அன்பின் ஆழம் 21.2
“மீரா! நான் பத்திரிக்கை ஆஃபிஸ்ல இருக்கேன். இந்த வாரமே முதல் அத்தியாயம் பதிவிடலாமுன்னு சொல்லிருக்காங்க. வீட்டுக்கு வர லேட் ஆகும். நீ புறப்படு.” என்று அவன் விளக்க, “உம்! சரி!” சொன்னவளின் முகம் சுருங்கியது.
எத்தனையோ நாட்கள், இப்படி சந்திக்காமல் போனது உண்டு தான். ஆனால், தொடர்ந்து மூன்று வார நாட்கள் மட்டும் இல்லாமல், சனி, ஞாயிறும், அறிமுக விழா, கீதா வீடு என்று ஏதோ ஒரு இடத்தில் தன்னவனுடன் இருந்து பழகிவிட்டவளுக்கு, ஆசை தலைக்கேறி இருந்தது. அதுவும், அவனுக்காக கொண்டு வந்ததை நேரில் பார்த்து கொடுக்க முடியாத ஏமாற்றம் வேறு.
ஃப்ரிட்ஜை திறந்து மிளகு குழம்பு வைத்தவளுக்கு, திடீரென்று ஒரு யோசனை உதித்தது. தன்னவனை போல், காதல் கடிதம் எழுத நினைத்தாள். நாற்காலியில் உட்கார்ந்து, ஹாட்பேக்கை பார்த்தபடி, கோர்வையான வார்த்தைகளை சிந்தித்தாள். காதல் கடிதத்துக்கு பதில், சிறு சிறு குறிப்புகளை எழுதி, அந்த மூன்றடுக்கு ஹாட்பேக்கில் பொருத்திவிட்டு, மனிநிறைவோடு வீட்டிற்கு புறப்பட்டாள்.
வேலை முடிந்து, சாலை நெரிசல்களை எல்லாம் கடந்து, ஹரி வீடு திரும்ப, மணி ஒன்பதாகி விட்டது. புழுக்கமாக இருந்ததால், ஒரு குட்டி குளியல் போட்டு வந்தவனுக்கு, பயங்கர பசி. நேராக சமையலறைக்குள் சென்றவன் கண்களை உருத்தியது, அந்த சூப்பர் மார்கெட் பை. மீரா ஏதாவது மறந்துவிட்டாளோ என்று அதனை திறந்தவனுக்கு புதிராய் இருந்தது.
அந்த சிவப்பு நிற ஹாட்பேக், மீரா கைப்பட எழுதிய குறிப்புடன் அவனை பார்த்து இளித்தது.
‘நிபந்தனைகள் அறிய, மேலிருந்து கீழாய், ஒவ்வொரு அடுக்காய் திறந்து பார்க்கவும்!’
என்று படித்தவன், ஹாட்பேக்கை பார்த்து பதிலுக்கு கன்னத்தில் குழிவிழ சிரித்தான்.
ஏதோ தன்னுடன் விளையாடுகிறாள் என்று நினைத்தவன், முதல் அடுக்கை திறக்க, மற்றொரு துருப்பு சீட்டு இருந்தது.
‘உடல் ஆரோக்கியம் முக்கியம் என்றால், அலுவலகத்திற்கும் வீட்டு சாப்பாடு எடுத்துட்டு போகணும்; எப்படி என்று விவரங்கள் அறிய, அடுத்த அடுக்கை திறக்கவும்.’
‘முடியல டி உன்னோட’, சலித்து கொண்டவன், அதை திறந்தான்.
‘நாளைக்கு தேவையான மிளகு குழம்பு செய்து ஃப்ரிட்ஜுல வெச்சிருக்கேன். காலையில் சாதம் மட்டும் சூடா வடிச்சு, கலந்து எடுத்துட்டு போங்க எழுத்தாளரே! பின் குறிப்புக்கு, அடுத்த அடுக்கை திறக்கவும்.‘
இதற்கு மேல் என்ன இருக்கும் என்று யோசித்து கொண்டே, கடைசி அடுக்கை திறந்தான். ‘இது பரிசு பொருள் இல்லை. உங்க உடல் நலம் கருதி, உங்க மாமனார் கம்பனிலேந்து, உங்க அருமை மனைவி கொண்டுவந்த சீதனம்.’ என்று கண்சிமிட்டும் ஒரு ஸ்மையிலியும் வரைந்திருந்தாள்.
