அன்பின் ஆழம் – 20.1

காலை எழுந்ததிலிருந்து வாசற்கதவையே பார்த்து கொண்டிருந்தான் ஹரி. எட்டு மணியளவில் தான் மீரா வருவாள் என்று தெரிந்திருந்த போதிலும், ஆறு மணி முதற்கொண்டு, வாசலுக்கும், பால்கனிக்கும் நடையாய் நடந்து தவித்தான். தான் அவளுக்காக வாங்கி வைத்திருந்த பரிசு பொருளை அவளுக்கு காட்ட வேண்டும் என்பதை தவிர, அவன் சிந்தையில் வேறெதுவும் ஓடவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவன் இரவு உறங்கினானா என்பது கூட சந்தேகம் தான்.

‘எழுத்தாளரே! எழுத்தாளரே!’ என்று அவள் கீச்சுக்குரலில், தன்னை அழைப்பது போலவே அவனுக்கு ஒரு பிரம்மை. ‘டிங்க்…. என்று ஒலிக்க தொடங்கிய அழைப்பு மணி, ‘டாங் என்று முடியும் முன், பளிச்சென்று மிளிரும் முகத்துடன் கதவை திறந்தான். கதவை விட்டு நகர்ந்தால் தானே, அவன், மணியடித்து முடிக்கும் வரை காத்திருக்க….

“ஹரி மாமா! மீரா அத்தை இத உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க!” மழலையாய் மொழிந்த ராணியின் மகள், அவனிடம் சாவி கொத்தையும், ஒரு டப்பாவையும் நீட்டினாள். முகத்திலிருந்த பிரகாசம் குறைய, அவற்றை வாங்கிக்கொண்டான் ஹரி.

“அத்த, உங்கள பால்கனிலேந்து பார்க்க சொன்னாங்க…. டாடா!” கிளி போல், தகவல் சொல்லி, கையசைத்துவிட்டு, சிட்டாய் பறந்தாள்.

பொருட்களை மேஜையில் வைத்தவன், கூடவே முகத்தில் வழிந்தோடிய ஏமாற்றத்தையும் கழட்டி வைத்தான். பால்கனியிலிருந்து அவளை அழைத்தான். பிள்ளையார் சிலைமுன் கைக்கூப்பி அமர்ந்திருந்தவள், அவன் குரல் கேட்தும், தலைதூக்கி பார்த்தாள்.

“ஹரி! இன்னைக்கு பிள்ளையார் சதுர்த்தி டா! காலையில விநாயகர் அகவல் சொல்ல நேரம் இல்ல…. அதான் மகேஷ் வரவரைக்கும் இங்க உட்கார்ந்து சொல்லலாமுன்னு…” மேலே வராததற்கு காரணம் சொல்லி,

“மறக்காம கொழுக்கட்டைய ஆஃபிஸுக்கு எடுத்துட்டு போ! அது உனக்கும் அரவிந்தனக்கும் தான்!” அனுப்பி வைத்த டப்பாவை என்ன செய்ய வேண்டும் என்றும் சொன்னாள்.

“சரி” என்று தலையசைத்தவன், “கொழுக்கட்டை எனக்கும் அரவிந்தனுக்குமா… இல்ல அரவிந்தனுக்கு மட்டுமா?” பால்கனி சுவற்றில் ஊனினின்று அவளை வம்பிழுத்தான்.

அதற்கு அசடுவழிந்தவள், “உனக்கு கொஞ்சம்; என் நண்பனுக்கு நிறைய!” சுருங்கிய கண்களுடன், விரல்களை மூடித்திறந்து, சிறுபிள்ளை போல், நடித்தும் காட்டினாள்.

அவள் செய்கையை இரசித்து, கன்னத்தில் குழிவிழ அவன் சிரிக்க, அதில் மனதை பறிக்கொடுத்தவள், “எழுத்தாளரே! இன்னைக்கு சாயங்காலம், வெயிட் பண்ணட்டுமா, வேண்டாமா?” என்று கண்சிமிட்டினாள்.

