அன்பின் ஆழம் – 22.1
நண்பன் எழுதிய புத்தகத்தின் பிரதிகளை, தோழிகள் வீட்டில் கொடுக்கும் சாக்கில், அஞ்சலியுடன் உல்லாசமாய் சுற்றலாம் என்று உற்சாகமாய் கிளம்பினான் அரவிந்தன். ஆனால், மீரா வீட்டிற்கு வந்த பத்து நிமிடங்களில், இடிந்து போய் உட்கார்ந்தான். அது கோபமா, வெறுப்பா, ஆத்திரமா, ஏமாற்றமா என்று வகைப்படுத்த முடியாத அளவுக்கு, பல சிந்தனைகள், ஒன்றோடு ஒன்று முட்டிமோத அவன் மனம், எரிமலையாய் கொப்பளித்தது.
‘அவ கல்யாணம் வேண்டாம்னு சொல்லிருந்தா கூட வருத்த பட்டிருக்கமாட்டேன்! ஆனா, அவளுக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாதவன தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு பிடிவாதம் பிடிக்குறாளே! அவ முட்டாள்தனத்த என்னன்னு சொல்றது…’ தலையில் அடித்து கொண்டு வரதன் பேசிய வார்த்தைகள், அரவிந்தன் மனதில் எதிரொலித்து கொண்டே இருந்தது.
மீரா வீட்டிற்கு, அஞ்சலியுடன் வந்த அரவிந்தன், பெருமிதத்தோடு, தன்னவளை வரதன்-நிர்மலாவிடம் அறிமுகம் செய்தான். அந்த பொருத்தமான ஜோடிகளை பார்த்த வரதன், தன் மகள் தேர்ந்தெடுத்தவனின் குறைகளை எண்ணி வருந்தினார். மகளுக்கு நெருங்கிய நண்பணாக இருந்த போதும், அரவிந்தன் அவளுக்கு சரியான பாதையை காட்ட தவறிவிட்டான் என்று எரிச்சலடைந்தார். அந்த ஆதங்கத்தில், வார்த்தைகளை கொட்டிவிட்டு, வெளியேறினார்.
அப்பாவின் விருப்பமின்மையை பற்றி சிறிதும் யோசிக்காமல், அரவிந்தனை வீட்டிற்கு அழைத்தவள், நண்பனிடம், எதை சொல்வது, எதை விடுவது என்று தெரியாமல் திண்டாடினாள். சிலையாய் அருகிலிருந்தவனை தொடவும் தயங்கினாள் அஞ்சலி. யார் பக்கம் பேசுவது என்று புரியாமல், வழக்கம்போல், நிர்மலா, நண்பர்களுக்கு தனிமையை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
“அரவிந்தா! அப்பாவுக்கு எங்க காதல்ல உடன்பாடு இல்ல டா!” நண்பன் முன் மண்டியிட்டு அமர்ந்தவள் மெல்லிய குரலில் சொல்ல, அவன் தேக்கிவைத்த உணர்ச்சிகள் எல்லாம் ஒரே நேரத்தில் வெடித்தது. அவள் கைகளை உதறி தள்ளி, வெடுக்கென்று எழுந்தவன்,
“அஞ்சலி! வா! கிளம்பலாம்!” பெருங்குரலில் அழுத்தமாகச் சொல்லி, நடந்தான்.
“நில்லு டா அரவிந்தா! ஹரி, தெளிவா சிந்திச்சு, நிலமைய சமாளிச்சுட்டு வரான்! அவன்கிட்ட போய் எதுவும் கேட்டுடாத… ப்ளீஸ்!” சூழ்நிலை கைதியாக அவனிடம் கெஞ்சியவள், வாசல் வரை அவனை பின் தொடர்ந்தாள்.
கதவருகே நின்றவன், அவளை சுட்டெரிக்கும் விழிகளால் பார்த்தான். “எதையும் சொல்ல கூடாதூன்னு நெனச்ச அவன்கிட்ட எனக்கு என்ன பேச்சு? உங்க விஷயத்துல தலையிட நான் யாரு?” நண்பர்கள் இருவரும் தன்னை வேற்று மனிதனாய் பார்த்த விரக்தியில் பேசினான். அஞ்சலி, மீராவிடம் மனம் தளறாதே என்று கண்ணசைவில் தேற்றி, புறப்பட்டாள்.
