொன்னாள்.

அவற்றை, நிர்மலாவிடம் நீட்டி, “அம்மா! சாயங்காலம், அரவிந்த் அம்மா, உன்னையும் அவசியம் அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வரணுமுன்னு சொல்லிருக்காங்க!” மெல்லிய குரலில் பேச்சை தொடங்கினாள்.

“போய், உன்னோட பாங்க் பாஸ் புக், தம்புரா, பயிற்சி புத்தகங்கள் ஏதாவது இருந்தா எடுத்துட்டு வா!” மகள் சொன்னதை காதில் வாங்காதவள் போல், பேசினாள்.

ஐந்து நிமிடங்களில், அன்னை சொன்னவற்றை எடுத்து வந்தவள், அதை பூஜைக்கு ஏதுவாய் வைத்தாள். புத்தகங்களை புரட்டிய நிர்மலா, “எல்லாம் தனி தனியா சொல்லணுமா? ஹரி எழுதின புத்தகத்தோட பிரதி எங்க?” ஜாடையாக கேட்க, மகள் கண்கள் பளபளத்தது. மின்னல் வேகத்தில், அதை கொண்டு வந்தவள், தாயை பின்னாலிருந்து கட்டியணைத்தாள்.

“வருவியா மா!” கொஞ்சலாக கேட்டாள்.

“உம்! அப்பா ஆஃபிஸுல பூஜை முடிச்சிட்டு வந்துட்டு, ஏழு மணியளவுல கிளம்பலாம்!” என்றதும், அவள் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து துள்ளி குதித்து ஓடினாள்.

வீட்டிலும், அலுவலகத்திலும், உற்சாகமாய் வேலைகளை செய்தாள் மீரா. அப்பா ஆஃபிஸில் பணிபுரிவோரிடம், சகஜமாக பேசிப்பழகினாள். அனைவரையும், அன்பாய் அழைத்து விசாரித்தாள். மகள் சிந்தையில் நிறைந்திருக்கும் தன்னவன் தான், அவளின் இந்த நன்னடத்தைக்கு எல்லாம் காரணம் என்று வரதன் மட்டும் அறிந்திருந்தால்…..?

அகிலாவின் அன்புக்கட்டளைக்கு தலைவணங்கி, அனைவரும் வந்திருந்தனர். அவளிடம், அம்மாவை அறிமுகம் செய்தாள் மீரா. பதிலுக்கு, அஞ்சலியின் அம்மா சாரதாவை, அவர்களுக்கு அறிமுகம் செய்ய, ஒருவரோடு ஒருவர் அளவலாவி கொண்டிருந்தனர். அஞ்சலியின் அப்பா வெளியூர் சென்றிருப்பதாக சாரதா சொல்ல, நிர்மலா, தன் கணவர் வராததைப் பற்றி என்ன சொல்லலாம் என்று காரணம் தேடினாள். ஆனால், பெண்கள் விழா, என்பதால், வரதன் பங்கெடுத்து கொள்ளாததை பற்றி, யாரும் பெரிதாய் பேசவில்லை.

அகிலா வைத்திருந்த ஏழு படி கொலுவை பார்த்து இரசித்த தோழிகள், கிளுகிளுவென்று சிரித்து விமர்சித்தனர். அரவிந்தன் குழந்தை பருவத்தில் விளையாடிய மரப்பாச்சி பொம்மைகளை எல்லாம் பத்திரப்படுத்தியதாக சொல்லி, அவற்றை கொலுவில் காட்டினாள்,அகிலா. அவற்றை கடித்தும், வளைத்தும், அரவிந்தன் சிறுவயதில் எப்படி அதிரடியாய் விளையாடினான் என்று விவரிக்க, அதை கேட்ட பெண்களுக்கு, வேடிக்கையாக இருந்தது.

“அதெல்லாம் நீ சொன்ன கற்பனை கதைகளின் தாக்கம் மா!” அகிலாவை மடக்கி அரவிந்தன் மேலும் பேசினான். ”இப்போ கூட டா ஹரி! உன் கதைய பற்றி மேலோட்டமா சொல்றேன்னு, ஒரு படத்தோட டிரெயிலரே ஓட்டி காட்டிடாங்க. அனேகமா, புத்தகத்த வாங்கிட்டு போனவங்க எல்லாம், ஒரே நாளுல படிச்சிட்டு, உனக்கு லெட்டர் போடுவாங்கன்னு நெனைக்கறேன் டா! என்று அரவிந்தன் சொல்ல, அகிலா அசடுவழிந்தாள்.

மெதுமெதுவாக, நண்பர்கள் ஒரு பக்கம், அம்மாக்கள் ஒரு பக்கம் என்று பிரிய, பேச்சுதுணைக்கு யாருமில்லாத அசோகன் குழந்தைகளுடன் விளையாடுவதில் ஐக்கியமானார்.

