அன்பின் ஆழம் – 21.1
காரில் ஏறி அமர்ந்த அடுத்த கணமே வழக்கமாக, வளவளவென்று பேசுபவள், இன்று பத்து நிமிடங்களாகியும், மௌனமாக வருவதை கண்ட மகேஷுக்கு சற்று விசித்திரமாகவே இருந்தது. ஜன்னல் வழியே சாலையை கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தவளிடம்,
“என்ன மீரா! பலத்த யோசனை?” என்றான்.
மனதில் தன்னவனுக்கு என்ன சமைக்கலாம் என்று திட்டமிட்டு கொண்டிருந்தவள், மெல்லிய சிரிப்புடன், “வீட்டுக்கு போய் என்ன செய்யலாமுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்!” என்றாள்.
தினமும் ஹரி வரும் வரை காத்திருந்து, அவனிடம் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்புபவளுக்கு யோசிக்க அப்படி என்ன இருக்கிறது என்று நினைத்தவன், தோள்களை குலுக்கி, “உம்! சரி!” என்றான்.
கிரிக்கெட் கமென்ட்ரி கேட்டுக்கொண்டே, அவன் காரை செலுத்த, அவளோ சாதம் வடிக்கலாமா, சப்பாத்தி செய்யலாமா என்று யோசித்தாள்.
கேட்டை தாண்டி, கார் மெல்ல மெல்ல, பார்கிங்கில் நுழைய, ஜன்னல் வழியே தன் சன்னியை பார்த்தவளுக்கு, கண்கள் விரிந்தன.
“ஹரி வீட்டுக்கு வந்துட்டான் போல டா மகேஷ்!” வியந்தவள், நாளை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு, கண்சிமிட்டுவதற்குள் மாயமாய் மறைந்தாள்.
‘இவங்களும், இவங்க காதலும்!’ மனதில் சலித்து கொண்டு சிரித்தான் மகேஷ்.
“என்னடா ஹரி! இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?” படபடவென்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தாள் மீரா.
புத்தகம் ஒன்றை புரட்டி கொண்டிருந்தவன், அலுவலகத்தில் பராமரிப்பு வேலை நடப்பதால் சீக்கிரம் வந்ததாக சொன்னதும், தன்னவனுடன் அதிக நேரம் செலவிடலாம் என்று மனக்கோட்டை கட்டினாள்.
“வாரயிதழ், நடத்தும், நம்ம இரமேஷுடைய நண்பர் வர சொல்லிருக்காரு. ஆறு மணிக்கு அவர பார்க்க போகணும்.” ஹரி, தன் திட்டத்தை சொல்ல, கட்டிய வேகத்தில் மனக்கோட்டை, மணல்கோட்டையாய் சிதைந்தது.
ஏமாற்றத்தை மறைக்க, “சரி! டீ போட்டு தரேன்!” என்று நகர்ந்தாள். அவள் வலது கையை பிடித்து, தடுத்தவன்,
“என்ன விஷயமுன்னு கேட்க மாட்டீயா?” என்று, அவளை அருகில் அமரும்படி சொன்னான்.
“அன்னைக்கு அறிமுக விழாவுல கலந்துகிட்ட நிருபர், என் கதையை பற்றி அவர்கிட்ட உயர்வா சொல்ல, அவர் எனக்கு இன்னைக்கு காலையில போன் செய்தார். அவங்க பத்திரிகையில தொடர்கதை எழுத முடியுமான்னு கேட்டு…” என்று, தன்னிடம் இருந்த புத்தகத்தை அவளிடம் நீட்டி,
“இந்த கதையை கொடுக்கலாமுன்னு இருக்கேன். என்ன சொல்ற?” யோசனை கேட்டான்.
அந்த கதையும், அவள் ஹரி மேல் மலர்ந்த காதலை உறுதிபடுத்தி கொள்ள, படித்த கதைகளுள் ஒன்று; அவள் மனதை கவர்ந்த கதை தான்.
“அற்புதமான கதை டா! இத பற்றி ஸ்ரீராம் கிட்ட பேசினியா?” என்று வினவினாள்.
“உம்… பேசினேன்!” என்று தலையசைத்தவன், “எப்படியும் அடுத்த கதையை பதிப்பிக்க, குறஞ்சது ரெண்டு மாசமாவது ஆகும்… அதனால கண்டிப்பா இந்த வாய்ப்ப பயன்படுத்திக்க சொன்னாரு.”
