அன்பின் ஆழம் – 19.1
“அழைப்பை ஏற்று வந்திருக்கும் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்…” பேருவகையோடு பேசத் தொடங்கினார் ஸ்ரீராம்.
பிரபலமான புத்தக கடைகளின் பிரதிநிதிகள், விநியோகத்தில் குறிப்பிடக்கூடிய தனி சிறப்பும், அனுபவமும் பெற்றவர்கள், நகரத்தில் புகழ்பெற்ற நூலகத்தின் நிர்வாகிகள், மற்றும், நாலைந்து விமர்சகர்களும் அறிமுக விழாவிற்கு வந்திருந்தனர். மேலும் ரமேஷ், வாரயிதழ் நடத்தி வரும் தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் ஹரியை பற்றி சொல்ல, அவர்கள் சார்பாக ஒரு நிருபரும், விழாவில் பங்கெடுத்து கொண்டார்.
அனைவருக்கும் தக்க மரியாதை செலுத்தி, வரவேற்ற, ஸ்ரீராம், தன் அருகில் அமர்ந்திருந்த ஹரி பக்கம் தலைதிருப்பி,
“’தெவிட்டாத இன்பம்’ தன் முதல் கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கும், புதிய முகம், திரு.ஹரி அவர்களை அறிமுகம் செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.” என்று முகத்தில் உற்சாகம் ததும்ப சொல்லி, ஹரியை பற்றி, ஒரு சில வார்த்தைகள் பேசினார்.
“ஹரி, கதை எழுத தொடங்கியதே, ஒரு சுவாரஸியமான கதைதான்!” சொல்லி, புன்னகை மிளிர அவனை பார்த்தவர், “ஹரி! நீங்களே அதை பற்றி சொல்லுங்க!” என்று அழைத்தார் ஸ்ரீராம்.
அந்த மறைமுக குறிப்பை இரசித்தவன், இதழோர சிரிப்புடன் எழுந்துகொள்ள, அங்கிருந்த அனைத்து கண்களும் இமைக்காமல், அவன் பேச காத்திருந்தன. அதில் இரண்டு கண்களின் தெரிந்து கொள்ளும் ஆசை, சற்று அதிகமாகவே இருந்தது.
வந்தவர்களுக்கு தன் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்தவன், அந்த பசுமையான நினைவை விவரித்தான்.
“நான் ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கறப்ப, இலக்கண பாடம் எடுத்த தமிழ் ஆசிரியர், நேர்கூற்று, அயற்கூற்று பற்றி கற்று கொடுத்தாங்க. அன்னைக்கு வீட்டுபாடமா எங்க கற்பனைக்கு எட்டிய உரையாடல் வாக்கியங்களை எழுதிட்டு வர சொன்னாங்க. விளக்கி, கண் முன்னே நின்ற அந்தநாள் நிகழ்வை எண்ணி சிரித்தவன் மேலும் பேசினான்.
“என்ன எழுதலாமுன்னு திணறிட்டு இருக்கறப்ப, என்னோட அம்மாவும், பாட்டியும், சரமாறியா வாதம் செய்துகிட்டு இருந்தாங்க. அதையே எழுதிட்டு போய் கொடுத்தேன்….” சொல்ல, அங்கு கலகலவென்று சிரிப்பொலி.
சிரிப்பொலி அடங்க, “அவ்வளவுதான்… தமிழாசிரியர் என்ன கண்டிக்க, விஷயம் தெரிஞ்ச அம்மாவும், பாட்டியும் ஒருத்தர் மேல ஒருத்தர் பழி சுமத்தி, இன்னும் அதிகமா விவாதிக்க….” அவன் கோர்வை பேச்சில் மீண்டும் சிரிப்பு சத்தம் பரவியது.
“அப்போ எங்க அப்பா பேசின வார்த்தைகள் தான், என்ன, உங்க முன்னாடி ஒரு எழுத்தாளனா கொண்டு வந்து நிறுத்திருக்கு!” என்றதும் ஒரு நிசப்தம்.