அரவிந்தனுக்கு புரிய வைப்பதில் தோற்றுபோனவள், உடனே ஹரியை தொடர்பு கொண்டாள். நடந்ததை பற்றி எல்லாம் கேட்டவனுக்கு திடுக்கிட்டது. அரவிந்தன், மீரா வீட்டிற்கு போவதை பற்றி சொல்லும் போது, தானும் கவனக்குறைச்சலாக இருந்ததை எண்ணி வருந்தினான். நண்பனிடன், ஒன்றுவிடாமல், அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர்.
ஆனால், இரண்டு நாட்களாகியும் அரவிந்தன் கோபம் துளிகூட குறையவில்லை. ஹரியும், மீராவும், எத்தனையோ முறை தொடர்பு கொள்ள முயன்ற போதும், அவர்களிடம் அவன் பேசவில்லை. திங்கட்கிழமை அலுவலகத்தில் நேரில் பார்த்த ஹரி, மன்னிப்பு கேட்க நெருங்கும் போதெல்லாம், அவனை சக ஊழியராக பாவித்து, வேலை சம்பந்தமாக மட்டுமே பேசினான்.
இதற்கிடையில், நவராத்திரி பண்டிகை வர, அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்ததால், மீரா, ஹரியை நேரில் சந்தித்து பேசுவது முடியாமல் போனது. அவனுக்காக உணவை மட்டும் சமைத்துவிட்டு வீடு திரும்பிவிடுவாள். ஹரியும் கவனத்தை சிதறவிடாமல், வாரயிதழில் பதிப்பிக்க தேவையான வேலைகளையும், பதவி உயர்வுக்கு தேவையான பயிற்சியையும், கையிலிருந்த குறுகிய மாலை நேரத்தில் செய்து வந்தான்.
நண்பனிடம், மறைத்ததற்கான காரணத்தை நியாயப்படுத்தி பேசுவதை விட, ஆரப்போடுவது மேல் என்று நினைத்தான் ஹரி. அதனால் பொறுமை காத்தான். ஆனால், அரவிந்தன் மனநிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல், விளையாட்டாக நாட்கள் நகர்ந்தது தான் மிச்சம்.
இனியும் பொறுக்கமுடியாதவளாய், ஹரியின் பேச்சையும் மீறி, மீரா, அஞ்சலியை சந்தித்து, நடந்ததை எல்லாம் சொல்லி அவள் உதவியை நாடினாள். இவர்கள் காதலில், இத்தனை இடையூறுகளா என்று பரிதாபம் கொண்டாள் அஞ்சலி.
“கவலபடாத மீரா! நாளைக்கு நவராத்திரி விழாவுல கலந்துக்க, நாங்க மகேஷ் வீட்டுக்கு வரோம். நான் சொல்றா மாதிரி செய்…” என்று ஒரு திட்டத்தை விளக்க, மீராவும் அதற்கு சம்மதித்தாள்.
“என்னடி? இன்னும் கிளம்பாம, உட்கார்ந்துட்டு இருக்க?” ஆறு மணியளவில் வீடு திரும்பியவன் கேட்க,
“ட்ரெஸ் பண்ணிட்டு உட்கார்ந்து இருக்கேனே… அது கூடாவா கண்ணுக்கு தெரியல?” சிடுசிடுத்தவள், “மைதிலி, தாம்பூலம் வாங்கிக்க வர சொல்லிருக்கா!” என்று பதிலளித்தாள்.
அவள் புடவையில், மிதமான அலங்காரத்துடன் இருந்ததை அப்போது தான் கவனித்தான். “உம் சரி!” என்று தலையாட்டிவிட்டு நகர,
‘வாய்விட்டு சொல்லியும் எதுவும் சொல்லாம போறத பாரு…முசுடு எழுத்தாளார்!” என்று கண்டுகொள்ளாமல் நகரும் தன்னவனை மனதில் ஏசிக்கொண்டே, டீ தயாரித்தாள்.