அவள் குறும்புதனத்தை மெச்சினான். பசி மறந்து, தன்னவளுக்கு போன் செய்தான். அவள் குரல் கேட்டதும்,
“குறிப்புகள் இவ்வளவுதானா! இல்ல வாட்டர் பாட்டில், ஸ்னேக் பாக்ஸ், ஏதாவது கொண்டுவந்து , அதுலையும் எழுதி வெச்சுருக்கியா?” நமுட்டு சிரிப்புடன் கேட்க,
அவன் குரலில் உற்சாகத்தை உணர்ந்தவள், “சாப்பிட்டியா டா?” என்று அக்கறையாய் கேட்டாள்.
“எங்க சாப்பிடுறது? வந்ததுலேந்து, நீ எழுதின குறிப்புகள் படிக்கவே நேரம் சரியா இருந்துது!” என்றதும், அந்த பக்கத்தில் ஒரு புன்னகை.
“ரொம்ப அசதியா இருக்கு டி! அடுத்த வாரத்துலேந்து, ஆஃபிஸுக்கு வீட்டு சாப்பாடு எடுத்துட்டு போறேனே!” கொஞ்சலாக கெஞ்சினான்.
“எந்த சாக்கும் சொல்லாதீங்க எழுத்தாளரே! காலயில அரை மணி நேரம் முன்கூட்டியே எழுந்து, சாதம் வெச்சு, டப்பா கட்டறீங்க!” அவள் தீர்மானமாய் சொல்ல,
“சரி! சரி!” மறுபேச்சு இல்லாமல், சரணாகதி ஆனான்.
மேலும் சில நிமிடங்கள், அவளுடன் அரட்டை அடித்துவிட்டு வந்து இரவு உணவு உண்டான். வயிறு அவள் சமைத்த உணவால் நிறைய, மனம், அவள் செயல்களின் நினைவுகளில் நிரம்பி வழிய, கண்கள் அவள் முகத்தை பற்றிக்கொள்ள உறங்கினான்.
வெள்ளிக்கிழமை மாலை, அஞ்சலியும், அரவிந்தனும், ஆறு மணியளவில், ஹரி வீட்டிற்கு வந்தனர். வழக்கமாக பைக்கில் வருபவன், அன்று அஞ்சலியுடைய காரில் வந்தான். கதை புத்தகத்தின் பிரதிகளை எடுத்துச்செல்ல, கார் வசதியாக இருக்கும் என்று அஞ்சலி சொல்ல, அரவிந்தன் உடனே சம்மதம் தெரிவித்தான். அன்று ஏற்பட்ட மனஸ்தாபத்திற்கு பிறகு, அவளிடம் பெரும் மாற்றம். அவனிடம் அத்தனை அன்பும் அக்கறையும் காட்டினாள். மீராவுடனும் நெருக்கமாக பழகினாள்.
மாடியேறி வந்தவள், வாசற்கதவு திறந்திருப்பதை கண்டு, உரிமையோடு “மீரா! மீரா!” என்று உரக்க சொல்லிகொண்டே உள்ளே நுழைந்தாள். அவள் குரல் கேட்டதும், மீராவும் ஓடி வந்து ஆரத்தழுவினாள். இதை எல்லாம் பார்த்த ஹரிக்கு கொஞ்சம் வியப்பாகவே இருந்தது; அரவிந்தன் முகத்தில் ஒரு பெருமிதம்.
“மகேஷ், மைதிலி எங்க டா?” அவர்களும் இருப்பார்கள் என்று எதிர்பார்த்து வந்த அரவிந்தன் வினவினான்.