சில பக்கங்களை முன்னும் பின்னும் புரட்டியவள், “நம்ம முதல் குழந்தைய, பிறந்ததுக்கு அப்புறம் தான் கண்ணால பார்த்தோம், ஆனா இவன், சிறுக சிறுக வளருரத வாராவாரம் பார்த்து இரசிக்க போறோம்.” புத்தகமாய் வெளியிடுவதற்கும், தொடர்கதையாய் வெளியிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை ஹரி அன்று சொன்ன பாணியில் ஒப்பிட்டாள்.
அவள் பேச்சில் நெகிழ்ந்து போனவன், “நான் ஏதோ அன்னைக்கு மனசுல தோணினத சொன்னேன்டி… அதையே வா நெனச்சிட்டு இருப்ப?” என்றான்.
“எனக்கு, என் எழுத்தாளார் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் வேதவாக்கு.” உதட்டை சுழித்து சொன்னவள், புத்தகத்தை அவன் கையில் திணித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள்.
அவள் வெள்ளந்தி குணத்தை எண்ணி இடம் வலமாக தலையசைத்து சிரித்தவன், செய்துகொண்டிருந்த வேலையில் கவனத்தை திசைதிருப்பினான்.
அவளும், அவனை தொந்தரவு செய்யாமல், பருக, டீ மட்டும் கொடுத்துவிட்டு, சமையல் வேலையை கவனித்தாள்.
அரை மணி நேரத்தில், காலி டம்ளருடன் சமையலறைக்குள் வந்தவன், அடுப்பில் கொதித்து கொண்டிருந்த உருளைகிழங்கு மசாலாவையும், உருட்டி வைத்திருந்த சப்பாத்தி மாவையும் பார்த்தான்.
“என் ஒருத்தனுக்கு எதுக்கு டி இவ்வளவு செய்யற?” என்று கேட்டு, அவள் கையில் இருந்த துடுப்பை பிடுங்கி, சப்பாத்தியை திருப்பினான்.
“ஒருத்தருக்கு மட்டும் தனியா சமைக்க கூடாதூன்னு அம்மா சொல்லுவாங்க டா!” சப்பாத்தியை திரட்டி கொண்டே அவள் விளக்கம் சொல்ல,
“இப்படியெல்லாம் காரணம் சொல்லி, என்னோட சேர்ந்து சாப்பிடலாமுன்னு பிளான் பண்ணறியா?” கண்சிமிட்டி கேட்டு, கையில் இருந்த துடுப்பால் செல்லமாக அடித்தான்.
“ஆ… சுடுது டா!” முகத்தை சுளித்தவள், “அதெல்லாம் ஒண்ணுமில்ல… குழந்தைங்க வந்தா கொடு… இல்ல என் நண்பனுக்கு எடுத்துட்டு போ!” வழியா இல்லை என்பது போல் வாதாடினாள்.
“பேசாம உன் மாமியார அழைச்சிட்டு வந்துடறேன்…உன் கை பக்குவத்துக்கு மயங்குறாங்களான்னு பார்க்கலாமா?” குறும்பாக, அவள் காதில் கிசுகிசுத்தான்.
திரட்டுவதை நிறுத்தி, இடுப்பில் கைவைத்து கொண்டு, அவன் பக்கம் திரும்பியவள், “எழுத்தாளரே! அதெல்லாம் நாங்க சமாளிச்சுடுவோம்… எங்களுக்கு நடுவுல மாட்டிக்கிற உங்க பாடு தான் திண்டாட்டமாயிடும்!” சவால் விட,
“வாய்! வாய்! கொஞ்சமாவது பயம் இருக்கா!” துடுப்பால் அடிப்பது போல் கையசைத்தான். கிண்டல்களுக்கும் , கொஞ்சல்களுக்கும் நடுவில் சமையலும் முடிந்தது.
ஒரு மணி நேரத்தில், வீட்டை பூட்டிக்கொண்டு இருவரும் வெளியே வந்தனர். மீராவை வீட்டில் இறக்கிவிட்டு, வண்டியை எடுத்து போவதாக சொன்னவன், ”டின்னர் தான் என்னோட சாப்பிட வேண்டாமுன்னு சொன்னேன்… ஆஃபிஸ்லேந்து வர உனக்கும் பசிக்குமுல்ல… சமைக்குறதோட நிறுத்திக்காம, ஏதாவது சாப்பிட்டு கிளம்பு!” சாத்தியமான வழி உண்டு என்று பொருப்பாய் பேசினான்.
“அப்போ நீ எனக்கு தினமும் ஊட்டிவிடுவியா?” அப்பாவியாக முகம் வைத்துக்கொண்டு, அவள் குழைய,
“ச்சீ போடி! உனக்கு எங்க அம்மாதான் சரி!” கிண்டல் செய்து வண்டியை உயிர்ப்பித்தான்.