சில நிமிடங்களில், அஞ்சலியிடமிருந்து குறுஞ்செய்தி வர, வாசற்கதவை திறந்து வைத்து, காத்திருந்தாள். லேப்டாப்பில் மும்முறமாக இருந்தவன், இவள் செய்யும் வினோதமான செயல்களை எல்லாம் கவனிக்கவில்லை.
மாடியேறி வந்த அஞ்சலி, உரிமையோடு, ஹரி வீட்டிற்குள் நுழைய, “அஞ்சலி! நம்ம மகேஷ் வீட்டுக்கு வந்திருக்கோம்!” அரவிந்தன் கராராக அவளுக்கு நினைவுபடுத்தினான்.
“அட! மீரா போட்ட டீ, வாசனை வாசல் வரைக்கும் வந்து மூக்க துளைக்குதே! தெரியலையா உங்களுக்கு!” இயல்பாக பேசிக்கொண்டே அவனையும் சேர்த்து உள்ளே இழுத்தாள்.
அரவிந்தனை பார்த்த ஹரிக்கு அத்தனை சந்தோஷம். வாய்நிறைய வாவென்று அன்பாய் அழைத்தான். அரவிந்தனோ, அஞ்சலி பிடியிலிருந்து விலகி செல்வதிலேயே குறியாய் இருந்தான். பொறியில் மாட்டிய எலி, தப்பித்துவிடுமோ என்பது போல், மீரா விரைந்தோடி சென்று, வாசற்கதவிற்கு தாளிட்டு, அங்கேயே நின்றாள்.
முன்கூட்டியே பேசிவைத்து, பெண்கள் ஏதோ செய்கிறார்கள் என்று ஹரி உடனே புரிந்து கொண்டான். “இன்னும் எத்தன நாளைக்கு இப்படி என்கிட்ட பேசாம இருக்க போற, சொல்லுடா?” சமாதானமாய் நண்பன் தோள் வளைத்து கேட்டான் ஹரி.
பிடிவாதமாய், எதுவும் பேசாமல், முகத்தை தொங்க போட்டு நின்றான் அரவிந்தன். நண்பர்களும் என்ன சொல்லி புரியவைப்பது என்று முழிக்க, அஞ்சலி தன்னவனின் முகமேந்தி,
“எல்லார் மனசையும் வசீகரிக்கற அளவுக்கு பேசி பழக வேண்டியது; கோபம் வந்தா பேசாம காயவிட வேண்டியது! இதே வேல பா உங்களுக்கு?” அதிரடியான அவன் குணத்தை சுட்டிக்காட்டினாள்.
“நான்தான் அவங்கள, என் நண்பன், என் தோழின்னு உரிமையா சொல்லிட்டு இருக்கேன்; ஆனா அவங்க என்ன அப்படி நெனைக்கல அஞ்சலி… அதான் எல்லாத்தையும் என்கிட்டேந்து சொல்லாம மறச்சிட்டாங்க மா!” அஞ்சலியிடம் பொறுமையாக பேசியவன், நண்பர்களை பார்த்து முறைத்தான்.
முறைக்கும் அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி, இறுக பிடித்தவள், “நீங்களும் தானே என்ன பற்றி உங்க நண்பர்கள் கிட்ட எதுவும் சொல்லாம மறச்சீங்க… உங்களுக்கு ஒரு நியாயம்; அவங்களுக்கு ஒரு நியாயமா?” கேட்டு மடக்கினாள்.
அவர்களுக்காக பரிந்து பேசும் தன்னவளை, புருவங்கள் உயர்த்தி வியப்பாய் பார்த்தான் அரவிந்தன். “மறைக்கல! அவசியமில்லன்னு தான் சொல்லல;” திடமாய் சொன்னவன், “உன் பிரச்சனைய பற்றி சொன்னாலும், அவங்களால எந்த தீர்வும் கொடுத்திருக்க முடியாது…. ஆனா அவங்க பிரச்சனைய சொல்லிருந்தா, என்னால ஏதாவது செஞ்சிருக்க முடியும்!” இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டி, நண்பனிடம் திரும்பினான்.