இடம் வலமாக கண்ணசைத்து பார்த்தவன், “என் மேல தப்பு இல்லேன்னும், சின்ன பையன் முன்னாடி சண்டை போட்ட அவங்ககிட்ட தான் தப்பு இருக்குன்னும் சொல்லி, அவங்க தவற சுட்டி காட்டினாரு. அதுமட்டும் இல்லாம, வீட்டுல நடக்கற விஷயம் இனி எதுவானாலும் என்ன எழுத சொன்னாரு. அதுக்கு அப்புறம் அவங்க சண்டை போட்டாதானே…”பெருமூச்சுவிட்டவன்,
“தொடக்கத்துல என் முன்னாடி ஒற்றுமையா இருக்குற மாதிரி நடிச்சவங்களுக்கு, அதுவே பழக்கமாகி, தன்னையும் அறியாம, அதுவே உண்மை புரிதலா மாறிடுச்சு…அதுவே என் முதல் கதையா, ‘தெவிட்டாத இன்பம்’(மா)… உங்க எதிர்க்க இருக்கு” என்று சொல்லி முடிக்க, கரகோஷம் வானை பிளந்தது.
அவன் சொன்ன கதையை கேட்டு, அக்கம் பக்கம் அமர்ந்தவர்கள், ஒருவரோடு ஒருவர் கிசுகிசுத்த படி, புத்தகத்தை புரட்ட, தன்னையே விழுங்கி கொண்டிருக்கும் விழிகளை பார்த்து புருவங்களை உயர்த்தி, கண்சிமிட்டினான் ஹரி.
“அப்போ, இது மாமியார்-மருமகள் ஒற்றுமை பற்றியா!” வினவி கொண்டே, ”புத்தக அட்டை பார்த்தவுடன, இது தாய்பாசம் பற்றிய கதையா இருக்குமுன்னு நெனச்சேன்.” என்று சொல்ல, கண்கள் தன்னவளை நோக்கி பாய்ந்தோடியது. இம்முறை மிதப்பில் புருவங்கள் உயர்த்தி கண்சிமிட்டியது மீரா. அன்று அவள் ஒவியத்தை தேர்ந்தெடுத்து கொடுத்து, அதற்கு தந்த விளக்கம் எவ்வளவு சரியென்று சிந்தித்தவன்,
“ஆமாம்! அந்த ஓவியம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்,” தொடங்கியவன் மனம், ‘என் தேவதை தேர்ந்தெடுத்து கொடுத்த ஓவியமாச்சே” என்று சொல்ல துடிக்க, “அந்த ஒவியம், என் அம்மா வரைந்தது.” என்றவன், தன் தாயின் ஓவியம் வரையும் திறமையை பற்றி எடுத்துரைத்தான்.
வாசுகி, தன்னை ஏற்கும் வரை, எந்தயிடத்திலும், தன்னை பற்றி பெருமையாக பேசக்கூடாது என்பது, மீரா அவனுக்கு இட்ட கட்டளை.
ஓவியத்தை பற்றிய பாராட்டுகள் சில நிமிடங்கள், தொடர, முழுகதையை ஏற்கனவே படித்திருந்த ஒரு விமர்சகர், “கதைக்களம் ரொம்ப நல்லா இருக்கு, ஆனா…” என்று இழுக்க, ஹரி முகத்தில் ஒரு பதற்றம்.
“கதாபாத்திரங்களுடைய தோற்றத்த பற்றி எங்கையுமே விவரிக்கலையே… அப்படி செஞ்சியிருந்தா, கதைக்கு இன்னும் அதிகம் மெருகூட்டிருக்குமே!” சொல்லி, விளக்கம் கேட்டார்.
இதை பற்றி, ஹரி ஏற்கனவே தெளிவாக யோசித்திருந்ததால், பரவிய பதற்றம், பனி போல் விலகியது.
“அப்படி கொடுக்க கூடாதுன்றது, என் கொள்கைகளுள் ஒன்று!” தீர்மானமாக சொல்ல, அனைவரும் வியப்பாய் பார்த்தனர்.