“அவங்க, மைதிலி தோழியோட திருமண ரிசெப்ஷனுக்கு போயிருக்காங்க டா! திரும்பி வரும் போது உங்கள சந்திக்கறேன்னு சொல்லிருக்காங்க,” ஹரி தகவல் சொல்ல,
அதற்குள், பெண்கள் இருவரும் கலகலவென்று சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். மீரா கையில் ஒரு இனிப்பு டப்பா. அதிலிருந்த லட்டு ஒன்றை அரவிந்தன் வாயிலிட்டு,
“ஒரே வாரத்துல செம்மையா ட்ரெயின் பண்ணிருக்க டா, உன் பொண்டாட்டிய!” என்று அஞ்சலி அவளுக்காக வாங்கி வந்த இனிப்பு டப்பாவை காட்டி பேசினாள்.
அவளையே முறைத்து கொண்டு இருக்கும் தன்னவன் வாயில் ஒன்றை இட்டு, “ஹரி! நீயும் பேசாம எங்க கட்சியில சேர்ந்துடு.. உன் சைட் ரொம்ப வீக்கா போயிக்கிட்டே இருக்கு டா!” என்று கிண்டல் செய்ய,
உடனே அஞ்சலி, “அய்யோ! நானும் ஹரி கட்சி தான். எனக்கும் அவ்வளவா இனிப்பு பிடிக்காது. உனக்கும், அவருக்கும் பிடிக்கும்னு தான் வாங்கிட்டு வந்தேன்.” என்றாள்.
“அப்பாடா! ரொம்ப சந்தோஷம் அஞ்சலி!” என்று பெருமூச்சுவிட்டவன், அஞ்சலி, மீராவை உரிமையோடு அழைக்கும் விதத்திலேயே, அவர்கள், இந்த ஒரு வாரத்தில் எந்தளவுக்கு பழகிக்கொண்டிருப்பார்கள் என்று புரிந்து கொண்டான்.
வந்த வேலையை முதலில் முடிக்கலாம் என்று அரவிந்தன் யோசனை சொல்ல, ஹரி பிரதிகளை ஹாலுக்கு எடுத்து வந்திருந்தான். அவனும் மீராவும், அத்தனை ஃபோர்மையும், பிரதிகளில் இணைத்து தயார் நிலையில் வைத்திருந்தனர். அலுவலகத்தில் கொடுக்க தேவையான நூறு பிரதிகளையும், அரவிந்தன் வீட்டிற்கு தேவையான ஐம்பது பிரதிகளையும் மட்டும் ஹரி ஒரு புறம் தள்ள,
“கீதா வீட்டிற்கு கொடுக்க வேண்டியதையும் வை டா!” அரவிந்தன் சொல்ல, அவனை கேள்வியாய் பார்த்தான் ஹரி.
“அஞ்சலி கார் எடுத்துட்டு வந்திருக்கா; நாளைக்கு கீதா குழந்தைய பார்க்க போறோம். அப்படியே அவங்க வீட்டுல கொடுத்திடறோம்.” அரவிந்தன் சொன்னதும், அவள் மனநிலையில் நல்ல மாற்றம் இருக்கிறது என்று உணர்ந்தான் ஹரி.
“ஹரி! உங்ககிட்ட, கூடுதல் பிரதிகள் இருந்தா, எனக்கு ஒரு இருபத்து ஐந்து எண்ணிக்கை தாங்களேன்.” என்று சொன்னவளை, நண்பர்கள் கண்கொட்டாமல் பார்த்தனர்.
“நானும், என் பள்ளியில பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விருப்பம் இருந்தா வாங்கிக்க சொல்றேன்.” என்று விளக்கினாள்.
அஞ்சலி, தங்களுள் ஒருவளாகவே மாறிவிட்டாள் என்று உணர்ந்தான் ஹரி. “புருஷன், பொண்டாட்டி, இப்படி போட்டி போட்டுகிட்டு, என் புத்தகத்த விற்பனை செய்யறத்துக்கு பதிலா, பேசாம, உங்க கல்யாணதுக்கு வரவங்களுக்கு ரிடர்ன் கிஃப்டா கொடுத்துடுங்க” என்று கிண்டல் செய்ய அனைவரும் வாய்விட்டு சிரித்தானர்.