தொடர்ந்து, அடுத்த நாள் மாலையும் அவனுடன் வீட்டில் ஒரு மணி நேரம் செலவழித்தவளுக்கு, அளவில்லா சந்தோஷம். அவன் சொன்னபடி, சமைத்து வைத்திருந்த உணவில், தானும் கொஞ்சம் உண்டாள். புறப்பட தயாரானவளுக்கு, திடீரென்று ஒன்று நினவுக்கு வந்தது. ஹாண்ட்பேகிலிருந்து, ஒரு கவரை எடுத்து ஹரியிடம் நீட்டினாள்.
“மறந்தே போயிட்டேன் டா! அரவிந்தன் இந்த டிரேயினிங் மெட்டீரியல் எல்லாம் கேட்டிருந்தான்.” சொல்லி ஒரு கவரை நீட்டினாள்.
அதை வாங்கி, ஆராய்ந்தவன், “இதெல்லாம் எனக்காக தான் கேட்டிருப்பான் மீரா!” மெல்லிய குரலில் சொல்ல,
“எதுக்கு?” தன்னவனை புருவங்கள் உயர்த்தி பார்த்தாள் மீரா.
“அது, நான் பதவி உயர்வு சம்பந்தமான பயிற்சி எடுத்துக்கலாமுன்னு நினைக்கறேன்.” என்று மேலோட்டமாக தன் திட்டத்தை சொல்ல, அவளுக்கு திடுக்கிட்டது.
“ஏண்டா ஹரி! புத்தகம் வெளியிடறதுல ஒரு பிடிமானம் வந்ததும், வேலைய விடறதா சொன்னியே!” தாழ்ந்த குரலில் கேட்டாள்.
அவளிடம் தெளிவாக சொல்லவில்லை என்றால், வீணாக கவலைபடுவாள் என்று நினைத்தான். “உங்க அம்மாவுக்கு போன் செஞ்சு, ஒரு மணி நேரத்துல வரேன்னு சொல்லு. நான் எல்லாத்தையும் விவரமா சொல்றேன்” என்று, தன் அறைக்குள் புகுந்தான்.
அவன் சொன்னதை செய்துவிட்டு, பதற்றத்துடன் காத்திருந்தாள். அவனும், கையில் லேப்டாப்புடன் வந்தான்.
“இங்க பாரு மீரா!” ஆள்காட்டி விரலால், திரையில் இருந்ததை சுட்டிக்காட்டினான். அது ஒரு வரவு செலவு பட்டியல். வங்கியில் வரும் வருமானம், கதை பதிப்பிப்பதற்கான வரவு செலவு, மற்றும், வீட்டுச்செலவு என்று விரிவான வரவு செலவு கணக்கை வரைந்திருந்தான்.
“ரெண்டு கதை நல்லபடியா விற்பனையானா, நான் உன்கிட்ட வாங்கின பணத்த கொடுத்துட முடியும். ஆனா, கல்யாணம், குடும்பமுன்னு வரப்ப, புத்தகம் வெளியீட்டுல மட்டும் வர வருமானம் போதாது. வங்கி வேலைய தக்க வெச்சுக்கணுமுன்னா, அதுக்கேத்தா மாதிரி உழைக்கணும். அதான், வர தேர்வுக்கு படிக்கலாமுன்னு, அரவிந்தன் கிட்ட டிரேயினிங் மெட்டீரியல் எல்லாம் கேட்டேன்.”
அந்த பட்டியலில் குறிப்பிட்டிருந்த செலவுகளை ஆராய்ந்தாள். அவற்றை தவிர்க்கவோ, இல்லை குறைக்கவோ வழியிருக்கிறதா என்று யோசித்தாள். அதில் கண்ணுக்கு தென்பட்ட, இரண்டு மட்டும் அவளுக்கு அதிக வேதனையை தந்தது.
“இந்த வீட்டு வாடகை, ஃப்ரிஜ் வாங்க ஈ.எம்.ஐ, இதெல்லாம், என்னால தானே டா உனக்கு வீண் செலவு!” வருந்தும் குரலில் கேட்டாள்.
“ஓ கம் ஆன் மீரா!” சலித்து கொண்டு, அவள் தோளை சுற்றி வளைத்தவன், மறுகையால் அவள் முகத்தை ஏந்தி, “நீ என் ராஜகுமாரி டி! உனக்காக, இது கூட செய்யமாட்டேனா?” என்றான்.