“வெயிட் பண்ணு; நான் சீக்கிரம் வந்துடுவேன்!” என்றதும், தலையசைத்தவள், பிள்ளையார் பக்கம் கவனத்தை திருப்பினாள். அவள் இருகரங்கூப்பி, பூஜிப்பதை, சிறிது நேரம் கண்கொட்டாமல் பார்த்தான், ஹரி.

என் பக்த்தைக்கு பதில் சொல்லாம, அலையவிட்டல்ல… வாங்கி வெச்ச பரிசு பொருள மீரா பார்க்க மாட்டாளான்னு, நீயும் அதே மாதிரி ஏங்கு…’ பிள்ளையார், அசரீரியாக, செவிகளில் சாபமிடுவது போன்று இருந்தது அவனுக்கு. 

தன் கற்பனையை எண்ணி சிரித்தவன், அங்கிருந்து நகர்ந்தான். வாய்விட்டு அழைத்திருந்தால், ஓடி வந்திருப்பாள்; வாங்கி வைத்ததை பற்றி, சொல்லியிருந்தால், பறந்தும் வந்திருப்பாள்; தன் சம்மதத்தை தெரிவித்திருந்தால், விடுப்பு எடுத்து, அவனுக்காக விருந்தே சமைத்திருப்பாள்.

ஆனால், காத்திருப்பதில் இருந்த சுகத்தில், மிதந்தவன், வழக்கமான மூன்று வரி காதல் கடிதம் எழுதி, அது அவள் கண்ணில் தென்படும்படி மாட்டிவிட்டு, அலுவலகத்திற்கு புறப்பட்டான்.

“கீதா ஒண்ணும் தப்பா நினைக்கலயே டா?” தோழி அனுப்பிய கொழுக்கட்டையை விழுங்கியபடி வினவினான், அரவிந்தன்.

“அவ ஒண்ணும் தப்பா நினைக்கல டா! மீரா தான்… நீ வரலையே… அஞ்சலி சமாதானமானாளா…. அரவிந்த் கிட்ட பேசட்டுமான்னு விடாம தொல்ல பண்ணிட்டு இருந்தா!” என்று சொல்லி பெருமூச்சுவிட்டவன், “சொல்லப்போனா, அவளுக்கு, நீங்க உண்மையிலேயே, அஞ்சலியோட மாமா வீட்டுக்கு தான் போனீங்களான்னு சந்தேகம்!” அவள் அன்று செய்ததை எல்லாம் நண்பனுக்கு விவரிக்க,

தோழியின் புரிதலை எண்ணி, மென்மையாக சிரித்தான். “உண்மைய சொல்லணுமுன்னா, வரக்கூடாதூன்னு எல்லாம் இல்ல டா! அப்போதான் அஞ்சலி ஓரளவுக்கு சமாதானம் ஆகியிருந்தா…கீதா குழந்தைய பார்த்து, திரும்ப குழம்பிடுவாளோன்னு பயம் தான்…” நண்பனிடம் மனம்விட்டு பேசினான்.

“நீ அஞ்சலிய விரும்பி தானே கல்யாணம் செய்துக்குற?” மனதை உறுத்திய கேள்வியை கேட்டேவிட்டான் ஹரி.

நண்பன் பேச்சில் திகைத்து போனவன், “ஏண்டா ஹரி! உனக்கு இப்படி ஒரு சந்தேகம்? “என்றான்.

தெரிந்து கொள்ள இருக்கும், தன் உண்மையான நோக்கத்தை சொல்லவில்லை என்றால், அரவிந்தன் தவறாக நினைப்பான் என்று, “அதுக்கில்ல டா… யார் கட்டாயத்துலையும், நீ இப்படி ஒரு முடிவு எடுக்கலியே….” மனதில் உள்ள பல சந்தேகங்களை தொகுத்து, பொதுவாக கேட்டான்.

