அன்பின் ஆழம் 19.2
அஞ்சலி வீட்டில்….
“இல்லாத மாமாவ பார்க்க போகுறதா, ஏன் என்ன பொய் சொல்ல சொன்னீங்க?” கீதாவிடம் பேசிவிட்டு, கைப்பேசியை அணைத்த அஞ்சலி, தன் வீட்டிற்கு வந்த அரவிந்தனிடம் விசாரித்தாள்.
“ம்ம்… அப்புறம் அங்க போய், என்ன கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு நீ மறுபடியும் தொடங்கினா….” புருவங்களை மேலும் கீழுமாய் அசைத்து, கேலியாக, “ரெண்டு பொண்ணுங்க சேர்ந்ததுக்கே என்ன வீட்ட விட்டு துறத்திடீங்க…. இப்ப கீதாவும் சேர்ந்தா….” என்று வம்பிழுத்தான்.
அதற்கு, உதட்டை சுழித்தவள், “அதுக்கு மன்னிப்பு கேட்க, இன்னைக்கு காலையில எத்தன முறை போன் செஞ்சேன்… அவ்வளவு ஆசையிருந்திருந்தா எடுத்து பேசியிருக்கலாமே” கேட்டு, செல்லம் கொஞ்சினாள்.
அவளை இடையோடு சேர்த்து அணைத்தவன், “மன்னிப்பு கேட்க, டீச்சர் மூணு நாள் எடுத்துப்பீங்களா…” காதல் வழியும் குரலில் அவள் முகமருகே குனிந்து கேட்டான். நாணத்தில் அவள் முகம் சிவக்க, அதை தன் உள்ளங்கையில் ஏந்தி, “ம்ம்… சொல்லு… சொல்லு” என்று கண்சிமிட்டினான்.
விழிகள் உயர்த்தி அவனை பார்த்தவள், “கோவிச்சுக்கிட்டு போனது நீங்கதானே” எதிர்த்து கேட்டாள்.
“என்ன கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு அடம்பிடிச்சது நீதானே!” ஏட்டிக்குபோட்டி பேசி அவளை மடக்கினான்.
அவன் பிடியிலிருந்து விலகாதவள், குற்றயுணர்ச்சியில் தலைகுனிந்து. “என் மனச அன்னைகே மாத்திக்கிட்டேன் தெரியுமா,” மெல்லிய குரலில் தொடங்கி, “என்ன தவிர நீங்க வேற யாரையும் கட்டாயம் கல்யாணம் செய்துக்க மாட்டீங்கன்னு, மீரா சொல்லலேன்னா எனக்கு உங்க அன்பு புரிஞ்சிருக்காது…” அவள் மனமாற்றத்திற்கான காரணத்தை எடுத்துரைக்க,
உடனே பக்கென்று வாய்விட்டு சிரித்தவன், “அவ உன்ன நல்லா ஏமாத்திருக்கா!” என்றதும், தலை நிமிர்த்தி அவனை வியப்பாய் பார்த்தாள் அஞ்சலி.
கீதா வீட்டில்…
“அஞ்சலி இப்படி ஏமாத்துவான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல ஹரி!” மனம்நொந்தாள் மீரா. ஹரியுடைய கவலை எல்லாம் அரவிந்தனை பற்றியும், அவனுக்காக வருந்தும் தன்னவளை பற்றி மட்டும் தான். அஞ்சலி மீது அக்கறை இல்லை என்பதை காட்டிலும், அவளின் குணாதிசயங்களை பற்றி அதிகம் தெரியாது என்பதே.
தன்னவளின் கரத்தை ஆறுதலாய் பிடித்துக்கொண்டான் ஹரி. இருவரும் வாய்விட்டு பேசிக்கொள்ள முடியாத அளவிற்கு, கீதாவின் மாமியார் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அவள் வருவதற்குள்,ஹரி “அப்புறம் பேசலாம்!”என்று மீராவின் காதில் கிசுகிசுக்க, ‘பேசினா மட்டும் விதியை மாற்றமுடியுமா!’ எல்லாம் முடிந்தது என்பது போல், விரக்தியில் சிரித்தாள்.
மாடியிலிருந்து இறங்கி வந்தார், கீதாவின் மாமியார்.
“என்னம்மா மீரா! எப்படி இருக்க; எப்படி இருக்கீங்க தம்பி!” முகத்தில் சிரிப்புடன் இருவரையும் நலன்விசாரித்து, குழந்தைக்கு பசியாற்றிவிட்டு, கீதா சிறிது நேரத்தில் வருவாள் என்றும் தகவல் சொன்னாள். பேத்தியை பற்றி ஓயாமல் பெருமையடித்தவள், காபி எடுத்துவருகிறேன் என்று சமையலறையை நோக்கி நடந்தாள்.