“நண்பா!” என்ற அரவிந்தன், “கல்யாணத்துக்கு இன்னும் நாலு மாசம் இருக்கு! அதுக்குள்ள, உங்க நாவல் பிரபலமாகி, உங்ககிட்ட ஆட்டோகிராஃப் வாங்க உங்க விசிறிகள் வரிசையில வந்து நிப்பாங்க.” புகழ்ந்து தள்ளினான்.
“டேய், நீ என் உயிர் தோழன் தான் டா! அதுக்காக இவ்வளவு மிகைபடுத்தியா பேசுவ?” என்றதும்,
“ஏன்! ஏன்! ஏன்! அரவிந்த் சொன்னதுல என்ன தப்பு; கண்டிப்பா நடக்கும்; நம்பிக்கையா இரு!” மீரா அவனை செல்லமாக மிரட்டினாள்.
கொண்டுபோக வேண்டிய புத்தகங்களை ஒரு ஓரமாய் அடுக்கிவிட்டு, அரவிந்தன், “ரொம்ப பசிக்குது மீரா! என்ன சமைச்சிருக்க?” என்றான்.
“உனக்கு பிடிச்ச சப்பாத்தி குருமாவும், ராஜ்மா சாவலும் டா!” என்றதும்,
“அட்டகாசம்! நார்த் இந்தியன் மீல்ஸுன்னு சொல்லு!” என்று சாப்பிடுவதற்கு தயாரானான். அடுத்த ஐந்து நிமிடத்தில், நண்பர்கள், தட்டும் கையுமாக உணவை ருசித்து கொண்டே அரட்டை அடித்தனர்.
அஞ்சலி, ராஜ்மா சாவலை, ஒன்றின் மேல், ஒன்று படாமல், தனித்தனியாக சாப்பிடுவதை கண்ட அரவிந்தன், “இப்படி சாப்பிட்டா, மீரா கைப்பக்குவம் எப்படி தெரியும்?” என்று இரண்டையும் கலந்து அவளுக்கு ஊட்டிவிட, அதை மென்றவள்,
“எனக்கு ஊட்டிவிடணுமுன்னு உங்களுக்கு ஆசை; அதுக்கு எதுக்கு மீராவ இழுக்குறீங்க!” என்று அவனை கலாய்த்து, மீரா பக்கம் திரும்பியவள், “நீ சமைச்சத எப்படி சாப்பிட்டாலும் ருசியா இருக்கு மீரா!” என்று பாராட்டினாள். மீராவும் அவளை பார்த்து மென்மையாக சிரித்தாள்.
புது ஜோடிகள் அன்பு பரிமாற்றத்தை பார்த்த, ஹரிக்கு, அன்று மீரா சொன்ன விளக்கம் புரிந்தது. ஏக்கம் வழியும் தன்னவள் முகத்தை பார்ப்பதை தவிர அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
வயிறுமுட்ட சாப்பிட்டு முடித்தவன், ஏதோ நியாபகத்திற்கு வந்தது போல, நிமிர்ந்து உட்கார்ந்து, “உன்ன அப்போவே கேட்கணும்னு நெனச்சேன் மீரா! அதென்ன, ஹரிக்கு மட்டும் தினமும் சமைச்சு தர… ஆஃபிஸுக்கு டப்பா கட்டி தர….” என்று அடுக்கி, “எனக்கு தனியா லன்ச் கொண்டுவந்த காலம் எல்லாம் மறந்து போச்சா?” என்று உரிமையாய் சண்டையிட்டான்.
அவன் பேச்சை கேட்டவளுக்கு, உடனே, அன்று மைதிலி சொன்ன அறிவுரை தான் நினைவுக்கு வந்தது. “உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா டா; இனி அவ தான் உனக்கு வேண்டியத எல்லாம் செஞ்சு தருவா!” என்று அஞ்சலியை பார்த்து கண்சிமிட்டினாள்.
