அன்பின் ஆழம் – 18.2
ஆறு மணிக்கு வாசற்கதவு மணி ஒலிக்க, கதவை திறந்தாள் மீரா. “என்னடி, இன்னும் டீ போடலையா?” அன்று போல் எதிர்பார்த்து, அரவிந்தன் வாசற்படியில் நின்று கொண்டே வாசம்தேட, “ஒரு மாறுதலுக்கு உன் நண்பன போடச்சொல்லு!” பதில் சொல்லி, தன்னவனை முறைத்தாள் மீரா. அவனும் அவளை பதிலுக்கு முறைத்தான்.
காரணம், தினமும் அவள் சமைப்பதை பற்றி, தன் முடிவை சொல்லும் வரை, சமையலறைக்குள் செல்லமாட்டேன் என்று ஹரியிடம் சொல்லியிருந்தாள்.
உள்ளே நுழைந்தவனுக்கு இன்பதிர்ச்சி. “அஞ்சலி! நீ இங்க என்ன பண்ணற?” அவளும் அவனை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள். பேச்சு வார்த்தை எதில் முடிந்திருக்கும் என்ற கவலையில் இருந்தான் ஹரி.
இவர்கள் மூவருக்கும் விடை சொல்வது போல், “நீ எடுத்த முடிவு ரொம்ப சரிடா அரவிந்தா! உன்ன நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு!” நண்பனின் தோளில் தட்டிக்கொடுத்து புகழ்ந்தாள் மீரா.
அதை கேட்ட அரவிந்தன், முகம் புன்னகையில் மின்ன, கால்கள் வேகமாக தன்னவளை நோக்கி நடந்தது. கதவருகே நின்ற ஹரியிடம், கவலைபட வேண்டாம் என்று கண்ணசைவில் தெரிவித்தாள் மீரா.
அஞ்சலி தோளினை அரவிந்தன் அன்பாக சுற்றிவளைத்து, “எல்லாத்தையும் சொல்லிட்டியா அஞ்சலி?” அவள் முகமருகே கிசுகிசுத்தான்.
“கையை எடுங்க!” சொன்ன வேகத்திலேயே, அவன் கையை உதறியவள், மீரா பக்கம் கோபமாக திரும்பி, “உங்க கிட்ட என்ன சொன்னேன்; நீங்க என்ன சொல்றீங்க?” என்றாள்.
அஞ்சலி செயலில், அரவிந்தன் முகம் சுருங்க, அதை கவனித்த மீரா, அவர்கள் அருகே நடந்தாள். நண்பன் தோளை இறுக பிடித்து, “நான் சரியாதான் மா பேசுறேன். என் நண்பன், தெளிவா சிந்திச்சு முடிவெடுத்திருக்கான். நீதான் உன் மனச மாத்திக்கணும் அஞ்சலி,” சொல்லி, இருவரின் கைகளையும் இணைத்து, “உன் மனச போட்டு குழப்பிக்காத; என் நண்பன கல்யாணம் செய்துக்கோ!” என்றாள்.
தன் கையை திருப்பிகொண்டவள், தள்ளி நிற்க, அவள் திருமணத்தை நிறுத்தும் எண்ணத்துடன் தான் மீராவை சந்திக்க வந்திருக்கிறாள் என்று புரிந்துகொண்டான் அரவிந்தன். “அவ புத்திக்கு உரைக்கரா மாதிரி சொல்லு மீரா!” திடமாக பேசி, அஞ்சலியை முறைத்தவன், “உனக்கு எத்தன முறை சொல்றது அஞ்சலி… அத ஒரு பிரச்சனையாவே நான் நினைக்கலன்னு..” அவளுக்கு வலியுறுத்தினான்.
இருவரும் சேர்ந்து அவளை எதிர்க்க, அதை தாங்கி கொள்ள முடியாத அஞ்சலி, “அது சரி…. நீங்க உங்க நண்பனுக்கு தானே ஜால்ரா போடுவீங்க… உங்கள நம்பி வந்தது என் தப்பு தான்!” மனம்நொந்தவள், கதவை நோக்கி நடந்தாள்.
“நில்லு அஞ்சலி!” அவள் கையைபிடித்து தடுத்து, “உனக்கு அவனோட அன்பு புரியலையா… அவனுக்கு தேவை வாழ்க்கை முழுவதும் சேர்ந்து பயணிக்க ஒரு நல்ல துணை… வெறும் பிள்ளை பெற்று கொடுக்குற இயந்திரம் இல்ல!” கடிந்தாள் மீரா.