கீதா வந்தபாடு இல்லை; வீட்டில் வேறு யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை. அவர்களுக்கும் அந்த தனிமை தேவைப்பட்டது; அரவிந்தனை எண்ணி வருந்த…
சிறிது நேரத்தில் குழந்தையுடன் வந்தாள் கீதா. அவள் கையில் இருந்த குழந்தையை பார்க்க மீராவின் முகத்தில் உற்சாகமே இல்லை; எண்ணமெல்லாம் அரவிந்தனை பற்றியே இருந்தது. மீரா அரவிந்தனை நேரில் பார்க்க துடித்தாள்; ஹரி அவன் எதிர்காலத்தை எண்ணி கவலையாய் இருந்தான்.
கீதா குழந்தையை தோழியிடம் நீட்ட, அவளும் ஏதோ சிந்தனையில் வாங்கி மார்போடு அணைத்தாள். இனியும் பொருக்க முடியாதவளாய், “அரவிந்தன் போன் செஞ்சானா?” என்று வினவினாள்.
அஞ்சலி வீட்டில்…
“நீ இவ்வளவு லூசா அஞ்சலி!” கேலி செய்து, இன்னும் அதிகமாக சிரித்தவன், “அவ அப்படிதான் என்ன பற்றி எப்பவுமே பில்டப் பன்ணி பேசுவா… எனக்கு அவ்வளவு ஃபீலிங்கஸ் எல்லாம் கிடையாது மா… மீரா இல்லேன்னா அஞ்சலி…. அஞ்சலி இல்லேன்னா ராதான்னு யாராவது சிக்கற வரைக்கும், விடாமுயற்சி செய்துகிட்டே இருப்பான் இந்த அரவிந்தன்.” குறும்பு செய்ய, அதை கேட்டு முறுக்கி கொண்டு, அவன் பிடியிலிருந்து விலக எத்தனித்தாள்.
“விளையாடாதீங்க அரவிந்த்!” அழாத குறையாய் உரைத்து, “உங்களுக்கு பிடிக்கலேன்னா, இப்போவே சொல்லிடுங்க…” அவன் சீண்டுவதை உணராமல் வருந்தினாள்.
“பிடிக்காம தான், உன் குரல் கேட்டதும், உன்ன பார்க்க ஓடோடி வந்து இப்படி கட்டிப்பிடிச்சு பேசுறேனா?” கேட்டவன் இன்னும் இறுக்கமாக அவளை சேர்த்து அணைக்க,
அந்த ஸ்பரிசம் வேண்டுமென்று மனம் ஏங்க, புத்தி, அது காலத்துக்கும் நிலைத்து நிற்குமா என்று பயந்தது.
“அதுக்கில்ல அரவிந்த்; பிள்ளைப்பேறு தர முடியாத என்ன, நீங்க கல்யாணம் செய்துக்க கூடாதூன்னு தான், நான் உங்ககிட்டேந்து விலகியே இருந்தேன். பிடிக்காமெல்லாம் இல்ல…நீங்களும் உங்க தோழியும் ஏதேதோ சொல்லி என் மனச மாத்திட்டீங்க. இனி விளையாட்டுக்கு கூட என்ன வெறுத்துடாதீங்க ப்ளீஸ்…” என்று அஞ்சலி வெளிப்படையாக பேச,
“சும்மா தானே மா….” என்று விளக்க முயன்றவனின், வாயை பொத்தி, “இருங்க! நான் சொல்ல வந்தத முழுசா சொல்லிடறேன்” என்று பேச விடாமல் தடுத்தாள்.
“நமக்கு குழந்தை இல்லையேன்னு, நீங்க ஒரு நொடி வருந்தினாலும் போதும்… நான் தோத்துபோனதா நெனப்பேன். அப்புறம் நீங்க, என்ன சமாதானம் சொன்னாலும், என் மனசுல ஏற்பட்ட இரணம் ஆறவே ஆறாது. ஸோ, ஒரு தடவைக்கு ரெண்டு தடவ, நல்லா யோசிச்சு முடிவெடுங்க.” என்று தெளிவுபடுத்தினாள்.
பேசும் அவள் உதடுகளை, இருவிரலால் பிடித்து, இறுக மூடி, “இனி உனக்கு கனவுல கூட இந்த எண்ணம் வர கூடாதூன்னு தான், உன்ன ஒரு இடத்துக்கு அழைச்சிட்டு போக வந்திருக்கேன். வா கிளம்பலாம்.” அதிகாரமாய் அழைத்தான்.