தன்னவன் முகத்தை கண்கள் உயர்த்தி பார்த்தவள், “அப்படியில்ல ஹரி! நான் கொஞ்சம் சிந்திச்சு இருந்தா, இந்த செலவு எல்லாம் குறைச்சிருக்கலாமே!” என்றாள்.
“ம்ஹூம்!” என்று மெல்லிய சிரிப்புடன் மறுப்பாய் தலையசைத்தவன், “நீ இன்னும் நிறைய கேட்கணும். மிஸ்டர் வரதன், கம்பனியில இருக்குற மொத்த மாடுலார் கிட்சனும் கூட கேளு… வாங்கி போட்டு அசத்திடலாம்!” என்று கண்சிமிட்டினான்.
அதற்கு அவள் சிரித்த போதிலும், மனதளவில் இன்னும் கவலையாய் இருந்தாள். “உன்ன நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஹரி! ஆனா, எனக்காக, உன்னையே நீ வருத்திக்கறியோன்னு தோணுது டா!” வேலை, பயிற்சி, புத்தக வெளியீடு இப்படி எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்தால், அவன் உடல்நலம் பாதிக்குமோ என்று அஞ்சினாள்.
“எனக்கு இதுல ஒரு கஷ்டமும் இல்ல டி!” சொல்லி, மீண்டும் தன்னவளை தோளோடு சேர்த்து அணைத்தவன், “முன்னாடி, நான் விரும்பினத செய்ய முடியலியேன்னு, அந்த கோபத்த, வெறுப்ப எல்லாம் வேலையில காட்டினேன். துணிஞ்சு இறங்கினா, எதுவும் சாத்தியமுன்னு நீ எனக்கு புரியவெச்சுட்ட!”
இங்க பாரு மீரா,” என்று, அவள் பக்கம் திரும்பியவன், “நீ எனக்காக காத்துகிட்டு இருக்கன்னு நினைக்கும் போது… உன்னோட சேர்ந்து வாழணுமுன்ற அந்த ஒரு எண்ணமே, எனக்கு சாதிக்க தேவையான வலிமையையும், உற்சாகத்தையும் கொடுக்கும்…. அதனால, தயவுசெய்து, இப்படி உம்முன்னு உன் மூஞ்சிய ஃப்யூஸ் போன பல்ப் மாதிரி வெச்சுகிட்டு என்ன கஷ்டப்படுத்தாத டி… ப்ளீஸ்” என்று கெஞ்ச, அவள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை விரிந்தது.
“ஆனா! எழுத்தாளரே, இந்த மீரா, ஹரின்ற எழுத்தாளருக்கு மட்டும் தான் காத்துகிட்டு இருக்கா. அத மறந்துடாதீங்க!” ஒருபோதும் எழுதும் அவன் இலட்சியத்திலிருந்து, எதற்காகவும், யாருக்காகவும் பின்வாங்கிவிட கூடாது என்று நினைவூட்டினாள்.
அவள் தன்னை எழுத்தாளரே என்று அழைக்க வேண்டும் என்ற ஒரு காரணம் போதும், அவன் வாழ்நாள் முழுவதும் எழுதி கொண்டே இருக்க. அது புரியாதவளாய், பேசின தன்னவளை பார்த்து சிரித்தவன்,
“புரியுது டி! வெற்றியோ, தோல்வியோ, எழுதிக்கிட்டே இருப்பேன். ஆனா வெறும் ஜீவிதத்துக்காக மட்டும் எழுதாம, அத மானஸீகமா செய்யணுமுன்னு நினைக்கறேன்.” என்று அலுவலக வேலை எந்தவிதத்திலும் தன் எழுத்து பயணத்தை பாதிக்காது என்று அவளுக்கு நம்பிக்கை அளித்தான்.
அவன் தொலைநோக்கு பார்வையில் ஒரு தெளிவை உணர்ந்தவள், வீட்டிற்கு புறப்பட எழுந்தாள். அவன் எதிரில் நின்று, “உனக்கு, பயிற்சியில ஏதாவது உதவி வேணுமுன்னா சொல்லு டா!” மீண்டும் அவன் உடல்நலத்தை மனதில் வைத்து கொண்டு கேட்க,
“எப்படி…” என்று இழுத்தவன், “நீ எனக்கு பதிலா போய் எக்ஸாம் எழுதறியா?” அவள் நெற்றியில் முட்டி சீண்டினான்.