சுட்டெறிக்கும் கண்களால் முறைத்தவள், “அதே அன்ப புரிஞ்சுக்காம நீங்களும் தானே அவர் காதல மறுத்தீங்க…உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?” அஞ்சலி எதிர்த்து கேட்க, மீராவின் பிடி வலுவிழந்தது.
நண்பர்கள் மீராவை பரிதாபமாக பார்க்க, மீராவோ, இவளுக்கு தங்கள் விஷயம் எந்தளவுக்கு தெரியும் என்று சிந்தித்தாள். தாழ்ந்த குரலில், மேலோட்டமாய், “அது வேற; இது வேற மா!” ஒப்பிடாதே என்று கெஞ்சினாள்.
ஏளனமாக சிரித்தவள், அரவிந்தனை பார்த்து, “மீரா உங்க காதல மறுத்தா, எந்த கேள்வியும் கேட்காம சரின்னு சொல்லுவீங்க… அதே நான் சொன்னா, கட்டாய படுத்தி கல்யாணம் செய்துப்பீங்க… அப்படிதானே?”
தனக்காக மீரா இவளிடம் மன்றாடுவதை ஏற்கமுடியவில்லை அரவிந்தனால். இத்தனை நாளாக சொல்லியும், தன் அன்பை புரிந்துகொள்ளாமல் செயலாலும், வார்த்தைகளாலும் காயப்படுத்தும் இவளிடம் பேசி ஒரு பயனுமில்லை என்று நம்பிக்கையை இழந்தவன், “விட்டுடு அஞ்சலி!” சொல்லி, தலைகுனிந்து கும்பிடு போட்டு, “நீ முடிவெடுத்துட்டு பேசுற. அதான் தேடி தேடி தப்பு கண்டு பிடிக்கற; நானே இந்த கல்யாணம் வேண்டாமுன்னு சொல்லிடறேன்.” தன் முடிவை சொன்னான்.
மனதால் சோர்ந்தவன், நண்பர்களின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறினான். கதவருகே நின்ற ஹரியிடம், “இனி என்ன கல்யாணம் செய்துக்க சொல்லி வற்புறுத்தாத டா…. எனக்கும் கல்யாணத்துக்கும் இராசியே இல்ல” விரக்தியில் பேசி, புறப்பட்டான்.
முழுவிவரம் அறியாத ஹரி என்ன சொல்வதென்று தெரியாமல் சிலைபோல் நிற்க, மீரா, நண்பனின் மனவுடைச்சலுக்கு தானும் ஒரு காரணம் என்ற குற்றவுணர்ச்சியில் துடிதுதித்தாள்.
வந்த நோக்கம் நிறைவேறியது போல், அஞ்சலியும் நடையை கட்டினாள். இவளிடம், இப்போது உறுதியாக பேசவில்லை என்றால், எப்போதும் பேச முடியாது என்று உணர்ந்தாள் மீரா.
“நில்லு அஞ்சலி!” இன்னும் அதிகாரமாய் கட்டளையிட்டு, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றாள்.
“இன்னும் என்ன பேசணும்?” எதிர்த்து, “நீங்க சுமூகமா முடிப்பீங்கன்னு நம்பி வந்தா, இப்படி என்ன பேச வெச்சு கெட்டவ ஆக்கிடீங்களே!” ஆதங்கத்தை கொட்டினாள்.
“ஹரி மேல காதல் வரலேன்னா, அரவிந்தனுக்கு சம்மதம் சொல்லியிருப்பேனோ என்னமோ…” தன்னவன் அருகே நடந்தவள், அவன் கையை சேர்த்து வளைத்துகொண்டாள்.
அஞ்சலி, புருவம் உயர்த்தி பார்த்தவிதமே, அவள் முழுவதும் அறியவில்லை என்று உணர்ந்தாள் மீரா.
“ஆமாம் அஞ்சலி! ஒரு நாள் இடைவெளியில, அரவிந்தன் காதல் தோற்றுபோச்சு மா!…” என்று தொடங்கி, உண்மை அனைத்தையும் கொட்டி தீர்த்தாள் மீரா.
அரவிந்தன் ஏற்கனவே மீராவின் மேல், தனக்கு உண்டான காதலை பற்றி அஞ்சலியிடம் சொல்லியிருந்தான். ஆனால் எந்த இடத்திலும் தன் காதல் நிறைவேறாமல் போனதற்கு, ஹரி மீதோ, மீரா மீதோ பழிசுமத்தவே இல்லை. அதே போல், மீராவும் இன்று சொல்லும் போது, அரவிந்தனை விட்டுகொடுக்காமல் பேசினாள். இவர்கள் நட்பின் ஆழத்தை எண்ணி வியந்தாள் அஞ்சலி.