அரவிந்தன் முதல் காதல், தோல்வியில் முடிந்தது, அவர்கள், அவனை திருமணம் செய்து கொள்ள சொல்லி வலியுறுத்தியது, முக்கியமாக, மீரா அஞ்சலியிடம் பேசியது, என்று பல காரணங்கள் இருக்க, ஏதோ ஒரு கட்டாயத்தால் தான் அஞ்சலி போன்ற பெண்னை திருமணம் செய்து கொள்கிறான் என்று நினைத்தான் ஹரி.

“உன் எண்ணம் புரியுது ஹரி!”, விரக்தியில் சிரித்தவன், “ஏண்டா! மீராவுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருந்திருந்தா, அவள திருமணம் செய்துக்க மாட்டேன்னு, மறுத்திருப்பியா? நியாயம் கேட்டான் அரவிந்தன்.

அந்த கேள்வி சுருக்கென்று மனதை குத்தினாலும், “மீரா, நம்ம தோழி டா!” அழுத்திச் சொன்னவன், “அவள ஏத்துக்கிறதும், அறிமுகமில்லாத அஞ்சலிய ஏத்துக்கிறதும் எப்படி டா ஒண்ணாகும்?” நண்பன், உண்மை காரணம் சொல்லும்வரை விடக்கூடாது என்று தர்க்கம் செய்தான் ஹரி.

அஞ்சலியை பற்றி அதிகம் தெரியாததுனால தான், அப்படி பேசுகிறான் என்று உடனே புரிந்துகொண்டான் அரவிந்தன். ஹரியிடம், வெளிப்படையாக பகிர்ந்து கொண்டால், அவன் சந்தேகம் தீரும் என்றும் நம்பினான்.

“கோவிலுல சந்திச்ச அஞ்சலியோட அம்மாவ, எங்க அம்மா குடும்பத்தோட விருந்துக்கு வர சொல்லி அழைச்சாங்க. அன்னைக்கு அஞ்சலிய எனக்கு திருமணம் செய்து கொடுக்க முடியுமான்னு, எங்க அம்மாதான் முதல்ல கேட்டாங்க. அதுக்கு அவங்க கொஞ்சமும் தயங்காம, அஞ்சலிக்கு இருக்குற பிரச்சனைய ஒளிவுமறைவு இல்லாம சொல்லி, அவளுக்கு ஏத்தா மாதிரி பையன் இருந்தா சொல்ல சொன்னாங்க. அவங்க எதார்த்தமா நடந்துகிட்டது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துது டா…” சொல்லி, மூன்றாவது கொழுக்கட்டையை விழுங்கியவன் மேலும் பேசினான்.

“அதுக்கு அப்புறம், வேலை, படிப்பு, பொழுதுபோக்குன்னு, பொது விஷயங்களை மட்டும் தான் பேசினோம். அவளோட பேசின அந்த கொஞ்சம் நேரத்துல அவகிட்ட இருந்த நேர்மறை சிந்தனைய உணர்ந்தேன். வயசாகி, தலை நரைத்த பின்னும், அவளோட சந்தோஷமா கைக்கோர்த்து நடக்க முடியுமுன்னு என் உள்மனசு சொல்லிச்சு.” என்று விளக்கி,

“அவங்க கிளம்பினதும், என் விருப்பத்த அம்மா கிட்ட சொன்னேன்!” சொன்னவன் முகத்தில் ஒரு மென்சிரிப்பு; கேட்டுகொண்டிருந்தவன் முகத்தில், ஒரு ஆர்வம்.

“என்னடா! பரிதாபமா? அதான் அவங்க முதல் கேள்வி!” அம்மா பேசினதை போலவே அரவிந்தன் நடித்து காட்ட, ஹரி புருவங்கள் உயர்ந்தன.

“இல்லைன்னு ஒரு விஷயத்த பற்றி, உடைஞ்சு போய் உட்காராம, இருக்குற வாழ்க்கைய தானும் சந்தோஷமா வாழ்ந்து, மத்தவங்களையும் எப்படி சந்தோஷமா வாழ வெக்காலாமுன்னு நினைக்கற அவளோட நேர்மறை குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லி, அம்மாவுக்கு இதுல ஏதாவது தயக்கம் இருக்கான்னு கேட்டேன்.”