அகிலா, மகனையும், வருங்கால மருமகளையும் அருகில் அழைத்தாள். அவர்கள் கையில், வைரக்கல் பதிந்த மோதிரங்களை திணித்து, மாற்றிக்கொள்ளும் படி கண்ணசைத்தாள். இதை சற்றும் எதிர்பார்க்காத இளஞ்சோடிகள் புருவங்கள் உயர்த்தி பார்க்க,

“ம்ம்… மாத்திக்கோங்க! நிச்சயதார்த்தம் தான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க… உங்க நண்பர்கள் முன்னாடி, மோதிரமாவது மாத்திகோங்க மாப்பிள்ளை!” என்று சாரதா தாழ்மையாய் சொன்னாள். இருவரின் அம்மாக்களும் இரகசியமாய் திட்டமிட்டதை எண்ணி அஞ்சலியும், அரவிந்தனும் நெகிழ்ந்தனர்.

அத்தனை நேரம் அரட்டையும் கும்மாளமுமாய் பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடிகளின் முகத்தில் இப்போது வெட்கம் வழிந்தோடியது. தன்னவள் என்று ஊர்ஜிதம் படுத்தும் அந்த மோதிரம், அவள் கையில் மென்மையாக நுழைத்து கொண்டே, பார்வையால் விழுங்கினான் அரவிந்தன். அவன் ஸ்பரிசத்தாலும், பார்வையாலும் அங்கமெல்லாம் சிவந்து போனவள், குனிந்த தலைநிமிராமல், அவன் கையில் மோதிரத்தை நுழைத்தாள்.

நண்பர்கள் அவர்களை மாறி மாறி கலாய்க்க, அங்கு ஒரு இதயம் மட்டும், கலங்கியபடி நின்றது. தன் மகளுக்கும் நல்ல காலம் பிறக்காதா என்று ஏங்கினாள் நிர்மலா.

“சரி! தோழிகள் எல்லாம் பாட்டு பாடினா தான் விருந்து சாப்பாடு!” என்று அகிலா வம்பிழுக்க, ‘நான் பாட மாட்டேன்… எனக்கு தெரியாது’ என்று அனைவரும் ஒதுங்கினர்.

பூஜையில் இருந்த தம்புராவை கையில் எடுத்த மீரா, “எனக்கு அவ்வளவா பாட வராது! நீங்க பாடுங்க, நான் வாசிக்கறேன்!” என்றாள்.

“அஞ்சலி நல்லா பாடுவா!” என்று சாரதா சொல்ல, “என் பொண்டாட்டியும் தான்!” என்று கீதாவை, இரமேஷ் கோர்த்துவிட்டார். மைதிலியும் தனக்கு தெரிந்த பஜனை ஒன்றை பாட, அங்கு ஒரு கச்சேரியே அரங்கேறியது.

பெண்கள் செய்யும் பஜனையை, மொக்கை என்று சொன்ன தோழர்களும், மெய்மறந்து இரசிக்கும் அளவிற்கு, அத்தனை லயமாய் இருந்தது.  

அகிலாவின் கைப்பக்குவத்தில் அனைவரின் வயிறும் நிரம்ப, வீட்டிற்கு புறப்பட ஆயத்தமானார்கள். அகிலாவும், பெண்கள் அனைவருக்கும் சில்க் காட்டன் புடவைகளை தாம்பூலத்தில் கொடுக்க, அதை உடனே பிரித்து பார்த்த தோழிகள், அதன் வேலைபாடுகளை பற்றிய விமர்சனத்தில் மூழ்கினர்.

ஹரி அருகில் ஒரு பையுடன் வந்தாள் அகிலா. “இந்தா பா! இது உனக்கு!” என்றாள்.

“அட ஆன்டி! இது பொண்ணுங்க விழா… எனக்கு எதுக்கு?” என்று மறுத்தான்.

அவன் கையில் அதை திணித்தவள், “தெரியும் பா! தம்பதிகளா வந்தா, கணவனுக்கும் சேர்த்து, பெண்கள் கிட்ட தாம்பூலம் கொடுப்பேன். இப்போதைக்கு நீ பிரம்மச்சாரி… பிரிச்சு பார்த்து பிடிச்சிருக்கான்னு சொல்லு.” என்று விளக்க,

“டேய் நண்பா! இந்த சலுகை எல்லாம் கல்யாணம் ஆகுற வரைக்கும் தான்… அனுபவிச்சிக்கோ டா!” என்று மகேஷ் கிண்டல் செய்தான்.

அதை கேட்டு, சிரித்து கொண்டே பிரித்தவன் கண்களிலிருந்து நீர் வழிந்தோடியது. அவன் தோளை பற்றி கொண்ட அரவிந்தன், “பிடிச்சிருக்கா!” என்று அவன் காதில் கிசுகிசுத்தான்.