“அவருக்கு மீராவோட பணத்த கொடுக்க இஷ்டமில்லேன்னா, என்கிட்ட சொல்லிருக்கலாமே டா! ஒரு பர்ஸனல் லோன் ஏற்பாடு செய்திருப்பேனே!” என்று ஒருவழியாக மனம்விட்டு பேசினான் அரவிந்தன்.
“அத என்கிட்ட கேட்டா?” என்று மீராவை பார்த்து முறைத்தான் ஹரி. “நான் லோன் எடுக்க கூடாதூன்னு அடம்பிடிச்சது அவ!” என்று போட்டுக்கொடுத்தான்.
அரவிந்தன் தன்னை எதுவும் கேட்கும் முன், மீராவே முந்திக்கொண்டாள். “பணம் கொடுக்கறத பற்றி பேசுறதுக்கு முன்னாடியே அவருக்கு, நான் ஹரிய விரும்புறது பிடிக்கல டா அரவிந்தா!” தாழ்ந்த குரலில் சொல்லி, “அவருக்கு நான் லவ் பண்ணா பிரச்சனை இல்லையாம்… எனக்கு ஏத்தவனா லவ் பண்ணனுமாம்… ஹரிக்கு இருக்கற திறமைய பற்றி காது கொடுத்து கூட கேட்க மாட்டேன்னுடாரு!” தந்தையின் மனநிலையை எடுத்து சொல்ல,
“ஏன்? என் நண்பனுக்கு என்ன குறைச்சல். அப்படி என்ன குறை கண்டுபிடிச்சாராமா அவரு? நானே அவர்கிட்ட பேசுறேன் மீரா!” என்று சொன்னதோடு நிறுத்தாமல், நண்பனை தோளோடு சேர்த்து வளைத்தான். அவன் பாசத்தை பார்ப்பவர்களுக்கு, இவனா இத்தனை நாட்கள் பேசாமல் இருந்தான் என்பது போல் தோன்றும்.
“இதுக்கு… இதுக்கு தான் உன்கிட்ட சொல்ல வேண்டாமுன்னு நெனச்சேன் டா அரவிந்தா!” தான் நினைத்த மாதிரியே உணர்ச்சிவச படுகிறான் என்று விளக்கி, “அவருக்கு என்ன பற்றி அதிகம் தெரியாததுனால தான் அப்படி நடந்துக்கிட்டாரு டா. எனக்காக நீ போய் பேசி, உங்களுக்குள்ள இருக்க நல்லுறவ கெடுத்துக்காத!” என்று புரியவைத்தான்.
“ஆமாம் டா அரவிந்தா! ஹரி ரொம்ப பக்குவமா அவர்கிட்ட பேசிருக்கான். மனுஷன் ஒரு வார்த்த திருப்பி பேச முடியல தெரியுமா?” என்று தன்னவனை பற்றி பெருமையடித்தவள், “ஹரி திறமை இந்த உலகம் அடையாளம் கண்டுகறப்ப, அவரும் புரிஞ்சுப்பாரு… நீ கவலபடாம இரு!” திடமாக சொன்னாள் மீரா. உறுதியாக பேசும் தன்னவளையே கண்சிமிட்டாமல் பார்த்தான் ஹரி.
நண்பர்கள் தெளிவாக சிந்திப்பதை கவனித்தவன் மனமும் லேசானது. “நானும் என் நண்பனும் பேசி எத்தன நாளாச்சு” என்று மீண்டும் அவன் தோளோடு தோள் சேர்த்து, இறுக வளைத்தவன், மீராவிடம், “போய் ஸ்வீட் எடுத்துட்டு வா… இத கொண்டாடலாம்!” என்றான்.
“அப்போ என்னோட பேசாதத பற்றி உனக்கு ஒரு ஃபீலிங்கும் இல்லையா?” கண்கள் சுருங்க, செல்லம் கொஞ்சினாள்.
“இருக்கு டி!” என்று இதழோர சிரிப்புடன், அவளை மறுபுறம் அணைத்தான். நண்பர்கள் ஒன்று சேர்ந்ததை பார்த்து, அஞ்சலியும் நெகிழ்ந்து போனாள்.