“சரியா சொன்ன மீரா!” பெருங்குரலில் ஒத்தூதியவன், “இன்னைக்கு நான் கொண்டு போன, மிளகு குழம்பு சாதத்த, பாதிக்கும் மேல இவன் தான் சாப்பிட்டான்!” என்று புகார் செய்தான்.
அதை கேட்டு அசடுவழிந்தவன், முகத்தை திடமாக வைத்து, “ஒண்ணு நல்லா புரிஞ்சுக்கோ மீரா! புது உறவுகள் வந்தாலும், நமக்குள்ள இருக்குற நட்பு, எப்பவும் மாறாது! அதனால நீ எனக்கு பிடிச்சத சமைக்கறப்ப, கண்டிப்பா அனுப்பி வை!” அதிகாரமாய் சொல்லி, மூவரையும் பார்த்தான்.
விளையாட்டு விபரீதத்தில் முடிந்துவிட போகிறது என்று மீரா பதற, அஞ்சலியோ சிரித்த முகத்தோடு, “அரவிந்தன் சொல்றது சரி தான் மீரா!” என்று அவளை செல்லமாக தட்டி, “அவர் என்கிட்ட சொன்ன முதல் விஷயமே அதான்… நீ அவர் காதல ஏத்துக்காததுனால, உங்களுக்குள்ள இருக்கும் நட்பு எந்த விதத்திலும் மாறலன்னு சொல்லி, எந்த சூழ்நிலையிலும், நான் அத தப்பா புரிஞ்சுக்க கூடாதூன்னு தீர்மானமா சொன்னாரு!” விளக்கினாள் அஞ்சலி.
அதை கேட்ட ஹரிக்கு தான் திடுக்கிட்டது. இப்படியும் ஒருவன், திருமணம் செய்து கொள்ள நினைக்கும் பெண்ணிடம் பேசுவானா என்று யோசித்தான். “ஏண்டா அரவிந்தா! என்கிட்ட சொன்னா மாதிரியே அஞ்சலி கிட்ட சொல்லிருக்க… முதல் முதல்ல ஒரு அறிமுகமில்லாத பெண்கிட்ட, இப்படியா பேசுவ!” நண்பனை கண்டித்தான்.
விளக்கம் சொல்ல, அஞ்சலி முந்திக்கொண்டாள். “அட! நீங்க வேற ஹரி! அவர் அப்படி பேசினத கேட்டு தான், எனக்கு அவர ரொம்ப பிடிச்சுபோச்சு. ஒருத்தர், இவ்வளவு வெளிப்படையா பேச முடியுமான்னு பிரமிப்பா பார்த்தேன்.” என்று சொல்லி, மீரா பக்கம் திரும்பியவள், “நீ அதுக்கும் மேல மீரா! அரவிந்தன கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு, அவர பற்றி ஓயாம என்கிட்ட பெருமையா பேசினையே!” என்று சொல்லி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாள்.
அஞ்சலியின் உற்சாகத்தை கவனித்தவள், “இவ்வளவு அன்ப உள்ள வெச்சுகிட்டு தான் என் நண்பன கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொன்னியா?” மீரா அவளை மடக்க,
“நல்லா கேளு மீரா!” என்று தன்னவளின் கண்களை ஊடுறுவியவன் கேட்டான்.
அஞ்சலி பதில் சொல்ல முடியாமல் தவிக்க, அதை கவனித்த ஹரி, “இவங்க ரெண்டு பேரும் எப்பவுமே இப்படிதான் அஞ்சலி! சண்டை போடுறாங்கன்னு நெனச்சு, பரிதாபப்பட்டு சமரசம் பண்ணா, நம்மள கேனையாக்கி, இவங்க ஒண்ணு சேர்ந்துப்பாங்க… இதோ இந்த மாதிரி!” என்று மீராவை பார்த்து முறைக்க, அஞ்சலி வாய்விட்டு சிரித்தாள்.