“நல்லது சொன்னா நக்கல் செய்யறியா!” முறைத்தவள் புறப்பட, அவளை எட்டிப்பிடித்தவன், “உன்ன கேட்காம, வேற யார கேட்க போறேன் டி? நீ ஏற்கனவே எனக்காக நிறைய செய்யற… இது என்னால கண்டிப்பா முடியும் மீரா!” வீணாக கவலைபடாதே என்றான்.
“உன்னால முடியாதுன்னு யாரு சொன்னா! உன் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உடம்ப பார்த்துக்கோ! அவ்வளவுதான்!” என்று அவன் மார்பில் தட்டிகொடுத்து, கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்தவள், முன்வாசலில், சின்ன சின்னதாய் இருபது, முப்பது டப்பாக்கள் அடுக்கி இருப்பதை கண்டாள். வாசலுக்கு வந்த அன்னையிடம் வினவ,
“அதுவா! நவராத்திரிக்கு பரிசு கொடுக்க, அப்பா கம்பனிலேந்து ஹாட்பேக்(Hot Pack) எடுத்துட்டு வர சொன்னேன்!” விளக்கினாள் நிர்மலா.
“அம்மா! அதான் ஹரி எழுதின புத்தகத்த கொடுக்கலாமுன்னு சொன்னேனே!” சண்டைக்கு வந்தாள் மீரா.
அவள் வேகத்தை கண்ட நிர்மலா மென்சிரிப்புடன், “ஏண்டி, ஸ்கூல், காலேஜ் படிக்கற பொண்ணுங்களுக்கு எல்லாம் அந்த கதை புத்தகம் கொடுக்க முடியுமா!” என்று சுட்டிக்காட்ட,
பற்களை கடித்து, தலைசொறிந்து, “ஸாரி மா!” என்று அசடுவழிந்தாள்.
பாதிவழியில் திரும்பியவள், “அம்மா! எனக்கு ஒரு ஹாட்பேக் தா! சிவப்பு நிறமா இருந்தா நல்லது!” என்று கேட்டாள்.
“யாருக்கு?” புதிராய் வினவினாள் நிர்மலா.
“கதை எழுதினவருக்கே, கதை புத்தகத்த பரிசா தர முடியுமா?” ஜாடையாக சொல்லி, அன்னையை வியப்பில் ஆழ்த்திவிட்டு வீட்டிற்குள் துள்ளிகுதித்து ஓடினாள்.
மூன்று நாட்கள் தொடர்ந்து தன்னவனுடன் மாலை பொழுதை கழித்த அந்த மிதப்பிலேயே அடுத்த நாளும் ஹரி வீட்டிற்குள் நுழைந்தாள் மீரா. அதுவும், தன்னவனுக்காக கொண்டுவந்த ஹாட்பேக்கையே பார்த்து பார்த்து சிரித்தாள். முன் தினம் அவற்றை பார்த்தவளுக்கு வந்த முதல் எண்ணம், தன்னவன் அவள் தந்தை கம்பனியிலிருந்து மொத்த சாதனங்களை கொண்டு வந்து இறக்கினாலும் தன்னால் சமாளிக்க முடியும் என்று சொன்னது தான்.
‘முதல்ல, எங்க அப்பா கம்பனி தயாரிச்ச ஹாட்பேக்குல லன்ச் எடுத்துட்டு போ; அப்புறம் மத்ததெல்லாம், வாங்கி தா… முசுடு எழுத்தாளர்’ தன்னவனை செல்லம் கொஞ்சியபடி, சமையல் செய்ய தொடங்கினாள்.
முக்கால் மணி நேரத்தில், தக்காளி சாதமும், தயிர் பச்சடியும் செய்தாள். அடுத்த நாள் அவன் அலுவலகம் எடுத்து போக ஏதுவாய் மிளகு குழம்பும் தயாரித்தாள். கடிகாரத்தை பார்த்தவள், எந்நேரமும் அவன் வந்துவிடுவான் என்று பால்கனியில் போய் அமர்ந்தாள். வெள்ளிக்கிழமை, அரவிந்தனும், அஞ்சலியும் வருவதாக சொல்லி இருந்ததனால், சமைக்க தேவையான பொருட்களை பட்டியல் இட்டாள். எல்லாம் செய்து முடித்த பின்னும், ஹரி வந்த பாடு இல்லை. வாசலையே பார்த்து கொண்டிருக்க, கைப்பேசி தான் ஒலித்தது. நிசப்தமாய் இருந்த வீட்டில்,எதிர்பார்க்காத நேரத்தில் ஒலித்த கைப்பேசி சத்தம் கேட்டு, தூக்கி வாறி போட்டது மீராவுக்கு.…
தொடர்ந்து படிக்க, Click Here –> அன்பின் ஆழம் 21.2