அரவிந்தன் விளக்கம் சொல்ல சொல்ல, சஸ்பென்ஸும் கூடுவது போல இருந்தது ஹரிக்கு.

“அதுக்கு அம்மா, எனக்கும் அஞ்சலி நம்ம வீட்டுக்கு மருமகளா வரணுமுன்னு தான் டா ஆசை அரவிந்தா…. ஆனா, அவங்க சொன்ன பிரச்சனைய நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியாம, என்னால எதுவும் சொல்ல முடியல… தன் சொந்த விருப்பு வெறுப்புகளை பிள்ளைகள் மேல திணிக்க கூடாதூன்னு நெனச்சதா சொன்னாங்க” அரவிந்தன் விளக்க, கேட்டவனுக்கு, மெய்சிலிர்த்தது.

அகிலாவிடம் பேசிய மீதியையும் சொன்னான். “அவங்க இவ்வளவு முற்போக்கா சிந்திக்கறத கவனிச்சு ஆச்சரியப்பட்டேன். அஞ்சலிக்கு இருக்குற பிரச்சனைய அவங்க எப்படி பாக்குறாங்கன்னு கேட்டதுக்க, அவங்க சொன்ன பதில் தான், எனக்கு ஒரு பிடிமானமே கொடுத்துதுன்னா பாத்துக்கோயேன்…”

“பத்து பொருத்தம் பார்த்து கல்யாணம் செஞ்சா மட்டும் எல்லாம் சரியா நடந்துடுமான்னு சொல்லி, முகம் தெரியாதவங்க பிரச்சனைய கேட்டாலே மனசு கடந்து தவிக்கறப்ப, அஞ்சலி, என்னோட உயிர் சிநேகிதியோட மகள் இல்லையான்னு விளக்கம் சொன்னதும், எனக்கு பேச்சே வரல்ல டா!” என்றான் அரவிந்தன். கேட்ட ஹரிக்கும் அப்படி தான் இருந்தது.

தங்கள் தோழமையை காட்டிலும் அது உயர்வாக இருப்பதை போன்று உணர்ந்தான் ஹரி.  அரவிந்தன் விடாமல் மேலும் பேசினான்.

“காலம் தாழ்த்தாமல், அஞ்சலி கிட்ட என் விருப்பத்த சொல்லலாமுன்னு நான் புறப்பட்டா, அதுக்கு, அவங்க எங்கிட்ட கேட்ட வாக்குறுதி தான் அவங்க பக்குவத்த எனக்கு புரியவெச்சுது… எத்தனை பெரிய மனஸ்தாபம், எங்களுக்குள்ள, வந்தாலும், அஞ்சலியோட குறையை பற்றி நான் குத்திக்காட்டி பேசமாட்டேன்னு உறுதியா இருந்தா மட்டுமே, அவள கல்யாணம் செய்துக்கறத பற்றி யோசிக்கணுமுன்னு, கண்டீஷன்னா சொல்லிட்டாங்க!” என்று நடந்த அத்தனையும் சொல்லி முடித்தான்.

தன் தாயைவிட, தன் கதைகளில் கற்பனை செய்த தாயைவிட, அகிலா உயர்ந்தவள் என்று மனதில் நினைத்தவன்,

“மன்னிச்சிரு டா அரவிந்தா! இப்படி சந்தேகமா கேட்டு, உன்கிட்ட கடுமையா பேசினதுக்கு….” தலைகுனிந்தான் ஹரி.

நண்பன் கையை அழுத்தி பிடித்தவன், “அப்படியெல்லாம் சொல்லாத டா! என் மேல இருக்க அக்கறையில தானே கேட்ட!” நண்பன் நோக்கம் சரியாக புரிந்துகொண்டதாக சொல்லி, “எனக்கும் அஞ்சலி பற்றி உங்ககிட்ட எல்லாம் சொல்ல கூடாதூன்னு இல்ல ஹரி… அவசியம் இல்லன்னு நெனச்சேன்…” தயங்கினான் அரவிந்தன்.