“உம்….” என்று மேலும் கீழுமாக ஹரி தலையசைக்க, அவனையே பார்த்து கொண்டிருந்தவளின் கண்களிலும் நீர்துளி.

“இது உன் மீரா!” அழுத்திச்சொல்லி, கையிலிருந்த மீரா சிலையை சுட்டிக்காட்டினான் அரவிந்தன்.

மகன் சொன்னதை கவனித்த அகிலா, “நிஜமாதான் டா அரவிந்தா! இன்னைக்கு நம்ம மீரா தம்புரா வாசிக்கறத பாக்குறப்ப, ஏக்தாரா(Ektaara) கையில வெச்சுகிட்டிருக்க மீராபாய் பாக்குறா மாதிரியே இருந்துது.” என்று ஒப்பிட்டு பேச,

“உருவத்துல மட்டும் இல்ல, குணத்துலையும் அவ அப்படிதான்!” தன் மேல் உள்ள கண்மூடித்தனமான அன்பை சுட்டிக்காட்டி, எதிரில் நிற்பவளை பார்த்து கண்சிமிட்டினான் ஹரி.

“இல்லையா பின்ன! கிருஷ்ண நாமத்துக்கும், ஹரி நாமத்துக்கும் ஏது வித்தியாசம்?” என்ற அஞ்சலி, மீராவின் தோள்களை இறுக பற்றி கண்சிமிட்டினாள்.

உணர்ச்சிவசப்படும் நண்பர்கள் யாரும் நிர்மலா அங்கு இருப்பதை யோசிக்கவில்லை. அவளும் மௌனமாக நடப்பதை எல்லாம் பார்த்துகொண்டிருந்தாள்.

ஒரு சில நிமிடங்களில், அனைவரும் புறப்பட, ஹரியும், அரவிந்தனும் மட்டும், ஏதோ வேலை விஷயமாக பேசிக்கொண்டிருந்தனர். வாசல் வரை சென்ற நிர்மலா, ஹரி அருகில் வந்தாள்.

“எதையாவது மறந்துட்டியா மா?” என்று வினவிக்கொண்டே, மீராவும் அவளை பின்தொடர்ந்தாள்.

“தம்பி!” என்று மெல்லிய குரலில் அழைக்க, நண்பர்கள் அவளை திரும்பி பார்த்தனர். “உங்க நாவல நானும் படிச்சேன். ரொம்ப அற்புதமா இருந்துது. எல்லார் கிட்டையும், என் மாப்பிள்ளை எழுதின புத்தகமுன்னு சொல்ல ஆசை தான்… ஆனா… மீரா அப்பா சம்மதிக்காம, என்னால உங்கள அப்படி கூப்பிடவே முடியாது.” தன் விருப்பத்தை மறைமுகமாக சொல்லி, பிர்ச்சனையையும் தெளிவுபடுத்தினாள்.

அவள் தயக்கத்தை புரிந்துகொண்டவன், மென்மையாக சிரித்து, “உங்க நிலமை எனக்கு புரியுது ஆன்டி. எங்க காதல நீங்க எதிர்க்கல்லன்னு நான் அன்னைகே புருஞ்சுகிட்டேன். நீங்க மட்டும் என்ன மீராவோட பேச சொல்லி, கட்டாயபடுத்தலேன்னா, எங்க காதல் ஒரு வாரத்துலேயே உடைஞ்சு இருக்கும்.” பணிவாக, அவனும் நன்றி சொல்ல, அவள் நெகிழ்ந்தாள்.

அம்மா, ஹரியுடன் மனம்விட்டு பேசியதை பார்த்த மீராவிற்கு, மட்டற்ற மகிழ்ச்சி. அம்மா, மௌனமாய் இருப்பதை போல் தோன்றினாலும், இடம் பொருள் பார்த்து சிந்தித்து நடப்பதை எண்ணி வியந்தாள். வரதன் மனம் மாறாதா என்று மூவரும், அவரவர் வழியில் பிரார்தித்தனர்.

நண்பன் கனவை, தனதாக்கி வாழ்பவள்,

தந்தை-மகள் உறவில் விரிசல் விழாமல் காப்பவள்,

தோழியை உறவாக்கி கொண்டவள்,

பிறர் மனதை நோகடிக்க தெரியாதவள்,

மழலை மொழியால், மனதை கொள்ளை கொண்டவள்,

உயிராய் ஜனித்தவளையே உலகம் என்பவள்,

உறவாய் வந்தவளையும் உயிராய் நேசிப்பவள்,

இத்தனை நற்குணங்கள் படைத்தவர்கள் வசிக்கும் இல்லங்களில்,

தினம் தினம் நவராத்திரி பண்டிகை தான்- அந்த

முப்பெரும் தேவியரின் மனதையும் குளிர வைக்கும், இவர்கள் அன்பின் ஆழம்….