தான் பேசியதில் அவளிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில், மீரா, “இப்போ சொல்லு அஞ்சலி… நானும் அவன் காதல மறுத்தது உண்மைதான். அதுக்கு அவன் வருந்தாத காரணம்…. கண்முன்னே அவன் உயிரா நினைக்கற ரெண்டு நண்பர்கள் மகிழ்ச்சியா வாழ போராங்கன்றதுனால… அதுவும் அவனுக்கு ஹரினா ரொம்ப ஸ்பெஷல்” சொல்லி தன்னவனை தட்டி கொடுத்தாள். ஸோ… நீ உன் முடிவ மாத்திக்கோ மா” மீண்டும் கெஞ்ச,
“எனக்கு அவர் நற்குணம் புரியாம இல்ல மீரா.” மெதுவாக பேசியவள், “நானும் அவர் நல்லபடியா வாழனும்முன்னு தானே விலகி போறேன்… அத ஏன் நீங்க புரிஞ்சுக்கவே மாட்டேன்றீங்க” தன் இயலாமையை எண்ணி, தலைகுனிந்தாள்.
அவள் தலைநிமிர்த்தி, “பிள்ளைவரமுன்றது, நம்ம கையில இல்ல அஞ்சலி. உனக்கு இல்லன்னு ஏற்கனவே தெரியும்; எனக்கு அது தெரியாது; அவ்வளவுதான் நமக்குள்ள இருக்க வித்தியாசம்…” எதார்தத்தை எடுத்துரைத்து, “குழந்தை பாக்கியம் இல்லாத எத்தனையோ தம்பதிகள் சந்தோஷமா இருக்காங்க… நம்ம ஒருத்தர் மேல ஒருத்தர் வெச்சுருக்க அன்பு மட்டும் தான் இன்பமான இல்லற வாழ்க்கைக்கு தேவை… அப்படியே குழந்தை தான் மகிழ்ச்சிக்கு முக்கியமுன்னா, நீ சொன்னா மாதிரி தத்தெடுத்துகோ…. அவன் என்ன வேண்டாமுன்னா சொல்ல போறான்” விளக்க அவள் மௌனமாகவே இருந்தாள்.
மீராவே மேலும் பேசினாள். “பார்த்தல்ல… அவன் எவ்வளவு உறுதியா சொல்லிட்டு போனான்னு… அவன் ரொம்ப பிடிவாதகாரன்… கண்டிப்பா வேறொருத்தர கல்யாணம் செய்துக்க மாட்டான்… அதனால உன்னையும் கஷ்ட்டபடுத்திட்டு, அவனுக்கும் கஷ்ட்டத்த கொடுத்து, விலகி இருக்க போறியா, இல்ல பக்குவமா சிந்திச்சு அவன கல்யாணம் செய்துக்க போறியா…” முடிந்தளவுக்கு விளக்கி, “நல்லா யோசி… சோய்ஸ் இஸ் யுர்ஸ்” என்று பெருமூச்சுவிட்டாள் மீரா.
அஞ்சலி எதுவும் சொல்லாமல், நகர, இம்முறை மீரா அவளை தடுக்கவில்லை. அவள் சிந்திக்க தொடங்கிவிட்டாள் என்று உணர்ந்து, “நல்ல முடிவா எடு… ஞாயிற்றுக்கிழமை, என் நண்பனோட கீதா வீட்டுக்கு வா! படிக்கட்டு இறங்கும் அவள் காதில் விழுமாறு உரக்க சொன்னாள்.
கதவடைத்து திரும்பியவள் அருகில் இடிக்காத குறையாய் வந்த ஹரி, “எந்த காரணத்துக்காகவும் அவள வற்புறுத்தாதன்னு சொன்னேன் இல்ல… சொன்னத எதுவுமே கேட்க மாட்டியா? இத்தனை நேரம் அவளுக்கு விளக்கம் சொல்லி, காலில் விழாத குறையாய் மன்றாடியதை எல்லாம் கவனித்தவன் கண்டித்தான்.
நடந்தது அத்தனையும் முழுவதுமாக தெரியாததுனால் அப்படி பேசுகிறான் என்று உணர்ந்தவள், இதழோர சிரிப்புடன், “எழுத்தாளரே! கதையில நிறைய டிவிஸ்ட் அண்ட் டர்ன் இருக்கு… ஆனா அதெல்லாம் தெரியணுமுன்னா,முதல்ல எனக்கு சாப்பிட ஏதாவது எடுத்துகிட்டு வாங்க… ரொம்ப பசிக்குது” சொல்லி வயிற்றை தடவினாள்.