“தப்பு இல்ல அரவிந்தா! இது உங்க வாழ்க்கை; எல்லாத்தையும் எல்லார் கிட்டையும் சொல்லணும்னு அவசியம் இல்ல.” சொன்னவனுக்கு, மனதில் ஒரு குற்றவுணர்ச்சி… இதுவரை மீரா அப்பாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தை நண்பனிடம் சொல்லாததை எண்ணி.

“அதையேதான் நானும் அவளுக்கு சொன்னேன். அவ மீராகிட்ட எல்லாத்தையும் சொல்லுவான்னு நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கல!”, என்று நடந்ததை எல்லாம் எண்ணி சிரித்தான் அரவிந்தன்.

“எனக்கும், மீரா உன் மேல அக்கறை காட்டறேன்ற பேருல, அஞ்சலிய கட்டாய படுத்தினாளோன்னு ஒரு சந்தேகம்!” ஹரி சொல்ல, அதற்கு வாய்விட்டு சிரித்தவன்,

“ச்சே ச்சே! மீராவ விட என்ன யாரு சரியா புரிஞ்சுப்பா?” என்று, டப்பாவை ஹரியிடம் தள்ளினான்.

அதில் இரண்டே கொழுக்கட்டைகள் மீதம் இருப்பதை கண்டு, சரி தான் என்று மனதில் நினைத்தவன், “அத மட்டும் எதுக்கு விட்டு வெச்ச; அதையும் நீயே சாப்பிடு!” என்று, அவனே அனைத்தையும் விழுங்கிவிட்டான் என்று புலம்பினான் ஹரி.

பொய்கோபம் கொண்ட நண்பனின் வாயில் ஒன்றை திணித்து, மற்றொன்றை தானும் உண்டு, டப்பாவை மூடியவன்,

“சரி சொல்லுடா! உன் அறிமுக விழா எப்படி போச்சு? நான் கேட்ட பிரதிகள் எப்போ கொடுப்ப?” என்று விசாரித்தான்.

ஹரியும், அன்று நடந்ததை எல்லாம் விவரித்து, ஃபீட் பாக் ஃபோர்ம் மட்டும் தனியாக அச்சிட்டதனால், அதை ஒவ்வொரு பிரதியிலும், கையால் இணைக்க வேண்டும் என்று சொல்லி,

“வெள்ளிக்கிழமை ரெடி ஆயிடும். நீயும் அஞ்சலியும் அன்னைக்கு வீட்டுக்கு வாங்களேன்!” அழைத்து, “மீராவும் உங்கள பார்க்க துடிச்சிட்டு இருக்கா!” என்றான்.

“யூ ர் டூ லேட் டு இன்வைட் நண்பா!” என்றதும், ஹரி முகத்தில் ஒரு கேள்வி. “மீரா, அஞ்சலி கிட்ட பேசிருக்கா போல… ரெண்டு பேரும் ஏற்கனவே வெள்ளி கிழமை சந்திக்க பிளான் பண்ணிருக்காங்க. அஞ்சலி, இன்னைக்கு காலையில, உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போக சொல்லி என்ன கேட்டா!” என்றதும்,

‘அதானே!, ஒரு நாள் என் பேச்ச கேட்டு, அஞ்சலிக்கு போன் செய்யாம இருந்ததே பெருசு’ மனதில் நினைத்தவன், “சரி! மீரா சமைப்பா; நீங்க சாப்பிட வந்துடுங்க! அத அவ சொல்லியிருக்க மாட்டா!” என்று கைக்கடிகாரத்தை பார்த்தவன், ரோஷக்காரி இன்பதிரிச்சியில் மூழ்க, இன்னும் சில மணி நேரமே உள்ளது என்று சிரித்தான்.

“மீரா கையால சாப்பிட கசக்குமா!” அரவிந்தன் தன் சம்மதத்தை தெரிவிக்க, தெளிவும், மகிழ்ச்சியும் பெற்ற நண்பர்கள், பணிக்கு திரும்பினர்.

தொடர்ந்து படிக்க Click Here –> அன்பின் ஆழம் 20.2