“எங்க போறோம்?” கண்கள் சுருங்க வினவினாள்.
“சொன்னாதான் வருவியா?” திடமாய் கேள்வியை அவன் திருப்ப,
“எனக்கு தெரிய வேண்டாம். வெளிய போயிருக்க அம்மா, அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லணும்; பக்கத்து வீட்டு மாமிகிட்ட சாவி கொடுக்குறப்ப சொல்லணும்;” என்று உதட்டை சுழித்தாள்.
“அரவிந்தன், மாமா வீட்டுக்கு அழைச்சிட்டு போறாருன்னு சொல்லு!” என்று குறும்பு பார்வையால் அவளை விழுங்கினான்.
கீதா வீட்டில்…
“அதான் சொன்னேனே டி! அஞ்சலி மாமா வீட்டுக்கு போயிருக்காங்கன்னு!” கீதா நினைவூட்ட,
கேள்வியை சரியாக புரிந்து கொண்டாளா என்று மீரா, “அஞ்சலிய கேக்குல, அரவிந்தன் போன் செஞ்சானான்னு கேட்டேன்!” அழுத்திச் சொல்லி, தோழிக்கு கேள்வியை தெளிவுபடுத்தினாள்.
“என்னடா ஹரி, இவ எந்த உலகத்துல இருக்கா?” கீதா அவனிடம் புலம்பி, “அஞ்சலி போகுற இடத்துக்கு தானே அரவிந்தனும் போவான்.” என்றவள், “அரவிந்த் போன்லேந்து தானே டி அவ பேசினா… அவகிட்ட என் நம்பர் ஏது?” என்றதும், மீராவிற்கு நடப்பது எல்லாம் கனவா நனவா என்பது போல் இருந்தது. ஹரிக்கும் அது ஒரு இன்பதிர்ச்சியாகவே இருந்தது.
வெளிப்படுத்த முடியாத சந்தோஷத்தை, கட்டுப்படுத்த முடியாமல், கையில் இருந்த குழந்தையை உயர தூக்கி இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு செல்லம் கொஞ்சினாள்.
குழந்தையும் அவள் அரவணைப்பில் கலகலவென்று சிரிக்க, அதை இரசித்த, தாய், “சொல்லுடி, அவ என்ன மாதிரி இருக்காளா, இல்ல இரமேஷ் மாதிரி இருக்காளா?” என்று வினவினாள்.
இதுவரை, வந்த நோக்கம் நினைவில் இல்லாமல், குழந்தை கையில் இருப்பது கூட உணராது இருந்தவள், கீதா கேட்ட கேள்வியில் சுயத்துக்கு வந்தாள். அவளை மாதிரி தான் இருக்கிறாள் என்று மீரா சொல்ல, ஹரி, இல்லை என்று மறுத்து பேச, உரையாடல்கள் மகிழ்ச்சியில் ஊறின.
மேலும் சில மணி நேரம், குழந்தையுடன் கொஞ்சி, விளையாடி, உடைமாற்றி, தாலாட்டும் பாடினாள் மீரா.
“நாலு பிள்ள பெத்தா மாதிரி என்ன அழகா குழந்தைய பாத்துக்குறா!” கீதாவின் மாமியார், மீராவின் திறமையை சுட்டிகாட்ட,
“நாலு இல்ல மாமி! ஒரு குழந்தை தான். வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன்!” ஹரி எழுதிய புத்தகத்தை மனதில் எண்ணி, குறும்பாய் பதிலளிக்க,
“வாய்! வாய்!” என்று கீதா அவளை செல்லமாக அடித்தாள்.
அருகில் இருக்கும் தன்னவன் அவளின் சிறுபிள்ளை தனத்தை கண்டித்து முறைக்கிறான் என்று அவளுக்கு சொல்லவே தேவையில்லை.
ஒரு மணி நேரத்தில் வெளியே வந்தவள், எதிர்பக்கத்தில் இருந்த பிள்ளையார் கோவிலின் வாசற்படிக்கு விரைந்தோடினாள். பிரார்த்தனையை நிறைவேற்றிய பிள்ளையாருக்கு குட்டு போட்டு, நன்றியை தெரிவித்தாள். அவள் சந்தோஷத்தில் செய்யும் செயல்களை இரசித்தவன் அவள் பின்னால் வந்து நின்றான். அவன் பக்கம் திரும்பியவள்,
“உண்மையிலேயே இவங்க மாமா வீட்டுக்கு தான் போயிருப்பாங்களா?” ஹரியிடம் சந்தேகமாய் வினவினாள்.