அவர்கள் நட்பை ஆட்டம்காணச்செய்த பிரச்சனை சுமூகமாய் முடிந்த திருப்தியில், நால்வருக்கும் பருக ஏலக்காய் டீ எடுத்து வந்தாள் மீரா. “ஸ்வீட் கேட்டா, டீ எடுத்துட்டு வர?” அவள் தலையில் செல்லமாக தட்டி கேட்டான் அரவிந்தன்.
வீட்டில் கைவசம் இனிப்பு பலகாரம் எதுவும் இல்லை என்று சொன்னவள், “மகேஷ் வீட்டுக்கு போலாம்! மைதிலி, கண்டிப்பா ஏதாவது ஸ்வீட் செஞ்சிருப்பா!” யோசனை சொன்னாள் மீரா.
“ஆளவிடு டி! அங்க ஒரே லேடீஸ் கூட்டமா இருக்கும்!” தட்டிக்கழிக்க எண்ணியவன், ஹரி பக்கம் திரும்பி, “டேய், இதுல இவங்க வேற பஜனை பண்ணறேன்னு மொக்க போடுவாங்க டா!” சொல்லி, அவனையும் தன் பக்கம் இழுத்தான்.
நண்பனிடம் பேசி, பல நாட்களானதால், ஹரியும், “சரி! நாங்க இங்கேயே இருக்கோம்… நீயும் அஞ்சலியும் போயிட்டு வாங்க!” மீராவிடம் சொல்ல,
“அப்படியே, மைதிலி பண்ண ஸ்பெஷல் சாப்பாட, ஸ்வீட்டோட, மகேஷ் கிட்ட கொடுத்து அனுப்பு.” திடீர் பேச்சுலர் பார்டிக்கு வழிவகுத்தான் அரவிந்தன்.
சரி என்று மறுப்பு சொல்லாமல் புறப்பட்ட பெண்கள், மகேஷிடம் தகவல் சொல்ல, அவனும் உற்சாகமாய் கிளம்பினான். சாப்பாடோடு சேர்த்து, மைதிலி, குழந்தைகளையும் கீழே அனுப்ப, வயதில் வளர்ந்த பிள்ளைகள், சிறுவர்களோடு பரமபதம் விளையாட வேண்டியதாயிற்று.
மைதிலி வீட்டிலிருந்த பிரம்மாண்டமான கொலுவை கண்டுகளித்தனர் இருவரும். மைதிலியும், ராணியும், ஒரே இடத்தில் கொலு வைக்கலாம் என்று முடிவு செய்ய, இருவரிடமும் இருந்த பொம்மைகளை சேர்த்து மொத்தமாக பதினோறு படிகள் வைத்திருந்தனர்.
பாரம்பரியமான, கடவுள் சிலைகளிலிருந்து, கிரிக்கெட், திருவிழா செட் போன்ற காலத்திற்கு ஏற்ப நவீன பொம்மைகள் அத்தனையும் கொண்ட அந்த கொலுவில், எது இல்லை என்று தான் கேட்க வேண்டும் போல் இருந்தது. இதில், குழந்தைகள் நால்வரும், தங்களிடமிருந்த விளையாட்டு பொருட்களையும் நேர்த்தியாக அடுக்க, வீடே ஒரு சிறிய கண்காட்சி மையமாக காட்சியளித்தது.
மைதிலி, விழாவில் பங்கெடுத்து கொள்ள வந்த நண்பர்களிடமும், உறவினர்களிடமும், ஹரி எழுதிய புத்தகத்தை தாம்பூலத்தில் வைத்து கொடுத்து, அவனை பற்றி ஓரிரு வார்த்தைகளாவது பேசினாள். ஹரி, தன் கணவனின் நெருங்கிய நண்பர் என்று சொல்லி, கீழ் தளத்தில்தான் வசிக்கிறான் என்றும் பெருமையடித்து கொண்டாள். வந்தவர்கள், படிக்கட்டுகளை இறங்கும் போது, அவன் வீட்டு கதவு திறந்திருக்கிறதா, நேரில் பார்க்க முடியுமா என்று நோட்டம் விட்டுக்கொண்டே அவன் வீட்டை கடந்தனர். இரண்டு நாட்களில், கீதாவின் வீட்டில் சந்திக்கலாம் என்று பேசிக்கொண்டு, அங்கிருந்து புறப்பட்டனர் மீராவும், அஞ்சலியும்.