“ஏன்னா, படிக்கற ஒவ்வொருவரும், அவங்கவங்களோட உறவுகள மனசுல நெனச்சிகிட்டு படிக்கணும்ன்றது என் நோக்கம். அம்மாவோ, காதலியோ, அத்தை மகளோ, மாமன் மகனோ, யாராயிருந்தாலும், உங்களுக்கு பரிட்சயமானவர நெனச்சு, அவங்களே பேசுறா மாதிரியும் படிச்சு பாருங்க…. அந்த உணர்வே ஒரு தனி சுகம்…” கண்கள் மூடி, அனுபவித்து பேசினான்.
‘ஆமாம் டா! எனக்கும் அப்படிதானே உன் மேல காதல் வந்தது, ஹரி!” தன்னவள் மனதில் நினைத்தது காதில் விழுந்தது போல், கண்திறந்தவன், பார்வையால் அவளை வருடினான்.
“அப்போ, சினிமா கதை எடுக்க வாய்ப்பே இல்லன்னு சொல்லுங்க!” வம்பிழுத்தார் மற்றொரு விருந்தினர்.
அதற்கும், எளிமையாக சிரித்தவன்,”ம்ஹூம்… கண்டிப்பா அனுமதிக்க மாட்டேன்” உறுதியாய் சொன்னவன், ‘ படிக்கறவங்க மனசுல தோன்றும் காட்சிக்கு, அவங்களே இயக்குனர், கேமரா மேன், பின்னனி பாடகர் எல்லாமே.” என்று சொல்லி, அனைவர் மனதையும் கொள்ளை கொண்டான்.
வெளியீடு பற்றிய மற்ற விஷயங்களை பேசி முடிக்க, வந்திருந்த அனைவரும், மக்களிடமிருந்து எதிர்பார்க்ககூடிய வரவேற்பு பற்றிய நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை மொழிந்து, விற்பனை அள்ளும் என்று ஊக்குவித்தும் விடைபெற்றனர். ஸ்ரீராமும், மதியவுணவு இடைவேளைக்கு பின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பற்றி பேசலாம் என்று சொல்ல, காதல் ஜோடிகள் வெளியே வந்தனர்.
தனிமையில் காதலன் சிக்கியதும், அவன் சொன்ன ஆறாம் வகுப்பு நிகழ்வை பற்றி மெச்சியவள், “ஹரி! அப்போ எனக்காக எழுதற கதையிலையும், நம்ம போட்ட சண்டை பற்றியெல்லாம் எழுதியிருக்கியாடா?” அப்பாவியாக முகம் வைத்து வினவினாள்.
“எழுதாம…முக்கால்வாசி பக்கங்கள் சண்டையும், நீ பிடிக்கற பிடிவாதமும் தான்…” அவனும் அவளை ஓட்டினான்.
“அப்போ, கதை தலைப்பு, “பிடிவாதகாரியின் சண்டைகள், இல்ல… சண்டைகாரியின் பிடிவாதங்கள்… அப்படிதானே!” என்று குறும்பு செய்ய, அவளை ஆசையாக தலையில் குட்டியவன், “ஓய், மக்கு… அதான் தலைப்பு, அ..ஆ..ல தொடங்குமுன்னு சொன்னேன்ல” நினைவூட்டினான்.
“அப்போ, அன்பே ஆருயிரே வா?” என்றாள் சிறிதும் யோசிக்காமல்.
அதற்கு பெருங்குரலில் சிரித்தவன், “நெனப்பு தான் டி!” அவளை சீண்டினான். ஏனோ அவளுக்கு அப்போது, அரவிந்தன் நினைவில் வர,
“ஹரி! அஞ்சலி, அரவிந்தன் கிட்ட பேசியிருப்பாளா… நான் வேணுமுன்னா, அவகிட்ட திரும்ப பேசட்டுமா?” என்றாள் கவலையிலே.
“நோ மீரா!” உறுதியாய் சொன்னவன், “அது அவங்க வாழ்க்கை பிரச்சனை. நம்ம ஓரளவுக்கு மேல தலையிடக்கூடாது” தீர்மானமாய் சொன்னான்.