அஞ்சலி-அரவிந்த்…
“பொய்! பொய்! பொய்! எத்தன பொய் சொல்லுவீங்க அரவிந்த்!” பைக்கில் இருந்து இறங்கியவள், வந்தடைந்த இடத்தை மேலும் கீழுமாக பார்த்து கேட்டாள்.
“வா! உள்ள போகலாம்” எந்த விவரமும் சொல்லாமல் அவன் அழைக்க,
“ப்ளீஸ் சொல்லுங்க அரவிந்த்! நம்ம இப்போவே குழந்தைய தத்தெடுக்க போறோமா?”
“இன்னும் கல்யாணமே ஆகலையாம்… அதுக்குள்ள, என் பொண்டாட்டிக்கு அவசரத்த பாரு!” அவள் மூக்கை கிள்ளி, உரிமையோடு தோளை சுற்றி வளைத்து, உள்ளே அழைத்து சென்றான்.
அவர்கள் வந்தது ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு. உள்ளே சென்றவன், உரிய அலுவலகர்களை சந்தித்து, விரைவில் திருமண பந்தத்தில் இணைய போகும், அவர்கள் அங்கு வந்து சேவை செய்ய விரும்புவதாக சொல்ல, அஞ்சலி அவன் பேச்சில் நெகிழ்ந்தாள்.
அஞ்சலி மனம் மாறி தனக்கு போன் செய்த போது அவள் குரலில், கொஞ்சம் தெளிவும், நிறைய காதலும் உணர்ந்தான். அந்த தெளிவு மீண்டும் குழப்பமாக மாறிவிடக்கூடாது என்று நினைத்தான். வெறும் வார்த்தையால் தன் எண்ணத்தை சொல்லுவதை காட்டிலும், செயலில் உணர்த்தி, அவளுக்கு தன் மேல் பிடிமானம் வர வேண்டும் என்று நினைத்தான்.
பேச்சு வார்த்தை முடித்து வெளியே வந்தவுடன், கண்கள் குளமாக, “ எனக்காக ஏதோ செய்யறீங்கன்னு புரியுது…. ஆனா என்னன்னு தான் தெளிவா புரியல!” என்றாள்.
“அருணாச்சலம் படம் பாத்ததில்லையா நீ…” என்றவன், “அதுல பணத்தாசையே வரக்கூடதூன்னு, அப்பா, மகனுக்கு செலவழிக்க முடியாத அளவுக்கு பணத்த கொடுப்பாரு… அந்த மாதிரி, போதும் போதுமுன்னு சொல்ற அளவுக்கு, நம்ம இங்க, இந்த குழந்தைகளோட நிறைய நேரம் செலவு பண்ணறப்ப, நமக்கே நமக்குன்னு குழந்தை இல்லன்ற ஏக்கமே வராது. “ என்று விளக்கி, “அப்புறம் நீயே, அரவிந்தா, நம்ம லவ் பண்ண நேரமே இல்லடான்னு சொல்லிகிட்டு, என்கிட்ட ஓடி வருவ!” அவளுக்குள் ஒளிந்திருக்கும் காதலை அவளுக்கே புரியவைத்தான்.
அதற்கு விரக்தியில் சிரித்தவள், “பெருந்தன்மையோட செய்யற வேலைய கூட இப்படி தான் விளையாட்டா சொல்லுவீங்களா?” என்று வினவினாள்.
“நிஜமாதான் சொல்றேன் அஞ்சலி! இதுல என் சுயநலமும் இருக்கு.” என்றவனை, கண்கள் விரித்து பார்த்தாள்.
“இப்படி இந்த குழந்தைகளோடு நேரம் செலவிட்டு மனநிறைவோட வீடு திரும்பற நமக்கு, நமக்கான நேரம் செலவிடணுமுன்னு மட்டும் தான் தோணும்; குழந்தை நினப்பே வராது,” விளக்கியவன், “நமக்குள்ள அள்ள அள்ள குறையாத காதல் மட்டும் தான் இருக்கும்” சொல்லி, அவன் பேச்சில் உறைந்து போனவளை ஆரத்தழுவினான்.”
ஆயிரம் சொல்லுங்க அரவிந்த்… நம்ம ஒண்ணா சேர்ந்ததுக்கு, மீரா தான் காரணம்!” தன்னவனின் கைக்கோர்த்து நடந்தவளுக்கு ஏனோ மீரா அன்று அவர்கள் கைகளை இணைத்தது நினைவுக்கு வந்தது.