எப்படியோ சாமர்த்தியமாக, கீதா வீட்டிற்கும் வராமல் தட்டிக்கழித்தனர் தோழர்கள். பெண்கள் மட்டும் அஞ்சலி காரில் ஒன்றாக வந்தனர்.
“குழந்தையோடவே நேரம் சரியா இருக்கறுதுனால, கொலு இந்த முறை ரொம்ப சிம்பிளா வெச்சுருக்கேன்! மாமியாரும் ஊருக்கு போயிருக்காங்க!” வீட்டிற்கு வந்த பெண்களிடம் தன் மூன்று படி கொலுவை காட்டி விளக்கினாள் கீதா.
“சின்னதா இருந்தாலும், எவ்வளவு நேர்த்தியா இருக்கு?” பாராட்டிய அஞ்சலி, “அதுவும், அந்த பார்பி பொம்மை, மடிசாருல எவ்வளவு அழகா இருக்கு பாருங்க!” என்று இரசித்து பேசினாள்.
“அந்த படியில இருக்கற அத்தனை பொம்மையும் கீதாவின் கைவண்ணம். அவளே ட்ரெஸ் தெச்சு, அலங்காரமும் பண்ணிருக்கா!” மைதிலி, கீதாவின் திறமைகளை எடுத்துரைக்க, உரையாடல், கலைநயமானது.
கையில் இருந்த குழந்தை சிணுங்க, “என்ன வேணும் சஹானா பாப்பாவுக்கு?” என்று முகத்தோடு முட்டி செல்லம் கொஞ்சினாள் அஞ்சலி. குழந்தையும் அவள் குரலில் மயங்கி, பொக்கை வாயால், கலகலவென்று சிரித்து, அனைவரையும் கவர்ந்தாள்.
‘எத்தனை மாற்றம் இவளிடம்’ என்று அஞ்சலியை வியப்பாய் பார்த்த மீரா, அப்போது தான் உணர்ந்தாள், அன்று தோழியிடம் குழந்தையின் பெயரை கூட கேட்டு தெரிந்து கொள்ளவில்லை என்று.
சஹானா, அஞ்சலியை தவிர்த்து வேறு யாரிடமும் வர மறுக்க, மீராவும், மைதிலியும், கீதாவுக்கு உதவியாய், வந்தவர்களை கவனித்தனர். அவர்கள், சுண்டல், புட்டு, மஞ்சள், குங்குமம் என்று, கொடுக்க, கீதாவோ ஓயாமல், அவர்களிடம் ஹரியின் புத்தகத்தை பற்றி கதையளந்தாள். பின் அட்டையில் இருந்த ஹரியின் நிழற்படத்தை காட்டி, தன் நண்பன் என்று பெருமிதப்புடன் கூறியதோடு நிறுத்தி கொள்ளாமல், புத்தகத்தில் இணைத்திருந்த படிவங்களையும் காட்டி விவரித்தாள். வந்தவர்களும் அவசியம் படித்து, பதில் போடுவதாக சொல்லி, புத்தகத்தை பரிசாக கொடுக்கும் அவளின் எண்ணத்தை பாராட்டினர்.
நண்பர்களே இந்த அளவுக்கு ஹரியின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் போது, அவன் தன்னவன் என்று உரக்கச் சொல்ல தோணியது மீராவிற்கு. ஆனால், தன் வீட்டிற்கு வந்தவர்களிடம், நண்பன் எழுதிய புத்தகம் என்பதை தாண்டி அவளால் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலை. வரதன், கண்கொத்தி பாம்பாக, மகளின் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டே இருந்தார். நிர்மலாவும் மௌனம் காத்தாள்.
இந்த நிலையில், அகிலா, நண்பர்கள் அனைவரையும் எந்த சாக்கும் சொல்லாமல், ஒன்பதாவது நாளான, சரஸ்வதி பூஜை நாளில், குடும்பத்தோடு வர வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டிருந்தாள். அம்மாவை எப்படி அழைத்துச் செல்வது என்று மீரா கவலையாய் இருந்தாள்.…
தொடர்ந்து படிக்க, Click Here –> அன்பின் ஆழம் – 22.2