மைதிலி போன் செய்து, அவர்கள் சாலை நெரிசலில் மாட்டிக்கொண்டதால், வீடு திரும்ப தாமதமாகும் என்று சொல்ல, அரவிந்தனும், அஞ்சலியும் புறப்பட முடிவுசெய்தனர். நால்வரும் ஆளுக்கொரு அட்டைபெட்டியை தூக்க, அரவிந்தன்,
“மீரா! உங்க வீட்டுக்கு கொண்டுபோக வேண்டிய புத்தகங்களையும் என்கிட்ட கொடு. நாளைக்கு, நானும் அஞ்சலியும் உங்க வீட்டுக்கு வரோம். உங்க அப்பா, அம்மாவுக்கும் அஞ்சலிய அறிமுகம் செஞ்சா மாதிரி இருக்கும்.” என்று அவன் யோசனை சொல்ல, அவள் மறுபேச்சின்றி சம்மதம் தெரிவித்தாள்.
காரில், பெட்டிகளை நேர்த்தியாக அடுக்கி வைத்தவன், அஞ்சலியிடம், “சனி, ஞாயிறு, முழுக்க முழுக்க என்னோட தான் நேரம் செலவிடற…ஏதாவது சாக்கு சொன்ன… இருக்கு உனக்கு…” அன்புக்கட்டளையிட,
“அப்படியே, வார நாட்களுல பார்க்காம, பேசாம இருக்குறா மாதிரி மிரட்டறத பாரு!” அவன் தினமும் மாலையில் தன்னை சந்திக்க வருவதை சுட்டிக்காட்டி, அவன் கன்னத்தை கிள்ளினாள். அவனும், அவள் கிள்ளியது வலித்தது போல் கன்னத்தை தேய்த்து கொண்டே, காரின் கதவருகே வந்து,
“சரி! நாளைக்கு ஆஃபிஸுல பார்க்கலாம் டா ஹரி!” என்றான். அஞ்சலியும் அவர்களிடம், பிறகு சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு, காரை உயிர்ப்பித்தாள்.
புது ஜோடிகளை சுமந்து, கார் சாலையில் கலக்க, மனதில் பல ஏக்கங்களுடன், மெல்ல மெல்ல மறையும் அந்த காரையே பார்த்து நின்றன, இரண்டு ஜோடி கண்கள்.
சன்னியை உயிர்ப்பித்து புறப்பட தயாரானவளின் கையை இறுக பிடித்து, “மீரா! கொஞ்ச நாள் வெயிட் பண்ணு டி! அப்புறம் உனக்கு சந்தோஷத்த தவிர வேறெதுவும் தர மாட்டேன்… ஐ பிராமிஸ்!” காதலை கூட சொல்லாமல், நிபந்தனைகள் மட்டுமே போடும் குற்றவுணர்ச்சியில் வருந்தினான்.
வருந்தும் அவன் கண் பார்த்து, “எழுத்தாளரே! யாரு இப்போ சந்தோஷமா இல்லன்னு சொன்னாங்க? அவங்க ஆகாயத்துல பறக்குறாங்க; நம்ம தண்ணியில மிதக்கறோம்; அவ்வளவுதான் வித்தியாசம்!” நிதானமாக காதலித்தாலும், அதிலும் ஒரு சுகம் என்று வலியுறுத்தி, “திங்கட்கிழமை பார்க்கலாம்!” என்று சொல்லி, புறப்பட்டாள்.
அவள் விட்டுகொடுத்து போகும் ஒவ்வொரு முறையும், அவளை தன்னருகிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஏக்கம், அவனை வாட்டியெடுத்தது.
அறிமுகமில்லாத அன்னியர்கள் அரை நொடியில், அன்யோனியமாய் பழகும் போது,
காதலியாய் மாறிய தோழியின் தோள் சாய்வதில் இவனுக்கிருந்த தயக்கம்,
அவள் மேல் காதல் இல்லாமல் இல்லை,
அவர்கள் காதலை ஏற்க மறுக்கும் பெற்றோரின் மனநிலை.
அந்த கண்ணியமானவனின் உள்ளத்தை புரிந்து கொள்வார்களா, பதில் சொல்லும் அவர்கள் அவன் மீது வைத்த அன்பின் ஆழம்…