நடப்பதை நிறுத்தி, “பாடுபட்டு உன்ன இம்ப்ரஸ் பண்றது நானு… பாராட்டு எல்லாம் என்ன கயட்டி விட்டவளுக்கா?” இடுப்பில் கைவைத்து அவளிடம் சண்டையிட்டான்.
அதை சற்றும் பொருட்படுத்தாதவள், “உதடுதான் அப்படி சொல்லுது; உங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கும் நட்பும், பரஸ்பர புரிதலும் எனக்கு தெரியாதுன்னு நெனச்சீங்களா?” அவன் மார்பை தட்டி சொல்ல அவன் பேச்சற்று நின்றான்.
மார்பை தட்டும் அவள் கையை குவித்தவன், “உன்ன விட வேற யாரு எங்களையும், எங்க நட்பையும் பற்றி இவ்வளவு சரியா புரிஞ்சுக்கு முடியும் சொல்லு,” என்று, தாழ்ந்த குரலில், “அஞ்சலி! இனி நீ என்னவிட்டு விலகி போணமுன்னு, கனவுல கூட நினைக்காத!” என்றான்.
மற்றொரு கரத்தையும் கொண்டு, அவன் கையை இறுகி பிடித்தவள்,
“கொடுத்த சந்தர்ப்பத்த நீங்க நழுவவிட்டீங்க மிஸ்டர்; இனி என் கணவனா பொறுப்பேத்துகறுத தவிர உங்களுக்கு வேற வழியே இல்ல,” விளையாட்டாக சொல்ல, அதில் அவள் உறுதியை உணர்ந்தான்.
“அட் யுர் செர்வீஸ் மேடம்!” என்று அவனும் சிரம் தாழ்த்தி சொல்ல, அதில் ஒரு காதல் மலர்ந்தது.
கீதா வீட்டு வாசலில்…
“சொல்லு டா ஹரி! அரவிந்தனுக்கு போன் செய்யட்டுமா?” விடாமல் நச்சரித்தாள் மீரா.
“எங்க போயிருந்தா என்ன மீரா! அவங்க சேர்ந்துட்டாங்கன்னு சந்தோஷ படு!” அறிவுரை சொன்னவன், “என்னோட வீட்டுக்கு வரையா?” அன்பாக அழைத்தான்.
“இல்ல ஹரி! இவங்க பஞ்சாயத்துல, ஆபிஸ் வேல ஓடவேயில்ல டா! வீட்டுக்கு போய் முடிக்கணும். நாளைக்கு சாயங்காலம் பார்க்கலாம்!” அவள் மறுக்க, அவனும் தலையசைத்தான்.
அவன், அவளை காரணமில்லாமல் அழைக்கவில்லை. சமையல் செய்து கொடுக்கும் அவள் எண்ணத்திற்கு சம்மதம் சொல்ல, அவன் அவளுக்காக ஒரு பரிசு பொருள் வாங்கி வைத்திருந்தான். கீதா வீட்டிற்கு புறப்படும் போது தான் அது வந்திறங்கியது. அரவிந்தனை பற்றி இருந்த கவலையில் அதை பற்றி சொல்லக்கூட அவனுக்கும் தோணவில்லை. ஆனால், இப்போது அவளுக்கு இன்பதிரிச்சி கொடுக்க நினைத்தவன், வீட்டிற்கு அழைத்தான். நண்பன் காதல் கைக்கூடியதை எண்ணி மிதந்தவள், தன்னவன் பேச்சில் கலந்த காதலை கவனிக்க தவறினாள். காத்திருப்பதும் சுகம் என்று மௌனம் காத்தான் ஹரி.
பிள்ளைப்பேறு என்பது,
சிலருக்கு, தன் உதிரத்திலிருந்து உருவாகி, வம்சத்தை தழைக்க செய்ய வரும் வாரிசாகும்;
சிலருக்கு, பாசத்திற்காக ஏங்கும், ஒவ்வொரு ஜீவனும், தன் பிள்ளை என தோன்றும்;
சிலருக்கு, ஜீவனற்ற பொருட்களும், தன் பிள்ளையாய் தோன்றும்!
இதில் எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்று ஒருவராலும் எடை போட முடியாது…. ஏனென்றால், அதை நிர்ணயிக்கும் ஒரே அளவுகோல், அவரவர்கள் கண்ணோட்டத்திற்கு பின் இருக்கும் அன்பின் ஆழம்…