அவள் முகம் சுருங்கியது. அவள் வழக்கமாக தன் பேச்சை பொருட்படுத்தாது, அத்துமீறுவாள் என்பது நினைவுக்கு வர, “நீ மட்டும் அவங்ககிட்ட பேசினன்னு தெரிஞ்சுது…அவ்வளவுதான்” ஆள்கட்டி விரலையாட்டி, மிரட்டினான்.
அவன் குரலிலிருந்த கண்டிப்பில் தலையை தொங்கபோட்டவள், “சரி! நாளைக்கு நம்ம கீதா வீட்டுக்கு போகலாம்.” சொல்லி, வேறுவழி என்னவென்று சிந்தித்தாள்.
கீதா வீட்டு முன் ஹரி வண்டியை நிறுத்த, இறங்கி நின்றவளோ எதிரில் இருந்த பிள்ளையார் கோவிலை ஏக்கமாக பார்த்தாள். கோவில் மட்டும் திறந்திருந்தால், பிள்ளையாரிடம் ஒடிபோய் சண்டையிட்டிருப்பாள்.
கீதா வளைகாப்புக்கு வந்தன்று, தங்கள் வாழ்க்கையில் நடந்த பல திருப்பங்கள், கண்முன் அரங்கேற, ‘பிள்ளையார் அப்பா, ஏன் இப்படி அரவிந்தன வாட்டியெடுக்கற… அவனுக்கு ஒரு நல்வழி காட்ட கூடாதா’ மனமுறுகி பிரார்த்தித்தாள்.
‘என்னடி ஆச்சு! வா உள்ள போலாம்!” ஹரி அவளை அழைக்க சுயத்துக்கு வந்தவள், “ஹரி…அது.. அது…அரவிந்த் வரல போலயிருக்கு டா” அவன் வண்டி அங்கு தென்படவில்லை என்று கண்ணால் காட்டினாள்.
அவனுக்கும் அது வருத்தம் தான். ஆனால் அதை பக்குவமாக கையாண்டான். “உம்” என்று தலையசைத்தவன், “என்ன செய்ய மீரா; அது அவங்க ரெண்டு பேருடைய வாழ்க்கை பிரச்சனை; யாரும் யாரையும் கல்யாணம் செய்துக்க சொல்லி கட்டாய படுத்த கூடாதுடி!” நிதர்சனத்தை சொல்ல, அவள் சமாதானமானபாடு இல்லை. எதுவும் பேசாமல், தலை குனிந்த படி உடன் வருபவளை தோளை சுற்றி வளைத்து அணைத்தவன்,
“உள்ள வந்து, கீதா கிட்ட எதுவும் சொல்லிகாத; நம்ம, வீட்டுக்கு போகுற வழியில, அரவிந்தன பார்த்துட்டு போகலாம், சரியா!” ஆறுதலாய் பேச, அது அவளுக்கு கொஞ்சம் நிம்மதியை தந்தது.
கைப்பேசியில் மும்முறமாக பேசிக்கொண்டிருந்தவள், வந்தவர்களை, உள்ளே வரும்படி கண்ணால் ஜாடை காட்டி அழைத்தாள். “உம்!.. உம்!.. சரி… பரவாயில்லை…” இதை தாண்டி, கீதா யாருடன், என்ன பேசுகிறாள் என்று மீராவால் கண்டு பிடிக்கமுடியவில்லை. ஐந்து நிமிடத்தில் அழைப்பை துண்டித்தவள்,
“பாப்பா, மாமியார்கிட்ட நல்லா தூங்கிட்டு இருந்தா; எழுந்துட்டாளான்னு பார்த்துட்டு வரேன்.” சொல்லி மாடிப்படிகளை ஏறினாள். பாதி வழியில் நின்றவள், மீரா பக்கம் திரும்பி, “சொல்ல மறந்துட்டேன் டி! அஞ்சலி தான் இப்போ பேசினா…இங்க வர முடியாதாம்; அவங்க மாமா வீட்டுக்கு போறாங்களாம்… உன்கிட்ட குறிப்பா சொல்ல சொன்னா!” போனில் பேசியதை சொல்லி, படி ஏறினாள் கீதா.
தொடர்ந்து படிக்க, இங்கே க்ளிக் செய்யவும் -> அன்பின் ஆழம் 19.2