“ஏன் பசிச்சா உனக்கே எடுத்து சாப்பிட தெரியாதா?” ஏன் இந்த வீம்பு என்றான்.
“நான் கேட்ட கேள்விக்கு , நீதான் இன்னும் பதில் சொல்லவே இல்லையே!” நினைவூட்டி கண்சிமிட்டினாள்.
இவளிடம் பேசி ஜெயித்துவிட முடியுமா என்று முறைத்தவன், ஐந்தே நிமிடத்தில், கொய்யா பழத்தை சிறு துண்டுகளாக்கி எடுத்து வந்தான்.
அவளும் அதை கிளி போலவே கொத்தி திண்று, விரப்பாக முகம் வைத்து கொண்டிருக்கும் தன்னவனுக்கும் வலிய வந்து ஊட்டிவிட்டாள்.
“அரவிந்தன் பிடிவாதகாரன்னா, அப்போ உன்ன என்னன்னு சொல்றது?” ஊட்டிவிட நெருங்கிய அவள் கரத்தை தடுத்து கேட்டான்.
“நாங்க பிடிவாதம் பிடிக்கறது, நல்லது நடக்கணும்னு தான்!” சொல்லி கையில் இருந்த பழத்துண்டை தானே விழுங்கினாள்.
“சரி சொல்லு, அஞ்சலிகிட்ட அப்படி என்ன பேசின?” விவரங்கள் அறிய ஆவலாய் கேட்டான்.
அவளும் நடந்த அத்தனையும் ஒன்றுவிடாமல் பகிர்ந்து கொண்டாள். “இப்ப சொல்லு டா! அரவிந்த் சரியான முடிவுதானே எடுத்திருக்கான்?” வினவினாள்.
“உம்!” என்று தலையசைத்தவன், “ஆனா, அஞ்சலி அவ மனச மாத்திப்பாளா?” சந்தேகமாக கேட்டான்.
“கண்டிப்பா ஹரி! அவளுக்கு நம்ம அரவிந்தன ரொம்ப பிடிச்சிருக்கு… நீ வேணுமுன்னா பாரேன்… அவங்க கண்டிப்பா கீதா வீட்டுக்கு ஜோடியா வருவாங்க.” உறுதியாக சொன்னாள் மீரா.
ஏதோ சிந்தனையில் கலந்தவனாய் அவன் இருக்க, “என்னடா, இன்னும் உனக்கு நம்பிக்கை வரலையா? “என்று உலுக்கினாள்.
இடம் வலமாய் தலையசைத்தவன், “அதுக்கில்ல மீரா! நமக்காக ஒருத்தர் வலிய வந்து அவங்களோட சந்தோஷங்கள தியாகம் செய்யறாங்கன்னா, அப்படிபட்டவங்கள பிடிச்சியிருந்தாலும், அவங்களுக்கு சரின்னு சொல்றது எவ்வளவு தர்மசங்கடமான விஷயம் தெரியுமா?” என்று “எனக்கும் உன் காதல ஏற்கும் போது இப்படிதான் இருந்தது” ஒப்பிட்டு உணர்த்தினான்.
அதை கேட்டு சிரித்தவள், “எழுத்தாளரே, அப்படி உங்க காலையே வலிய சுத்தி சுத்தி வரோமுன்னா, உங்களவிட வேற யாரும் எங்கள அன்பா, அக்கறையா அரவணைக்க முடியாதுன்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில.” மனம் திறந்து சொல்லி தன் அன்பை உணர்த்தி, புறப்பட தயாரானாள்.
கதவருகே சென்றவள், “கவனத்த சிதறவிடாம, சனிக்கிழமை அறிமுக விழாவுல என்ன பேசலாமுன்னு யோசிங்க… அவங்க சண்டைக்கு சண்டேவே பதில் தெரிஞ்சிடும்… நம்ம காதல் கதையில தான், நிரப்ப, இன்னும் பதில் தெரியா கேள்விகள் நிறைய இருக்கு.” விளையாட்டாக சொல்லி, கண்சிமிட்டினாள்.
குறும்பாக பேசும் அவள் காதினை திருகி, “தெரியுதுல்ல… தேவையில்லாம என்கிட்ட பிடிவாதம் பிடிக்கறத விட்டுட்டு, நீயும் கொஞ்சம் கேள்விகளுக்கு பதில் கண்டுபிடி.” என்றான்.
பிடித்தவன் பிடிகொடுக்காமல் பேசும் போதும்,
பிரியமானவனை, பிரிந்தே தீருவேன் என்று பிதற்றும் போதும்,
பிடிவாதம் பிடிப்பதில், பிழைதான் உண்டோ….
இவர்கள் பித்தம் தெளியவைக்குமா, அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்….